Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: ஜூலை, 2011

” கண்டிப்பாக தொட்டகட்டவள்ளி சென்று பாருங்கள் ” என்று பலமுறை நண்பர் திருமதி லக்ஷ்மி சரத் அவர்கள் கூறினார்கள். கர்நாடகத்தில் இருக்கும் பல சுற்றுலா மற்றும் பாரம்பரிய விஷயங்களில் வல்லுனரான அவரது துணையுடன் தான் ஹோய்சாளர்கள் படைப்புக்களை சென்று ஜூன் மாதம் பார்க்க பட்டியல் தயார் செய்தேன்.

“ஹசனில் தங்குங்கள். அங்கிருந்து பேலூர் செல்லும் வழியில் சுமார் 20 kms பயணித்த பின்னர் ஹோய்சால வில்லேஜ் ரிசோர்ட் தாண்டியவுடனே இடது புறம் தொடகடவள்ளி என்ற பெயர்ப் பலகை இருக்கும். அங்கே திரும்புங்கள் என்றார்.”

பெயரே சற்று வித்தியாசமாக இருந்தது. சிறு பலகை தான், ஆனால் சிரமம் இல்லாமல் அடையாளம் கண்டுகொண்டோம். ஒரு சிறு கிராம பாதை வழி இன்னும் ஒரு 3 கிலோமீட்டர் பயணம். வழியில் நம்மை ஆச்சரியத்துடன் பார்த்த கிராமவாசிகள், ஆனால் அங்கும் அழகிய சீருடை உடுத்தி பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை கண்டு எமக்கு மகிழ்ச்சி.

route
surroundings

கண்ணில் பட்ட வரைக்கும் நல்ல இயற்கை காட்சிகளே தெரிந்தன. இந்த தொடகடவள்ளி இன்னும் வரவில்லையே. அதோ அங்கே ஒரு அழகிய குளம், அதன் கரையில் என்னமோ தெரிகிறதே.

first+look

இலக்கை நோக்கி மீண்டும் பயணம் செய்தோம். பாதை ஒரு சிறு கிராமத்தினுள் சென்று முடிந்தது. பின்னர் மண் பாதை தான். முடிவில் சிறு கிராமத்து வீடுகளுக்கு நடுவே 898 ஆண்டுகள் நிற்கும் ஆலயம். அதை பற்றி மேலும் படிக்க பழைய நூல் ஒன்று கிடைத்தது

Mysore Archeological Series -
ARCHITECTURE AND SCULPTURE IN MYSORE No. III

THE LAKSHMIDEVI TEMPLE AT DODDAGADDAVALLI
BY
PRAKTANA-VIMARSA-VICHAKSHANA, RAO BAHADUR

P. NARASIMHACHAR, M.A., M.B.A.S.
Honorary Correspondent of the Government of India, Archaeological Department,

Printed under the authority of the Government of his Highness, the Maharaja of Mysore, in 1919.

dodagadavalli

அங்கே இருந்த ஒரு வாலிபன் எங்களை உள்ளே கூட்டிச் சென்று தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கினான்.

அதற்கு முன்பு இக்கோவிலை பற்றிய சிறிய அறிமுகம். அந்த புத்தகத்திலிருந்து சில வார்த்தைகள்:

“தொட்டகட்டவள்ளியில் உள்ள லக்ஷ்மி தேவி கோவில் ஹோய்சாளர்களின் அழகிய சிற்ப வேலைப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது நான்கு அறைகள் கொண்டது. இந்த வகையான ஹோய்சாளர் கட்டுமானம் மாநிலத்திலேயே இது ஒன்று மட்டுமே போலும். கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டின் மூலம், கி.பி. 1113ஆம் ஆண்டில் ஹோய்சாள அரசர் விஷ்ணுவின் ஆட்சியின்போது இருந்த பெரும் வணிகராகிய குள்ளஹண ரஹுதாவும் அவரது மனைவி சஹாஜதேவியும் அபிநவ கொல்லாபுரா எனும் கிராமத்தை தோற்றுவித்து தாயார் மகாலக்ஷ்மிக்கு அங்கே ஒரு கோவில் எடுப்பித்ததாகவும் அறிகிறோம். பேலூரில் மன்னர் விஷ்ணுவால் கி.பி. 1117-இல் கட்டப்பட்ட கேசவ கோவிலுக்கு நான்கு ஆண்டுகள் முன்பே இது கட்டப்பட்டதால், ஹோய்சாளர்களின் கட்டுமானங்களிலேயே இது ஆரம்ப காலங்களில் கட்டப்பட்டதாகும்.”

இத்தனை சரித்திர பின்புலம் இருந்தும், இதென்ன நமது பதிவின் தலைப்பு? சற்றே பயமுறுத்துவதாக உள்ளதே!! அங்கே இருப்பது தான் வேதாளம், நாங்கள் கோவிலுக்குள் நுழைகையில் சூரியன் நன்றாக தன் வேலையை செய்ய துவங்கிய நேரம். இருப்பினும் உள்ளேயோ கும்மிருட்டு. நான் என் வலப்புறம் திரும்பி சிறிது பின்னோக்கி சென்று கோவிலின் முகப்பினை தூரத்தில் நின்று கவனித்தேன். காளியின் சந்நிதி

kali+shrine

அந்த இளைஞன் பல விவரங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தான். இருப்பினும் என் மனம் ஒரே விஷயத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது - வேதாளம். இந்த கோவில் மிகத் தனித்துவம் பெற்றது. ஏனெனில், காளியின் சந்நிதி விஷ்ணுவின் சந்நிதிக்கு எதிரேயும் மற்ற இரண்டில் ஒன்றில் பூதநாதனாக சிவபெருமானும் அவருக்கு எதிரில் லக்ஷ்மியின் சந்நிதியும் உள்ளன.

காளியை அமைதிப்படுத்த விஷ்ணுவும் சிவனை அமைதிப்படுத்த லக்ஷ்மியும் எதிரிலே இருப்பதாக அந்த இளைஞன் கூறினான். ஒரு வேளை இவ்வாறும் இருக்கலாம்; காளியும் சிவனும் அருகருகேயும் விஷ்ணுவும் லக்ஷ்மியும் தம்பதி சமேதராக காட்சி அளிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் விஷ்ணுவின் சந்நிதியில் கேசவனின் அழகிய வடிவம் இருந்ததாகவும் அதனை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் அந்த இளைஞன் விவரித்தான்.

நிழற்படம் எடுக்க அனுமதி உண்டா என்று அவனிடம் நாங்கள் கேட்க, தடை ஏதும் இல்லை என்று அவன் கூறவும் நாங்கள் படம் எடுக்க துவங்கினோம். முதலில் காளி. ஆனால் நன்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததால், சரிவர காண முடியவில்லை.

kali
kali+main

ஆனால் அந்த புத்தகமோ மிகவும் உக்ரமான வடிவமாக காளியின் உருவத்தைச் சித்தரிக்கிறது.

காளி கோரமான் உருவத்துடனும் எட்டு கரங்களுடனும், ௩ அடி உயரம் கொண்டு, அரக்கனின் மீது அமர்ந்து, வலக் கரங்களில் சூலம், வாள், அம்பு மற்றும் கோடாரியும், இடக் கரங்களில் உடுக்கை, பாசக்கயிறு, வில் மற்றும் கபாலம் ஏந்தி இருக்கிறாள்.

படம் எடுக்கையிலே விழுந்த ஒளியால் இருள்சூழ்ந்த இடங்கள் தெளிவாக தெரிய, நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். சிறு வயதில் கூறப்பட்ட பயங்கர கதைகள் எங்கள் முன்பு எழுந்து ஆடத் துவங்கின.

vethal+left
vethal+right

அங்கே இருபுறமும் ௬ அடி உயரத்தில் ௨ வேதாளங்கள் முன்புறமாக சற்றே வளைந்து, கண்கள் விரிய திறந்து, நாவு வெளிப்புறம் தொங்க எங்களை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தன.

face+left
face+right

நாங்கள் எங்கள் சுயநினைவடைந்து பார்த்தபோது ஒரு வேதாளத்தின் அருகே ஒரு பெரிய பட்டாக்கத்தி, இதை வைத்தே சமீபத்தில் யாருடைய தலையையோ வெட்டி அந்த வேதாளங்கள் தங்கள் பசியை ஆற்றியிருந்தன போலும். மற்ற வேதாளத்தின் அருகில் மேலும் ௪ குட்டி பூதங்களும் துணைக்கு இருந்தன.

closer+2+vethalams
lil+vethalams+right
severed+head+left

இது போதாதென்று, அந்தக் கோவிலின் ஜன்னல்களிலும் வெட்டப்பட்ட தலைகளும், பிரேதங்களும், மற்றொரு வரிசை பூதங்களும் இருந்தன. அவற்றில் இரு ஓரங்களிலும் இருப்பவை புல்லாங்குழல் வாசித்து கொண்டிருந்தன.

lintel
musical+vethalams+prethas
pretas+vethalams+lintel

வேதாளங்கள் என்பவை வாழ்க்கைக்கும் மரணத்தின் பின் உள்ள நிலைக்கும் இடையே கிடந்து அவதியுறும் பாவப்பட்ட ஆத்மாக்கள் என்றே நினைத்திருந்தேன். மேலும் மரங்களில் தலைகீழாக தொங்கிக்கொண்டு போவோர் வருவோரை பிடித்துக்கொள்ளும் என்றே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், ஒரு கோவிலுக்குள்ளே இவ்வாறு வேதாளங்கள் இருக்கும் என்று நினைத்ததே இல்லை. ஆனால் இறைவனே அழிக்கும் சம்ஹார மூர்த்தியாய் விளங்கி, சுடுக்காட்டில் வீற்றிருந்து, பொடி சாம்பலை பூசிக்கொண்டு காளியை மனைவியாக கொண்டு வாழும் போது வேதாளங்கள் அங்கிருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை அல்லவா??

அடுத்து வரும் பதிவுகளில் மேலும் வளம் வருவோம்.

மறுமொழி அளிக்கவும் »

தமிழகத்தை விட்டு இன்று கர்நாடகம் செல்கிறோம். அங்கே ஹோய்சாளர் அவர்களின் உன்னத கலைப் படைப்பு - ஹலெபேடு ஹோய்சாலேஸ்வரர் ஆலயத்தில் காதணி அல்லது குண்டலங்களை பற்றி ஒரு சிறு பதிவு. முதலில் இருபுறமும் கம்பீர வாயிற்காப்போர்களைக் கொண்ட மகேசனை தரிசிப்போம்.

halebid+main+shrine

பல்லவ குடைவரைகளில் உருள்தடி பிடித்த உருவங்கள் முதல் சோழர் காலத்து பிரம்மாண்ட உருவங்களைப் பார்த்த நமக்கு ஹோய்சாளர் வாயிற்காப்போர்கள் வேறு தினுசாக தெரிகிறார்கள். அங்கே நல்ல வருமானம் கிடைத்ததோ என்னமோ - உடை, அலங்காரம் என்று பவனி வருகிறார்கள் இருவரும்.

doorguardian+left
doorguardian+right

நாம் முன்னர் பார்த்த போலவே இங்கு வாயிற்காப்போனும் இரு காதுகளிலும் வெவ்வேறு காதணி அணிந்துள்ளான்.

இடது காதில் மிக அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள மகர குண்டலம். முன்னர் திரு உமாபதி ஆச்சார்யா அவர்கள் நமக்கு மகரம் என்ற உன்னத படைப்பை விளக்கினார்..

makara+kundala+leftear

ஆனால் இன்று நாம் காண இருப்பது வலது காதில் உள்ள அணி. திரு கோபிநாத் ராவ் அவர்களின் ”Elements of Hindu Iconography” என்ற நூலில் குண்டலங்களில் ஐந்து வகை என்றும், அவை பத்ர குண்டலம் (பனை ஓலை சுருட்டி இருப்பது போல - பின்னலில் அதே பாணியில் தங்கத் தகடில் வார்த்து அணிந்தார்கள்), நகர குண்டலம் (மகர குண்டலம் தான்), சங்கபத்ர குண்டலம் (சங்கை பக்கவாட்டில் வெட்டியவாறு), ரத்ன குண்டலம் மற்றும் சர்ப்ப குண்டலம் என்று விவரிக்கிறார்.

இதில் கடைசியாக வரும் வகை, பொதுவாக காதில் ஒரு நல்ல பாம்பு படம் எடுப்பது போல இருக்கும். இதோ பேலூர் கோயிலில் உள்ள கருடனின் காதுகளில் பாருங்கள். .

belur+garuda
closeup

ஆனால், ஹலெபேடு வாயிற்காவலனின் காதில் இருப்பதோ பல தலை நாகம்

sarpa+kundala+rightear

என்ன அருமையான வேலைப்பாடு, நம்மை பார்த்து அந்த நாகம் சிரிப்பது போல இருக்கிறது.

வேலைப்பாட்டை பற்றி சொல்லும் பொது, அந்த தலையில் உள்ள மண்டை ஓடுகளை பற்றி சொல்ல வேண்டும்.

ornaments+headdress

அபாரமான வேலை, இந்த சிறிய இடத்தில, உள்பக்கம் உள்ள கல்லையும் குடைந்து உள்ள நுணுக்கம் அபாரம்.

intricate

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 1  1