Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ பொன்னியின் செல்வன்’


என்னடா இது ? தலைப்பே ஒரு தினுசாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? இது இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி போன்று, இன்று நாம் பார்க்கும் சிற்பம் ஒரு நையாண்டி அல்ல.

முதலில் இந்த வரிகள் எங்கே வருகின்றன என்பதை பார்ப்போம். சினிமா படம் போல அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு ஒரு பிளாஷ் பாக் …

Ponniyin_selvan_volume_1

புது வெள்ளம் - அத்தியாயம் 30
சித்திர மண்டபம்

கண்டராதித்த தேவர் சிங்காதனம் ஏறினார்.

இவர் தமது தந்தையையும் பாட்டனையும் போலவே சிவபக்தி மிகுந்தவர். அத்துடன் தமிழன்பு மிக்கவர். உண்மையில் இவருக்கு இராஜ்யம் ஆளுவதில் அவ்வளவு சிரத்தையே இருக்கவில்லை. ஆலய வழிபாட்டிலும் தமிழ் இன்பத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார். மகான்களாகிய நாயன்மார்களைப் பின்பற்றிச் சிவபெருமான் மீது துதிப்பாடல்கள் பாடினார். ‘திருவிசைப்பா’ என்று வழங்கும் இப்பாடல்களில் கடைசிப் பாட்டில் இவர் தம்மைப் பற்றியே பின்வருமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்:

“சீரான்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக்
காரார் சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராவின் சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லவர்
பேரா உலகிற் பெருமை யோடும் பேரின்ப மெய்துவரே!”

விஜயாலயனுக்குப் பிற்பட்ட சோழ மன்னர்கள் பழையாறையிலும் தஞ்சையிலும் வசித்தபோதிலும் பூர்வீகச் சோழத் தலைநகர் உறையூர் என்னும் பாத்தியதையை விட்டுவிடவில்லை. உறையூருக்கு இன்னொரு பெயர் கோழி என்பதாகும். ஆகையால் சோழ மன்னர்கள் தங்களைக் “கோழி வேந்தர்” என்று சொல்லிக் கொண்டார்கள்.

இப்போது புரிந்ததா தலைப்பு - சரி அது என்ன கோழி கதை. அதை விளக்க திரு N.S. நாராயணசாமி (www.shivatemples.com) அவர்களின் படங்கள் - பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருமூக்கிச்சரம் (உறையூர்)

அதை பார்க்கும் முன் கதை :

வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் ஒருவன் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. ஒரு தெரு கோழியின் வீரத்தையும் அந்த தளத்தின் அற்புத ஆண்மீக சக்தியையும் கண்டு சோழ அரசன் அந்த ஊரையே தன் தலைநகராக நிறுவினான்.

இப்போது சிற்பம்

uraiyur legend.jpg

அருமையான சிற்பம் - யானையை வீரத்துடன் தாக்கும் கோழி ( யானை மதம் பிடித்து என்று உணர்த்த அதன் வால் சற்றே முறுக்கி இருப்பதை பாருங்கள். பட்டத்து யானை - அதன் மேல் இருக்கும் அலங்காரம் மற்றும் மணி - யானை கோழியின் அதிரடி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுவதை தத்ரூபமாய் காட்டும் சிற்பம்.

சரி, இந்த கதையின் தொன்மையை பற்றி தெரிய - கொஞ்சம் படியுங்கள்

தவச் செல்வியாகிய கவுந்திய்டடிகளும் கோவலனும் கண்ணகியும் ‘முறம் போன்ற செவியினையுடைய யானையுடன் அஞ்சாது போரிட்ட கோழி என்னும் பெயருடைய ‘உறையூர்’ நகரின் கண்ணே சென்று தங்கினார்கள்.

சிலப்பதிகாரம் வரிகள் - கோவலனும் கண்ணகியும் மதுரை செல்லும் வழியில் கவுந்தியுடன் உறையூரில் தங்கிய செய்தி. அப்போதே ( சுமார் இரண்டாம் நூற்றாண்டு ) இந்த கோழியின் வீரக் கதை பெருமை பெற்றுள்ளது என்றால் ….

