சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன்

என்னடா இது ? தலைப்பே ஒரு தினுசாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? இது இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி போன்று, இன்று நாம் பார்க்கும் சிற்பம் ஒரு நையாண்டி அல்ல.

முதலில் இந்த வரிகள் எங்கே வருகின்றன என்பதை பார்ப்போம். சினிமா படம் போல அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு ஒரு பிளாஷ் பாக் …

புது வெள்ளம் – அத்தியாயம் 30
சித்திர மண்டபம்

கண்டராதித்த தேவர் சிங்காதனம் ஏறினார்.

இவர் தமது தந்தையையும் பாட்டனையும் போலவே சிவபக்தி மிகுந்தவர். அத்துடன் தமிழன்பு மிக்கவர். உண்மையில் இவருக்கு இராஜ்யம் ஆளுவதில் அவ்வளவு சிரத்தையே இருக்கவில்லை. ஆலய வழிபாட்டிலும் தமிழ் இன்பத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார். மகான்களாகிய நாயன்மார்களைப் பின்பற்றிச் சிவபெருமான் மீது துதிப்பாடல்கள் பாடினார். ‘திருவிசைப்பா’ என்று வழங்கும் இப்பாடல்களில் கடைசிப் பாட்டில் இவர் தம்மைப் பற்றியே பின்வருமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்:

“சீரான்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக்
காரார் சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராவின் சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லவர்
பேரா உலகிற் பெருமை யோடும் பேரின்ப மெய்துவரே!”

விஜயாலயனுக்குப் பிற்பட்ட சோழ மன்னர்கள் பழையாறையிலும் தஞ்சையிலும் வசித்தபோதிலும் பூர்வீகச் சோழத் தலைநகர் உறையூர் என்னும் பாத்தியதையை விட்டுவிடவில்லை. உறையூருக்கு இன்னொரு பெயர் கோழி என்பதாகும். ஆகையால் சோழ மன்னர்கள் தங்களைக் “கோழி வேந்தர்” என்று சொல்லிக் கொண்டார்கள்.

இப்போது புரிந்ததா தலைப்பு – சரி அது என்ன கோழி கதை. அதை விளக்க திரு N.S. நாராயணசாமி (www.shivatemples.com) அவர்களின் படங்கள் – பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருமூக்கிச்சரம் (உறையூர்)

அதை பார்க்கும் முன் கதை :

வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் ஒருவன் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. ஒரு தெரு கோழியின் வீரத்தையும் அந்த தளத்தின் அற்புத ஆண்மீக சக்தியையும் கண்டு சோழ அரசன் அந்த ஊரையே தன் தலைநகராக நிறுவினான்.

இப்போது சிற்பம்

அருமையான சிற்பம் – யானையை வீரத்துடன் தாக்கும் கோழி ( யானை மதம் பிடித்து என்று உணர்த்த அதன் வால் சற்றே முறுக்கி இருப்பதை பாருங்கள். பட்டத்து யானை – அதன் மேல் இருக்கும் அலங்காரம் மற்றும் மணி – யானை கோழியின் அதிரடி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுவதை தத்ரூபமாய் காட்டும் சிற்பம்.

சரி, இந்த கதையின் தொன்மையை பற்றி தெரிய – கொஞ்சம் படியுங்கள்

தவச் செல்வியாகிய கவுந்திய்டடிகளும் கோவலனும் கண்ணகியும் ‘முறம் போன்ற செவியினையுடைய யானையுடன் அஞ்சாது போரிட்ட கோழி என்னும் பெயருடைய ‘உறையூர்’ நகரின் கண்ணே சென்று தங்கினார்கள்.

சிலப்பதிகாரம் வரிகள் – கோவலனும் கண்ணகியும் மதுரை செல்லும் வழியில் கவுந்தியுடன் உறையூரில் தங்கிய செய்தி. அப்போதே ( சுமார் இரண்டாம் நூற்றாண்டு ) இந்த கோழியின் வீரக் கதை பெருமை பெற்றுள்ளது என்றால் ….


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மல்லையில் பிள்ளையார் சிற்பங்கள் இல்லை , இங்கு தவிர …

அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நண்பர் ஒருவர் நூறு இடுகைகள் ஆகியும் பிள்ளையார் பற்றி இன்னும் ஒன்று கூட இல்லையே என்றார். சரி, இன்று பிள்ளையார் பற்றி பார்ப்போம். வெறும் சிற்பம் மட்டும் அல்ல – தமிழ் நாட்டில் குறிப்பாக பல்லவ காலத்தில் பிள்ளையார் வழி பாடு பற்றி ஒரு அலசல்.

இது மல்லையின் பல புதிர்களில் ஒன்று – ஐம்பதுக்கும் மேலான சோமாஸ்கந்தர் ( உமா ஸ்கந்தா சகிதர் ) சிற்பங்கள் மல்லையில் இருந்தும் ( சரி அதை பற்றியும் ஒரு தனி மடல் எழுத வேண்டும் ) – எங்கும் ஆனை முகனைக் காணவில்லையே?

ஒரு நிமிடம் – அதற்குள் உங்களில் பலர் கணேஷ ரதத்தை பற்றி மறுமொழி அளிக்க சென்றுவிடாதீர்கள். சற்று பொறுங்கள் – அந்த ரதம் செதுக்கப்பட்ட போது அது சிவ ஆலயம் – எப்படி அது மகனுக்கு வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். ஒன்றொன்றாய் பார்ப்போம்.

பிள்ளையார் பட்டி குடவரை கோயில்களை விட்டு விட்டு ( அவை பற்றி பின்னர் பார்ப்போம் ) – தென்னகத்தில் முதல் முதல் பிள்ளையார் வழிபாடு பல்லவர் காலத்தில் துவங்குகிறது. அமரர் கல்கியின் சிவகாமியின் சபதத்தை படித்த அனைவருக்கும் இது நினைவிற்கு வரும். நரசிம்ம பல்லவன் பன்னிரண்டு ஆண்டுகள் படை திரட்டி தன் தந்தையை தோற்கடித்த புலிகேசியின் வாதாபி மீது படை எடுக்கிறான் – அதில் அவன் தளபதி பரஞ்சோதி அபாரமாக போர் புரிந்து ( 642 AD) புலிகேசியை வென்று வாதாபியை எரிக்கின்றனர். அப்போது வாதாபி நகரின் வாயிலில் இருந்த பிள்ளையார் சிலையை கண்டு பரஞ்சோதி அவரிடத்தில் வெற்றிக்கு வேண்டி – வெற்றி கண்ட பின் – அச்சிலைய எடுத்துக்கொண்டு தென்னகம் திரும்பி சிறுத்தொண்டராக மாறி – சிறுத்தொண்டர் என்ற நாயன்மார் ஆகிறார். அப்படி தென்னகம் வந்தவர் தான் வாதாபி பிள்ளையார் என்று ஒரு கருத்து உள்ளது.. .

ஆனால் இப்போது ஞானசம்பந்தர் பாடல் ஒன்றை பார்ப்போம்

சம்பந்தர் பாடல்

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

குறிப்புரை :
உமாதேவி பெண்யானையின் வடிவுகொள்ள, ஆண் யானையின் வடிவத்தைத் தாம்கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம்பற்றிய இறைவன் வலிவலநகரான் என்கின்றது. பிடி – பெண்யானை. கரி – ஆண்யானை. வடிகொடு – வடிவத்தைக் கொண்டு. கடி கணபதி – தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் – வள்ளற் பெருமக்கள்.

அப்பர் பாடல்

பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

பொழிப்புரை :
பலப்பலவிருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும், இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும், மேம்பட்ட கயிலை மலையையும், நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.

அப்படி என்றால் அவர்கள் காலத்திலேயே ஆனைமுகனின் வழிபாடு மற்றும் அவன் உமை ஈசனின் மைந்தன் என்றவை நிலை பெற்று விட்டன என்பதை அறிகிறோம். அப்படி என்றால் ?

சரி, மீண்டும் கணேஷ ரதம் வருவோம். ஆம், அதில் இருப்பது பிள்ளையார் விக்ரகம் தான். ஆனால் ( திரு சுவாமிநாதன் ஐயா அவர்களின் உதவிக்கு நன்றி ) . செம்பெர்ஸ் என்று ஆங்கிலேயர் மல்லை பற்றி விட்டு சென்ற குறிப்பு 1788 AD.

முதலில் கணேஷ ரதத்தில் ஒரு சிவ லிங்கமே இருந்தது, அதை மெட்ராஸ் ஆளுனர் ஹோபெர்ட் பிரபு எடுத்து சென்று விட்டார். அப்போது அதற்காக இருபது பாகொட மானியம் கிராமவாசிகளுக்கு அளித்தார். அவருக்கு அடுத்து வந்த ஆளுனர் கிளைவ் பிரபு நந்தியை எடுத்து சென்றார்

சரி, அப்போது பிள்ளையார் எப்படி வந்தார். அதற்க்கு திரு லக்ஸ்மையா அவர்களது குறிப்பு 1803 AD.

லிங்கத்தை XXXXX எடுத்து சென்றதால் , மக்கள் அருகில் இருந்த பிள்ளையாரை இந்த கோயிலினுள் வைத்தனர்

சரி, இன்னும் சிலருக்கு சந்தேகம் இருந்தால் – கணேஷ ரதத்தில் உள்ள கல்வெட்டை படிப்போம்.

நிறைய வரிகளைக் கொண்ட இந்த சமஸ்க்ருத கல்வெட்டின் ஐந்தாவது வரி ” சாம்பு (ஈசன் )னின் கோயிலான இதை நிறுவியவன் அத்யந்தகாமன் என்ற பட்டம் உள்ள அரசன், அவன் தனது எதிர் நாடுகளின் அரசர்களை வெற்றி கண்டு ரணஜெயன் என்ற பெயர் எடுத்தவன் “ அதிலேயே அந்த ஆலயத்தின் பெயரும் உள்ளது : “அத்யந்தகாம பள்ளவேஷ்வர க்ரஹ்ம்” (“பல்லவ அரசன் அத்யந்தகாமனின் சிவ ஆலயம் “).

அப்படி என்றால் இது நம்மை எங்கு இட்டு செல்கிறது – மல்லையில் உள்ள அனைத்து குடவரை கோயில்கள், ரதங்கள் , தனி சிற்பங்கள் – எதிலும் விநாயகர் வடிவம் இல்லை.

சரி, மல்லையை நிறுவிய பல்லவ மன்னன் யார் என்றே பல அறிஞர்களிடத்தில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. எனினும் மல்லை கடற்கரை கோயில் ராஜசிம்ம பல்லவனுடையது. நாம் முன்னரே மல்லை கடற்கரை கோயில் பற்றி பார்த்தோம்

மல்லை கடற்கரை கோயில்

இப்போது உங்கள் கவனிப்புத் திறனுக்கு மீண்டும் ஒரு போட்டி – இந்த படங்களில் ஆனை முகனைத் தேடுங்கள்

கண்டு பிடித்தீர்களா – அவருடன் பல பூத கணங்களும் உள்ளனர் – அதாவது பிள்ளையார் என்று தனி இடம் அவருக்கு இல்லை – இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது ?

சிற்பம், வரலாறு என்ற துறைகளில் உங்கள் ஆர்வத்தைத் தூண்டுதலே இந்த தளத்தின் நோக்கம்- எனவே உங்கள் தேடலை துவக்கி – விடை அளிக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

புதிய வருடம் துவங்கும் இந்த நல்ல தினத்தில் மல்லை கடற்கரைக் கோயில் விநாயகனின் சிற்பங்களுடன் உங்களை வாழ்த்தி விடை பெறுகிறோம். இந்த வருடம் உங்களுக்கு ஒரு நிறைவைத் தர அவனை வேண்டுகிறோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சில்பியே சிகரம்

நாம் முன்பு ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டப தூண்களை பார்த்தோம். இதை நம் இளம் ஓவியர்கள் எவ்வாறு அருமையாக வரைந்தனர் என்றும் பார்தோம். அவ்வாறு வரைந்த நண்பர் திரு பிரசாத் அவர்களுடன் பேசும் பொது, அமர ஓவியர் திரு சில்பி அவர்களின் புகை படம் இல்லை என்று வருந்தினார். அப்போது வரலாறு.காம் திரு கோகுல் அவர்கள் இட்ட இழை நினைவுக்கு வந்தது. எனினும் பிரசாத்துக்கு தமிழ் படிக்க கடினம் என்பதால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருகிறேன் என்றேன். அப்போது அதே பக்கத்தில் ஓவியர் சில்பியும் இதே தூண் சிற்பத்தை வரைந்த படம் கிடைத்தது அனைத்தையும் இணைத்து இங்கே இடுகிறேன்.


Temple : Srirangam Sri Ranganathaswami Temple – Trichy, Tamilnadu, India
Location : Sesharayar Mandapa
Features : The mandapa is finely sculpted with various figures. Silpi captures the essence of this complicated and delicate sculpture
Collection sent by : Prof.S.Swaminathan
Original series : Thennatuch Chelvangal
Magazine courtesy : Ananda Vikatan


சில்பியே சிகரம்

சே. கோகுல்

(நன்றி – தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997)

கருவிலேயே திருவுடையவர்களாகப் பிறப்பவர்களின் புகழ் காலத்தால் மறையாதது. ஆழமான உழைப்பின் பலன்களை எந்தக் கறையானும் அரித்துவிட முடியாது. நோக்கத்தில் உயர்வையே நாடிச் செல்லும் எண்ணத்தின் நுட்பம் மாபெரும் நோன்பாகவே மலர்ந்திருக்கும். வளையாத முதுகு, கண்ணாடி கேட்காத கண்கள், தீர்க்கமான பார்வை. அதிலும் தெளிவில் முதிர்ந்ததோர் மோன நிலை. தூரிகையைத் தாங்கிய விரல்கள் தொட்ட கோடுகளெல்லாம் உயிர் பேசும். அதிகம் சிரிக்கத் தெரியாவிட்டாலும் அரைப் புன்னகையில் உதடுகள் பிரியாத ஒரு அழகு மலர்ச்சி. அகன்ற நெற்றியில் அடுக்காக மூன்று திருநீற்றுக் கோடுகள். நெற்றியின் நடுவில் அகன்ற குங்குமப் பொட்டு.

ஒரு ஓவிய மாமேதையின் பெருமைக்குரிய திருவடிவம்தான் இது. எல்லோருக்கும் உரியவராகிவிட்ட “சில்பி”தான் அவர்கள்.

அவரது கைவண்ணத்தால் கவரப்படாத தென்னாட்டுத் திருக்கோயில்களிலுள்ள மூர்த்திகளே கிடையாது என்று சொல்லலாம். எல்லோரது இல்லங்களையும் கோயில்களாக்கிய பெருமை அந்தத் திருக்கரங்களுக்கே உண்டு.

இந்த நன்முத்தைப் பெற்றெடுத்த பெரும்பேறு நாமக்கல்லுக்கு 1919ம் ஆண்டில் உரியதானது. சிறுவனின் பெயர் சீனிவாசன். இளவயது முதலே இதர பாடங்களைவிட ஓவியத்துறையிலேயே உள்ளத்தை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டவன் சீனிவாசன். தேசியப் பெருங்கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையவர்கள் மிகச்சிறந்த ஓவியரும் கூட. சீனிவாசனுடைய திறமைகளை நன்கு கவனித்த கவிஞரவர்கள் சென்ன எழும்பூரிலுள்ள ஓவியக் கலைக்கல்லூரியில் சேர்த்து, அவனது செயலாக்கத் திறனை முழுமையாக்கிக்கொள்ளும்படி அறிவுரை கூறினார்.

ஆறாண்டுகள் நீண்ட பயிற்சியில் அவரது ஆர்வத்தையும் தகுதியையும் கல்லூரி முதல்வர் திரு.டி.பி.ராய் செளத்திரி அவர்கள் மதிப்பிட்டு சீனிவாசனுடைய தேர்ச்சியை இருமடங்காக்கி இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு உயர்த்தினார். பேனாவும் மையும் கொண்டு எழுதும் சித்திரக் கோடுகள் அவருக்கு எளிதில் கைவந்தன. எல்லோரும் வியக்கும் வண்ணம் அமைந்திருந்த அந்தச் சித்திரங்கள் திரு.செளத்ரி அவர்களால் பெரிதும் புகழப்பட்டது. மேல்நாட்டு ஓவியர்கள் பலரையும் மிஞ்சக்கூடிய வகையில் சீனிவாசனின் ஓவியங்கள் அமைந்திருந்ததாக அவர் புகழ்ந்தார்.

சீனிவாசன் மாணவனாக இருந்தபோது ஓவியர் “மாலி” அவர்களின் கேலிச்சித்திரங்களால் மிகவும் கவரப்பட்டார். அதே போன்று பின்னாளில் சீனிவாசனின் ஓவியங்கள் மாலியையும் மிகவும் கவர்ந்தன. இந்தப் பிணைப்பே சீனிவாசன் இருபத்தியிரண்டு ஆண்டுகள் ஆனந்த விகடனில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

இயல்பாகவே சீனிவாசனுக்கு மனித முகங்களைத் தீட்டுவதினும் கட்டிடங்களை ஓவியங்களாக்குவதிலேயே அதிக ஆர்வமிருந்தது. அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய மாலி சீனிவாசனுக்கு “சில்பி” என்னும் பெயர் சூட்டி, தெய்வ வடிவங்களையும் திருக்கோயில்களையும் மட்டுமே தீட்டும் பணிக்கு ஆயத்தம் செய்தார்.

கல்லிலே சிற்பி செதுக்கியுள்ள சிற்பங்களுக்கு மூன்று பரிமாணங்கள் மட்டுமின்றி இழைந்த ஒருவகை உயிர்ப்பும் உண்டு. புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் பரிமாணங்கள் நிழலாக நிலைத்திருக்கும். ஆனால் உயிர்ப்பு உள்ளூர உணரமுடியாமல்தான் இருக்கும். அந்தக் குறையைக் களைந்து முழுமையான நிறைவுள்ள சிற்பங்களை – குறிப்பாக தெய்வ சித்திரங்களை – சில்பி அவர்களால் மட்டுமே வரைய முடிந்தது.

பக்தி, தூய்மை, பரவசம் ஆகிய மூவிழைப் பின்னலே உணர்வாக அவர் வரைந்த படங்களில் தெய்வம் தானே நிலைத்து நின்றது. அமைதியான சூழ்நிலையில் பக்தர்கள் தரிசனம் முடிந்து ஏகாந்தமான வேளையில் கர்ப்பகிருகத்தில் இருக்கும் தூண்டா விளக்கின் மயங்கிய ஒளியில் சில்பி அவர்களால் அவ்வளவு தெளிவாக அந்த அருள் முகத்தை எப்படி வரைய முடிகிறது என்கிற அதிசயத்திற்கு சில்பி கொடுக்கும் விளக்கம் “வண்ணத்தின் கலவைகளை சரியான அளவில் அமைத்துக்கொள்வதுதான் என் செயல். காட்சி கொடுக்கும் அந்த தெய்வந்தான் என் விரல்களோடு இணைந்து தன்னை எழுதி வைத்துக் கொள்கிறது. படைப்பின் முழுமைக்கும் காரணம் அந்தப் பரம்பொருள்தான். நான் வெறும் கருவி !”

கர்ப்பகிருஹத்திலுள்ள மூல மூர்த்தியை வரையுமுன்பு அதன் ஆபரணங்களைத் தனியே ஒரு தாளில் முதலில் வரைபட நகல் எடுத்து, அந்தந்தக் கற்களின் வண்ணங்களையும் குறித்துக்கொண்டு, மூர்த்தியைப் பூர்த்தி செய்யும்போது அந்தந்த ஆபரணங்களை வரைந்து தானே அதனைப் பூட்டியதைப்போல் பரவசமடைவார். இந்தப் பரவசத்தை தெய்வம் சில்பிக்கு அளித்ததால்தான் அந்த சான்னித்தியத்தை சித்திரங்களில் நம்மால் நன்கு உணர முடிகிறது. தனது படங்களை வரைந்து முடித்தவுடன் மறைந்துவிட்ட காஞ்சி முனிவர் பரமாச்சாரியாரிடம் எடுத்துச் சென்று அவரது பூரண ஆசியுடன் வீட்டுக்குக் கொண்டுவந்து விசேஷ பூஜைகள் செய்வார்.

ஆனந்த விகடனிலிருந்து விலகிய பின்பு பவன்ஸ் ஜர்னலில் பணிபுரிந்தார். மேலும் கலைமகள், தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, அமுதசுரபி ஆகிய பல தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் அவர் நிறையக் கோயில் சிற்பங்களை வரைந்துள்ளார்.

சில்பி அவர்களின் குடும்பம் சிறியது. அவர் பணிகளில், அவர் அனுஷ்டித்த ஆசாரக் கிரமங்களுக்குக் குறையாமல் அவருக்கு உதவி புரிந்தவர் மனைவி திருமதி பத்மா அவர்கள். ஒல்லியான வடிவம், குறையாத புன்னகையை சீதனமாகக் கொண்ட குளிர் முகம், விருந்தோம்பலில் தனக்குத்தானே நிகராக விளங்கிய அன்னபூரணி. சிறிய வயதிலேயே உடல் நலிவுற்று 1968ல் இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார். அவர்களது ஒரே மகன் மாலி என்கிற மகாலிங்கம். ஒரே பெண் சாரதா.

இவ்வளவு பெரிய மேதை தன் கலையை பின்தொடரத் தக்கதொரு சீடனை நீண்ட நாட்கள் தேடிக்கொள்ளவில்லை. 1981ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 14ம் நாள் – பொங்கலன்று ஒரு அதிசயம் நடந்தது. பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன். பால்மணம் கமழும் பளிங்கு முகம். தன் தந்தையுடன் சில்பியைக் காண வருகிறான். கிரிதரன் என்னும் அந்தச் சிறுவனின் படங்களைப் பார்த்த சில்பி கிறங்கிப் போகிறார். அவன் வயதில் தான்கூட அத்தனை நுட்பமாகப் படம் வரைந்ததில்லையென்று கூறி அவனை வாயார வாழ்த்துகிறார்.

தனது கலைப்ப(¡)ணிக்குத் தகுதியுள்ளதொரு இளஞ்செல்வன் வாரிசாகக் கிடைத்ததையெண்ணி மிகவும் பூரித்துப் போனார் சில்பி. தனது மனைவியின் பெயரான பத்மாவையும் தன்னுடைய இயற்பெயரின் ஈற்றுப்பகுதியான வாசனையும் இணைத்து கிரிதரனுக்குப் பத்மவாசன் என்னும் பெயரைச் சூட்டினார். “எங்களின் இருவரது ஆசியும் உன் பெயராகவே என்றும் நிலைத்து, பத்மத்தில் வாசம் செய்யும் பிரம்மனாகவே – முதற் படைப்பாளியாகவே உன் புகழ் நின்று நிலைக்கட்டும்” என வாழ்த்தினார். அந்தச் சிறுவன்தான் இன்று பிரபல ஓவியரான திரு.பத்மவாசன். கல்கியின் சரித்திர நாவல்களுக்குப் புதிய சித்திரம் தீட்டித் தமிழக சித்திரக்காரர்களின் வரிசையில் அழியாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள திரு பத்மவாசனின் படங்களில் கமழும் இறைத்தன்மைக்கு சில்பியே மூலகாரணம்.

தனது வாழ்க்கைப்பணிகள் முடிந்த பின்பு – அதாவது கோயில்களிலுள்ள தெய்வ மூர்த்தங்களைப் படம் எழுதி முடித்த பின்பு – அர்த்தமில்லாத வாழ்க்கை அவலங்களில் உழன்றுகொண்டிருக்கக்கூடாது – இறைவனின் திருவடிகளை விரைவில் அடைந்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார் சில்பி. குடும்ப வாழ்க்கையிலும் தனது குழந்தைகளிடமும் பற்று வைத்திருந்தாலும் மனதளவில் ஒரு துறவியைப்போலத்தான் வாழ்க்கை நடத்திவந்தார் அவர்.

வாழும் நாட்களில் அவரை நன்கு பெருமைப்படுத்தத் தவறிய தமிழ்ச் சமுதாயம் அவர் வரலாறாகிவிட்ட இன்றைய நிலையிலும் அவரது பெருமைகளையும் அருமைகளையும் வரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறி அவர்கள் திறமைகளை சீரமைக்க ஏன் முன்வரமாட்டேன் என்கிறது என்பதுதான் இன்னமும் பெரும்புதிராக உள்ளது. காலம் மாறட்டும். கண்கள் திறக்கட்டும். கடமை விளங்கட்டும். கருதியதை முடிக்கட்டும்.

சிகரங்கள் அசையாமல் அமைதியைக் காத்துக்கொண்டு உயரத்தின் எல்லையை ஒட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கின்றன. ஆனால் உணர்வால் உயர்ந்த சிகரம், உண்மையால் உயர்ந்த சிகரம், உறுதியால் உயர்ந்த சிகரம், உத்தமப் பண்புகளால் உயர்ந்த சிகரம், ஒழுக்கத்தால் உயர்ந்த சிகரம், உழைப்பால் உயர்ந்த சிகரம் – ஒப்பற்ற கலைச் செல்வரான சில்பி சீனிவாசன்தான்.

Sources:
http://www.varalaaru.com/default.asp?articleid=443
http://www.varalaaru.com/default.asp?articleid=561

அது சரி, இந்த அருமையான சிற்பங்களை உடைய சேஷ ராயர் மண்டபத்தின் தற்போதையா
நிலவரம் …அடுத்து பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

இதோ தஞ்சை பெரிய கோவில் – முதற் பாகம்

அஜந்தா மற்றும் எல்லோரா முதற் பார்வை பார்த்தோம் – அப்போது தஞ்சை பெரிய கோவிலுக்கும் அதே போல ஒரு முதற் பார்வை இட வேண்டும் என்று நண்பர் பலரும்
கேட்டுக்கொண்டதின் பெயரில் இதோ தஞ்சை பெரிய கோவில் – இதற்கு முன்னரே ஒரு சிறு சிற்பம் வெளி வந்து விட்டது எனினும் இது இந்த தொடரின் முதற் பாகம்

சோழ பேரரசன் முதலாம் ராஜ ராஜன், ஒரு அற்புத மனிதன். அருள்மொழி என்ற இயற் பெயர் கொண்ட இவன், பட்டத்து இளவரசனான தனது அண்ணன் ஆதித்ய கரிகாலன் படுகொலையுற்ற பின் (969 AD) , தனது சிற்றப்பன் அரியணை மீது ஆசை கொண்டதனால் அவனுக்கே விட்டுக்கொடுத்து ( 985 AD) பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து பிறகு அரியணை ஏறி சோழ சாம்ராஞ்சியத்தை அதன் உச்சிக்கு இட்டு சென்று அதற்கு முடிசூடுவதுபோல ஒரு கோவிலை பிரமாண்டமாக கட்டி அதற்க்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூடினான்.

இதை திருவாலங்காடு தகடுகள் மூலம் நாம் அறியலாம் …. திரு கே ஏ நீலகண்டசாஸ்திரி சோழர்கள் புத்தகத்தில் … பக்கம் (pages 212 -213)

Verse 69 of the plates

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால்
ஆதித்தன் மறைந்தான், கலியின் வல்லமையால் ஏற்பட்ட
காரிருளைப் போக்க , அருண்மொழி வர்மன் அரசனாகுமாறு
அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் ஷத்ரிய தருமத்தை
நன்கு அறிந்த அருண்மொழி அரச பதவியை மனதார விரும்பவில்லை
என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரசப் பதவியை
விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீரு மட்டும்
அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரச பதவியை
மறுத்துவிட்டான் …..

என்று தெரிவிக்கின்றன

மேலும் verse 70 of the plates

அருண்மொழியின் உடலில் உள்ள சில அடையாளங்களை பார்த்தபோது,
மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூவுலகுக்கு
வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை
ஆளும் பொறுப்பை தானே மேற்கொண்டான்.

( அமரர் கல்கி இதனை எடுத்து அதில் தனது அமர காவியமான பொன்னியின் செல்வனை நமக்கு படைத்தார் )

இன்னொரு தகடு – ஈசலம் – திரு நாகசுவாமி அவர்களின் தளத்தில் மேலும் படியுங்கள்

http://tamilartsacademy.com/articles/article29.xml

அருள்மொழி – நீண்ட அழகிய கரங்களை உடையவன், உள்ளங்கையில் சங்கு சக்கர ரேகை கொண்டவன் – கங்கா , வங்கா , கலிங்கம் , மகதா , மாலவா , சிங்கள , ஆந்திர , ரட்ட (ராஷ்ட்ரகூட அல்லது மஹாராஷ்ட்ரா ) ஓட்ட (ஒரிசா ), கதஹா , கேரள , குத மற்றும் பாண்டிய …தேசங்களை வென்று – அதனால் குவிந்த செல்வதை கொண்டு தஞ்சை நகரியில் பெரும் கற்றளி அத்யுத்தமம் என்ற ராஜராஜேஸ்வரம் கோவிலை நிறுவினான்.
1324
தஞ்சை நுழையும் போதே விண்ணை தொடும் விமானம் கண்ணில் படும் ( கர்ப்பக்கிருகம் மேல் இருப்பது விமானம் – வெளி வாயில் கோபுரம் – பொதுவாக கோபுரம் விமானத்தை விட உயரம் இருக்கும் – எனினும் இங்கும் ராஜ ராஜனின் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரதிலும் விமானம் பெரியது – ஏன் ?)….சரி சற்று அருகில் செல்வோம் – அடுத்த மடலில்

அஜந்தாவில் அப்படி என்ன உள்ளது ?

எல்லோரா ஒரு மேலோட்டம் சென்ற மடலில் பார்த்தோம். அப்போது அஜந்தா, இதோ வருகிறது


 

அடர்ந்த காடுகளின் நடுவில் குதிரையின் குளம்பு போன்ற வடிவம் கொண்ட மலை சரிவில் – ஒரு பக்கம் அழகிய நீர்வீழ்ச்சியின் வனப்பு … அந்த ரம்மியமான இயற்கை கொஞ்சும் எழில் வனத்தில் தங்களது மடத்தை அமைத்தனர் அந்த பெளத்தர்கள்…. இயற்கையின் அழகுக்கு போட்டியாக கல்லில் தங்களது கலையை குடைந்தனர், அதனுள் எண்ணில் அடங்க எழில் கொஞ்சும் சிற்பங்கள்

அது போதாதென்று பல் வேறு வண்ணங்களில் அழியா ஓவியங்களை தீட்டி … இந்த ஒப்பற்ற பொக்கிஷத்தை – காலத்தினால் அழியாப் புகழை நம் மண்ணுக்கு தந்த விட்டு சென்ற அந்த அன்பு உள்ளங்களுக்கு நாம் என்ன கை மாறு செய்யப்போகிறோம். ???

 

ஆயனர் ( சிவகாமியின் சபதம் ) இதனை பார்க்க எவ்வளவு இன்னல்களை சந்தித்தார் …….இதனுள் அப்படி என்ன இருக்கிறது…. வரும் மடல்களில்….


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment