முதல் வரிசையில் இருந்து ஈசனின் ஆடல் அழகு பார்க்கும் எலும்பு அம்மை

சென்ற மடல்களில் காரைக்கால் பேய் அம்மையின் கதை படித்தோம். அங்கே நிறைய சிற்பங்களை இடவில்லை, ஏனெனில் அவர்களின் கதையின் உன்னதம் சரிவர நாம் உணர வேண்டும் என்பதற்க்காக. இப்போது அதற்கு ஈடு செய்ய, ஆலங்காட்டில் ஆடும் அழகன் ஆடல்வல்லானின் அற்புத ஆட்டத்தை முதல் வரிசையில் அமர்ந்து காணும் அம்மை – கங்கை கொண்ட சோழபுறத்து அற்புத சிற்பி வடித்த சிலை.

( Sfiy’ இல் வந்த இந்த அருமையான இடுகை )

http://sify.com/news_info/tamil/rasanai/aug05/fullstory.php?id=13909600

தூக்கிய திருவடியொடு ஆடும் அழகனின் திருவடிவினைச் உலோக சிலையாய் வடிப்பது ஒரு அறிய கலை, ஆனால் அதை கல்லில் வடிப்பது – ஒரு உன்னத கலை. சோழநாட்டுச் சிற்பிகளோ கல்லைப் பிளந்து எழிலுரு ஆடவல்லான் திருமேனிகளைப் பல திருக்கோயில்களில் வடித்துச் சென்றுள்ளனர். அத்தகு சிற்பப் படைப்புக்கள் வரிசையில் தலையாயதாக விளங்குவது கங்கை கொண்ட சோழீச்சரம் திருக்கோயிலின் தேவகோட்டமொன்றில் இடம் பெற்றுள்ள ஆடும் அழகனின் திருவடிவாகும்.

பொதுவாகத் திருக்கோயிற் சிற்பப் படைப்புக்களைக் கண்டு அதன் பேரழகை நுகரப் புகுமுன், அங்குக் காணப்பெறும் சிற்பத்தின் வரலாறு, புராணப் பின்புலம், செய்நேர்த்தி, உணர்வுகளைக் காட்டிடும் முகபாவம் ஆகியவற்றை அறிந்து, பின்பே அவற்றைக் கூர்ந்து காண முற்படுவோமாயின் அச்சிற்பம் நம்மோடும் பேசும் சுகானுபவத்தைப் பெறலாம்.

காளியோடாடிய கயிலைநாதன்தாருகன் எனும் அசுரன் பிரமனைக் குறித்துக் கடுமையாகத் தவம் இயற்றி தனக்குப் பெண்ணால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்று வரத்தையும், பேராற்றல்களையும் பெற்றான். அவன் சென்ற இடங்களிலெல்லாம் வெற்றி கண்டான். ஆணவமலம் மிக்குற்று தேவர்களையும், தெய்வங்களையும் தாக்க எத்தனித்தான் . எத்துணை உபாயங்கள் செய்தும் அவனிடமிருந்து தப்பியலாத தேவர்கள் பரமேஸ்வரனைப் பிரார்த்தித்து வேண்டினர். பரமனோ தன் கழுத்திலிருந்த ஆலகால விஷத்திலிருந்து தேவியின் அம்சத்தை கரியதும் உக்கிரம் நிறைந்ததுமான உருவமாக, காலகண்டியாகப் படைத்துத் தாருகனை வதம் செய்ய ஆணையிட்டார்.

காலகண்டியாகிய காளிதேவி தாருகனுடன் உக்கிரமாகப் போரிட்டு அவனை அழித்தாள். காளியின் கோபம் தணியாததால் அவளைச் சாந்தப்படுத்த விழைந்த பரமன் அவள் உக்கிரத்தை எட்டு சேத்திர பாலகர்களாக (அட்ட பைரவர்) மாற்றியருளியதோடு, அவள் முன்பு நடன மாடத் தொடங்கினார். ஈசன் ஆட அவர் முன்பு வெங்கோபமுற்ற காளிதேவியும் ஆவேசமாக ஆடத் தொடங்கினாள். அண்ணலின் ஊர்த்துவ மாதாண்டவம் கண்டு ஆட இயலாதவளாய் அமைதியுற்றாள். இச்சிவதாண்டவ வரலாற்றை சிவமகாபுராணம் இனிதே உரைக்கின்றது. திருவாலங்காட்டில் (திருவள்ளூர் மாவட்டம்) இத்திருநடனம் நடைபெற்றதாக ஆலங்காட்டுத் தலபுராணம் விவரிக்கின்றது.
193719391942194519471950

மூவர் தமிழில்…

ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே எனத் திருவாலங்காட்டில் பாடிய திருநாவுக்கரசு பெருமானார்,

ஆடினார் பெருங்கூத்து காளிகாண, என்று திருப்பாசூர் பதிகத்திலும்,

கத்து காளி கதம் தணிவித்தவர், என்ற திருக்கடவூர் மயானத்துப் பதிகத்திலும் குறிப்பிட்டு காளியோடாடிய கருணாமூர்த்தியின் பெருமை பேசுகின்றார்.

மாத்தன் தான் மறையார் முறையால் மறை
ஓத்தன் தாருகன் தன் உயிர் உண்ட பெண்
போத்தன் தான் அவள் பொங்கு சினம் தனி
கூத்தன்தான்-குரங்காடு துறையானே
பைதல் பிணக் குழைக் காளி வெங்கோபம்
பங்கப் படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தனசீர்
மறையோன் உய்தல் பொருட்டு வெங்கூற்றை உதைத்தன:
உம்பர்க்கு எல்லாம் எய்தற்கு
அரியன-இன்னம்பரான்தன் இணை
அடியே பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர்
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க்க-
என்று கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே

இவ்வாறு அப்பரடிகள் குரங்காடுதுறை, இன்னம்பர், திருகுடமூக்கு ஆகிய திருக்கோயில்களில் காளி தன் வெங்கோபத்தினைப் பங்கப்படுத்திய கூத்தனின் புகழைத் தேவாரத் தமிழால் புகழ்கின்றார்.

திருஞானசம்பந்தப் பெருமானாரோ

ஐயாறுடைய அடிகளைப் பாடிப் பரவுங்கால்,
வென்றிமிகு தாருகனது ஆர் உயிர் மடங்க கன்றி
வரு கோபமிகு காளிகதம் ஓவ
நின்று நடம் ஆடி இடம்-நீடு மலர் மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திருஐயாரே

என்றும், தன் பிறந்த பதியான சீகாழி ஈசனைப் போற்றுங்கால்,

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்
தோடு ஏயாமே மாலோகத் துயர்
களைபவனது இடம்கைக்கப் போய் ஊக்கத்தே
கனன்றுமிண்டு தண்டலைக்காடே ஓடா ஊரே சேர் கழுமல வளநகரே

என்றும் காளியோடாடிய திறம் பேசுகின்றார். திருநாவலூரரான சுந்தரரோ,

கொதியினால் வரு காளிதன் கோபம்
குறைய ஆடிய கூத்துடையானே

என்று ஆவடுதுறையில் இன்றமிழ்ப் பதிகம் பாடி திருவாலங்காட்டுத் திருநடனத்தின் சிறப்பு பேசுகின்றார்.

திருஆலங்காட்டுத் திருநடனம்

தாருகன் உயிர் போக்கிய காளிதேவியின் கோபத்தைப் போக்க ஆலமரங்கள் அடர்ந்த திருவாலங்காட்டில் அண்ணல் மீண்டும் ஓர் ஆனந்த நடம் புரிந்தார். வாணன் குட முழவிசைக்க, காரைக்கால் பேயார் கைத்தாளம் இசைக்க, பூசகணங்கள் மத்தளம் முழங்க அண்ணலின் ஆடல் தொடங்கிற்று. ஆடல் காண கணபதிப் பிள்ளை எலிமீதமர்ந்து ஊர்ந்துவர, கந்தனோ மயில்மீது அமர்ந்து பறந்து வந்தான். சூரிய சந்திரர் காண காளிதேவியும் எண்கரம் நீட்டி கோபமொடு ஆடத் தொடங்கினாள். மூன்று கால் பிருங்கியும் ஓர்புறம் ஆட, சடையமர்ந்த கங்காதேவியும் சுழன்று ஆட, இடபத்தோடு நின்ற சிவகாமியோ, எழிலுறு இக்காட்சி கண்டு மெய்மறந்தாள்.

ஆலங்காட்டில் உமையம்மையும், காரைக்காலம்மையும் கண்டு களித்த அந்த ஆனந்தத் தாண்டவக் காட்சியை உலகம் உள்ளளவும் மனித குலம் கண்டு இன்புற வேண்டும் என்று நினைத்தான் கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் (கி.பி. 1012-1044). தான் எடுத்த கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் சிவாலயத்தின் கருவறையின் தென்மேற்குப் பகுதியில் ஆலங்காட்டு ஆடற்காட்சியை நிரந்தரமாகப் பதித்தான். கல்லிலே இங்கு அக்காட்சி உயிர்ப் பொலிவோடு திகழ்கின்றது.

தேவகோஷ்டமொன்றின் மேற்பகுதியில் திருவாலங்காட்டு ஆலமரமொன்றில் இலைகளோடு கூடிய கிளைகள் தெரிகின்றன. ஆடல்வல்லான் சூடும் அக்ஷமாலையொன்றும், அவன் பூசும் வெண்பொடி சுமந்த பொக்கணமும் (விபூதிப்பை) ஆலமரத்துக் கிளையில் தொங்குகின்றன. தலையில் கொக்கிறகு, கபாலம், உன்மத்தம் ஆகியவற்றையும், விரிசடையில் நீரலையாய் சுழன்று ஆடும் கங்கையையும் சூடியவராய், ஒரு காதில் மகரகுண்டலமும், மறுகாதில் பத்ரகுண்டலமும் தரித்தவராய் வலதுகாலை முயலகன் மீது இறுத்தி இடது காலை இடுப்பளவு உயர்த்தி, மேலிருகரங்களில் டமருகமும், எரியகலும் ஏந்தி, வலது முன் கரத்தால் அபயம் காட்டி இடது முன்கரத்தை உயர்த்திய காலுக்கு இணையாக நீட்டி ஆனந்தத் தாண்டவம் ஆடுபவராய் அண்ணல் காட்சி தருகின்றார். தெய்வீகப் பொலிவும், கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும் காணப்பெறும் இச்சிற்பத்தின் முக அழகுக்கு ஈடாக வேறு ஒரு படைப்பினைக் காட்டுதல் கடினமே.ஈசனுக்கு வலதுபுறம் பிருங்கிமுனிவர் ஆட, இடப்புறம் எட்டுகரங்களோடு கதம் கொண்ட காளிதேவி ஆடுகின்றாள். தூக்கிய திருக்கரங்களும், கால்களின் அசைவும் அவள் ஆடுகின்ற ஆடலின் வேகத்தைக் காட்டுகின்றன. கோபக்கனலை அவளது பிதுங்கிய விழிகளும் ஆவேசம் காட்டும் முகமும் வெளிப்படுத்துகின்றன. வேர்த்து ஆடும் காளியிவள் என்பது நன்கு விளங்கும்.
19321921
இந்த தேவகோஷ்டத்தின் இருமருங்கும் எழிலார்ந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. மலரேந்திய சூரியனும் சந்திரனும் ஒரு கரத்தை தலைக்கு மேல் உயர்த்தி ஈசனைப் போற்றுகின்ற நிலையில் விண்ணில் பவனி வருகின்றனர். சூரியனுக்குச் சற்று கீழாக எலிமீதமர்ந்த கணபதியாரும், மயில்மீதமர்ந்த கந்தனும் ஆலங்காடு நோக்கி விரைந்து செல்கின்றனர். இக்காட்சிக்குக் கீழாக நந்தியெம்பெருமான் குடமுழவினை இசைத்தவாறு அமர்ந்துள்ளார்.

கோஷ்டத்தின் கீழ்புறம் பூதகணங்கள் மத்தளங்களையும் இன்னபிற இசைக்கருவிகளையும் இசைத்தவாறு ஆடி மகிழ்கின்றன. அப்பூதகணங்களோடு விரிந்த சடை, வற்றிய கொங்கைகள், எலும்பு உரு ஆகியவற்றோடு இலைத்தாளம் இரண்டினை கையிலேந்தி இசைத்தவாறு காரைக் காலம்மையார் அண்ணலின் அடிக்கீழ் அமர்ந்தவாறு ஆடல் காண்கின்றார்.ஆடும் அழகனுக்கு இடதுபுறம் விண்ணகத்தில் சந்திரன் உலவ, கீழே அண்ணல் உலாப்போகும் எருது நிற்கின்றது. அதன் முதுகில் இடக்கரத்தை ஊன்றியவாறு வலக்கரத்தில் மலரொன்றை ஏந்திய நிலையில் உமாதேவி நிற்கிறார். தேவியின் திருமுகமோ அழகனின் ஆடலில் ஒன்றி மெய்மறந்த நிலையைக் காட்டுகின்றது. ஆனால் இடபமோ வாய்பிளந்த நிலையில் ஆடலின் வேகங்கண்டு மிரண்டு காணப்பெறுகின்றது.

சிற்பங்களை இன்னும் தெளிவாக பார்க்க

19921994199619982000200220042006

இக்காட்சியைக் காணும் போது,

சரிகுழல் இலங்கிய தையல் காணும்
பெரியவன் காளிதன் பெரிய கூத்தை
அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும்
எரியவன்-இராமனதீச்சரமே

என்ற திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலுக்கென வடிக்கப்பெற்ற சிற்பக் காட்சியே இதுவென்பது நன்கு விளங்கும். ஈசனார் முகத்திலோ ஆனந்தப் புன்னகை. காளியின் முகத்திலோ கடும் சினம். காளையில் முகத்திலோ மிரட்சி. அன்னையின் முகத்திலோ அமைதி. இத்தனை உணர்வுகளையும் ஒருங்கே இக்காட்சியில் படைத்துக் காட்டிய சோழனின் சிற்பி நம் அனைவரையும் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்தவாறே திருவாலங்காட்டிற்கு அழைத்துச் சென்று அற்புதத் திருக்கூத்தைக் காட்டுகின்றான். காண்போம் வாரீர்.

(பி.கு.) கலைநயமும், வரலாற்றுச் சிறப்பும் ஒருங்கே பெற்ற இந்த ஆடவல்லான் திருமேனியின் தூக்கிய இடது காலினைக் கலையறிவற்றோர் பின்னாளில் சிதைத்து அழித்துவிட்டனர். இருப்பினும் உடையார்பாளையம் ஜமீன்தார் நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்த திருப்பணியின் போது உடைந்த காலுக்கு முட்டுக்கொடுத்து ஓரளவு சீர் செய்துள்ளனர்.

காரைக்கால் அம்மையின் அருமையான பாடல்கள் இதோ :

பதினொன்றாம் திருமுறை : பாடல் எண் : 1

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

பாடல் எண் : 22

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே.

பாடல் எண் : 19

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=19&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வேய்கள் ஓங்கி வெண்முத்
துதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டில்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே.

அடுத்த முறை கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் பொது கண்டிப்பாக இந்த அருமையான சிற்பத்தை கண்டு ரசியுங்கள்.

209320902096


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment