Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘இந்திரன்’

கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு முன்னரே தமிழகத்தில் ராமாயணம் பரவலாக இருந்ததா ? கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். வால்மீகியின் ராமாயணம் கண்டிப்பாக இருக்கும், ஆனால் தமிழில் முழுவதும் இருந்திருக்குமோ? அப்படி இருந்தால் அதற்கு சிற்பத்தில் வர்ணனை உண்டோ ? இந்தக் கேள்விகளை தான் நாம் இந்த பதிவில் அலசப் போகிறோம்.

கவிச்சக்ரவர்தியின் காலத்தை பற்றி மொழி ஆர்வலர்களும், சரித்திரி ஆர்வலர்களும் பல காலமாக விவாதித்து வருகின்றனர். கம்பர், இந்தப் புனிதப் பணியை பாரம்பரியத்துக்கு எதிராக, தனது வரிகளில் எந்த ஒரு அரசனை பற்றியும் பாடாமல், தனது நண்பர் புரவலர் சடையப்ப வள்ளலை மட்டும் ஆயிரம் செய்யுளுக்கு ஒருமுறை பாடியது இன்னொரு காரணம். இவற்றைக் கொண்டு அவரது காலத்தை நிர்ணயம் செய்வது கடினமாகி விட்டது. தற்போது அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சாட்சியம் எதுவும் இல்லாமல் விரிந்து கிடக்கிறது. பொதுவாக பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்ற கருதப்படுகிறது.

கம்பரின் ராமாவதாரம், வால்மீகி்யின் வடமொழி காவியத்தின் கருவை கொண்டாலும், அவர் அதனை அதன் மொழி பெயர்ப்பாக அதை இயற்ற வில்லை. தனது தமிழ் புலமையை முழுவதுமாக பயன் படுத்தி, காவியத்தின் பல்வேறு இடங்களில் சிறு மாற்றங்களை செய்து, அப்போதைய காலத்திற்கு ஏற்ப நயத்தை மாற்றி அவர் தனது படைப்பை தனி தமிழ்க் காவியமாகவே மாற்றி விட்டார். ஆனால் நாம் இன்று பார்க்கும் அப்படிப் பட்ட ஒரு மாற்றம் அவருடையதா , அல்லது வாட்டர வழக்காக வந்த ஒன்றை அவர் மேலும் அழகு பட பாடினாரா ?

இதனை பற்றி நண்பர்களுடன் பலமுறை விவாதித்ததுண்டு - . நன்றி திரு திவாகர், திரு ஹரி்கி்ரிஷ்ணன், ஷங்கர் ( பொன்னியின் செல்வன் குழுமம் ), திரு அண்ணா கண்ணன் மற்றும் கீதா அம்மா - பல்வேறு விதங்களில் இந்த பதிவுக்கு உதவியதற்கு. நன்றி திரு அர்விந்த் ( படங்கள். )

இந்த சிற்பம், புள்ளமங்கை பிரம்ம புரீ்ஸ்வரர் ஆலயத்தில் இருப்பது, இதன் கட்டுமான முறையை கொண்டும், அதில் இருக்கும் முதலாம் பாரந்தக சோழரின் கல்வெட்டுகளை கொண்டும் இதன் காலம் 907 to 953 CE என்று நிர்ணயிக்கப் படுகிறது .

pullamangai+panels
pullamangai+panels+ahalya+curse+redemption

சிற்பத்தை அருகில் சென்று பார்ப்பதற்கு முன்னர், இரு காவியங்களில் இந்த நிகழ்வை கையாண்ட முறையை படிப்போம். அஹல்யையின் சாபமும் சாப-விமோ்சனும்

அஹல்யை -விக்கி

அஹல்யை பிரம்மனால் உலகிலேயே மிகவும் அழகு பொருந்திய மங்கையாக படைக்கப்பட்டாள். அப்போதே அவள் மீது இந்திரனுக்கு ஒரு கண். எனினும் கௌதம முனிவரை அஹல்யையை மணந்ததால். மாற்றான் மனைவி என்றாலும் இந்திரனின் சபலம் குறையவில்லை. அவளை அடைய திட்டம் தீட்டி , கௌதம முனிவரை போலவே தன்னை உருமாற்றி அவளிடம் சென்றான். வந்திருப்பவன் தன மணாளன் அல்ல என்று தெரிந்தும் அஹல்யை தனது அழகின் மீது இருந்த ஆனவத்தாலோ , தேவர்களின் அரசனே வந்திருக்கிறான் என்பதாலோ தவறு செய்கிறாள்…

சரி, இதனை வால்மீகி எவ்வாறு கூறுகிறார் என்பதை பார்ப்போம்.

tathaa shaptvaa ca vai shakram bhaaryaam api ca shaptavaan |
iha varSa sahasraaNi bahuuni nivaSisyasi || 1-48-29
vaayu bhakSaa niraahaaraa tapyantii bhasma shaayinii |
adR^ishyaa sarva bhuutaanaam aashrame asmin vaSisyasi ||

இப்படி பட்ட தவறை செய்ததனால் நீ ஆயிரம் ஆண்டுகள் உண்ண உணவின்றி, காற்றை மட்டுமே சுவாசித்துக்கொண்டு, யாராலும் பார்க்க முடியா வண்ணம், இந்த ஆசிரமத்தை சுற்றியே காற்றில் கரைந்து புழுதி போல இருப்பாயாக !!

yadaa tu etat vanam ghoram raamo dasharatha aatmajaH |
aagamiSyati durdharSaH tadaa puutaa bhaviSyas

தசரதனின் புதல்வனான ராமன், இந்த வனத்திற்குவரும்போது, உனது பாவம் போய் சாப விமோசனமும் பெறுவாயாக


tasya aatithyena dur.hvR^itte lobha moha vivarjitaa |
mat sakaashe mudaa yuktaa svam vapuH dhaarayiSyasi

ராமனை போற்றி வழி படும்போது உனது பாவம், பித்து, பேராசை அனைத்தும் விலகி, உனது சுய உருவை நீ மீண்டும் பெற்று, என்னுடன் வந்து மீண்டும் மகிழ்ச்சியான வாழ்கையை பெறுவாய், என்று சபித்தார் கௌதம முனிவர். .

இதில் நாம் கவனிக்க வேண்டியது எங்குமே கல்லாய் கிடவது என்று அவர் கூறவில்லை.

இப்போது கம்பர் இதை கையாண்ட முறையாய் பார்ப்போம்.

பரிபாடல்


‘எல்லை இல் நாணம் எய்தி.
யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
புரந்தரன் போய பின்றை.
மெல்லியலாளை நோக்கி.
‘’விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி’’ என்றான்;
கருங்கல் ஆய். மருங்கு வீழ்வாள்

தன் உடம்பு முழுவதும் சாபத்தால் கெட்டு விட்டதனால், இந்திரன் அளவில்லாத,நாணத்தை அடைந்து, தனது நிலையைப் பார்த்தவர்கள். கேட்டவர்கள், எல்லோர்க்கும்,
பரிகாசச் சிரிப்பு வந்தெய்தும்படி, தனக்கு நேர்ந்த பழியோடும் வானுலகத்திற்குச் சென்ற பின்பு, அம் முனிவன் தன் மனைவியைப் பார்த்து, விலைமகள் ( வேசியைப்) போன்ற நீயும் கல் வடிவம் போல ஆகுக என்று சபித்தான்.


‘’பிழைத்தது பொறுத்தல் என்றும்
பெரியவர் கடனே; அன்பால்.
அழல் தருங் கடவுள் அன்னாய்!
முடிவு இதற்கு அருளுக!’’ என்ன.
‘’தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ. இந்தக்
கல் உருத் தவிர்தி’’ என்றான்.

அவ்வாறு விழுகின்ற அகலிகை அம் முனிவனை நோக்கி, தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்தும், புன் சிரிப்பிலிருந்தும் நெருப்பைச் சிதறறும் கடவுள் அன்னாய், உருத்திர மூர்த்தியை ஒத்த முனிவனே! சிறியோர் செய்த பிழையைப் பொறுப்பது, எக்காலத்தும் பெரியோர்களின் கடமையே ஆகும் என்று கூறுவர். இச் சாபத்திற்கு ஒரு முடிவை அருள்வீராக என்று வேண்டி நிற்க, அதற்கு
இரங்கிய அம் முனிவன், ஒலிக்கும் குளிர்ந்த பூமாலையை அணிந்த தசரதராமன் என்பான் திருவடித் தூள் உன்மேல் படியும் போது, இந்தக் கருங்கல் வடிவம் நீங்குவாய்
என்று (சாபம் நீங்கும் வழியும்) அருளினான்.

இந்த இடத்தில தான் நாம் இரு காவியங்களில் உள்ள வேற்றுமையை ஆராய வேண்டும். வால்மீகி அஹல்யை காற்றோடு கலந்து எவராலும் அவள் அழகை பார்த்து ரசிக்க முடியா வண்ணம் , அவளது அழகின் மேல் அவளுக்கு இருந்த ஆணவத்தை இழக்குமாறு காட்சியை எடுத்துச் செல்கிறார். . கம்பனோ உணர்ச்சிவசப்பட்டு தவறிட்ட அஹல்யையை கல்லாக மாற்றி, உணர்ச்சியற்ற நிலையில் வாடும் வண்ணம் சபிக்கப்பட்டதாக காட்சியை அமைக்கிறார்.

இது கம்பனின் கற்பனையா? இல்லை இந்த வழக்கு தமிழ் மண்ணில் அவருக்கு முன்னரே இருந்ததா? ( நன்றி திரு ஹரிக்கிர்ஷ்ணன் அவர்களது பதிவு )

சங்கம் பாடலில் அஹல்யை

பரிபாடல் காலம்

சங்க காலத்து நூலானா பரிபாடலில் வரும் வரிகளில் அஹல்யையின் சாபம் இடம் பெறுகிறது.

பரிபாடல் 19 , முருகனை பற்றி வரும் பாடல்.அதில் ஒரு பகுதி

இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது. என்று உரை செய்வோரும்:
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்
சோபன நிலையது–துணி பரங்குன்றத்து
மாஅல் முருகன் மாட மருங்கு.

(Lines 50-57)

பக்தர்கள் ஓவியக் காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, ஒருவர் ரதி மன்மதனின் ஓவியத்தை பார்த்த பின், இன்னொரு ஓவியத்தில் - இந்த பூனை இந்திரன் (இந்திரன் பூசை) , இவள் அஹல்யை (இவள் அகலிகை), சினத்தில் சென்ற கௌதமன் (இவன் சென்ற கவுதமன்) , கல்லை மாறிய அஹல்யை (சினன்உறக் கல்லுரு ஒன்றியபடி இது‘) என்று பரங்குன்றம் செல்லும் யாத்ரிகள் பேசுவது போல வருகிறது பாடல்.

pullamangai+panels+ahalya+curse+redemption

இப்போது நாம், மீண்டும் சிற்பத்திற்கு வருவோம். சிறு சிற்பம் தான். புள்ளமங்கை, எனினும் அதில் நாம் மூன்று நபர்களை தெளிவாக பார்க்க முடிகிறது. லக்ஷ்மணன் , ராமன் , மற்றும் அஹல்யை.

ahalya+panel+pullamangai
ahalya+panel
rama+ahalya

இப்போது பதிவின் முக்கியமான தருணம். ராமனின் காலை பாருங்கள். அப்படியே கம்பனின் அற்புத வரிகளை படியுங்கள்.எத்தனை வண்ணங்கள்.. வண்ணங்களா.. இல்லை கம்பனின் எண்ண ஜாலங்களா..

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

இதை மேலும் விவரிக்க எனக்கு தேர்ச்சி இல்லை - தேவையும் இல்லை. ராமன் கால் பட்டு உயிர்ப்பிக்கும் அஹல்யையை சிற்பத்தில் பாருங்கள்.

rama+foot+hitting+stone

புள்ளமங்கை விமான சிற்பம் கண்டிப்பாக 953 CE க்கு முன்னர் செதுக்கப்பட்டது. நிச்சயமாக அது அஹல்யை கல்லாய் மாறுவதும், ராமனின் கால் ( அல்லது கால் தூசி) - சிற்பத்தில் குதிக்கால் ஊன்றி பாதம் கல்லின் மேல் படும்படி வடித்துள்ள திறமையை பாருங்கள் , அப்படி கால் பட்டு சாப விமோசனம் பெரும் அஹல்யை இரு கை கூப்பி பக்தி பரவசத்துடன் தன எழில் உருவம் பெற்று , ராமனை வணங்கும் வண்ணம் வடித்ததும் அருமை.
அது சரி கம்பன் சொல்லும் கால் வண்ணத்தை பார்த்துவிட்டோம் - அது என்ன கை வண்ணம். அதற்கும் சிற்பம் உண்டோ. விரைவில் பார்ப்போம்.

மறுமொழி அளிக்கவும் »


புராணங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஹனுமான் மற்றும் கருடன். அமர்சித்ராகதா புத்தகம் அனைத்தையும் அழுது அடம் பிடித்து அப்பாவிடம் சண்டை போட்டு வாங்கி வரச் செய்வேன்.

garuda cover.jpg

அதில் வரும் கதைகள் மற்றும் படங்கள், மிக அருமையாக அப்படியே மனதில் பதியும். அப்படி பதிந்த ஒரு கதை, அண்மைய நண்பர் திரு கிரிதரன் அவர்கள் (நிறைய அற்புத படங்களை நமக்கு அனுப்பி உள்ளார் - விரைவில் அவற்றை பார்ப்போம்) திருக்குறுங்குடி சிற்பம் ஒன்றை தந்தார். பார்த்தவுடன் நினைவுக்கு வந்த கதை.

கருடனின் கதை - இந்தியாவில் மட்டும் அல்லாமல் தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்னாம் , கம்போடியா என்று எங்கும் பிரபலமான ஒன்று.

angkor
angkor thom
angkor wat 2.jpg
cambodia
garuda danang musuem
nepal
prasatkravan

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக்கண்டீரே?
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்மேலாப்பின் கீழ்வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

என்று சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பாடியபடி எம்பெருமானுக்கு வெயில் படாதபடி தன் பரந்து விரிந்த சிறகால் காப்பவன் விநதை சிறுவன் கருடன்

மகாபாரதத்தில் அவன் பிறந்த கதை மிக அழகாக வர்ணிக்க படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர், அவருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. இதில் விநதை மிக நல்லவள், கத்ரு கொடியவள். இருவரும் கரு தரித்து - ஆனால் வினோதமாக கத்ரு ஆயிரம் முட்டைகளும், விநதை இரண்டு முட்டைகளும் இட்டனர்.

ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் ( அப்பப்பா !!) கத்ருவின் ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்து நாகங்கள் வெளி வந்தன. இதைக் கண்டு தன் முட்டைகள் என்னவாயிற்று என்று எண்ணி அவசரத்தில் ஒன்றை உடைத்து பார்த்தாள் விந்தை - அவசரத்தில் தன் தமக்கையின் குட்டிகள் கண்ட ஆர்வத்தில் அவள் செய்த தவறு - உள்ளே குழந்தை பாதிதான் உருவாகி இருந்தது - அவனே அருணன். எஞ்சி உள்ள தன் தமயனின் முட்டையை பொறுமையுடன் பாதுகாக்க அறிவுரை கூறிவிட்டு அவன் சூரியனின் தேரோட்டி ஆனான் .( அருணனின் மகனே ராமாயணத்தில் வரும் ஜடாயு )

அத்தருணத்தில் பொறாமையினால் கத்ரு ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் யார் தோற்றுப் போகின்றார்களோ அவர் வெற்றி பெற்றவரின் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை. அந்தப் போட்டி என்ன ? இந்திரனின் வெள்ளைக் குதிரையான உச்சைர்வத்தின் ( பாற்கடலை கடையும் பொது வந்தது அது - அதனுடன் வந்ததே கௌஸ்துபம் - பெருமாளின் மார்பை அலங்கரிக்கும் மணி ) வாலின் நிறம் என்ன என்பதே போட்டி. விநதை தூய வெள்ளை நிறக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் வெள்ளை என்று கூற, கத்ரு கறுப்பு என்று கூறினாள். பின் போட்டி நடைபெற்ற போது தந்திரமாக கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து உச்சைர்வத்தின் வாலை சுற்றிக் கொள்ளக் கூறுகிறாள். எனவே அவர்கள் பார்த்த போது உச்சைர்வத்தின் வால் கருப்பாக தோன்றியது. இவ்வாறு சூழ்ச்சியால் தோற்ற விநதை கத்ருவின் அடிமையாக ஆகின்றாள்.

குறிப்பிட்ட காலத்தில் கருடன் முட்டையில் இருந்து வெளி வருகிறான். அவன் உருவம் வளர்ந்து மிக பிரம்மாண்டமாக அனைவரும் அஞ்சும் அளவிற்கு பெரியதாக உள்ளது. தேவர்கள் வேண்டுகோளின் படி அவன் தன் உருவத்தை சிறியது படுத்துகிறான்.

தன் அன்னை , சிற்றன்னைக்கு அடிமையாக சேவை செய்து வருவதைக் கண்டு பொறுக்க முடியாமல் கருடன் தன் அன்னையிடம் அவரது இந்த நிலைக்கான காரணத்தை கூற வேண்டுகிறான். விநதையும் நடந்ததைக் கூறுகின்றாள். கருடன் தன் சிறிய தாயாரிடம் சென்று தன் தாய்க்கு விடுதலை அளிக்குமாறு வேண்டுகின்றான். அலட்சியமாக கத்ருவும் தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வா? உன் தாயை விடுதலை செய்கின்றேன் என்று ஆணவத்துடனும், அந்த காரியம் முடியாதது என்ற நம்பிக்கையுடனும் பதிலிறுக்கின்றாள். ( இன்னொரு வடிவில் அவள் சந்திரனை இழுத்து வருமாறும் அதில் உள்ள அமிர்தம் நிறைந்த ஓட்டைகளையும் சேர்த்து கொண்டு வருமாறும் உள்ளது )

இப்போது ஒரு கிளைக் கதை - நமது சிற்பத்துடன் தொடர்பு உள்ள இடம் . தன் தாயின் துயர் தீர்க்க யாராலும் முடியாததையும் செய்ய, தாயிடம் ஆசி பெற்று புறப்பட இருந்த கருடனுக்கு ஒரே பசி. பசியாற உணவைத் தேடும் அவனுக்கு அவன் தாய் கடலோரத்துக்கு சென்று அங்கு இருக்கும் ஜீவராசிகளை உண்டு வருமாறு கூறி ( அங்கு எந்த பிராமணனுக்கும் தீங்கு நேரிடாமல் நட என்றும் கூறுகிறார். கடற்கரைக்கு சென்ற கருடன் அங்கு ஒரு மீனவ கிராமம் ஒன்றை அப்படியே விழுங்கிவிட்டான். அப்போது அவன் வயிறு எரிகிறது - விழுங்கியவர்களுள் ஒருவர் அந்தணர் என்று அறிந்து அவரை வெளியில் உமிழ்கிறான். அவரும் தனது மனைவி - ஒரு மீனவப் பெண்மணி - அவளையும் காப்பாற்றுமாறு கூற - கருடனும் அவ்வாறே செய்கிறான் )

பின்னர் இன்னும் பசி தீராமல் இருக்கவே, தன் தந்தையை நாடிசெல்கிறான் கருடன். காஷ்யபர் அவனை அருகில் ஒரு ஏரியின் கரையில் பல காலமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு யானை மற்றும் ஒரு ஆமை - அவற்றை தின்று நீ பசியாறு என்கிறார்.

கருடனும் அங்கு விரைகிறான் - அங்கே ஒரு பிரம்மாண்ட ஆமை ( எண்பது மைல் பெரியது ) , யானையோ ( நூற்றி அறுபது மைல் ) - அப்பாடா - கருடன் ஒரு கையில் ஆமையையும் ஒரு கையில் யானையும் பிடித்து, அவற்றை உண்ண சரியான இடம் தேடுகிறான் . அங்கே ஒரு பேரு மரம் அவனை வரவேற்றது ( மரம் எட்டுநூறு அடி உயரம் ) - அதன் கிளையில் அமர்ந்த கருடன் , மூவரின் பாரத்தினால் கிளை உடைவதும், அதே கிளையின் அடியில் முனிவர்கள் பலர் தலை கீழாக தவம் புரிவதும் கண்டு திடுக்கிட்டான். உடனே கிளையை வாயில் கவ்வி - அருகில் இருந்த மலையின் உச்சிக்கு சென்று முனிவர்களை இறக்கி விட்டு, தன் இரைகளை தின்று முடித்தான்.

இந்த கதையைத் தான் நான் அமர் சித்ரா கதாவில் படித்தேன் - இதோ அவை.

Amarchitra katha 1
Amrchitra katha 2
Amarchitra Katha3

சரி, சிற்பம் - அதுவும் இதோ திருக்குறுங்குடி கோவில் சிற்பம். கருடனின் வலிமை, ஒரு கையில் யானை, மறு கையில் ஆமை - மூக்கில் மரம் - மரத்தில் தொங்கும் முனிவர்கள் - அருமை .

Garuda tirukurungudi 1
Garuda Tirukurungudi 2
Closeup Garuda tirukurungudi
Garuda thirukurungudi 3
Garuda tirukurungudi 4

சரி, அடுத்து மீண்டும் கதை - இந்திர லோகத்தை தன் பறக்கும் சக்தியினால் சுலபமாக அடைந்து விடுகின்றான் கருடன். அமிர்த குடத்தை நெருங்கும் கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. தேவர்களை வெற்றி பெற்று அடுத்து உள்ளே செல்கிறான் கருடன். அங்கே ஒரு பெரிய தீ அவனை தடுக்கிறது. உடனே அவன், பூமியில் இருக்கும் பெரிய அருவிகள் மற்றும் ஆறுகளில் இருந்து நீரை குடித்து வந்து - அதை அந்த தீயின் மேல் துப்பி அணைக்கிறான். பிறகு , ஒரு இயந்திரம் - வெட்டு கத்திகள் பொருந்தியது - சுழன்று கொண்டே இருக்கிறது - தன் உருவத்தை சிறியதாய் மாற்றி அதனுள்ளே நுழைகிறான். அங்கே இரு ராட்சசப் பாம்புகள் - அவற்றை எளிதில் கடித்து நசுக்கிக் கொன்று, அமிர்தம் உள்ள குடத்தை எடுக்கிறான்.

Garuda_by_Hyougushi_in_Delhi
amrit garuda.jpg

திரும்பும் பொது மகா விஷ்ணு எதிரில் வர - இருவரும் ஒருவரை ஒரவர் புரிந்து - ஒரு சமரசத்திற்கு வருகின்றனர். விஷ்ணு கருடனுக்கு அமிர்தத்தை அருந்தாமலே அமர ஆயுளை தருகிறார், கருடனும் தன் பனி முடிந்தவுடன் அவரின் வாகனமாக இருக்க வாக்கு தருகிறான்.

thirukoilur.jpg
tirukovilur

அப்போது கருடனுடன் போரிட இந்திரனே வருகிறான் . ஆயினும் அவனாலும் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை எய்கின்றான், கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான். இருவரும் சேர்ந்து கருடனின் தாயின் அடிமைத்தனம் போக்கவும், நாகங்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் போகவும் ஒரு வழி வகுக்கின்றனர்.

இந்திரன் கருடனுக்கு ஒரு வரம் தருகிறான். கருடன் அன்று முதல் சிற்றன்னைக்கு துணை சென்ற நாகங்கள் எல்லாம் தனக்கு இயற்கையான இரைஆக வேண்டும் என்று கேட்கிறான். அவ்வாறே இன்று வரை உள்ளது.

பிறகு கருடன், ஆணவத்தால் அறிவிழந்த சிற்றன்னையிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்கி, தன்னைப் பெற்றவளின் வயிற்றை குளிரச் செய்கின்றான். அமிர்தத்தை தரையில் வைத்து, நாகங்களை அதை பருகும் முன் சென்று குளித்து வருமாறு கூறுகிறான் கருடன். அவர்கள் குளிக்க செல்லும் போது இந்திரன் வந்து அமிர்தத்தை எடுத்து சென்று விடுகிறான்.

திருக்குறுங்குடி படங்கள் : திரு அசோக் மற்றும் கிரிதரன்
திருகொயிலூர் கருடன் படம் : திரு. சத்தியன்

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 3  1  2  3 »