அகத்தியர் குழுவில் திரு ஜெயபாரதி ஐயா அவர்களின் பதிவு ஒன்றே இந்த பதிவின் கரு. அவரது விளக்கத்தை படித்துவிட்டு பலரும் குழம்பும் இந்த சிற்பத்தை பற்றி தெரிந்துக்கொண்டோம். இந்த சிற்பம் திருவிளையாடல் புராணத்தில் வரும் பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம் என்பதை அறிந்தோம். இந்த சிற்பத்தை பல இடங்களில் வராஹி என்று தவறாக அடையாளம் காண்கிறார்கள். அதனால் மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் செல்லும்போது இந்த சிற்பங்களைத் தேடிச் சென்றோம். எனினும் அங்கு செல்லும் முன்னரே தற்செயலாக தில்லையில் புடைப்புச் சிற்பத்தில் இதைக் கண்டு மகிழ்ந்தோம்.
சிற்பத்தில் இடது புறத்தில் ( பார்க்கும்போது உங்கள் வலது புறம் ) – கை கூப்பி நிற்கும் பன்றி முகம் கொண்டு அடியவர்கள் மனதில் கொள்ளுங்கள். பிறகு ஏன் என்று புரியும்.
சரி, முதலில் கதை
இறைவன் அலகிலா விளையாட்டுடையன் என்று சொல்வர். அவனைப் பொறுத்தமட்டில் உயர்ந்த தேவராயினும், மானிட ஜன்மமும் ஆயினும் சரி, இழிந்த பன்றியாயினும் அனைவரும் சமமே.. அறுபத்து நான்கு திருவிளையாடல் புராணங்களில், பசியால் வாடிய பன்றிக்குக் குட்டிகளுக்கு முலை ஈந்து பால் கொடுத்த பேரருளை மாணிக்கவாசகர் முதற்கொண்டு அருளாளர்கள் வியந்து பாடுவர். திருவிளையாடல் புராணப் பாடல்களின் படி இந்தக் கதை எளிதாகச் சொல்லப்படுகிறது. சுகலன் எனும் வேளான் மதுரைக்கு அருகே இருக்கும் ஆதிமணிமாடமூதூர் எனும் ஊரிலே தன் கற்புடை மனைவியுடன் இறையன்போடு வாழ்ந்தாலும் அவர்களுக்குப் பிறந்த பன்னிரு புதல்வர்கள் தாய் தந்தையருக்கு நேர்மாறாக இருந்தனர். வேண்டாத செயல்களை பெற்றோர் வெறுக்கும் வண்ணம் செய்துகொண்டும் அவப்பெயர் பெற்றும் வளர்ந்தனர். அடிக்கடி கானகம் செல்வதும் வேடர்களோடு கண்டபடி வேட்டையாடியும் பொழுதைப் போக்கினர். அப்படிப்பட்ட சமயத்தில் காட்டில் ஒரு புதர் அருகே ஒரு முனிவர் தவம் செய்யும்போது, அவரைக் கேலி செய்து, கல்லால் அடித்தும், வேடர்களின் அம்பெய்தியும் துன்புறுத்தியதால், முனிவர் அந்த பன்னிருவரரயும் சபித்தார். நீங்கள் செய்யவேண்டிய உழவுத் தொழிலை விடுத்து வேடர்களின் அடாவடித் தொழிலில் கலந்து எம்மைத் துன்புறுத்தியதால் பன்றிகளாகப் பிறந்து குட்டிகளாய் இருக்கும்போதே தாய் தந்தையரை இழந்து அவதிப்படுவதாக சாபம் இட்டார். பிறகுதான் இவர்களுக்கு தாங்கள் செய்த பாவங்கள் உறைக்க, கண்ணீர் வடிய மன்னிப்பும் சாப விமோசனமும் கேட்க, கருணை வடிவமான அந்த முனிவர், உங்களுக்கு சாபவிமோசனம் ஈசனாலேயே அருளப்படும் என்று அன்போடு சொன்னார். சாபம் பெற்றவர்கள் அனைவரும் பன்றிக்கு மகவாகப் பிறக்கையில் காட்டில் வேட்டையாட வந்த பாண்டிய மன்னனால் பன்றிகள் அழிக்கப்பட, இந்த பன்றிக்குட்டிகள் ஏதும் ஆறியாமல் முலைப்பாலுக்காக ஏங்கித் தவிக்கும்போது, அகில உலகத்தையும் தாய் போல நேசிக்கும் ஈசன், தோன்றி முலைப்பலைக் கொடுத்து, அந்தப் பன்றிக்குட்டிகளுக்கும் முக்தி அருளினார் என்பதுதான் கதையின் சாரமாகும்.
திருவிளையாடல் புராணப்பாடல்
இருளைக் கந்தரத்தில் வைத்தோன் தன் இடத்து என்றும் அன்பின்
தெருளைத்தந்து அவட்கு மாறாத் தெரிவையை இசையால் வெல்ல
அருளைத் தந்து அளித்த வண்ணம் அறைந்தனம் தாயாய்ப் பன்றிக்
குருளைக்கு முலை தந்து ஆவி கொடுத்தவாறு
திருவாசகம் (போற்றித் திருவகவல்):
தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக் கருளினை போற்றி
(ஏனக்குருளை – பன்றிக்குட்டிகள்)
கதை தெரிந்த தைரியத்தில் சிற்பம் உள்ள தூணை தேடி அலைந்தோம். மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் இந்த தூண் உண்டு என்று தெரிந்து தேடினோம். உள்ளே இல்லை. ( சென்ற மடலில் படித்த சம்பவங்களுக்கு பிறகு நடந்தவை இவை ) அப்போது ஒருவர் புது மண்டபத்தில் சென்று பாருங்கள், அங்கே இருந்தால் இருக்கும் என்றார். எனினும் அங்கே இப்போது ( இரவு எட்டு மணி ) கடைகள் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும். ஒன்றுமே தெரியாது என்றும் எச்சரித்தார். காலையில் கடைகள் திறப்பதற்கு முன்னால் வந்து விடுங்கள் – அப்போது காவலர் அனுமதித்தால் படம் நன்றாகவே எடுக்கலாம் என்றும் கூறினார். எனினும் ஆர்வம் தாங்காமல் உடனே சென்றோம்.
மிகவும் கடினம்தான். எங்கும் கடைகள் – கதவுகள். ஒன்றுமே தெரியவில்லை. ஒரு ஷாப்பிங் மால் போல இருந்தது சிற்ப வேலைப்பாடு மிக்க அந்த மண்டபம். எனினும் முடிவாக நாங்கள் நுழைந்த பக்கத்திற்கு நேர் எதிரே ஒருவழியாக தூணைக் கண்டுபிடித்து விட்டோம். அருகில் இருந்த கடைக் காரரை கொஞ்சம் தள்ளி இருக்க சொல்லிவிட்டு படங்களை எடுத்தோம். ( அடுத்த நாளும் விடியற் காலையில் திரும்பி தூணில் அடி பாகத்தில் இருத்த சிற்பங்களையும் படம் எடுத்தோம் )


