பல்லவ துவாரபாலகர்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது?

நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

சிற்பக்கலை பற்றி எனக்கு ஆர்வம் வந்தவுடன், மல்லை கலைச்செல்வங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், ஒரு தேடலாக பார்த்தேன் . அவற்றை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள பல ஊடகங்களை அலசினேன். சிங்கையில் இருந்தபடியால் நேரில் பார்க்க வாய்ப்புகள் குறைவு, எனவே புத்தங்களை படித்து பசியாறினேன். எனினும் சிற்பக்கலை பற்றி ஒரு சில புத்தகங்களே கிடைத்தன. அவற்றில் பலவும் என் அறிவுக்கு ( இன்றும் ) எட்டாத நிலையில் இருந்தன. அவற்றில் சில விலை அதிகமாக என்கைக்கு எட்டாதவகையில் என்னை வாட்டின. ஆர்வம் என்னை இணையத்திற்கு எடுத்து சென்றது. அல்லும் பகலும் தேடினேன் . இரண்டு தளங்கள் கிடைத்தன. திரு நாகசுவாமி அவர்களின் தளம் மற்றும் திரு

கிஃப்ட் சிரோமோனி அவர்களின் தளம் Dr.Gift Siromoney (30.7.1932 – 21.3.1988), M.A., M.Sc., Ph.D., F.S.S.

http://www.cmi.ac.in/gift/Archaeology.htm

திரு கிஃப்ட் அவர்களின் இடுகைகள் எனது பல கேள்விகளுக்கு எளிமையான முறையில் விடை தந்தன. மேலும் அருமையான வர்ணனை , இலவசமாக, புகைப்படங்கள், விளக்கும் சித்திரங்கள் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கையாண்ட முறை, என்னை மிகவும் கவர்ந்தன. இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சாமானியர்கள் கூட ஒருமுறை படித்தால், நமது குல பொக்கிஷங்களான கலைப்பெட்டகங்ளை போற்றி அவற்றை ரசிக்க வைக்கும் வண்ணம் இருந்தன அவரின் இடுகைகள். வரும் சந்ததியினர் இவற்றை போற்றி பேணி காக்க அவர் செய்துள்ள பனி அபாரம். அவரது இந்த செய்கை, அவர் இந்த உலகை விட்டு சென்றபின்னரும் என்னை போல சிலரை ஊக்குவிப்பதை கண்டு பெருமை படுகிறேன். ஏகலைவன் போல அவரை மானசீக குருவாக கொண்டு, நானும் இணையத்தில் இவ்வாறு ஒரு சிற்பக்கிடங்கியை உருவாக்க வேண்டும், அவரை போல என் தளமும் எனக்குப் பின்னரும் பலருக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் அவர் வழி பின்தொடர்கிறேன்.

அவர் இவ்வாறு விட்டுச்சென்ற ஒரு இழையை இன்று விரிவு செய்து இங்கு படைக்கிறேன். இதுவும் ஒரு பல்லவ புதிர். திரு கிஃப்ட் அவர்களது இடுகையை சற்று நேரம் எடுத்து படியுங்கள்.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_dvarapalaka.htm

நண்பர்களின் உதவி கொண்டு அவரது இந்த பதிவை படங்கள் கொண்டு நான் விளக்குகிறேன்.


மிகவும் எளிய கருத்து இது. பல்லவ வாயிற் காப்போன் வடிவங்கள் உள்ளே இருக்கும் தெய்வங்களின் ஆயுதங்களே! என்பதே ஆகும்

இதை விளக்க, பல்லவ கால குடவரைகளின் வாயிற் காப்போன்களை பார்ப்போம். பொதுவாக பல்லவ கால சிவன் ஆலய வாயிற் காப்போங்களின் தலை அலங்காரங்கள் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. இவர்களுக்கு கொம்பு உண்டு ! பழங்கால பழகுடியின மக்களின் பழக்கமோ , அல்லது சமண வடிவங்களில் வரும் நாக சித்தரிப்பின் விளைவோ, இல்லை நந்தி வடிவமோ ..என்று பல விதமான கருத்துக்கள் உண்டு.

வல்லம் குடைவரையை ஆய்வு செய்து தனது விளக்கங்களை தந்துள்ளார் திரு கிஃப்ட் அவர்கள், ஆனால் இன்று வல்லம் குடவரை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. நல்ல படம் எடுக்க முடியாத படி ” பாதுகாத்து வருகின்றனர். ” ( படங்களுக்கு நன்றி திரு சுவாமிநாதன் ஐயா மற்றும் திரு சந்துரு). ஆனால் நண்பர் திரு ஸ்ரீராம் அவர்களின் உதவி கொண்டு திருமயம் குடைவரை சிற்பங்கள் மற்றும் மண்டகப்பட்டு , சீயமங்கலம் குடைவ்ரைகளின் சிற்பங்கள் கொண்டு நாம் இன்று விரிவாக பார்க்கப்போகிறோம்.

சரி, முதலில் வல்லத்திலேயே ஆரம்பிப்போம். அற்புத சிற்பங்களை பாதுகாக்க அசிங்கமான இரும்புத்திரை .

அற்புத துவாரபாலகர்கள். பிற்கால கோயில்களில் தனித்தன்மையை இழந்து நிற்கும் சிற்பங்களை போல அல்லாமல், ஒவ்வொருவரும் தனக்கே உள்ள தனித்தன்மையுடன் உயிரோட்டத்துடன் இருக்கும் பல்லவ சிற்பங்கள். இரு பல்லவ சிற்பங்கள் ஒன்று போல இருக்காது, அதுவும் அவர்கள் சற்றே திரும்பி நிற்கும் பாணி அருமை.

வலது புறத்து சிலைக்கு இருக்கும் கொம்பை பார்த்தீர்கள ? இவை கொம்புகளா. கொம்பென்றால் தலையின் மேலே அல்லது சற்று நெற்றிப்பொட்டின் அருகில் அல்லவா இருக்க வேண்டும். இவை எங்கோ கழுத்தின் நடுவில் இருக்கும் படி உள்ளனவே, அதிலும் “கொம்பு” ஆரம்பிக்கும் பகுதியில் ஒரு தேவையற்ற வளைவு உள்ளதே.

சரி, இடதுபுறத்து சிற்பத்தை பார்ப்போம். இவருக்கு கொம்பில்லை, எனினும் கூர்ந்து பாருங்கள், நாடு நெற்றியில் ஒரு புடைப்பு தெரிகிறது . இது அவரது கிரீடத்தின் அலங்காரமா ? இல்லை இதற்க்கு வேறு ஏதாவது அர்த்தம் உண்டா ?

சரி, அடுத்து மண்டகப்பட்டு மகேந்திர குடைவரை செல்ல்வோம் .

வலது புறத்து துவாரபாலகன் அழகாக இருந்தாலும் கொம்பில்லை. வருத்தப்பட வேண்டும், இடது புறத்து ஆள் நமக்கு உதவுகிறார். நெற்றி புடைப்பு தான் இங்கேயும் .

அது என்ன இது, புது அலங்காரம். இன்னும் சிலவற்றை பாற்றுவிட்டு இந்த கேள்விக்கு விடை தேடுவோம்.

அடுத்து சீயமங்கலம் செல்வோம்.


வலது புறத்து சிற்பம் கொம்புடன் காட்சி அளிக்கிறது. இடது புறத்து வாயிற் காப்போன் கிரீடத்தில் தான் புடைப்பை காணவில்லை.


சரி, மீண்டும் கொம்பை சற்று அருகில் சென்று பார்ப்போம். இங்கேயும் கொம்பின் அடியில் உள்ள அரை வட்டம் குழப்பத்தை தருகிறது.

இப்போது புதிருக்கு விளக்கம் பெற, நண்பர் ஸ்ரீராம் அவர்களின் உதவி கொண்டு திருமயம் சிற்பங்களை பார்ப்போம். அற்புத வடிவங்கள், அதுவும் அந்த வலது புறத்து சிற்பத்தின் நிற்கும் பாணி, ஆஹா என்ன ஒரு கம்பீரம், அப்படியே உயிர் சிற்பம்.


இடது புறத்து சிற்பம் சற்று அடங்கி இருந்தாலும் அருமை.


அருகில் சென்று ஆராய்வோம் . அவர்களின் தலை அலங்காரம் மிக அருமை.

வலது புறத்து வாயிற் காப்போனின் தலை கொம்பு – இப்போது இந்த சிற்பத்தில் இன்னும் அலங்காரமாக இருக்கும் கொம்பு நமக்கு பல உண்மைகளை வெளி கொணர உதவுகிறது. உங்கள் மனக்கண்களில் வாயிற் காப்போனின் முகத்தை எடுத்துவிட்டு வெறும் கொம்புகளை மட்டும் பாருங்கள்

கிரீடத்தின் மேலே ஒரு வேல் போன்ற அமைப்பு தெரிகிறதா. இதையும் இரண்டு கொம்புகள் ( அவற்றின் அடியில் இருக்கும் அரை வட்டம் ) ஆனதையும் சேர்த்து பாருங்கள். ஒரு திருசூல வடிவம் தெரிகிறதா. .

ஆம் இவரே திரிசூலநாதர்

இதே வாதத்தின் படி, இடது புறம் இருப்பது வெறும் புடைப்பு இல்லை. அது மழு . கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள புகழ் பெற்ற சண்டேசர் வடிவத்தில் அவன் கரத்தில் உள்ள மழுவை பாருங்கள்.

இவரே மழுவுடையார்.

ஈசனின் மழுவும் சூலமும் மனித உரு கொண்டு அவன் சன்னதியை காக்கும் கோலங்களே இவை.

சகோதரி காதி அவர்கள் அனுப்பிய காவேரிபாக்கம் சிற்பம். தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் சிற்பம். இவரும் திரிசூலநாதர் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மகேந்திரவர்மரின் கலைத்தாகம் உண்டவல்லியில் துவங்கியதா ?

சிற்பங்களுக்கென உருவாக்கப் பட்ட சிறப்பு வலைத்தளம் இது, மேலும் பல்லவ சிற்பங்களின் வசீகரத்தால் மயங்கிக் கிடக்கும் எனக்கு இந்த பதிவை உருவாக்குவது சற்றே சிரமமெனினும் நல்லதொரு பதிவை உங்களுக்கு அளிக்கும் மகிழ்ச்சியில் தொடர்கிறேன்.

ஏதாவது ஒன்று நமக்கு பிடிக்கிறது என்றால் நம் மனம் அதிலேயே லயித்து விடும், மீண்டும் மீண்டும் மனம் அதையே நாடிச் செல்லும். அது போல் பல்லவ சிற்பங்களில் மனதை செலுத்தி சிட்டுக் குருவியாய் சிறகடித்துக் கொண்டிருந்த என்னை, பல்லவர்களுக்கு முந்திய சிற்பங்களின் புகைப்படத்தை காட்டியும் தன் கேள்விக் கணைகளாலும் கட்டிப் போட்டுவிட்டார் தோழி கேத்தி. எனினும் நான் எனது மகேந்திர நாமத்தை விடவில்லை. அண்மையில் ஒரு தேடலில் – என்னுடைய மயக்கத்தால் சிற்பக்கலையின் ஈடு இல்லாத நாயகன் மகேந்திரபல்லவன்தான் என்றிருந்த நான் தகர்ந்து போனேன், டாக்டர். முகமது தாஜுதீன் கான் அவர்களின் ஆச்சர்யமூட்டும் உண்டவல்லி குடைவரைகளின் புகைப் படங்களை பார்த்தபொழுது தான் ….

(உண்டவல்லிக் குடைவரைகள் விஜயவாடாவிற்கு தென்மேற்கே 6 கி.மீ. தொலைவிலும், குண்டூரிலிருந்து வடமேற்கே 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் குடைவரைகள் ஹைதராபாதிலிருந்து 220௦ கி.மீ. தொலைவில் உள்ளது. நன்றி விக்கி)

இந்தப் படங்களை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தவர் “விசித்திரசித்தன்” நாவலை எழுதிய திரு. திவாகர் அவர்கள்தான், அவரிடம் இதைப்பற்றி உரையாடிய போது இரண்டு ஆச்சரியமான விஷயங்கள் தெரியவந்தன. ஒன்று இந்த குடைவரைகளின் காலம் 4 முதல் 6 ஆம் நுற்றாண்டு (கி.பி.), இது விஷ்னுகுன்டின மன்னர்கள் காலத்தை சார்ந்தது. நிச்சயமாய் இது மகேந்திரவர்மரின் முதல் குடைவரையான மண்டகப்பட்டிற்கு முந்தியதுதான். இரண்டாவது ஆச்சர்யம், மகேந்திரவர்மர் தன்னுடைய வாழ்நாளின் முற்பகுதியை இங்கே செலவிட்டு இருக்கவேண்டுமென்பது. மேலும் சிம்ம விஷ்ணுவின் மனைவிகளில் ஒருவர் விஷ்னுகுண்டின் வம்சத்தை சார்ந்தவர் என்றும் தெரியவந்தது.

மற்ற விஷயங்களைப பற்றி அலசி ஆராய்வதற்கு முன், இரண்டு சிற்பக் கலைகளையும் சற்று பொருத்திப் பார்த்திடுவோம். உங்களுக்கு அதிக சிரமமில்லாமல் ஒரே ஒரு துவார பாலகரையும் ஒரே ஒரு தூணையும் மட்டும் முதலில் பார்க்கலாம்.


தூணின் வடிவமைப்பு, அதில் உள்ள வரிகள், நேர்த்தி, சிம்மத்தின் வடிவமைப்பு ஆகியவற்றோடு துவார பாலகரின் தோற்றம், நிற்கும் அழகு, கதை ஆயுதம், உடை , அணிகலன் , இடுப்பு வளைவுகள், இடுப்பின் மேல கையை ஊன்றி வைத்திருக்கும் முறை ஆகியவற்றையும் கவனிக்கவும்.

என்ன பார்த்தாயிற்றா, ஒருவேளை மகேந்திரவர்மரால்தான் இவைகள் செதுக்கப்பட்டனவோ என்ற எண்ணம் எழுகிறதல்லவா! ஆனால் என்ன செய்வது இவற்றின் காலம் குறைந்தது ஐம்பது முதல் நூறு ஆண்டுகள் நம் விசித்திரசித்தருக்கு முற்பட்டதாயிற்றே.

இதுவரை மகேந்திரவர்மர்தான் குடைவரை சிற்பங்களின் முன்னோடி என்றல்லவா நினைத்திருந்தோம், இதோ திரு. நாகசாமி தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளதையும் பார்த்துவிடுவோம். ( மண்டகப்பட்டு புகழ் பெற்ற மகேந்திர கல்வெட்டு )

http://www.tamilartsacademy.com/books/mamallai/new-light.xml

கல்வெட்டினை படித்துப்பார்க்கலாம் ” விசித்திரசித்தனால் நிர்மாணிக்கப் பட்ட இந்த ஆலயம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்க்கு அர்ப்பணிக்கப்பட்டது, இதில் செங்கலோ, கலவையோ, மரமோ, உலோகமோ உபயோகப்படுத்தப்படவில்லை. இதுதான் தென்னிந்தியாவில் முதன்முதலாக வெட்டப்பட்டது என்றும் குறிப்பிடப்படவில்லை, இதற்குப்பின் வந்த கல்வெட்டுகளிலும் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. பட்டப்பெயர் வைத்துக்கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்கும் , அப்படியெனில் அவர் தனக்கு “அத்யகுகயதநகாரி” அதாவது முதல் குடைவரையை வெட்டியவர் என்று பெயர் வைத்துக் கொண்டிருந்திருக்கலாம், ஆனால் இதுவரை அவ்வாறு ஒரு பட்டப் பெயரை நாம் எங்கும் பார்க்கவில்லை.
மகேந்திரரால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு பண்டைய ஆவணங்களிலும், அதாவது கல்வெட்டுகளிலோ அல்லது செப்பு பட்டயங்களிலோ, அவர்தான் முதலில் குடைவரைகளை தோற்றுவித்தார் என்று குறிப்பிடப்படவில்லை.”

எது வேண்டுமானாகிலும் இருந்துவிட்டு போகட்டும், ஒன்று நிச்சயம் இந்த மண்டகப்பட்டு குடவரை தான் பல்லவர்களின் முதல் குடைவரை. ( சிலர் மண்டகப்பட்டு குடவரை மற்றும் தூண்களின் வேலைப்பாட்டையும் அதன் வாயிற் காப்போனின் வேலைபாட்டையும் வைத்து தூண்களை விட அவர்களின் வேலைப்பாடு முதிர்ந்த நிலை என்று சொல்வது உண்டு. ஒரு வேலை அவை பின்னர் வெட்டப் பட்டதாகவும் இருக்கலாம்)

அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு பார்த்தால், மண்டகப்பட்டு குடைவரைக்கும் உண்டவல்லிக் குடைவரைக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும். தமிழகத்தில் குடைவரைகளுக்கும், சிற்பக் கலைக்கும், ஆலய கட்டுமானத்திற்குமான பொற்காலத்திற்கு வித்திட்ட மகேந்திரவர்மரின் கலைத்தாகம் உண்டவல்லியில் துவங்கியதா ?

மேலே கண்ட ஒற்றுமைகளை எதைச்சையாக இருக்கவேண்டும் என்றும் நீங்கள் நினைத்தால், மேலும் சில உண்டவல்லிக்கும் மகேந்திர குடைவரைகளில் உள்ள சிற்ப ஒற்றுமைகள் இதோ. தூணின் வடிவம், அலங்கார பூ வடிவம், கம்பீர சிங்கம் ….

இப்போது என்ன சொல்கிறீர்கள் ?

இதே போல் மற்றுமொரு மனதை கொள்ளை கொள்ளும் குடைவரை ” பைரவகொண்டா”, இதை விரைவில் மற்றுமொரு பதிவில் காண்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

முதல் முதல் கல்லில் செதுக்கிய ஆடல் வல்லான் – அவனிபாஜன பல்லவேஸ்வரம் – சீயமங்கலம் குடவரை

சீயமங்கலம் நோக்கி. ( வெகுவாக பயணத்தில் நிகழ்ந்த உரையாடல் , மற்றும் சில கற்பனைகள் )

திண்டிவனம் வந்தவாசி சாலை ….காலை mani 8.30 இருக்கும்

சந்துரு சார் : இது சரியான வழியா? . சார் சீயமங்கலம் இப்படி போனா வருமா .
ஊர் நபர் : பாலத்துல தப்பா திரும்பிட்டீங்க!
டிரைவர்: ஒ அப்படியா , சரி திரும்பி போகிறோம்.

வெங்கடேஷ்: அதோ பாலம். இப்போது எப்படி – நேர போங்க.
சந்துரு சார்: அதோ ஆசி போர்டு.
####: ஒரு நிமிஷம் ஓரமா நிறுத்துப்பா – முட்டுது !!!

ரகோத்தமன்: எடுங்க எடுங்க சீக்கிரம் போவோம்.
விஜய்: சதீஷ், அந்த முறுக்கு பாக்கெட் எங்கே. கார வேர்கடலை – பரவாயில்லே – அத்தையும் கொடுங்க.

நாராயணசுவாமி சார் : ஏதோ கிராமம் போல இருக்கே. வழி சரியா. கேட்டுக்கோ
சந்துரு சார் : எம்மா – குகை கோவில் வழி எப்படி
ஊர் அம்மா : அதுவா , இப்படீகா போய், அப்படி திரும்பி நேர போங்க. யாரையும் கேக்க வேண்டாம்.!!!!!
சந்துரு சார்: அது சரி, அப்படியே போப்பா .

வெங்கடேஷ்: அதோ அங்கே ஒரு மலை தெரியுது. உடு உடு .
சதீஷ்: என்னப்பா ரோடு வேறு பக்கமா போகுது.
நாராயணசுவாமி சார்: இரு இரு , இன்னொரு வாட்டி வழி கேப்போம்.
சந்துரு சார்: ஏம்பா.. குகை
ஊர் ஆசாமி: அதுவா சார், இப்படிகா போய் ….
டிரைவர்: நாங்க அப்படிக்கா தா வந்தோம்.
ஊர் ஆசாமி: இல்ல பா, இப்படி கா பொய், நடுல ஒரு பக்கம் ஒரு பாத போகும், அப்படி உடுங்க
சந்துரு சார்: ஓ சரி சரி

சந்துரு சார்: அப்பாடி, ஒரு வழியா வந்தாச்சு.
விஜய்: என்ன சார், குடவரை கோயில்னு வந்தா பெரிய கோபுரம் , விமானம், வெளி ப்ராஹாரம் எல்லாம் இருக்கு. நாங்கள் மஹேந்திர சீயமங்கலம் குடவரை கோயில், அதில் இருக்கும் முதல் முதல் கல்லில் செதுக்கிய ஆடல் வல்லான் பாக்க தான் வந்தோம்.

சந்துரு சார்: அதுவா, உள்ளுக்குளே இருப்பது மஹேந்திர குடவரை – அவர் வைத்த பெயர் அவனிபாஜன பல்லவேஸ்வரம் . அதை சுத்தி பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்து பெரிதாக்கி உள்ளனர்.

விஜய்: ஒ, அப்படியா ? என்ன ஈ காக்கா காணும்.

வெங்கடேஷ்: வாங்க வாங்க.
விஜய்: என்ன வெங்கடேஷ் , தொப்பி எல்லாம் பலமா இருக்கு. எதாவது புதையல் தேட போறீங்களா ?
வெங்கடேஷ்: இல்ல பா, இது எனக்கு மிகவும் ராசியான தொப்பி, இலங்கையில் வாங்கியது. அதோ யாரோ ஒருத்தர் வாரார் !

ஆசி காவலர் : வணக்கம்
சந்துரு சார்: வணக்கம்
விஜய்: சார் நாங்க உள்ளே போகணும். ரொம்ப தொலைவில் இருந்து வந்துருக்கோம்
ஆசி: சார், வெளியிலே பாருங்க. உள்ள போகனும்னா சாமி வரணும். அவர் கிட்டே தான் சாவி இருக்கு.
வேணும் நா இதோ – இந்த ஓட்ட வழியா பாருங்க.
விஜய்:இல்ல சார், உள்ளே போகணும். எங்களுக்கு ########### அவரை தெரியும். ########## தெரியும். வேணும் நா போன் போடட்டுமா ?
ஆசி: சாமி போன் தாரேன் , போட்டு பாருங்க சார். பெரிய பெரிய ஆளுங்க பேரெல்லாம் கரெக்டா சொல்றீங்க!!
விஜய்: கொடுங்க கொடுங்க , ரொம்ப ஆர்வமா வந்துருக்கோம்

ட்ரிங் ட்ரிங் : ஹலோ சாமியா, நாங்க கோயில்ல இருக்கோம். வர முடியுமா

விஜய்: அஞ்சு நிமிஷத்துல வாராராம்.வாங்க அதுக்குள்ளே மத்ததெல்லாம் பாப்போம்

விஜய்: சந்துரு சார், எப்படி மஹேந்திர பல்லவர் இப்படி ஒரு அத்துவான காட்டை செலக்ட் பண்றார்.
சந்துரு சார்: அதுவா, நல்ல கேள்வி. இதுக்கு சரியான பதில் இல்லை. இருந்தாலும், பல குடைவரைகள்
இருக்கும் இடங்களில் சில ஒற்றுமைகள் உண்டு . பெரும்பாலும் சிறு குன்றுகள், அருகில் ஒரு தடாகம் அல்லது அருவி ( நீர் பரப்பு ) இருக்கும் இடங்களையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
விஜய்: ஒ, அப்படியா. இங்கே எங்கே சார் நீர் பரப்பு.
சந்துரு சார்: அதோ அங்கே பாருங்க. அந்த பக்கம். இப்போ மழை இல்லை, அதனால் நீர் இல்லை. மேலே ஏறி பாருங்க , நல்லா தெரியும்.

விஜய்: அது என்ன – பாறைக்கு மேலே ஒரு குட்டி கோயில்
சந்துரு சார்: அது ஒரு முருகர் கோயில். பின்னாளில் கட்டப்பட்டது பாத்து ஏறுங்க!!
விஜய்: படி இருக்கே ( பாதி வழி ஏறினப்பறம் தான் வந்தது ஆப்பு – அப்பா என்ன உசரம் )
எல்லோரும் வாங்க – அருமையான வியு
அசோக்: நானும் வாரேன்
சந்துரு சார்: அங்கே மழை காலத்தில் குளம் நிறைஞ்சு இருக்கும் . நடுவில் உள்ள கல் – அப்போ ஜல லிங்கம் போல காட்சி அளிக்கும். இந்த கோயில் இறைவனுக்கு தூணாண்டார் என்ற பெயர் வர அந்த கல்லே காரணமாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

விஜய் : வழுக்குது பாத்து பார்த்து இறங்குங்க
காலை நம்ப முடியாது, அப்படியே உக்காந்து ( ஜீன்ஸ் பாண்ட் தானே ) சறுக்கு மரம் மாதிரி வர வேண்டியது தான். என்ன என்னை பாத்து எல்லாரும் சிரிக்கிறிங்களா – இறங்கும் போதுதானே உங்க வீரம் தெரியும்.

குடவரை அமைக்கப்பட்டுள்ள பெரும் பாறையை சுற்றி வந்தோம். அருகில் பல கல்வெட்டுகள், மற்றும் கல் உடைக்க பயன் பட்ட முறைகள் பற்றி பேச நிறைய இருந்தது. நாம் முன்னரே பார்த்த மாதிரி மர ஆப்புகள் அடிக்க துளைகள் பல இடங்களில் பார்த்தோம். அதன் அளவை காட்ட இதோ ஒரு படம். அருகில் இருப்பது இன்ஹேளர் .

சந்துரு சார் : அதோ சாமி டி வி எஸ் 50 வராரு . வாங்க திரும்புவோம் .

ஆடு மேய்ப்பவன்: யார் சார் நீங்க. அதோ பாருங்க – விமானத்துல இடி விழுந்து ஒரு யாழி உடஞ்சு போச்சு. யாரும் சரி செய்ய மாட்டேன்கரங்க. நீங்க எதாவது பண்ணுங்க சார்
அசோக்: அப்படியா , எப்போ இடி விழுந்துச்சு?

சாமி: சார் இதோ திறந்து வுடறேன் வாங்க

சதீஷ் : என்ன ஒரே இருட்டா இருக்கு
சாமி: அதுவா சார், இன்னும் இருட்டா இருக்கும். மூச்சு முட்டும். பாம்பு தொல்லை வேற இருந்துது. ஒரு கீரிப்பிள்ளையை உள்ளே வுட்டுட்டு தான் நான் உள்ளே போவேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. வெளி மண்டபத்தை பிரிச்சு கட்டி கொடுத்தாங்க. ஆனா இப்போ வெளிச்சமும் வருது மழை தண்ணியும் வருது. !!

விஜய்: என்ன சந்துரு சார் – இந்த மண்டபம் தூணும் மஹேந்திர தூண் மாதிரி இல்லையே ( அது என்ன மஹேந்திர தூண் – விரைவில் பார்ப்போம் )
சந்துரு சார்: இன்னும் உள்ளே போங்க
விஜய்: ஆஹா , அதோ மஹேந்திர தூண்

ஆசி: சார், போட்டோ எடுக்கக் கூடாது
விஜய்: மெயின் சாமி போட்டோ எடுக்க மாட்டோம்.தூண், வாயிற் கார்ப்பொன் அப்படி தான் எடுப்போம். ப்ளீஸ் , எங்களுக்கு @@@@@@@@@ தெரியும் !!!
ஆசி: ம்ம்ம்ம்ம்ம்

சதீஷ்: விஜய், இங்கே இன்னும் பல சிற்பங்கள். இடுக்கில் ஒரு மகர தோரணம் , அதில் ஒரு கணம்

விஜய்: ஒரு நிமிஷம் , இந்த வலது புறத்து வாயிற்காப்போனின் தலை பாருங்கள் – கொம்பு போல உள்ளது. ( என்ன அது – விரைவில் பார்ப்போம் )

சந்துரு சார்: தூணில் உள்ள வேலைப்பாட்டை பாருங்கள்.
விஜய்: அருமை – இரண்டு கம்பீர சிங்கங்கள். இங்கே தூணின் பொதிகையில் டிசைன் போட ஆரம்பித்துள்ளனர் ( அப்போ டிசைன் இல்லாத தூண் – உண்டு உண்டு – இங்கே இல்லை, வேறு இடத்தில )

நாராயணசுவாமி சார்: இங்கே இரு பக்கமும் பாருங்க.

விஜய்: சதீஷ், நீங்க சுந்தர் சார் கிட்டே கடன் வாங்கின மஹேந்திர குடைவரைகள் புக்கில் பாருங்க . யார் இது.

சதீஷ் : அவங்க அமலையர் சிற்ப்பங்கள்.

விஜய் ; ஒ அப்படி என்றால் என்ன, பார்க்கணும். இதோ பாருங்க பூ கூடையுடன் ஒரு தோழி ….

ரகோத்தமன்: சந்துரு சார், இதோ தூணில் ஒரு கல்வெட்டு இருக்கே. தமிழ் மாதிரி இல்லையே.
சந்துரு சார்: அது க்ரந்தம் . மஹேந்திர பல்லவர் கல்வெட்டு

விஜய்: ஒ , அப்படியா, சதீஷ் பூகில் குறிப்பு இருக்குமே பாருங்க
சதீஷ்: இருக்கு – இதோ படிக்கிறேன்.

அவனி பாஜன பல்லவேஷ்வரம் எனும் இக்கோயில் இலலிதாங்குரனால்
நற்செயல்கள் எனும் நகைகளை உள்ளடக்கிய நகைபெட்டியென எடுக்கப்பட்டது

விஜய்: அற்புதம், ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகள் ஆகியும் தன் புகழ் மட்டது இருக்கும் பல்லவர் …..வாழ்க

ரகோத்தமன்: தூணுக்கு இந்த பக்கம் வேறு கல்வெட்டு இருக்கு. ஆனால் வேறு எழுத்து.
சதீஷ்: அது பின்னாளைய தந்தி வர்மர் மற்றும் நந்தி வர்மர் – தமிழ் கல்வெட்டு.

சந்துரு சார் : இதோ நடராஜர் சிற்பம். தென்னகத்தில் கல்லில் வடிக்கப்பட்ட முதல் முதல் நடராஜர் வடிவம் இதுவே – இதோ இந்த தூணில் உள்ளது. சாமி கொஞ்சம் ஆர்த்தி காட்டுங்க. அந்த பக்கம் ரிஷப வாகனத்துடன் சிவன் பார்வதி .

அசோக்: ஒரு நிமிஷம் பொறுங்க, இதோ நான் வாறன் கேமரா வுடன்

ஆஹா… இருளை போக்கி ஆடல் வல்லான் ஆடிய ஆட்டத்தை மீண்டும் பார்க்கும் பாக்கியம். …

என்ன அற்புத புடைப்பு சிற்பம். சிற்பம் மற்றும் தூண்கள், மகர தோரணம் – அனைத்தும் அடுத்த பதிவில் அலசுவோம்.

படங்கள் : குழு நண்பர்கள், மற்றும் திரு சுவாமிநாதன் மற்றும் திரு சந்துரு அவர்களது முதல் பயணம் . நன்றி திரு சுந்தர் சார்.

ரகோத்தமன் , சதீஷ் ,வெங்கடேஷ் , சந்துரு சார் , அசோக் மற்றும் உங்கள் விஜய்

Ref: Sri K.R. Srinivasan – Cave temples of the Pallavas, Dr KKN’s மஹேந்திர குடைவரைகள்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment