Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: ஆகஸ்ட், 2011


திரு. பிரசாத் அவர்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான். அவரது உயர்ந்த கலைத் திறனை நமது பதிவுகளில் ஏற்கனவே கண்டிருக்கிறோம். ஆனால் இன்று நாம் காணப்போவது அவரது மற்றுமொரு புதிய அவதாரம். கண்ணனின் பிறந்தநாளாகிய ஜன்மாஷ்டமியன்று ஒரு அற்புத வெண்கலச் சிலையின் அருமையான படங்களை நமக்கு அளித்திருக்கும் திரு. அசோக்குடன் இணைந்து, புகழ் பெற்ற ஊத்துக்காடு காளிங்க நர்த்தனம் பற்றி நமக்காக ஒரு பதிவு இடுகிறார்.

KalingaNardhanaKrishna2

சோழக் கைவினைஞரின் உயர்ந்த மேலான திறமைக்கு அறிமுகம் தேவை இல்லை. எனது அனுபவத்தின் சாரத்தை வார்த்தைகளால் வெளியிடுவது இயலாத ஒன்று என்று நன்கு அறிந்திருக்கிறேன். எனவே, அந்த தெய்வீக அனுபவத்தை வாசகர்களே பெறுவதற்கு முயற்சிக்கிறேன். இன்று நான், இந்த உயர்ந்த செல்வதை நீங்கள் அதிக ஆர்வத்துடன் கண்டு களிக்க, எனக்கு தெரிந்த அளவில் அதனை விவரிக்கவும், எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவும் விழைகிறேன். இதனை துவங்குகையில் எல்லாம் வல்ல இறைவனிடம் இந்த அற்புதத்தை விவரிக்கும் சக்தியை எனக்கு அளிக்க பிரார்த்தனை செய்கிறேன், ஏனெனில் சில அற்புதங்களை விவரிப்பதை விட சுயமாக அனுபவிப்பதே மேலானது என்று கருதுகிறேன்.

இன்று நாம், அகந்தை கொண்ட நாகத்தை அடக்கிய அற்புத நடனத்தை மிக நேர்த்தியாக உலோகத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் - காளிங்க மர்தன கிருஷ்ணனின் சிற்பத்தைக் காண்போம்.

KalingaNardhanaKrishna

முதலில் சிற்பத்தை முழுமையாகக் காண்போம். கொடுமையே உருவாக இருக்கும் நாகமாகிய காளிங்கனுக்கு பாடம் கற்று கொடுக்கவும், அதே நேரத்தில் தான் யார் என்று உலகிற்கே எடுத்துக்காட்டவும், காளிங்கனின் தலை மீது தெய்வீக நடனம் ஆடும் விதமாக இந்த சிற்பம் அமைந்துள்ளது. ஒரு செயலின் ஓட்டம், அழகு, அதன் வேகம், மேலும் அச்செயல் சொல்லும் கதை இவற்றை சிற்பத்திலே அற்புதமாய் கொண்டு வருவதில் சோழ சிற்பிகளுக்கு நிகர் அவர்களே! ஒரு முறை சிற்பத்தைக் கண்ட உடனேயே அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் நினைவில் நின்று மனதில் பதியும் வண்ணம் சிற்பத்தை செதுக்கிவிடுகின்றனர்.

kalinga nardhana perumal.jpg

கண்ணனின் வலது பாதத்திலிருந்து துவங்கி இடஞ்சுழியாக அவனது அற்புத சிற்பத்தின் தோற்ற அமைப்பை காண்போம். இது ஒரு நிலையான வடிவம் அல்ல என்பதை சிற்பத்தை கண்டதுமே உணருமாறு வடித்த சிற்பியின் கலை நுணுக்கத்தை வியக்காமல் இருக்க முடியாது. இது தொடரும் நிகழ்வுகளின் ஒரு பகுதி மட்டுமே. மேலும் அந்த நொடியின் வேகம் மிகச் சிறப்பாக காண்பிக்கப்பட்டுள்ளது.

தூக்கிய வலது திருவடியை பாருங்கள். இன்னும் சில வினாடிகளில் இந்த பாதம் எவ்வாறு நாகத்தின் தலையில் இறங்கும் என்று கற்பனை செய்ய முடிகிறதா? அந்த பாதத்தின் அழுத்தத்தை உணர முடிகிறதா? அந்த கொடிய நாகத்திற்கு அது மரண அடியாக இருக்காது. இருப்பினும் அதற்கு ஒரு திடமான செய்தி நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Picture1

அநேகமாக இப்படி தான் பாம்பின் தலையில் பாதம் இறங்கும்.

Picture1(b)
dance7110

இந்த தனித்துவம் வாய்ந்த வெண்கலச் சிலையை கவனித்து பார்த்தோமானால், இடது பாதத்திற்கும் நாகத்தின் தலைக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருப்பதை காணலாம் - ஆக, கிருஷ்ணரின் எடை முழுவதும் பாம்பின் வாலைப் பற்றி இருக்கும் கரம் தாங்கும் விதமாக உள்ளது - இந்த சிற்பியும் அவனது அற்புத கலைத்திறனும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இப்போது கண்ணனின் இடது கரத்தை பார்ப்போம். மிக நளினமாக பாம்பின் வாலை பற்றியிருக்கிறார். சற்றே சிந்தித்து பாருங்கள். உங்கள் கரத்தில், உங்கள் தோள் உயரத்திற்கு உள்ள எடை அதிகமான ஏதேனும் ஒன்றை பற்றியிருந்தால், அதிலும், அது நிலை கொள்ளாமல் நெளிந்து கொண்டிருக்கும்போது, உங்கள் கைகள் எத்தனை வலுவாக அதை பற்றியிருக்கும்? மேலும் தசைகள் எத்தனை திடமாக அதை இறுக்கி பிடித்திருக்கும்? எத்தனை அசௌகரியமாக இருந்திருக்கும்? ஆனால், இங்கு நாம் பார்ப்பது என்ன?

வளைந்த கரம், பாம்பின் வாலை ஒரு பட்டுத் துணியை பிடித்திருப்பது போன்று பற்றியிருக்கிறது. இதை பார்க்கும்போதே இது ஒரு சிறு பிள்ளையின் விளையாட்டு என்று தெரிகிறது. அவனுக்கு இந்த நாகம் ஒரு பெரிய விஷயமே அல்ல. ஒரு பெரும் நாகத்தின் வாலை ஒரு சிறிய துணியை பற்றியிருப்பது போல் பற்றியிருக்கிறான். இருப்பினும், இந்த முழு வடிவத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இத்தகைய தோற்றம் அமைப்பதில் உள்ள சிக்கல் விளங்கும்.

picture2

அடுத்து நாம் கண்ணனின் முகத்தை காண்போம். அவனது மந்திரப்புன்னகையே அவன் அந்த நாகத்திற்கு ஆபத்து விளைவிக்க விரும்பவில்லை என்று காட்டுகிறது. மேலும் முகத்திலோ ஒரு துளி கோபமோ, செருக்கோ, வலியோ, பெருமையோ ஒன்றும் தெரியவில்லை. அங்கே தெரிவதெல்லாம் ஒரு சிறிய குழந்தையின் அப்பழுக்கில்லாத மகிழ்ச்சி. மேலும் கூர்ந்து கவனியுங்கள். அவன் அந்த நாகத்தை பார்க்கவில்லை, யாரையும் எதனையும் குறிப்பாக பார்க்கவில்லை. அவனது பார்வை, இந்த முழு பிரபஞ்சத்தையே காண்கிறது. அவனது முகம் சற்றே சாய்வாக உள்ளது. இங்கே நாம் மறுபடியும் அவனது நடனத்தின் வேகத்தை நினைத்து பார்க்கவேண்டும். பாம்பின் தலை மீது தனது பாதத்தை வைக்கும் முன்பு அவனது தலை நளினமாக அசைகிறது.

picture3

இங்கே நாட்டியமாடுபவரின் தலை, நடனத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு அசைகிறது பாருங்கள்.

dance7110
dance7112
dance7113

இப்போது அவரது அபய ஹஸ்தத்தை காண்போம். காண்பவரின் எண்ணத்திற்கு ஏற்ற மாதிரியே காட்சிகளின் பொருளும் வேறுபடும் என்று சொல்வர். அவனது இடையர்குல நண்பர்களுக்கு, கவலை வேண்டாம் என்று கூறுவது போல் உள்ளது. எண்ணிலடங்கா முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், காப்பதற்கு தாம் இருப்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. இறுமாப்பு கொண்ட நாகதிற்கும், அமைதியை அழிக்க நினைக்கும் மற்றவருக்கும், எச்சரிக்கை செய்வது போல் உள்ளது. நாக குடும்பத்திற்கோ, அவர்களது இறைஞ்சலை தான் செவிமடுத்து அருள் புரிவதாக சொல்வது போல் உள்ளது. இன்னும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை கொண்டதாக அவனது அபய ஹஸ்தம் காட்சி அளிக்கிறது. அவை அனைத்தையும் எடுத்துக்கூறும் திறன் எனக்கு இல்லை.

Picture4

இந்த சிற்பத்தைக் கண்டதும் நான் அனுபவித்த ஆனந்தத்தை ஓரளவிற்கேனும் உங்களிடையே சேர்க்க முடிந்தது என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன். மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாசகர்கள் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள விரும்புகிறேன். நமது பாரம்பரியம் விலை மதிக்க முடியாதது. பற்பல படையெடுப்புகள், மனிதரின் பேராசைகள் மற்றும் இயற்கை சீற்றங்களையும் தாண்டி அவை இன்றும் இருப்பதே மிகப் பெரிய அதிசயம் ஆகும். எனவே, இனி நீங்கள் காணும் சிற்பங்கள் மற்றும் சிலைகளை புதிய கோணத்தில் காணுங்கள் என்று வாசகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு சிற்பமும் தனக்குள் பல விஷயங்களை அடக்கியுள்ளன. ஒவ்வொரு சிற்பம் உருவாவதற்கு பின்பும் நமது பண்டைய சிற்பிகளின் கலை உணர்ச்சி, சக்தி, வலி மற்றும் உழைப்பு அடங்கியுள்ளது. அவற்றை பாதுகாப்பது நமது பொறுப்பு மட்டுமல்ல, நமது புனிதமான கடமையும் ஆகும்.
இந்த காலத்தைக் கடந்த கலைச்செல்வங்களை உயர்த்துங்கள். இவை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற பரிசு அல்ல. இவை நம் குழந்தைகள் நமக்கு அளித்துள்ள கடன் என்பதை நினைவில் வைத்திருங்கள். நமது வருங்கால சந்ததியினருக்கு இவற்றை நாம் திருப்பி அளிக்க வேண்டும், அதுவும் வட்டியுடன். :)

படங்களை உபயோகிக்க அனுமதி தந்த திரு. அசோக் அவர்களுக்கும் செல்வி. நீரஜா ஸ்ரீனிவாசன் (நடனமாடுபவர்) அவர்களுக்கும் மிக்க நன்றி.

மேலும் நமக்கு ஒரு விருந்து படைக்கிறார் அசோக்

kalinga_mardhana

மேலே உள்ள அனைத்து கருத்துகளும் எழுதியவரின் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். சிற்ப சாஸ்திரத்தின் படியோ அல்லது விஞ்ஞான ரீதியான பொருளின்படியோ பொருந்தியோ பொருந்தாமலோ போகும் வாய்ப்பு உள்ளது. இந்த பதிவில் காணப்படும் தவறுகளுக்கு மன்னிக்கும்படி எழுதியவர் வேண்டுகோள் வைக்கிறார். மேலும், இவை தனது சொந்த கருத்துக்களே என்றும் அறியாமையால் தவறுகள் ஏற்பட்டிருக்கும் என்றும் தெளிவுபடுத்துகிறார். எனது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க வாய்ப்பு வழங்கிய திரு. விஜய் அவர்களுக்கு நன்றிகள் பலப்பல. மேலும் நமது அரிய பாரம்பரியத்தை முன்னிறுத்த அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்த முயற்சி பெரும் புரட்சியாக மாற வாழ்த்துகள்! வணக்கம்.

மறுமொழி அளிக்கவும் »

சிதைந்த பல்லவர் கால ஓவியங்களை அவற்றின் புராதன வசீகரத்துடன் வெளிக்காட்டும் முயற்சியில் இன்று மீண்டும் ஒரு பயணம். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து சோமாஸ்கந்தர் ஓவிய பதிவுகளுக்கு - - பதிவு 1, பதிவு 2,. பதிவு 3, தாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் எங்களை அடுத்து மீண்டும் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியம் ( ஓவியர் திரு மணியம் மற்றும் திரு மணியம் செல்வன் அவர்களின் வழித்தோன்றல் என்றால் சும்மாவா?) அவர்களின் உதவியுடன் இன்னும் ஒரு கடினமான அதே சமயத்தில் ஆனந்தமான பணியை மேற்கொண்டு உங்கள் முன் வருகிறோம்.

பொன்னியின் செல்வன் குழும நண்பர்களுடன் பனைமலை சென்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. எனினும் இன்றுவரை அதை பற்றிய பதிவை நான் இடவில்லை. சிற்பங்களை அவைகளுள் இருக்கும் அற்புத வடிவத்தை கண்டிப்பாக சரியான முறையில் வெளிக்காட்டினால் தான் முறையாக இருக்கும் என காத்திருந்தேன். ஆனால் இன்றும் பசுமையான நினைவுகள். செஞ்சி அருகே ஒரு சிறிய மலைதான் பனை மலை.

first+glimpse

ஆஹா, மேலே ஏறும் போதே ராஜ சிம்ஹாபல்லவரின் ஆலயம் - தாளகிரீசுவரர்’.

surreal+vimana

ராஜ சிம்மர் என்றாலே விமானங்களின் அழகுதான் முதலில் நம்மை ஈர்க்கும். காலத்தை வெல்லும் கொள்ளை அழகு

Panaimalai_Vimaanam
stunning

அனால் இந்த பொக்கிஷம் முத்துச் சிப்பியை போல உள்ளே ஒரு அரிய முத்தை உள்ளடக்கி வைத்துள்ளது.

ராஜ சிம்மர் தனது காலத்தில் தனது படைப்புகளான ஆலயங்கள் அனைத்தையும் தலைமுதல் கால் வரை
ஓவியங்களை கொண்டு அழகுக்கு அழகு சேர்த்தார். இதனை நாம் முன்னரே காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பார்த்தோம். இங்கேயும் அதே போல ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். நமது துரதிஷ்டம், இன்று எங்கோ இங்கும் அங்கும் ஒரு சில இடங்களில் மட்டும் எச்சங்களே மிஞ்சி உள்ளன. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல - தூரிகையின் ஒரு சில கோடுகளிலேயே பல்லவ ஓவியனின் கைத்திறன் நம்மை சொக்க வைக்கின்றது

விமானத்தின் உட்புறமோ, கருவரையிலோ இன்று ஓவியங்கள் எவையும் பிழைக்க வில்லை. எனினும், விமானத்தை சுற்றி வரும் பொது, வலது புறம் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் சிவலிங்கத்தை கொண்ட ஒரு சிறு சன்னதி உள்ளது. மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கஷ்டப் பட வேண்டும். ஆனால் அதைக் கண்டும், அஞ்சி ஏறவில்லை என்றால் போச்சு!….அதனுள் தான் புதையல் உள்ளது.

the shrine from outside.jpg

ஏறிவிட்டீர்களா ? முதல் பார்வையில் ஒன்றுமே இல்லையே என்று நினைக்க வேண்டாம். வலது புறம் சுவற்றை நன்றாக பாருங்கள். கண்டிப்பாக தெனிந்தியாவில் இவளை போன்ற அழகி வேறெங்கும் இல்லை.

umai+on+the+side
umai+on+the+side+highlight

இன்னும் நன்றாக அருகில் சென்று பாருங்கள்.

inside+the+cell
meditant.eu-panamalai-3973
meditant.eu-panamalai-3974
pallava+painting
traces+of+umai
umai

உமை அம்மை - பார்த்த கணத்தில் நம்மை சொக்கி அடிக்கும் மதி வதனம். மேலே வர்ணிக்க வார்த்தைகள் வராது.

meditant.eu-panamalai-3971
meditant.eu-panamalai-3977

காலத்தின் கோலத்தில் பல இடங்களில் உடைந்தும் அழிந்தும் போன நிலையிலும், அந்த ஓவியனின் தூரிகை தீட்டிய கோடுகள், வண்ணங்கள் - அவை ஒன்று சேர்ந்து உமையின் முகத்தில் வெளிக்கொணரும் உணர்வு அலை, நிற்கும் நளினம். .

umai panamalai

மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால், ஓவியத்தில் பல இடங்களில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை - மேலே வண்ண குடை தவிர , இன்னொரு பக்கம் இருப்பது ஒரு பல்லவக் குடைவரைக் கோயிலின் தூண் போல தெரிகிறது.

pillar

வலது புறம் உமை இருக்க, நடு சுவரில் மிகவும் மெல்லிய ஓவியச் சுவடுகள் தெரிகின்றன.

traces

அருகில் சென்று ஆராயும்போது அவை சிவபெருமான் முப்புரம் எரித்த பின்னர், மகிழ்ச்சியில் ஆடிய ஆளிதன்றிட (Alidhanrita) நடனம் என்று தெரிந்துக் கொண்டோம். இதை அடுத்த பதிவில் மேலும் காண்போம். ஆனால் இந்த வடிவம் ராஜ சிம்ஹரின் பல சிற்பங்களில் நாம் பார்க்க முடியும், காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இதே போல சிவன் அவர் ஆட உமை பார்க்கும் காட்சி இருக்கிறது - “திரிபுராந்தகி சமேத திரிபுராந்தகாய நமஹ”

panel+kanchi+kailasanthar

உமை ( திரிபுராந்தகி) இங்கும் பனை மலை போல இருப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

umai+kanchi+kailasanathar

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, இந்த ஓவியத்தை சுபாஷினி வரையத் துவங்கினார்.

sketch_1
sketch_2

வண்ணங்கள் மெதுவாக தோன்றின.

photo(1)

போன முறை ஜகதீஷ் படங்களை தந்து உதவியது போலவே, இம்முறை திரு பிரான்க் ரோந்டோட் என்பவர் உதவினார். வெகு நாள் வரை பனைமலை ஓவியத்தின் நல்ல புகைப்படம் இணையத்தில் இல்லை, அப்போது திரு பிரான்க் அவர்களின் தலத்தில் நல்ல படங்களை கண்டு, நமது முந்தைய பதிவையும் என்ன செய்ய இந்த படங்கள் தேவை என்றும் விளக்கினேன். அவரும் உடனே படங்களை நமக்கு தந்து உதவினார். இவை நமக்கு மிகவும் உதவின - ஏனெனில், இவை பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள் - அதற்கு பின்னர் சில இடங்களில் ஓவியம் சிதைவு அடைந்துள்ளது !!

மேலும் பொன்னியின் செல்வன் குழு நண்பர்கள் சௌராப் , சாஸ்வத் , ஸ்ரீராம் , ஸ்ரீ என்று பலரும் தங்கள் படங்களை கொடுத்து உதவினர்.

மெதுவாக ஓவியம் வளர்ந்தது…

photo(7)

தொடரும்

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »