Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: மார்ச், 2011

“ஏதாவது செய்யணும் விஜய் !” நான்கு மாதங்களுக்கு முன்னர் அர்விந்த் மற்றும் சங்கருடன் நடந்த தொலைபேசி உரையாடல் இன்னும் காதில் ஒலிக்கின்றது.

காமரசவல்லி ஆலயத்தின் நிலையை கண்டு மனம் உடைந்த அவரது குரல் தான் அது. நண்பர்கள் ஸ்ரீராம் மற்றும் சாஸ்வத் காமரசவல்லி செல்கிறோம் என்றதும் உடனே அங்கு இருக்கும் நிலையை விளக்கும் ஒரு பதிவு நீங்களே எழுதிக் கொடுங்கள் என்று சொன்னேன். ’என்றும் பதினாறு’ என்று வரம் அளித்து காத்த கதை சொல்லும் சிற்பம் இருக்கும் ஆலயத்தின் அவல நிலையை தரும் இதோ அந்த பதிவு.

நாம் முன்னரே பலமுறை பார்த்த கதை. மரண பயம் அனைவருக்கும் வரும் பயம். அதை வென்று அழியாப் புகழ் பெற்ற பாலகனின் கதை தான் இன்று நாம் பார்ப்பது. மிருகண்டு முனிவரும் அவரது மனைவி மருத்வதியும் மகப்பேறு ஒன்றும் இல்லாமல் துயரத்தில் இருந்தனர். முடிவில் அவர்கள் வணங்கும் சிவனாரிடமிருந்து துயர் துடைக்கும் வரம் கிடைக்கிறது. ஆனால் அதில் ஒரு முடிச்சு - அனைவரும் புகழும் புத்திக் கூர்மை உடைய ஆனால் சிறு வயதிலேயே அவர்களைப் பிரிந்து மடியும் மகன் வேண்டுமா அல்லது பல வருடங்கள் அவர்களுடனே இருக்கும் முட்டாள் மகன் வேண்டுமா? என்பதுதான் அந்த முடிச்சு.

’குறைவாக இருந்தாலும் அறிவும் பக்தியும் நிறைந்துள்ள புத்திசாலி மகனே வேண்டும்’ என்று இருவரும் கேட்க அப்படியே பிறக்கிறான் மார்க்கண்டேயன். அனைவரும் வியக்கும் வண்ணம் சிவ பக்தனாக விளங்குகிறான். ஆனால் அந்த பாலகனின் பதினாறு அகவை முடிந்த நிலையில் தவணை முடிந்த வாகனத்தை பறிக்கும் சர்வ வல்லமை படைத்த கடனாளி வங்கி காவலன் போல வருகிறான் காலன். பயம் கொண்டு சிவலிங்கத்தை கட்டிக்கொண்டு நிற்கும் சிறுவனைக் கண்டு தனது பாசக் கயிற்றை வீசுகிறான் எமன். அப்போது தன்னிடத்தில் சரணடைந்த பக்தனின் குரல் கேட்டு சீறி எழும் மகேசன் காலனை உதைத்துத் தள்ளிவிட்டு, தன் பக்தனான மார்க்கண்டேயன் என்றும் பதினாறாக இருக்க வரம் அளித்து விடுகிறார்.

இந்தக் காட்சியைத்தான் சிற்பி காமரசவல்லி சிற்பத்தில் எடுத்துக்கொள்கிறான். கொள்ளிடத்தின் வடக்கே , நெடுஞ்சாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ளது இந்த ஆலயம். அதன் வடக்கு பக்கம் உள்ள சுவரில் காணும் காட்சி.

location

பிள்ளையார் சிற்பத்தின் அடியில் காணும் சிறு சிற்பம் தெரிகிறதா. ?

closer+view+location

இதோ அந்த காட்சி.

markandeya+panel

கையளவு கல்லில் கதை சொல்லும் கலை. லிங்கத்தை கட்டி அணைத்து இருக்கும் மார்க்கண்டேயன். பின்னால் திரும்பி தன்னை நெருங்கும் ஆபத்தை கண்டு அஞ்சி நடுங்கும் வண்ணம்…அவனை அடுத்து எமன். ஐயனின் காலில் புத்தி படும் வண்ணம் இருந்தாலும், எட்டி தன் இரையை பிடிக்க முயலும் எமன். அவன் மீது ஆக்ரோஷமாக ஆடும் மகேசன் - காலசம்ஹார வடிவத்தில் - நான்கு கைகள், ஒரு பக்கம் அனல் பறக்கும் கோபம் அதே உருவத்தில் பக்தனை ஆட்கொள்ளும் கருணை உருவம். அனைத்து காட்சிகளின் உணர்வையும் அப்படியே படம் பிடித்துக் கட்டும் அற்புதச் சிற்பம்.

இதே வடிவம் பல இடங்களில் இருந்தாலும் இந்த அளவிற்கு சிறிய சிற்பத்தில் இத்தனை உணர்வுகளை கொண்டு வருவது மிக மிகக் கடினம். உதாரணத்திற்கு தஞ்சை பெரிய கோயிலில் உள்ளே இதே வடிவத்தை ஒப்பிட்டு பார்ப்போம். என் பார்வையில் பிரம்மாண்ட அளவில் உள்ள இந்த சிற்பத்தை விட காமரசவல்லி சிற்பத்தில் உணர்ச்சிகளின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

compare

அதே போல இரு மார்க்கண்டேய வடிவங்கள்.

compare+markandeya

ஒரு இடத்தில மண்டியிட்டு நிற்கும் வண்ணம் இருந்தாலும், பெரிய கோயில் இந்த கதையில் உள்ள மூன்று பேரையும் பிரித்து தனித் தனியே காட்டுகிறது

tanjore
yama+tanjore

மிகச் சிறிய சிற்பம் என்பதால் முகபாவங்களில் காட்ட முடியாத உணர்ச்சிகளை உடல் தோற்றங்களின் சிறு நெளிவுகளில் காட்டி நமது மனதை கொள்ளை கொள்கிறான் காமரசவல்லி சிற்பி.

இப்படி ஆலயத்தில் எங்கும் நுண்ணிய சிற்ப்பங்கள் - குறைந்தது இருபத்து ஐந்து இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். இங்கும் அங்கும் இரைந்து கிடக்கும் உடைந்த தூண்கள் மனதை நெருடுகின்றன. புனரமைப்பு என்னும் பெயரில் விமானத்தில் வேலை துவங்கி நடுவிலேயே கைவிடப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளை பார்க்கும் முன்னர் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.

longshot
headless+torso
overgrowth+vegetation
sad+state

ஏதாவது செய்ய வேண்டுமே விஜய் !!!!

மறுமொழி அளிக்கவும் »


இன்று நாம் காணப் போவது, கண்ணனின் மாய லீலையை விவரிக்கும் மற்றுமொரு சிற்பம் திருமால்புரத்திலிருந்து. நாரை உருவில் வந்த பகாசுரனை மாய்த்தக் காட்சியை விளக்கும் கவின்மிகு சிற்பம்.

tirumalpuram
tirumalpuram2

வழக்கம்போல், முதலில் கதையைக் கேட்போம், பிறகு சிற்பத்தைக் அருகில் சென்று காண்போம்.

ஆயர் குலச் சிறுவர்களெல்லாம் தினமும் கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவைகளை யமுனை நதிக்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு நாள் அவ்வாறு கன்றுகள் யமுனை நதியில் தண்ணீர் குடிக்கும்போது சிறுவர்களும் நீர் அருந்திவிட்டு நதிக்கரையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே மலைபோன்ற பெரிய வடிவம் கொண்ட ஒரு நாரையினை கண்டனர். அந்த நாரை உண்மையில் கம்ஸன் ஏவிய பகாசுரன் எனும் அரக்கனாவான். அதனைக் கண்ட மாத்திரத்தில் அறிந்து கொண்டான் கண்ணன். வெண் நிறத்தில், நீண்ட அலகுகள் கொண்டதாய், கூர்மையான நகங்கள் கொண்டு, ஆக்ரோஷம் கொண்டு நாரை வடிவு கொண்ட அரக்கன் சட்டென்று நெருங்கி வந்து அவசரமாய் கண்ணனை விழுங்கினான். இதைக் கண்ட பலராமனும் மற்ற ஆயர் குலச் சிறுவர்களும் நடுநடுங்கி மூர்ச்சையடைந்தனர்.

உள்ளே சென்ற கண்ணனோ பெரும் ஜோதிப் பிழம்பாகி எரிக்கலானான். பகாசுரனின் தொண்டையில் அக்னி பிழம்பினால் மிகுந்த எரிச்சல் உண்டாயிற்று. பொறுக்கமாட்டாது அவன் கண்ணனை வெளியில் எறிந்துவிட்டு தன் கூரிய அலகுகளால் குத்திக் கொல்ல முயன்றான். கண்ணன் உடனே பாய்ந்து, ஒரு குழந்தை எவ்வாறு ஒரு புல்லை எளிதாக பிளக்குமோ அவ்வாறே அவ்வரக்கனின் வாயை பிளந்தார். மாபெரும் அலறலுடன் பகாசுரன் மோட்ச கதியடைந்தான்.

இப்போது இந்தக் காட்சியை பாருங்கள்.

krishna+bakasura

பள்ளத்தில் மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன் வருவானைத் தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்துகுழல்வாராய் அக்காக்காய்.
பேய்முலையுண்டான் குழல்வாராய் அக்காக்காய்

(பெரியாழ்வார் திருமொழி – ஐந்தாம் திருமொழி)

காக்கையே! நீர்த்தாழ்வுகளிலே இரையெடுத்துத் திரிகின்ற நாரையின் ரூபத்தை ஏறிட்டுக் கொண்டு வருபவனாகிய வஞ்சனை பொருந்திய பகாசுரனை கண்டு, இது பட்சியேயென்று சாமான்னியமாக நினைத்து விரைவாக அந்த அசுரனின் வாயை கிழித்துப் போட்ட கண்ணனின் குழல் வார விரைவில் வாராய் காக்கையே! பூதனையின் நச்சுக் கலந்த பாலைக் குடித்த கோபாலனின் குழல் வார விரைவில் வாராய் காக்கையே!

krishna+bakasura+crane

ஒரு கைபேசியின் அளவேயுள்ள சின்னஞ்சிறிய சிற்பம். நாரையின் வடிவம் கொண்ட பகாசுரனின் வாயை தன் சின்னஞ்சிறு கரங்களால் பிளக்கும் காட்சி! எத்துணை அழகு! காணக் காணக் கோடி இன்பம்!!!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கதை சொல்லும் இந்த கற்கள் இன்றும் தங்கள் கதையை சொல்வது அருமை. இன்றும் இந்த கதைகள் நம் சிறுவர்களை நெகிழவைப்பதை நாம் காண்கிறோம்.

m_20101130

( photo courtesy: http://www.annecy.org/annecy-2011/festival:en/official-selection)

இத்துடன் பதவு முடியவேண்டும், எனினும் நமது நேயர் காத்தி பூத கணங்களுடன் நமது காதலை அறிந்து சில சிற்பங்க​ளை அனுப்பி அதில் இருக்கும் அருமையான நகைச்சுவை உணர்வு எப்படி வெளிப்படுகிறது என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அவற்றை நீங்களும் கண்டு மகிழுங்கள்.

Varadaraja+Perumal+Uttaramerur+bootha+row
srinivasanallur+pillaster

தமிழாக்க உதவி நன்றி: வர்தினி.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »