Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘முதற் பார்வை’


எனது வழிகாட்டியாக விளங்கியவர்கள் பலர் - அவர்களுள் மிகவும் முக்கியமானவர் திரு திவாகர் - அவர் வம்சதாரா, திருமலை திருடன் , விசித்ர சித்தன் என்று மூன்று அழகிய சரித்திர புதினங்களின் வெற்றி ஆசிரியர்.Vamsadhara.blogspot.com

vamsadhara.jpg
Thirumalai Thirudan.jpg
vicithracithan.JPG

என்னை தினம்தோறும் ஊக்குவிக்கும் ஒரு நல்ல மனிதர். அவருடைய பார்வையில் சிற்பம் …..

விஜய் அவர்களின் இந்த வலைப் பகுதி சிற்ப வரலாற்றின் அழிந்து போன அந்த காலகட்டத்தை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஒரு கல்லையும் சிற்றுளியையும் மட்டுமே வைத்துக் கொண்டு எத்தனை வகை சிற்பங்கள் வடித்துள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அந்தக் கலைஞர்கள் மீதும், அவர்கள் கொண்ட அந்தக் கலைக்காதல் மீதும் ஆச்சரியம் நமக்கு உண்டாவது இயற்கைதான்.

தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கற்சிலைக் கலை 15 ஆம் நூற்றாண்டு வரை செழித்து எத்தனையோ ஆயிரக்கணக்கான வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. ‘உளியின் இனிய ஓசை’ ஊரெங்கும் கேட்டுக் கொண்டே இருந்திருக்கவேண்டும். இப்போதும் இந்தக் கலை நசியவில்லை என்பது ஆங்காங்கே கட்டப்பட்டுவரும் புதிய கோயில்கோபுரங்களில் தெரிகின்றது என்றாலும் தற்சமயத்து சிலைகளுக்கும் ஐந்நூறு வருடங்களுக்கு முன்வரை செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கும் ஒரு முக்கிய வேற்றுமை உண்டு. புராணக் கதைகளில் வரும் நீதிக்கதைகளை முன்வைத்து அந்தக் கதைக்கேற்றவாறு சிற்பங்கள் வடிப்பார்கள். ஒரு நல்ல கதையை வைத்து தற்காலங்களில் எடுக்கப்படும் திரைப்படம் போல அந்தச் சிற்பங்கள் உடனடியாக நம் மனதில் பதிந்துவிடும். இந்த சிற்பங்கள் நல்ல வகைக் கல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செதுக்கப்படுவதால் காலாகாலத்திற்கும் நிலைத்து நின்றது.. நிற்கிறது.. இன்னமும் கூட (மனிதன் தலையிட்டு பாழ்படுத்தாமல் இருந்தால்) நிற்கும். ஆனால் தற்போது செதுக்கப்பட்டு வரும் சிற்பங்கள் ஒரு தனிப்பட்ட வகையிலேயே செதுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமெரிக்க நாட்டு அட்லாண்டா வில் புதிதாகக் கட்டப்பட்ட சுவாமிநாராயண் கோயில் தூண் ஒன்றின் சிற்பம் பார்வைக்கு வந்தது. மிக மிக அழகாக இருக்கிறது. ஆனால் உயிரோட்டம்?… இந்த உயிரோட்டம் அந்தக் காலத்துச் சிற்பங்களில், அந்தச் சிற்பம் சொன்ன கதைகளில் இருந்ததே..

atlanta georgia.jpg

அந்தக் காலத்து சிற்பிகள் ஒரு கைவேலைக்காரர் மட்டும் அல்ல. நம் பழைமையான கலாசாரத்தையும், பண்பாட்டையும் நன்கு புரிந்துகொண்ட சான்றோர்கள் என்றே சொல்லவேண்டும். தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள். புராணங்கள், பாகவதம், இராமாயணம் மற்றும் மகாபாரதம் நூல்களில் நல்ல பரிச்சயம் இருந்திருக்கிறது. இந்த நூல்களின் மீது மிக நுண்ணியமான தெளிவு பெற்றிருந்தார்கள் இந்தச் சிற்பிகள். ‘கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’ என்ற சொல்லுக்கேற்ப இந்த சிற்ப சாத்திரத்தை அறிஞர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு கற்றார்களோ என்ற அளவில் ஏராளமான சிற்பச் செல்வங்களை எதிர்காலத் தலைமுறையினர்க்காக அள்ளித் தந்தனர்.

இப்படிப்பட்ட அருமையான சிற்பச் செல்வங்களை தன் வசம் கொண்ட இந்த அழகான வலைப் பூவில் விஜய் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக ஒரு புராணக் கதையை நான் எழுத விஜய் சேகரித்த சிற்பங்களோடு… .

பிட்சாண்டவன்.

Tanjore Museum Bronze bikshadana.jpg
kanchi kailasanta bikshadhana.jpg

சிவம் என்றால் அன்பு, சிவம் என்றால் பழைமை, செம்பொருள் என்று எத்தனையோ பொருள்களை அகராதியில் காணலாம். சிவம் என்றால் இயற்கை கூட.. பூவுலகையே வெள்ளக்காடாக்கி அழிப்பது போல சீறிப் பாய்ந்த கங்கையை தன் விரிசடையில் தாங்கி அவளை மெல்லிய நீரோடையாக தவழவிட்டு இந்த உலகைக் காத்தவன் ஆயிற்றே.. இந்தப் பூமியை விட சற்றே சிறிய கிரகமான சந்திரனுக்கும் தன் தலையில் இடம் அளித்தவனுக்கு இந்த மான், மழு, பாம்பு, கையில் நெருப்பு, புலித்தோல் என்று எல்லாமே இயற்கை சம்பந்தப்பட்டவைகளை அணிகலன்களாகக் கொண்டவன், ஏன் அரக்கனான முயலகனையும் பாதத்துக்கடியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்?.. ஒருவேளை அரக்ககுணம் கூட இயற்கையோ என்று எண்ணவும் தோன்றுகிறதல்லவா.. கங்கையும் நிலவும் அவன் செஞ்சடையில் குடிகொண்ட கதை அறிவோம்.. ஏனைய இயற்கை அணிகலன்கள் எப்படி அவனிடத்தே சேர்ந்தன?..

பொதுவாக புராணக்கதைகள் என்றாலே சற்று பயம்தான்.. பயத்துக்குக் காரணம் ஏராளமான கற்பனைக் கதைகள் கண்டபடி மலிந்திருக்கும். பல கதைகள் இப்படித்தான் என்றாலும் சில கதைகள் நம்முடைய சிந்தனைக்கு மருந்தாகவும் விருந்தாகவும் அதே சமயம் நம் முன்னோர்கள் காலம் எப்படிபட்டதாக இருந்தது என்பதையும் நமக்கு விளங்கவைக்கும். அதுவும் இக் கதைகளைப் பற்றி சமயக் குரவர் நால்வர் தம் தேவாரம் - திருவாசகம் மூலம் பாடி இருந்தால் கேட்கவே வேண்டாம். அந்தப் புனிதமான தெய்வப் பெரியவர்கள் வாக்கு சத்திய வாக்காயிற்றே. இப்படித்தான் தாருகாவன முனிவர்களின் கர்வ பங்க கதையும். இவர்களால்தானே சிவனுக்கு இத்தனை இயற்கை அணிகலன்கள் கிடைத்தன!..

Bhikshadana1.jpg
Bhikshadana2.jpg
tanjore musuem bronze.jpg

நம் பாரதம் புராதனச் செல்வத்தில் சிறப்பு வாய்ந்தது. சனாதன தர்மம் என்ற பொதுப்பெயர் கொண்டு ஆதிகாலம் தொட்டு சமய வேற்றுமையில்லாமல் தர்மம் என்ற பொது விதியின் கீழ் நம் மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர்கள் முனிவர் பெருமக்கள். கானகங்களில் வாழ்ந்து தங்கள் வாழ்க்கை முறையை மிக எளிமையாக்கிக் கொண்டு அதே சமயம் கானகத்துக்கு வெளியே நாகரீகமாகவும், தர்மமுறை சிதறாமலும் உலகம் உய்ய பெரு வழிவகைகளை மனித குலத்துக்கு அள்ளித் தந்தவர்கள் அந்த முனிவர்கள். நம் முன்னோர்கள் என்றால் இவர்கள்தான். வேத நெறி வாழ்க்கையும் ஆண்டவன் மீது பக்தியும் இவர்கள் மூலம்தான் நாம் கற்றுக் கொண்டோம். சுயநலமற்ற அவர்கள் எளிமையும் ஆண்டவன் மீது கொண்ட தூய பக்தியும் ஆண்டவனையே எப்போதும் அவர்கள் அருகிலேயே இருக்கவைத்தது.

பொதுவாகவே முனிவர்களைப் பற்றி நாம் பெருமையாக சொல்லிக்கொண்டே போகலாம்தான். ஆனால் எங்கும் எதிலும் சில நெருடல்கள் உண்டுதானே.. தாருகாவனத்து முனிவர்களின் நெருடல் கூட இந்த வகைதான்.

தாருகாவனத்து முனிவர்கள் ஏனைய முனிவர்களை விட சற்று வேறுவிதமாக சிந்தித்தார்களோ என்னவோ.. எதையும் எப்போதும் அள்ளிக் கொடுக்க வேதமும் ஆகம முறைகளும் ஏராளமாக இருக்க, அதற்குத் தகுந்தாற்போல கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர தேவர்களும் காத்திருந்து இவர்கள் வேண்டியதை யாக குண்டத்திலிருந்தே வரவழைத்துத் தர, இனிமேல் அங்கு ஆண்டவனுக்கு என்ன வேலை என நினைத்தார்களோ என்னவோ.. சிவனும் கேசவனும் தெய்வ ஆராதனைக்கு உரியவர்களா.. அவர்களால் தமக்கு உதவாத பட்சத்தில் அவர்கள் கூட மனித ஆன்மாக்களில் ஒன்றுதான்.. இவர்களை நாளும் நினைப்பதால் அப்படி என்ன பெரிய பலன் கிடைக்கப் போகிறது.. என்ன பெரிய பக்தி வேண்டிக்கிடக்கிறது இவர்களிடத்தில்..

(இப்படிப்பட்ட ஒரு கருத்தினை மீமாம்சை என்று சொல்வார்கள். வேதம் போதித்த மந்திரங்களும், அதற்கான பலன்களும் இருக்கையில் கடவுள் என்று ஒருவன் தேவை இல்லை என்று சொல்கிறது மீமாம்சை நூல். மீமாம்சை என்பது வேதத்தின் கர்ம காண்டத்தை ஆய்வு செய்து சைமினி எனும் முனிவர் முதன் முதலில் நூலாக எழுதினார். இந்தக் கருத்தின்படி செல்லுமாறு தன் சீடர்களைப் பழக்கினார். சரபமுனிவர் இந்த மீமாம்சை நூலுக்கு உரை விளக்கம் செய்தார். பின்னர் மேலும் அதில் சிற்சில மாறுதல்கள் பாட்டாச்சாரியர் மற்றும் பிராபகர முனிவர்களால் அந்த மீமாம்சையில் செய்யப்பட்டது. எது எப்படியிருந்தாலும் கடவுள் என்ற ஒருவனின் தேவை கிடையாது என்பதில் மட்டும் முடிவாக இருந்தனர்.)

ஆண்கள் தவறு செய்தால் பெண் அதைத் தடுத்து அந்தத் தவறில் இருந்து திருத்த வேண்டும் என்பது கூட தர்மத்தின் வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் தாருகாவனத்து முனிபத்தினிகள் தங்கள் கணவன்மார் கருத்தை ஆதரித்தார்கள்., அவர்களுக்கு தங்கள் முனிவர்களின் ஆற்றல், அந்த ஆற்றல் மூலம் கிடைத்த பலன்கள் அதுவும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் சுகம் கிடைக்கும் வழிவகைகள் அனைத்தும் பிடித்துப் போய்விட்டன.

கற்பில் சிறந்தவர்கள் தாங்கள்தான்.. அந்தக் கற்பின் பலனாகவே தங்கள் கணவர்களுக்கு அத்தனை ஞானங்களும் கிடைக்கின்றன என்ற சிந்தனை அவர்கள் மனதில் வேகமாகப் பதிந்தது. அந்த கற்புக்கு கணவர்களான முனிவர்களே பயப்படும்போது, அந்த சிவனும் கேசவனும், அப்படி என யாராவது இருந்தால் கூட, பயப்படத்தான் வேண்டும்.. இந்த ஒரு நினைப்பு அவர்கள் கர்வத்தை மேலும் அதிகம் ஆக்கியது.

இறைவன் இந்தத் தாருகாவனத்து முனிவர்களுக்கும் முனி பத்தினிகளுக்கும் பாடம் புகட்ட முடிவு செய்தான். சிவன் அழகான ஆண் உருவெடுத்து, உடையில்லாமல், கையில் ஓடேந்தி ‘பிச்சை போடு பெண்ணே’ என்று அந்த முனிபத்தினிகளிடம் கேட்டுக் கொண்டே ‘பிட்சாண்டவனாய்’ அந்த வனத்தே நடை போட்டுச் செல்ல, சொக்கத் தங்கமாக மின்னிய அவன் உடல் வனப்பிலும், இளமையின் அழகிலும் மயங்கிய அந்த பத்தினிப்பெண்கள், தாங்கள் கற்புடைய பெண்டிர் என்ற நினைப்பையே இழந்து அவன் பின்னேயே சென்றார்கள்.

Mohini Kalugumalai.jpg
Mohini kaanchidevarajaswami.jpg

அதே போல மயக்கும் மோகினி உருவம் கொண்ட விஷ்ணு ஒய்யாரமாக முனிவர்கள் முன்னே வந்து அன்ன நடை போட்டு அசைந்தாடி செல்ல, அந்த அழகு மோகினியின் பின்னேயே முனிவர் கூட்டமும் தங்கள் மனங்களை சிதறவிட்டுக் கொண்டே சென்றது.. இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்தபோது உண்மை வெட்டவெளிச்சமாகியது. முனிபத்தினிகள் உண்மை நிலையறிந்து வெட்கத்தால் தலை குனிய ஆண்மக்களான முனிவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தில் ஆத்திரம்தான் வந்தது. உடனே ஒரு யக்ஞம் ஆரம்பித்து எரியும் தீயிலிருந்து கொடும் புலியை வரவழைத்து சிவன் மீது ஏவினர் (இந்த வேள்விக்குப் பெயர் அவிசார வேள்வி என்று சொல்வார்கள் - இது மிக மிகக் கொடிய முறையான வேள்வி, இதையே ராமாயண போரின்போது தன் கடைசிப் பிரயத்தனமாக இந்திரசித்து செய்யமுயன்ற போது, இந்த யாகத்தை எப்படியும் அழித்தே தீரவேண்டுமென்றும் இல்லையேல் அகில உலகத்துக்கும் ஆபத்து என்று எல்லாம் அறிந்த வீடணன் வேண்ட, அந்த யாகத்தையே அம்பு கொண்டு இராமன் அழித்தான் - யுத்தகாண்டம்)

இப்படிப்பட்ட கொடிய அவிசார யாகத்தீயிலிருந்து வெளிப்பட்டு முதலில் வந்த புலியைக் கொன்று அதன் தோலை இறைவன் தன் பொன்னார் மேனிக்கு ஆடையாகப் போட்டுக் கொண்டான். முனிவர்கள் விஷக்கொம்பு கொண்ட மானையும் கூரான மழுவையும் வேள்வித்தீயிலிருந்து அனுப்பினார்கள். அவைகளை அவன் அநாயாசமாகப் பிடித்து தன் கையில் வைத்துக் கொண்டான். விஷப்பாம்புகளை ஏவினர்.. உடல் முழுதும் சுற்றிக் கொண்டு நாகாபரணன் ஆனான். எதையும் செய்யத் தயங்காத முனிவர்கள், ஆத்திரத்தில் தாம் என்ன செய்கிறோம் என்பதையே உணராத முனிவர்கள், தாங்கள் செய்த வேள்வித்தீயையே அவன் மீது ஏவினர். அதையும் அவன் திருவோட்டில் பிடித்துக் கொண்டான். முனிவர்கள் கதறினர். காலில் விழுந்தனர்.

இந்த மான், மழு, தீயேந்தியதைப் பற்றி தேவாரத்திலும் சரி, திருவாசகத்திலும் சரி, நிறைய இடங்களில் சின்னச் சின்ன வரிகளாக வரும். ஒரு சில வரிகளை மட்டும் எடுத்துக் காட்டுகளாக:

‘மானை இடத்ததோர் கையன்’ (அப்பர் தேவாரம்); ‘பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கசைத்து’ (சுந்தரர் தேவாரம்) தம்பிரான் ஆவானும் தழல் ஏந்தும் கையானும்’,; மழுவாள்வலனொன்றேந்தி (திருஞானசம்பந்தர்) முன்னோன் காண்க, முழுதோன் காண்க, கானப்புலியுரி அரையோன் காண்க (மாணிக்கவாசகர்).

முனிவர்கள் இந்த மானிடம் தழைக்க வந்த மகாத்மாக்கள் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட முனிவர்களே தவறு செய்கிறபோது இறைவன் அவர்களைத் தண்டிக்காமல் பாடம் மட்டுமே புகட்டுகிறான். இந்தக் கருணை முனிவர்களுக்காகவோ அவர்களின் ஆற்றலுக்காகவோ அல்ல. மனிதர்களுக்காகவே, அவர்களின் முன்னோர்களான முனிவர்களின் மீது அவன் கருணை கொண்டு திருத்துகிறான் என்று கொள்ளவேண்டும். பக்தி அதுவும் இறைவன் மீது உள்ள பக்திதான் ஆதாரமானது. கதிரவனின் ஒளி போல, தீயின் சுடர் போல, மலரின் மணம் போல. பக்தியைப் பற்றி சொல்வார்கள். ஒளியில்லாமல் கதிரவன் தேவைப்படமாட்டான். சுடரும் சூடும் இல்லாவிட்டால் தீயேது? மணமில்லாத மலர் யாருக்கும் பயன் தராது. பக்திதான் அனைத்துக்கும் ஆதாரம். அந்த பக்தி கொண்டு பிட்சாண்டவரைப் பாருங்கள்.. அவன் மகத்துவம் தெரியும்.

திவாகர்
Vamsadhara.blogspot.com!

மறுமொழி அளிக்கவும் »



பல காலம் என் தாயகத்தில் வெட்டியாக கழித்த பின்னர், என் தாய்மொழின் அருமையை அறியாமல் இருந்த பொது ( கலை தாகம் அப்போதும் கொஞ்சம் இருந்தது ), திரு திவாகர் அவர்கள் என்னை மின்தமிழ் என்னும் ஒரு அரிய குழுமத்திற்கு அழைத்தார். அங்கே நான் என் தாய் மொழியை மீண்டும் கற்றேன், சிறுக சிறுக நடை பயிலும் குழந்தை போல முதலில் ஒரு சில வரிகள் மட்டும் சிற்பங்களை விளக்க இட்டு, பலரின் ஊக்குவிப்பால் பின்னர் சிற்பம், பக்தி இலக்கியம் என்று பலவிதமான துறைகளின் ஒற்றுமையை பற்றி எழுதினேன். அப்போது திரு கண்ணன் அவர்களை சந்தித்தேன், தமிழ் இணைய தளங்களில் மிகவும் பிரபலமானவர், எனினும் நான் எழுதும் சிறிய மடல்களை ரசித்தார், திருத்தினார், பல அரிய பாடல்களை தந்து உதவினார். நண்பர் அசோக் அவர்கள் திருக்குறுங்குடி சிற்பங்களின் படங்களை எனக்கு அனுப்பியவுடன், இந்த அருமையான சிற்பங்களை பற்றி எழுத திரு கண்ணன் அவர்களே சரி என பட்டது. கேட்டவுடன் ஒரே நாளில் இந்த அருமையான மடலை தந்தார் திரு கண்ணன்.

கல்லிலே சிலையை எல்லோரும் காண்கிறோம். ஆயினும் அதைக் கல்லிலே “கலை” என்று சிலராலேயே சொல்ல முடிகிறது. கலை என்பது மனோபாவம். ஒரு பட்டுப்பூச்சி மலரின் மீது நின்றது. அதைப்படமெடுத்தேன். அதன் அழகைக் கண்டவுடன் கவிதையாக ஒரு தலைப்புத் தோன்றியது, “பட்டாம்பூச்சி,பூவின் ஹைக்கூ” என்று. அதை வெறும் புகைப்படம் என்றும் சொல்லலாம், அல்லது அதன் அழகைக் கண்டு அது “கவிதை” என்றும் சொல்லலாம். எனவே கல்லிலே கலை வண்ணம் என்று காண்பது ஒரு மனோபாவம். கவிதா மனோபாவம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் புண்ணியவான்கள். இப்பதிவு காண்போர் புண்ணியவான்கள். இன்னொரு காரணத்திற்காகவும்!.

உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை
  வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென், 
குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே, 
    உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே?

என்று பேசுகிறது திருவாய்மொழி! இங்கும் மனோநிலை பற்றிய பேச்சுத்தான். உலகில் தற்பெருமை பேசாதோர் உண்டோ? சிலர் அடக்கம் காரணமாக அதிகம் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளாதிருந்தாலும் “தான்” உளன் எனும் அகந்தை என்றும் உண்டு. இறைவன் மனிதனைக் கேட்டானாம், “பிள்ளாய்! நீ என்னைச் சேர்ந்தவன்!” என்று. அதற்கு மனிதன் சொன்னானாம் “யார் சொன்னது? நான் “என்னைச்” சேர்ந்தவன்” என்று. அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த இழுபறி. நாம் நம்மைச் சேர்ந்தோரா? இல்லை பரம்பொருளைச் சேர்ந்தோரா? கோடானகோடி ஜென்மங்களின் நினைவாக நம்மை ஒரு “ஆளாக” கருதிவருகிறோம். அப்படியொன்று இல்லவே இல்லை என்கிறார் நம்மாழ்வார். இருப்பதெல்லாம் அவனே! என்கிறார்.
உண்மை என்பதும், மெய்ம்மை என்பதும் வேறெங்கும் இல்லை, “திருக்குறுங்குடியில்” குடிகொண்டு இருக்கிறது என்கிறார். அந்த மெய்மையைக் காணவாவது நாம் திருக்குறுங்குடி செல்ல வேண்டாமா?

நாரணனின் அவதாரங்கள் பத்து என்பது பிரபலம். ஆனால் உண்மையில் அவை எண்ணற்றவை. இருப்பினும், ஆழ்வார்களின் மனத்தைக்கவர்ந்த அவதாரங்கள் என்று சில உள. அதில் வாமனனாய், குறளுருவாய் வந்து பின் திருவிக்கிரமனாகி ஏழுலகும் அளந்த கதை திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது!

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா
 மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
 அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில்
 வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று
 மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே
Thirukurungudi.jpg
Thirukurungudi2.jpg
unfinsihed gopuram.jpg

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த “திருநெடுந்தாண்டகம்” எனும் கிரந்தத்தில் மூவுலகும் கடந்து, அதற்கு அப்பாலும் நிற்கும் முதல்வா! என்று நாரணனைப் போற்றுகின்றார். கஜேந்திர மோட்சத்தில் யானை “ஆதிமூலமே” என்று கூவுகிறது. கடவுள் வருவதற்கு முன் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், கிங்கரர்களும், மும்மூர்த்திகளும் வந்து விடுகின்றனர். ஏன்?
எல்லோருக்கும் தான் ஆதிமுதல் அல்ல என்பது தெரியும். எனவே, யார் அந்த “ஆதிமூலம்”? முதல் வித்து? என்று அறிய ஆவல். அப்போது தோன்றுகிறான் எம்பெருமான் கருட வாகனனாக! தனது வில்லும், வாளும், தண்டும், சக்கரமும், சங்கும் தரிக்க! இதை நம்மாழ்வாரும் கண்டு ரசிக்கிறார். இந்த அழகை சிற்பியும் கண்டு ஆனந்திக்க மிக, மிக அழகான சிலைகளை வடித்துத்
தந்துவிடுகிறான். இச்சிலைகளைக் காணும்போது கஜேந்திரனின் மனோநிலை நமக்கு வரவேண்டும். பணிவுடன் வணங்கும் பக்குவம் வரவேண்டும். தான் எனும் ஆணவம் நிற்கும் போது இரணியனுக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் நிகழும். அப்படிப்பட்ட மானிடரை சிறு கவிதை கொண்டு கூட பாட மாட்டேன் என்று கோபமுடன் சொல்கிறார் நம்மாழ்வார்.

நின்றிடும் திசைக்கும் நையுமென்று
 அன்னைய ரும்முனிதிர்,
குன்ற மாடத் திருக்குறுங்குடி
 நம்பியை நான்கண்டபின்,
வென்றி வில்லும் தண்டும்
 வாளும் சக்கரமும்சங்கமும்,
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா
 நெஞ்சுள்ளும் நீங்காவே

அந்த ஆதீமூலத்தைக் கண்ணாறக்கண்டபின் அது நம் நெஞ்சை விட்டுக்கூட நீங்குமோ? நீங்கக்கூடாது என்பதில் நம் சிற்பியும் கவனமாக இருக்கிறார். தெய்வீக அழகை தெய்வீக சிற்பமாக வடித்துவிட்டால்? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாயினும் கண்டு, ரசித்து, உள்ளத்தில் கொள்ள முடியுமே!

திருக்குறுங்குடி நம்பி திருவிக்கிரமன் மட்டுமா? அப்பாலுக்கு அப்பாலாய் உள்ள பரமூர்த்தி மட்டுமா? நம்மைப் போன்ற ஏழை எளியோருக்கு அது எட்டுமா? எட்டும் என்கிறான் சிற்பி. அந்த பரவாசுதேவனே பூவுலகில் கண்ணனாய்

Govardhana Giri.jpg
krishna flute.jpg
vastra haranam.jpg
vennai krishna.jpg

வந்துள்ளான். வெண்ணெய் திருடும் குள்ளனாய், கோபாலனாய், நவநீத சோரனாக!!

உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
 உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
 கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்
 சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
 ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே

இக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஆனந்தக் கூத்தாடுகிறார் பெரியாழ்வார். இதைக் கண்டவர் மகிழ்கின்றனர். கற்றவர் இதன் தத்துவம் அறிந்து தெளிவுறுகின்றனர். அத்தெய்வம் திருகுறுங்குடியாய் நிற்பதாகச் சொல்கிறது பெரியாழ்வார் திருமொழி.

narasihmar.jpg
tirukurungdui tiruvikrama.jpg
tiruvikrama.jpg

அப்படியெனில்? இங்கு நீங்கள் காண்பது சிற்பமல்ல. தெய்வம். கண்ணுறும் இக்காட்சியே தெய்வ தரிசனம்! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? தெய்வ தரிசனம் இவ்வளவு எளிதா? எளிதுதான். விண்ணிருந்து மண்ணிற்கு வரும் நீர்மையே அதற்கு அத்தாட்சி. அவன் இப்படிச் சிலையாய் நிற்பதும் ஓர் அத்தாட்சி! வாழ்க.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 3  1  2  3 »