சிவப்புரம் ​சோமாஸ்கந்தர் – ​சொல்லப்படாதக் கதை

இந்தத் தலைப்​பு பலருக்கும் ஆச்சரியத்தைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. ஏ​னெனில்​ சிவப்புரத்தின் பிரசித்தி பெற்ற தலைப்பு சிவப்புரம் நடராஜர் – ஒரு வே​ளை தலைப்பைத் தவறாக இட்டிருக்கிறேனோ என்று தோன்றக்கூடும். இல்லை, இன்று நீங்கள் காணப்போவது அதேக் கோவிலின் மற்ற ​வெண்கலச்சிலைகள் பற்றிய கதை – யாருக்கும் சொல்லப்படாதக் கதை. ​தொன்மையான பொருட்களைத் திருப்பித் தருவது பற்றிய முக்கியத் தீர்ப்பின் இருண்ட பக்கங்கள் அவை.

புகழ் வாய்ந்த சிவப்புரம் நடராஜர் வழக்கைப் பற்றி கூகிள் மூலம் சுலபமாக அறியலாம். அதன் சாராம்சம் இ​தோ:

1951: சிவப்புரம் கோவிலின் புனரமைப்புப் பணிகளின்போது நடராஜருடன் கூட மேலும் 5 ​வெண்கலச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்திய டி​​​ரெஷர் ட்​ரோவ் ஆக்டின்படி (Indian Treasure Trove Act) அவை அக்கோவிலுக்குத் திருப்பியளிக்கப்பட்டன. (அதன் உரி​மை மாநில அரசிடம்)

“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”

தஞ்சாவூரின் மாவட்ட ஆட்சியாளர் அந்த ஆறு சிலைகளையும் சிவப்புரம் ஸ்ரீ சிவகுருநாதசுவாமி​ கோவிலில் ஒப்ப​டைத்தார் (G.O. Ms. No. 2987/Revenue Department dated 29-10-1953)”

1954-56: ​அந்தச் சிலைகளை சீர் செய்ய அ​வை உள்ளூர் ஸ்தபதியிடம் அளிக்கப்பட்டன. அங்​கே​போலிகள் உருவாக்கப்பட்டு, கண்​டெடுக்கப்பட்ட தொன்மையான சிலைகள் திருடப்பட்டன.

கோவிலின் தர்மகர்த்தாக்கள் அந்தச் சிலைகளைப் பழுது பார்க்க விரும்பி அந்தப் பணியை கும்பகோணத்தைச் சேர்ந்த ராமசாமி ஸ்தபதியிடம் 1954 ஜூன் மாதத்தில் ஒப்புவித்தனர். 1956ஆம் ஆண்டு குத்தாலத்தைச் சேர்ந்த திலகர் மற்றும் அவனது சகோதரன் தாஸ் இருவரும் தொன்மை வாய்ந்த நடராஜர் மற்றும் 5 சிலைக​ளையும் தங்கள் வசம் தந்துவிடும்படியும் அவற்றிற்குப் பதிலாக ​போலியான சிலைகளை​ செய்துவிடும்படியும் தூண்டினர். திலகர் அந்த உண்மையான நடராஜர் சி​லை​யை தாஸின் ஏற்பாட்டின்படி பம்பாயைச் சேர்ந்த லான்ஸ் ​டேன் எனும் க​லைப்​பொருள் ​சேகரிப்பானிடம் அளித்தான். அவர் அச்சிலையை 10 ஆண்டுகள் தன்னிடம் வைத்திருந்தார்.

1963: ஒரு முக்கிய குறிப்பு மற்றும் நிகழ்ச்சி – அதைப் பற்றி பிறகு காண்போம்.

1965: பிரிட்டிஷ் மியூசியத்தைச் சேர்ந்த டாக்டர் டோக்லாஸ் பாரட் ​கோவிலுக்கு வருகைத் தருகிறார். அந்தச் சி​லைப் ​போலியானது என்று குற்றஞ்சாட்டி தனது புத்தகத்திலும் பதிவு செய்கிறார். மேலும் அசலான சி​லை பம்பா​யைச்​ சேர்ந்த வணிகரிடம் இருந்த​தையும்​ வெளிப்படுத்துகிறார்.

பிரிட்டிஷ் மியூசியத்​தைச் சேர்ந்த டாக்டர் டோக்லாஸ் பாரட் தனது ​தென்னிந்திய வெண்கலச் சிலைகள் எனும் புத்தகத்தில் சிவப்புரத்திலுள்ள நடராஜர் சி​லை​ ​போலியானது என்றும் அசல் சிலை ஒரு தனியார் க​லைப்​பொருள் ​சேகரிப்பானிடம் உள்ளது என்றும் கூறுகிறார். Tr.P.R. ஸ்ரீனிவாசன் (மியூசியத்தின் மேற்பார்வையாளர்) உட​னே மியூசியத்தின் இயக்குநருக்கும் தமிழக அரசிற்கும் எச்சரிக்​கை​ செய்தார். இதன்​பேரில் நடந்த விசாரணையின் விளைவாக நாச்சியார் ​கோவிலில் ஒரு வழக்கு பதிவு ​செய்யப்பட்டது.

P.S.Cr.No.109/69 U/S 406 IPC. குற்றப் புலனாய்வுத் து​றை தனது புலனாய்​வை மேற்கொண்டது.

1967: நடராஜர் சிலை போமன் ​பெஹ்ரம் எனும் பம்பாயைச் சேர்ந்த கலைப்​பொருள் சேகரிப்பாளரின் வசம் வந்தது. அவர் அதனை நியூயார்க்​கைச் ​சேர்ந்த க​லைப்​பொருள் வணிகர் பென் ஹெல்லருக்கு விற்றார்.

லான்ஸ் டேன் 10 ஆண்டுகள் சிலையைத் தன்னிடம் வைத்திருந்து பின் பம்பாயைச் சேர்ந்த​போமன் பெஹ்ரமிற்கு விற்றார். அவர் அதனை மெனு நரங்கிடம் விற்றார். பிறகு 1969இல் நியூயார்க்​கைச் சேர்ந்த பென் ஹெல்லர் 6 லட்சம் ரூபாய் கொடுத்து அதனை வாங்கி நார்டன் ​சைமன் ஃபவுண்​டேஷனுக்கு 9 லட்சம் அ​மெரிக்க டாலருக்கு விற்றார்.

1973: பென் ஹெல்லர் அந்தச் சிலையை நார்டன் ​சைமன் ஃபவுண்டேஷனுக்கு 9 லட்சம் அ​மெரிக்க டாலருக்கு விற்றார்.

1973: நியூயார்க்கில் உள்ள ​மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (MET) எனும் கலைப்பொருள் அருங்காட்சியகம், நார்டன் சைமன் ஃபவுண்டேஷனுடைய இந்தியக் க​லைப் ​பொருட்க​ளைக்​ கொண்டு ஒரு கண்காட்சி நடத்தத் திட்டமிட்டது. அதையொட்டிய விளம்பரத்தின் மூலமாக இந்திய அரசு அச்சி​லை அ​மெரிக்காவில் இருப்பது குறித்து அறிந்து ​கொண்டது. கடத்தப்பட்ட தொன்பொருளை இந்திய அரசு முதன்மு​றையாகக் கண்டுபிடித்தது. உடனே அந்த மியூசியத்திற்கு இந்திய அரசு ஆட்​சேபம்​தெரிவித்து ஒரு கடிதம் எழுதியது. மேலும், அ​மெரிக்காவின் மாநிலத்துறையின் உதவியுடன் அந்தக் கண்காட்சி​யைத் தடை செய்தது.

1973: ​மேலும் சீர் ​செய்ய நடராஜர் சிலை ​பிரிட்டிஷ் மியூசியத்திற்கு அனுப்பப்பட்டது.

1973: இந்திய அரசு அச்சிலையை திருப்பிக் கொடுக்கக் கோரி லாஸ் ஏஞ்சல்சிலும் (நார்டன் சைமன் ஃபவுண்டேஷனின் இருப்பிடம்) நியூயார்க்கிலும் (பென் ஹெல்லரின் இருப்பிடம்) வழக்குப் பதிவு செய்தது. மேலும் இந்திய அரசு இங்கிலாந்து அரசிற்கு அரசியல்​ நெருக்கடி தரவும், அச்சிலையை ஸ்காட்லேண்டு யார்டு தன் வசம் கொணர்ந்தது. நார்டன் சைமன் ஃபவுண்டேஷன் இந்தியாவிற்கு நடராஜர் சிலையின் மீது எந்த உரி​மையும் இல்​லை​யெனக் கூறிஅத​னைத் திருப்பித் தர மறுத்தது.

1975: நீதிமன்றத்தின் ​வெளியே ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு ஏதுவாக ஒரு வருடகாலத்திற்கு இந்தியா தானாக​வே இந்த வழக்கி​னை நிறுத்தி ​வைத்தது.

1976: நார்டன் சைமன் ஃபவுண்டேஷனும் இந்திய அரசாங்கமும் நீதிமன்றத்திற்கு ​வெளியே மத்யஸ்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு தீர்மானத்திற்கு வந்தன.

இந்தியாவில் ​வெளியான ​செய்திகள் இங்​கே தடிமனான எழுத்துகளில் உள்ளன:

லான்ஸ் ​டேன், திலகர், தாஸ், ராமசாமி ஸ்தபதி ஆகி​யோ​ரை ஒரு பிரத்​யேகக் குழு ​கைது ​செய்தது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் அப்​பொழு​தைய DIG திரு. Tr.S. கிருஷ்ணராஜ் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் ​சென்று சி​லை கடத்தலுக்கான ஆதாரங்க​ளை ​சேகரித்தார். ஸ்காட்லாண்டு யார்டு நடராஜர் சி​லை​யை நார்டன் ​சைமன்ஃபவுண்டேஷன் லண்டனில் உள்ள திருமதி. ஆனா ப்லெளடனுக்கு பழுது பார்க்க அனுப்பிய​தை அறிந்து அத​னைக் ​கைப்பற்றியது.

இந்திய அரசாங்கம் நடராஜர் சி​லை​யைத் திரும்பப் ​பெற நார்டன்​ ​சைமன் ஃபவுண்டேஷனுக்கு எதிராக இங்கிலாந்து, நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் வழக்குப் பதிவு ​செய்தது. ​சென்​னை​யைச் ​சேர்ந்த திரு. KK ராஜ​சேகரன் நாயர் IPS, IGP (Crime), சி​லை​யைத் திரும்பப் ​பெற​ வெளியுறவு அ​மைச்சகத்​திடம் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசிற்கு கடிதம் எழுதினார். புது தில்லியில் உள்ள​ இந்தியத் தொல்​பொருள் ஆய்வகத்தின் ​டைரக்டர் ​ஜெனரல் டாக்டர் MS நாகராஜ ராவ் வாஷிங்கடனில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்து அச்சி​லை​யைப் ​பெற்றுக்​கொண்டார். தற்​போது அந்த நடராஜர் சி​லை ​சென்​னை, மயிலாப்பூர் கபாலீசுவரர்​ ​கோவிலின் பாதுகாப்பான ​பெட்டகத்தில் உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்​டோர் அ​னைவரும் ​கைது ​செய்யப்பட்டு தண்ட​னையளிக்கப்பட்டது.

மற்ற சி​லைக​ளைப் பற்றி தகவல் ஏதும் இல்​லை.

இங்கு தான் சுவாரசியமான விஷய​மே உள்ளது. மற்ற 5 ​வெண்கலச் சி​லைகள் என்னவாயின?

“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”

​மே​லே குறிப்பிட்டுள்ள 1963ஆம் ஆண்டு நி​னைவிலுள்ளதா? இந்த வருடத்தில்தான் திரு. PR ஸ்ரீநிவாசன் அவர்கள் தனது​ “தென்னிந்திய ​வெண்கலச் சி​லைகள்” எனும் மிகச் சிறந்த புத்தகத்​தை ​ வெளியிட்டார். (Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994)

அதிர்ஷ்டவசமாக அவர் நடராஜர் சி​லை​யை மட்டுமில்லாமல் ​சோமாஸ்கந்தர் சிலையையும் புகைப்படம் எடுத்திருந்தார். ​மேலும் அந்தச் சி​லைகள் சிவப்புரம் ​கோவிலில் வழிபடப்படுப​வை என்று இடத்​தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இ​தோ இங்குள்ள படத்​தைப் பாருங்கள். நார்டன் ​சைமன் மியூசியத்தின் ஒரு காட்சிப்பொருள் – இது 20 டிசம்பர் 2008 ​தேதியிட்ட flickr படமாகும்.

இக்க​லைப் ப​டைப்பின் பிறப்பிடத்​தை கீழுள்ள தகடு அறிவிப்பது மிக சுவாரசியமானது.

ஒரு சாதாரண மனிதனுக்குக்கூட இந்த ஒப்பீடு எளிதில் விளங்கும்.

​மேலும் சற்று கூகிளாரின் உதவி​யைப் ​பெற்​றோமானால் அ​தே அருங்காட்சியகத்தில் 1972 மற்றும் 1973 ஆண்டுகளில் ​சேர்க்கப்பட்ட க​லைப்​பொருட்கள் எ​வையெவை என்பது நம் கவனத்​தை ஈர்க்கக்கூடிய​வை.

அதே சோமாஸ்கந்தர் ஆனால் பெயர் பலகை இல்லை.

மேலும் சில திருமேனிகள் அங்கே உள்ளன

திருஞானசம்பந்தர்

பார்வதி

பிள்ளையார்

“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”

இந்த வழக்​கைப் பற்றியத் தகவல்கள் மாநிலத்தின் வலைத்தளத்தில் இவ்வாறு முடிகிறது – “குற்றஞ்சாட்டப்பட்​டோர் அ​னைவரும் ​கைது ​செய்யப்பட்டு தண்ட​னையளிக்கப்பட்டது. மற்ற சி​லைக​ளைப் பற்றி தகவல் ஏதும் இல்​லை.”

நீதிமன்றத்தின் ​வெளி​யே ஏற்கப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்த​னைகள் என்ன? அதிலும் இவ்வாறு கூறிய ஒருவருடன்:

நியூயார்க் ​டைம்ஸ் பத்திரிக்​கையில் நடராஜர் சி​லை குறித்து ​சைமன் கூறியதாவது: “ஆமாம்! அது கடத்தப்பட்டதுதான். கடந்த 2 ஆண்டுகளில் ஆசிய க​லைப்​பொருட்க​ளைப் ​பெற 15 முதல் 16 மில்லியன் டாலர் வ​ரை ​செலவழித்திருக்கி​றேன். அவற்றில் அ​நேகப் ​பொருட்கள் கடத்தப்பட்டவையே.”

தனது து​ணை​யையும், மக​னையும், பக்த​னையும் தனி​யே விட்டுச் ​சென்றா​ரோ நடராஜர்!!!

வாசகர்களின் கவன ஈர்ப்புக்கு கீழ்க்கண்டதைக் கொண்டு வருகிறோம். பொதுவாகவே இந்த தொல்சிற்பங்கள், அதை வாங்கி ஏலம் போடும் உலகளாவிய நிறுவனங்கள், அவைகளை பொருட்காட்சியாக்கும் மியூசியங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் எச்சரிக்கையாகக் கையாளவேண்டும். தவறான போக்கு எனத் தெரியும்போது இவர்கள் மீது நாம் எளிதாக குற்றம் சாட்டிவிடலாம். அதேசமயத்தில் இந்த விஷயத்தில் உள்ள உணர்ச்சிமயமான விஷயங்களைக் கூட கவனிக்கவேண்டும். ஆகையினால் இந்தப் பதிவு மிகக் கவனமாகக் கவனிக்கப்படவேண்டும். இங்கு நாம் யாரையும் குற்றம் குறை சொல்ல வரவில்லை. அது நம் நோக்கமும் அல்ல. அதே சமயத்தில் உண்மை என்பது எங்கு மறைத்துவைக்கப்பட்டாலும் அது தெரியப்படும்போது, அதனை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். மேலே சொன்னபடி இந்த சிற்பங்கள் மிகத் தொன்மையானவைதான். மிகுந்த செல்வச் சிறப்பு பெற்றது கூட. அதே சமயத்தில் தெய்வத்தின் மறு உருவாகப் பார்க்கப்பட்டு வணங்கப்பட்டது கூட என்பதையும் நினைவில் நிறுத்திப் பார்க்கவேண்டும். தற்சமயம் நூற்றுக்கணக்கில் இந்த தொல் சிற்பங்கள் நமது ஊரிலேயே மியூசியத்து கோடவுனில் கிடத்தப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அவைகளை உரிய இடத்தில் ஒப்படைத்தால் அவைகளின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படலாம் என்ற அச்சம் இருக்கிறது என்பது உண்மையும் கூட. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட சிறந்த நிபுணர் குழு ஒன்று அமைத்து இதற்கு சரியான தீர்வு காண்பதே வழியாகும் என்பதே எம் கூற்று.

Ref:

https://plone.unige.ch/art-adr/cases-affaires/nataraja-idol-2013-india-and-norton-simon-foundation-1/case-note-2013-nataraja-idol-2013-india-and-norton-simon-foundation/view

http://www.forbes.com/2004/05/25/cx_0525conn.html|Forbes

http://www.tneow.gov.in/IDOL/judgement.html


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தெய்வக் குழந்தைக்கு தெய்வம் தரச்சொன்ன பரிசு

சென்ற வருடம் தற்செயலாக மேலைக்கடம்பூர் பற்றிய ஒரு அற்புத பதிவை இணையத்தில் பார்த்தேன். திரு ராஜா தீட்சிதர் அவர்களின் பல பதிவுகளை முன்னரே படித்திருந்தாலும், இந்தப் பதிவில் அவர் விளக்கங்கள் கொடுத்த முறை – கோயிற் கலை பற்றி மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் கொடுத்திருந்தார். உடனே அவரிடத்தில் தொடர்பு கொண்டு அந்த பதிவை இங்கே மொழி பெயர்த்து போடலாமா? அல்லது மேலும் பயனுள்ள பல பதிவுகளை நம்முடன் பகிரமுடியுமா என்று கேட்டு அவரும் சரி என்று சொன்ன​போது – துரதிருஷ்டவசமாக விதி விளையாடி அவர் நம்மை விட்டு போய்விட்டார்.

எனினும் இன்று நமக்கு ஒரு பாக்கியம் – அவரது பிரதான சிஷ்யை – மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க்
அவர்கள் நம்முடன் அவரது அனுபவங்களை தொடர் பதிவுகளாக பகிர ஒத்துக்கொண்டு, முதல் பதிவை தருகிறார்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என்னை ஈர்த்த இரு விஷயங்கள் – அழகு மற்றும் மர்மம். அதுவும் நான் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து எங்கோ உலகின் இன்னொரு இடத்தில் என்னும்​போது ஆர்வம் இரட்டிப்பாகக் கூடும். அது போன்ற காலத்தின் ஒரு கோலமே என்னை இந்தியா கொண்டு சேர்த்தது. அது ஒரு பெரிய கதை !

அப்படியே தொடர்ந்த எனது பயணம் ஒருநாள் என்னையும், நண்பர் திரு. ராஜா தீட்சிதர் அவர்களது புதல்வர்கள் திரு. கந்தன், திரு. ஜெயகுமார் மற்றும் திரு. ஷங்கர் அவர்களையும், ஒரு புராதன ஆலயத்தின் குளத்தங்கரையில் கொண்டு சேர்த்தது . மிகவும் அமைதியான சிறு கிராமம், வீதிகளில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அருகே சிலர் தங்கள் வே​லைகளில் மூழ்கி இருந்தனர். ஆலயத்தில் உழவாரப்பணி நடந்துக்கொண்டிருந்தது. மிகவும் கவனமாக, அதன் பாரம்பரிய அழகு சற்றும் குறையாமல் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கல்லும் கதை சொல்லும். அதவும் பண்டைய தமிழ் கோயில் என்றால் அதன் கற்கள் ஒரு பெரும் கதையை பிரதிபலிக்கும். கோயில் உருவான கதை, அதன் கட்டுமான முறை, எத்தனை தளங்கள் கொண்டது, அதன் கருவறை இருக்கும் அமைப்பு, எந்தக் காலத்தில் கட்டப்பட்டது , யார் கட்டியது , தற்போது இருப்பது முதலில் இருந்த கோயிலா இல்லை இடையில் அது விஸ்தரிக்கப்பட்டதா, செங்கல் கட்டுமானமா கற்கோயிலாக மாறியதா, இது போன்ற ஆய்வுகள் ஒருபக்கம் இருக்க, அங்கே இருக்கும் சிலைகளும் கதை சொல்லுகின்றன. கோஷ்டத்தில் இருக்கும் மூர்த்திகளை கொண்டு ஆய்வுகள் செய்ய இயலுமா, சிற்பங்களின் அணிகலன், அமைப்பு கொண்டு கால நிர்ணயம், அங்கே இருக்கும் கல்வெட்டுகளில் வரும் எழுத்துகளை கொண்டு ஆய்வுகள், அவை சொல்லும் வரலாறு, அந்த நாளைய ஆட்சிமுறை, இவை போதாதென்று அந்தக் கோயிலின் ஸ்தல வரலாறு, என்ன தெய்வ லீலை நடந்ததை குறிக்க எழுந்த கோயில் அது, பாடல் பெற்ற ஸ்தலமா, பரிகார ஸ்தலமா. இவை அனைத்தையும் ஒன்று சேர பார்க்கும்​ பொழுது முதலில் மூச்சு முட்டினாலும், அவை அனைத்தும் ஒன்று கூடி ஆலயம் என்று புனித அமைப்பின் முழு ஸ்வரூபத்தையும் நமக்கு தெரிய வைக்கின்றன.

இந்தப் பதிவை துவங்கும்​போது சிறு பதிவு என்று தான் நினைத்தேன். ஆனால் அதை எழுத ஆரம்பித்தவுடன் மேலும் மேலும் கிளைக்கதைகள் என்று விரிந்துக் கொண்டே போனது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முயற்சி செய்வதற்கு பதில், ஒரு தொடர் பதிவாக இயற்றலாம் என்று எண்ணி முதல் பாதியாக இதை எழுதுகிறேன் – திருவட்டதுரை சிவன் கோயில் பற்றிய தொடரே அது.

இந்த அருமையான கோயிலின் இறைவன் ஆரட்டதுரை நாதர். பலருக்கும் தெரியாத இந்த கோயிலில் பல அருமையான சோழர் காலத்து சிற்பங்கள் உள்ளன.

பெண்ணடத்திற்கு மிக அருகில் – திட்டக்குடி சாலையில் வெள்ளாற்றங்கரையில் இருக்கும் இந்த ஆலயம், அதன் அமைப்பு மற்றும் சிற்பங்களை கொண்டு ராஜராஜனுக்கு முந்தைய காலத்து சோழ திருப்பணி என்று கருதலாம். ஆதிசேஷனும், சப்த ரிஷிகளும் இங்கு சிவனை வழிபட்டதாக ஸ்தல புராணம் சொல்கிறது.

இந்த ஆலயத்தை ஒட்டி இன்னும் ஒரு கதை இருக்கிறது. அது திருஞானசம்பந்தர் இங்கு வந்த​போது சிவனே ஊர் மக்களின் கனவில் வந்து சோர்ந்து வரும் அவருக்கு ஒரு பல்லக்கும், குடையும் கொடுக்கும் படி கூறிய கதை. சம்பந்தரும் இந்தக் கோயிலின் இறைவனை பற்றி பல பதிகங்கள் பாடியுள்ளார்.

இந்தக் கதை மூன்று முறை இந்த கோயில் சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது, முதல் முறை செப்பனிடப்பட்டுள்ள கோபுரத்தில்.

இரண்டாம் தளத்தில் வலது புறத்தில் சுதை உருவம். பல்லக்கின் வெளியில் சம்பந்தர், மேலே குடை, மேலே தளத்துடன் வரவேற்கப்படும் காட்சி.

அதே போல விமானத்தின் இரண்டாம் தளத்திலும் இதே காட்சி உள்ளது.

இன்னும் ஒரு இடத்தில தலைக்கு மேலே மகர தோரணங்களின் நடுவில் மிகச் சிறிய அளவில் புடைப்புச் சிற்பம் உள்ளது.

இதுவே ஆதி முதல் வடிவம் என்று நாம் கருதலாம். பல்லக்கை திடகாத்திரமான இருவர் தூக்கிக் கொண்டு சம்பந்தரையும் அவர் தந்தையாரையும் அணுகி வருகிறார்கள். பல்லக்கின் அடியில் தெரியும் ஒரு சிறிய உருவம் மேலே இருக்கும் குடையை தூக்கிப் பிடித்திருக்கும் பாணி இன்றும் நம் கோயில் உற்சவங்களில் கு​டைகளை தூக்கிப் பிடிப்போரின் பாணியில் இருக்கிறது. குழந்தைக்கு பல்லக்கை பார்த்தவுடன் ஆனந்தம், தந்தையாருக்​கோ பெருமிதம். இந்தக் காட்சிக்கு மேலே ஆனந்த தாண்டவத்தில் ஈசன், அருகில் சிவகாமி அம்மை, அனைவருக்கும் அருள்பாலித்து நிற்கின்றனர். இந்த சிறிய அளவு சிற்பத்திலும், முகத்தில் மட்டும் அல்லாமல் அவர்களது ஒவ்வொரு அசைவிலும் அமைப்பிலும் உணர்ச்சிகளை சிற்பி வெளிப்படுத்துகிறான். ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் பரிசை பெரும் அவர்களின் உபகாரஸ்மிருதி – அதிலும் ஒரு சிறு குழந்தையின் கள்ளம் கபடமற்ற அந்த ஆனந்த உணர்ச்சி , அதே தந்தையின் முதிர்ந்த கோட்பாடு… ஆஹா அருமை. பல்லக்கின் அமைப்பும் வடிவமும் நாம் இதுவரை பார்த்தவை போன்று இல்லாமல் சமமான இருக்கை போலவே உள்ளது.

மற்ற இரு இடங்களிலும் உள்ள பல்லக்கு தற்கால அமைப்பை ஒட்டி உள்ளது. அதிலும் சம்பந்தர் அதன் மேல் ஏறி அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. குடை பல்லக்கின் மேலே முடுக்கி விட்டது போல உள்ளது. கூடு போல இருக்கும் இந்த பல்லக்கின் அமைப்பை பார்க்கும் பொது – மேலே கு​டைக்கு வேலையே இல்லையே என்று தோன்றுகிறது. மற்ற இரு சுதை வடிவங்களும் பிற்காலத்தில் செய்தவையாக இருக்க வேண்டும். ஆனால் எதற்காக முன்னர் இருந்த வடிவத்தை மாற்றி செய்தார்கள் என்று தெரியவில்லை.

எனக்கு ஒரே ஒரு குறைதான். விமானத்தையும் கோபுரத்தையும் செப்பனிடும்​போது பாரம்பரிய சுதை​யை உபயோகிக்காமல் சிமெண்ட் கொண்டு செய்கிறார்கள். சரியாக பராமரித்தால் சுதை பல நூற்றாண்டுகள் நிற்கும்…


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே

இந்த டிசம்பர் மாதம் நாங்கள் பல அற்புத இடங்களுக்கு பயணம் செய்தோம் – பல புதிய தகவல்களை தெரிந்துக் கொண்டோம். அதைவிட மேலாக கற்றது கைமண் அளவு என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்துக்கொண்டோம். நல்லவை நிறைய இருக்க ஒரு நெருடலும் கண்களில் பட்டது. அதனால் அதை பற்றி எழுதுகிறேன்.

இதை ஒரு சிறு பிழை என்று பார்க்கலாம். எனினும் அது இருக்கும் இடம் சிறப்பான இடமாக இருப்பதால் அதை ஒரு நெருடல் எனவும் பெரும் தவறு என்றும் என் கண்ணில் படுகிறது. திருவிளையாடல் புராணத்தில் வருமே, தமிழுக்குச் சங்கம் அமைத்து, ஈசனையே நக்கீரர் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டு, பிறகு ஈசனால் மன்னிக்கப்பெற்ற இடமான பொற்றாமரை குளம் அருகேதான். பல்லாயிரக்கணக்கான தினமும் வந்து செல்லும் இடம். அவர்கள் கண்களில் அருங்காட்சியகம் என்று ஒன்றை அமைத்து அதில் இந்த தவறை தினமும் காட்டும் அவலம்.

முதலில், நாங்கள் மதுரைக்கு வரும் போதே மதியம் ஆகிவிட்டது ( நான், நண்பர் அர்விந்த் , என் அருமை மனைவி பிரியா, ஆசை மகன் பிரித்வி ) – அவசர அவசரமாக கோயில் திறக்கும் போதே சென்று படம் எடுக்க துவங்கினோம். அருமையான கோபுரங்களில் மதி மயங்கி நின்றோம். உதவியர் (கைட்) ஒருவர் வந்து உள்ளே சுற்றிக்காட்டுகிறேன் என்றார். எங்களுக்கு சிற்பங்களை தான் பார்க்க வேண்டும், அங்கே கொண்டு செல்லுங்கள் என்று தொடர்ந்தோம். மூன்று மணிநேரம் பறந்ததே தெரியவில்லை. அடுத்த நாள் காலை மீண்டும் வந்து விட்டு விட்ட கோபுரங்களை படம் எடுக்கலாம் என்று கிளம்பும் தருவாயில் – முது வலி, கை வலி இவைகளை தொந்தரவு கொடுத்தும்…அத்தனை படங்களையும் எடுத்துவிட்டோம். ( அதுவும் கூட கூட்ட நெரிசலில் – எப்படி தான் இவர்கள் சரியாக நாம் படம் எடுக்கும் தருவாயில் குபீர் என்று முன்னால் வந்து குதிப்பார்களோ.. தெரியாது)

ஏழு மணி அளவில், மூட்டை கட்ட துவங்கினோம் ( இட்லி கடை கூப்பிட்டது) – அப்போது தூண் சிற்பங்களை பார்க்கவில்லையே என்றேன். உதவியர் – சார், அது ஒண்ணும் பெருசா இல்லை. விடுங்கள் என்றார். ஆனால் மண்டபத்தின் வெளியில் கட்டண சீட்டு கூடம், வெளியில் காவலர் ஒருவர் கண்டு மனம் உள்ளே செல் என்றது. தூண் சிற்பங்கள் பரவாயில்லை நன்றாகவே இருந்தன. ஆனால், மண்டபத்தின் ஒரு கோடியில், ஒளிவிளக்கு போடாமல் இருட்டாக சற்று தூசியாக இருந்த பகுதிகளில், சிறு சிறு மேடைகள், அவற்றிற்கு மேலே புகை படிந்த கண்ணாடி கூடுகள் இருந்தன. சென்று பார்த்தால் அதிர்ச்சி. ஐம்பதுக்கும் மேலான வெண்கல சிலைகளின் பவனி. அப்போது காவலர் வந்து இன்னும் இருபது நிமிடத்தில் மூடப் போகிறேன் என்றார்.

விலை மதிப்பில்லாத சிலைகள், இப்படி சரியான விளக்கு கூட இல்லாமல் – கண்ணாடி உள்ளே வெளியே தூசு. சரியான படங்களே எடுக்க முடியவில்லை.

எனினும் முதல் அணிவகுப்பிலேயே அந்த சொதப்பல்.

நீங்களே பாருங்கள்.

முதல் படிமம் ந்ருத்தன சம்பந்தன் என்று அடையாளம் கொண்டதை கூர்ந்து பாருங்கள். ( # 70 – Nruthana Sambandan)

சம்பந்தர் சிலையின் தனித்தன்மை , மற்றும் அதை கண்ணனின் சிலைகளுடன் எவ்வாறு பிரித்து பார்ப்பது என்ற முந்தைய பதிவை படித்திருப்பீர்கள்.

சற்று அருகில் சென்று பார்ப்போம்.

தெளிவாக ஸ்ரீவத்சம் தெரிகிறது. எனினும் இதை சம்பந்தன் என்று பட்டியல் இட்டுள்ளனர். அதுவும் சங்கம் வளர்த்து தமிழ் போற்றிய மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில்.. கடைசியில் தருமி போல கூவவேண்டும் போல இருந்தது.. சொக்கா..

ஆலயம் செல்லும் பலருக்கும், அங்கே இருக்கும் உதவியருக்குமே இந்த பொக்கிஷங்கள் இருக்கும் அருங்காட்சியகம், அதுவும் பொற்றாமரைக் குளம் அருகேயே இருப்பது தெரியவில்லை. வாசிக்கும் எவரேனும் ஆலய அதிகாரிகளிடம் சென்று இந்த தவறை சரி செய்ய உதவி செய்யுங்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

முதல் ஆண்டு நிறைவு பதிவு பால கண்ணனா அல்லது ஞானக் குழந்தையா..

நண்பர்களே, இன்று நமது ‘கல்லிலே கலைவண்ணத்துக்கு’ முதல் ஆண்டு நிறைவு நாள். சரியாக ஓராண்டுக்கு முன், வறண்ட பூமியில் விழுந்த விதைக்கு இயற்கை தந்த அரவணைப்பினால் மளமளவென வளரும் விருக்ஷம் போல நல்ல உள்ளங்கள் பலரின் தூண்டுதலால் ஓங்கி வளர்ந்துள்ளது. தயங்கி தயங்கி நடை பயிலும் சிறு குழந்தை போல நாங்கள் எடுத்து வைத்த கால் நண்பர் பலரின் உதவியுடன் எழுந்து ஓடும் பிள்ளையாய் இன்று நூற்றைம்பது பதிவுகளாய் தமிழிலும் ஆங்கிலத்திலும் மலர்ந்துள்ளது.

தமிழகக் கோயில் கலையோடு மட்டும் நின்றுவிடாமல், அதுவும் கல்லோவியங்களோடு மட்டும் நிற்காமல், இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா என்றும் சிற்பம், ஓவியம், குடவரை என்று எங்கும் உலாவி, பல சுவையான கலைபெட்டகங்களை நம் கண்முன்னே நிறுத்தி, அதன் மூலம் இன்னும் பல புதுப்புது உறவுகளை உருவாக்கி தளத்தின் தரத்தையும், இடுகைகளின் அழகையும் மெருகு சேர்த்துள்ளோம். எங்கள் உயரிய நோக்கம் ஒன்றே, எங்கள் தளத்திற்கு வரும் ஒவ்வொரு நண்பரும் நம் கலையை ரசிக்க, அதன் பால் காதல் கொள்ளச் செய்ய வேண்டும், இதற்கு இந்த துறையின் வல்லுனர்கள் பலரிடம் கலந்துரையாடி, பல நூல்களை சேகரித்து, அதில் இருக்கும் கருத்துக்களை பாமரனும் புரிந்துகொள்ளும் பாணியில் படைக்க வேண்டும் என்பதே.

உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் நாங்கள் இந்த இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து நுழைகின்றோம். இந்த இரண்டாம் ஆண்டு விழாவில் இன்று மீண்டும் ஒரு சிறப்பு பதிவு.

இந்தப் பதிவு உருவான கதையும் மிகவும் சுவாரசியமானது, முந்தைய பதிவில் உள்ள சிலை பற்றி நண்பர் வைரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, செப்பு படிமங்களில் வெகு நாட்களாக இருந்த சந்தேகம் வெளிவந்தது. இரண்டு சிலைகள் – பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பதால், பலருக்கும் ஐயம் தரும் வடிவங்கள். பால கண்ணன் மற்றும் திருஞானசம்பந்தர் சம்பந்தப்பட்ட சோழர்கால சிலைகளே இவைகள். கைதேர்ந்த வல்லுனர்களும் பல அருங்காட்சியகங்களுமே குழம்பி, திகைத்து, எதற்கு வம்பு என்று இரு பெயர்களையும் பெயர்ப்பலகையில் இட்டு தப்பிக்க பார்க்கும் புதிர் இந்த வடிவங்கள். இதோ தஞ்சை அருங்காட்சியகத்தில் அடுத்து அடுத்து இருக்கும் சிலைகள் ( நன்றி சதீஷ் )

அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. நீங்களே பாருங்கள். முதல் பார்வையில் இரு வடிவங்களுக்கும் குமுதம் புதிர் போல ஆறு வித்தியாசங்கள் போட்டி வைக்கலாம் போல உள்ளது.

ஆனால் இங்கே தான் கலை வல்லுனர்களின் திறன் வெளி வருகிறது. அதுவும் வெண்கல/செப்புச் சிலைகளை பற்றிய வல்லுநர் என்றால் முதலில் நினைவுக்கு வரும் பெயர் – முனைவர் திரு நாகசாமி அவர்கள். எங்கள் பாக்கியம், அவர்களின் அறிமுகம் ஏற்கனவே நண்பர் சுந்தர் பரத்வாஜ் மூலம் கிடைத்ததால், அவரிடமே ஐயத்தைக் கேட்டோம். அவரும், உடனே பதில் அளித்தார் – சான்றோர் எப்போதும் சான்றோரே!! அவர் அளித்த தெளிவுரையே இந்த பதிவு.

சரி, மீண்டும் இரு உருவங்களை பார்ப்போம். வலது கையின் சித்தரிப்பில் உள்ள வித்தியாசத்தை கூர்ந்து பாருங்கள்!.

பால கண்ணன் சிலைக்கு வருவோம். விடை கண்ணன் வலது மார்பில் உள்ளது. ஆம்! முக்கோண வடிவில் ஸ்ரீவத்சம் தெரிகிறதா? கேள்விக்கு இடமே இல்லை, இது கண்ணனே!. வலது கரம் அபய ஹஸ்தம், தன்னிடம் அடைக்கலம் நாடும் பக்தரை ரக்ஷிக்கும் பாணி.

இப்போது அடுத்த சிலை. ( நன்றி நண்பர்கள் சதீஷ் சிங்கை மற்றும் ஸ்டூவர்ட் லீ சென்னை அருங்காட்சியக – அற்புத புகைப்படங்களுக்கு )




இந்த வடிவம், சோழர் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிலை. சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர் – சைவ நெறியில் மூழ்கி இருந்த சோழர்களின் குலக்கொடி பேரரசன் ராஜ ராஜன் கண்டெடுத்த ( திருமுறை கண்ட சோழன் ) திருமுறைகளில், பின்னாளில் அவை தொகுக்கப்பட்டபோது, முதல்வராக போற்றப்பட்டு, முதல் மறை, முதல் தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் சிலை!. அவர் பாடிய முதல் பதிகத்தின் காட்சியையே இந்த சிலை குறிக்கிறது.

இவரது தந்தையார் சிவபாதஹிருதயர், தாயார் இசைஞானியார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார்.
தோடுடைய செவியன்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

இந்த காட்சியை படமாக காண

தோடுடைய செவியன்

காட்சி புரிந்ததா, இப்போது இதனை சிற்பி வடிக்கிறான். அதுவே இந்த சிலை யாரை குறிக்கிறது என்பதற்கு விடையும் கூட.

” குழந்தையின் தந்தை, யார் பாலூட்டியது என்று கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டியவர்”

இப்போது சிலையின் வலது கையை மீண்டும் நன்றாக பாருங்கள். ஆள் காட்டி விரல்

ஒரு நிமிடம் , சரியான படத்தை இடுகிறேன், சோழ சிற்பி தனது படைப்பில் கொண்டு வரும் உயிரோட்டத்தை விளக்கும் சிலை இது – இல்லை இல்லை, விரல் இது!. ஆள் காட்டி விரல், சற்றே மேல் நோக்கி நகருங்கின்றது, எனினும் இன்னும் முழுமையாக வானத்தை காட்ட வில்லை.

குழந்தை தந்தையின் கேள்விக்கு விடை அளிக்கும்போது ஆனந்தத்தில் ஆடிப் பாடி, விரலை மேல் நோக்கி நகர்த்தும் தருவாயில் சிற்பி தன் அகக்கண்ணில் அக்காட்சியை படம் பிடித்து உலோகத்தில் வார்த்து விட்டான். முகத்தில் ஒரு பரவசம், இடது கையில் தான் என்ன அப்படி ஒரு நளினம்!. நேரில் பார்க்குபோது சிலை உயிர் பெற்று அப்படியே பதிகத்தை பாடி அதற்கேற்ப அபிநயம் பிடிப்பது போல உள்ளது.

பல அருங்காட்சியகங்களில் இந்த வடிவம் உள்ளது – தில்லி, சென்னை, ப்ரீஏர்..


இனி நாம் இந்த சிலைகளை அடையாளம் கொள்ளவது சிரமம் இல்லை.

ஆக்க்லாந்து அருங்காட்சியகம்

ஸ்ரீவத்சம் நன்கு தெரிகிறது – எனவே கண்டிப்பாக கண்ணன்

இங்கே இருப்பது சம்பந்தர், தளத்தில் குறிப்பிட்டது போல கண்ணன் அல்ல.

ஹிந்து விஸ்டொம் தளம்

இந்த ஓவியத்தில் இருப்பது மேலே பார்த்த குறிகளை வைத்து சம்பந்தராக இருக்கலாம். (ஸ்ரீவத்சம் இல்லை!!)

சிற்பக் கலை பற்றி நல்ல பதிவு எனினும்

இந்த மகிழ்வான சந்தர்ப்பத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும், வாழ்த்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களுக்கு எல்லா வகைகளிலும் உதவுபவர்களையும் நினைத்துப் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொரு பெயரையும் எழுத ஆரம்பித்தால் இந்த வலைத்தளம் போதாது என்னவோ.. அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. வழக்கம் போலவே உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எந்நாளும் நாடுகிறோம்.

மீண்டும், உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி கூறி, இன்னும் பல நண்பர்களை எங்களுடன் இணைத்து வையுங்கள், கோயில், அருங்காட்சியகம் எங்கு சென்றாலும் எங்களை நினைவு கொண்டு படங்களை எங்களுடன் பகிருங்கள் என்ற வேண்டுகோளை மீண்டும் இட்டு உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment