Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘காஞ்சிபுரம்’

ஆயிரம் ஆலயங்களை கொண்ட ஊர் என்ற பெயர் கொண்ட ஊர் எது தெரியுமா. காஞ்சி தான். அது வெறும் பகட்டு அல்ல - காஞ்சியில் எந்த தெருவில், எந்த இடத்தில நின்று பார்த்தாலும் குறைந்தது மூன்று ஆலயங்களாவது தெரியும். இப்படி குவியும் எண்ணிக்கையில் தனியாக நிற்கும் ஆலயம் ராஜ சிம்ம பல்லவனது காஞ்சி கைலாசநாதர் - காலத்தால் மிகவும் பழமையான கட்டுமானக் கோயில் என்ற முறையில் மட்டும் அல்ல, சிற்பக்கலை பல்லவ சிற்பிகளின் கைத்திறத்தின் மகிமையில் அடைந்த உன்னத நிலையின் பிரதிபலிப்பு இந்த கலைக் கூடம். அந்த தனித் தன்மையை ஆலயத்தினுள் இருக்கும் ஒவ்வொரு சிற்பத்திலும் நாம் காணலாம். நாம் இன்று பார்க்கும் பாற்கடல் காட்சியும் அதை போலவே வேறு எங்கும் காண இயலாத ஒரு காட்சி.

Kailasantha+sculpture

பொதுவாகவே பாற்கடல் கடையும் காட்சியை விளக்கும் சிற்பங்களை இந்தியாவில் பார்ப்பது அரிது. கம்போடியா அங்கோர் வாட்டில் மிக அருமையான ஒரு சிற்பம் இருக்கிறது. அதே போல அதனை ஒட்டிய காலத்தில் அருகில் சில இடங்களில் இந்த காட்சி உள்ளது. பொதுவாககம்போடியா வடிவங்களில் பெருமாளை முழு உருவமாகவும் அவதார ரூபமான கூர்ம வடிவமாகவும் இரு வடிவங்களாக இருக்கின்றன. ( பாங்காக் விமான நிலைய நவீன சிற்பம் கூட இது போல தான் உள்ளது ) மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும் அசுரகளும் இரு புறம் நின்று கடையும் காட்சி அற்புதம்.

எனினும் இந்த காஞ்சி கைலாசநாதர் வடிவம் மிகவும் விசித்திரமாக உள்ளது. இங்கே கூர்ம வடிவம் சித்தரிக்கப்படவில்லை.

churning+kanchi

நடுவில் இருக்கும் எட்டு கைகளை கொண்ட பெருமாள் உருவம் - ஒரு கையில் சங்கு மற்றொரு கையில் சக்கரம் என்று கம்பீரமாக உள்ளது.

discus+conch
discus+conch+offset

எனினும் பெருமாள் சிற்பத்தின் நடு இடத்தை வகிக்காமல் ஒரு பக்கமாகவே இருப்பதால் , அவர் சாய்ந்து அல்லது சாயாமல் பிடித்து நிற்கும் இடத்தை நாம் ஆராய வேண்டும்.

main+act
vishnu

அவர் நிற்கும் பாணியும் முக்கியம். சாதித்து விட்டு நிற்கும் ஒரு வெற்றி பரவசம் தெரிகிறது.

notice+4+hands
notice+posture

அடியில் நாக அரசன் - மந்தார மலையை மத்தாக கொண்டு கடைய உதவிய கயிறாக வாசுகி.

vasuki

அப்படி என்றால் பெருமாள் தூக்கிப் பிடிக்கும் தூண் போன்ற வஸ்து தான் மந்தார மலையாக இருக்க வேண்டும். மத்து போன்றே இருக்கிறதே !

mount+madhara

மந்தார மலையில் ஒரு பறக்கும் உருவம் கையில் எதையோ ஏந்தி வருகிறது.

dhanvantari+nectar+pot

அருகில் சென்று பார்ப்போம்.

closeup+dhanvatari+nectar+pot

ஆஹா, அமிர்த கலசத்தை ஏந்தி வரும் தன்வந்தரி. காரியம் முடிந்து விட்டது. இதனுடன் பல அற்புத வஸ்துகள் வெளியில் வந்தன என்று நாம் அறிகிறோம். கௌஸ்துபம் என்ற கல் பெருமாளின் நெஞ்சை அலங்கரிக்கும் நகையாக மாறியது, காமதேனு, கல்பவிருக்ஷம்,ஐராவதம் என்ற வெள்ளை யானை, சில குறிப்புகள் படி பெருமாளின் சங்கு, சக்கரம் மற்றும் உச்சைஷ்ராவாஸ் என்ற ஏழு தலை வெள்​ளைப் புரவியும் வந்ததாம்.
கைலாசநாதர் சிற்பங்கள் இப்போதே அழகு, அவை வடித்தபோது மேலே அழகாக பூசப்பட்டு வண்ணம் தீட்டி இருக்கக் கூடும். இன்றோ அவை மிகவும் சிதைந்து இருக்கின்றன - நம்மால் பல குறிப்புகளை பார்க்க இயலவில்லை. எனினும் ஒரு பக்கத்தில் ஒரு புரவி உள்ளது. இந்த புரவியின் வெள்ளை நிறத்துக்கும் அதன் வாலுக்கும் இன்னொரு கதை உண்டு. அதை வேறொரு தினம் பார்ப்போம்.

notice+horse+in+corner
ucchaishravas

இப்போது புரிகிறது - வேலை முடிந்து விட்டது. அதனால் தான் பெருமாள் தன் சுய ரூபத்தில் அழகாக நின்று அனைவரின் புகழாரத்தை வாங்கிக் கொண்டு சிரிக்கிறார் போல.

படங்களுக்கு நன்றி : திரு அசோக் கிருஷ்ணசுவாமி

மறுமொழி அளிக்கவும் »

நமது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு இந்த தளத்தில் திரு கிஃப்ட் சிரோமனி அவர்களது
தாக்கம் பற்றி தெரிந்திருக்கும்

பல்லவ துவாரபாலகர்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது?

அந்த பதிவில் நான் இவ்வாறு எழுதி இருந்தேன்

” நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

எனது பாக்கியம் சென்ற மாதம் சென்னை சென்றபோது அவரது மனைவியார் திருமதி ராணி சிரோமனி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது கணவரின் நெருங்கிய நண்பரான திரு மைக்கல் லாக்வூட் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவரும் மிகுந்த ஆர்வத்துடன் துவங்கினார் ” எனக்கு மாமல்லபுரத்தின் ஜாலங்களை அறிமுகப் படுத்தியவர் திரு கிஃப்ட் சிரோமனி ” என்று..

அவர் தனது ஆராய்ச்சிக் குறிப்புகள், நூல்கள் அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள அனுமதி தந்துள்ளார். இதற்காக நாம் திரு லாக்வூட் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம். இதோ அவர் தன இளமை பருவத்தில் வல்லம் குடைவரை அருகில். 1969 ஆம் ஆண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் (அப்போது அவருக்கு வயது முப்பத்தி ஆறு ) - நான் இன்னும் பிறக்க கூட இல்லை !

Mr+Lockwood+vallam+caves+1969

அவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள படியுங்கள்

Dr. Lockwood

அறிமுகம் கிடைத்தவுடன் மிகுந்த ஆர்வத்துடன் பல பல்லவர் சம்மந்தமுள்ள பதிவுகளை அவருக்கு அனுப்பினேன். அவரும் பொறுமையாக படித்து தன் கருத்துகளைத் தந்தார். அப்படி ஒரு பதிவில் நாங்கள் சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி என்ற தொடருக்காக திருக்கழுக்குன்றம் சென்றபோது அங்குள்ள ஒரு சிற்பம் பற்றி எடுத்துரைத்தார்.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி - நான்காம் பாகம்

பல காலம் முன்னர் நடந்த விவாதம் பற்றி தெரியாமல், வெளிச்சுற்றில் இருக்கும் இந்த சிற்பத்தை ரிஷபவாஹன சிவன் என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். இதனை பற்றி விளக்கம் தரும் வகையில் தனது பல்லவ கலை என்னும் நூலில் உள்ள குறிப்புகளை திரு லாக் வூட் எனக்கு அனுப்பி வைத்தார். கருவறையின் உள்ள சுவற்றிலும் இதே சிற்பம் இருப்பதாகவும், வெளியில் இருப்பதை விட இன்னும் நல்ல நிலைமையில் இருப்பதால் நன்றாக ஆராய முடியும் என்றும் கூறினார்

tirukazhugukundram+veenadari

அவரது குறிப்பைப் படிக்குபோது மல்லை கடற்கரை கோயிலில் உள்ள ஒரு சிறு ஆலயத்தில் உள்ளே இருக்கும் சிற்பமும் இதே வடிவம் என்ற அவரது கருத்து தெளிவானது.

shoretemple+cylindrical+shrine

நண்பர் அசோக் அவர்களது படங்கள் கொண்டு நாம் இன்னும் நன்றாகப் பார்க்க முடிகிறது

sculpture+inside+cylindrical+shrine

இதைப் பார்த்தவுடன் இது சிவன், வெறும் ரிஷப வாஹன சிவன் மட்டும் இல்லை வீணாதாரா என்று சொன்னால் - அப்படியே ஒப்புக்கொண்டு இருப்பேன். ஆனால் திரு லாக்வூட் அவர்கள் இது ஒரு அர்த்தநாரி வடிவம் என்று கூறுகிறார். பல்லவ அரசன் ராஜசிம்ஹ பல்லவன் தனக்கென்று ஒரு சில சிறப்பு சிற்பங்களை வைத்துள்ளான். அவற்றை நாம் மல்லை ஓலக்கனேஸ்வர கோயில், கடற்கரை கோயில் மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் என்று எங்கோ ஓரிடத்தில் திரும்ப திரும்ப பார்க்க இயலும்.

ஓலக்கனேஸ்வர ஆலயத்தில் இந்த சிற்பம் இல்லை. கடற்கரைக் கோயிலுக்கு செல்லும் முன்னர் கஞ்சி கைலாயநாதர் கோயில் சென்று தேடுவோம். அங்கே ஒரு வீணாதாரா சிற்பமும் ஒரு வீணாதாரா அர்த்தனாரி வடிவங்களும் உள்ளன.

படங்களுக்கு நன்றி திரு சௌராப் மற்றும் கிருஷ்ணமுர்த்தி மாமா

kanchi+kailasanathar+veenadari+ardanari
kanchi+kailasanathar+venaadrai+ardhanari1
kanchi+kailasantha+veenadari

நாம் முன்னரே அர்த்தனாரி வடிவத்தை பற்றிய பதிவில் எப்படி இரு பாகங்களும் வேறு படுகின்றன என்று பார்தோம்.

சிற்பிக்கு “விடை”யே விடை

இப்போது கைலாயநாதர் சிற்ப்பத்தை அருகில் சென்று பார்ப்போம்.

closeup+veenadari+ardhanari+kanchi
differentiation
face+of+ardhanari

அர்த்தனாரி என்று தெளிவாகிய பின்னர் வீணையை பார்ப்போம்.

the+veena

சுமார் எட்டாம் நூற்றாண்டில் வீணை எப்படி இருந்தது என்று நாம் அறியமுடிகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று மேலே இருக்கும் பாகம் குடம் போல இல்லாமல் , திருப்பி பொருத்தப்பட்ட குவளை போல உள்ளது. இதனை மார்புடன் அணைத்து வாத்தியத்தை வாசிக்கும் பொது கலைஞன் இசையுடன் எப்படி இணைத்து வாசித்து இருப்பான் என்று யூகிக்க முடிகிறது. இந்த விதமான வாத்தியம் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். புதுகோட்டை பைரவர் ( நன்றி காத்தி ), பாதாமி அர்த்தனாரி ( நன்றி பிகாசா ) , நேபாளத்து சரஸ்வதி ( நன்றி காலதர்ஷன )

Pudukkottai+museum+veenadari
badami+cave1+veenadari+ardhanari
closeup+badami
sarasvati1

தற்போதைய வீணை இப்படி இருக்கிறது. மேலே இருக்கும் குடம் போன்ற பகுதிக்கு சரோக்கை என்று பெயர், ஆனால் அதற்க்கு இப்போது வேலை உண்டா என்று தெரிய வில்லை.

saraswati-veena

ஆனால் அந்நாளைய வீணையை போல இந்த திருப்பி பொருத்தப்பட்ட குவளை போன்ற வீணைகள் இன்றும் இருக்கின்றனவா ? அதை மீட்டும் பொது இசையுடன் கலக்கும் உணர்ச்சிகள் …

சரி, மீண்டும் நமது சிற்ப புதிருக்கு வருவோம். இந்த சிற்பம் ஒரு வீணாதாரா அர்த்தனாரி ரிஷபவாகன சிவன் என்று சொல்கிறார் திரு லாக்வூட். அதற்கு சான்றாக இந்த இரு படங்களையும் தருகிறார்.

photoA
photoB

படம் A கைலாயநாதர் ஆலயத்தின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது. பார்ப்பதற்கு மல்லை மற்றும் திருக்கழுக்குன்றம் சிற்பம் போலவே உள்ளது.

படம் B வீணாதாரா அர்ததனாரி ஆனால் இங்கு ரிஷப வாஹனம் இல்லை அதற்கு பதில் அரியணையில் அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. இந்த சிற்பம் நான்கு புறமும் சிற்பம் கொண்ட பாறையின் ஒரு பக்கத்தில் உள்ளது. இந்த சிற்பம் மல்லை கடற்கரை கோயிலின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது.

மேலும் அவர் கூறுகையில் முன்னர் பார்த்த கைலாயநாதர் வீணாதாரா அர்த்தனாரி வடிவமும் அரியணை மீது அமர்ந்த வண்ணம் உள்ளது. இது மேற்கு புறம் வெளிச்சுவரில் உள்ளது

முடிவாக இந்த புதிரின் விடை மூன்று இடங்களில் உள்ளது. ஒன்று திருக்கழுகுன்றம் கருவறை சிற்பம் - கைத்தேர்ந்த ஓவியர் யாரையாவது வைத்து நேரில் பார்த்து வரையவைத்துப் பார்க்கலாம். மற்ற இரண்டு சிற்பங்களும் தற்போது எங்கே உள்ளன.. தேடிப்பார்க்க வேண்டும்.. படங்கள் எடுத்த ஆண்டு 1969.

பல்லவ கலைகள் நூல் 1997 ஆம் ஆண்டு மறுபதிவின் பொது திரு லாக்வூட் எழுதிய குறிப்பு

இரு சிற்பங்களும் தற்போது தொல்லியல் துறை மல்லை அருங்காட்சியகத்தில் உள்ளன !!

தற்போது இந்த இரு சிற்பங்களும் எங்கு உள்ளன என்று ஆர்வலர் தேடி படம் பிடித்து தர வேண்டுகிறோம்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 8  1  2  3  4  5 » ...  Last »