Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: ஜனவரி, 2010

“அலைகளையும்,கொழுந்து விட்டெரியும் அழலையும்,காற்றின் போக்கில் விண்ணில் தவழ்ந்து செல்லும் வெண்முகிலின் கூட்டத்தையும் தூரிகையால் ஓவியமாக வடிக்க வல்லவனே மிகச் சிறந்த ஓவியன்.”

விஷ்ணு தர்மோத்தர புராணம், Ch 43 V 28

நான் இதனை முதல் முறையாக திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை அரசு ஓவியக் கல்லூரி ஆசிரியர் , அவர்களின் உரையில் ( அதற்கு அழைப்பு விடுத்த திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி ) கேட்டேன். உரையின் தொடக்கத்திலேயே மேல்கண்ட அந்த அற்புத வாக்கியத்தைச் சொல்லி எங்கள் ஆர்வத்தைத் தூண்டினார் சிவராமகிருஷ்ணன்.

”ஓர் ஓவியனின் பார்வையில் சிற்பம்” என்பதே உரையின் தலைப்பு - பல அற்புதமான சிற்ப வடிவங்களில் பொதிந்து கிடக்கும் கலை நுட்பங்களை அவர் எங்களுக்கு விளக்கினார். எனினும் என்னை மிகவும் கவர்ந்தது முடிவில் அவர் விளக்க எடுத்துக்கொண்ட ‘அஜந்தாவின் அழியா ஓவியங்கள்’ தலைப்பு (சிவகாமியின் சபதம் - ஆயனச் சிற்பியின் தாக்கம்தான்!!)

நண்பர்கள் பலரும் அஜந்தா சென்று அங்குள்ள அழியா ஓவியங்களைப் பார்த்துவிட்டுப் புளகாங்கிதம் அடைவதைக் கண்டதுண்டு. எனினும் அவர்கள் அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு அப்படிப் பரவசப் படுகிறார்களா என்று ஒரு கேள்வி மனத்தில் இருந்தது. இங்கேதான் நுண்கலை வல்லுனர்களின் உதவி நம்மைப் போன்ற சாமானியர்களுக்குத் தேவை (இந்தப் பதிவை இட அனுமதி அளித்த திரு. சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கு மற்றுமொரு முறை நன்றி - இப்பதிவில் உள்ள நல்ல அம்சங்கள் எல்லாம் அவருடையவை; பிழைகள் ஏதேனும் இருந்தால் அவை எனது மட்டுமே )

long shot of the mural

இப்படித்தான் பொதுவாக அஜந்தா செல்லும் அனைவரும் அங்கிருக்கும் ஓவியங்களைப் பார்க்கின்றனர். சிதைந்து போனாலும் அதில் எஞ்சி இருக்கும் கலையை நாம் உன்னித்துப் பார்த்தால் மேலும் மேலும் ரசிக்கலாம். படத்தின் வலப்புறம் பாருங்கள்.

long shot of the mural with the apsara

இது அஜந்தாவின் பதினேழாம் குடைவரையில் இருக்கும் சுவர் ஓவியம். வானுலக தேவதை புத்தரை வழிபட பூலோகம் இறங்கி வரும் காட்சி இது -

அருகில் சென்று ஓவியத்தின் அழகை ரசிப்போம்.

closeup of the mural

பேரழகுதான் - பொறுங்கள், அதற்குள் ’பேஷ் பேஷ்’ எல்லாம் வேண்டாம். இந்த ஓவியத்தின் நுட்பங்களை முதலில் பார்ப்போம்.

அதற்கும் முன்னர், நண்பர் ஓவியர் திரு பிரசாத் அவர்களை கட கடவென்று இந்த ஓவியத்தின் நகல் ஒன்றை வரைந்து தரச் சொன்னேன். இதோ அது -

prasad's rendition

ஒவ்வொன்றாக இந்த ஓவியத்தின் உன்னதங்களைப் பார்ப்போம்.

முதலில் - விஷ்ணு தர்மோத்தரத்தின் சித்ர ஸூத்ரம் பகுதியில் இடம்பெற்ற இன்னும் ஒரு வாக்கியத்தைப் பார்ர்ப்போம் ( விஷ்ணு தர்மோத்தரம், *அபிலாஷ்தார்த்த சிந்தாமணி,* சிவதத்வ ரத்நாகரம், சில்ப ரத்நம், நாரத சில்பம், ஸரஸ்வதி சில்பம், ப்ரஜாபதி சில்பம் முதலியவை சித்திரங்கள் பற்றித் தெரிவிக்கும் நூல்களில் குறிப்பிடத் தக்கவையாகும். இந்நூல்கள் ஓவியத்தின் தன்மை, வகைகள், செயல்முறை, வண்ணங்கள், துணைக் கருவிகள், மூலப் பொருட்கள், நற்பண்புகள், குறைகள், நடைமுறை, திறனாய்வு மரபுகள் பற்றிக் கூறுகின்றன. விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள ’சித்ர ஸூத்ரம்’ என்று அழைக்கப்படும் பகுதியே பண்டைய ஓவியக் கலை நுட்பம் பற்றித் தெரிவிக்கும் தலைசிறந்த பகுதியாகும். )

// ரேகாம் ப்ரசம்ஸந்தி ஆசார்யா:, வர்ணாத்யாம் இதரே ஜநா://

என்றால் ” வல்லுனர்கள் ஓர் ஓவியத்தைக் கோடுகளை கொண்டே மதிப்பிடுவர்”

நாம் எல்லோருமே ஒருமுறையாவது வர்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்ட முயற்சி செய்திருப்போம் ( சிறு வயதிலாவது !!). சிலர் முறையாகப் பயின்றும் இருப்பார். அப்படி நாம் தீட்டும்போது வர்ணத்தில் தோய்த்த தூரிகையை அப்படியே கையை எடுக்காமல் ஒரே மூச்சில் கோடுகளை வரைவது எவ்வளவு சிரமம் என்று அறிவோம். ஆனால் அதுதான் கைதேர்ந்த ஓவியனின் திறமை. இப்போது இந்த அஜந்தா ஓவியத்தின் கண்களையும் புருவத்தையும் பாருங்கள் - ஒரே இழுப்பில் வரையப்பட்ட அழகு - ஒரே இழுப்பு தான் - புருவம் வந்து விட்டது; அடுத்த இழுப்பு கண்களில் தோற்றம்.

eyes and the eye brows

அவை வெறும் நேர் கோடுகளும் அல்ல; அந்த வளைவுகளுக்குள் ஒரு நயம் உள்ளது. அந்தச் சிறு நெளிவில் கடைக்கண்ணின் தோற்றத்தின் உயிர்ப்பு மிக்க வெளிப்பாடு. அப்பப்பா ! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்னொரு வாக்கியம் -

// அபி லகு லிகிதேயம் த்ருச்யதே பூர்ணமூர்த்தி: //

அப்படியென்றால் “முழு உருவத்தையும் வெகு சில கோடுகளைக் கொண்டு உணர்த்த வேண்டும் “

சரி, சம கால ஓவிய முறைகள் அஜந்தாவில் உள்ளனவா? பொதுவாக முப்பரிமாண உருவங்களை இரண்டு பரிமாணத்தில் காட்டுவதே ஓவியம். ஆனால் பார்ப்போருக்கு அது முப்பரிமாணத்தை உணர்த்த வேண்டும்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஓவியத்தில் உள்ள இரு காதணிகளையும் பாருங்கள்.

the ear rings

இடப்புறக் காதணி - வெறும் இரு நேர் கோடுகள் மட்டுமே கொண்டு தீட்டப்பட்டுள்ளது. அடியில் சற்றே வளைந்த கோடு. ஆனால் இதை வலது தோட்டுடன் ஒப்பிட்டுக் காணும் பொது. இது வட்டமான காதணி தான். எனினும் அங்கேயும் அது வட்டமாக இல்லை – Oval shapeல் இருந்தாலும் அந்த வடிவமைப்பு நமக்கு இரு காதணிகளின் வட்டமான தோற்றத்தை இடைவெளியுடன் முப்பரிமாணத்தில் உணர்த்தும் வகையில் உள்ளது - நமது பார்வையுடன் விளையாடுவதே இதன் நோக்கம்.

முதன்முதலில் சொன்ன வாக்கியத்தில் வற்புறுத்தப்படும் அசைவு -இதுவும் ஓர் ஓவிய முறை - பொருட்களின் அசைவை உயிரோட்டத்துடன் சித்திரிப்பதே ஓவியத்துக்கான இலக்கணம்.

இந்த ஓவியத்தில் உள்ள நிகழ்வு - இறங்கும் தேவதை திடீரென நின்று அருகில் இருப்பவரைப் பார்க்கிறாள். அவள் முகம் சற்றே இடது புறம் திரும்ப ஆரம்பிக்கிறது - கண்கள் இவற்றை முந்திக் கொண்டு விட்டன - கடைசியில் அவள் அணிந்திருக்கும் அணிகலன்கள் - திடீரென நின்று பாருங்கள் - அந்த திடீர் அசைவுக்கு ஈடு கொடுக்க அவை குலுங்கும் வண்ணம் வடித்த ஓவியனின் திறன்…

sway of jewellery
the sway of the jewellery

இது போல இன்னும் பல திறமைகளை இங்கு வெளிக்காட்டுகிறான் ஓவியன். அண்மையில் இருக்கும் பொருட்களைப் பெரிதாகவும் , தொலைவில் இருக்கும் பொருட்களைச் சிறியதாகவும் பார்க்கும் நமது மூளையை - இரு பரிமாணத்தில் இருக்கும் ஓவியத்தை முப்பரிமாணம் என்று நினைக்க வைக்க - அவன் அதை ஓவிய முறையில் கையாளும் உத்தி : கழுத்தில் உள்ள ஹாரத்தின் மணிகளைப் பாருங்கள் - நடுவில் உள்ள மணிகளைப் பெரிதாகவும், தோள்களின் மேல் செல்லும் பொது அவையே சிறிதாகவும் தெரியும்படி தீட்டி - நம்மை மயக்குகிறான் ஓவியன்.

இவனன்றோ சிறந்த ஓவியன் !

மறுமொழி அளிக்கவும் »


திருகழுகுன்றம் அல்லது திருக்கழுக்குன்றம், சென்னைவாசிகளுக்கு சுவையான பழைய நினைவுகளை கண்டிப்பாக தரும். ஏனெனில் பள்ளிச் சுற்றுலா என்றாலே அங்குதான் கூட்டிச் செல்வார்கள். அவர்களை சொல்லிக் குற்றம் இல்லை - அந்த நாளில் கையில் இருந்தது மல்லை , மாதவரம் பால் பண்ணை, வேடந்தாங்கல் , கிண்டி பூங்கா. எல்லாம் ஒரே நாளில் சென்று வந்துவிடலாம் , கட்டணம் இல்லை, வார நாட்களில் ஈ காக்கா வராது -பிள்ளைகள் கூட்டத்தில் தொலைந்து போகாது.. கொஞ்சம் பெரிய வகுப்பு என்றால் செஞ்சிக் கோட்டை -எனினும் திருகழுகுன்றம் தனி இடம் பெறும், காரணம், சில வருடங்கள் வரை இங்கே வந்து காலை உணவு அருந்திவிட்டு சென்ற கழுகுகள் !! பக்ஷி தீர்த்தம் .

ஓட்டை பள்ளிப் பேருந்தில் காய்கறி கூடை போல அனைவரையும் அடைத்து, தலத்தில் இறக்கி விடுவார்கள். நல்ல பையன் என்றால் நண்பனுடன் கை கோர்த்து செல்லலாம். சேஷ்டை செய்பவன் என்றால் ஒரு பெண்ணோடு ( அப்போது அது ஒரு பெரும் தண்டனை ) - ஆனால் பாதகர்கள் - எப்படி தான் விவரம் தெரியும் முன்னரே இதை மாத்தி, தனி தனியாய் அமர்திவிட்டர்கள். சரி, அதை விடுவோம் - ஜோடி மாடுகளை போல படிகளை சிரித்துக்கொண்டே ஏறுவோம். அப்போது படிகள் இத்தனை செங்குத்தாக இருந்தாக நினைவில்லை - எல்லாம் சிறிது செழிப்பு / பருமன் செய்யும் வேலையோ??

இதனாலோ என்னவோ , பள்ளி முடிந்தவுடன் எவருமே அந்தப்பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை. மூவர் - அப்பர், சம்பந்தர் , சுந்தரர் பாடிய தலம் . மல்லையில் இருந்து பதினான்கு கிலோமீட்டர் தான். ஆனால் யாரும் போவதில்லை. கழுகுகள் வருகை வேறு நின்று விட்டது ( விமோசனம் பெற்று விட்டனர் போல - இன்னும் ஒரு யுகம் ஆகும் மீண்டும் அவை வர !)

இதனால் அர்விந்த், வா அங்கே போகலாம், என்றதும் சட்டென பணிகளை முடித்துக்கொண்டு காரை திருவான்மியூர் கோயில் குளத்தருகே நிறுத்துவிட்டு விட்டு அவருடன் கிழக்கு கடற் கரை சாலையில் விரைந்தோம். இரண்டு இடங்களில் வழி கேட்டோம் - அப்புறம் மலை கண்ணில் பட்டு தானே வழி காட்டியது.

எங்கள் அதிஷ்டமோ துரதிஷ்டமோ , வழக்கம் போல, தளத்தை பற்றி சரியாக படித்துவிட்டு செல்லவில்லை. பலரை போல் வந்த பல்லவ குடவரை கோயிலை ( ஒருகல் மண்டபம் ) தேடாமல், நேரே மலை மீது உள்ள ஆலயத்திற்கு விரைந்தோம். இந்த மலை மேல் என்பது ஒரு முக்கியமான வாக்கியம். மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனை அடுத்த பதிவில் குடைவரையை பற்றி பேசும்போது மீண்டும் பார்ப்போம்.

திரு K. R. ஸ்ரீனிவாசன் அவர்களது பல்லவ குடைவரைகள் இந்த பதிவை எழுத மிகவும் உதவியது. ( சென்று வந்த பின்னர் படித்தேன் !! பின் புத்தி )

விடா முயற்சி - சரி சரி விட்டு விட்டு ( பத்து படிக்கு ஒருமுறை மூச்சு வாங்கி ) மேலே ஏறி பார்த்தல் - இந்தனை சிறிய கோயில். அதுவும் கட்டுமான கோயில் - சிற்பங்களும் அவ்வளவு இல்லை. ஏதோ விசேஷம் வேறு - ஒரு சின்ன கிராமமே மூலவர் முன்னர் இருந்தது. அஷ்டகோணமாக வளைந்து - வேதகிரீஸ்வரரை தரிசித்துவிட்டு வெளியே பிரகாரம் வந்தோம் , அங்கே ஒரு புதையல் … சுவர்களில் நடுவில் துவாரம். அதனுள் பல்லவ புடைப்பு சிற்பம். சோமஸ்கந்தர்

the tirukazhukundram vedagireerswarar panel

பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி - மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.

உடனே படம் எடுத்து விட்டு - உமை வடிவம் எப்படி செதுக்கப்பட்டுள்ளது என்று எட்டி பார்த்தோம். ராஜசிம்ஹ்ன் பாணியிலா , அல்லது அவனுக்கு முன்னர் உள்ள பாணியிலா ?

somaskanda tirukazhukundram

அப்போது , தமிழ் நாட்டு வரலாற்றில் அழியா இடம் பிடிக்க வேண்டும் என , தமிழக கோயில்களை காக்க வந்த காவலன் என்று தானே பட்டம் சூடிக்கொண்டு திரியும் மடையன் ஒருவன் வந்தான். எங்களை தமிழ் கலாசாரம் தெரியாத மூடர்கள் என்று வேசி படங்கள் எடுக்கும் முட்டாள்கள் என்று கூட்டத்தை கூட்டினான். வேறு வேலையே இல்லாமால் திரியும் கூட்டம், எங்கே வம்பு என்று அலையும் கூட்டம், உடனே சபை கூடியது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் - நாங்கள் விஷயம் தெரிந்தவர்கள், மூலவரை படம் எடுக்க மாட்டோம், இவை வழிபாட்டில் இருக்கும் சிற்பங்கள் அல்ல. கலை வளர்க்கவே எங்கள் முயற்சி என்று முறையிட்டோம். எனினும் அந்த மூடன், அவனுடன் கூடிய பஞ்சாயத்து - செவிடர்கள் கூட்டமாக மாறியது. புகை படம் எடுக்க கட்டண சீட்டு பெற்றுள்ளோம், படம் எடுக்காதே என்று அறிவிப்பு பலகை எங்கும் இல்லை என்று வாதாடினோம். இடையில் சென்று அடுத்து இருந்த ரிஷப வாஹனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிவனை படம் பிடித்தேன். பல்லவ சிற்பம் - அபாரம்.

rishabavaahana shiva

கூட்டம் களை கட்டியது. ஆங்காங்கே சரித்திர காவலர்கள் அவதாரம் எடுத்தாற்போல கூச்சல் போட்டனர். மிகவும் வருத்ததுடன் எஞ்சி இருந்த ஒரு சிற்பத்தை படம் எடுக்காமல் திரும்பினோம்.
( நண்பர்கள் உதவியுடன் விரைவில் அந்த படத்தை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது )

நல்ல காலம். சோமஸ்கந்தர் படம் அருமையாக வந்துள்ளது.

உள்ளே இரு புறம் பிரம்மா , மற்றும் விஷ்ணு

closeup

சிவன் மற்றும் உமை. உமை அமர்ந்திருக்கும் பாணி - நீங்களே முடிவு செய்யுங்கள்.

shiva
umai

குழந்தை குமரன் - தனது கிரீடத்துடன்.

baby skanda

கண்டிப்பாக ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் தான். இந்த சிற்பத்தில் ஒரு தனித்தன்மை - சிம்ஹாசனம் அடியில் பாருங்கள். மற்ற ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்களில் வருவது போல பன்னீர் சொம்பு போல இல்லாமல் இங்கே ஒரு வாய் அகல பாத்திரம் போல உள்ளது.

throne and the vessel

ஆலயம் பற்றி மேலும் விவரம். மூவர் பாடல்கள்.

http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_103.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru06_092.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_081.htm

அவர்கள் பாடியது மேலே உள்ள ஆலயமா - கிழே உள்ள குடவறையா. அவர்கள் காலம் மகேந்திர பல்லவரின் காலம் என்றாலும் அவர்கள் அவனது குடைவரைகள் பற்றி ஒரு பாடல் கூட பாடவில்லை. மேலும் அப்பர் பாடலில்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

என்று பாடுகிறார். அதனால் மேலே உள்ள ஆலயத்தையே அவர் பாடினார் என்று நாம் அறியலாம். அப்போது லாஜிக் கொஞ்சம் இடிக்கிறதே. மகேந்திரர் காலத்து மூவர் பாடிய கோயிலில் அவனுக்கு மூன்று தலைமுறைக்கு அடுத்து வந்த ராஜசிம்ஹ்ன் பாணியில் சிற்பங்களோ என்ற கேள்வி எழுகிறது ? இப்படி இருக்குமோ - அப்போது அது ஒரு செங்கல் / சுதை கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக இருந்திருக்கலாம், பின்னர் ராஜசிம்ஹ்ன் காலத்திலோ பின்னரோ மூன்று பெரும் பாறைகளை நிறுத்தி இப்போது உள்ள கோயிலின் கருவறை நிறுவப் பட்டிருக்கலாம் - இதுவே அதனுள் இருக்கும் பிற்காலத்து சோமாஸ்கந்தர் வடிவத்தின் விளக்கம் என்றும் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகிறார்

அடுத்து வரும் பதிவுகளில் குடவரை கோயிலையும் அதில் உள்ளே கல்வெட்டை கொண்டு இதே கருத்தை எப்படி ஊர்ஜிதம் செய்வது என்பதையும் விரைவில் பார்ப்போம்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 3  1  2  3 »