திருவட்டதுறை – சிற்ப அதிசயம் – சாமரங்களும் மூர்த்திகளும்

வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தினத்திருநாள் வாழ்த்துக்கள்

இன்றைக்கு மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க் இன்னும் ஒரு அற்புத பதிவை நம்முடன் பகிர்கிறார்.

திருவட்டதுறையில் உள்ள திரு ஆரட்டதுறைநாதர் திருக்கோவிலை பற்றி முன்பே இரு கதைகளை கூறியுள்ளேன். 19 ஏப்ரல் 2011 அன்று “தெய்வக்குழந்தைக்கு தெய்வம் தரச்சொன்ன பரிசு” என்ற பதிவில், பாலகனாகிய புலவரும் சிறந்த பக்திமானும் ஆகிய திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வருகை தந்து பாடல் இயற்றுகையில் சிவபெருமானே அவரை கௌரவிக்கும் வகையில் பல்லக்கும் குடையும் அளித்ததை கண்டோம். 7 ஜூன் 2011 அன்று “திருவட்டதுறை ஒரு ஆலயத்தின் ஜீவநாடி – சிற்பம் மற்றும் புராணம்” என்னும் பதிவில் சிற்ப நிரல் பற்றி கண்டோம். பக்தர்கள் கோவில் பிரஹாரத்தை சுற்றி பிரதட்சிணம் செய்யும்போது அவர்கள் கண்டுணர சிவபெருமானின் வெவ்வேறு வடிவங்களை பழங்கால ஸ்தபதிகள் எவ்வாறு அமைத்தனர் என்று கண்டோம்.

இன்றைய பதிவில் சிற்ப நிரலின் விவரங்களை பற்றிய ஒரு கதையை கூறப்போகிறேன். இந்த கோவிலில் சிவனின் வடிவங்கள் மிக அற்புதமான வேலைப்பாடுடயவை. அவற்றின் அழகும் பாவமும் தனித்தன்மை கொண்டவை. இந்த வடிவங்களின் ஒரு சில லக்ஷணங்கள் தனித்துவம் வாய்ந்ததும் ஆர்வத்தை தூண்டுவதும் ஆகும். கோவில் மாடங்களில் உள்ள மூர்த்திகளுடன் கூடிய சாமரங்களே அவை.

நான் இது வரை கண்ட கோவில்கள், தென்னிந்தியாவின் மொத்த கோவில்களில் ஒரு மிகச்சிறிய விழுக்காடே என்றாலும், அவற்றிலும் ஒரு சில கோவில்களை காண முடிந்தது எனது அதிர்ஷ்டமே ஆகும். எந்த கோவிலாக இருந்தாலும், ஒவ்வொரு முறை செல்லும்போதும், புதிய விளக்கங்கள், புதிய புரிதல், புதிய அழகு தென்படுகிறது. திருவட்டதுறையில் உள்ள சிவாலயம் ஒரு பொக்கிஷம் மட்டுமல்ல, மறைபொருள் கொண்டதாகவும் விளங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் மிகச் சிறியதும், அதிகம் பேர் அறிந்திராததுமாக விளங்கும் இக்கோவிலின் சிற்பங்களின் அபூர்வமான அழகே இதை ஒரு பொக்கிஷம் என எடுத்துக் காட்டுகிறது. மறைபொருள் கொண்டது என நான் கூறுவதற்கு காரணம் இங்கு சில மூர்த்திகளுடன் காணப்படும் சாமரங்கள் ஆகும்.

சாமரம் என்பது கவரிமானின் வால்முடியால் செய்யப்பட்டு வெள்ளி கைப்பிடி பொருத்திய ஒரு விசிறி ஆகும். தெய்வ வழிப்பாட்டில் அளிக்கப்படும் ஒரு முக்கிய உபசாரமாக இது கருதப்படுகிறது. மேலும் அரசர்களுக்கும் உயர் பதவி வகிப்போருக்கும் அளிக்கப்படும் மரியாதையாகவும் விளங்குகிறது. சரித்திர கதைகள் கொண்ட திரைப்படங்களில் அழகிய பெண்கள் அரசரின் ஆசனத்திற்கு பக்கங்களில் நின்று கொண்டு இத்தகைய சாமரங்களை வீசுவதை கண்டிருக்கிறோம். இன்றும் பல கோவில்களில் வழிபாட்டிலும், திருவிழாக்களின் போதும் சாமரங்கள் வீசப்படுவதை காண்கிறோம். எனவே, ஒரு தெய்வத்தின் சிற்பத்தில் சாமரம் இருப்பது ஆச்சரியம் அளிக்கக்கூடிய விஷயம் இல்லை. மேலும் அவை கதை சொல்லும் சிற்பங்களில், அதாவது ஒரு கதையையோ அல்லது நிகழ்ச்சியையோ விளக்கும் சிற்பங்களில் காணப்படுவது வழக்கம். ஆனால் கோவிலின் மாடங்களில் செதுக்கியுள்ள சிற்பங்களில் இத்தகைய சாமரங்களை நான் இதுவரை கண்டதாக என் நினைவில் இல்லை.


இங்கே திருவட்டதுறையில் இரு மூர்த்திகளில் மிகத் தெளிவாக சாமரங்கள் காணப்படுகின்றன. தெற்கு அர்த்தமண்டப சுவற்றில் உள்ள நடராஜரின் சிற்பம் அழகிய இரண்டு சாமரங்களால் கௌரவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் வடக்கு முகமாய் உள்ள மாடத்தில் உள்ள பிரம்மாவிற்கும் அவ்வாறே இரண்டு சாமரங்கள் உள்ளன. வழக்கமாக உபயோகப்படுத்தும் வகையில் இல்லாது, இந்த சாமரங்கள் சிரசின் பக்கங்களில் தொங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் கைப்பிடிகள் கவரிமான் இறகுகளின் மீது ஒரு விதமாக மடிக்கப்பட்டுள்ளது போல் செதுக்கப்பட்டுள்ளன. நடராஜர் மற்றும் பிரம்மாவின் அருகில் உள்ள சாமரங்களின் கைப்பிடிகள் வேறுபட்டிருக்கின்றன. மேலும் அந்த மூர்த்திகளின் நிலையில் அவற்றின் அமைப்பும் சற்றே மாறுபட்டுள்ளன.

