கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடை – திரு குடவாயில் பாலசுப்ரமணியம்

திரு பாலசுப்ரமணியம் அவர்களின் – கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடை – என்ற அற்புதமான பதிவை கண்ட நாள் முதல் அதனை இணையத்தில் அனைவரும் ரசிக்க இடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. திரு சுந்தர் பரத்வாஜ் அவர்கள் மூலம் இது இன்று வெளிவருகிறது. திரு சதீஷ் பொறுமையாக முழு பதிவையும் தமிழில் மீண்டும் இந்த தளத்தில் அடித்து தந்ததற்கு நன்றி.

பல்லவப் பேரரசர்கள் தமிழகத்திற்கு விட்டுச் சென்ற கலைக் கருவூலங்கள் மிகுதியாகவுள்ள இடங்கள் வரிசையில் தலையாய இடம் பெற்று விளங்கும் ஊர் கடல் மல்லை எனப்பெறும் மகாபலிபுரமாகும். சிறுசிறு குன்றுகளைக் குடைந்து உருவாக்கிய ஐந்து இரதங்கள்,

தரையில் கிடந்த பறையை கிடந்தகோல திருமாலாகச் செதுக்கி அவருக்கென அங்கு கோயில் எடுத்து அக்கோயிலின் இருமருங்கும் இரண்டு சிவாலயங்களை இணைத்து எழுப்பிய கடற்கரைக் கோயில்,

ஊருக்கு நடுவே கம்பீரமாகத் திகழும் குன்றமொன்றில் குடைந்து எடுக்கப்பெற்ற குடைவரைக் கோயில்கள் என எவ்வாறெல்லாம் கோயில்களைத் தோற்றுவிக்க முடியுமோ அவ்வண்ணம் கடல் மல்லையைக் கலைப் பெட்டகமாக மாற்றிய பெருமை அத்யந்தகாமன் என்ற பட்டம் சூடிய இராஜசிம்ம பல்லவனுக்கே உரியதாகும்.

உலக கலை வல்லோரை தன்பால் ஈர்த்து நாளும் மயங்க வைக்கும் தனிச்சிறப்பு மல்லைக்கு உண்டு. தூங்கானை மாடம் என்றும் கஜப்பிரிஷ்டம் என்றும் கோயிற் கட்டடக் கலை வல்லோர் குறிப்பிடும் யானை உடல் வடிவில் திகழும் கோயிலொன்றை பாறையிலிருந்து செதுக்கி எடுத்து அருகிலே அதனை ஒத்த யானை உருவத்தையும் அமைத்து அதன் சிறப்பைக் காட்டும் நுட்பத்தை இங்குமட்டுமே காணலாம்.

புலிவாயில் அரங்க மேடையி அமைத்துக் காட்டி அங்கு அரம்பையர்களை ஆடச்செய்து அழகு கண்ட புலிக்குகையும் மல்லையின் தனி முத்திரையாகும்.

மாமல்லையின் குன்றத்தை (சிறுமலையை) குடைந்து எடுக்கப்பெற்ற குடைவரைக் கோயில்கள் மட்டும் அணி செய்யவில்லை. அங்கு பாறைகளின் பக்கவாட்டில் சிற்பங்கள் அணி அணியாகச் செதுக்கி ஊரையே கலைக்கூடமாக மாற்றியிருக்கிறார்கள். ஒருபுறம் விண்ணக கங்கை அக்குன்றத்தின்மேல் இறங்கி ஆறாக ஓடி பாதாள உலகம் சென்றடையும் காட்சி செதுக்கப்பெற்று காணப் பெறுகின்றது. இங்குள்ள காட்சியை பகீரத தவக்காட்சி எனக் குறிப்பர். அக்குன்றத்தின் மேல் பொழியும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கால்வாயாக ஓடி வந்து பிதுக்கம் பெற்ற இரு பாறைகளுக்கு இடையே கீழே இறங்கும். அந்த இடத்தை தேர்வு செய்து பகீரதனின் தவ ஆற்றலுக்காக வானத்து கங்கை மண்ணகத்துக்கு இறங்கும் காட்சியை செதுக்கியுள்ள அந்த மகாசிற்பியின் கற்பனை ஆற்றலுக்கு ஈடாக எதையும் கூற முடியாது.

இச்சிற்பக் காட்சிப் பகுதியை பாதுகாக்க முனைந்தவர்களுக்கு அங்கு சித்தரிக்கப்பெற்ற புராணக் காட்சியின் பின்புலம் தெரியாத்தாலும், அந்த மகா சிற்பியின் மகோன்னதம் புரியாத்தாலும் மழைநீர் வந்து இறங்கும் இட்த்தில் செங்கற்களால் தடுப்பினை ஏற்படுத்தி பெருக்கெடுத்து ஓடிவரும் மழைநீரை திசைதிருப்பி விட்டிருக்கிறார்கள். தடுப்பு இல்லாமல் மழைநீர் இறங்கும்போது அங்கிருந்தவாறு அக்காட்சியைக் காண்போமானால் கங்கைப் பேராறு ஆர்ப்பரித்து விண்ணகத்திருந்து இறங்குவதையும், அதன் கரையில் கானகங்கள் உள்ளமையையும், வேட்டுவர்களோடு விலங்குகளையும், பறவைகளையும், வானவர்களையும், கந்தர்வர்களையும், மனிதர்களையும், கோயில்களையும் காண்பதோடு பாதாளலோகத்திருந்து நாகர்கள் நீரில் மேல் நோக்கி வருவதையும் உயிர்ப்போடு காணலாம். கலாரசிகர்களுக்கு அக்காட்சி பேரின்பம் பயப்பதாகும்.

கங்கை பேராற்றுக்கு குறுக்காக கல்தடுப்ப் செய்தது போன்று அங்கு நிகழும் மற்றொரு மகோன்னத சிற்பக் காட்சியை மண்டபம் எடுத்து மறைத்து விட்டார்கள். விஜய நகரப் பேரரசு காலத்தில் இது நிகழ்ந்தது. பக்திப் பெருக்கும்பார்வையை மறைத்ததால் இக்காட்சியின் சிறப்புக்கு ஊறு விளைந்தது. இருப்பினும் மண்டபத்துள் சிக்கியுள்ள மாண்புறு இக்காட்சியின் நுட்பச் சிறப்பை நுகர வேண்டுமாயின் கண்ணனின் வரலாற்றையும், ஆழ்வார்களின் பாசுரக் கூற்றையும் அறிந்து திளைத்து பின்பு சிற்பங்களை காண வேண்டும்.


கண்ணன் வளர்ந்த ஆயர்பாடியின் மக்கள் இந்திரவிழா கொண்டாடியபோது மந்திர விதிப்படி பூசனைகள் செய்யாததால் வெகுண்ட வானவர் தலைவனான இந்திரன் கோபமுற்று ஆயர்பாடி அழியுமாறு கல் மழையினைப் பெய்யச் செய்தான். ஆநிரைகளும், ஆயர்களும், ஆய்ச்சியரும் செய்வதறியாது அலறி ஓடிய போது, கண்ணபிரான் அங்கு வந்து அங்கிருந்த கோவர்த்தனம் என்னும் மலையைக் கையால் எடுத்து தலைக்குமேல் உயர்த்தி குடையாகப் பிடித்தான். அம்மலையோ கல்மாரியைத் தாங்கிக் கொண்டு ஆயர்பாடியை காத்து நின்றது. கண்ணன் வந்து கொற்றக் குடையாக கோவர்த்தன மலையை பிடித்தவுடன் அஞ்சி ஓடிய ஆயர் பாடி மக்கள் அமைதியுற்றனர். கல்மாரி கடுமையாகப் பொழிந்தாலும் கண்ணனுடைய கருணையினால் பசுக்கள் மகிழ்ச்சியுற்று பால்பொழிந்தன. கன்றினை நக்கி கனிவைக் காட்டின. ஆயர் மகளிரோ குழந்தைக்கு அமைதியாக பால்கொடுக்கத் தொடங்கினர். ஆய்ச்சியர் வெண்ணை கடந்து மோர் தூக்கிச் செல்லலாயினர். ஆயர்களோ பால் கறக்கத் தொடங்கினர். அவரவர் பணி அமைதியாக நடைபெறலாயிற்று. அன்று கண்ணன் குடை பிடிக்கவில்லை என்றால் கல்மாரியால் ஆயர்பாடியே அழிந்திருக்கும்.

