Quantcast

தொகுப்புக்காக ஆகஸ்ட் 31st, 2009

புள்ளமங்கையின் ஈர்ப்பு நம்மை அவ்வளவு சுலபத்தில் அங்கிருந்து வெளிவர விடை தர மறுக்கிறது. அதனால் இன்று மீண்டும் அங்கிருந்து ஒரு சிற்ப விருந்து. நன்றி திரு அர்விந்த் அவர்களே. இந்த பதிவின் மூலம் வாசகர்களுக்கு இன்னும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அடுத்த முறை இத்தளங்களுக்கு செல்லும் பொது அங்கு நான் சென்றேன் என்பதற்கு அத்தாட்சியாக சிற்பங்களின் முன்னர் நின்று படம் எடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு சில நிமிடங்கள் எங்களுடன் உங்கள் படங்களை பகிரும் நோக்கத்தோடு, சிற்பங்களின் கலைத் திறனை வெளிக் கொணரும் பாணியில் படங்களை எடுத்து உதவுங்கள். இப்போது முன் போல படம் எடுக்க பணம் விரயம் செய்யவேண்டிய அவசியம் இல்லை, மின்னணு புகைப்படக் கருவி வந்துவிட்டதே.படச் சுருள் தேவை இல்லை - மற்றும் எடுத்ததை அப்போதே பார்த்து பகிரலாம். இவ்வாறு படம் எடுக்க சில நொடிகள், நடுக்கம் இல்லாத கை, அருகில் இருக்கும் சாமானிய பொருள்கள் மற்றும் நல்ல உள்ளம் மட்டுமே.

திரு அர்விந்த் அவர்கள் எப்படி படம் எடுத்துள்ளார் பாருங்கள்.

handphone

இல்லை, இது அலை பேசி / கை பேசிக்கான விளம்பரம் இல்லை. எதற்காக இந்த படம் என்பது இந்த அற்புத சிற்பத்தின் பதிவின் முடிவில் விளங்கும்.

pullamangai ardhanari

அர்தனாரி - உமை ஒரு பாகன், அம்மையும் அப்பனும் ஒன்றாய் காட்சி அளிக்கும் திருவுருவம். பெண்கள் ஆண்களுக்கு சரி சமானம் என்றும், ஆணின் சரி பாதி என்றும் உலகுக்கு உணர்த்தும் உன்னத கோலம். இந்த வடிவத்தை கல்லில் அற்புதமாக செதுக்கி உள்ளான் சிற்பி.

உமையொருபாகன் தேவார வரிகளில் பல முறை வந்தாலும், அவனது எழில் மிகு தோற்றத்துடன் நந்தி இணைந்து விடை வாகனாக குறிப்பிடும் பாடல் இதோ

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=20850&padhi=085&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும்.

இந்த சிற்பத்தின் அழகு அதை வடித்த சிற்பியின் கலை திறனைப் போற்றுகிறது. ஒரு புறம் ஆணின் வீரியம், அதனுடன் பெண்மையின் நளினத்தை இணைக்க வேண்டும், வெளி வரும் சிற்பம் இரு பாதிகளை ஒட்டியது போல இல்லாமல், பார்ப்பதற்கு ஒரு சிற்பம் போல இருக்க வேண்டும்

சிற்பத்தின் இரு பாதிகளையும் தனித்தனியாக பார்ப்போம். ஆண் பெண் என பார்த்தவுடனேயே நமக்கு உணர்த்தும் வகையில் நேர்த்தியாக செதுக்கிய அழகு அருமை

shiva portion
umai oru paagam

ஆண் பெண் என்ற இரு அம்சங்களையும் அவன் படித்து இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை உரிய வகையில் மிகைப் படுத்தி கல்லில் வடித்தான் என்பதை, அந்த இடையை பார்த்தாலே தெரிகிறது.

the diff shown in the waist
the diff shown in the waist detail

ஆண் என்பதனால் பறந்து விரிந்த தோள்கள், அதே உமைக்கோ கொடியென வளைந்து தவழும் வண்ணம் வடித்துள்ளான்.

check out the shoulders
check out the shoulders detailing

அவன் கல்லில் இட்ட கோடுகளை சற்று மிகை படுத்தி நாம் ரசிக்க காட்டியுள்ளேன்.

அடுத்து ஈசன் கம்பிரமாய் நிற்கும் பாணி, அந்த பக்கம் உமையோ நளினமே உருவான தோற்றம். நந்தி பின்னால் - அதையும் மிக நேர்த்தியாக ( கழுத்தில் தொங்கும் சதை / தோல் ) வடித்துள்ளான் சிற்பி

nandhi

அதனுடன் நமது பதிவு முடியவில்லை. அலை பேசி வரவேண்டுமே, இதோ..

size comparison

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 1  1