Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘மலையமான்’


நண்பர்களே, இன்று நாம் ஒரு புதிய கோணத்தில் இருந்து இந்த அற்புதக் கலையை பார்க்கப்போகிறோம். சிலை , சிற்பம் என்று இது வரை நம் பாரம்பரியத்தை பார்த்துவந்த எனக்கு திரு ராமன் சங்கரன் அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது. அவர் நாணயவியல் நிபுணர், நம்முடன் அவரது அனுபவங்களை பகிர்கிறார். இதை அப்படியே ஒரு கேள்வி பதில் பேட்டியாக அமைத்துள்ளேன். முதல் பாகம் - அறிமுகம் இதோ.

Me : சார், காலை வணக்கம். எங்களை இந்த பயணத்தில் எடுத்துச் செல்ல எண்ணும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு எங்கள் முதல் நன்றி. முதல் கேள்வி, எல்லோரும் கேட்பது போலவே தொடங்குகிறேன். உங்களுக்கு் இந்த நாணயங்கள் சேகரிக்கும் ஆசை எப்போது துவங்கியது.

RAMAN: நான் பள்ளியில் படிக்கும் போதே பிரிட்டிஷ் இந்தியா காசுகளை சேர்க்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது கூட நினைவில் உள்ளது ஒரு ரூபாய் கொடுத்து ஒரு அரையணா காசை வாங்கினேன் 1835 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயம் அது. நான் வாங்கியது 1980’s

Me : அப்படியா. அந்த நாணயம் தங்களுக்கு எப்படி கிடைத்தது.

Me: சார், இருக்கீங்களா ?

RAMAN: சாரி, கரண்ட் கட்

Me : பரவாயில்லை சார்.

RAMAN: நான் சென்னையில் வசிக்கிறேன் :-(

Me: ஹஹஅஹஹா . நீங்கள் உங்கள் முதல் 1835 காசை பற்றி சொன்னீர்கள். அந்த காசு எப்படி உங்களுக்கு கிடைத்தது.

RAMAN: நான் அதை ஒரு பழைய சாமான்களை விற்கும் கடையில் இருந்து வாங்கினேன். நண்பர்கள் அனைவரிடத்திலும் பெருமையாக அதை காட்டினேன். 145 ஆண்டு பழமையான நாணயம் என்று.

Me : அருமை. அடுத்த கேள்வி அதில் இருந்தே தொடர்கிறது. புதிதாக என்னை போல ஆரம்பிப்பவர்கள் பழைய நாணயங்கள் தேடி யாரிடத்தில் செல்வது. நீங்கள் யாரை தொடர்புக் கொள்வீர்கள். அப்படியே நீங்கள் தெனிந்திய நாணயங்களை மட்டுமே சேகரிக்கிறீர்களா இல்லை பொதுவாக ஏனைய பழம் பொருட்களில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா.

RAMAN: புதிதாக வரு்வோருக்கு ஒரு நல்ல டீலர் அறிமுகம் இருப்பது நல்லது. மற்றும் இப்போது எல்லா ஜில்லாக்களிலும் நாணய ஆர்வலர் கிளப்ஸ் ( சங்கங்கள் ?) உள்ளன.

Me : புரிகிறது, இந்த துறையில் பல நகல்களும் புழக்கத்தில் இருப்பதால் நல்ல தேர்ச்சி பெற்ற நண்பர்களின் அறிமுகம் மற்றும் அறிவுரை தேவை . சென்னையில் இது போன்ற கிளப் ( சங்கங்கள்) உண்டா

RAMAN: திருநெல்வேலி , நாகர்கோவில் , தஞ்சாவூர் . திருச்சி , சேலம் சென்னை …. என்று எங்கும் நிறைய கிளப்ஸ் உள்ளன. மேலும் சென்னையில் மட்டுமே 25 டீலேர்ஸ், 5 கடைகள், 4 கிளப்ஸ் உள்ளன.

Me : சார், நீங்கள் நாணயங்கள் மட்டுமே சேகரித்து வருகிறீர்களா. இல்லை மற்ற பொருள்களிலும் ஆர்வம் உண்டா?

RAMAN: கடந்த 25 ஆண்டுகளாக நான் நாணயங்கள் சேகரித்து வருகிறேன். சங்க காலத்து நாணயங்கள் பல வைத்துள்ளேன். சோழ, பாண்டிய, சேர, பல்லவ, விஜயநகர, நாயக்கர் காலத்து நாணயங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. 2004 முதல் மோதிரங்கள் மற்றும் இலச்சினை (சீல்ஸ்) மீதும் கவனம் செலுத்தி வருகிறேன்.

Me: முதல் முதலில் இந்தியாவில் கிடைத்துள்ள நாணயங்கள் யாருடையது, எந்த காலம்

RAMAN: முதல் முதல் கிடைத்துள்ள காசு வெள்ளியில் வந்த முத்திரை காசு.ஒரு பக்கம் ஐந்து சிறு முத்திரையும், மற்ற பக்கம் ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளுடன் இருக்கும். தமிழ் நாட்டில் தொன்மையான காசு ஒரு பாண்டிய முத்திரை காசு.

Me: சரி, தமிழ் நாட்டில் என்ன உலோங்கங்களில் நாணயங்கள் கிடைக்கின்றன.

RAMAN: தங்கம், வெள்ளி, தாமிரம் , செப்பு என்று பல காசுகள் கிடைக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஈயம் மற்றும் பலஉலோகங்களுடன் பித்தளை கலந்த கலவையிலும் கிடைகின்றன.

Me: அப்படியா. இதில் பரவலாக கிடைப்பது எது. தங்கமே மிகவும் அரியதா ?

RAMAN: சங்க காலத்து தங்க நாணயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அப்போது ரோமானியர்களின் நாணயங்களே நாம் உபயோகித்தோம் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து. தமிழ் நாட்டில் முதல் முதலில் கிடைக்கும் தங்க நாணயம் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் காசு தான்.

Me: ஆஹா, எங்கள் ராஜராஜர் புகழ் பாடாமல் பதிவுகள் நகராது போல உள்ளது. அந்த நாணயத்தை நாம் முதலில் பார்த்துவிடுவோமா.

Gold+coin+Rrc

RAMAN: பார்த்தீர்களா அதில் ஸ்ரீ ராஜராஜ என்று தேவநாகரியில் இருப்பதை பாருங்கள்.

Gold+coin+Rrc+legend+in+nagari

Me: அருமை. பொதுவாக பழைய நாணயங்கள் சதுர வடிவில் இருப்பதை பார்க்கின்றோம். எப்போது இவை வட்ட வடிவம் பெறுகின்றன.

RAMAN: பொதுவாக சங்க காலத்து முத்திரை நாணயங்கள் சதுர வடிவத்தில் உள்ளன. பிறகு ரோமானியரின் தாக்கத்தால் வட்ட வடிவமாக மாறி இருக்கலாம். இப்போது இந்த 2ஆம் கி மு சேரர் நாணயத்தை பாருங்கள். .

sagamchera obv
sagamchera rev

முன் பக்கம் கம்பீர யானை, எதிரில் ஒரு மரம், அதன் பின்னால் நான்கு மீன்கள், யானையின் அடியில் பக்க வாட்டில் ஒரு பனை மரம் உள்ளது. பின்புறம் சேரர் வில் அம்பு இலட்சினை உள்ளது. அதனுடன் யானையை அடக்கும் அங்குசமும் உள்ளது.

Me: அருமை அருமை. சார், அடுத்து சங்க காலத்து பாண்டியர் நாணயம் பார்க்க கிடைக்குமா.

RAMAN: இருக்கே, இதோ இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு.

sangam+pandiyaobv
sagampandya+rev

முன்பக்கம் கம்பீர ஆண் யானை. பின்பக்கம் கரையை நோக்கி நீந்தும் மீன் சின்னம்.

Me. மீன் தெரிகிறது, அது கரையை நோக்கி நீந்துவது ?

RAMAN: நீரில் அலை போல ஒரு குறி இருக்கிறது. வரைந்து காட்டுகிறேன்.

pandya+fish+wave

Me: இப்போது புரிகிறது. ரோமானிய நாணயம் பற்றி கூறினீர்கள். இதே காலத்து ரோமானிய நாணயம் எப்படி இருந்தது. நமது நாணயங்களை விட தொழில் நுட்பம் , கலை அம்சம் என்று ரோமானியர் நாணயங்கள் மிகை யா. ரோமானியர் தாக்கம் நமது நாணயங்களில் உள்ளதா?

RAMAN: இருக்கிறது. சோழர் சேரர் வட்ட வடிவ நாணயங்கள் முதலில் பார்ப்போம். .

Me: சங்க காலத்து சோழர் நாணயமா. பார்க்க ஆவலாக உள்ளது.

RAMAN: இதோ

chola+obv
chola+rev

Me: அற்புதமாக உள்ளது. இதன் காலம் என்ன, அதில் என்ன சித்தரிக்கப்பட்டுள்ளது.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு காலம். முன் பக்கம் யானை, அதற்க்கு முன்னர் வெளியே இருக்கும் மரம், யானைக்கு மேல் வெண் கொற்றக் குடை உள்ளது. பின்புறம் சோழர்களி்ன் வேங்கை ஒரு கால் தூக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வாலும அழகு.

Me: அருமை, வட்டமான சேரர் காசு?

RAMAN: இதோ.

round+chera+rev.jpg
roundchera+obv

RAMAN: முன்பக்கம் அமர்ந்திருக்கும் சிங்கம் , பக்கத்தில் ஒரு கம்பத்தின் மேல் சக்கரம். பின் பக்கம் சேரர் ’வில் அம்பு’.

Me: சிங்கம் சிங்கம் போல இல்லையே. !!

RAMAN: ஹஹஅஹா , இன்னும் ஒரு காரணம் (- தங்க நாணயம் சங்க காலத்தில் இல்லாமைக்கு ) அந்த காலத்தில் தங்கச் சுரங்கமோ , உலையோ தென் இந்தியாவில் இல்லை. ரோமானிய நாணயங்கள் தமிழ் நாட்டில் எங்கும் கிடைக்கின்றன. சென்னை அருங்காட்சியகம் 5000 க்கும் மேற்பட்ட ரோமானிய தங்கம் மற்றும் செப்புக் காசுகள் உள்ளன. சுமார் கி மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து தமிழ் நாட்டில் ரோமானியர் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: அப்பாடி , அந்த காசு ஒன்றை பார்க்கலாமா ?

Roman+goldcoin
Roman+goldcoin2

Me: தமிழ் காசுகளில் ரோமானியர் தாக்கம் என்ன. ரோமானியர் காசை போல அரசர் தலை பொறிக்கப் பட்டுள்ள காசுகள் உண்டா ?

RAMAN: உண்டு. சங்க கால அரசர்கள் பெயர் பொறித்த காசுகள் சில கிடைத்துள்ளன. மாக்கோதை , பெருவழுதி ,குட்டுவன் கோதை, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை - என்று பிராமி
எழுத்தில் பொறிக்கப்பட்ட காசுகள் பல கிடைத்துள்ளன.

Me: ஆஹா. நிறைய நாம் கற்க வேண்டும். முதலில் மூவேந்தர் தவிர - அதாவது சேர, சோழ, பாண்டியர் - வில் அம்பு, வேங்கை மற்றும் கயல் சின்னங்கள் தவிர சிற்றரசர் நாணயங்கள் உள்ளனவா?. அவற்றின் குறிப்பிடத்தக்க சின்னங்கள் / இலச்சினைகள் என்ன?.

RAMAN: தமிழ் நாட்டில் வணிக ரீதியாக கிரேக்க நாணயங்கள் கிடைக்கின்றன. அதே போல சங்க காலத்து மலையமான் சிற்றரசனுடைய நாணயங்களும் கிடைத்துள்ளன. திருக்கோயிலூர் அருகில் மட்டுமே மலையமான் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: திருக்கோயிலூர் அருகில் தான் எங்கள் பூர்வீகம். மலையமான் நாணயம் பார்க்க கிடைக்குமா ?

RAMAN: சங்க காலத்து நாணயங்கள் பொதுவாக நதிக் கரைகளில் கிடைக்கின்றன. மதுரை, கரூர், திருக்கோயிலூர், மற்றும் திருநெல்வேலி அருகில் - ஆனால் மிகவும் அதிகம் கிடைப்பது கரூர் அமராவதி ஆற்றில் தான். இதோ மலையமான் காசு.

malaiyaman+sangam
malaiyaman+sangam+rev

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு. திருக்கோயிலூர் அருகில் கிடைத்தது. முன் பக்கம் வலது புறம் நோக்கி நிற்கும் குதிரை, அதற்கு எதிரில் வேலியில்லாத மரம், குதிரைக்கு மேலே ஆயுதம், அதற்கு மேல் கொட்டுரிவில் எருது தலை சின்னம் ( டாரின் - Taurine ). பின்புறம் ஆற்றின் கரை கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. நேராக ஒரு வேலும், படுக்க வாட்டில் ஒரு வேலும் உள்ளன.

Me: ஆஹா , மிக அருமை. நாங்கள் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய உள்ளது, இந்த சின்னங்கள் ( டாரின் போன்று). இந்தத் துறையில் எங்களை போன்று ஆரம்ப நிலை ஆர்வலர்கள் படிக்க நல்ல நூல்கள் உள்ளனவா ? நாங்கள் எங்கே துவங்க வேண்டும்.

RAMAN: முதலில் எந்த நாணயங்கள் சேகரிக்க போகிறீர்கள் என்று முடிவெடுங்கள்.

Me: எங்கள் உடல் மண்ணுக்கு , உயிர் சோழர் தான் ! உடையார் ராஜ ராஜா சோழர் காலத்து காசை கையால் தொட்டால் புளகாங்கிதம் அடைந்து விடுவோம். அவரது காசுகள் இன்றும் கிடைகின்றனவா ?

RAMAN: சோழர் காசு சரியான தேர்வு. தமிழகம் எங்கும் பரவலாக கிடைக்கும். ஒரு செப்புக் காசை நானே அன்பளிப்பாக தருகிறேன்.

Me: ஆஹா

RAMAN: சும்மா சொல்ல வில்லை, கண்டிப்பாக தருவேன்.

Me: அப்படி என்றால் விரைவில் வந்து வாங்கிக் கொள்கிறேன். பொதுவாக இந்த அளவிற்கு தேர்ச்சி வருவதற்கு அறிஞர்கள் துணை தேவை. அப்படி உங்கள் துணை நின்று உதவிய குரு என்று யாராவது உண்டா ?.

RAMAN: எனது முதல் குரு தஞ்சை திரு சீதாராமன் அவர்கள். பிரம்மி எழுத்து பொறித்த நாணயங்கள் மற்றும் மோதிரங்கள், முத்திரைகளுக்கு திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

Me: ஆஹா. ஜாம்பவான்கள்.

RAMAN: எனது அறிவுரை, முதலில் பிடித்த நாணயம் தேர்ந்தெடுத்து , அதை பற்றி படியுங்கள். திரு சீதாராமன் அவர்கள் வெளியிட்டுள்ள புத்தங்களை வாங்கி படியுங்கள்.

Me: பதிப்பகம் எது, எங்கே கிடைக்கும்

books.jpg

RAMAN: அவரது முகவரி இதோ. .

தனலட்சுமி பதிப்பகம்
12, ராஜராஜன் நகர் ,
மானோஜிப்பட்டி ( தெற்கு )
தஞ்சை - 613004

புத்தகத்தின் விலை ரூபாய் 150

Me: நன்றி சார். மிகவும் எளிமையான நடையில் பல தகவல் தெரிந்துக் கொண்டோம். அடுத்து பகுதியில் மூவேந்தரில் ஒருவரையோ அல்லது பல்லவர் நாணயங்களை எடுத்துக்கொண்டு அரட்டை (சாட்) அடிப்போம் !!

மறுமொழி அளிக்கவும் »


வாசகர்களே இன்று மீண்டும் ஒரு பெரியபுராண சிற்பம் - தாராசுரத்தில் இருந்து. நாம் இந்த சிற்பத்தின் அருகில் உள்ள சிற்பத்தை முன்னரே பார்த்தோம் - இளையான்குடி மாறர் புராணம். இன்று அதை போல இன்னும் ஒரு அற்புத நாயன்மார் கதை.

மடிந்தாலும் நேருக்கு நேர் நின்று மார்பில் வேலை வாங்கி வீர மரணம் அடைவதை பெருமையாக கொண்ட தமிழ் குடியில், வந்திருப்பது துரோகி , தனது எதிரி, தன்னை ஏமாற்றி கொல்ல வந்த கொலையாளி என்று தெரிந்தும் , அவனை மன்னித்து அவனுக்கு எந்த துயரும் இழைக்காமல் விட்டு விட்ட ஒரு அரசனின் கதை. அப்படி அவன் ஏன் செய்தான். மேலே படியுங்கள்.

முதலில் சிற்பம். தொலைவில் இருந்து. இடது புறம் கீழே பாருங்கள்.

meiporul nayanar

நாம் பார்ப்பது மெய்பொருள் நாயனார் கதை சொல்லும் சிற்பம். பெரிய புராண வரிகளை கொண்டே இந்த கதை விளக்குகிறேன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=12050&padhi=72&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.

நன்மை மிகுந்த சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் வாழ்ந்தருளி, உமையம்மை யாரை ஒரு கூற்றில் வைத்தருளும் சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டிற்குரிய அரசர், நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருவார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப்
பரிபவப் பட்டுப் போனான்.

இவ்வாறாக இவ்வடியவர் தம் கடமைகளைச் செய்து வரும் நாளில், அவரொடு பகைத்து நின்ற ஓர் அரசன், அவரைத் தான் போரில் வெல்லக் கருதும் ஆசை மிகுதியால், போர் செய்தலை மேற்கொண்டு, பொன்னால் செய்த நெற்றிப் பட்டத்தை உடைய யானைகளையும், போர் செய்தற்குரிய குதிரைகளையும், காலாட் படைகளையும், பலகாலும் இழந்து தோற்றுவிட, அதனால் மானம் இழந்து போனான்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

இப்படி இழந்த மாற்றான்
இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம்
அறிந்துவெண் ணீறு சாத்தும்
அப்பெரு வேடங் கொண்டே
அற்றத்தில் வெல்வா னாகச்
செப்பரு நிலைமை எண்ணித்
திருக்கோவ லூரிற் சேர்வான்.

இவ்வாறு பலகாலும் தோல்வியடைந்த அப் பகைவன், தன்வலியினால் வெல்ல இயலாதனவாகி, மெய்ப்பொருள் நாயனாருக்கு அடியவர்மீது இருக்கும் பத்திமையை உணர்ந்து, வெண் ணீறு அணிதலாகிய அடியவர்களின் பெருமையான திரு வேடத்தை வஞ்சனையாக மேற்கொண்டு, அவ்வஞ்சனையைப் பிறர் அறியாத வாறு, காலமறிந்து வெல்லும் கருத்துடையனாக வாயினாற் சொலற்கரிய தீமையைச் செய்யக் கருதித் திருக்கோவலூரை அடைவானாயினன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.

தன் உடல் முழுமையும் திருநீற்றை அணிந்து கொண்டு, சடைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, தன் கையிடத்து, உடைவாளை உள்ளே மறைத்த புத்தகச் சுவடிகளைத் தாங்கிக் கொண்டு, கருமையான நிறத்தைத் தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப் போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய் யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு சென்றான். அவன் முத்த நாதன் எனும் பெயரினன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=9&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கடையுடைக் காவ லாளர்
கைதொழுதேற நின்றே
உடையவர் தாமே வந்தார்
உள்ளெழுந் தருளும் என்னத்
தடைபல புக்க பின்பு
தனித்தடை நின்ற தத்தன்
இடைதெரிந் தருள வேண்டும்
துயில்கொளும் இறைவ னென்றான்.

அரண்மனை வாயில்கள் தொறும் காவல் செய்து கொண்டிருப்பவர்கள் கைகுவித்து வணங்கி விலகிநின்று நம்மை ஆட்கொள்ளும் சிவபெருமானின் அடியார் ஒருவர், தாமே வலிய எழுந்தருளினார் என்று கூறி, உள்ளே எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொள்ள, இவ்வாறாய வாயில்கள் பலவற்றையும் கடந்து சென்ற பின்பு இறுதியாக உள்ள தனிவாயிலில் காவல்புரிந்து நிற்கும் தத்தன் என்பான், `உட்செல்லுதற்குரிய அமையம் தெரிந்து எழுந்தருள வேண்டும்; இதுபொழுது அரசர் துயில் கொள்கின்றார்` என்று கூறினான்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=14&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

திருமக ளென்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப்
புரத்திடைப் போக ஏவித்
தருதவ வேடத் தானைத்
தவிசின்மேல் இருத்தித் தாமும்
இருநிலத் திருந்து போற்றி
இனியருள் செய்யும் என்றார்.

திருமகளைப் போல அங்கு நிற்கும் தம் மனைவியாரைப் பார்த்து, அருளுரை கேட்கும் பெருவிருப்பால், அவரை விரைவாக அந்தப்புரத்திற்குப் போகுமாறு பணித்து, இயல் பாகவன்றி வலிய எடுத்துக்கொண்ட தவவேடமுடைய முத்தநாதனை ஓர் இருக்கையின்மீது இருக்கச் செய்து, தாம் வெறுநிலத்திலிருந்து வழி பட்டவாறு, இனி அருள் செய்ய வேண்டு மென்று விண்ணப்பித்துக் கொண்டார்.

இப்போது சுட்டிக்காட்டி உள்ள வரிகளை சற்று கவனமாக படியுங்கள். ஏனெனில் சிற்பி சிற்பம் செதுக்கும் பொது எப்படி இவற்றை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறான் என்பதை நாம் ரசிக்க வேண்டுமே!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=15&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருளெனத் தொழுது வென்றார்.

அவன், தன் கையில் வைத்திருந்த வஞ்சனை யாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள் ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப்போல, விரும்பி அந்நாய னார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, அவ்வடியவர் தாமும், மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.

சரி, இப்போது சிற்பத்தை மீண்டும் பார்ப்போம். அருகில் சென்று

meyporular

கதை மிக சுவாரசீயமாக போகிறது. முதல் பாகம் சிற்பத்தில்

the false sage about to assassinate the king

போலி சிவனடியார் இடது கையில் புத்தகப் பை,வலது கையில் கத்தி, அவர் ஆசனத்தின் மேலே அமர்திருப்பது, அரசன் தரையில் அமர்திருப்பது - எப்படி சின்ன சின்ன விஷயங்களை கூர்ந்து கவனித்து சிற்பி இந்த சிறய சிற்பத்தில் கதையை அழகாக சொல்கிறான் பாருங்கள்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.

உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட அம்முத்த நாதன் உள்ளே சென்ற பொழுதே, தன் மனத்தை அவனுடன் போக நிறுத்திய தத்தன் என்பான், ஒரு நொடிப் பொழுதில் சென்று, வாட்படையால் அவனை எறியத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், `தத்தனே! அவர் நம்மவர்` என்றுகூறித் தம் நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.

என்ன அற்புதாமான தருணம். தனது அரசனை காக்க பாய்ந்து வரும் மெயகப்பாலன் தத்தன் - சிற்பத்தில் பாருங்கள், அவனது ஆடை பறக்க, வாழை உயர்த்தி அடுத்த கணம் போலி சாமியாரின் தலை துண்டாகும் என்பதை உணர்த்தும் வண்ணம் - ஆனால் அரசனின் கரம் தடுக்கிறது

the body guard thatta

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=17&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வேதனை யெய்தி வீழ்ந்த
வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும்
தலையினால் வணங்கித் தாங்கி
யாதுநான் செய்கே னென்ன
எம்பிரா னடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம்
கொண்டுபோய் விடுநீ யென்றார்.

இக்கொடுஞ்செயலால் வருத்தப்பட்டு நிலத்தில் வீழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரால் `தத்தா நமர்` என்றுகூறித் தடுக்கப் பெற்ற அவரை, (வேந்தரை) அடியவனாகிய தத்தன் என்பவனும் தலையால் வணங்கி, அவர்தம் தலையைத் தம் கையால் தாங்கிய வண்ணம் `அடியேன் செய்யும் பணி யாது?` என்று வினவ, `எம் தலை வனாய சிவபெருமானின் அடியவராகிய இவர் (முத்தநாதன்) செல்லும் பொழுது இடையில் எவரும் மேற்சென்று விலக்காதவாறு இவரைக் கொண்டுபோய் விடுவாயாக என்று கட்டளையிட்டார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=20&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மற்றவன் கொண்டு போன
வஞ்சனை வேடத் தான்மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீ
திலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான்.

தத்தன் தான் அழைத்துக் கொண்டு சென்ற வஞ்சனையான வேடத்தையுடைய முத்தநாதனை, சினந்து எதிர்த்த வர்களை விலக்கி, குற்றம் நேராதவாறு விட்ட நற்சொல்லின் வகைமை யைக் கேட்க விரும்பி, உடலை விட்டு நீங்குதற்குரிய உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருள் நாயனார் முன்பு, அவர்தம் குறிப்பில் நிற்கும் தத்தன் போய் நின்றான்.

ஆஹா, என்ன ஒரு வர்ணனை. அந்த மன்னனுக்குத் தான் என்ன பக்தி.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=23&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தொண்டனார்க் கிமையப் பாவை
துணைவனார் அவர்முன் தம்மைக்
கண்டவா றெதிரே நின்று
காட்சிதந் தருளி மிக்க
அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல் நீழல் சேரக்
கொண்டவா றிடைய றாமல்
கும்பிடுங் கொள்கை ஈந்தார்.

அம்மெய்ப்பொருள் நாயனாருக்கு உமையம்மை யாரின் கணவராகிய சிவபெருமான், அவர்தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் வெளிப் பட்டருளி, அவரை மேலான விண்ணுலகின்கண் வாழும் தேவர் களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்து, அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.

சிற்பியும் இதையே கடை காட்சியாக நமக்கு படைக்கிறான்

Shiva n parvathi - final act

என் நெஞ்சை நெகிழ வைத்த கதை, அதை விளக்கும் அற்புத சிற்பம். அவற்றை உங்களுடன் பகிர்வதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 1  1