இது சிவனா வராஹியா


கண்டிப்பாக சிவன் தான். வலது கரத்தில் மழு உள்ளது. இடது கரம் உடைந்துபோய் விட்டது.
தூணின் அடியில் உள்ள சிற்பங்கள் கதையை சொல்கின்றன . தாய் பன்றியை வேட்டை ஆடும் பாண்டிய மன்னன்.
பன்றிக் குட்டிகள் பாலுக்காக ஏங்கி நிற்கும் பாணி அருமை


ஈசனை வணங்கி நிற்கும் சாப விமோசனம் பெரும் முன்னர் பன்றிகள் ( நாற்காலிகள் அடுக்கி இருந்ததால் படம் சரியாக எடுக்க முடியவில்லை )
மதுரையில் கண்டதன் அடிப்படையில் நம்பிக்கையுடன் திருப்பரங்குன்றம் சென்றோம். அங்கே வாயிலிலேயே இருந்தது தூண் சிற்பம். அதே பாணி ( சரி, ஒரு வித்தியாசம் இருக்கும்) ஆனால் அடியில் வராஹி என்று பெயர் இட்டு உடல் முழுவதும் மஞ்சள் பூசி இருந்தது.
இன்னொரு படம், அப்படியே மதுரையில் பார்த்த சிற்பம் போல
இங்கும் பாலுக்கு ஏங்கும் பன்றிக் குட்டிகள்.
சிவன் தானே – ஆயுதங்கள். இங்கே மானும் இருக்கே.


ஒரு வித்தியாசம் என்று சொன்னேன் அல்லவா. இதோ. இங்கே பாண்டிய மன்னன் வேட்டையாடிய தாய் பன்றி இறந்து விழுவது செதுக்கப்ட்டுள்ளது .
அதே படத்தின் அடியில், பார்தீர்களா, அதே அணிவகுப்பு.
அதே படத்தின் அடியில், பாத்தீர்களா, அதே அணிவகுப்பு.
இதே தூண் சிற்பத்தின் துணை சிற்பம் இன்னும் ஒரு அற்புத திருவிளையாடல் புராணத்தை விளக்கியது. அதை அடுத்து பார்ப்போம்.
இதன் ஆதாரம் இப்படி இருக்க, ஈசனின் இந்த திருவிளையாடலை சரியாக பெயர் போடாத அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்..