Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘மார்கண்டேயன்’


இன்று மீண்டும் திரு சதீஷ் அவர்களின் உதவியால், தஞ்சை பெரிய கோவிலிலுள்ள, எனக்கு மிகவும் பிடித்த சிற்பத்தின் அற்புத புகைப்படம் கிடைத்துள்ளது.

காரணம்? சிறு வயதில் என்னை உறங்க வைக்க என் தந்தையார் எனக்கு இந்த கதையை பாட்டாக படிப்பார். இன்றும் நினைவில் உள்ளது. என் மகனும் இந்த பாட்டைகேட்டால் தூங்கிவிடுவான்

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான்
சாம்ப சிவா பக்தன் என்றால் தொடமாட்டான்
சிவ சிவ சிவ என்ற நாமம் சொல்லடா
மானுடனே உனக்கிதில் பாரம் என்னடா

மார்க்கண்டேயனின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ம்ருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி பிள்ளைப் பேறு வேண்டி கடுந்தவம் புரிந்தனர். தவத்தின் பயனாக அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ,” அறிவிலர்களாய் நூறு பிள்ளைகள், இல்லையேல் அறிவு ஜீவியாய் பதினாறே ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன், இதில் ஒன்றை தேர்ந்து எடு்ப்பீர்களாக,” என்றார். எதிர்பார்த்தபடியே அறிவில் சிறந்த பிள்ளையை அவர்கள் வேண்ட அவ்வாறே ஒரு மகனை அவர்கள் பெறுகின்றனர். மார்கண்டேயன் என்று பெயர் சூட்டி, அன்பும், அறமும் திகழ வளர்கிறது குழந்தை.

பாலகன் பதினாறு வயதை நெருங்க நெருங்க, பெற்ற மனங்கள் பதறுகின்றன. பெற்றோரின் கவலை முகங்கள் கண்டு துளைத்துத் துளைத்துச் சிறுவன் வினவ,அவர்களும் தங்கள் தவப்பயனாக அவன் பிறந்தாலும், அதிலுள்ள நிபந்தனையான 16 வயதில் மரணமெனும் செய்தியையும் கூறி அழுகின்றனர். காலனின் ஈசனே தனக்கு நித்திய பூஜா மூர்த்தியாய் இருக்கையில், மரணம் தன்னை நெருங்காது எனும் தீர்க்க முடிவோடு, மார்க்கண்டேயன் தினந்தோறும் சிவ லிங்க பூஜையில் ஈடுபடுகிறான். அவ்வாறே, குறிப்பிட்ட நாள் வருகையில், எமன் தனது பாசக் கயிற்றை வீச தக்க தருணத்தை எதிர் நோகியுள்ளான்.

மார்க்கண்டேயனோ, எமனுக்கு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்தவாறு உயிர் பிச்சைக்கான பூசையிலுள்ளான்! காலம், காலன் இரண்டும் நிற்காதல்லவா? பொறுமை இழந்த எமன் தன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயனை நோக்கி வீசுகையில், சிவலிங்கத்திலும் சேர்ந்தே விழுகிறது. தன் பக்தன் தன்னை ஆலிங்கனம் செய்து பூசை செய்வதைக் கூட மதியாமல், தன் பணியை செய்த (!) எமனின் செயலால் கோபம் கொண்ட சிவன், லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, காலால் காலனை எட்டி உதைக்கிறார். ஆனால், காலன் தனது பணியைச் செய்வதையே சிவனாரே தடுத்த மாதிரி ஆகிவிடுமல்லவா? எனவே, மார்க்கண்டேயனின் ஆயுள் ‘என்றும் பதினாறு’ என்ற அரிய வரம் தந்து அருள்கிறார்.

kalantaka.jpg

இதுவே கதை - இப்போது சிற்பம். மூன்று காட்சிகள் - மேல் இருந்து கீழ்.
முதல் காட்சி:

காலன் மார்கண்டேயனை துரத்தி வர, அவன் சிவ லிங்கத்தை கட்டிக்கொண்டு இருப்பது போல அற்புதமான சிற்பம்.

yama chasing Markandeya.JPG

அடுத்து, ஈசன் காலனை உதைத்து கீழே விழும் எமன். ( ஒரு வருடம் முன்னர் நண்பர் ஸ்ரீவத்சன் எடுத்த படத்தையும், இப்போது சதீஷ் எடுத்த படத்துடன் ஒப்பிட்டிப் பாருங்கள் - ஈசன் கையில் இருக்கும் சூலம் - இப்போது முழுவதுமாக சிதைந்து விட்டது !!!)

see the detailing on the trident of shiva.jpg
shiva vs yama.JPG
tanjore markandeya panel.JPG

கடைசி காட்சி - சாகா வரம் பெற்ற மார்கண்டேயன் தன் இரு கை கூப்பி ஈசனை வணங்குகிறான்

markandeya saved.JPG

இதோ அப்பர் இந்த கதையை அற்புதமாக பாடியிருக்கும் தேவாரம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4107&padhi=113+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு, வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி, மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 2 of 2 « 1  2