Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: ஜூன், 2009


நண்பர்களே , நாம் இன்றைக்கு ஒரு வெண்கலச் சிலையை பார்க்கப் போகிறோம். இது ஒரு சாதாரண சிலை அல்ல, கண்ட உடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சோழர் கால சிலை. அது என்ன சோழர் கால சிலைக்கு உலகெங்கும் அப்படி ஒரு தனிப் பெருமை! வாருங்கள் காண்போம்.

நுண்ணிய வேலைப்பாடா? சிற்பியின் கலைத் திறனா? முக பாவங்களா? அங்க அமைப்புகளா? இவை அனைத்தும் ஒருங்கே அமைந்திருந்தாலும் அதற்கு மேலும் ஏதோ ஒரு கவர்ச்சி. அந்த ஏதோ ஒன்று என்ன? இந்த பதிவை படித்த பின்னர் நான் எதை குறிப்பிடுகிறேன் என்று தங்களால் அறிந்து கொள்ள முடிகிறதா என்று பார்ப்போம்.

தில்லி அருங்காட்சியகத்தில் அழகாய் வீற்றிருக்கும் சிலையை முதலில் பார்ப்போம்…

vishnu chola bronze delhi museum

மஹா விஷ்ணு, ஆபத்பாந்தவன் . நாம் இதுவரை ஏராளமான கற்சிலைகளை பார்த்துள்ளோம், ஆனால் உலோகக் சிலைகள் மிகவும் நேர்த்தியானவை, காரணம் உலோகத்தில் வேலை செய்வது கல்லை விட சற்று எளிது, அதனால் கலைஞன் இன்னும் நேர்த்தியாக வேலை செய்யலாம். நம்முடைய முந்தைய ‘சிங்கை’ உமை சிற்பம் பற்றிய பதிவில் சோழர்கள் வெண்கலச் சிலைகளை எப்படி வடித்தார்கள் ( லாஸ்ட் வாக்ஸ் முறை ) என்பது பற்றி விரிவாக பார்த்தோம். இன்று அதே முறை குறித்து கோதை நாச்சியார் தம் அழகு தமிழில் மனம் உருகி பாடிய பாட்டை கேட்டு நாமும் ரசிப்போம்… ( வழக்கம் போல் சரியான பாசுரத்தை தேடித் தந்த திரு திவாகர் அவர்களுக்கு நன்றி )

மழையே மழையே மண்புறம் பூசியுள்ளாய் நின்ற
மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேன்கடத்துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத்தகப்படத்
தழுவநின்று, என்னைத் ததற்றிக் கொண்டூற்றவும் வல்லையே

என்ன அருமையான வரிகள்! மெழுகுச் சிலை ( மோல்ட்) அதனை அணைக்கும் களிமண், சுளையில் வைத்து சுடும்போது உள்ளே இருக்கும் மெழுகை உருக வைக்கும் . அதே போல திருவேங்கடவன் தன்னை வெளியில் அணைத்து உள்ளே உருக வைக்கின்றான் என்கிறாள்.

அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் அவனது சுந்தர வடிவத்தை வடிக்கும் போது, அவன் கருணை முகம் எப்படி இருக்க வேண்டும். ஒருமுறை பார்த்தாலே உள்ளத்தை உருக்கி அவன் அன்பில் சரண் புக செய்யும் சுந்தர மதி வதன முகம் அல்லவே அது.

closeup of vishnu
the loving smile of vishnu

அது மட்டுமா, அவன் அலங்காரப் பிரியன்.

the intricate work on the clothing

அழகைப் பார்த்தோம், இப்போது நுண்ணிய வேலைப்பாடை பார்ப்போம். ( தலைப்புக்கு வர வேண்டுமே )

கவனமாக பாருங்கள் - மீண்டும் உங்களுக்கு ஒரு பரீட்சை.

the srivatsam
the srivatsam mark

என்ன கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி, உங்களுக்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன் முயன்று பாருங்கள். வலது மார்புக்கு சற்று மேலே பாருங்கள்.

srivatsam

என்ன அது. சிலை வடிக்கும் பொழுது ஏதாவது ஒட்டிக்கொண்டதா ? இல்லை - அது ஒரு “மறு” (மச்சம்) - இதைத்தான் கலித்தொகையில் “திரு மறு மார்பன் போல்” என்று பாடினரோ!

- நன்றி கீதா அம்மா - சமஸ்கிருத வரிகளை படியுங்கள்

durdAntha daithya visikha ksahtha-பத்ரபாங்கம்

துர்தாந்த தைத்ய விஷிக்ஹ க்ஸாஹ்த - பத்ரபாங்கம்

veerasya tE VibudhanAyaka baahumadhyam |

வீரஸ்ய தே விபுதாநாயக பாஹுமட்ஹ்யம் |

SrIvathsa Kousthubha RamA வணமளிகங்கம்

ஸ்ரீவத்ச கௌஸ்துபா ராம வணமளிகங்கம்

chinthAnubhUya labhathE charithArTathAm na: ||

சிந்தானுபூய லபதே ச்சரித்தார் ததாம் ந:||

( தமிழாக்கம் நன்றி முனைவர் கண்ணன் அவர்கள் )

ஓ! தெய்வ நாயகா!

பொல்லா அசுரர் உன்னுடன் போர் புரிந்த போது பட்ட விழுப்புண்கள் உன்
மார்பில் கணிதக் கோடுகளாக இங்குமங்கும் பரவி உன்னை அளக்கின்றன.
அப்போர்களில் நீர் கண்ட வெற்றியின் சின்னமே போல் இவ்விழுப்புண்கள் உன்
மார்பை அலங்கரிக்கின்றன.

உன்னோடு பிறந்த ஸ்ரீவத்சமெனும் மருவும், கௌஸ்துபம் எனும் செம்மணியும்
இதனுடன் பொலிவுடன் திகழ்கிறது.

பூமித்தாய் மகிழ்வுடன் கோர்த்தளித்த காட்டுப்பூக்கள் சேர்ந்த அழகிய
வனமாலை உன் அழகிற்கு அழகு சேர்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல், அன்னை ஸ்ரீதேவி
‘அகலகில்லேன்’ என உன் திருமார்பை அலங்கரிக்கிறாள். அவளது திருவழகு
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ எனும்படியாக உன் வடிவழகிற்கும்,
சுபாவத்திற்கும் போட்டியாய் அமைந்துள்ளது.

இத்தனையும் அசுரர் தந்த விழுப்புண்ணில் பிரதிபலித்து வண்ணக்கோலமாக உன்
நெஞ்சை மாற்றுகின்றன.

இத்தனையும் கண்டு என் உள்ளம் பூரிக்கிறது. இதுவல்லவோ சேவை! ஒரு
சேதனனுக்கு கிடைக்கும் அரிய சொத்து.

என்ன அன்பர்களே சோழர்களின் வெண்கலச் சிலையின் மகத்துவத்தை அனுபவித்தீர்களா!

மறுமொழி அளிக்கவும் »


இன்றைக்கு நாம் மீண்டும் புள்ளமங்கை பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் செல்கிறோம். சிற்ப புதையல்கள் நிறைந்த ஆலயம், ஒவ்வொரு முக்கிலும் சிற்பம். எங்கும் சிற்பம், எதிலும் சிற்பம். சுற்றி சுற்றி நம்மை திணற வைக்கும் கலை பெட்டகம் . அவற்றில் ஒரு அற்புத சிற்பக் கொத்தை நாம் இன்று சதீஷின் உதவியுடன் பார்க்கிறோம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் போது - யார் படைப்பாளி யார் படைப்பு. புரியவில்லையா . மேலும் படியுங்கள்.

லிங்கோத்பாவர் சிற்பம். சைவ ஆலயங்களில் ஆகமங்களில் முக்கிய இடம் பெற்று விமானத்தின் பின்னால் இடம் பிடித்த சிற்பம்.

அதற்கு முன்னர், யாரையும் புண்படுத்த இந்த பதிவை இடவில்லை, சிற்பத்தை சிற்பமாக பார்ப்பதே எங்கள் நோக்கம். அதற்கு எவ்வளவு தூரம் கதை வேண்டுமோ அதை மட்டுமே இங்கு இடுகிறோம்

Ligothbhavar panel pullamangai

இந்த சிற்பக் கொத்தில் பார்க்க நிறைய உள்ளது

so much to see

அவற்றை முறையே பிரித்து ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

முதலில் லிங்கோத்பாவர்

closeup of the panel

ஒருநாள் நான்முகனுக்கும் ( அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் ) திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவ்வாறு அவர்கள் வாதமிட, அங்கே தீ பிழம்பாகிய ஜோதி வடிவம் ஒன்று எழுந்தது. அதன் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று ஒரு அசரீரி வானத்தில் கூறியது. பிரம்மா அதன் முடியைக் காண அன்னமாகி மேலே பறந்து சென்றார் . திருமாலும் வராக(பன்றி) வடிவில் பூமிக்குள் சென்று அடியை தேடினார். மிகவும் முயன்றும் பல காலம் கழிந்தும் இருவருக்கும் எந்த பலனும் கிட்டவில்லை . பறந்து சென்ற பிரம்மா வழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ உச்சியிலிருந்து தான் புறப்பட்டு பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறியது. உடனே போட்டியில் ஜெயிக்க குறுக்கு வழி வகுத்த பிரம்மா தாழம்பூவைத் தன் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலம் முயன்றும் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார்.

அப்போது அதில் இருந்து வெளி வந்தார் சிவன், தங்கள் அகந்தையால் எதிரில் இருப்பது ஈசன் என்றும், அவன் ஆதி அந்தன் என்பதையும் உணராதது பிழை என்று ஒப்புக்கொண்டனர். எனினும் பொய் சொன்ன பிரம்மாவின் தலையை கொய்தான் ஈசன். மேலும் அவருக்கு இனி தனி வழிபாடு இல்லை என்றும், தாழம் பூ இனி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பூவல்ல என்றும் கூறினார். அவ்விருவர் அகந்தையையும் போக்கி சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

இரண்டாம் திருமுறை - பாடல் எண் - 9

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=2&Song_idField=2025009&padhi=025

மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே.

திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

சரி, இப்போது சிற்பம்.

மேலே பறக்கும் பிரம்மா , கிழே பூமியை குடையும் வராஹம். நடுவில் சிவன் ( மிகவும் சிதைந்த நிலையில்) பிளந்துக்கொண்டு வெளி வருகிறார்.

closeup of flying brahma
flying brahma
vishnu as varaaham
shiva emerging from the pillar

இந்த சிற்பத்தின் இரு புறமும் பிரம்மன் மற்றும் திருமாலின் அற்புத சிற்ப வடிவங்கள்

vishnu - on the other side
Vishnu closeup
brahma -on one side
closeup of brahma
brahma closer
brahma - what a beauty

கதையில் சற்று தாழ்ந்தாலும், பிரம்மனின் முகத் தோற்றம் அப்பப்பா அபாரம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் பொது - யார் படைப்பாளி யார் படைப்பு. தலைப்பு புரிந்ததா .

பொறுங்கள், இது ஒன்றும் நாடகம் அல்ல, தலைப்பு வந்தவுடன் முடிய, இன்னும் உள்ளது.

மிக அரிய சிறிய சிற்பங்கள்.

the left side bottom row panel
the left side first row panels
the right side first row panels
the right side lower row panel

நாம் முன்னரே கங்கை கொண்ட சோழபுரத்தில் சண்டேச அநுகிரஹ முர்த்தி வடிவம் பார்த்தோம். இப்போது அதன் எறும்பு அளவு சிற்பம். ஈசன் அன்புடன் சண்டேசரின் தலையில் பூ சுற்றும் காட்சி.

miniature panels - chandesaanugraha murthy

அடுத்து, ஆதி சேஷனின் மடியில் துயிலும் திருமால், தேவி மற்றும் ஒருவர்.

mahavishnu on adisheshan with lakshmi and an attendant

அடுத்து, சிவன் பார்வதி - பார்ப்பதற்கு கங்காதரா வடிவம் போல உள்ளது

shiva paarvati - is it a gangadhara

அடுத்து மூன்று பேர், யார் இவர்கள்.

three attendants

அடுத்து மிக அற்புத மகா சதாசிவ வடிவம் ( இல்லை பிரம்மனா)

shiva - mahasadhashiva or brahma

முடிவில் ( இல்லை இன்னும் யாளி வரிசை உள்ளது - அடுத்த பதிவில் பார்ப்போம் ) -

shiva parvathi and a ghana

ஆஹா , அம்மை அப்பன் , கீழே ஒரு பூத கணம், எப்படி தான் உயிரோட்டத்துடன் வடித்தார்களோ, அம்மை அப்பன் அமர்ந்திருக்கும் ( ஒரு காலை மடித்து ) தோரணை அபாரம். இந்த சிற்பங்களை இன்னும் போற்ற முடிவில் சதீஷ் டச்

to give you an idea of the size of these miniatures

அருகில் இன்னொரு சிற்பம் - அதன் அளவை குறிக்க கார் சாவி …

படங்கள்: திரு சதீஷ், மற்றும் வரலாறு.காம்

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 3  1  2  3 »