Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ஹனுமான்’

நேற்று வாரணம் ஆயிரம் படம் பார்த்தோம். என்னடா சிற்பத்தை பற்றி பேசும் இவன் திடீரென திரைப்படம் பற்றி பேசுகிறானே என்று அஞ்சாதீர். நான் கட்சி மாறவில்லை.

இயக்குநர் கௌதம் மேனன் “வாரணம் ஆயிரம்” என்று பெயர் வைத்ததுமே பலருக்கு அதன் விளக்கம் தேவை பட்டது. குறிப்பாக,வாரணம் என்றால் என்னவென்று தெரியாமல் பலரும் திகைத்தனர். பிறகு பல இணைய தேடல்களில் , விடைகிடைத்தது– - ‘வாரணம்’ என்றால் யானை. அதுவும் வாரணம் ஆயிரம் என்ற சொற்பிரயோகம், ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் வருகிறது.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

திருமால், ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருவதை அறிந்த ஊர் மக்கள் பொற்குடங்களில் நீர் நிரப்பி ஊரெங்கும் தோரணங்கள் கட்டி அவரை வரவேற்பதாக தான் கனவு கண்டதாக தன் தோழியிடத்தே கூறுகிறாள் ஆண்டாள்.

படத்தின் நிறைவில் ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் கணவன் கோதையின் வர்ணனைக்கு இணங்க இருப்பான் என்று முடியும்.

ஆனால் எனக்கு ஆயிரம் யானை என்றவுடன் நினைவிற்கு வந்தது பீமனே. ஆயிரம்யானை பலம் கொண்ட பீமன் தனது பெரு உருவத்தையும் வலுவையும் கொண்டு, வெல்ல முடியாத பெரும் பல வீரர்களை பாரதத்தில் வென்று குவிப்பான். வாயுபுத்திரன் என்றாலும் அவனுக்கு இந்த பலம் எப்படி வந்தது …அதற்கும் ஒரு கதை உண்டு.

ஒரு நாள் பீமனும் திரெளபதியும் தனிமையில் இருக்கையில், காற்றிலே மிக இனிமையான மணம் வந்தது. அது ஏதோ மலரின் மணம். திரெளபதி அந்த மலரை விரும்பினாள்.அதைத் தேடிப் பீமன் சென்றான் - அடர்ந்த காட்டின் ஆழத்தில் மணம் அவனை எடுத்து சென்றது. அங்கே ஒரு குரங்கு வழியை அடைத்து அலட்சியமாக படுத்திருப்பதை கண்டு அதை விரட்ட குரல் கொடுத்தான் பீமன்

ஆனால் குரங்கோ இன்னும் அலட்சியமாக உன்னால் முடிந்தால் என் வாலை நகற்றி விட்டுச் செல்லேன் என்றது. அதன் அகம்பாவம் கண்டு எரிச்சல் அடைந்த பீமன் கீழே குனிந்து அதன் வாலை பிடித்து சுழற்றி எறிய முயன்றான் . ஆனால் என்ன விந்தை - அவனால் அசைக்கவே முடியவில்லை. பலம் அனைத்தையும் கொண்டு முயன்றும் அந்த வால் தரையை விட்டுச் சிறிதுகூட நகரவில்லை. அது சாதாரண குரங்கில்லை என்று அறிந்த பீமன் தன் ஆணவத்தை நினைத்து மனம் வருந்தி -அதனிடம் பணிவுடன் தாங்கள் யார் என்று வினவினான். அப்போது அந்த குரங்கு அனுமனாக உரு மாறி, வாயு புத்திரனாக - காட்சி அளித்து அணைத்துக்கொண்டான் பீமனை . அவருடைய தமயனை ( அப்போது பீமனுக்கு தன் உடலில் ஆயிரம் யானைகளின் பலம் புகுந்தது ) - எதிரிகளை சிதற அடிக்கும் வலிமையை தந்தது அந்த அணைப்பு, அதை விட பீமனது ஆணவத்தையும் அடக்கி அருள் புரிந்தான் அனுமன்.

சரி இப்போது சிற்பம். ஹலபேடு கோவில் சிற்பம். ( படத்தை நன்றாக பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள் )

Bhima panel halebid.jpg

நடுவில் இருப்பது பீமன் - எதிரில் வரும் யானையை எதிர்கொண்டு அதன் துதிக்கையை பிடித்து தன் கதையால் அடிக்கிறான். பின்னால் இரு எதிர் வீரர்கள் - கத்தி கேடயம் வைத்துக்கொண்டு நிற்கின்றனர். யானையையே அடித்து நொறுக்கும் பீமனை கண்டு நிற்கலாமா ஓடிவிடலாமா என்று யோசனை போல ?

Kaurava soldiers.JPG
bhima takes on another elephant.JPG

சிற்பத்தின் மிக அருமையான பகுதி - அடுத்து பீமன் கொன்று குவித்தயானை மற்றும் யானை பாகர்களின் சடலங்களை - மலை போல குவிந்ததுஇருப்பதை காட்டி இருக்கும் வண்ணம் அருமை.

pile of dead elephants another angle.jpg
pile of dead elephants.JPG

மறுமொழி அளிக்கவும் »

இந்த தூணில் இருக்கும் அரிய சிற்பம் ( ஸ்ரீரங்கம் கோயில் தூண் ) நான் இதுவரை வேறு எங்கும் கண்டதில்லை - இதை விளக்க நாம் ராமயாணதினுள் செல்ல வேண்டும்.

இராவணனின் மகனான மாயை அனைத்தும் அறிந்த இந்த்ரஜித் ஏவிய பானத்தில் வீழ்ந்த இலக்குமணன் உயிர் பிழைக்க சஞ்சிவினி தேவை என்று மருத்துவர் கூற - ஹனுமான் சென்று பர்வதத்தை பெயர்த்து கொணர்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவன் அங்கு செல்லும் காரியம் நிறைவேறாமல் இருக்க ராவணன் தனது மாமன் காலமேணி என்கிற அசுரனை அங்கு அனுப்புகிறான். அவன் அங்கு ஒரு ரிஷி வேடம் பூண்டு, ஹனுமான் வரும் போது அவனை ஆசி புரியும் பாணியில் அருகில் இருக்கும் குளத்தில் நீறாடி விட்டு வருமாறு கூற, அனுமனும் அவ்வாறே அங்கு செல்கிறான் - குளத்தில் கால் வைத்துமே ஒரு பெரிய முதலை அவனை விழுங்கியது - ஹனுமான் அதன் வயிற்றை கிழித்து வெளி வந்தான். அப்போது முதலை மடிந்து ஒரு தேவதை உரு பெற்றது - தக்ஷன் சாபத்தினால் தான் முதலை வடிவம் பெற்றதாகவும் - தன் இயற் பெயர் தண்யமாலி என்றும் - விமோசனம் தந்த ஹனுமனை வணங்கி ஆசிபெற்றால் - உள்ளே இருப்பது ரிஷி அல்ல அசுரன் என்ற உண்மையை அறிந்த ஹனுமான், தன் தலையாய பணி தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்து , அசுரனின் காலை பிடித்து தலைக்கு மேல் சுற்றி விசினான் - அசுரன் அங்கிருந்த இலங்கை ராவணனின் சபையில் வந்து விழுந்து மாண்டான்.

hanuman croc srirangam.jpg

இந்த கதையை தான் இந்த தூண் சிற்பம் விளக்குகிறது - உற்று கவனியுங்கள் - படத்தின் வலது புறம் மேல் பாதி - முனிவர் வேடத்தில் அசுரன் விரல் நீட்டி குளத்தை காட்டும் காட்சி, இடது புறத்தில் ஹனுமான் முதலை வயிற்றை கிழித்து வெளி வரும் காட்சி, அதே காட்சியில் தேவதை ரூபம், வலது புறம் கீழே - பொலி சாமியாரை உதைக்கும் ஹனுமான்..

False rishi and Hanuman.JPG
hanuman srirangam.jpg
take this - hanuman.JPG

என்ன அருமையான வேலைப்பாடு, முதலையின் உடம்பின் அமைப்பு, அதில் இருந்து வெளிவரும் அனுமனின் கம்பீர தோரணை - இவை நாம் முன்னர் ஸ்ரீரங்கம் அலசிய குதிரை சவாரி தூண்களில் பின்புறம் என்பதை மனதில் கொண்டு பாருங்கள் (குதிரையின் பின்னங்கால் தெரிகிறது )

இதே போல முதலை வாயில் இருந்த மீண்ட இன்னும் ஒரு கதை உண்டு - அதற்கும் சிற்பம் இருக்கிறது, அவற்றை வரும் மடல்களில் பார்போம்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 4 of 5 « 1  2  3  4  5 »