Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ராவணன்’

நான் திரு பிரதீப் சக்ரவர்த்தி அவர்களை நேரில் பார்த்தது இல்லை (இதுவரை). சென்ற மே மாதம் முக நூல் அறிமுகம் கிடைத்தது. முதல் உரையாடல் முடிந்தவுடனே புரிந்தது. இவர் சாதாரண நபர் இல்லை என்று. கூகிளார் உதவியுடன் அவர் நாளேடுகளுக்கு எழுதிய பதிவுகள் கிடைத்தன. இப்படி ஒரு விவேகமும் தீர்க்க சிந்தனையும் அத்துடன் நல்ல ஆராய்ச்சி செய்து மக்களுக்கு சென்றடையும் எளிய முறையில் எடுத்துச் செல்லும் நோக்கம் உடைய இவர், எழுத்து வடிவில் மட்டும் அல்லாமல், வெற்றிகரமாக சென்னையில் ஒரே வருடத்தில் முப்பது ஆலய நடை (டெம்பிள் வாக் ) நடத்தினார் என்பதையும் படித்தேன். சமீபத்தில் அவர் ஆற்றிய சில உரைகளின் படமும் இணையத்தில் கிடைத்தது. அப்போது தான் புரிந்தது நவீன ஆடைகளுக்குள் பழைய காலத்து கதாகாலக்ஷேபம் செய்யும் வித்தகர்கள் போன்று ஹாஸ்யம் கலந்து மக்களை தன வசம் இழுத்து நல்ல கருத்துக்களை அவர்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்லும் வசீகரம் கொண்ட ஒரு வித்துவான் இருக்கிறார் என்று.

profile page

இப்படி இருக்கையில், அவர் விரைவில் இரு நூல்களை வெளியிடுகிறார் என்றதும் மகிழ்ந்தேன். தஞ்சை பற்றிய ஒரு நூல் ” Thanjavur - A Cultural History” மற்றும் ” தமிழகக் கோயில் வாகனங்கள் “. முதல் நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. இரண்டாவது நூல் சமீபத்தில் சன்மார் நிறுவன பதிப்பகமான கலம்க்ரியா அவர்கள் உதவியுடன் வெளிவந்துள்ளது.

வாகனம் என்றவுடன் நினைவுகள் சலசலவென பின்னோக்கி ஓடின. ஏன் முதல் மிதிவண்டி - பி எஸ் ஏ நிறுவனம் எஸ் எல் ஆர்!, கொஞ்சம் போன பின்னர் அட்லாஸ் நிறுவன எம் டி பி! அப்பாவின் லாம்பி ஸ்கூட்டர், பல ஆண்டுகள் கழிந்த பின்னர் பஜாஜ் சேடக்! அப்போது சாலைகளில் நான்கு பேர் ஒரே சேடக் மேல் பயணம் செய்யும் பொது அருகில் செல்லும் அம்பாசடர் அல்லது ஃபியட் கார்கள் (பெங்களூர் ஆசாமிகள் மட்டும் அந்த பிரீமியர் பத்மினியை விட மாட்டார்கள்!!). நடுவில் ஸ்டாண்டர்ட் 20000, மின்மினி போல வந்து மறைந்தது. பிறகு மாருதி 800 களின் ஆதிக்கம் என்று, நமக்கோ அந்நாட்களில் அர்னால்டு படம் பார்த்துவிட்டு ஹர்லி டேவிட்சன் மோகம், ராயல் என்பீல்ட் புல்லட் என்று ஏழைக்கு ஏற்ற எள்ளுண்டை!! ஒரு சிறு வரலாறு. எனினும் நாம் இன்று இன்னும் பின்னோக்கிச் செல்கிறோம், கால் நடை, மற்றும் கால்நடை வாகனங்களே இருந்த காலம். அந்தப் பாரம்பரியத்தை இன்றும் போராடி காத்து நிற்கும் கோயில் வாகனங்கள்.

ஆம் போராட்டம் தான். வருடத்தில் ஒரு நாளோ இரண்டு நாட்களோ வெளியில் வரும் இவை, அதுவும் தமிழ் நாட்டில் தினசரி பூஜை நடத்தவே திண்டாடும் நிலையில் உள்ள கோயில்களில் விழா எடுக்க எங்கே முடிகிறது, அப்படியும் விழா நடந்த பின்னர், பூட்டிய இருட்டு அறைகளுக்குள் வசிக்கும் இவற்றை பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. ஆலயத்தை சுற்றி வரும்போது கண்ணில் பட்டால் பார்ப்பது கூட இல்லை. இந்த நிலை அங்கு தூண்களில் உள்ள அருமையான சிற்பங்கள், விமான/கோபுர சுதை வேலைப்பாடுகள் என்று பல கலை பொக்கிஷங்களின் இன்றைய அவல நிலை தான். அப்படி இருக்கும் இவற்றில் வாகனங்களைப் பற்றி எழுத எண்ணிய பிரதீப் அவர்களுக்கு முதலில் ஒரு பாராட்டு.

Temple+vahanas+of+tamilnadu

நூல் முகம் பார்த்தவுடனே நெஞ்சம் கொள்ளை போனது. அருமையான கோட்டோவியம். முகப்படம் மட்டும் அல்ல, ஒவ்வொரு வாகனத்தையும் அருமையாக வரைந்துள்ளார் திரு V. விஜயகுமார் அவர்கள். மென்மேலும் இப்படி பல ஓவியங்களைப் படைத்து அமரர் சில்பி மற்றும் ஓவியர் பத்மவாசன் போன்று வரவேண்டும் என்று வாழ்த்துக்கள். மேலும் இந்த முழு நூலையும் இரு மொழிகளில் படைத்திருப்பது வரவேற்கத்தக்கது. முதல் பார்வையிலேயே இந்த நூல் ஆர்வலர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆசிரியரின் முன்னுரை படிக்கும் போது ஆரம்பமே வித்தியாசமாக இருந்தது. இப்படி எதற்காக ஒரு முன்னுரை ஆரம்பம் என்று தோன்றியது? தனது நிலையை தைரியமாகவும் தெளிவாகவும் விளக்க ஆசிரியரின் இந்த வெளிப்படையான எழுத்துக்கள் நமது சமயத்தில் இன்றும் இருக்கும் பிரிவுகள் பற்றி நினைவூட்டின. தொடர்ந்து படிக்கையில் அவர் நூல் அறிமுகத்தில் சுட்டிக்காட்டும் ஒரு கல்வெட்டுக் குறிப்பு நூலின் தன்மையையும் ஆசிரியரின் நோக்கங்களையும் அருமையாக எடுத்துக்காட்டியது.

நூலின் பொருளடக்கம் இதோ. பல அறிய வாகனங்களைத் தேடி பிடித்து விவரித்துள்ளார் பிரதீப்.

contents

நமக்கென்று நூலில் இருந்து ஒரு சிறப்பு பார்வை - அதிகார நந்தி.

adhikara+nandhi+content
adhikara+nandhi+sketch

எனக்கு மிகவும் பிடித்த வாகனம் கைலாச வாகனம், அடியில் சிக்கி இருக்கும் இராவணன் , தனது ஒரு தலையை கொய்து தன கையையே தண்டாக கொடுத்து நரம்புகளை மீட்டும் காட்சி அருமை.

kailasa+vahanam

அடுத்து ஆடு வாகனம், ஆமாம் சரியாகத் தான் படிக்கிறீர்கள். பிரதீப் எந்த அளவிற்கு இந்த நூலிற்காக உழைத்துள்ளார் என்பது இந்த வாகனத்திற்கு அவர் கொடுக்கும் இலக்கிய சான்றுகள் மூலம் தெரிகிறது.

aadu+vahanam

எல்லா வாகனங்களும் பிராணிகள், பறவைகள் , தேவர்கள் என்பது இல்லை. சில மரங்களும் வாகனங்களாக உள்ளன. நமது முன்னோர் இயற்கையை எப்படி கொண்டாடி வழிபட்டனர் என்பதன் குறிப்புகளே இவை. (நாம் இந்தப் பாடத்தை என்று தான் கற்போமோ!)

நமது மதம் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதில் வரும் புராணக் கதைகள், அத்துடன் வரும் முரண்பாடுகள், எல்லாம் அழகு தான். ஒரு புலி வாகனத்தை பற்றிய சிறு குறிப்பில் கூட வாதம் ஏற்படலாம் என்பதும் அழகு தான்.

நூல் ஆசிரியர், ஓவியர், மற்றும் இதை உருவாக்கி வெளி கொண்டுவந்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நூலை படிக்கும் போதே, முன்னிரவு நேரத்தில் ஜன நெரிசல் நிறைந்த வீதியில், தாரை தப்பட்டை ஓசையுடன், ஆடி ஆடி பவனி வரும் கம்பீர வாகனத்தின் மேல் அமர்ந்து வரும் சுவாமி தரிசனம் மட்டும் அல்லாமல், ஒளியுடன் மண்ணெண்ணெய் உமிழும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் வாசமும் வருகிறது.

பின் குறிப்பு: தற்போது நூல் முதல் பிரதிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. விரைவில் அடுத்த பிரதி வெளிவரும் !

மறுமொழி அளிக்கவும் »

என்னடா? தப்பு தப்பா தலைப்பு போட்டுள்ளேன் என்று பலர் கூறுவது கேட்கிறது. முழுவதையும் படியுங்கள் அப்போது தான் புரியும். அதுவும் இதை நான் சொல்ல வில்லை - தேவாரப் பாடல் துணை உண்டு.
www.shaivam.org

திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

இரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

திறங்கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

பொருளுரை:
(இறைவன் பால்) அடிமைத்திறம் மிக்க அடியவர்கள் மேல் தீவினையாகிய
நோய் வராத வண்ணம், அறத்தை அடிப்படையாகக் கொண்ட

சிவதருமத்தை உரைத்த பிரான் அமரும் இடமாவது,
போர்வெறி கொண்டு தன்னுடைய வலிமையையே நினைந்து (அறம் கருதாது)
வந்த இராவணனை வென்ற சடாயுவின் இடமான
திருப்புள்ளிருக்கு வேளூராகும்.

ஜடாயு இராவணனுடன் போரிட்டு மடிந்தான் என்று தானே படித்தோம். இது என்ன புதுக் கதை ? சரி சிற்பத்தை பார்ப்போம். ஜடாயு இராவணனு்டன் போரிடும் சிற்பம் மிகவும் சிலவே உள்ளன. பெரும்பாலும் ரவி வர்மா ஓவியமே கிடைக்கும்

Ravi_Varma-Ravana_Sita_Jathayu

எனினும் தேடி பிடித்தோம். ஒன்று நண்பர் முரளி அவர்கள் உபயம் - எல்லோரா கைலாசநாதர் கோயில் சிற்பம். மற்றொன்று இந்தோனேசியா பரம்பணன் ( அதை பின்னர் பார்ப்போம்) - இராவணன் வெறி கொண்டு ஜடாயுவை ஒரு பெரிய வாளால் தாக்கும் சிற்பம்.

ravana jatayu

அந்த வாள் தான் மிகவும் முக்கியம்.

சரி , யார் இந்த ஜடாயு?. முன்னர் கருடனின் கதையில் பார்த்தோமே - கருடனின் அண்ணன் அருணன் - சூரியனின் தேரோட்டி, அவனுடைய மைந்தன். அருணனுக்கு இரண்டு மகன்கள் - முதல் மகன் சம்பாதி , அடுத்து ஜடாயு. இருவரும் பறவைகள்.

கருடனின் அண்ணன்

ஒருமுறை இருவருக்கும் போட்டி - யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல, அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான். அப்போது அவனது சிறகுகள் கருகின . கிரேக்க ஐகாருஸ் கதை போல உள்ளதா? இது நான் கூறுவது அல்ல - கம்பன் கூறுவது ( முடிவில் ராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன )

சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல்

‘தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி, சடாயு, என்பேம்;
சேயொளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்;
பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்; 53

‘”ஆய் உயர் உம்பர் நாடு காண்டும்” என்று அறிவு தள்ள,
மீ உயர் விசும்பினூடு மேக்கு உறச் செல்லும் வேலை,
காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணுறாமுன்,
தீயையும் தீக்கும் தெய்வச் செங் கதிர்ச் செல்வன் சீறி, 54

‘முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை,
“எந்தை! நீ காத்தி” என்றான்; யான் இரு சிறையும் ஏந்தி
வந்தனென் மறைத்தலோடும், மற்று அவன் மறையப் போனான்;
வெந்து மெய், இறகு தீந்து, விழுந்தனென், விளிகிலாதேன். 55

‘மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்,
கண்ணிடை நோக்கி, உற்ற கருணையான், “சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை
எண்ணிடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி”‘ என்றான்.

சரி சரி, மீண்டும் சிற்பத்தின் கதைக்கு வருவோம்.

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?p=631

124. மாச் சிச்சிரல் பாய்ந்தென மார்பினும் தோள்கள் மேலும்
ஓச்சி சிறகால் புடைத்தான் உலையா விழுந்து
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் எனப் புகன்றான்.

பெரிய மீன் கொத்திப் பறவை குறி தப்பாமல் மீனைப் பற்ற பாய்ந்தாற் போலச் சடாயு இராவணன் மேலே பாய்ந்தான். அவனது மார்பிலும் தோள்களிலும் சிறகுகளால் ஓங்கி அடித்தான். அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். அதைக் கண்ட சடாயு, ” உனது வலிமை, போய் விட்டது! உனது வலிமை இவ்வளவு தானா?” என்று இழிவாக கூறினான்.

125. அவ் வேலையினை முனிந்தான் முனிந்து ஆற்றலன் அவ்
வெல் வேல் அரக்கன் விடல் ஆம் படைவேறு காணான்
இவ் வேலையினை இவன் இன் உயில் உண்பென் என்னா
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான்.

வல்லவனான இராவணன் அப்போது மிகுந்த கோபம் கொண்டான். அவ்வாறு கோபித்த - கொடிய வேலை இயல்பாக ஏந்தி இருக்கும் அந்த இராவணன், அந்த நேரத்தில் சடாயுவின் மேல் செலுத்தத்தக்க ஆயுதம் வேறு இல்லாததைக் கண்டான். அதனால் ” இப்பொழுதே இவனது இனிய உயிரை அழிப்பேன் ” என்று முடிவு செய்து குறி தவறாமல் தாக்கும் ‘சந்திரகாசம்’ என்னும் பெயருடைய தனது நீண்ட வாளை, உறையில் இருந்து எடுத்து, சடாயுவின் மீது மிகச் சரியாக எறிந்தான்.

அது என்ன சந்திரகாசம். இராவணன் பலமுறை பலரிடம் தோற்று பொன்னன். நாம் வாலியிடம் அவன் தோற்றதைக் கூட முன்னர் பார்த்தோம்.

வாலியிடம் இராவணன் தோற்றான்

அதே போல அவன் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்றான் ( சிற்பம் இன்னும் எதுவும் கிடைக்க வில்லை ). மேலும் ஈசனிடம் அவன் தோற்ற காட்சியை நாம் பல இடங்களில் பார்த்தோம். அவ்வாறு அவன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது ,பிறகு தனது கை நரம்புகள் மற்றும் தலை கொண்டு செய்த வீணையை மீட்டி சிவபெருமானின் ஆசி பெற்ற பின்னர் அவர் அளித்த பரிசே இந்த வாள். மேலும் படியுங்கள்
இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 2

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 3

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 4

126. இராவணன் வாளால் சடாயு வீழ்தல்

வலியின் தலை தோற்றிலன் மாற்ற அருந்தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்னின் வேந்தன்
குலிசம் எரியச் சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான்.

இராவணனது வலிமைக்கு முன்னே அதுவர சடாயு தோற்றான் அல்லன். ஆனாலும் எவறாலும் தடுக்க முடியாத சிவபெருமான் அளித்த- தெய்வத்தன்மை பொருந்திய அந்த வாளால் சடாயு வீழ்த்தப்படும் நேரம் வந்து விட்டது என்று ஆகிவிட்டது. அதுவன்றியும் அவனுடைய வாழ்நாளும் குறைவு பட்டு முடியும் கட்டத்தை அடைந்துவிட்டது. ( இந்திரனின் வஜ்ராயுதம் போல் பலம் பொருந்திய, அதை விடவும் பலம் பொருந்திய வாளால் ஜடாயுவின் சிறகுகள் வெட்டி வீழ்த்தப் பட்டன, ராவணனால். இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது என்பதைக் குறிக்கும் விதமாய் மலை விழுந்ததைப் போல எனச் சொல்லி இருக்கின்றது. சந்திரஹாசம் என்னும் இந்த வாள் அத்தகையதொரு வலிமையுடனேயே ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியது.)

இப்போது ஒப்புக்கொள்கிறீர்களா - இராவணனை வென்றவன் ஜடாயு என்பதை..

படம் - திரு முரளி , குறிப்புகள் / விளக்கங்கள் உதவி திரு சுப்ரமணியம் அவர்கள், திரு திவாகர் அவர்கள் மற்றும் கீதா அம்மா

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 4  1  2  3  4 »