மறுமொழி அளிக்கவும் »

அஜந்தா மற்றும் எல்லோரா முதற் பார்வை பார்த்தோம் - அப்போது தஞ்சை பெரிய கோவிலுக்கும் அதே போல ஒரு முதற் பார்வை இட வேண்டும் என்று நண்பர் பலரும்
கேட்டுக்கொண்டதின் பெயரில் இதோ தஞ்சை பெரிய கோவில் - இதற்கு முன்னரே ஒரு சிறு சிற்பம் வெளி வந்து விட்டது எனினும் இது இந்த தொடரின் முதற் பாகம்

சோழ பேரரசன் முதலாம் ராஜ ராஜன், ஒரு அற்புத மனிதன். அருள்மொழி என்ற இயற் பெயர் கொண்ட இவன், பட்டத்து இளவரசனான தனது அண்ணன் ஆதித்ய கரிகாலன் படுகொலையுற்ற பின் (969 AD) , தனது சிற்றப்பன் அரியணை மீது ஆசை கொண்டதனால் அவனுக்கே விட்டுக்கொடுத்து ( 985 AD) பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து பிறகு அரியணை ஏறி சோழ சாம்ராஞ்சியத்தை அதன் உச்சிக்கு இட்டு சென்று அதற்கு முடிசூடுவதுபோல ஒரு கோவிலை பிரமாண்டமாக கட்டி அதற்க்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூடினான்.

இதை திருவாலங்காடு தகடுகள் மூலம் நாம் அறியலாம் …. திரு கே ஏ நீலகண்டசாஸ்திரி சோழர்கள் புத்தகத்தில் … பக்கம் (pages 212 -213)

Verse 69 of the plates

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால்
ஆதித்தன் மறைந்தான், கலியின் வல்லமையால் ஏற்பட்ட
காரிருளைப் போக்க , அருண்மொழி வர்மன் அரசனாகுமாறு
அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் ஷத்ரிய தருமத்தை
நன்கு அறிந்த அருண்மொழி அரச பதவியை மனதார விரும்பவில்லை
என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரசப் பதவியை
விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீரு மட்டும்
அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரச பதவியை
மறுத்துவிட்டான் …..

என்று தெரிவிக்கின்றன

மேலும் verse 70 of the plates

அருண்மொழியின் உடலில் உள்ள சில அடையாளங்களை பார்த்தபோது,
மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூவுலகுக்கு
வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை
ஆளும் பொறுப்பை தானே மேற்கொண்டான்.

( அமரர் கல்கி இதனை எடுத்து அதில் தனது அமர காவியமான பொன்னியின் செல்வனை நமக்கு படைத்தார் )

இன்னொரு தகடு - ஈசலம் - திரு நாகசுவாமி அவர்களின் தளத்தில் மேலும் படியுங்கள்

http://tamilartsacademy.com/articles/article29.xml

அருள்மொழி - நீண்ட அழகிய கரங்களை உடையவன், உள்ளங்கையில் சங்கு சக்கர ரேகை கொண்டவன் - கங்கா , வங்கா , கலிங்கம் , மகதா , மாலவா , சிங்கள , ஆந்திர , ரட்ட (ராஷ்ட்ரகூட அல்லது மஹாராஷ்ட்ரா ) ஓட்ட (ஒரிசா ), கதஹா , கேரள , குத மற்றும் பாண்டிய …தேசங்களை வென்று - அதனால் குவிந்த செல்வதை கொண்டு தஞ்சை நகரியில் பெரும் கற்றளி அத்யுத்தமம் என்ற ராஜராஜேஸ்வரம் கோவிலை நிறுவினான்.

the big temple at a distance towering.jpg

தஞ்சை நுழையும் போதே விண்ணை தொடும் விமானம் கண்ணில் படும் ( கர்ப்பக்கிருகம் மேல் இருப்பது விமானம் - வெளி வாயில் கோபுரம் - பொதுவாக கோபுரம் விமானத்தை விட உயரம் இருக்கும் - எனினும் இங்கும் ராஜ ராஜனின் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரதிலும் விமானம் பெரியது - ஏன் ?)….சரி சற்று அருகில் செல்வோம் - அடுத்த மடலில்

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 1  1