எல்லோரா குடைவரைகள் சிற்பக்கலை ஆர்வலர்களுக்கு ஒரு புதையல். அது ஒரு குடைவரை என்பதனால் மட்டும் அல்ல அதில் உள்ள சிற்பங்களின் அழகு மற்றும் கலை நுணுக்கங்களும் தான். இன்று எல்லோரா குடைவரை 21 இல் இருந்து ஒரு அற்புத வடிவத்தை பார்க்கப்போகிறோம்.
அழகிய கார்த்திகேயனின் வடிவம் தான் அது.
படங்களுக்கு நன்றி:
http://www.elloracaves.org/search.php?cmd=search&words=&mode=normal&cave_name=21
அருமையான சிற்பம். சாமபங்கத்தில் கார்த்திகேயன், வலது கையை இடுப்பில் வைத்து ( இதற்கு கட்யவலம்பிதம் என்று பெயர் ) நிற்கும் கோலம்.
செதுக்கப்பட்டபோது நான்கு கைகளுடன் இருந்து சிலை, இப்போது காலத்தின் கோலத்தால் மிகவும் சிதைந்துள்ளது. வலது மேல் கரம் சுத்தமாக காணமுடியவில்லை. இடது மேல் கை, அவர் வாஹனமான மயிலை தடிவியவாறு உள்ளது. கீழே இருக்கும் இடது கையில் ஏதோ பாத்திரம் போல உள்ளது. பூணூல் அணிந்து, கழுத்தில் அணிகலன் பல, அழகிய கிரீடம் என்று ஜொலிக்கிறான் குமரன்.
மயிலும் காலத்தின் பசிக்கு தனது தலையை பறிகொடுத்துவிட்டது, ஆனால் அது மயில்தான் என்பது இறக்கை மூலம் தெளிவாக காட்டுகிறது. கால்கள் தான் கொஞ்சம் தடிமனாக உள்ளன ( முருகனை தூக்கி தூக்கி பலம் ஏறிவிட்டதோ?)
மேலே இரு புறமும் கந்தர்வர்கள். இடது பக்கம் ஆண் பெண் இருவருமே குமரனின் அழகை வியந்து வலது கையை விஸ்மயத்தில் வைத்துள்ளனர். வலது புறம், ஆண் கரம் கூப்பி அஞ்சலியில் உள்ளார். பெண்ணோ, கொஞ்சம் துணுக்காக அமர்திருக்கிறாள்.
இப்போது ஆடு தலைகளுக்கு வருவோம். இருவரும் யார்
குமாரனின் இடது புறத்தில் இருக்கும் ஆடுதலை கொண்ட உருவும், சற்றே நளினமாக தெரிகிறது. அதன் வலது கையில் மலரை கொண்ட முகர்ந்துக் கொண்டு இருக்கிறது. இடது கை இடுப்பில் ஒய்யாரமாக – அந்த தலை சற்றே சாய்ந்திருக்கும் பாணி, அனைத்தும் இது ஒரு பெண் என்று எனக்கு உணர்த்துகிறது – உங்களுக்கு ?
வலது புறம் இருப்பது ஆண். ஆனால் அவர் கைகள் வைத்திருக்கும் முறை புது விதமாக உள்ளது. வலது கை வணக்கம் சொல்ல இருந்தாலும், இடது கை மடக்கி உள்ளது. ( புரூஸ் லீ ‘குங் ஃபூ’ பாணியில் வணக்கம் சொல்வது போல உள்ளது)
இவர்கள் யார். குமரனின் கதைகளில் வரும் ஆடு தலை கொண்ட பெண் – அஜமுகி, சூரபத்மனின் தங்கை, கஸ்யப முனிவர்-மாயா வின் பெண்.
முழு கதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.
http://indianmythologytales.blogspot.com/2009/04/tales-of-muruga-part-1.html
சரி, அந்த மற்றொருவர் யார்?. ஆடு தலை கொண்ட ஆண், தக்ஷன் மட்டும் தானே. அப்படியானால் இது தக்ஷனா ? அவனுக்கும் குமரனுக்கும் என்ன சம்மந்தம்?
இரண்டு வாரம் விடுமுறையில் நாளை முதல் செல்கிறேன். தில்லை, தஞ்சை, சீராப்பள்ளி, மதுரை, கோவை என்று பெரிய பயணம் முடிக்க ஆசை – பல அற்புத சிற்பங்களை உங்களுக்கு பரிசாகக் கொண்ட வர திட்டமிட்டுள்ளேன். அதுவரை , வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.