விரைந்து செயல் பட்டு குறை தீர்த்த அதிகாரிக்கு நன்றி

வலைப்பூக்களில் பதிவுகளை எழுதும் பலரும் ( சினிமா , அரசியல் உட்பட ) பல மணிநேரம் செலவிட்டு தங்கள் கருத்துகளை தங்கள் வாசகர்கள் விரும்பும் ( விரும்புவார்கள் என்ற நம்பிக்கை !!!) வண்ணம் படைத்து விட்டு பின்னூட்டத்திற்கு காத்துக் கிடக்கும் காலம் இது.. வலைப்பூ எழுதுவதே நீ இந்திரன் சந்திரன் , ஆஹா ஓஹோ என்று வரும் ( வெறும் ) பின்னூட்டங்களை எதிர்பார்த்து மட்டுமே இல்லை என்றாலும், கண்டிப்பாக இன்னும் பல நல்ல படைப்புகளை ஆர்வத்துடன் அவர்கள் எழுத அவை தூண்டும். ஆனால் நம்மை போல சிற்பம், கலை, அழிந்த ஓவியம் என்று எழுதும் நமக்கு பெரும்பாலும் தீவிர ரசிகர்கள் சிலரும் நாமே முதுகில் தட்டிக்கொண்டு ஓடுவது தான் கதி. ஆனால் ஒரு பதிவுக்கு நல்ல விளைவு நேர்கையில் வரும் மன நிறைவு ஒரு நெகிழ்வு தான். அப்படி ஒரு காரியம் நடைபெற்றுள்ளது. அதுவும் நமது அழியக்கூடாத குலதனங்கள் சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்று மனம் சோர்வு அடையும் பொது , அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் நம் குரலுக்கு செவி சாய்த்து நடத்திய காரியம் தான் அது.

முதல் நன்றி இந்த பதிவை படித்து விட்டு வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்., அங்கே சென்றபோது அங்கு நடந்த தப்பை உடனே படம் பிடித்து அனுப்பி வைத்த நண்பருக்கு . என்ன கொடுமை இது ?, அடுத்த நன்றி பதிவை படித்துவிட்டு அதை தனக்குத் தெரிந்த சம்பந்தப்பட்ட அதிகாரியின் பார்வைக்கு அனுப்பிய நண்பருக்கு. நமது முக்கியமான நன்றி – ஒரு வலைபூ குறிப்பை அலட்சியாமாக கருதாமல் விரைந்து செயல் பட்டு குறை தீர்த்த அந்த அதிகாரிக்கு நன்றி! நன்றி!

இதோ புத்துயிர் பெற்று நிற்கும் வாயிற் காப்போன், மற்றும் கீழே உள்ள கல்வெட்டு.

முடிவாக நன்றி – செயல் வீரர் பணி செவ்வனே முடிந்துள்ளது என்று படம் பிடித்து அனுப்பி உதவிய நண்பருக்கு.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

என்ன கொடுமை இது ?

தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு விழா சிறப்பாக நடை பெற்றது. அதை ஒட்டி நடந்த அருங்காட்சியகத்தை பலரும் கண்டு ரசித்தனர். இந்த வாயிற் காவலனை நினைவிருக்கிறதா ?

வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்.

அந்த பதிவில் நாம் பார்த்த பொது இப்படி இருந்த சிலை ..

அதுவும் அதன் சிறப்பு – அதன் அடியில் உள்ள கல்வெட்டு வரிகள்

“உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.

இந்த சிலையை மக்கள் பார்வைக்கு வைக்கும் பொது நீல நிற கம்பளி இட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட சிலை, அதன் பின் என்ன நடந்தது ?

விழா முடிந்தவுடன், அதன் இருப்பிடமான தஞ்சை கலைவளாகம் சென்றது இந்த சிலை. ஆனால் அங்கே அதை அதன் இடத்தில் திரும்ப வைக்கும் பொது இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளனர் . அந்த அவல நிலையை நீங்களே பாருங்கள்.

சிலையை தரையில் புதைத்து சிமெண்ட் பூசிய கொத்தனாருக்கு அதன் அருமை தெரிய வாய்ப்பில்லை. எனினும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வரியே மறையும் அளவிற்கு சிதைக்க அருகில் இருந்தவர்கள் விட்டு விட்டார்களே என்பது தான் மிகவும் கவலையாக உள்ளது.

ஆவணப் படுத்தும் கூடங்களே இப்படி இருந்தால் !!!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்.

அரசர்கள் போர் புரிவது என்பதே சர்ச்சைக்குரிய விஷயம். அதிலும் ஒரு நாட்டை வென்று அங்கிருந்து பல பொக்கிஷங்களை சூறையாடி வருவது என்பது இன்னும் பிரச்சினைக்குரியது. எனினும் நம் வரலாற்றில் இதை பல முறை பார்த்திருக்கிறோம். வாதாபி வெற்றியின் போது நரஸிம்ஹ பல்லவரின் படைத் தளபதி பரஞ்சோதி கொண்டு வந்த வாதாபி கணபதி, ஸ்ரீவிஜயத்தை வென்று ராஜேந்திர சோழன் கொண்டு வந்த விஜய தோரணம், இதே வரிசையில் இன்று நாம் பார்க்கும் போர் பரிசு (தாரசுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு) தற்சமயம் தஞ்சை கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சாளுக்ய வாயிற் காப்போன். (படங்களுக்கு நன்றி சதீஷ் மற்றும் ஸ்ரீராம் )

அருமையான வேலைப்பாடு கொண்ட சிற்பம். எனினும் இதை ஏன் சோழன் வெற்றிப் பரிசாக கொண்டு வர வேண்டும். அதை எப்படி எப்பொழுது அதன் பீடத்திலேயே செதுக்கியும் வைத்தான்!

இராஜேந்திர சோழனின் மைந்தன் இராஜாதிராஜன் மேலைச் சாளுக்கியர் தலைநகரான கல்யாணியை வென்றான். அப்பொழுது அங்கிருந்து ஒரு சாளுக்கிய துவாரபாலகர் சிலையை கொண்டுவந்தான். அதன் அடியில் “உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.

சரி, அருமையான சாளுக்ய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பத்தை முதலில் பார்ப்போம்.

வெறும் கதை பேசிக்கொண்டு நிற்காமல், சுவாரசியமான தகவல்களுக்கு வருவோம். சிற்பத்தின் அடிப்பாகத்தில் செதுக்கப்பட்டிருக்கும் சில உருவங்களை கவனிக்கவும்!

மேலே இருப்பது உடும்பு, வாயிற் காப்போனின் காலுக்கு அடியில் இருப்பது என்ன சுண்டெலியா? அதை அடுத்து ( இடது புறத்தில்) வால் மாதிரி இருக்கிறதே – அது என்ன? வலப் பக்கம் இருக்கும் மிருகம் என்ன வகை?

கீழுள்ள படங்களை ஊன்றிக் கவனிக்கவும்.

இந்த படங்களுக்கு நன்றி
http://picasaweb.google.com/gildubs/IndeDuSud2008#

ஆஹா! ஒரு சுண்டெலியை பிடித்து விளையாடும் பூனை. அதற்கு எதிரில்??


அடடே…! இங்கே பாம்பு ஒன்று எலியை விழுங்குவதைப் போலல்லவா வடிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் நமக்கு வேறு ஒரு வாயிற்காப்போன் சிலை நினைவுக்கு வருகிறதல்லவா?
தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்

ஆம், அது தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்தான், நீங்களே பாருங்கள்.

இன்னும் அருகில் சென்று பார்த்தால்!

இராஜராஜசோழன், அப்பர் பெருமானின் பாட்டிற்கிணங்க பெரிய கோயில் விமானத்தை தக்ஷின மேரு என்று கைலாயத்தை ஒப்பிடும் நோக்கத்துடன் பிரம்மாண்டமான சிங்கம், அதை ஒட்டி யானையையே விழுங்கும் பாம்பு, முதலை அல்லது இராட்சத பல்லி ஆகியவற்றை அற்புதமாக வடித்து வைத்தான்.

இந்த வடிவத்தோடு சாளுக்ய சிற்பத்தை பொருத்திப் பார்த்தால் சாளுக்கியன் ஏதோ நையாண்டிக்காக அந்தச் சிலையை வடித்தது போலல்லவா உள்ளது! மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடல்லவா! ஒரு வேளை இதனால் தான் சோழன் இந்த வாயிற்காப்போனை சூரையாடி வந்தானோ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பட்டடக்கல் – சாளுக்கிய வாயிற்காப்போன்

வாயிற்காப்போன்களை இந்நாளிலேயே எவரும் மதிப்பதில்லை. முடிந்தால் அவர்களை சிலையாக நிற்க வைத்து ஏளனம் செய்கிறார்கள். அப்படி இருக்க, ஆலயங்களில் உள்ள சிற்ப வாயிற்காப்போன்களின் கதி – அதோகதி தான். நானும் நண்பர்கள் சிலர் மட்டுமே இவைகளை பற்றி பேசுவது உண்டு என்று நினைத்தபோது ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இன்னொரு புத்தகத்தின் பெயரை பார்த்தேன் THE CULT OF WEAPONS. THE ICONOGRAPHY OF AYUDHA PURUSHAS, by Sri. V. R Mani.

வாயிற்காப்போன்களை பற்றி நிறைய பதிவுகள் இடவேண்டும் என்று ஆசை வெகுநாட்களாக இருந்தது. அதனால் உடனே வாங்கிவிட்டோம் ( நண்பர் சதீஷ் மற்றும் அர்விந்த்) – இணையத்தில் வாங்கியதால் புத்தகம் பார்த்தவுடன் ஒரு சிறு வருத்தம். மொத்தமே நாற்பத்து ஐந்து பக்கங்கள் தான் இருந்தது – சிறு புத்தகம். எனினும் அளவில் சிறியது என்றாலும் எடுத்தாண்டுள்ள சிற்பங்களும் முறையும் நன்றாக இருந்தது.
படிக்கும் போதே சட்டேன்று கண்ணில் பட்டது ஒரு சிற்பம். பட்டடக்கல் சாளுக்கிய வாயிற்காப்போன். முன்னர் நாம் திரு கிபிட் சிரோமனி அவர்களின் பதிவை ஒட்டிய பல்லவர் கால திரிசூலநாதர் வடிவங்களை பார்த்த போது – அந்த வடிவங்கள் கொம்புடைய வாயிற்காப்போன்களா என்ற வாதம் தொடர்ந்தது. ஆனால் இந்த சிற்பத்தில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. ( படத்திற்கு நன்றி தோழி காதி )

மிகவும் அருமையாக ஒரு காலை மடக்கி, தனது (G)கதையின் மேல் பாரத்தை வைத்து ஒய்யாரமாக சாய்ந்து நிற்கும் அழகு, அந்த கதையை சுற்றி இருக்கும் படம் எடுக்கும் பாம்பு – எல்லாம் மிக அருமை.

சற்று அருகில் சென்று தலை அலங்காரத்தை பார்ப்போம்.

நான்கு கைகளை கொண்ட சிற்பம் ( முற்கால பல்லவ வாயிற்காப்போன் சிற்பங்கள் இரு கைகளுடன் மட்டுமே உள்ளன – அதன் பின்னரே மேலும் இரண்டு கைகள் வருகின்றன – இதை ஒட்டி ஒரு பதிவு போட வேண்டும் – திரு அர்விந்த் அவர்களின் காஞ்சி படங்கள் !) – இந்த சிற்பத்தில் மேல் வலது கரத்தில் என்ன உள்ளது என்று சரியாக தெரியவில்லை. இடது மேல் கரத்தில் தன்னையே ( சூலத்தையே ) பிடித்துள்ளார். மற்ற இரண்டு கைகளில் என்ன ஒரு ஸ்டைல் ( கை முத்திரைகள் பற்றியும் விரிவாக ஒரு பதிவு போட வேண்டும் )

சரி, நமக்கு வேண்டியதை பார்ப்போம்.அவரது விசித்திர தலை ஆபரணம் . ஆம் கண்டிப்பாக சூலம் தான்.

ஆனால் இதை பற்றி அந்த புத்தகத்தில் வரும் குறிப்பு சரியா ? நாம் விவாதிக்க வேண்டும்

” இடது மேல்புறக் கையருகே திரிசூலத்தை வைத்துக்கொண்டு, தலையில் சூலத்தை வைத்து இவர் தான் திரிசூலபுருஷன் அல்லது திரிசூலநாதன் என்று நாம் தெளிவாக கூற முடிகிறது. இந்த தனிப்பட்ட பாணி வாயிற்காப்போன் சிலைக்கு சாளுக்கியரின் தனித்தன்மை என்று கூற முடியும்.இதற்கு பின்னரே சலுக்யர் மற்றும் தெற்கு பகுதிகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு மேலும் மெருகு அடைகிறது “

இது சரியான கருத்தா? இந்த புத்தகத்தில் பொதுவாக முற்கால பல்லவர் சிலைகளை ஆய்வு செய்ய படவில்லை. பட்டடக்கள் இரண்டாம் விக்ரமாதித்யன் பல்லவர் மீது அடைந்த வெற்றியை கொண்டாடவே கட்டப்பட்டது. அதிலும் அந்த வெற்றியின் பொது ( ( CE 732 – 742 ), அவன் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தின் கலை திறனை கண்டு மிகவும் கவரப்பட்டு ( அதை ஒன்றும் செய்யாமல் சிதைக்காமல் ) அதை போலவே பட்டடக்கல் ஆலயங்களை அவனும் அவனது ராணிகளும் அமைத்தனர். இதன் அடிப்படையில், நாம் ஏற்கனவே பதித்த முற்கால பல்லவ சிற்பங்கள் ( இரண்டு கைகளுடன் சூலநாதர் ) , வைத்துப் பார்க்கும் பொது ஒரு வேலை இதே சிற்பிகளை தான் சாளுக்கிய மன்னன் எடுத்துச் சென்று அங்கே உபயோகித்தானோ என்ற கேள்வி மிக பலமாக எழுகிறது.

உங்கள் கருத்து என்ன. ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

விஜயவாடா மொஹல்ராஜபுரத்து அதிசயங்கள்

திரு திவாகர் அவர்களுக்கு இந்த அற்புத குடவரை பற்றிய பதிவை நம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த குடவரை பற்றி இன்னும் படிக்க வேண்டும், நல்ல புகைபடங்களும் தேவை. விஜயவாடா வாசகர்கள் இருந்தால் எடுத்து அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன். இப்போது திரு திவாகர்.

விஜயவாடாவையும் கனகதுர்கையயும் யாராலும் பிரித்துப் பார்த்துக் கனவு கூட காணமுடியாது . தற்சமயம் இந்திரகிலாத்திரி மலைக்கோயில் மேலே அழகாக வீற்றிருக்கும் கனகதுர்காவின் திரு உருவச் சிலையைப் பற்றி நாம் இங்குப் பேசப் போவதில்லை. ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்பு கல்லினால் செதுக்கப்பட்ட துர்காவின் அழகுச் சிலையைப் பற்றித்தான் இந்தப் பதிவு. வேறு சில சிற்ப ஆராய்ச்சியாளர்கள் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்பட்ட சிற்பம் இது.

விஜயவாடாவின் மத்தியப்பகுதியில் மொகல்ராஜபுரத்தில் பத்தடி உயரம் உள்ள இரண்டு குன்றுகள் இப்போதும் அப்படியே விட்டுவைக்கப்பட்டுள்ளன. ( மொத்தம் ஐந்து ) ஆர்க்கியாலஜி சொஸைட்டியின் மேற்பார்வையில் உள்ள இந்த குன்றுகளில்தான் இந்த சிலை ஆச்சரியங்கள் உள்ளன.

ஒரு குன்றின் அடிவாரத்திலேயே பாறையைக் குடைந்து சிறிய அறையை உருவாக்கி (கோயிலாக்கி) உள்ளே உள்ள பாறையில் துர்க்கையின் வடிவத்தை பின்னால் சிம்ம உருவத்தோடு செதுக்கி உள்ளார்கள். அது துர்க்கைதானா என்று பார்க்கும் எல்லோருக்குமே ஒரு திகைப்பு வரும் அளவுக்கு சிதைந்து போன முறையில்தான் இந்த சிற்பம் தற்சமயம் உள்ளது. பின்னால் சிம்மம் இருப்பதால் மட்டுமே துர்க்கை என்று கொள்ளவேண்டும்.

(கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்)

துர்க்கை காலை சற்று அகல வைத்து அசுரனை அழிக்கும் நிலையில் கற்பனை செய்து படைக்கப்பட்டுள்ள சிற்பம் இது. பக்கத்திலேயே ஒரு கருநீலப் பலகையில் அரசாங்கப் பெயர்ப் பலகை இவள் கனகதுர்காதான் என்றும் 6-7ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட சிற்பம் என்று அங்கீகாரம் அளித்துள்ளது. துர்க்கை அல்லது கொற்றவை என்றுதான் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் கனக எனும் வாசகத்தை முன்னால் வைத்து கனகதுர்கா என்றால் அனைவரும் வருவார்கள் என்று எதிர்பார்த்தோர்களோ என்னவோ(பலகைப் படம்)

சிற்பத்தின் மிகவும் சிதைந்த நிலைமையினால் அதன் வரை படம் இதோ

4638

இவள் துர்க்கையின் சிற்பம் என்று அரசாங்கம் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால், தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக பெண் தெய்வ வடிவ சிற்பமாக இந்த சிற்பத்தை ஏற்றுக் கொள்ளலாம். டாக்டர் கலைக்கோவன் தனது ‘மகேந்திரக் குடைவரை நூலில் செங்கல்பட்டு வல்லம் குடைவரையில் உள்ள கொம்மை செதுக்கிய கொற்றவை சிற்பம்தான் தென்னகத்தில் முந்தையதாக இருக்கவேண்டும், என்கிறார். அந்த வரிசையில் விஜயவாடா சிற்பமும் சேர்க்கலாம்.

இவைதவிர, மற்றொரு குடவரையில் முகப்பில் இன்னும் பல அற்புதங்கள். தூண்களின் அமைப்பை சற்று பாருங்கள். அவற்றுக்கு மேலே மொன்று கூடுகள். அவற்றில் இருக்கும் முகங்கள்
மும்மூர்த்தி சிலைகள் என்றும் , அதற்கும் மேலே நடராஜரின் நடனக் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. இது நடராஜர் வடிவமா அல்லது மகிஷாசுரமர்தினி வடிவமா ? . ஐஹோல் பதாமி நடராஜர் வடிவங்களில் முயலகன் ஆடல் ஈசனின் அடியில் இருக்கிறானா என்று பார்க்க வேண்டும். விரைவில் இங்கு இடுகிறேன். இதன் காலமும் ஏறத்தாழ அதே 6 அல்லது ஏழாம் நூற்றாண்டு சிற்பம் என்றே சொல்கின்றனர் (படங்கள் பார்க்க)

கூடுகளின் அமைப்பை சற்று மகேந்திர தளவானூர் குடவரையுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

இங்கு சென்னையைப் போல அல்லாமல் சிற்பத்தில் விருப்பம் உள்ளோர் யாருமே வருவதில்லை. இந்த கலை பெட்டகங்கள் சிதைந்து கிடப்பதை பார்க்கும் பொது, பழமையின் செல்வத்தை இவர்கள் எப்போதுதான் புரிந்துகொள்வார்களோ என்ற ஆதங்கம் தான் மிஞ்சுகிறது.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment