Quantcast

தொகுப்புக்காக பெப்ரவரி 24th, 2009


இன்று மீண்டும் தராசுரம் - பெரியபுராணம் சிற்பம். முதலில் சிற்பம் இருக்கும் இடம் பார்க்க சதீஷ் அவர்களின் படங்கள்.

darasuram panel.jpg
sundarar splitting1
sundarar splitting kaveri

இப்போது சிற்பம். மிகச்சிறிய அளவில் உள்ள இந்த சிற்பம் எதனை குறிக்கிறது என்ற அறியாமல் பல நாட்கள் தேடினேன்.

ஒரு கோயிலின் முன் இருவர் - ஒருவர் ராஜ தோரணையில் இருகரம் கூப்பி பக்திப்பரவசத்தில் - மற்றும் ஒருவர் ஒரு கையை மடித்து ஏதோ சொல்ல - மறு கரம் உயர்த்தி - எதோ ஒரு மரத்தை இடித்து /வெட்டி கோயிலின் மேல் விழச் செய்வது போல இருந்தது.

sundarar splitting kaveri 2

பிறகு திரு நா . கணேசன் அவர்கள் ஒரு அருமையான ஆய்வுக்கட்டுரையை தந்தார் - சான் இரால்சுடன் மார் அவர்களது ( Marr, JR, “The Periya Puranam frieze at Taracuram: Episodes in the Lives of the Tamil Saiva Saints’ ). அப்போது தான் விளங்கியது. என்ன ஒரு அற்புத நிகழ்வு , அதை பற்றி பெரியபுராண குறிப்புகளை தேடும்போது, திரு சதீஷ், திரு திவாகர் , திரு சுப்ரமணியம் அவர்கள் உதவியுடன் இவை கிடைத்தன .

சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் மலை நாட்டுக்குச் செல்லும் பொழுது , திருக்கண்டியூர் வணங்கி வெளியே வரும் பொழுது திருவையாறு எதிர்தோன்ற , சேரமான் பெருமாள் நாயனார் அங்குச் சென்று இறைவரைப் பணிய வேண்டுமென்று கூறுதலும் ஓடம் முதலியவை செல்லாதபடி காவிரியில் பெருவெள்ளம் சென்றதைக் கண்டு…


130. பொன் பரப்பி மணிவரன்றி புனல் பரக்கும் காவேரித் 3877-1
தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி 3877-2
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர் 3877-3
அன்புருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் 3877-4

131. வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள் 3878-1
உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் குவித்து அருளிக் 3878-2
கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித் 3878-3
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் 3878-4

132. ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள ஆரூரர் தமை நோக்கி 3879-1
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார் 3879-2
மையார் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி 3879-3
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன 3879-4

133. ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் 3880-1
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப 3880-2
நீறு விளங்கும் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்தன்பின் 3880-3
ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார் 3880-4

134. பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில் 3881-1
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று 3881-2
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம் 3881-3
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும் 3881-4

135. மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் 3882-1
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல் 3882-2
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என 3882-3
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட 3882-4

136. விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் பளிக்கு வெற்பு என்ன 3883-1
நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிப் 3883-2
பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரி 3883-3
கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார் 3883-4

137. நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் 3884-1
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி 3884-2
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து 3884-3
தம்பிரானைப் போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் 3884-4

138. செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் 3885-1
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில் 3885-2
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று 3885-3
பஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்

நன்றி மதுரை திட்டம்

சிற்பத்தில் இருப்பவர்கள் சுந்தரர் மற்றும் சேரமான் பெருமாள். இடது புறம் ( நம் பார்வையில் ) இருப்பது கண்டியூர் கோயில். நடுவில் காவிரி கரை புரண்டு ஓடும் காட்சி - வெள்ளம் அலை மோதி செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ள முறை அருமை. வலது கரையில் திருவையாறு கோயில். ராஜ உடையில் இருப்பவர் சேரமான் பெருமாள் - காவிரியை நோக்கி ( வெள்ளம் கரை புரண்டு ஓடும் சத்தத்தில் அவர் பாட்டு கேட்க கையை அப்படி வைத்து கூவுகின்றாரோ ?) - இதே போன்று சிறு வயதில் பிரபல ஹாலிவுட் திரைப்படம் - ஈஸ்ட் மேன் கலரில், சிசில் டி மில்லி இயக்கம், சார்ல்டன் ஹெஸ்டன் , யுள் பிரின்னர் - பிரம்மாண்ட படைப்பு இறுதிக்காட்சி நினைவுக்கு வருகிறது - யூதர்கள் செங்கடலை கடக்கும் காட்சி.

Parting Red Sea
charlton_heston_plays_moses

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 1  1