தெற்கு அர்த்தமண்டப சுவற்றில் உள்ள விநாயகர் சிற்பமும் சிற்பிகளால் குடை மற்றும் ஒரு ஜோடி சாமரங்கள் செதுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளன. மேலும் பிக்ஷாடனரின் பின்பும் மேலேயும் இரண்டு சாமரங்களின் வடிவம் மங்கிய கோடாக தெரிகின்றது. இந்த சாமரங்களின் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. இவை முழுமையாக செதுக்கப்படாமல் பாதியில் கைவிடப்பட்டவை போல் தோன்றுகின்றன. இவற்றின் மீது எண்ணெயும் தடவவில்லை.

மேற்கு சுவற்றில் உள்ள மாடத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு மேலேயும் பின்புறமும் ஒரு ஜோடி சாமரங்கள் காணப்படுகின்றன. இதுவும் எண்ணெய் தடவாமல் முழுமை பெறாமல் உள்ளது.

திருக்கோவிலின் மாடங்களில் உள்ள மற்ற மூன்று மூர்த்திகளாகிய தக்ஷிணாமூர்த்தி, கங்காவதாரனார், அர்த்தநாரீஸ்வரர் ஆகியவைகளுக்கு சாமரங்கள் அளிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. துர்கையின் பின்புறம் உள்ள இடம் சரியாக தெரியவில்லை, இருப்பினும் அங்கே இரு சாமரங்கள் அமைப்பதற்குரிய இடவசதி இல்லை. அவ்வாறே முகமண்டபத்தின் சுவற்றில் உள்ள பைரவருக்கும் சாமரங்கள் அளிக்கப்படவில்லை.


இந்த விவரத்தை பற்றி இவளுக்கு ஏன் இத்தனை அக்கறை என்று வாசகர்களுக்கு மனதில் ஒரு கேள்வி தோன்றலாம். சாமரங்கள் அழகானவை. மேலும் இந்தக் கோவிலின் சிற்பங்களை மிக சிறப்பானவையாக எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இவற்றின் நோக்கம் என்ன? சாமரங்கள் சில சிற்பங்களில் இருப்பதற்கும் சிலவற்றில் இல்லாதிருப்பதற்கும் காரணம் ஒரு வேளை இவை இந்த கோவிலின் கலை சரித்திரத்தை நமக்கு எடுத்துரைக்கின்றனவோ என்று எனக்கு தோன்றுகிறது.

முந்தைய பதிவில் நாம் கண்டபடி, அர்த்தமண்டப சுவற்றில் உள்ள ஆறு மாடங்களில் நான்கு வெட்டப்பட்ட மாடங்களாகும், உண்மையான தேவகோஷ்டங்கள் அல்ல. விநாயகரும் துர்கையுமே தேவகோஷ்டங்களில் அமர்ந்துள்ளனர். விநாயகருக்கு ஒரு குடையும் இரு சாமரங்களும் உள்ளன. ஆனால் இவை முற்று பெறாமல் உள்ளன. துர்கைக்கோ சாமரங்கள் அளிக்கப்படவில்லை. மறுபடி விநாயகர் சிற்பத்தை காணுங்கள். விநாயகர் மூர்த்திக்கு சரிவர இடம் தருவதற்காக குடை மற்றும் சாமரங்கள் ஒரு துளி வெட்டப்பட்டு உள்ளன.

தக்ஷிணாமூர்த்தி இருப்பது ஒரு ஆழமில்லாத, வெட்டப்பட்ட மாடத்தில் ஆகும். அதிலும் ஒரு கருங்கல் பலகையில் அமைக்கப்பட்டு ஒரு மாடத்தில் சேர்க்கப்பட்டதாகும். நடராஜரும் அவ்வாறே. ஆனால் இங்கே சாமரங்கள் நடராஜரின் சிற்பத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. லிங்கோத்பவருக்கும் சாமரங்கள் உள்ளன. ஆனால் அவை மாடத்தின் பின்புல சுவற்றின் ஒரு பகுதியாக உள்ளன. பிரம்மாவின் சாமரங்களும் அந்த சிற்பத்திலேயே உள்ளன, பிறகு அந்த சிற்பத்தை சுவற்றின் மாடத்தில் பொருத்தியுள்ளனர். மற்ற நான்கு சிற்பங்களுக்கும் சாமரங்கள் இல்லை.

மேலும் சிற்பங்களின் தோற்ற வடிவமைப்பை காணும்போது பல வித்தியாசங்களை காண முடிகிறது. பிரம்மாவிற்கு அரைக்கச்சு கொக்கியாக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள கீர்த்திமுகம் உள்ளது. லிங்கோத்பவரின் அரைக்கச்சு கொக்கியோ சோழரின் தொன்மை வாய்ந்த சிற்பங்களில் காணப்படும் கீர்த்திமுகம் போன்று இல்லை. கங்காவதாரனார் மற்றும் அர்த்தநாரீஸ்வரரின் அரைக்கச்சு கொக்கிகள் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன. மேலும் இந்த மூர்த்திகளின் யக்ஞ்யோபவீதமும் மாறுபட்டுள்ளன. அவற்றில் உள்ள முடிச்சும், அவை உடலின் குறுக்கே தொங்கும் விதமும் வெவ்வேறாக உள்ளன. மேலும் இந்த நான்கு மூர்த்திகளையும் ஒப்பிட்டு பார்த்தோமேயானால், அவைகளின் இடுப்பில் கட்டப்பட்டுள்ள இடுப்பாடையின் அமைப்பிலும் அவற்றின் ஆழத்திலும் வித்தியாசத்தை காணலாம். லிங்கோத்பவர் மற்றும் கங்காவதாரனாரின் இடுப்பாடைகள் சற்றே ஆழமாக உள்ளன. ஆனால் பிரம்மா மற்றும் அர்த்தநாரீஸ்வரரின் இடுப்பாடைகள் ஒரே விதமாக உள்ளன. ஒரு வேளை கலையின் பரிணாம வளர்ச்சியை இங்கே காண்கிறோமா? அல்லது வெவ்வேறு சிற்பிகள் வடித்த சிற்பங்களை காண்கிறோமா? இரண்டு வகை அரைக்கச்சுகள், இரண்டு வகை இடுப்பாடைகள் என வித்தியாசம் ஏன்?
ஆக, இதன் மூலம் நாம் அறியும் விஷயம் என்ன? அர்த்தமண்டபத்தின் சுவற்றில் நான்கு மாடங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், மொத்தம் உள்ள ஆறு மாடங்களில் நான்கு இக்கோவிலின் அசல் வடிவமைப்பில் இல்லை. இரண்டு மூர்த்திகளின் சிற்பத்திலேயே இரண்டிரண்டு சாமரங்கள் உள்ளன. மூன்று மூர்த்திகளில், சிற்பத்திற்கு வெளியே, மாடத்தின் சுவற்றில் முடிவுறாத நிலையில் சாமரங்கள் காணப்படுகின்றன.

இந்த மூர்த்திகளின் தோற்ற வடிவமைப்பில் உள்ள வித்தியாசங்கள், மேலும் சிற்பத்தில் காணப்படும் அல்லது காணப்படாதிருக்கும் சாமரங்கள், ஆகியவற்றையும் வைத்து பார்க்கும்போது, இந்த மூர்த்திகள் பிற கோவில்களிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்க கூடியவையாக இருக்கக் கூடும். மேலும் காலத்தின் வெவ்வேறு சமயங்களில் அமைக்கப்பட்டதாகவும், இந்த கோவிலுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் வந்து சேர்ந்திருக்க கூடியதாவும் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு குழுவாக இந்த சிற்பங்கள் தரத்தையும் அழகிய அமைப்பையும் கொண்டுள்ளன.

துர்க்கை மற்றும் விநாயகர் சிற்பங்கள் அர்த்தமண்டப சுவற்றின் நாடு நாயகமாக உள்ள மாடங்களில் உள்ளன. இந்த மாடங்கள் சற்றே குறுகலாகவும், உயரமாகவும் இருக்க, இந்த மூர்த்திகள் அவற்றில் சரியாக பொருந்தி உள்ளன. இருப்பினும் விநாயகர் உள்ள மாடத்தின் சுவர் அந்த சிற்பம் சரியாக பொருந்த சற்றே வெட்டப்பட்டுள்ளது. இதுவே இந்த சிற்பம் இந்த மாடத்திற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பதற்கு ஒரு அறிகுறி ஆகும். பிக்ஷாடனர், நடராஜர், கங்காவதாரனார் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் வெட்டப்பட்டுள்ள மாடங்களில் உள்ளனர். இந்த கோவில் கட்டப்பட்ட பின்பு இந்த மூர்த்திகள் வேறு எங்கிருந்தாவது கொண்டு வரப்பட்டு இங்கே பொருத்தப்பட்டனவா? அல்லது இந்த கோவிலின் தலைமை சிற்பி கட்டுமானம் பாதி நடந்துகொண்டிருந்த வேளையில் தன் மனதை மாற்றி கொண்டு அமைத்ததா? அரசியல் மற்றும் பொருளாதார மாறுபாடுகள், அல்லது, சமய நம்பிக்கைகளில் எழுந்த மாறுபாடுகள் அல்லது ரசிப்புத்தன்மையில் ஏற்பட்ட மாறுபாடுகளின் சான்றாக இவை காட்சி அளிக்கின்றனவா?

பிரம்மாவிற்கு அவருடைய சிற்பத்திலேயே சாமரங்கள் உள்ளன. விமானத்தின் சுவற்றில் உள்ள ஒரு மாடத்தில் அவர் அமைக்கப்பட்டுள்ளார். வெட்டப்பட்டுள்ள ஒரு மாடத்தில் அமைந்துள்ள நடராஜருக்கும் சாமரங்கள் உள்ளன. ஆனால் அவை இரண்டுமே அமைக்கப்பட்டுள்ள விதத்திலும் நிலையிலும் மாறுபட்டு உள்ளன. வடக்கு மாடத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு மாடத்தில் சுவற்றில் சாமரங்கள் உள்ளன. ஆனால் தெற்கு மாடத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்திக்கு அவ்வாறு சாமரங்கள் இல்லை. இந்த மூர்த்தி மாடத்தின் முழு இடத்தையும் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், அதிஷ்டானத்தில் இருந்து சிறிது வெளியிலும் முன்புறம் துருத்திக் கொண்டவாறு ஆசனத்தில் அமர்ந்து ஒரு அசுரன் மீது கால் வைத்திருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆக, இங்கே நாம் அறிந்துகொள்ள ஒரு சிறிய மர்மம் அல்லது மாயம் உள்ளது. ஒன்றிரண்டு சிற்பிகள் மூர்த்திகளுடன் கூடவே சாமரங்களையும் சேர்த்து வடித்துள்ளனர். இவ்வாறு செய்யும் எண்ணம் ஏன் எழுந்தது என்று தெரியாத போதிலும், இதை தொடங்கிய விரைவிலேயே இவை கைவிடப்பட்டதும் புலனாகிறது. ஏன் துவங்கினர், எப்போது இவை கைவிடப்பட்டன என்பதற்கு நான் சரியான காரணங்களை தற்சமயம் வழங்க இயலாது. அதன் காரணங்களை அறிய நமக்கு மேலும் தகவல்கள் வேண்டும். கல்வெட்டுகள், நமது தொன்றுதொட்ட பழக்கங்கள், அல்லது புராணங்களில் இருந்து இவற்றுக்கு விடை கிடைக்கக்கூடும். அல்லது மற்ற கோவில்களின் சிற்பங்களுடன் இந்த கோவிலின் சிற்பங்களை ஒப்பீடு செய்வது மூலமும் விடை கிடைக்கலாம். இருப்பினும் மொத்தத்தில், இவை அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன நிகழ்ந்திருக்கக்கூடும் என்ற ஆர்வத்தை நம்மிடையே தூண்டுகின்றன என்பதில் ஐயமில்லை.

மொழிபெயர்ப்பு : தோழி திருமதி பர்வத வர்தினி முரளி கிருஷ்ணன்
படங்கள் : பதிவு ஆசிரியர் மற்றும் நண்பர் திரு சேகர் அவர்கள்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருவட்டது​​றை: ஒரு ஆலயத்தின் ஜீவநாடி – சிற்பம் மற்றும் புராணம்

நமக்கு இன்று மீண்டும் ஒரு விருந்து, மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க் சென்ற பதிவில் ஞானக் குழந்தைக்கு கிடைத்த குடை மற்றும் பல்லக்கை மிக அழகாக நமக்கு விளக்கினார். இன்று முழு விருந்து. ஒரு ஆலயத்தை எப்படி நாம் இனி பார்க்கவேண்டும் என்று நமக்கு கட்டறுக் கொடுக்கிறார்.

ஒவ்​வொரு ​கோவிலும் ​பல்​வேறு தலவரலாறு ​கொண்டது ​போன்​றே, ஒவ்​வொரு ​தெய்வ வடிவமும், சிற்பமும் பல்​வேறு க​தைக​ளை நமக்கு எடுத்து​ரைக்கின்றன. ஒவ்​வொரு மூர்த்தமும் ஏ​தேனும் ஒரு புராணத்​தை ​மையமாகக் ​கொண்டுள்ளது. ​மேலும் அந்த சிற்பம் வடிக்கப்பட்ட காலகட்டத்தின் வரலாற்​றையும் விளக்கக்கூடியது. ஒரு புராணம் அல்லது ​தொன்மத்​தை அந்த சிற்பியின் காலகட்டத்தில் எவ்வாறு ​சொல்லப்பட்டது என்பதற்கு சான்றாக உள்ளது. சாஸ்திரத்தில் உள்ள ​கொள்​கையின் அடிப்ப​டையி​லே​யே ​தெய்வீக வடிவங்கள் அ​மைக்கப்படுகின்றன என்ற​போதும், அதற்கு உயிர்​கொடுப்பது சிற்பியின் இயற்​கையான அறிவாற்றலும், கற்ப​னைத் திறம் மற்றும் அவர் கண்ட ​மேற்​கோள்களும் ஆகும். சிற்பியின் திற​மையான ஆற்றலின்றி இத்தகு ​தொன்மங்கள் உயிர் ​பெறுவது கடினம்.

இந்த இடு​கையில் ​கோவிலின் அ​மைப்புடன் இ​​யைந்த மூர்த்திக​ளைப் பற்றி காண்​போம். ஒவ்​வொரு மூர்த்தத்தின் க​தை​யையும் தனித்தனி​யே கூறுவதன் மூலம் அவற்றின் முக்கியத்துவத்​தை அறிய முடியும் என்பதால் அவற்​றை அவ்வா​றே கூற விரும்புகி​றேன்.

முதன்மு​றையாக ஒரு ​கோவிலுக்குள் ​செல்வ​தே ஒரு உன்னதமான அனுபவம். ஒவ்​வொரு ​கோவிலுக்கும் அதற்​கென்று ஒரு அதி​ர்வு உண்டு. அதனுள் பல ​பொக்கிஷங்ளும் உண்டு. பற்பல ​கோவில்கள் பிரபலமான​​வை, என​வே அவற்றின் பு​கைப்படங்களும் பல்​வேறு புத்தகங்களும் எளிதில் கி​டைக்கும். அவ்வாறு பிரபலமான ​கோவில்களில் நாம் நு​ழையும்​போது ஏற்கன​வே நமக்குள் எதிர்பார்ப்புகள் நி​றைந்திருக்கும். இருப்பினும் நமது உண்​மையான அனுபவ​மோ வித்தியாசமாகவும் எதிர்பாராததாகவு​மே இருக்கும். ஆனால், நாம் அறியாத ​கோவிலுக்குள் நு​ழைவ​தோ உண்​மையி​லே​யே மிகச் சிறந்த அனுபவமாகும். பல அற்புதங்கள் பு​தைந்துள்ள ஒரு ​பொக்கிஷ நிலவ​றைக்குள் புகும் அனுபவத்​தை ஏற்படுத்தும்.

திருவட்டது​றை சிவன்​ ​கோவிலுக்குள் ​செல்வதும் அத்த​​கைய ஒரு அற்புத அனுபவமாகும். நாங்கள் அக்​கோவிலின் முதன் ​கோபுர வாயிலில் இருந்து ​வெளிப்பிரகாரத்​தை அ​டைந்​தோம். எங்களுக்கு இடதுபுறத்தில் அம்பி​கை சன்னதிக்குச் ​செல்லும் முற்றத்தின் வாயில் இருந்தது. எங்களுக்கு வலதுபுறத்தில் அம்பி​கை சன்னதிக்கான ​கொடிமரமும் நந்தியும் இருந்தன. அ​தைத் தாண்டி சிவாலயத்திற்கான ​கொடிமரமும் நந்தியும் இருந்தன. மார்கழி மாத ​​வெயிலில் குளுகுளு​வென்றிருந்தது. இரண்டாம் ​கோபுர வாயி​லைத் தாண்டி நாங்கள் ​​சென்​றதும் எங்களுக்கு ​எதிரில் ​தெரிந்தது ஒரு மண்டபத்தின் சுவர்கள் தாம்.

பிரதட்சிணம் ​செய்யும் விதமாக நாங்கள் இடப்புறமாக திரும்பி சுற்றி வரத் துவங்கி​னோம்.

அந்த மண்டபம் மிகவும் அழகாகவும் ​தொன்​மையாகவும் இருந்தது. அதன் தூண்கள் பிற்கால ​சோழர் காலத்தியதாக​வோ அல்லது முற்கால நாயக்கர் காலத்தியதாக​வோ இருக்கக்கூடும், அ​நேகமாக 14ஆம் நூற்றாண்​டைச் ​சேர்ந்தது. அந்த மண்டபத்தின் வாயில் ​தெற்குப்புறமாக இருந்தது. இது ஒரு முகமண்டபத்துடன் இ​ணைந்திருந்தது. அந்த முகமண்டப​மோ இன்னும் ​தொன்​மையானதாக இருக்கக் கூடும். அதன் வாயிலும் ​தெற்குப்புறத்தில் இருந்தது. ஒரு சிறிய வழியும் ​தெரிந்தது. இந்த வழி​யை சுற்றி வந்த பிற​கே விஸ்தாரமான முற்றமும் இ​றைவனின் ஆலயமும் ​தெரிந்தன.

ஆலயத்​தைக் கண்ட உட​னே​யே அது முற்கால ​சோழர் கால ​கோவில் என்று அறிந்து​கொண்​டோம். சுவற்றில் உள்ள மாடங்களில் கல்லினால் ஆன ​தெய்வ மூர்த்தங்கள் காணப்பபட்டன. என்​னை​ ​மே​லே ​செல்ல விடாமல் எதிரில் இருந்த மிக அழகிய பிட்சாடனர் திருஉருவம் ஈர்த்தது. நான் இதுவ​ரை கண்டதி​லே​யே மிக அழகான பிட்சாடனர் சிற்பம்.

ஆளுயர அளவில், பளபளக்கும் கருநிறத்தில், ஒயிலான ந​டையுடனும், இதழ்களில் ஒரு மர்ம புன்ன​கையுடனும் அற்புத ப​டைப்பு. தாருவனத்தில் சிவ​பெருமானின் ஆனந்த நடனத்​தைக் குறிப்பது பிட்சாடனர் திருவுருவம்.

இக்க​தை​யை விளக்கும் மற்று​மொரு அழகிய ஓவியம் சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரி ஆலயத்தில் உள்ளது.

தனது ​மேல் இடக்கரத்தில் சூலம் ஏந்தி, அத​னை தனது ​தோள்களில் சாய்த்துக் ​கொண்டு நிற்கிறார். சூலத்திலிருந்து ஒரு மயிலிறகு கற்​றை அழகுற ​​தொங்குகிறது. இடதுகரத்தில் ஒரு மண்​டை ஓடு பிட்​சை பாத்திரமாக உள்ளது. கீழ் வலதுகரம் தன்​னை பின்பற்றி வரும் மா​னை ​நோக்கி உள்ளது. இந்த ஓவியத்தில் காணும்​போது, மானுக்கு உணவளிக்க சிறிது புல் ​கையில் ​வைத்திருப்பது​ ​தெரிகிறது. அவருக்கு இடதுபுறத்தில் ஒரு குறுமனிதன் மிகப் ​பெரிய பாத்திரத்​தைத் தூக்கிப் பிடித்துள்ளார். திருவட்டது​றையி​லோ அருகி​லே ஒரு ரிஷி பத்தினி காணப்படுகிறார்.

தாருவனத்தில் ரிஷிக​ளை எதிர்​​கொண்ட பின் சிவ​பெருமான் தனது ஆனந்த நடனத்​தை நிகழ்த்துகிறார். எட்டு தி​சைகளும் அதிர, திருமுடியில் உள்ள கங்​கை பயத்தால் நடுநடுங்க, சிவ​பெருமான் ஆட, உ​​மையம்​மையும் கூட ஆடத்துவங்குகிறார். பிட்சாடனருக்கு அடுத்துள்ள மாடத்தில் சிவகாமசுந்தரியுடன் ஆனந்த நடனம் புரியும் ஆனந்த தாண்டவ மூர்த்திக் காணப்படுகிறார். இந்த நடராஜரும் மிக அற்புதமானது.

அற்புத ​வே​​லைப்பாட்டிற்காக மட்டுமன்றி, நடராஜர் சிற்பத்தின் ​வரலாற்றிலும் முக்கிய இடம் வசிப்பதாலும், இ​தேப் ​போன்று ​வே​​றெங்கும் காணப்படாதது மிக ஆச்சரியமான விஷயமாகும்.

நடராஜருக்கும் பிட்சாடனருக்கும் இ​டையி​லே சங்கடங்க​ளை தீர்க்கும் விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆக, பிட்சாடனர், விநாயகர், நடராஜர் என மூன்று மூர்த்திகள் ​தெற்குமுக அர்த்தமண்டபத்தின் சுவற்றில் காணப்படுகிறார்கள்.

பிரதட்சிணமாக பிரகாரத்​தை வலம் வரும்​போது அடுத்து நாம் காண்பது சிவ​பெருமானின் தட்சிணாமூர்த்தி ​திருவுருவம்.

இந்த சிற்பமும் அற்புத ​​வே​லைப்பாட்டுடனும் அழகுடனும் விளங்குகிறது. நான்கு முனிவர்கள் சுற்றியிருக்க சின்முத்தி​ரையுடன் அருள்புரியும் இவர்தான் பரமகுரு. ​கர்ப்பகிரஹத்தின் தெற்கு சுவற்றிலுள்ள மாட​மே தட்சிணாமூர்த்தியின் இருப்பிடமாகும்.

அடுத்து ​மேற்கு சுவற்றிலுள்ள மாடத்தில் லிங்​கோத்பவ​ரைக் காண்கி​றோம். லிங்​கோத்பவர் பற்றிய க​தை திருவண்ணாம​லையில் நடந்ததாகக் கருதப்படுகிறது. ​மேற்கு மாடத்தில் உள்ள லிங்​கோத்பவ​ரை சிறிய வடிவத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் வணங்குகின்றனர்.

லிங்​கோத்பவ வடிவம் எப்​போது​மே ​மேற்கில் உள்ள மாடத்தில் இருப்பதாக ​தொன்று​தொட்டு எண்ணி வருகி​றோம். இருப்பினும் எப்​​போது​மே இது வழக்கில் இருந்திருக்கிறதா? சற்​றே ​மேல்​நோக்கி விமானத்​தைக் காண்​போம். அங்​கே இரண்டாம் தளத்திலும் சிகரத்திலும் விஷ்ணு​வே ​மேற்கு தி​சையில் குடியிருக்கிறார்.

இரண்டாம் தளத்தில் ஆதி​சேஷன் மீது ஸ்ரீ​தேவி பூ​தேவி ச​மேதராக மஹாவிஷ்ணு காட்சியளிக்கிறார். சிகரத்திலும் விஷ்ணு தனது இரு ம​னைவியருடன் அமர்ந்திருக்கிறார். இருப்பினும் அவரது ஆசனம் காணப்படவில்​லை. இ​தைக் காணும்​போது நமக்குள் ​கேள்வி எழுகிறது. இந்த மாற்றம் ஏன், எப்​போது ஏற்பட்டது? இன்று பல ​கோவில்களில் ​மேற்குமாடத்தில் நாம் விஷ்ணு மூர்த்தி இருப்ப​தைக் காண்கி​றோம். ஆனால் ​கோவில் விமானத்தி​லோ இ​தே இடத்தி​லே​யே விஷ்ணு குடியிருப்பது, ஆதிகாலத்திலிருந்து இது விஷ்ணு மூர்த்தியின் இடமாக இருந்திருக்கும் எனத் ​தெரிகிறது. இதற்கு சான்று கும்ப​கோணத்திலுள்ள நா​​கேஸ்வர ​கோவில். ​மேற்கு சுவற்றின் மாடத்தில் அர்த்தநாரீசுவரர் இருந்தாலும், விமானத்தின் இரண்டாம் தளத்திலும், சிகரத்திலும் விஷ்ணு​வே குடியிருக்கிறார்.

பிரகாரத்​தின் வடக்குப்பகுதியில் வலம்வரவும், அங்​கே வடக்கு மாடத்தில் நான்முகனாகிய பிரம்மா தனது ​தொன்று​தொட்ட இடத்தி​லே காட்சியளிக்கிறார்.

அர்த்தமண்டபத்தின் வடக்குபுற சுவற்றிலும் மூன்று மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். சிவ​பெருமானின் இரு வடிவங்கள், கங்காதர​ர் மற்றும் அர்த்தநாரீசுவரர் இருவரும் துர்க்​கையின் ​மேற்கு மற்றும் கிழக்கு தி​சையில் உள்ளனர். துர்க்​கை நடுவில் உள்ள மாடத்தில் வீற்றிருக்கிறாள். அ​னைத்து மூர்த்திகளு​மே மிகவும் அழகுற வடிக்கப்பட்டு அவற்றின் க​தை​யை ஆன்மிக ​நோக்குடனும் அழகுடனும் விளக்குகிறது.


ஆதிகால ​சோழர் ​கோவில்களில் அர்த்தமண்டபத்திலும் விமானத்திலும் உள்ள மாடங்கள் 3-1-1-1-3 என்ற விதமான கட்ட​மைப்பு ஒரு ​பொதுவான அம்சம். இருப்பினும் இக்​கோவிலில் ​மேலும் ஒரு கூடுதலான மாடம் முகமண்டத்தின் வடக்கு முக சுவற்றில் இருப்பது மிக அபூர்வமான ஒன்று.

பத்தாவது மாடத்தில் கால​பைரவர் காட்சியளிக்கிறார். இரு பஞ்சரங்களின் இ​டையி​லே ஓர் தனி மாடத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

அ​நேகமான ஆதிகால ​சோழர் ​​கோவில்களில் விமானத்தின் சுவர்களில் ஒற்​​றை மாடம் இருப்பது வழக்கம். ​தெற்கு சுவற்றில் தக்ஷிணாமூர்த்தியும், விஷ்ணு (முற்காலம் முத​லே), அர்த்தநாரீசுவரர் (சிறிது காலத்திற்கு பின், ​மேலும் சில கால​மே வழக்கில் இருந்தது) அல்லது லிங்​கோத்பவர் (பிற்காலத்தில் வழக்கில் இருந்து இன்று வ​ரை ​தொடர்கிறது). பிரம்மா எப்​பொழுதும் வடக்கு சுவற்றி​லே​யே காணப்படுகிறார். சில சமயங்களில் பிற மூர்த்திகளும் வடக்கு சுவற்றில் காணப்படுவது உண்டு, உதாரணத்திற்கு காமரசவல்லியிலும், கும்ப​கோணத்திலுள்ள நா​கேஸ்வரர் ​கோவிலிலும் இவ்வாறு உள்ளது.

அர்த்தமண்டபத்தின் சுவற்றில் மூன்று மாடங்கள் இருப்பது ஒன்றும் புதிதன்று. இருப்பினும் இந்தக் ​கோவிலில் ஆறு மாடங்களில் நான்கு மாடங்கள் மு​றையான மாடங்கள் அன்று. இ​வை ​ஒழுங்கான மாடத்தின் கட்ட​மைப்பாக இன்றி, கோவிலின் சுவற்றில் ​​வெட்டப்பட்டு உள்ளன. மகரத்​தோரணம் ​கொண்ட உத்திரக்கல்லும், ​மேலுள்ள வரிகளின் ​தொடர்பின்​மையும் இ​த​னை ப​றைசாற்றும்.

அர்த்தமண்டபத்தின் சுவற்றில் நடுநாயகமாக விளங்கும் விநாயகரும் துர்க்​கையு​மே உண்​மையான மாடங்களாக விளங்கியிருக்கின்றன என எடுத்துக் காட்டுகிறது. இது கூறும் க​தை​யென்ன? ஒரு​வே​ளை சிற்ப கட்டுமானர், கட்டுமானம் துவங்கியபின் இ​டை​யி​லே பல்​வேறு மூர்த்திக​ளையும் ​சேர்க்க எண்ணியிருப்பா​ரோ? அல்லது ஒரு​வே​ளை கட்டுவித்தவர் விருப்ப​மோ? ஆதிகால ​சோழர் ​கோவில்களில் இது எந்த நி​லைமாறுபடு காலத்​தைக் குறிக்கிறது? மற்ற நான்கு மூர்த்திக​ளை விட விநாயகர் மற்றும் துர்க்​கையின் மூர்த்திகள் ​வேறுவிதமாய் இருப்ப​தை அறியலாம். அதிலும் குறிப்பாக துர்க்​கை அ​நேகமாக உருண்​டையாக வடிவ​மைக்கப்பட்டுள்ளது. மஹிஷாசுரனின் த​லைமீது வீற்றிருக்கும் அன்​னை சற்​றே குறுகிய மற்றும் உயரமான ​வே​லைப்பாட்டுடன், சற்​றே அதிக உயரமாகவும் குறுகலாகவும் உள்ள மாடத்தில் மிக அரு​மையாக ​பொருந்தியுள்ளது.

ஆனால் சுவற்றில் ​வெட்டப்பட்டுள்ள மற்ற மாடங்க​ளோ ஆழமின்றியும், அகலமாகவும், உயரமாகவும் உள்ளன. அ​வை வரிகளின் ​மே​லே​யே உள்ளன. ஆனால் ஒழுங்கான மாடங்க​ளோ ​பொதுவாக ​சோழர் கால ​கோவில்களில் காணப்படுவது ​போன்​றே வரிகளின் ஊ​டே ​செல்கின்றன. ஒரு​வே​ளை இந்த மாடங்கள் பிற்காலத்தில் ​வெட்டப்பட்டனவாக இருக்கக் கூடு​மோ என்ற ஐயம் எழுகிறது. ​​வே​றொரு ​கோவிலில் இருந்த வந்த மூர்த்திகளுக்கு அ​டைக்கலம் வழங்க ​​செய்யப்பட்டதாகவும் இருக்கலா​மோ என்றும் ​தோன்றுகிறது. இ​வைகளின் இ​டை​யே உள்ள ஒற்று​மை ​வேற்று​மைக​ளை அறிந்து ​கொள்வதன் மூலம் நாம் இன்னும் ​தெளிவாக புரிந்து ​கொள்ள இயலும். பின்பு வரும் மற்று​மொரு இடு​கையில் இந்த மூர்த்திக​ளை ​மேலும் ஆராய்ந்து பார்த்து இந்தக் ​கேள்விகளுக்கு வி​டை காண முயற்சிப்​போம்.

(தமிழாக்க உதவி – தோழி திருமதி பர்வதவர்த்தினி முரளிகிருஷ்ணா அவர்கள் )


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தெய்வக் குழந்தைக்கு தெய்வம் தரச்சொன்ன பரிசு

சென்ற வருடம் தற்செயலாக மேலைக்கடம்பூர் பற்றிய ஒரு அற்புத பதிவை இணையத்தில் பார்த்தேன். திரு ராஜா தீட்சிதர் அவர்களின் பல பதிவுகளை முன்னரே படித்திருந்தாலும், இந்தப் பதிவில் அவர் விளக்கங்கள் கொடுத்த முறை – கோயிற் கலை பற்றி மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் கொடுத்திருந்தார். உடனே அவரிடத்தில் தொடர்பு கொண்டு அந்த பதிவை இங்கே மொழி பெயர்த்து போடலாமா? அல்லது மேலும் பயனுள்ள பல பதிவுகளை நம்முடன் பகிரமுடியுமா என்று கேட்டு அவரும் சரி என்று சொன்ன​போது – துரதிருஷ்டவசமாக விதி விளையாடி அவர் நம்மை விட்டு போய்விட்டார்.

எனினும் இன்று நமக்கு ஒரு பாக்கியம் – அவரது பிரதான சிஷ்யை – மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க்
அவர்கள் நம்முடன் அவரது அனுபவங்களை தொடர் பதிவுகளாக பகிர ஒத்துக்கொண்டு, முதல் பதிவை தருகிறார்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என்னை ஈர்த்த இரு விஷயங்கள் – அழகு மற்றும் மர்மம். அதுவும் நான் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து எங்கோ உலகின் இன்னொரு இடத்தில் என்னும்​போது ஆர்வம் இரட்டிப்பாகக் கூடும். அது போன்ற காலத்தின் ஒரு கோலமே என்னை இந்தியா கொண்டு சேர்த்தது. அது ஒரு பெரிய கதை !

அப்படியே தொடர்ந்த எனது பயணம் ஒருநாள் என்னையும், நண்பர் திரு. ராஜா தீட்சிதர் அவர்களது புதல்வர்கள் திரு. கந்தன், திரு. ஜெயகுமார் மற்றும் திரு. ஷங்கர் அவர்களையும், ஒரு புராதன ஆலயத்தின் குளத்தங்கரையில் கொண்டு சேர்த்தது . மிகவும் அமைதியான சிறு கிராமம், வீதிகளில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அருகே சிலர் தங்கள் வே​லைகளில் மூழ்கி இருந்தனர். ஆலயத்தில் உழவாரப்பணி நடந்துக்கொண்டிருந்தது. மிகவும் கவனமாக, அதன் பாரம்பரிய அழகு சற்றும் குறையாமல் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கல்லும் கதை சொல்லும். அதவும் பண்டைய தமிழ் கோயில் என்றால் அதன் கற்கள் ஒரு பெரும் கதையை பிரதிபலிக்கும். கோயில் உருவான கதை, அதன் கட்டுமான முறை, எத்தனை தளங்கள் கொண்டது, அதன் கருவறை இருக்கும் அமைப்பு, எந்தக் காலத்தில் கட்டப்பட்டது , யார் கட்டியது , தற்போது இருப்பது முதலில் இருந்த கோயிலா இல்லை இடையில் அது விஸ்தரிக்கப்பட்டதா, செங்கல் கட்டுமானமா கற்கோயிலாக மாறியதா, இது போன்ற ஆய்வுகள் ஒருபக்கம் இருக்க, அங்கே இருக்கும் சிலைகளும் கதை சொல்லுகின்றன. கோஷ்டத்தில் இருக்கும் மூர்த்திகளை கொண்டு ஆய்வுகள் செய்ய இயலுமா, சிற்பங்களின் அணிகலன், அமைப்பு கொண்டு கால நிர்ணயம், அங்கே இருக்கும் கல்வெட்டுகளில் வரும் எழுத்துகளை கொண்டு ஆய்வுகள், அவை சொல்லும் வரலாறு, அந்த நாளைய ஆட்சிமுறை, இவை போதாதென்று அந்தக் கோயிலின் ஸ்தல வரலாறு, என்ன தெய்வ லீலை நடந்ததை குறிக்க எழுந்த கோயில் அது, பாடல் பெற்ற ஸ்தலமா, பரிகார ஸ்தலமா. இவை அனைத்தையும் ஒன்று சேர பார்க்கும்​ பொழுது முதலில் மூச்சு முட்டினாலும், அவை அனைத்தும் ஒன்று கூடி ஆலயம் என்று புனித அமைப்பின் முழு ஸ்வரூபத்தையும் நமக்கு தெரிய வைக்கின்றன.

இந்தப் பதிவை துவங்கும்​போது சிறு பதிவு என்று தான் நினைத்தேன். ஆனால் அதை எழுத ஆரம்பித்தவுடன் மேலும் மேலும் கிளைக்கதைகள் என்று விரிந்துக் கொண்டே போனது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முயற்சி செய்வதற்கு பதில், ஒரு தொடர் பதிவாக இயற்றலாம் என்று எண்ணி முதல் பாதியாக இதை எழுதுகிறேன் – திருவட்டதுரை சிவன் கோயில் பற்றிய தொடரே அது.

இந்த அருமையான கோயிலின் இறைவன் ஆரட்டதுரை நாதர். பலருக்கும் தெரியாத இந்த கோயிலில் பல அருமையான சோழர் காலத்து சிற்பங்கள் உள்ளன.

பெண்ணடத்திற்கு மிக அருகில் – திட்டக்குடி சாலையில் வெள்ளாற்றங்கரையில் இருக்கும் இந்த ஆலயம், அதன் அமைப்பு மற்றும் சிற்பங்களை கொண்டு ராஜராஜனுக்கு முந்தைய காலத்து சோழ திருப்பணி என்று கருதலாம். ஆதிசேஷனும், சப்த ரிஷிகளும் இங்கு சிவனை வழிபட்டதாக ஸ்தல புராணம் சொல்கிறது.

இந்த ஆலயத்தை ஒட்டி இன்னும் ஒரு கதை இருக்கிறது. அது திருஞானசம்பந்தர் இங்கு வந்த​போது சிவனே ஊர் மக்களின் கனவில் வந்து சோர்ந்து வரும் அவருக்கு ஒரு பல்லக்கும், குடையும் கொடுக்கும் படி கூறிய கதை. சம்பந்தரும் இந்தக் கோயிலின் இறைவனை பற்றி பல பதிகங்கள் பாடியுள்ளார்.

இந்தக் கதை மூன்று முறை இந்த கோயில் சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது, முதல் முறை செப்பனிடப்பட்டுள்ள கோபுரத்தில்.

இரண்டாம் தளத்தில் வலது புறத்தில் சுதை உருவம். பல்லக்கின் வெளியில் சம்பந்தர், மேலே குடை, மேலே தளத்துடன் வரவேற்கப்படும் காட்சி.

அதே போல விமானத்தின் இரண்டாம் தளத்திலும் இதே காட்சி உள்ளது.

இன்னும் ஒரு இடத்தில தலைக்கு மேலே மகர தோரணங்களின் நடுவில் மிகச் சிறிய அளவில் புடைப்புச் சிற்பம் உள்ளது.

இதுவே ஆதி முதல் வடிவம் என்று நாம் கருதலாம். பல்லக்கை திடகாத்திரமான இருவர் தூக்கிக் கொண்டு சம்பந்தரையும் அவர் தந்தையாரையும் அணுகி வருகிறார்கள். பல்லக்கின் அடியில் தெரியும் ஒரு சிறிய உருவம் மேலே இருக்கும் குடையை தூக்கிப் பிடித்திருக்கும் பாணி இன்றும் நம் கோயில் உற்சவங்களில் கு​டைகளை தூக்கிப் பிடிப்போரின் பாணியில் இருக்கிறது. குழந்தைக்கு பல்லக்கை பார்த்தவுடன் ஆனந்தம், தந்தையாருக்​கோ பெருமிதம். இந்தக் காட்சிக்கு மேலே ஆனந்த தாண்டவத்தில் ஈசன், அருகில் சிவகாமி அம்மை, அனைவருக்கும் அருள்பாலித்து நிற்கின்றனர். இந்த சிறிய அளவு சிற்பத்திலும், முகத்தில் மட்டும் அல்லாமல் அவர்களது ஒவ்வொரு அசைவிலும் அமைப்பிலும் உணர்ச்சிகளை சிற்பி வெளிப்படுத்துகிறான். ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் பரிசை பெரும் அவர்களின் உபகாரஸ்மிருதி – அதிலும் ஒரு சிறு குழந்தையின் கள்ளம் கபடமற்ற அந்த ஆனந்த உணர்ச்சி , அதே தந்தையின் முதிர்ந்த கோட்பாடு… ஆஹா அருமை. பல்லக்கின் அமைப்பும் வடிவமும் நாம் இதுவரை பார்த்தவை போன்று இல்லாமல் சமமான இருக்கை போலவே உள்ளது.

மற்ற இரு இடங்களிலும் உள்ள பல்லக்கு தற்கால அமைப்பை ஒட்டி உள்ளது. அதிலும் சம்பந்தர் அதன் மேல் ஏறி அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. குடை பல்லக்கின் மேலே முடுக்கி விட்டது போல உள்ளது. கூடு போல இருக்கும் இந்த பல்லக்கின் அமைப்பை பார்க்கும் பொது – மேலே கு​டைக்கு வேலையே இல்லையே என்று தோன்றுகிறது. மற்ற இரு சுதை வடிவங்களும் பிற்காலத்தில் செய்தவையாக இருக்க வேண்டும். ஆனால் எதற்காக முன்னர் இருந்த வடிவத்தை மாற்றி செய்தார்கள் என்று தெரியவில்லை.

எனக்கு ஒரே ஒரு குறைதான். விமானத்தையும் கோபுரத்தையும் செப்பனிடும்​போது பாரம்பரிய சுதை​யை உபயோகிக்காமல் சிமெண்ட் கொண்டு செய்கிறார்கள். சரியாக பராமரித்தால் சுதை பல நூற்றாண்டுகள் நிற்கும்…


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment