அண்மையில் மதுரை நண்பர்களிடம் சில படங்கள் வேண்டும் என அழைப்பு விடுத்தேன். நான் தேடிய படங்கள் திருபரங்குன்றம் பாண்டிய குடவரை – எனினும் நண்பர் திருமதி ஷோபா ராமகிருஷ்ணன் அவர்களை மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் படங்களை அனுப்பி வைத்தார். அந்த குவியலில் இந்த முத்தான படத்தை பார்த்தவுடன் இங்கே அதை பகிர்ந்து கொள்ள ஆசை – எனினும் இதை வாசகர்கள் எவ்வாறு கருதுவார்கள் என்று ஒரு சிறிய தயக்கம். சரி, முதலில் இதற்கு தகுந்த பாடல்களை எடுத்து பார்ப்போம், பின்னர் எவ்வாறு இடலாம் என்று யோசிக்கலாம் என்று எண்ணி நண்பர்களிடம் கேட்டேன். நண்பர் வைரம் பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடல் புராணத்தில் இது உள்ளது என்று கூறியவுடன் இணையத்தில் தேடினேன். தேனென இனிக்கும் தமிழில் பாடல்களை படிக்கப் படிக்க இன்பம் பொங்கியது, பயம் நீங்கியது. அழகு சிற்பம், அதை விட அமுத மொழி – வேறு என்ன வேண்டும் – ஐந்தே பாடல்களை கொண்டு கதையை விளக்குகிறேன்.
http://www.shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_02_u.htm
நிறைய பாடல் வரிகள் இருப்பதால் – இம்முறை முதலில் சிற்பத்தை பார்ப்போம். மூன்று முலை என்றவுடன் சிற்பத்தில் எவ்வாறு காட்ட முடியும்! அதுவும் அழகு கன்னியாய், கயல் விழியாய் காட்டவேண்டும். சளைத்தவனா நமது சிற்பி – இதோ
இப்போது வரிகளை பார்போம்
தெள்ளமுத மென்மழலை சிந்திவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோர்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமோடு நின்றாள்
எள்ளரிய பல்லுயிரும் எவ்வுலகு மீன்றாள் – Verse 542
மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவர்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். இதன் பயனாக வேள்வி குண்டத்திலிருந்து மூன்று முலைகளுடன் பார்வதிதேவி தோன்றினாள்.
மகவின்றிப் பலபகல்யான் வருந்தியருந் தவம்புரிந்தேன் மைந்தற் பேறு
தகவிந்த மகஞ் செய்தேன் அதுவுமொரு பெண்மகவைத் தந்த தந்தோ
முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலைமூன்றாய் முகிழ்த்து மாற்றார்
நகவந்த தென்னேயோ என்றுவகை யிலனாகி நலியு மெல்லை – 547
நீண்ட நாட்களுக்குப்பின் பிறந்த குழந்தை, அதுவும் அரசாள பிள்ளை வரம் வேண்டி வேள்வி நடத்திப் பெற்ற குழந்தை – மூன்று முலைகளுடன் இருப்பதை அறிந்த அரசனும் அரசியும் மிகவும் வருந்தினர்..
மன்னவநின் றிருமகட்கு மைந்தர் சடங்கனைத்தும் வழாது வேதஞ்
சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென் றிட்டுமுடி சூட்டு வாயிப்
பொன்னையா டனக்கிறைவன் வரும்பொழுதோர் முலைமறையும் புந்தி மாழ்கேல்
என்னவரன் அருளாலோர் திருவாக்கு விசும்பிடைநின் றெழுந்த தன்றே 548
அப்போது இறைவன் அசரீரியாக “இந்த குழந்தைக்கு தடாதகை (தடுத்தற்கரிய தடையுடை யாள்) என்று பெயர் சுட்டுமாரும், அவள் அரசனுக்கு நிகராக முடி சூட்டி ஆட்சி புரிவாள் என்றும், அவள் கணவனை முதல் முறை காணும் போது தானாகவே மூன்றாவது முலை மறையும்”என்றார்.
மீன் போன்ற விழிகளைக் கொண்டிருந்ததால் அங்கயற்கண்ணி எனவும் மீனாட்சி எனவும் அவள் அழைக்கப்பட்டாள் – ஒரு ஆண் பிள்ளையை போலவே போர்ப் பயிற்சிகளை பெற்றாள். உரிய காலத்தில் மலையத்துவசனுக்கு பின் அரசுக்கட்டிலில் அமர்ந்தாள் பாலகி அங்கயற்கண்ணி. அன்றிலிருந்து அவள் மதுரை மீனாட்சி என அழைக்கப்பட்டாள்.
அவளை எதிர்த்த அரசர்கள் அத்தனை பேரும் தோற்றனர். கைலாயத்தையும் கைப்பற்ற விழைந்த அங்கயற்கண்ணியின் படை ஆரவாரத்துடன் கைலாயத்தை அடைந்தது.
ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்த வெம் புலித் தோலும்
கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும் நூல் மார்பும்
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும்
பெற்ற தன் வலப் பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர் கண்டாள் – 646
ஈசனை எப்படி எல்லாம் வர்ணிக்கிறார் புலவர். ஒப்பில்லாதவன் – ஒருவன், பாம்பு அணிகலன், புலித் தோல் அணிந்து, உடம்பெல்லாம் சாம்பல் பூசி, சடைமுடி தரித்து, முப்புரி நூல் அணிந்து சிரித்து வந்தவனைக் கண்டதும், தான் யார் என்பதும் எதிரில் நிற்பது தனக்கு ஒரு பாதியை தந்தவன் என்றும் உணர்கிறாள். உணர்தவுடன் …
கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில் நாண் மடம் அச்சம்
கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூம் கொம்பரின் ஒசிந்து ஒல்கிப்
பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல் பாரமும் பிடர் தாழக்
கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண் கிளைத்து மின் என நின்றாள்
அங்கயற்கண்ணியின் மூன்று மார்பகங்களில் ஒன்று மாயமாகிப் போனது. தடாதகைப் பிராட்டிக்கு அதுவரை இருந்த குணங்கள் சற்று மாறி, தன் கைத்தலம் பற்றப் போகிறவன் கைலாயநாதன் தான் என்பதை உணர்ந்த அவள் நாணம் மேலிட தரை பார்த்து தலை சரித்தாள்.