பாகவதம் புகழும் இவ்வரலாற்றை திருமங்கையாழ்வார்,

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழாவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தம் ஓடின ஆநிரை தளராமல்
எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே

என்ற அழகு தமிழ் பாசுரமாகப் பாடியுள்ளார். இதே செய்தியினை பெரியாழ்வார், ” ஆயனார் கூடி அமைந்த விழாவை அமரர்தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை” என்று குறிப்பிட்டுள்ளார். திருமங்கை மன்ன்னோ மீண்டும்,

கடுங்கால் மாரி கல்லே பொழிய, அல்ல
எமக்கு அன்று
கடுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச
அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி
நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாம்ம் நமோ
நாராயணமே

என்ற பாடல் வழி கல்மாரிப் பொழிந்த திறத்தையும் கண்ணன் காத்த கருணையையும் விளக்கியுள்ளார்.

ஊரின் நடுவண் திகழும் மாமல்லை குன்றத்தின் கீழ்த்திசையில் பக்கவாட்டு பாறையில் ஒரு நீண்ட சிறபத்தொகுதி காணப்பெறுகின்றது. எழிலுறு அக்காட்சிக்கு முன்பாக கற்தூண்களை நட்டு மண்டபமொன்றினை பிற்காலத்தில் எடுத்துள்ளனர். இம்மண்டபம் அச்சிற்பங்களை காப்பதற்கென எடுக்கப் பெற்றிருந்தாலும், அச்சிற்பங்கள் எதை எடுத்துக் காட்டுகின்றன என்பதை மறைப்பதாகவே உள்ளது. விஜய நகர அரசு காலத்தில் எடுக்கப்பெற்ற இம்மண்டபத்திற்குச் சற்று தள்ளி எதிர்திசையில் நின்றவாறு நம் மனக் கண்களால் அம்மண்டபத்துத் தூண்களையும், கூரையையும் அகற்றிவிட்டு உள்ளே தெரியும் காட்சியை உற்று நோக்குவோமாயின் நெடிதுயர்ந்த கண்ணபிரான் தன் இடக்கரத்தை தலைக்கு மேல் உயர்த்தி மாமல்லை குன்றத்தை தாங்கி நிற்பது தெரியும்.




அருகே பலராமன் கைகட்டி நிற்கும் முதியவரான ஆயர் ஒருவரின் தோளில் கைவைத்து பரிவோடு அணைத்து நிற்பார். குன்றத்தை தூக்கி நிற்கும் கண்ணபிரானைச் சுற்றி ஆயர்பாடியே அங்கு காட்சியளிக்கும். பின்புலம் முழுவதும் பசுக் கூட்டங்கள், கம்பீரமான காளை ஒன்று அங்கு நிற்க கன்றுகளும், காளைகளும் சுற்றி நிற்கின்றன.

அழகிய கொம்புகளுடன் திகழும் பசு ஒன்று தன் கன்றின் முதுகில் நாக்கினால் நக்கி தாய்மை உணர்வை வெளிப்படுத்த ஆயன் ஒருவன் அதன் மடி சொறியும் பாலை பாத்திரமொன்றில் கறக்கும் காட்சி ஒருபுறம். ஆய்ச்சியர் மகள் ஒருத்தி தன் குழந்தைக்கு பாலூட்டுகின்றாள். அங்கு நிற்கும் ஆயனொருவன் குழலொன்றினைக் கையில் ஏந்தி அமுத கீதம் இசைக்கின்றான்.


ஆயர் குலப் பெண் ஒருத்தி தலையில் ஓலைப் பாயை சுருட்டி சுமந்தவாறு, தன் வலக்கரத்தில் தயிரும், வெண்ணையும் உள்ள பானைகள் கொண்ட உரியைப் பிடித்தவாறு செல்கின்றான்.

ஆயனொருவன் கைக் குழந்தையை முதுகில் சுமந்த வண்ணம் நீண்ட கோலுடன் செல்ல அவன் மனைவியோ சிறுபிள்ளை ஒருவன் கரம் பற்றியவாறு மோர்க்குடங்களை தலையில் சுமந்து செல்கிறாள்.

கோவர்த்தனகிரியை குடையாகத் தூக்கிப் பிடிக்கும் கண்ணனைச் சுற்றி ஆயர்குலப் பெண்கள் நின்றவாறு வியந்து அவனை நோக்குகின்றனர். கடுமையான கல்மாரி பெய்து கொண்டிருக்க கடுகளவும் கவலையில்லாமல் ஆயர்பாடி மக்கள் மகிழ்வோடு அவரவர் பணியினை மேற்கொண்டுள்ளனர்.

பசுக்களும் காளைகளும் மகிழ்வோடு திரிகின்றன. கல்மாரியை நோக்கி மலை குடையிலிருந்து வெளியே செல்ல முற்படும் ஆயன் ஒருவன் கரத்தை அவன் மனைவி பற்றி உள்ளே இழுக்கும் காட்சியும் அங்கு ஒருபுறம் இருப்பதைக் காணலாம்.

மாமல்லை குன்றத்தையே கோவர்த்தன மலையாக மாற்றிக் காட்டி இருக்கிறான் பல்லவனின் சிற்பி. இக்காட்சியின் ஒவ்வொரு பகுதியையும் உற்று நோக்கியவாறு ஆழ்வார்களின் கூற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம். தன் ஐந்து விரல்களை மேலுயர்த்தி குன்றத்தை குடை எனப் பிடித்திருக்கும் இக்காட்சியை பெரியாழ்வார் தம் பாசுரத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார். கண்ணபிரானின் மணி நெடுந்தோள் குடைக்காம்பாகவும், அவன் கைவிரல்கள் குடையின் உள் விட்டங்களாகவும் விளங்க அதன் மேல் மலை கவிழ்ந்து குடையாக இருப்பதிஅக் காண்கிறார். இதனை,

செப்பாருடைய திருமாலவன் தன்
செந்தாமரைக்கை விரல் ஐந்தினையும்
கம்பாக மடுத்து மணி நெடுந்தோள்
காம்பாகக் கொடுத்து கவித்த மலை

என்று பாடுகின்றார். இப்படி கண்ட பெரியாழ்வார்க்கு மேலும் ஒரு காட்சி புலப்படுகின்றது. கண்ணபிரான் விரல்களை விரித்து அம்மலையைத் தாங்கும் காட்சி ஆதிசேடன் தன் ஐந்து தலைகளை படமாக விரித்து அதன் மேல் பூமியை தாங்குவதுபோல் தோன்றிற்று. அதனை,

படங்கள் பலவுமுடைப் பாம்பரையன்
படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன்போல்
தடங்கை விரலைந்தும் மலரவைத்துத்
தாமோதரன் தாங்கு தடவரைதான்

என்று “கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே” என்ற ஈற்றடி வருமாறு பாடிய பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாமல்லை சிற்பக் காட்சியில் ஆநிரைகளோடு குழந்தையைத் தோளில் சுமந்த ஆயன் ஒருவன் செல்ல அவன் பின்னே சிறுவன் ஒருவனுடன் மோர்ப் பானையை தலையில் சுமந்து தாய் ஒருத்தி செல்லுதலும், அருகே ஆயர்பாடி பெண்கள் கண்ணனைச் சூழ்ந்து நிற்பதையும் காணும் போது,

தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார்
காற்றானிரப் பின்பு போவார்
நீ ஆய்ப்பாடி யிளங் கன்னி மார்களை
நேர்படவே கொண்டு போதி
காய்வார்க் கென்றும் உகப் பனவே செய்து
கண்டார் கழறித் திரியும்
ஆயா உன்னை யறிந்து கொண்டேன் உனக்
கஞ்சுவன் அம்மம் தரவே

என்ற பெரியாழ்வாரின் பாடல் பல்லவ சிற்பியின் உள்ளத்தை உருகச் செய்திருக்க வேண்டும் என்பது அறியலாம்.

ஆயர்பாடியின் அழகையும், குன்றமெடுத்து கல்மாரி தடுத்த கோபாலனின் தோற்றத்தையும் கண்முன் நிறுத்திய பல்லவ சிற்பி இக்காட்சி மூலம் தொண்டை மண்டலத்து மரபுவழி வந்த அம்மண்ணுக்குரிய கால்நடைகளின் உருவ அமைப்பை உலகம் உள்ளளவும் நிலையாகப் பதிவு செய்துவிட்டான். தமிழகத்தின் மண்ணுக்குரிய கால்நடை இனங்கள் மறைந்து வரும் இந்நாளில் இத்தகைய சிற்ப்ப் பதிவுகள் எதிர்கால சந்ததிகளுக்கு மரபுப் பெருமையை நிச்சயம் உணர்த்தும்.

( ஒரு பக்கம் மனித முகத்துடன் சிங்கம், கழுகு முகத்துடனும் ஒன்று )


படங்கள் – நன்றி – பிலிக்கர் நண்பர்கள், குறிப்பாக லக்ஷ்ணி பிரபால, மற்றும் பிரிட்டிஷ் நூலகம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நூறாவது பதிவு – ஒரு அறிய சிற்பம் – ஒரு அற்புத மனிதர் – திரு ஜெயபாரதி ஐயா

இது இந்த வலைப்பக்கத்தின் நூறாவது பதிவு. – நூறு சகோதரர்களான கெளரவர்களின் முடிவுக்காலத்தின் நிகழ்வு ஒன்று நமது நூறாவது பதிவாக மலர்கிறது. பீமனுக்கும் துரியோதனுக்கும் இடையே நடக்கும் துவந்த யுத்தம்.

நூறு பதிவுகள் அதுவும் ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள் இட முடிந்ததற்கு காரணம் நண்பர்களும், நல் அறிஞர்களும் வழிகாட்டி ஊக்கப்படுத்தியதால்தான். சில நல்ல உள்ளங்கள் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்க ஊக்குவித்து கலங்கரை விளக்கமாய் இருந்து வழிகாட்டியும் வருகிறார்கள். அந்த கலங்கரை விளக்கங்களில் ஒருவர், என்னை மட்டுமல்ல சாமானியர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், சங்க கால ஆர்வலர்களையும், சம கால ஆர்வலர்களையும் தன்னுடைய வசீகர எழுத்தால் கவர்ந்திழுப்பவரைத்தான் இன்று அறிமுகம் செய்யப் போகிறேன். இவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். ஒரு நிமிடம்! இவருக்கு அறிமுகம் தேவையா! அப்பேர்பட்டவர் யார்: அவர்தான் Dr. S. ஜெயபாரதி, இவருடைய வரலாற்று படைப்புகளும், கலாச்சார, பண்பாடு பற்றிய படைப்புகளும் இவருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்களையும், ஆர்வளர்களையும் உருவாக்கியுள்ளது. இவரது மேலாண்மை திறம் வியக்கத்தக்கது, ஒருவரின் மனதை எளிதாக அறிந்துகொள்பவர். இவர் பங்குபெறும் மின் குழுமங்களில் யாரேனும் ஒரு சுவாரசியமான தகவலைத் தெரிவித்தாலோ அல்லது சந்தேகங்களை தெரிவித்தாலே, அதை நிவர்த்தி செய்ய முன் நிற்பவர், தவறிருந்தால் சுட்டிக் காட்டுவதோடு சரியான பாதையில் செல்ல வழிகாட்டுபவர். இவரது துணையிருந்தாலே போதும் இலக்கை நோக்கி பாதி தூரம் சென்ற நிம்மதி கிடைக்கும் நமக்கு. நம் மண்ணின் பெருமையை அறிந்து கொள்ளும் தேடலில் ஒவ்வொருவரையும் ஈடுபடுத்துவதில் இவருக்கு அலாதிப் பிரியம்.

( இன்றைய அரிய மனிதர்களில் ஒருவரான் இவரை அறியாதவர் யாரேனும் இருந்தால் உடனே பார்க்கவும் டாக்டர் சி. ஜெயபாரதி)

நாம் பார்க்கப் போகும் இன்றைய பதிவு அவருடைய வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டதுதான். துவந்த யுத்தம்

நாம் ஏற்கனவே இந்த சிற்பத்தை ஒத்த அதே வகை சிற்ப பதிவுகள் பலவற்றை பார்த்திருக்கிறோம். அதனால் இந்த சிற்பத்தை நான் விளக்குவதை விட Dr. ஜெ. பி. யின் விளக்கம் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று அவரை அணுகினேன். நூறாவது பதிவு வேறு. உடனே அனுமதித்த அவரது கருணையை என்னவென்று சொல்வது. என்னைப் போன்ற பல பேரை அவர் உருவாக்க அவர் பல காலம் வாழவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம். கரும்பு தின்ன கூலியா

அற்புதமான இந்த சிறப்புப் பதிவை வழங்கும் டாக்டர். ஜே.பி ஐயாவுக்கு நன்றி.

உலகத்தின் தலை சிறந்த சிற்பங்களின் புகலிடங்களில் ஒன்றான பண்டே ச்ரெய் ஆலயங்கள் ஒன்றில் உள்ள சிற்பத்தை இன்று காண்போம். “அன்கோர் வாட்”டில் இருந்து வடகிழக்காக 15 மைல்கள் தொலைவில் உள்ளது இந்த பண்டே ச்ரெய்.

[“The lacy setting is superbly executed and the balanced rhythm and harmony
of the scene itself cannot be surpassed in any work of man” – Reginald le May.

துல்லியமான அபிநயத்தோடு துவந்த யுத்தத்தை, பழங்கதையை எடுத்துக்காட்டும் இந்த சிற்பங்களை விஞ்சிய எதுவும் இருப்பது அரிதே!]

இன்றைய சிற்பத்தில் உள்ள காட்சி பாரதப் போரின் கடைசி கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

பாரதப்போர் முடியும் தருவாயில் அனைவரையும் இழந்து, படுகாயப்பட்டு களைப்படைந்த துரியோதனன் மறைந்திருக்கிறான். அந்த சமயம் பார்த்து பாரதப்போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்து அவனை தேடிவரும் பாண்டவர்களின் கண்ணில் படுகிறான். பாண்டவர்கள் ஐவர் ஆனால் அவனோ ஒருவன் ஆகவே பாண்டவர்களில் யாரேனும் ஒருவரோடு யுத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பாண்டவர்களில் பத்தாயிரம் யானை பலம் கொண்ட துரியோதனனுக்கு இணை பீமன் மட்டும் தான். காயம்பட்டு களைப்படந்திருந்தாலும் கதாயுதத்தை கையாளும் திறமையால் பீமனுடன் போர் புரிய சம்மதிக்கிறான் துரியோதனன். பீமனும் கதாயுத்தை கையாள்வதில் வல்லவனே.

கதை என்பது நீண்ட பிடியும் உருண்ட தலைப் பகுதியும் உடைய ஆயுதம். இதை பயன்படுத்தியே இரதங்களை உடைத்தும், யானைகளை கொன்றும், கவசங்களை உடைத்தும் எதிராளியை நிலை குலையச் செய்வர்.

கிருஷ்ணரும், பாண்டவர்களும் வேடிக்கைப் பார்க்க, துரியோதனனுக்கும், பீமனுக்கும் கதாயுத பயிற்சி அளித்த பலராமரை நடுவராக கொண்ட துவந்த யுத்தம் துவங்குகிறது. துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடைபெறும் சண்டை. அது இறுதிவரைக்கும் நடைபெறுவதாக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு உத்தியின் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படலாம்.

யுத்தம் நடைபெறுகிறது ஒரு காலகட்டத்தில் பீமன் களைப்படைகிறான், ஆனால் பத்தாயிரம் யானை பலம் கொண்ட துரியோதனோ மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் போர் புரிகிறான். பீமன் சற்று அயர்ந்த நேரம் தரையிலிருந்து எழும்பிய துரியோதனன் தன் கதையை பீமனின் தலையை நோக்கி தாக்க முற்படும் நேரத்தில் துரியோதனின் பலவீனமான இடது தொடையை தாக்குமாறு கிருஷ்ணன் பீமனுக்கு ஆலோசனை கூறுகிறான். துரியோதனன் எழும்பியதால் அவன் தொடை பீமனுக்கு எளிய இலக்காக அமைய, பீமனின் அடி மரண அடியாக துரியோதனின் தொடையில் விழ, தொடை பிளந்து குற்றுயிரும் கொலையுயிருமாய் வீழ்கிறான் துரியோதனன். யுத்த விதிகளை மீறியதால் தன் கலப்பாயுதத்தால் பீமனை தாக்க முயலும் பலராமனை தடுக்கிறார் மாயக் கண்ணன்.

இந்த யுத்தக் காட்சியை அற்புதமாக எடுத்துக்காட்டும் சிற்பத்தை பார்க்கலாம் இப்பொழுது.

வலதுபக்கம் அமர்ந்து கொண்டு யுத்தத்தை பார்த்து ஆரவாரம் செய்யும் பாண்டவர்களில் நால்வர்.

நடுவில் போரிடும் பீமன், அந்தரத்தில் பறந்து பீமனின் தலையை சரியாக குறிவைக்கும் துரியோதனன்.

இடது பக்கம் நான்கு கைகளோடு பலராமரின் ஆயுதத்தை தடுத்து நிறுத்தும் கிருஷ்ணர்.

துவந்த யுத்தத்தை அற்புதமாக விளக்கும் சிற்பம். எங்கேயோ கம்போடியாவில் பாரதப்போரை விளக்கும் சிற்பம் பாரதம் என்றழைக்கப்படும் இந்தியாவில் இல்லை!

(அருமையான தமிழில் மொழி பெயர்த்து உதவிய சதீஷுக்கு நன்றி )


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment