நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி

முந்தைய பதிவில் ஆவுடையார் கோயில் குதிரை வீரனை பற்றி பார்க்கும் பொது, அதனை ஒட்டிய கதையை பிறகு பார்ப்போம் என்று கூறினோம். இன்று திரு அரவிந்த் அவர்கள் உபயம் , கீதா அம்மா அவர்கள் உதவியுடன் பாபநாசம் பாலைவனநாதர் கோயிலில் உள்ள இந்த அற்புத சிற்பத்தை பார்ப்போம்.


மாணிக்க வாசகர் என்னும் திருவாதவூரார் வரலாறு ( நன்றி விக்கி )

படம் பார்த்தோம். பாடல். வித்தியாசமாக ஒரு திரைப்பட பாடல்.

படம்: மதுரை வீரன்
பாடல் : கண்ணதாசன்
இசை: G.இராமநாதன்

ஆடல் காணீரோ!
விளையாடல் காணீரோ!

ஆடல் மதுரையின் ராஜ தம்பிரனாம் எங்கள்
ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ (ஆடல்)

ஊற்றுப்பெருக்காலே உவப்பூட்டும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கொரு ஆள் தந்து
வேந்தனின் ஆணை தன்னை
ஏற்று விணை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்

பிள்ளைப் பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து பித்தனைப் போலே

கைப்பிரம்பாலே பட்ட அடி பேசிடும் சகல் ஜீவராசிகள்
முதுகிலும் பட்டு வடுவுற்ற ஈசன் திருவிளையாடல் காணீரோ ( ஆடல்)

நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி
நாரைக்கு முத்தி கொடுத்து
உயர் நால்வேத பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து நக்கீரர்க்கு உபதேசித்து
வர குணப்பாண்டியர்க்கு சிவ லோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல்யாணைக்கு கரும்பூட்டி
வைர வளை முத்து வளை ரதன வளை விற்ற

திருவிளையாடல் காணீரோ
ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ!

தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: “திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான்.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் வாதவூராரிடம் கோடிப்பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான். ( இதை அவர் ஒட்டகத்தின் மீது வைத்து எடுத்து வந்தார் என்று ஒரு குறிப்பு கிடைத்தது. இது ஒட்டகமா ? அப்படி தெரியவில்லை )

வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்

‘சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்’ என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார்.

பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.

‘குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை’ என்று கூறி வாதவூரார் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து ‘குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்’ என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் ‘எங்குமே குதிரைகள் தென்படவில்லை’ என்ற செய்தியோடு திரும்பினர்.

ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. ‘இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெய்யிலில் நிறுத்துவேன்’ என்று கூறிப் பாண்டிய மன்னன் வாதவூராரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் வாதவூரார் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். வாதவூரார் சிவனை தியானித்தார்.

உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரைப் அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, ‘இவை உன்னுடையவை’ என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். ( இந்த சிறிய விவரத்தை கூட சிற்பி விடவில்லை )

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின.

திருப்பாண்டிப்பதிகம்: பாடல் எண்: 527

சதுரை மறந்தறிமால் கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல் வந்து கூடிடு மேல் குடி கேடு கண்டீர்
மதுரையா மன்னன் மறுபிறப்பு ஓட மறித்திடுமே.

இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று மணலில் வெய்யில் நேரத்தில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

சிவபெருமானுக்கு பக்தனின் துயரம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது.

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான்.

ஒரே ஒரு வந்திக் கிழவி, பிட்டு சுட்டு விற்பவள், மட்டும் தனிக்கட்டை. எவ்வளவு சொல்லியும் பாண்டியனின் வீரர்கள் கிழவியை விடவில்லை, அவள் வீட்டில் இருந்தும் ஒருவர் வரவேண்டும். நீ இல்லை என்றால் வேறு ஆளை அமர்து என்று கூறுகின்றனர்.

அவள் வீட்டில் இளைஞர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது என்று யோசிக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து அவள் சார்பாக வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்குச் சம்மதித்த சிவபெருமான் தனது ‘வேலையைத்’ தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். சிற்பத்தை பாருங்கள், வயிறு முட்ட உண்டு தூப்பையை தடவிக்கொண்டு தலைக்கு மன்வாரும் கூடையை வைத்து உறங்கும் பாணி அருமை.

மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.

கோபம் கொண்ட அரசன் அவனைப் பிரம்பால் அடித்தான்.

கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி அண்ட சராசரங்களின் அனைத்து உயிர்களின்மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் கேட்டது, ‘மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்’ என்று அக்குரல் சொல்லிற்று.

பிட்டுக்கு மண் சுமந்தல்: திருக்கழுக்குன்றப் பதிகத்தில் இருந்து: பாடல் எண் 469


“பிட்டு நேர்பட மண்சுமந்த
பெருந்துறைப்பெரும் பித்தனே
சட்டம் நேர்பட வந்திலாத
சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிற்பக்கலைக்கு அழகூட்டும் ஓவியம் – திருபெருந்துறை ஆவுடையார் கோயில் குதிரை வீரன்

நாம் முன்னர், ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டபத்தின் அற்புதத் தூண்களில் உள்ள குதிரை வீரர் சிலைகளை பார்த்திருந்தோம், அதை தொடர்ந்து இன்று மீண்டும் ஒரு அற்புத குதிரை வீரன்.

பரிமேல் அழகர்கள் ஆதி காலத்தில் இருந்தே வீரர்கள், ஓவியர்கள் மற்றும் சிற்பிகளை ஈர்ப்பதுண்டு. குதிரை சவாரி என்பது வீரத்தின் இருப்பிடமாய் இருக்க, சீறும் குதிரை சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் பல இடங்களில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான். நாலு கால் பாய்ச்சலில் பறக்கும் குதிரை, அதுவும் ஒவ்வொரு சதையிலும், நரம்பிலும் இருந்து எழும் வேகம், அதன் மேல் அமர்ந்திருக்கும் வீரன் அதனுடன் ஒன்றாய் கலந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அனுபவம் – பார்க்கும் கோழையின் ரத்தத்தைக் கூட மாற்றி அவனை வீரனாக்கும் ( இன்றைய இளைஞர்கள் இந்த உணர்வை மோட்டார் சைக்கிளில் பறக்கும் போது சற்று அனுபவிக்கலாம் ) – அந்த உணர்வு ஒரு சுதந்திரம். அதே போல எதிரில் இருக்கும் பெரும்படையை கண்டு அஞ்சாமல், வேல் ஏந்தி செல்லும் குதிரை படையை கண்டு அவர்களே அஞ்சி ஓடும் கதை பலவற்றை நாம் கேட்டுள்ளோம். பல வீடுகளில் வாண்டுகள் தூங்கும் முன்னர் கேட்கும் கதைகளில் குளம்பொலிகள் மிகுதியாக வரும். அதில் வரும் குதிரை வீரர்கள் – அது மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரை போசிபல்ஸ் அல்லது பிரிதிவ் ராஜ் சௌஹனின் செடக் அல்லது நாம் தமிழ் வீரர்களான வாள் வில் ஓரியின் ஓரி, தேசிங்கு ராஜனின் பஞ்சகல்யாணி, இப்படி அந்த அற்புத குதிரைகளின் டக், டக், டக் எனும் குளம்பொலி சப்தம், பல மழலைகளை தூக்கத்திலும் அதன் பின்னர் கனவுகளிலும் ஆட்கொண்டன.

இன்று நாம், அதே போல ஒரு அற்புத குதிரை வீரனை பார்க்கப்போகிறோம். கல்லில். அதுவும் குதிரையைப் பற்றிய ஒரு அற்புதம் நடந்த மண்ணில். ( அதை மற்றொரு பதிவில் பார்ப்போம் ) – ஓவியர் திரு ஜீவா அவர்களின் உதவியுடன் இன்று ஆவுடையார் கோயில் திருப்பெருந்துறை செல்கிறோம்

ஒரு அற்புத ஓவியர் (www.jeevartistjeeva.blogspot.com) அவரது ஓவியத்தையும் சிற்பத்தின் படங்களையும் நம்முடன் பகிர்கிறார்.

இந்த கால அட்டவணையில் ( 14th C முதல் – நாயக்கர் காலம் / விஜயநகர மன்னர்கள் காலம்) இந்த மாதிரி அற்புத சிற்பங்கள் நிறைந்த மண்டபங்களைக் காணலாம். பலர் பலமுறை இந்த ஆலயங்களுக்கு சென்றும் இந்த அற்புத படைப்புகளை ஒரு நிமிடம் நின்று கூட பார்ப்பதில்லை.

சரி, இந்த சிற்பத்தின் அழகை பார்ப்போம். குதிரை, குதிரை வீரன், அணிகலன், ஆபரணம் என்று இதனை நுணுக்கங்களை எப்படித்தான் கல்லில் செதுக்கினார்களோ.

குதிரை வீரனின் ஆயுதங்கள், அவன் கையில் பிடித்திருக்கும் ஈட்டி என்று ஒரு சின்ன குறிப்பை கூட விடாமல் ஒரே கல்லில் செதுக்கிய வேலைப்பாடு அருமை.

சிலை மட்டும் ஒரே கல்லில் வடிக்கவில்லை, இவை அனைத்துமே அந்த ஒரு தூணின் பாகம்.

இது மனித வெளிப்பாடா ??

படங்களுக்கு நன்றி திரு கந்தசுவாமி


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில்

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நமது வாசகர் கவிதா அவர்கள் ஆவுடையார் கோயில் சிற்பங்களை காண வேண்டும் என்று கூறினார். நண்பர் திரு சிவராம் கண்ணன் அவர்கள் தன் பணியின் காரணமாக அமெரிக்கா சென்றிருந்த போதும் அங்கிருந்து படங்களை அனுப்பி நம்மை ஆவுடையார் கோயிலின் அருமையான சிற்பங்களை ரசிக்க ஒரு வாய்ப்பை தந்துள்ளார்.

சிற்பங்களை காணும் முன்னர், நாம் இந்த கோயில் உருப்பெற்ற ஒரு அதிசய கதையை கேட்க வேண்டும். இந்தியா மற்றும், உலகையே சென்ற வாரம் உலுக்கிய சத்யம் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் போல, ஆயிரத்தி இருநூற்று ஆண்டுகளுக்கு முன்னரே நடந்த ஒரு மோசடி – ஆவுடையார் கோயில் உருவான கதை. கதையை படித்த பின்னர் அது மோசடியா இல்லை இறைவன் இட்ட விதியா என்று நீங்களே முடிவு செய்யுங்கள் .

சரி, இதோ கதை – மதுரையை அடுத்து திருவாதவூர் – அங்கே வதவுரார் என்று ஒரு சிறுவன் – சிறு வயதில் இருந்தே அறிவுக் கூர்மை , இறை பக்தி என்று பலரையும் வியக்க வைத்தான். அவன் புகழ் பரவியது – பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் இதை கேட்டு , தனது அரசவையில் இடம் அளித்து தென்னவன் பிரம்மராயன் என்ற பெயர் இட்டு தன் சபையில் முதல் மந்திரி ஆக்கினான். எல்லாம் நன்றாக சென்றது.

அப்போது அரபு நாட்டு உயர் ஜாதி குதிரைகள் கப்பல் மூலம் சோழர் துறைமுகத்தில் விலைக்கு வருவதை அறிந்த மன்னன், தன் முதல் மந்திரியிடம் நிறைய பொன் கொடுத்து அவற்றில் நல்ல பரிகளை வாங்கி வர அனுப்பி வைத்தான். அவ்வாறே வதவுரார் சோழ நட்டு துறைமுக நகரம் செல்ல பயணித்தார்.

வழியில் திருபெருந்துறை அடைந்த வதவுரார், சற்று இளைப்பாரினார். அப்போது அங்கே அற்புதம் நிகழ்ந்தது – ஒரு மரத்தடியில் ஈசன் போதனை செய்து கொண்டு அவருக்கு காட்சி தந்தார். மற்றது சரித்திரம்

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்,
.. மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்,
பந்தணை விரலியும் நீயும், நின் அடியார்
.. பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே,
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்,
.. திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி வந் தாண்டாய்,
.. ஆரமுதே, பள்ளி எழுந்தருளாயே.

முதல் திருவாசகம் அங்கே உயிர்பெற்றது

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

பொழிப்புரை:

தலைவனது பெருமையை உண்ர்த்தும் நாமமாகிய நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தானது என்றும் நிலைபெருகுக, தலைவனது திருவருட்சக்தியானது என்றும் விளங்குக கண்ணைமூடி விளிக்கும் நேரமளவுகூட அடியேனது உள்ளத்தை விட்டு நீங்காதவன் தாள்வாழ்க திருவாவடுதுரையில் எழுந்தருளி அடியார்க்கு மெய்
உணர்த்தி ஆட்கொண்டருளிய முதல்வனின் திருவடிகள் வாழ்க தன் நிலையில் ஒருவனாய் அன்பர் நினைக்கும் பல வடிவம் உடையவனாய் உலகுயிரெங்கும் தங்குவானுடைய திருவடிகள் என்றும் பொலிவு பெறுக

ஈசன் அவரது அமுத மொழியை கேட்டு அவருக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டி அங்கே ஒரு கற்றளி எழுப்பிக்க ஆணையிட்டு மறைந்தார்.

ஆண்டவன் ஆணை இட்ட பின் அரசன் ஆணையை மறந்து – பரிகளை வாங்க வைத்திருந்த பொன் அனைத்தையும் திருபெருந்துறை கோயிலை கட்ட செலவிட்டார் ..அதனால் என்ன நடந்தது – நரியை பரியாய் மாற்றிய கதை – அதை பின்னர் பார்ப்போம்.

இந்த கோயிலில் லிங்கம் இல்லை – வெறும் ஆவுடை மட்டும் தான் – அதனால் தான் இத்தலத்திற்கு ஆவுடையார் கோயில் என்று பெயர். இங்கே பரம்மனுக்கு காயத்ரி மந்திரத்தை சொல்லி கொடுக்கும் ஈசன் ( ஆத்மநாதர் ) – அதில் இருந்து நான்கு வேதங்களும் பிறந்ததாகவும் – அதனால் இந்த நகரம் சதுர்வேதபுரம் மற்றும் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது.

இப்போது அவ்வளவு பொன் கொடுத்து கட்டிய கோயிலின் அழகை கொஞ்சம் பார்ப்போம்.( சத்யம் பற்றி இங்கே இட்டது வாசகர் கவனத்தை ஈர்க்கவே – தவறாக இருந்தால் மன்னிக்கவும் )

சிற்பங்களை பார்க்கும் முன், எனக்கு மிகவும் பிடித்த – பலரும் பார்க்க மறக்கும் – தூண்கள், மேற்கூறை – இந்த கோயிலில் மிக அபூர்வமாக இவை வடிக்கப்பட்டுள்ளன. சிற்பி தனது முழு திறனையும் வெளி கொண்டுவர ஒவ்வொரு கல்லையும் கலை பொக்கிஷமாக மாற்றி உள்ளான்.



முதலில் மேற்கூறை, தொலைவில் இருந்து பாருங்கள் -தெரியவில்லையா ? அருகில் செல்வோம். எங்கோ பார்த்த மாதிரி உள்ளதா ? ஆம் நாம் முன்னர் இதே பாம்பை தாளக்காடு கோயிலில் பார்த்தோம். அற்புதமாக வளைந்து படம் எடுக்கும் பாம்பு – கல்லில்.


சரி, இதைத்தான் நாம் முன்னரே பார்த்தோமே என்கிறீர்களா ? சரி இதைக் கொஞ்சம் பாருங்கள் – அலங்காரத் தூண்கள், மேற்கூறை, அதில் வெவ்வேறு கம்பிகள் – நான்கு, எட்டு பக்கங்கள் கொண்ட கம்பிகள், முறுக்கு கம்பி – எல்லாம் கல்லில். என்னே சிற்பியின் திறன்

இதை அனைத்தையும் விட , நம்மை ஈர்க்கும் சிற்ப வேலை பாடு – இதோ,

இதை பற்றி வர்ணிக்க வார்த்தை இல்லை. விடை பெறுகிறேன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment