Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘மகேந்திரா’


நண்பர்களிடையே பலமுறை இந்த கேள்வி எழும். கலை ஆர்வலன் ( நானே சொல்லிக்க வேண்டியது தான் - ரசிகன் பட்டம் தானே !!) என்ற முறையில் தமிழ்க் கலை என்றால் பல்லவர் கலை பெரிதா இல்லை சோழர் கலை பெரியதா என்பதே ( நமக்கு சேரர் கலை வெகு சிலவே கிடைக்கின்றன - அதாவது அந்தக் காலத்து , பாண்டியர் குடைவரைகள் இன்னும் நிறைய நான் பார்க்க வேண்டி உள்ளது எனினும் பார்த்த சிலவற்றை வைத்து ( வேட்டுவன் கோயில் தவிர ) அதற்குப் பின்னர் வந்த கட்டுமானக் கோயில்களில் உள்ள கலை வேலைப்பாடு என்னை பெரிதாக ஈர்த்ததில்லை. எனவே இன்றைய விவாதம் பல்லவர் vs சோழர். அதுவும் பல்லவர் கற்சிற்பம் vs சோழர் செப்புத்திருமேனிகள். இதற்காக அவர்களது கலையின் மிகவும் மேலான உதாரணங்களை கொண்டே பார்ப்போம். பல்லவர் சிற்பக்கலை அதன் சிகரத்தை தொடும் இடம் கடல் மல்லை தர்மராஜ ரதம் மேல் தல புடைப்புச் சிற்பங்கள். சோழர் செப்புத் திருமேனி என்றால் அது உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அதுவும் அவர்களது கடைசி பத்து ஆண்டுகளில் வார்க்கப்பட்ட சிலைகளே.

தர்மராஜ ரதம் மேல் தளம் ஒரு அதிசயம். ஒரே பாறையில் மேலிருந்து கீழே குடைந்து, அதில் இப்படி ஒரு அற்புத கலை நயத்தோடு , சிறிதளவும் பிழை என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் , ஆகமங்கள் முறையே தங்கள் சட்டங்களை விதிக்கும் முன்னரே, தங்கள் செழிப்பான சிந்தனையை மட்டுமே மூல தனமாக வைத்து இப்படி அற்புத சிற்பங்களை செதுக்கிய இவர்களை என்னவென்று புகழ்வது. கடினமான கருங்கல்லில் உயிர் ஓட்டம் ததும்பும் இந்த சிற்பங்களை அழகு பட வடித்த இவர்கள் மனிதர்களா என்றே சந்தேகம் வரும்.

அந்த மேல் தடத்தில் இருக்கும் புடைப்புச் சிற்பங்க்ளில் ஒரு அற்புத வடிவத்தை இன்று நாம் நண்பர் அசோக் உதவியோடு பார்க்கிறோம். அவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை - மேல் தடம் செல்வதே கடினம் - பலரிடம் அனுமதி பெற வேண்டும். நெரிசலான பாதை, சுவருக்கும் சிற்பத்திற்கும் இடைவெளி மிகவும் குறைவு , இதனால் புகை படம் எடுப்பது மிகவும் கடினம், அதுவும் ஒரே படத்தில் முழு உருவை பிடிப்பது அதைவிட கடினம். நவீன தொழில் நுட்பங்கள் பலவற்றை ஒன்று சேர்த்து அவரால் இதை செய்ய முடிந்தது. படம் பிடிக்க நாம் படும் பாட்டை பார்க்கும்போது, இதே இடத்தில தனது கற்பனை உருவை கல்லில் கொண்டு வந்த சிற்பியின் வேலைக்கு மீண்டும் தலை வணங்க வேண்டும்.பல்லவ ரிஷபாந்தகர்

rishabavahana+dharmaaraja+ratha

இந்த சிற்பத்தின் தனித்தன்மை அதன் தலை / சிகை அலங்காரம். தலை பாட்டை மற்றும் சடை முடியை சுற்றிக் கட்டிய கொண்டை, இதுவரை நாம் வேறு எங்கும் பார்க்காதது. இதன் பிறகும் பல்லவர் படைப்புகளில் , ஏன் மல்லையிலே கூட நாம் இந்த மாதிரி மற்றொன்றை பார்க்க முடியாது - அர்ஜுன ரத சிற்பத்தை பாருங்கள்
(
அர்ஜுன ரதம் ).

another+view
notice+the+headband
notice+the+headband+illustrate
rishabavahana+face

இந்த சிற்பத்தில் ஒரு தனி நளினம், சிற்பம் முழுவதிலும் ஒரு உயிரோட்டம் , வளைந்து செல்லும் அருவியின் நெளிவு சுளிவு , ரத்தம் சதை கொண்டு தோல் போர்த்திய கை கால் என சொல்லிக்கொண்டே போகலாம்.

sideview
sideview2

த்ரிபங்கத்தில் ஒய்யாரமாக நிற்கும் சிவன், லாவகமாக வலது கையை நந்தியின் மேல் வைத்து, தலையை ஒரு புறம் சாய்த்து , இடுப்பை மறுபக்கம் மடக்கி, ஒரு காலை இன்னொரு கால் மீது போட்டு நிற்கும் காட்சி …அப்பப்பா பிரமாதம்.

stance+dress

இந்த சிலைக்கு எதிர்த்து நின்று ஈடு கொடுக்க வேண்டும் என்றால், கொஞ்சம் கடினம் தான். அதனால் சோழர் செப்புத்திருமேனிகளில் மிகவும் சிறந்த ஒன்றை போட்டிக்குள் கொண்டு வருவோம். அதிஷ்ட வசமாக கோவையில் செம்மொழி மாநாடு அரங்கில் வழி தவறி, அங்கே அடுத்த நாள் திறப்பு விழாவுக்கு வேலைகள் கடந்துக் கொண்டிரந்த அருங்காட்சியக மையத்தினுள் தற்செயலாக சென்றதால் இந்த அற்புத சிலையை அருகில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது,. கூடவே இன்னும் ஒரு பெரும் பாக்கியம் ( படங்களை கூர்ந்து பார்த்தல் அது என்ன என்று விளங்கும் ) . இந்த சிலை, தஞ்சை கலை அரங்கத்தில் இருக்கும் ,மாநாட்டிருக்கு என்று பிரத்தேயகமாக கொண்டு வரப்பட்டது. செப்புத்திருமேனிகள் வடிப்பது சுலபம் இல்லை, நாம் முன்னரே பார்த்தவாறு, அச்சை உடைத்து சிலையை வெளிகொணர்வதால் ஒவ்வொரு முறையும் அச்சு புதிதாக செய்யப்பட வேண்டும். அதுவும் அச் சிலையை வார்த்த பின்னர், அதாவது அனைத்து சிறு குறிப்புகளும் முதலில் செய்யும் மெழுகு சிலையிலே செய்து விட்டு, மெழுகில் வடித்த பிரதிமத்தின் மேல் மண் பூசி சுட்டு ஆற்றிய பின், அதனுள் உலோகத்தை ஊற்றி சிலை வார்த்த பிறகு, அதன் மேல் உளி படாமல் ( செப்பனிடாமல் அதாவது மேலும் செதுக்காமல் ) எடுக்கும் கைத்திறன் படைத்த மகா கலைஞர்கள் இருந்த காலம் அது, இப்படி அவர்கள் புகழ் படும் கைத்திறன், கலை நயம் பல்லவர் காலம் முதலே தென்னகத்தில் இருந்தாலும், உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அவர்களது காலத்தில் , குறிப்பாக 1000 முதல் 1014 வரை வார்க்கப்பட்ட சிலைகள் மிகவும் பிரசித்தி. அந்த காலத்தை சார்ந்த கல்யாணசுந்தரர் ( நாம் முன்னரே பார்த்த உன் கரம் பிடிக்கிறேன்), இன்று நாம் போட்டியில் வைக்கும் ரிஷபாந்தக முர்த்தி, பிக்ஷாடனர் மற்றும் வீனாதாரர் ( விரைவில் அவற்றையும் பார்ப்போம் ) மிகவும் அழகு.

செப்புத் திருமேனிகளின் காலத்தை நிர்ணயம் செய்வது சற்று கடினம் தான், எனினும் இன்று நாம் காணும் சிலை ஒரு அபூர்வ சிலை. தன பிறப்புச் சான்றிதழை கல்வெட்டாக கொண்ட சிலை. மண்ணில் புதையுண்டு 1950ஆம் ஆண்டு திருவெண்காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலை பற்றிய கல்வெட்டுக் குறிப்பு - அதன் இருப்பிடமான ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வர (திருவெண்காடு என்பதின் வடமொழிப்பெயர்) ஆலயத்தின் சுவரில் , உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவரின் 26th இருபத்தி ஆறாம் ஆட்சி ஆண்டில் ( 1011 CE) , கோலக்கவன் என்ற ஒருவர் ( ( AR 456 of 1918 - குறிப்பு இண்டம் பெரும் நூல் South Indian Shrines - Illustrated By P. V. Jagadisa Ayyar ) பொன்னும், நகைகளும் அங்கே எடுப்பித்த சிவ ரிஷபாந்தகர் சிலைக்கு அளித்ததாக உள்ளது ( இதற்கு அடுத்த ஆண்டு கல்வெட்டுக் குறிப்பு இந்த சிவனுக்கு அம்மை சிலை செய்து வாய்த்த குறிப்பை தருகிறது )

chola+bronze+rishbantaka

முதல் பார்வையிலேயே பல்லவர் சிலைக்கும் சோழர் சிற்பத்திற்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறது. இந்த இயங்கும் படத்தை சொடுக்கி பாருங்கள்.

animated.gif

இரு வடிவங்களையும் சற்று ஒப்பு நோக்குங்கள். நந்தி சிற்பம் என்ன ஆனதென்று தெரியவில்லை. சோழ கலைஞன் கூடுதலான இரு கைகளை நீக்கி விட்டு, இது சிலை என்பதனால் சற்றே கைகளை சற்று இறக்கி, அதற்க்கேற்ப த்ரிபங்க வளைவை ஏற்படுத்தி, தலையையும் சற்றே நேர் படுத்தி எழில் மிக்க ஒரு படைப்பை உருவாக்கி உள்ளான்.

bronze+face
rishabavahana+face
bronze+stance+dress
stance+dress

இது சரியான போட்டி அல்ல, ஏனெனில் சோழ சிற்பி அச்சுக்கு மண்ணை பிசைவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பல்லவ சிற்பி கருங்கல்லில், அதுவும் ஒரே கல் ரதத்தின் மேல் தலத்தில், தனது சிந்தனையை மட்டுமே கொண்டு பிழை என்றே சொல்லுக்கே இடம் இல்லாத இடத்தில மகத்தான சிற்பத்தை செதுக்கி உள்ளான். ஆனால் சோழ சிற்பியும் லேசுப் பட்டவன் அல்ல, புடைப்புச் சிற்பம் ஒன்றை மனதில் கொண்டு, அதை அப்படியே முப்பரிமாண சிலையாக வடிப்பது எளிதான காரியம் அல்ல.

rear+view
backview+of headdress
lionbeltbuckle+detail
side+topview+ofheaddress

சரி, இந்த பல்லவர் சிற்பத்தை பார்த்து விட்டுதான் சோழர் சிற்பி வேலை செய்தான என்பதற்கு என்னஆதாரம் என்ற கேள்வி கண்டிப்பாக எழும். இதற்கு விடை இரு சிற்பங்களிலும் உள்ள உருவ ஒற்றுமை, இதற்கு முன்னர் வந்த சோழ கல் மற்றும் உலோக சிற்பங்களில் இந்த பாணியில் சிலை / சிற்பம் இல்லை. இன்னும் ஒரு முக்கிய குறிப்பும் உள்ளது. மீண்டும் ஒரு கல்வெட்டை நாடுவோம். மல்லை சுற்று வட்டாரத்தில் சோழ கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் கல்வெட்டும் உள்ளது. கடற்கரை கோயிலில் ..மாமல்லபுரம் கடற்கரை கோயில் கல்வெட்டு AR40

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_1/mamallapuram.html

உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர் ஆட்சி யாண்டு 25th இருபத்தி ஐந்தாம் ஆண்டு ( 1010 CE) கல்வெட்டு அது., அதாவது திருவெண்காடு சிலை வைப்பதற்கு சரியாக ஒரு ஆண்டிற்கு முன்னர் .

மறுமொழி அளிக்கவும் »

சுட சுட வருகிறது இந்த பதிவு . இதை விமர்சனம் என்று கண்டிப்பாக சொல்ல இயலாது. இது எனக்கு மல்லையின் அதிசயங்களை ரசனையுடன் கற்றுக்கொடுத்த ஒரு ஆசிரியரின் உழைப்பு , கருங்கல்லில் காவியங்கலாகிய இவற்றை பற்றிய விழிப்புணர்வு பலரை சென்று அடையவண்டும் என்று அயராது உழைக்கும் அவரது உயரிய எண்ணமே என்னையும் அந்த பாதையில் ஒரு சிறு காலடிகளை எடுத்து வைக்க தூண்டியது. அவர் மட்டும் அல்ல, நண்பர், புகை பட நிபுணர், கணினிக் கலை வித்தகர் அசோக் அவர்களது உழைப்பும் சேர்ந்து வெளிவரும் நூலின் அறிமுகம் இது.

Mallai+unifinished+poetryinstone

ஒற்றைக் காலில் நின்று, கைகளை தலைக்கு மேல் தூக்கி கூப்பியவண்ணம் தவமிருக்கும் அந்த மனிதனின் நோக்கம் என்னவாக இருந்தாலும் சரி, கலைகளை ஆராயும் கலைஞனையும், வரலாற்று ஆராய்ச்சியாளனையும், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து தேடல் மனம் கொண்டு ஒவ்வொரு இடமாக பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளையும் நிச்சயமாக கவர்ந்திழுத்திடுவான்.

தங்கள் உழைப்பு , இல்லை இல்லை தவத்தின் பயனே இந்த புத்தகம் என்பதை நமக்கு உணர்த்தவோ என்னவோ அந்த சிற்பத்தை அட்டைப் படமாகக் ஆசிரயர் தேர்ந்தெடுத்துள்ளார். . அட்டைப்படம் எப்படியோ அப்படியே அவர்கள் உருவாக்கிய இந்த நூல் மாமல்லபுரத்தின் கற்சிற்பங்களுக்கு உயிர் கொடுத்து நம் உணர்வோடு உறவாடவைக்கிறது. எவ்வளவோ படைப்புகள் மல்லையப் பற்றி வந்துவிட்டன, இன்னும் வந்து கொண்டேயிருக்கும், ஆனால் இந்த நூல் அங்கிருக்கும் அதிசயத்தை அப்படியே பிழிந்து சாறாக மனதில் ஏற்றுகிறது. இந்த நூலைப் பிரித்து பார்த்த உடனே நீங்கள் மல்லையின் அதிசயங்களுக்கிடையே பயணிக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்களோடு முனைவர் திரு. சுவாமிநாதன் அவர்களின் ரத்தினச் சுருக்கமான விளக்கங்கள் திரு. அசோக் அவர்களின் புகைப்படங்களோடு மவுனமாய் அவற்றை விவரித்துக் கொண்டிருக்கும்.

நமது வரவேற்பரையில் இப்படியொரு நூல் இருக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய அவா! எத்தனையோ நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் இருந்தாலும் அவற்றை படித்து விட்டு மல்லை சென்று ஒவ்வொரு சிற்பங்களையும் இவற்றின் சிறப்பு இன்னது தானென்று அறிந்து அவற்றை இரசித்து விட்டு வருபவரின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்தக் குறையைப் போக்க வந்ததே இந்த நூல். திரு நரசையா அவர்கள் சிறப்பான முன்னுரையில் இதுவரை மல்லை புதிர்களை ஆராய்ந்த பலரை நாம் மறக்காமல் நினைவு கோர வைக்கிறார். இது மல்லை செல்லும் ஒவ்வொருவருக்கும் நல்லத் துணையாக இருக்கும் அல்லது சென்று வந்த பின் மனதில் பார்த்து இரசித்த அதிசயங்களைப் பற்றி மேலும் அறிந்து கொண்டு அசை போட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல, பல்லவக் கலைச் சிற்பங்களில் மனதை பறி கொடுத்த எம் போன்ற இரசிகர்களுக்கு இந்த நூல் முழங்கையில் வடியும் மலைத்தேன்! மல்லைக் கற்களின் கலைச்செல்வங்களை இந்த நூலில் கண்டதும் நம் காதில் தானாகவே கேட்கும் அலை ஓசையும், உப்புக் காற்றின் ஈரமான ஸ்பரிசங்களும் தவிர்க்க முடியாதவை.

இந்த நூலைப் பார்த்ததும் ஏதோ வண்ண வாழ்த்து அட்டைகளின் அணிவகுப்பு என்று நினைத்து விடாதீர்கள்! மல்லையின் படைப்புகளை விளக்கும் இதை ஒரு ஆய்வு நூல் என்றும் கொள்ளலாம். ஆனால் மற்ற ஆய்வு நூல்களைப் போலன்றி கண்ணால் பார்க்கும் அனைத்தையும் மனதிற்கு எளிதில் புரிய வைக்கும் ஓர் வண்ணக் களஞ்சியம். ஒரு பக்கத்தில் விவரத்தை படித்துவிட்டு பரப்புடன் நூலின் பின்னால் இருக்கும் படங்களை தேடும் பனி இல்லை. முனைவர் மிகவும் சாமர்த்தியமாக பல்லவக் கலைகளை மிகவும் எளிமையாய் விளக்க, அசோக்கின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பின்னிப் பிணைந்து கற்சிலையின் உருவத்தை உங்களின் மனதிற்கு உணர்வுகள் மூலம் எடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு புகைப்படமும் அதோடு இணைந்த சிறு விளக்கமும் உங்களது கவனத்தை ஈர்க்கத் தவறாது! பல்லவர்களின் பரந்த நிலப்பரப்பில் அவர்கள் படைத்த ஒவ்வொரு ஆரம்பகாலச் சிற்பங்களோடு, அவர்களின் திறம் தேர்ச்சியடைந்து வார்த்தெடுத்த மல்லையின் சிற்பங்களை உலகுக்கு காட்டும் முயற்சிக்கு உறுதுணையாய் இருந்த பதிப்பாளர்களுக்கு நன்றி உடையவர்களாகிறோம்.

ஒவ்வொரு பக்கத்தை படி(பார்)க்கும் பொழுதும் ஆசிரியரின் மகிழ்ச்சி ததும்பும் மனதையும், அந்த உணர்ச்சியால் விரிந்த விழிகளும் நம்மை மேலும் உற்சாகமூட்டும் இந்த நூல் நிச்சயம் நம் கண்களுக்கும் மனதிற்கும் நல்ல விருந்து. பாதிப் புத்தகத்தில் இருக்கும் பொழுதே மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்கத் தூண்டும் ஆனால் அதற்குப் பின்னர்தான் அதிசயம் காத்திருக்கிறது என்பது எப்படி படிப்போருக்கு புரியும்! முதன் முறையாக மனதைக் கொள்ளை கொள்ளும் தர்மராச இரத்ததின் மேல் கட்டு சிற்பங்கள் முழுமையாக அசோக் அவர்களின் படைப்பாற்றலாலும், அவரது கருவிகளாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடனும் நம் கண்களுக்குள் புகுந்து மனதில் காதலை தோற்றுவிக்கின்றன. அதே போல் கோவர்த்தன கிரி சிற்பங்களும் பிற்காலத் தூண்கள் மறைந்து முழுமையாக மனதை இலயிக்க வைக்கின்றன. அது மட்டுமல்ல அதற்கு மேல் ஒரு படி சென்று ஆரம்பத்தில் சொன்ன தவத்தைக் காட்டும் சிற்பங்கள் இரண்டு பக்கங்களாக விரிந்து ஒவ்வொரு சிற்பத்தையும் சிறப்புரக் காட்டி அப்பப்பா சொல்லவே வார்த்தையில்லை! ஆனால் ஒன்று உறுதி இந்த நூலைப் பிரித்தால் உங்களால் படி(பார்)ப்பதை நிச்சயம் நிறுத்தமுடியாது அப்படியொரு பொருள் பொதிந்த பொக்கிஷம் இது.

அத்யந்தகாமனுக்கு ஒரு அற்புதமான அர்ப்பணிப்பு

விரைவில் கடைகளில் வந்து வெற்றி நடை போட எங்கள் அன்பு கலந்த வாழ்துக்கள்

மேலும் விவரம் பெற

ARKEY GRAPHICS
[email protected]
( இந்த நூல் ஆங்கிலத்தில் வந்துள்ளது. விரைவில் தமிழ் மற்றும் இதர மொழிகளிலும் வரவேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கிறோம் )

இணையத்தில் உங்கள் பிரதியை வாங்க

இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 5  1  2  3  4  5 »