Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘கண்ணன்’

மக்களே, இன்று ஒரு புதிய பதிவு - தனது பல்வேறு ஆற்றல்களால் அசத்தும் தோழி திருமதி பர்வத வர்தினி முரளி கிருஷ்ணன் அவர்கள் இன்று முதல் முறையாக நமது தளத்தில் ஒரு பதிவை எழுதுகிறார். சமீப காலமாக அவர் ஒரு தளம் நிறுவி அபாரமாக எழுதி வருகிறார். பொன்னியின் செல்வி சென்ற பெயரில் இயங்கும் அந்த தளத்தைக் கண்ட பின்னரே இந்த பொன்னியின் செல்வியை திருமால்புரம் ஆலயத்தில் கண்ட இரு அற்புத கண்ணன் வடிவங்களுக்கு வர்ணனை எழுத அழைத்தேன். அவரும் உடனே பணியை ஏற்று அழகாக செய்துள்ளார். இதோ பதிவு …

நான் ஒரு பட்டயக் கணக்கர் (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்). குவைத்தில் வசித்து வருகிறேன். தற்போது முழுநேர இல்லத்தரசி. அமரர் கல்கி அவர்களின் அமரகாவியமான பொன்னியின் செல்வனைப் படித்து, அந்த ஈடுபாட்டில் இணையத்தில் தேட, பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை என்ற யாஹூ குழுமம் பற்றி அறிந்து அதில் இணைந்து கொண்டேன். அந்தக் குழுமத்தின் மூலம் பல நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. அவ்வாறே “கல்லிலே கலைவண்ணம் கண்டோம்” எனும் இந்த வலைதளமும் திரு. விஜய் அவர்களும் அறிமுகமானார்கள். சிற்பங்களைப் பற்றி பல தகவல்களை எளிமையான முறையில் எடுத்துக்கூறும் இந்த வலைதளத்தைப் பற்றி அறிந்துகொண்டதிலிருந்து நான் இங்கு வாடிக்கையான வாசகி.

நமது நண்பர் திரு. விஜய் அவர்கள் ஒரு சிற்பத்தின் புகைப்படத்தை அனுப்பி இதைப் பற்றி ஒரு கெஸ்ட் போஸ்ட் செய்கிறீர்களா என்று கேட்டார். என் மனதினுள் தயக்கம். ஐயா, சிற்பத்தைப் பற்றி நீங்கள் எழுதினால் நன்றாயிருக்கும். எனக்கொன்றும் தெரியாதே. நான் என்ன எழுத என்று கேட்டேன். இல்லை, நீங்கள் அந்தப் சிற்பத்தின் படத்தைப் பாருங்கள். பிறகு சொல்லுங்கள் என்றார். சரி ஆகட்டும் என்றேன். அந்த சிற்பத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் பரம்பொருளாகிய கண்ணன் குழந்தையாக காட்சி தரும் சிற்பம் யாருக்குத் தான் பிடிக்காது. எனவே, கண்ணனின் திருவுளமாகவே இதை ஏற்றுக் கொண்டு, இப்பதிவினை எழுதுகிறேன்.

tirumalpuram+temple

நான் சொல்லப் போவதென்னமோ கதை தான். அதுவும் நாம் அனைவரும் அறிந்த கதை. ஆம், அந்த சிற்பம் சொல்லும் கதை.

location

கண்ணன் குறும்பின் மொத்த உருவம். தன் வீட்டில் பானைகளிலும் உறியிலும் அத்தனை வெண்ணெய் இருக்க, கோகுலத்தில் இருக்கும் பிறரின் வீட்டிற்கு சென்று வெண்ணெய் உண்ட கண்ணன். இதைக் கண்டு கோகுலத்துப் பெண்கள் எல்லாம் யசோதையிடம் கண்ணனை குறை கூறி முறையிட, யசோதைக்கு கோபம் வருகிறது. அவள் கோபமாய் இருப்பதை அறிந்து, கண்ணன் அவள் எதிரே வர மறுக்கிறான். உடனே யசோதை, மிக ஆசையாக கண்ணனை அழைத்து, உனக்கு பாலூட்டுகிறேன் வா என்று அழைக்கிறாள். அவன் அருகில் வந்ததும், சட்டென்று ஒரு தாம்பு கயிறை எடுத்து அவனை ஒரு பெரிய மர உரலோடு கட்டி விடுகிறாள். வயிற்றில் தாம்புக் கயிற்றால் கட்டப்பட்டதால் கண்ணன் தாமோதரன் (தாம்பு + உதரன்) என்று அழைக்கப்படுகிறான்.


அதிரும் கடல்நிற வண்ணனைஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்து
பதரப்படாமே பழந்தாம் பாலார்த்த
உதரம் இருந்தவாகாணீரே ஒளிவளையீர் வந்து காணீரே.


(பெரியாழ்வார் திருமொழி முதற்பத்து இரண்டாம் திருமொழி சீதக்கடல் – பாடல் 9)

அலைகடல் ஆர்ப்பரிப்பதைப் போன்று மிகவும் குறும்பு செய்துகொண்டிருந்த அலைகடல் வண்ண தேகம் கொண்ட கண்ணனை, இனிமையான தாய்ப்பால் கொடுப்பதாக ஏமாற்றித் தன்னருகே அழைத்த யசோதை அன்னை, அவனை அருகிலிருந்த ஒரு பழைய கயிற்றால் கட்டி வைத்தாள். கண்ணனின் தாம்பு கயிற்றினால் ஏற்பட்ட தழும்புடன் கூடிய வயிற்றழகை வந்து பாருங்கள். ஒளிவீசும் வளையல்கள் அணிந்துள்ள பெண்களே, தழும்புடன் கூடிய அழகிய வயிற்றை வந்து பாருங்கள்!

குழந்தைகள் என்றும் விஷமம் செய்வதும் பெற்றோர்கள் கண்டிப்பதும் தொன்று தொட்டு இருப்பவை போல !! இதோ சிற்பம்

krishna+tied+to+ural

அத்துடன் முடியவில்லை கண்ணனின் லீலை. யசோதை இவ்வாறு கண்ணனை உரலில் கட்டிவிட்டு வீட்டினுள் சென்று விடுகிறாள். சிறிது நேரம் சும்மா இருந்தான் கண்ணன். பிறகு அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உரலோடு சேர்த்து இழுத்துக் கொண்டே வாசல் வரை வந்தான். இந்த கட்டிலிருந்து வெளிவர ஒரு உபாயம் செய்தான். வீட்டு வாசலில் இருந்த இரு மருத மரங்களைக் கண்டான். ஆகா இந்த மரங்களின் இடையில் நான் புகுந்து வெளிவந்தால், உரல் வெளிவர முடியாமல் கயிறு தானே அறுந்து விடும் என்று எண்ணினான். எனவே, உரலை இழுத்துக் கொண்டு இரு மரங்களுக்கு இடையில் புகுந்தான். தன் பலம் கொண்ட மட்டும் உரலை இழுத்தான். ஆனால், என்ன அதிசயம். அவனது பலத்துக்குக் கட்டுப்பட்டு அந்த இரு மரங்களும் வீழ்ந்தன. வீழ்ந்த்து மட்டுமின்றி இரு தேவ குமாரர்கள் அந்த மரங்களிலிருந்து எழுந்தனர்.

நளகூபன், மணிக்ரீவன் என்ற அவ்விருவரும் குபேரனின் பிள்ளைகள். பெருஞ்செல்வத்தால் ஆணவம் கொண்டிருந்த அவர்கள் இருவரும் கந்தர்வப் பெண்களுடன் ஒரு தடாகத்தில் நீர் விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது தற்செயலாக நாரத முனிவர் அவ்விடத்தைக் கடக்க நேரிட்டது. அவரைக் கண்டதும் அந்த கந்தர்வ பெண்கள் நடுநடுங்கி விரைவில் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டு அவரை வணங்கி நின்றனர். ஆனால் குபேரனின் பிள்ளைகளோ, மிதமிஞ்சிய மது மயக்கத்தாலும் தங்கள் ஆணவத்தாலும் நாரதர் வந்ததையே கவனியாமலும் தங்கள் ஆடைகளை அணியாமலும் இருந்தனர். இதைக் கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக மாறக் கடவது என்று சாபமளித்தார். அவரது சாபத்தைக் கேட்டு தன் நிலையறிந்த இருவரும் நாரதரிடம் மன்னிப்புக் கேட்டு, தங்கள் சாபத்திற்கு விமோசனத்தை அருளும்படி வேண்டினர். அவர்கள்பால் இரக்கம் கொண்ட முனிவரும், ஸ்ரீமந்நாராயணன் பூமியில் கண்ணனாக அவதாரம் எடுக்கும்போது உங்களுக்கும் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார்.

இவையனைத்தையும் அறிந்தே கண்ணன் அந்த மருத மரங்களை வீழ்த்தி, அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தான். குபேரனின் குமாரர்களும், கண்ணனை வணங்கி தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்துஅங்கு
இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்பு இருந்தவாகாணீரே சேயிழையீர் வந்துகாணீரே

(பெரியாழ்வார் திருமொழி முதற்பத்து இரண்டாம் திருமொழி சீதக்கடல் – பாடல் 10)

தான் செய்த குறும்புத்தனத்திற்காக யசோதையால் மிகப் பெரிய உரலில் கட்டப்பட்டு பின் அந்த உரலை இழுத்துச் சென்று, அங்கிருந்த இரண்டு பெரிய மருத மரங்களை முறித்துவிட்ட இந்த பாலகனின் திருமார்பையும் திருமார்பில் மின்னுகின்ற திருமகள், கௌஸ்துபம் எனும் இரத்தினமணி, திருத்துழாய் மாலை ஆகியவற்றையும் வந்து பாருங்கள். செம்மையுடைய அணிகலன்கள் அணிந்திருப்பவரே, வந்து பாருங்கள்.

மேலும், அருணகிரிநாதர் தனது திருப்புகழில்

பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபர நண்ப ரன்பின் மருகோனே

என்று பாடுகிறார்.

உரலுடன் கட்டப்பட்டு, அதனை இழுத்து வரும் கண்ணனை பாருங்கள்.

tirumalpuram+temple
tirumalpuram
tirumalpuram+location

இம்மாதிரி நுண்ணிய வேலைபாடு மிக்க சிற்ப்பத்தை தேடுவதிலும் ஒரு ஆனந்தம் உண்டு

miniature+sculpture
size

எவ்வளவு சிறியது பாருங்கள். அதவும் மரங்களின் அடியில் முகங்கள் - மருத மரங்களாய் நின்ற நளகூபனுக்கும் மணிக்ரீவனுக்கும் சாப விமோசனம் பெறுகிறார்கள் …அற்புதம்

do+you+notice+a+face
krishna+destroying+2+tree demons
notice+the+face

. மிகச் சிறிய சிற்பத்திற்குள் எத்தகைய தெய்வீக கதைகளை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்!

மறுமொழி அளிக்கவும் »

நண்பர்களே, இன்று நமது ‘கல்லிலே கலைவண்ணத்துக்கு’ முதல் ஆண்டு நிறைவு நாள். சரியாக ஓராண்டுக்கு முன், வறண்ட பூமியில் விழுந்த விதைக்கு இயற்கை தந்த அரவணைப்பினால் மளமளவென வளரும் விருக்ஷம் போல நல்ல உள்ளங்கள் பலரின் தூண்டுதலால் ஓங்கி வளர்ந்துள்ளது. தயங்கி தயங்கி நடை பயிலும் சிறு குழந்தை போல நாங்கள் எடுத்து வைத்த கால் நண்பர் பலரின் உதவியுடன் எழுந்து ஓடும் பிள்ளையாய் இன்று நூற்றைம்பது பதிவுகளாய் தமிழிலும் ஆங்கிலத்திலும் மலர்ந்துள்ளது.

தமிழகக் கோயில் கலையோடு மட்டும் நின்றுவிடாமல், அதுவும் கல்லோவியங்களோடு மட்டும் நிற்காமல், இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா என்றும் சிற்பம், ஓவியம், குடவரை என்று எங்கும் உலாவி, பல சுவையான கலைபெட்டகங்களை நம் கண்முன்னே நிறுத்தி, அதன் மூலம் இன்னும் பல புதுப்புது உறவுகளை உருவாக்கி தளத்தின் தரத்தையும், இடுகைகளின் அழகையும் மெருகு சேர்த்துள்ளோம். எங்கள் உயரிய நோக்கம் ஒன்றே, எங்கள் தளத்திற்கு வரும் ஒவ்வொரு நண்பரும் நம் கலையை ரசிக்க, அதன் பால் காதல் கொள்ளச் செய்ய வேண்டும், இதற்கு இந்த துறையின் வல்லுனர்கள் பலரிடம் கலந்துரையாடி, பல நூல்களை சேகரித்து, அதில் இருக்கும் கருத்துக்களை பாமரனும் புரிந்துகொள்ளும் பாணியில் படைக்க வேண்டும் என்பதே.

உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் நாங்கள் இந்த இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து நுழைகின்றோம். இந்த இரண்டாம் ஆண்டு விழாவில் இன்று மீண்டும் ஒரு சிறப்பு பதிவு.

இந்தப் பதிவு உருவான கதையும் மிகவும் சுவாரசியமானது, முந்தைய பதிவில் உள்ள சிலை பற்றி நண்பர் வைரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, செப்பு படிமங்களில் வெகு நாட்களாக இருந்த சந்தேகம் வெளிவந்தது. இரண்டு சிலைகள் - பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பதால், பலருக்கும் ஐயம் தரும் வடிவங்கள். பால கண்ணன் மற்றும் திருஞானசம்பந்தர் சம்பந்தப்பட்ட சோழர்கால சிலைகளே இவைகள். கைதேர்ந்த வல்லுனர்களும் பல அருங்காட்சியகங்களுமே குழம்பி, திகைத்து, எதற்கு வம்பு என்று இரு பெயர்களையும் பெயர்ப்பலகையில் இட்டு தப்பிக்க பார்க்கும் புதிர் இந்த வடிவங்கள். இதோ தஞ்சை அருங்காட்சியகத்தில் அடுத்து அடுத்து இருக்கும் சிலைகள் ( நன்றி சதீஷ் )

2 krishna and 1 sambandar - tanjore

அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. நீங்களே பாருங்கள். முதல் பார்வையில் இரு வடிவங்களுக்கும் குமுதம் புதிர் போல ஆறு வித்தியாசங்கள் போட்டி வைக்கலாம் போல உள்ளது.

Dancing-Balakrishna Michael C. Carlos Museum of Emory University
freer gallery sambandhar

ஆனால் இங்கே தான் கலை வல்லுனர்களின் திறன் வெளி வருகிறது. அதுவும் வெண்கல/செப்புச் சிலைகளை பற்றிய வல்லுநர் என்றால் முதலில் நினைவுக்கு வரும் பெயர் - முனைவர் திரு நாகசாமி அவர்கள். எங்கள் பாக்கியம், அவர்களின் அறிமுகம் ஏற்கனவே நண்பர் சுந்தர் பரத்வாஜ் மூலம் கிடைத்ததால், அவரிடமே ஐயத்தைக் கேட்டோம். அவரும், உடனே பதில் அளித்தார் - சான்றோர் எப்போதும் சான்றோரே!! அவர் அளித்த தெளிவுரையே இந்த பதிவு.

சரி, மீண்டும் இரு உருவங்களை பார்ப்போம். வலது கையின் சித்தரிப்பில் உள்ள வித்தியாசத்தை கூர்ந்து பாருங்கள்!.

Dancing-Balakrishna Michael C. Carlos Museum of Emory University

பால கண்ணன் சிலைக்கு வருவோம். விடை கண்ணன் வலது மார்பில் உள்ளது. ஆம்! முக்கோண வடிவில் ஸ்ரீவத்சம் தெரிகிறதா? கேள்விக்கு இடமே இல்லை, இது கண்ணனே!. வலது கரம் அபய ஹஸ்தம், தன்னிடம் அடைக்கலம் நாடும் பக்தரை ரக்ஷிக்கும் பாணி.

இப்போது அடுத்த சிலை. ( நன்றி நண்பர்கள் சதீஷ் சிங்கை மற்றும் ஸ்டூவர்ட் லீ சென்னை அருங்காட்சியக - அற்புத புகைப்படங்களுக்கு )

sambandar sin musuem
chennai museum 3
watch the right hand

இந்த வடிவம், சோழர் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிலை. சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர் - சைவ நெறியில் மூழ்கி இருந்த சோழர்களின் குலக்கொடி பேரரசன் ராஜ ராஜன் கண்டெடுத்த ( திருமுறை கண்ட சோழன் ) திருமுறைகளில், பின்னாளில் அவை தொகுக்கப்பட்டபோது, முதல்வராக போற்றப்பட்டு, முதல் மறை, முதல் தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் சிலை!. அவர் பாடிய முதல் பதிகத்தின் காட்சியையே இந்த சிலை குறிக்கிறது.

இவரது தந்தையார் சிவபாதஹிருதயர், தாயார் இசைஞானியார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார்.
தோடுடைய செவியன்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

இந்த காட்சியை படமாக காண


தோடுடைய செவியன்

காட்சி புரிந்ததா, இப்போது இதனை சிற்பி வடிக்கிறான். அதுவே இந்த சிலை யாரை குறிக்கிறது என்பதற்கு விடையும் கூட.

” குழந்தையின் தந்தை, யார் பாலூட்டியது என்று கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டியவர்”

இப்போது சிலையின் வலது கையை மீண்டும் நன்றாக பாருங்கள். ஆள் காட்டி விரல்

notice his lips,seems to be singing
notice the index finger

ஒரு நிமிடம் , சரியான படத்தை இடுகிறேன், சோழ சிற்பி தனது படைப்பில் கொண்டு வரும் உயிரோட்டத்தை விளக்கும் சிலை இது - இல்லை இல்லை, விரல் இது!. ஆள் காட்டி விரல், சற்றே மேல் நோக்கி நகருங்கின்றது, எனினும் இன்னும் முழுமையாக வானத்தை காட்ட வில்லை.

study 22
study1
the movement of the index finger
watch the right hand

குழந்தை தந்தையின் கேள்விக்கு விடை அளிக்கும்போது ஆனந்தத்தில் ஆடிப் பாடி, விரலை மேல் நோக்கி நகர்த்தும் தருவாயில் சிற்பி தன் அகக்கண்ணில் அக்காட்சியை படம் பிடித்து உலோகத்தில் வார்த்து விட்டான். முகத்தில் ஒரு பரவசம், இடது கையில் தான் என்ன அப்படி ஒரு நளினம்!. நேரில் பார்க்குபோது சிலை உயிர் பெற்று அப்படியே பதிகத்தை பாடி அதற்கேற்ப அபிநயம் பிடிப்பது போல உள்ளது.

பல அருங்காட்சியகங்களில் இந்த வடிவம் உள்ளது - தில்லி, சென்னை, ப்ரீஏர்..

australia sambandar
madras musuem sambandhar
samabandhar pondicherry museum
sambandar bronze delhi national museum
sambandar tanjore museum2
sambandar tanjore musuem
sambandhar pudukkottai musuem

இனி நாம் இந்த சிலைகளை அடையாளம் கொள்ளவது சிரமம் இல்லை.

ஆக்க்லாந்து அருங்காட்சியகம்

krishna auckland musuem

ஸ்ரீவத்சம் நன்கு தெரிகிறது - எனவே கண்டிப்பாக கண்ணன்

இங்கே இருப்பது சம்பந்தர், தளத்தில் குறிப்பிட்டது போல கண்ணன் அல்ல.

hinduswisdom site samabandar shown as krishna

ஹிந்து விஸ்டொம் தளம்

இந்த ஓவியத்தில் இருப்பது மேலே பார்த்த குறிகளை வைத்து சம்பந்தராக இருக்கலாம். (ஸ்ரீவத்சம் இல்லை!!)

Bala krishna

சிற்பக் கலை பற்றி நல்ல பதிவு எனினும்

இந்த மகிழ்வான சந்தர்ப்பத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும், வாழ்த்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களுக்கு எல்லா வகைகளிலும் உதவுபவர்களையும் நினைத்துப் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொரு பெயரையும் எழுத ஆரம்பித்தால் இந்த வலைத்தளம் போதாது என்னவோ.. அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. வழக்கம் போலவே உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எந்நாளும் நாடுகிறோம்.

மீண்டும், உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி கூறி, இன்னும் பல நண்பர்களை எங்களுடன் இணைத்து வையுங்கள், கோயில், அருங்காட்சியகம் எங்கு சென்றாலும் எங்களை நினைவு கொண்டு படங்களை எங்களுடன் பகிருங்கள் என்ற வேண்டுகோளை மீண்டும் இட்டு உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 4  1  2  3  4 »