Quantcast

நாயன்மார்களின் சரித்திரத்தைச் சித்தரிக்கும் பல தாராசுர சிற்பங்களை ஏற்கனவே நாம் ரசித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு சிற்பத்தை மிகவும் விரிவான விவரங்களுடன் இன்று காண்போம். மேலோட்டமாக பார்த்தால் இந்தக் கதை ஏதோ குரூர தோற்றமுடையதாகத் தெரியும், ஆனால் சற்றே கவனமாக அதன் பின்னனியைப் படித்தோமானால் தெளிவாகும். இதனை முழுமையாக புரிந்து கொள்ள எதிர்மறையான விளைவுகளைக் கொண்ட இரு வேறுபட்ட சம்பவங்களை காண்போம்.

முதல் சம்பவத்துடன் துவங்குவோம். முதலில் சிற்பம்

kazharsingar

இதில் ஆடம்பரமான கிரீடம் அணிந்த அரசன் போன்ற ஒருவர், ஒரு பெண்ணின் முழங்கையோடு அவள் கையை வெட்ட முற்படுவதுபோல் கத்தியை உயர்த்தி பிடித்துள்ளார். குரூரமாகத் தோன்றும் இந்தக் காட்சியில், ஆணின் முகத்தில் புன்னகை தெரிகிறது, பெண்ணின் மூக்கோ சிதிலமடைந்துள்ளது. இதற்கு பின்னனி ஏதும் உள்ளதா? வாருங்கள் பார்ப்போம்.

ஆம், இந்தக் கதை கழற்சிங்க நாயானாருடையதுதான்: பல்லவ வம்சத்தைச் சேர்ந்த இந்த நாயனார் மிகவும் சிவ பக்தியுடையவர். ஒருமுறை இவர் சிவாலயங்களை தரிசிக்க யாத்திரை சென்ற பொழுது திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கு இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது, வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு வந்தார் அவரது மனைவியும் அரசியுமான சங்கா (இவர் ராஷ்டிரகூட மன்னர் அமோக வர்ஷ நிருபதுங்கனின் மகள், சைன மதத்தில் பற்றுடையவர்கள் – ஆதாரம் பல்லவ வரலாறு). அவ்வாறு வலம்வரும் சமயம் பிரகாரத்தின் மூலையில் ஒரு மலர் விழுந்து கிடந்ததைப் பார்த்த இவர், அதனுடைய நறுமணத்தால் ஈர்க்கப் பட்டு அதனை எடுத்து முகர்ந்தார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கோயிலை வலங்கொண்டு அங்கண்
குலவிய பெருமை யெல்லாம்
சாயல்மா மயிலே போல்வாள்
தனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமம்
தொடுக்குமண் டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு
விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.

பொழிப்புரை :
சாயலால் மயிலைப் போன்ற அத்தேவியார் கோயிலை வலமாக வந்து, அங்குள்ள வளங்களை எல்லாம் தனித் தனியே பார்த்து மகிழ்ந்தவள், தூய மென்மையான பள்ளித் தாமம் தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்தில் புதிய பூ ஒன்று விழுந்து கிடப் பதைக் கண்டு எடுத்து மோந்தாள்.

இதனைக் கண்ட செருத்துணை என்னும் தீவிர சிவபக்தர், ஆஹா இறைவனுக்காக படைக்கப் படவிருந்த மலரின் புனிதத்தை அதை முகர்ந்து கெடுத்துவிட்டாரே என்று கோபப்பட்டு அரசியின் மூக்கை துண்டித்துவிட்டார். (இந்த சம்பவத்தால் இவரும் நாயன்மார் வரிசையில் சேர்ந்துவிட்டார், இவரது சரித்திரத்தை காட்டும் சிற்பத்தை தனியானதொரு பதிவில் பார்க்கலாம்).

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

புதுமலர் மோந்த போதில்
செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற் றத்துள்
எடுத்துமோந் தனளாம் என்று
கதுமென ஓடிச் சென்று
கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருவொப் பாள்தன்
மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.

பொழிப்புரை :
புதிய மலரை மோந்த போதில், செருத்துணையார் என்னும் தூய தொண்டனார், இம் மலரை மலர் மண்டபத் திருமுற்றத் தில் எடுத்து மோந்தனள் என்று எண்ணித், துணிந்து, தேன் பொருந் திய தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற அவள் மூக்கைப் பிடித்து அரிந்தார்.

காயப்பட்ட அரசியின் ஓலத்தைக் கேட்ட கழற்சிங்கர் ஓடோடி வந்தார், அரசியின் நிலையைப் பார்த்து “இதனை யார் செய்தது” என்று கர்ஜித்தார். உடனே செருத்துணை முன்வந்து, தானே இந்த பங்கத்தை செய்தவர் எனச் சொல்லி மன்னிப்பு கோரினார். மன்னரோ அவரைத் தண்டிக்காமல் ஒருபடி மேல் சென்று, கை தானே முதலில் மலரை எடுத்தது அதனால் கை தான் முதலில் தவறு செய்தது என்று கூறி தன் வாளை எடுத்து அரசியின் கையை வெட்டி விட்டார்.

அரசி மன்னருக்கு மிகவும் பிடித்தமானவள், மிகவும் அழகானவள், அதிகாரமுடையவள் இருந்தும் மன்னருக்கு இறைவன் மீதான பக்திதான் பெரிதாக இருந்தது.

இந்த சிவலீலையை கண்ணுற்ற வானவர்கள் இவர்களின் பக்தியை மெச்சி மலர்மாரி தூவினர்.

இதோ இந்த சம்பவத்தை குறிப்பிடும் பெரிய புராணப் பாடல்;

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கட்டிய வுடைவாள் தன்னை
உருவிஅக் கமழ்வா சப்பூத்
தொட்டு முன்னெடுத்த கையாம்
முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல்
பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை
வளையொடுந் துணித்தா ரன்றே.

பொழிப்புரை :
தம் இடையில் கட்டியிருந்த உடைவாளை உருவி, அம் மணம் கமழும் மலரைத் தொட்டு, முன்பு எடுத்த கைதான் முதலில் துண்டிக்கத் தகுவது என்று கூறி, தம் அரசுரிமைப் பட்டம் பூண்டு, தம் அன்பையும் பூண்டு விளங்கும் பெருந்தேவியான மணம் கமழும் கூந்தலையுடைய அவளது கையை, அணிந்த வளையலுடன் அப் போதே துண்டித்தார்.

இப்பொழுது மேற்குறிப்பிட்ட சம்பவத்தை ஆண்டாள் சரித்திரத்தோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

( செட்டிபுணியம் தேவ நாராயண பெருமாள் கோயில் - படம் நன்றி அசோக் )

Andal001

ஆண்டாள் கண்ணனையே காதலனாக வரித்தாள். அந்தக் கண்ணனே மணாளனாகவும் வேண்டும் என்று விரதமிருந்தவள்.

பாவை விரதம் முதல் மன்மதனுக்கு வேண்டி நோன்பு இருப்பது வரை பல நோன்புகள் நோர்த்தவள். எல்லாமே கண்ணனின் கரம் பற்றவேண்டித்தான். இவள் விரதம் முடிப்பதற்கு எல்லாத் தேவதைகளையும் கூவி அழைத்தவள். (மன்மதனின் தம்பி முதற்கொண்டு வருணதேவன் சுமந்து செல்லும் மழைமேகங்கள் வரை அனைவருமே ஆண்டாளுக்குக் காதல் தூதுதான்.)

கண்ணனே தன் கணவன் என்பதை கனவிலும் நனவிலும் நன்குணர்ந்தவளாகையால், கண்ணனுக்கு செய்யப்படும் கைங்கரியங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். அதில் ஒன்றுதான் கண்ணனுக்கு பூமாலை சரிபார்த்துச் சார்த்துதல்.

தந்தையாரான விஷ்ணுசித்தனார் (பெரியாழ்வார்) நாளும் தோட்டத்தில் தானே கொய்த மலர்களைக் கோர்த்து பரந்தாமனுக்காக சார்த்துவதற்காக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த மலர் மாலையைக் கூட ஆண்டாள் விடவில்லை. முதலில் தனக்கு சார்த்திக் கொள்வாள். கண்ணாடி பார்ப்பாள். ‘அழகோ அழகு.. கொள்ளை அழகு.. கண்ணனுக்கு சார்த்தவேண்டிய மாலைதான் இது’ என்று ஒப்புதல் (தனக்குத் தானே) கொடுத்துக் கொள்வாள்’. அடுத்தநாள் அதிகாலை அந்த மாலை கண்ணனின் தோள் மீது ஒய்யாரமாக அலங்கரிக்கப்படும்போதெல்லாம் அவள் உள்ளம் மகிழ்ச்சியில் பூரிக்கும்.
ஆனால் ஒருமுறை இந்தச் செயலை பெரியாழ்வார் கண்டுவிட்டார். ‘ஆகா.. மாதவனின் மலர் மாலை மானிடர் கழுத்தில் முதலில் போடப்பட்டு அதன் பின்னரே அவனுக்கு சார்த்தப்படுகிறதா.. இந்தக் குற்றத்தைத் தன் பெண்ணே செய்து விட்டாளே’ என்ற பெருங்குறையில் தவித்துவிடுகிறார்.

இரவில் கண்ணன் அவர் கனவில் வருகிறான் ‘கலங்கவேண்டாம்.. உங்கள் கோதை தான் சூடி எனக்குச் சூடும் மாலைதான் என் விருப்பம்’ என்று சொல்லித் தேற்றுகிறான். பெரியாழ்வாருக்கு ஆண்டாளின் தெய்வீகம் புரிகிறது.

அன்னவயற்புதுவையாண்டாளர ங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல் பதியம்- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்- நாடி நீ
வேங்கடவற்கென்னவிதியென்ற விம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.

‘சூடிக் கொடுத்த சுடர்கொடியாளே’ என்று தன் மகளை கண்ணில் ஆனந்தநீர் மல்க அணைத்துக் கொள்கிறார்.

இறைவனுக்காண மலரை முகர்ந்த ஒருத்தருக்கு தண்டனையும், இறைவனுக்காண மாலையை தான் சூடிப் பார்த்து தந்த ஆண்டாளை வழிபடுவதற்குமான காரணம் இப்பொழுது புரிகிறதல்லவா. அரசி சங்கா மலரை முகர்ந்து பார்த்தது அதனுடய நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு, தன் மகிழ்ச்சிக்காக முகர்ந்தாள், தண்டனையை அனுபவித்தாள். ஆனால் ஆண்டாளோ இறைவனுக்கு மாலை சரியாக இருக்குமோ, அவன் மகிழ்ச்சியடைவானோ என்ற நோக்கில் மாலையை சூடித் தந்தாள், அதனால் வழிபாட்டுக்குரியவளானாள்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, மே 24th, 2009 அன்று 11:02 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 8 மறுமொழிகள்

Dhivakar
  1  

என்ன விஜய்,
தேடிப் பிடித்து ஒரு வித்தியாஸமான சிற்பத்தை வெளியிட்டுள்ளீர்கள். திருத்தொண்டர்புராணத்துப் பாடல்களை வைத்து சிற்பிகள் இத்தனை அற்புதமாக சிலை வடிவித்திருப்பார்கள் என்று நினைப்பதற்கே ஆச்சரியமாக இருப்பது ஒன்று.

ஏற்கனவே அப்பர் பாடல்களை முன்மாதிரியாகக் கொண்டு நிறைய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளதை அறிவோம். உதாரணமாக ராவணன் மலையைத் தூக்கி, தலை நசுங்கு்ம் காட்சி சிற்பங்கள் அனைத்தும் அப்பர் பாடல்களை வரிக்கு வரி முன்னே வைத்துக் கொண்டு இந்த சிற்பிகள் செய்திருக்கவேண்டும் என்றுதான் தோன்றும். அதைப் போல சுந்தரரின் காவிரியைப் பிரித்து வழி கேட்கும் பாடலும் அதன் சிற்பமும்..

இப்போது பெரியபுராணத்துப் பாடலின் சிற்பம்.

இரண்டு பேருதவிகள் செய்து வருகிறீர்கள். அழகான கலைப் படைப்பை வெளிக்கொணர்வது என்பது ஒன்று. சிற்பங்களை வெளிக்காட்டுவதன் மூலம் தெய்வத் திருப்பாடல்களின் பெருமையை நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.

தொடரட்டும் உங்கள் சேவை!!

திவாகர்

மே 25th, 2009 at 11:03
Sivaram Kannan
  2  

The first story was a bit gore. The comparison at the end of the blog makes an interesting point. Great details and a great post

மே 26th, 2009 at 23:29
  3  

Still I am not able to accept it…. Andal was given a chance - she was asked to reform herself. But this queen was not even given a second to explain herself.

மே 27th, 2009 at 20:51
Dhivakar
  4  

Vairam,

அந்த இரு பெண்மணிகளுக்குள் உள்ள வித்தியாசங்களை முதலில் பார்ப்போம். பக்தியும் அந்த பக்தி கொடுத்த உரிமையையும் சற்று கவனிக்கவேண்டும்.

ஒருத்தி, அதாவது மூக்கறு்பட்டவள் சமணமதத்தைச் சார்ந்தவரின் பெண் என விஜய் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவள் சிறந்த பெண்மணியாக இருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு கணவன் சார்ந்த நிலை எடுத்து கணவருடன் கோயில் கோயிலாக சென்றாலும், எப்போது இறைவனுக்கான மலரை ஆசைப்பட்டு மணத்திற்காக மட்டும் முகர்ந்தாளோ, இவள் ஆசை எல்லாம் அந்த அழகான மலரின் மீதும், அதன் மணத்தின் மீதும் மட்டுமே தவிர இவளிடம் தெய்வபக்தி தோன்றவில்லை என்பதும் விளங்கும். இந்தத் தொண்டர் புராணத்தின் கதையும் அதுதான்.

அடுத்தது ஆண்டாள் - பக்திக்கு மறுபெயர், சரணாகதி தத்துவத்தின் ஆணிவேர் அவள். மூவரின் ஒருவரான சுந்தரர் போல ஆண்டவன் மீது உரிமை எடுத்துக் கொண்டவள். அவருக்கு அது பிடிக்குமா இல்லை இது பிடிக்குமா என்று பார்த்து பார்த்துச் செய்பவள்.

நாச்சியார் திருமொழியைப் படித்தாலே தெரியும். ஆண்டாள் கண்ணன் மீது வைத்திருக்கும் ஆசை, நேசம், பாசம், அதிகாரம், அன்பு, காதல், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் அவன் மீது கொண்ட உரிமை - இதுதான்
அவளுக்கு சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற பெயரையே வரவழைத்தது.

இதே உரிமைதான் முன்னர் ஒருசமயம் கண்ணப்பர் தன் காலை எடுத்து அடையாளத்திற்காக சிவனின் ஒரு கண்ணை மூடவைத்தது. இது பக்திக்காக ஆண்டவன் நமக்குக் கொடுத்த உரிமை. ஆனால் மூக்கை இழந்த சங்கா (கழற்சிங்கரின் ராணி)அந்த உரிமையைப் பெறமுயலவில்லை என்பதாகவே நாம் இங்கு கொள்ளவேண்டும். ஏனெனில் அவளிடம் உண்மையான பக்தியில்லை என்றும் கொள்ளலாம்.

மேலும் பக்தியில் ‘சந்தர்ப்பம்’ என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. பக்தி என்றால் பூரணபக்திதான்.

திவாகர்

மே 28th, 2009 at 15:25
  5  

யோசிக்க வைக்கும் பதிவு.

உண்மையில் பக்தியை `வலியப்புகுத்த` முடியுமா? ஒருவருக்கு பக்தி இல்லை என்று இன்னொருவர் நிர்ணயம் செய்ய இயலுமா? ஒருவருக்கு பக்தி குறைவு என்பது கொடிய தண்டனை பெறும் அளவு குற்றமா? இம்மாதிரிக் கதைகள் பக்தியை வளர்க்க உதவுமா? இல்லை வன்முறையை வளர்க்க உதவுமா?

பக்தி என்பது `அவன் தாள் வணங்குதல்`. இந்த அவன் தாள் வணங்குதலும் `அவன்` அருளால்! என்கிறார் மாணிக்கவாசகர். அவரும் ஒரு நாயன்மார். ஆனால் அருவாளை எடுக்கும் இவரும் நாயன்மார் என்றால் இந்த `நாயன்மாராக்கும் திட்டத்தில்` எங்கோ கோளாறு நடந்திருப்பது தெரிகிறது. மூக்கறுத்தால் நாயன்மார், கையை வெட்டினால் நாயன்மார், கண்ணைக் குத்தினால் நாயன்மார், முலையறுத்தால் நாயன்மார் என்றால், `பீதி` வருகிறது. சமணர்களைச் சாடும் சைவம், வெகுவாக சமண வழியிலேயே ஒரு காலத்தில் போயிருப்பது இதிலிருந்து தெரிகிறது. அங்குதான் இப்படி உடலை இம்சை பண்ணும் வழிமுறைகள் உண்டு. நமது சங்க மரபில் `அனிச்சம் மலரினும் மென்மையானவள் பெண்` எனும் அழகியலே உண்டு!

இந்தப் பார்வையில் ஆண்டாளும் தண்டனைக்குரியவளே!

பக்தியின் பாவம் இங்கு தெளிவாக்கப்படவில்லை. ஆண்டாளுக்கு இறைவனிடம் உரிமை இருக்கிறது. தான் யார், தன் நாயகன் யார் எனும் தெளிவு இருக்கிறது. ஆனால் இந்த ராணி ’பெரும்பாலான நம்மைப் போல்’ தன்னைச் சாதாரணப் பெண்ணாகவே பார்க்கும் மனோபாவம் தெரிகிறது. அவள் செய்தது சிவன் கோயிலில் கிடந்த மலரை முகர்ந்தது. சிவன் ஆராதனைக்கு வைக்கப்பட்டிருந்த மலரை நுகரவில்லை. கோயிலில் கிடந்த மலரை நுகர்ந்தாள். அது தெரியாமல் செய்த சிறுபிழை. அதற்கு இவ்வளவு கொடூரமான தண்டனையா?

சரி, இன்னும் கொஞ்சம் விசாரிப்போம். யார் நுகர்தது? ஆத்மா நுகர்கிறது. ஆத்ம சக்தி இல்லாமல் உடலால் நுகரமுடியாது. செத்த உடல் நுகர்வதில்லை. அவள் ஆத்மாவின் அந்தர்யாமி யார்? இறைவன் அல்லவோ! ஆக நுகர்தது அவளா? இல்லையே! உண்மையில் இங்கு அஞ்ஞானிகள் யார்? அவளா? வெட்டிய வீரர்களா? அவர்களை எப்படி நாயன்மார்கள் ஆக்குவது? ஆத்ம சொரூபமான அவளைத்திருத்தி ஆட்கொள்ளும் திறமும், பொறுப்பும் இறைவனுக்கு இருக்கும் போது இவர்கள் இடையே புகுந்து மூக்கறுக்கிறேன், கையை வெட்டுகிறேன் என்று கிளம்பினால் எப்படி? இந்த பரிபக்குவம் கூட இல்லாத இவர்களை நாம் எப்படி வணங்க முடியும்?

கதைகள்! கதைகள்!!!

மே 30th, 2009 at 12:38
  6  

மனம் ஏற்கவில்லை, முதல் சிற்பத்தின் கதையை, அதனாலேயே தாமதித்தேன், பின்னூட்டத்திற்கு, இதற்கான மூலம் என்னனு கண்டு பிடிக்கணும். முடியுமா??? தெரியலை, பார்க்கலாம், வாழ்த்துகள், தேடிப் பிடிச்சுப் போடுவதற்கும் உழைப்புக்கும்.

மே 30th, 2009 at 16:45
S.Muruganandam
  7  

சைவமும் வைணவமும், சிற்பங்களும் அற்புத சங்கமம், சேவை செய்யும் அனைவருக்கும் நன்றி

ஜூன் 2nd, 2009 at 18:41
anadhinatarajan
  8  

Hello, Just now i read the post about “punishment for smelling the flower.” It was happened in Tiruvarur temple at Asaleswar sannathi. where the Nayanmar (thandiadigal) cut rani and the king cut her hand to pickthe flower to smell (Now i don’t rememmber their names) In that sannathi you can see their statue

ஜூன் 16th, 2009 at 9:09

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி