நமது பண்டைய கலைச்செல்வங்களை புரிந்துக்கொள்ள அறிதலும் புரிதலும் பகிர்தலும் மிகவும் முக்கியம். பல விஷயங்கள் நமக்கு முதல் கண்ணோட்டத்தில் பல கேள்விகளை எழுப்பி குழப்பினாலோ – அவை அனைத்தும் நமது அறிவுப் பயணத்தில் படிகள் என்றே உணர்ந்து மேலும் நம்மை நம் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அப்போது முடிச்சுகள் தானே அவிழும் ! அப்படி ஒரு முடிச்சு பரங்குன்றம் உமை ஆண்டார் குடைவரை. முருகனை மட்டுமே தரிசித்து திரும்பும் பக்தர்கள் மலைக்கு பின்புறம் ஒரு குடைவரை இருப்பதையே மறந்துவிடுகின்றனர்.

குடைவரையின் முகப்பை பார்க்கும் போதே – அந்தத் தூண்களில் உள்ள வேலைப்பாடு அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லை என்பதை உணரலாம். இந்த கலை வேலைப்பாடு அதிகம் இல்லாத தடியான தூண்களை கொண்டு இந்த குடைவரையின் காலம் எட்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னர் என்று நாம் சொல்லமுடியும். இந்த குடைவரையின் வெளியிலேயே பல புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றை அடுத்த பதிவில் காண்போம். உள்ளேயும் பல சிற்பங்கள் இருக்க நேரே உள்ளே கருவறைக்கு செல்வோம். இங்கே தான் முதல் முடிச்சு. புடைப்புச் சிற்பங்களில் உள்ள கலைத் திறன் வடிவம் ( ஒரு அழகிய நடராஜ வடிவமும் உள்ளது இதைக் கொண்டு இவை கண்டிப்பாக பன்னிரெண்டாம் / பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதாக இருக்க முடியாது என்று சொல்லிவிடலாம்.
இவற்றைக் கொண்டு பரவலாக இந்த குடைவரை சமணர் குடைவரையாக இருந்து சைவர்களால் மாற்றி அமைக்கப்பட்டது என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இந்த முடிச்சை அவிழ்க்க – கருவறையில் உள்ள சிற்பத்தை ஆராய்ந்து ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.
உள்ளே சிவனுடைய அர்த்தநாரி வடிவம் உள்ளது.
நான்கு கரங்கள் கொண்ட அர்த்தநாரிவடிவம் – உமை , மகேசன் இருவரின் பாகங்களும் சிறப்பாக வேற்றுமை காட்டப்பட்டு செதுக்கப்பட்டுள்ளது.

இங்கே தான் குழப்பம் ஆரம்பிக்கிறது. பொதுவாக கருவறையில் நாம் அர்த்தனாரி வடிவத்தை பார்ப்பதில்லை – சோமாஸ்கந்தர் வடிவம் நிறைய இடங்களில் வரும். அடுத்து இந்த புடைப்புச் சிற்ப்பத்தின் அளவு கருவற்றின் அளவை வைத்துப் பார்க்கும் பொது மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் பீடத்தின் அமைப்பு – அகலமான அளவு மற்றும் தரையில் இருந்து உயரம் – இவற்றை வைத்து பார்த்தல் அது அமர்ந்திருக்கும் வடிவம் ஒன்றுக்காக வடித்து போலவே உள்ளது. ரிஷப வாஹனம் இருக்கும் பக்கமும் விநோதமாக உள்ளது. நாம் முன்னரே அர்தனாரி வடிவத்தின் தோற்ற வளர்ச்சியை ” சிற்பிக்கு “விடை”யே விடை” என்ற பதிவில் பார்த்தோம்.
மீண்டும் ஒரு முறை பாருங்கள்.
தர்மராஜா ரதம்.

அகஸ்தீஸ்வர

திரிபங்க வளைவை ஈடு கொடுக்க ரிஷபம் வருவதை பாருங்கள்.
விருத்தாசலம்.

எலிபண்டா
இப்போது பரங்குன்றம் வடிவத்தில் உள்ள ரிஷபம் இடம் மாறி இருப்பது தெரிகிறதா. இப்படி ஒரு தவறை இவ்வளவு பெரிய குடைவரையை வடித்த சிற்பி செய்ய வாய்ப்பில்லை.

மேலும் அர்தனாரி வடிவத்தின் மேல் புறம் சற்று பார்க்கும் போது இன்னும் ஒரு துப்பு கிடைக்கிறது. எதோ சுருள் சுருளாக மற கிளை போலவும் இல்லாமால் கொடி போன்ற வடிவங்கள் உள்ளன.
பொதுவாக குரு வடிவத்தின் மேலே மட்டுமே மரம் வரும். இந்த சுருள் வடிவம் நமக்கு ஒரு முக்கிய ஆதாரம். கீழ் வரும் சமணர் வடிவங்களை பார்த்தால் உங்களுக்கே அது புரியும்.
தேடல் தொடரும்.
படங்கள் நன்றி : உதயன், அரவிந்த், மற்றும் ஹிந்து பேப்பர்
http://www.hindu.com/2003/05/22/stories/2003052203230500.htm
http://www.hindu.com/2006/02/06/stories/2006020602410200.htm
http://www.herenow4u.net/index.php?id=76895