Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: ஏப்ரல், 2011

வெண்கலச் சிற்பங்க​ளில் ஆர்வம் ​செலுத்த துவங்கிவிட்​டோமானால், அது என்றும் தணியாத தாகமாக​வே இருக்கும். அதிலும் ஒருமு​றை ​சோழர் கால ​வெண்கலச் சிற்பத்​தை பார்த்து விட்டா​லே, கண்க​ளை அவற்றினின்று அகற்றுவது மிகக் கடினம். ஆனால், இந்த ஆர்வத்துக்கு தீனியிடுவதும் அத்த​னை எளிதல்ல. ஏ​னெனில்,அ​நேகமாக ​வெண்கலச் சிற்பங்கள் ​கோவில்களில் உற்சவ மூர்த்தியின் வீதியுலா ​​போன்ற சமயங்களில் தான் ​வெளி​யே ​கொண்டு வரப்படும். அப்​பொழுதும் முழு​மையான ஆ​டை அணிகலன்கள், மலர் அலங்காரங்கள் என ​செய்யப்பட்டு சிற்பத்தின் அழ​கைக் காணவியலாத நி​லையி​லே தான் இருக்கும். விழாக்கள் இல்லாத பிற நாட்களி​லோ பாதுகாப்பிற்காக கூண்டுகளி​லே ​வைக்கப்படுகின்றன. ஆக​வே, ​வெண்கலச் சிற்பங்களின் அழ​கைக் காண​வோ, அதன் ​தோற்றங்கள் குறித்து ஆராய​வோ, அருங்காட்சியகத்திற்கு ​செல்வ​தே மிகச் சிறந்த வழியாகும். அவ்வாறு நூற்றுக்கணக்கான ​வெண்கலச் சிற்பங்க​ளை பாதுகாக்கும் ​​பேறு ​பெற்றது ​சென்​னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகமாகும். இருப்பினும், வருத்தத்திற்குரிய விஷயம் என்ன​வென்றால், இந்த சிற்பங்கள் அ​னைத்தும் கண்ணாடி கூண்டுகளில் உள்ளன, ​மேலும் ​போதிய ​வெளிச்சமும் இருப்பதில்​லை. இ​தையும் விட ​வருந்தத்தக்க விஷயம், இந்த ​வெண்கலச் சிற்பங்க​ளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. ​இவற்​றை எவ்வாறு ரசிப்பது - எ​தைப் பார்க்க ​வேண்டும், எப்படி பார்க்க ​வேண்டும் ​போன்ற ​தெளிவு இல்லா​மை​யே. அப்படி என்ன இவற்றை பற்றி படிக்க பார்க்க தனி வழி …மேலே படியுங்கள்.

இன்று, திரு பி. ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களின் மிக அற்புதமான புத்தகம் - பிரான்ஸஸ் ஆப் சவுத் இந்தியா (Bronzes of South India) - மூலமாக புகழ்​பெற்ற ஒக்கூர் ந​டேசனின் ​வெண்கலச் சிற்பத்தி​னை பற்றி காண உள்​ளோம். ​ஈசனின் ஆனந்த தாண்டவத்​தை ​வெண்கலச் சிற்பத்தில் ​​வார்க்க ஸ்தபதியால் ​மேற்​கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக ​ஒக்கூர் ந​டேசனின் சிற்பம் அறிந்து கொள்ளப்படுகிறது. ​மேலும் இந்த வடிவ​மே பிற்கால ​சோழர் காலத்தின் நடராஜ சி​லைகளுக்கும் முன்​னோடியாக விளங்கியிருக்கிறது.

okkur+natesa

இந்த ​வெண்கல சிற்பம் ​செதுக்கப்பட்ட காலம் நிபுணர்களின் கணிப்பின்படி கி.பி. 9-ல் இருந்து கி.பி. 10-க்குள் இருக்கக்கூடும். ​இதன் காலகட்டம் ஒவ்​வொருவராலும் ஒவ்​வொருவிதமாக கூறப்பட்டாலும், இது​வே முதன் முதலில் ஈசனின் ஆனந்த தாண்டவத்​தைக் குறிக்கும் நடன சிற்பமாக ஏற்றுக்​கொள்ளப்பட்டுள்ளது. சரி, இப்​போது இந்த அற்புத சிற்பம் எந்​தெந்த சிறப்பியல்புகளினால் ‘முதன் முதல் ஆனந்த தாண்டவ சிற்பம்’ என்று ​பெயர்​பெற்றது என்று பார்ப்​போம்.

இந்த சிற்பத்தில் தனித்துவம் ​பெற்ற இரு விஷயங்கள் - முதலாவது நடனமாடும் ஈசனின் உருவத்​தை சுற்றி அழகுற விளங்கும் பிர​பை. இரண்டாவது அழகிய தாம​ரை பீடம்.

lotus+base+asana

ஒவ்​வொன்றாக நாம் காண்பதற்கு முன்பு, ஆனந்த ரசத்​தை எத்து​ணை அழகாக நமது சிற்பி எடுத்துக் காண்பித்துள்ளார் பாருங்கள் - 1000 ஆண்டுகாலத்திற்கு பின்பும், கண் முன் காட்சியளிக்கும் தெய்வீக புன்ன​கை.

natesa+face
natesa+face+smile

மற்று ​மொரு சுவாரசியமான விஷயம் சிற்பத்தில் காணப்படும் ​நெற்றிக்கண் மற்றும் ​​வெவ்​வேறாக உள்ள காதணிகள். இடது காதில் ​பெரிய பத்ரகுண்டலம் உள்ளது, ஆனால் வலது காதி​லோ து​ளை ​பெரிதாகவும், அணிகலனாக ஒரு சிறிய வ​ளையம் (க்ளிப்) ​போன்று உள்ளது. (​மே​லே ​சொல்லப்பட்டுள்ள புத்தகத்தில் வலது காதில் உள்ள சிறிய வ​ளையம் பற்றி கூறப்படவில்​லை)

natesa+face+ear+ornament+suggestion3rdeye
patra+kundala+left+ear
ear+clip+rightear

ஈசனின் சி​கையலங்காரம் நாம் பல்லவ ​சோமாஸ்கந்தரில் பார்த்தது ​போன்​றே உள்ளது, ​மேலும் ஊமத்​தை மலரும் மற்றும் பி​றைச் சந்திரனும் உள்ளன. உருண்​டையாக முன்புறம் ​தோன்றுவது மண்​டை ஓடாக இருக்கலாம். அதற்கு ​மே​லே உள்ள​வை இறகுகளாலாகிய ஆபரணம் (மயிலிறகுகளாக இருக்கு​மோ?)

head+ornaments
head+ornaments+details

கழுத்தில் அணியும் ஆபரணங்கள் இரண்டும் சாதாரணமாக​வே உள்ளன. இருப்பினும் இரண்டாவது கழுத்தணியில் நடுவில் உள்ள பதக்கம் கவனத்​தைக் ஈர்க்கிறது. ​பெரிய கழுத்தணி, ருத்திராட்ச ​கொட்​​டைகளால் ஆனது, ​மேலும் அபூர்வமாக விலங்கின் (புலி) பல் பதக்கமாக உள்ளது.

neck+ornaments
neck+ornaments+tiger+tooth

விரிந்திருக்கும் முடிக்கற்​றைப் பற்றி விரிவாக பிறகு ( பின்னல் இல்லை இல்லை பின்னால் ) பார்ப்​போம், இருப்பினும் ​வெண்கலச் சிற்பங்களில் நடனமாடும் சிவ​​பெருமானின் முடிக்கற்​றை விரிந்திருப்பது இது​வே முதன்மு​றையாகும். அ​வை ஆபரணங்கள் ஏதுமின்றி சாதாரணமாக​வே உள்ளன. ​மேலும் கங்​கையின் எவ்வித உருவமும் காணப்படவில்​லை. ​வெண்கலச் சி​லைக்கு பலம் ​சேர்க்கும் விதமாக விரிந்திருக்கும் முடிக்கற்​றைகள் பிர​பையில் ​சேர்க்கப்பட்டுள்ளது சிற்பியின் அபார புத்திக்கூர்​மை​யை ​வெளிப்படுத்துகின்றது.

hair+locks+attached+to+prabha

ஈசனின் நான்கு கரங்களும் முட்டிகளில் பிரியாமல் ​தோள்பட்​டையி​லே​யே பிரிகின்றன (பல்லவர் கால ​வெண்கலச் சிற்பங்களின் இயல்பாக இது ​சொல்லப்படுகிறது. என​வே இது பிற்காலத்​தை ​சேர்ந்தது, அதாவது ​சோழர்காலத்தின் ஆரம்ப காலங்களில்). தூக்கிய திருவடிகள் பிற்கால சிற்பங்க​ளைப் ​போன்று மிக உயரத்திற்கு இன்னும் வரவில்​லை..

composition

காலில் உள்ள ​கொலுசுகள் மிக அழகாக சிறு மணிகள் ​கோர்க்கப்பட்டு உள்ளன. இ​றைவனின் ஆனந்த தாண்டவத்தின்​போது அ​வை எழுப்பும் ரீங்காரம் காதில் இனிய சங்கீதமாய் கேட்குமோ ?

the+uplifted+feet+anklets

இரட் ​டையாக உள்ள பூணூல் (யக்​ஞோபவீதம்) மற்றும் தடிமனான உத்தரீயம் (இடுப்பில் கட்டும் ஆ​டை) ஆகியவற்றுடன் ஆ​டை மிக எளி​​மையாக உள்ளது. உத்தரீயம் வயிற்றில் முடி​போட்டு கட்டப்பட்டுள்ளது. ஆ​டையில் உள்ள சித்திரம் இன்றும் கண்களுக்குத் ​தெரிகிறது.

waist+cloth+knot
waist+cloth+knot+detail

​ மே​லே உள்ள கரங்கள் மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் உடுக்​கையும் மற்​றொன்றில் அக்னியுள்ள சிறிய சட்டியும் உள்ளன - நளினமாக அந்த சட்டி​யை விரல்களின் நுனியில் ஏந்தியுள்ள​தை எத்த​னை தத்ரூபமாக ​செதுக்கியிருக்கிறார் அந்த சிற்பி பாருங்கள்.

hand+holding+drum
hand+holding+flame

​கையில் சுற்றப்பட்டுள்ள பாம்புடன் அபயஹஸ்தமளிக்கிறது கீ​​ழேயுள்ள வலது கரம்,

abaya+hasta
coiled+snake

இந்த அரு​மையான ​வெண்கலச் சிற்பத்தின் அழகுக்கு அழகு ​சேர்ப்பது கீ​ழேயுள்ள கரங்களும் ​மெல்லிய து​டைகளும். ​மேலும் பாதங்களுக்கு அடியில் உள்ள முயலகன் ஒரு ​பெரிய நாகத்துடன் வி​ளையாடுவது ​போன்ற பாவ​னை ​கொள்​ளை அழகு.

apasmara+muyalakan
beautiful+muyalakan
left+leg+on+muyalakan

இ​வைய​னைத்​தையும் விட இந்த சிற்பத்தின் உண்​மையான அழகு நாம் அதன் பின்புறம் ​சென்று பார்க்கும்​போது தான் ​தெரிகிறது.

beauty+reverse

முடிக்கற் ​றைகள் எவ்வாறு பிரிந்து விரிந்திருக்கிறது என்பது மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணி​யை கட்டுவதற்கு உள்ள ​கொக்கி​யையும் நீங்கள் காணலாம்

arrangement+of+the+locks
perfect+symmetry

இந்த ​வெண்கலச் சிற்பம் பழ​மையானது என்பதற்கு மற்று​மொரு குறிப்பு - த​லைக்கு பின்புறம் சிரச்சக்கர​மோ, முடிக்கற்​றைக​ளை தாங்கும் விதமாக வ​ளைய​மோ இல்லாதது தான்.

​மேலும் ​கெளபீனம் கட்டப்பட்டிருக்கும் விதத்​தைப் பாருங்கள், இருப்பினும் ஒரு சிற்றா​டையும் அணிந்திருக்கிறார்.

loin+cloth+shorts

பிர ​பையில் நாம் கவனிக்க ​வேண்டிய விஷயம் - தீப்பிழம்புகள் மிகவும் இயற்​கையாக உள்ளன. பிர​​பை​யை சுற்றி இ​​வை இருந்தாலும், அக்னி ஜ்வா​லைகள் இயற்​கையாக உள்ள​தைப் ​போல் ​​மேல் ​நோக்கி​யே உள்ளன,

okkur+natesa

ஆஹா! எத்த​னை அற்புதமான உன்னத ப​டைப்பு!!

மறுமொழி அளிக்கவும் »

சென்ற வருடம் தற்செயலாக மேலைக்கடம்பூர் பற்றிய ஒரு அற்புத பதிவை இணையத்தில் பார்த்தேன். திரு ராஜா தீட்சிதர் அவர்களின் பல பதிவுகளை முன்னரே படித்திருந்தாலும், இந்தப் பதிவில் அவர் விளக்கங்கள் கொடுத்த முறை - கோயிற் கலை பற்றி மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் கொடுத்திருந்தார். உடனே அவரிடத்தில் தொடர்பு கொண்டு அந்த பதிவை இங்கே மொழி பெயர்த்து போடலாமா? அல்லது மேலும் பயனுள்ள பல பதிவுகளை நம்முடன் பகிரமுடியுமா என்று கேட்டு அவரும் சரி என்று சொன்ன​போது - துரதிருஷ்டவசமாக விதி விளையாடி அவர் நம்மை விட்டு போய்விட்டார்.

எனினும் இன்று நமக்கு ஒரு பாக்கியம் - அவரது பிரதான சிஷ்யை - மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க்
அவர்கள் நம்முடன் அவரது அனுபவங்களை தொடர் பதிவுகளாக பகிர ஒத்துக்கொண்டு, முதல் பதிவை தருகிறார்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என்னை ஈர்த்த இரு விஷயங்கள் - அழகு மற்றும் மர்மம். அதுவும் நான் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து எங்கோ உலகின் இன்னொரு இடத்தில் என்னும்​போது ஆர்வம் இரட்டிப்பாகக் கூடும். அது போன்ற காலத்தின் ஒரு கோலமே என்னை இந்தியா கொண்டு சேர்த்தது. அது ஒரு பெரிய கதை !

அப்படியே தொடர்ந்த எனது பயணம் ஒருநாள் என்னையும், நண்பர் திரு. ராஜா தீட்சிதர் அவர்களது புதல்வர்கள் திரு. கந்தன், திரு. ஜெயகுமார் மற்றும் திரு. ஷங்கர் அவர்களையும், ஒரு புராதன ஆலயத்தின் குளத்தங்கரையில் கொண்டு சேர்த்தது . மிகவும் அமைதியான சிறு கிராமம், வீதிகளில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அருகே சிலர் தங்கள் வே​லைகளில் மூழ்கி இருந்தனர். ஆலயத்தில் உழவாரப்பணி நடந்துக்கொண்டிருந்தது. மிகவும் கவனமாக, அதன் பாரம்பரிய அழகு சற்றும் குறையாமல் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கல்லும் கதை சொல்லும். அதவும் பண்டைய தமிழ் கோயில் என்றால் அதன் கற்கள் ஒரு பெரும் கதையை பிரதிபலிக்கும். கோயில் உருவான கதை, அதன் கட்டுமான முறை, எத்தனை தளங்கள் கொண்டது, அதன் கருவறை இருக்கும் அமைப்பு, எந்தக் காலத்தில் கட்டப்பட்டது , யார் கட்டியது , தற்போது இருப்பது முதலில் இருந்த கோயிலா இல்லை இடையில் அது விஸ்தரிக்கப்பட்டதா, செங்கல் கட்டுமானமா கற்கோயிலாக மாறியதா, இது போன்ற ஆய்வுகள் ஒருபக்கம் இருக்க, அங்கே இருக்கும் சிலைகளும் கதை சொல்லுகின்றன. கோஷ்டத்தில் இருக்கும் மூர்த்திகளை கொண்டு ஆய்வுகள் செய்ய இயலுமா, சிற்பங்களின் அணிகலன், அமைப்பு கொண்டு கால நிர்ணயம், அங்கே இருக்கும் கல்வெட்டுகளில் வரும் எழுத்துகளை கொண்டு ஆய்வுகள், அவை சொல்லும் வரலாறு, அந்த நாளைய ஆட்சிமுறை, இவை போதாதென்று அந்தக் கோயிலின் ஸ்தல வரலாறு, என்ன தெய்வ லீலை நடந்ததை குறிக்க எழுந்த கோயில் அது, பாடல் பெற்ற ஸ்தலமா, பரிகார ஸ்தலமா. இவை அனைத்தையும் ஒன்று சேர பார்க்கும்​ பொழுது முதலில் மூச்சு முட்டினாலும், அவை அனைத்தும் ஒன்று கூடி ஆலயம் என்று புனித அமைப்பின் முழு ஸ்வரூபத்தையும் நமக்கு தெரிய வைக்கின்றன.

இந்தப் பதிவை துவங்கும்​போது சிறு பதிவு என்று தான் நினைத்தேன். ஆனால் அதை எழுத ஆரம்பித்தவுடன் மேலும் மேலும் கிளைக்கதைகள் என்று விரிந்துக் கொண்டே போனது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முயற்சி செய்வதற்கு பதில், ஒரு தொடர் பதிவாக இயற்றலாம் என்று எண்ணி முதல் பாதியாக இதை எழுதுகிறேன் - திருவட்டதுரை சிவன் கோயில் பற்றிய தொடரே அது.

11_arattathurai_LPB

இந்த அருமையான கோயிலின் இறைவன் ஆரட்டதுரை நாதர். பலருக்கும் தெரியாத இந்த கோயிலில் பல அருமையான சோழர் காலத்து சிற்பங்கள் உள்ளன.

13_arattathurai_LPB

பெண்ணடத்திற்கு மிக அருகில் - திட்டக்குடி சாலையில் வெள்ளாற்றங்கரையில் இருக்கும் இந்த ஆலயம், அதன் அமைப்பு மற்றும் சிற்பங்களை கொண்டு ராஜராஜனுக்கு முந்தைய காலத்து சோழ திருப்பணி என்று கருதலாம். ஆதிசேஷனும், சப்த ரிஷிகளும் இங்கு சிவனை வழிபட்டதாக ஸ்தல புராணம் சொல்கிறது.

இந்த ஆலயத்தை ஒட்டி இன்னும் ஒரு கதை இருக்கிறது. அது திருஞானசம்பந்தர் இங்கு வந்த​போது சிவனே ஊர் மக்களின் கனவில் வந்து சோர்ந்து வரும் அவருக்கு ஒரு பல்லக்கும், குடையும் கொடுக்கும் படி கூறிய கதை. சம்பந்தரும் இந்தக் கோயிலின் இறைவனை பற்றி பல பதிகங்கள் பாடியுள்ளார்.

இந்தக் கதை மூன்று முறை இந்த கோயில் சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது, முதல் முறை செப்பனிடப்பட்டுள்ள கோபுரத்தில்.

25_arattathurai_gopuram_LPB

இரண்டாம் தளத்தில் வலது புறத்தில் சுதை உருவம். பல்லக்கின் வெளியில் சம்பந்தர், மேலே குடை, மேலே தளத்துடன் வரவேற்கப்படும் காட்சி.

22_arattathurai_jnasambandar_01+LPB

அதே போல விமானத்தின் இரண்டாம் தளத்திலும் இதே காட்சி உள்ளது.

15_aratthurai
23_arattathurai_jnanasambandar_02_LPB

இன்னும் ஒரு இடத்தில தலைக்கு மேலே மகர தோரணங்களின் நடுவில் மிகச் சிறிய அளவில் புடைப்புச் சிற்பம் உள்ளது.

21_arattathurai_LPB
24_arattathurai_jnanasambandar_03_LPB

இதுவே ஆதி முதல் வடிவம் என்று நாம் கருதலாம். பல்லக்கை திடகாத்திரமான இருவர் தூக்கிக் கொண்டு சம்பந்தரையும் அவர் தந்தையாரையும் அணுகி வருகிறார்கள். பல்லக்கின் அடியில் தெரியும் ஒரு சிறிய உருவம் மேலே இருக்கும் குடையை தூக்கிப் பிடித்திருக்கும் பாணி இன்றும் நம் கோயில் உற்சவங்களில் கு​டைகளை தூக்கிப் பிடிப்போரின் பாணியில் இருக்கிறது. குழந்தைக்கு பல்லக்கை பார்த்தவுடன் ஆனந்தம், தந்தையாருக்​கோ பெருமிதம். இந்தக் காட்சிக்கு மேலே ஆனந்த தாண்டவத்தில் ஈசன், அருகில் சிவகாமி அம்மை, அனைவருக்கும் அருள்பாலித்து நிற்கின்றனர். இந்த சிறிய அளவு சிற்பத்திலும், முகத்தில் மட்டும் அல்லாமல் அவர்களது ஒவ்வொரு அசைவிலும் அமைப்பிலும் உணர்ச்சிகளை சிற்பி வெளிப்படுத்துகிறான். ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் பரிசை பெரும் அவர்களின் உபகாரஸ்மிருதி - அதிலும் ஒரு சிறு குழந்தையின் கள்ளம் கபடமற்ற அந்த ஆனந்த உணர்ச்சி , அதே தந்தையின் முதிர்ந்த கோட்பாடு… ஆஹா அருமை. பல்லக்கின் அமைப்பும் வடிவமும் நாம் இதுவரை பார்த்தவை போன்று இல்லாமல் சமமான இருக்கை போலவே உள்ளது.

மற்ற இரு இடங்களிலும் உள்ள பல்லக்கு தற்கால அமைப்பை ஒட்டி உள்ளது. அதிலும் சம்பந்தர் அதன் மேல் ஏறி அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. குடை பல்லக்கின் மேலே முடுக்கி விட்டது போல உள்ளது. கூடு போல இருக்கும் இந்த பல்லக்கின் அமைப்பை பார்க்கும் பொது - மேலே கு​டைக்கு வேலையே இல்லையே என்று தோன்றுகிறது. மற்ற இரு சுதை வடிவங்களும் பிற்காலத்தில் செய்தவையாக இருக்க வேண்டும். ஆனால் எதற்காக முன்னர் இருந்த வடிவத்தை மாற்றி செய்தார்கள் என்று தெரியவில்லை.

எனக்கு ஒரே ஒரு குறைதான். விமானத்தையும் கோபுரத்தையும் செப்பனிடும்​போது பாரம்பரிய சுதை​யை உபயோகிக்காமல் சிமெண்ட் கொண்டு செய்கிறார்கள். சரியாக பராமரித்தால் சுதை பல நூற்றாண்டுகள் நிற்கும்…

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »