லிங்கோத்பவர் தோற்றமும், அதன் வடிவமைப்பின் வளர்ச்சியும்…

எந்த ஒரு சிற்பத்தைப் பார்க்கும் பொழுதும் நமக்கு மனதில் எழும் முதல் வினா, ’இது எந்தக் காலத்தைச் சார்ந்ததாக இருக்கும்?’. அது கற்சிலைகளாக இருந்தால் நன்று, ஏனெனில் பெரும்பான்மையான் சிற்பங்கள் அது ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே அதே இடத்திலேயே இருப்பதால் கல்வெட்டுக்களை வைத்தோ அல்லது வரலாற்றைத் தேடியோ நம்மால் அதன் பூர்வீகத்தை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது உலோகச் சிற்பங்களுக்கு சாத்தியமில்லை. காரணாம் ஏனைய உலோகச் சிற்பங்கள் அதன் இடங்களில் இருந்து பெயர்க்கப்பட்டு உலகின் வெவ்வேறு மூலைகளில், காட்சியகங்களில் வைக்கப் பட்டுள்ளன. அது மட்டுமின்றி, அதே இடத்தில் இருக்கும் சிற்பங்களைப் பற்றி அறிய நம் வழிபாட்டு முறை கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ஆகவே, நாம் இங்கு கல்லில் வடிக்கப்பட்ட லிங்கோத்பவரின் கலைப் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு சிவாலயத்திலும் உள் பிரகாரச் சுற்றில் கருவறைக்கு பின்புறம், மூலவருக்குச் சரியாக பின்னால் எதிர்ப்புறம் நோக்கியச் சிற்பம் லிங்கோத்பவராகத்தான் இருக்கும். பெரும்பான்மையான ஆலயங்கள் கிழக்குப் பார்த்த நிலையில், கருவறையின் மேற்குப் பகுதியில் வீற்றிருப்பார் நம் கட்டுரையின் நாயகர். பல்லவர் காலம் தொட்டு, முற்கால மற்றும் பிற்காலச் சோழர்களின் கலையையும் எடுத்துக் காட்டும் விதமாக ஆறு சிற்பங்களை எடுத்துக் கொள்வோம்.

இது காஞ்சி கைலாசநாதர் ஆலயத்திலிருந்து – ராஜசிம்ம பல்லவன் (700-728CE)

இந்தச் சிற்பம் பிற்காலப் பல்லவர் கலையைச் சார்ந்தது, அதாவது குடைவரைகளிலிருந்து மாறுபட்டு தனிக்கோயில்களாக கட்டத் தொடங்கிய பின்பு உருவானது. உற்று நோக்கினால், பல்லவர்களுக்கே உரித்தான மிகவும் கனமான யக்னோபவிதம் மற்றும் ஆபரண அலங்காரங்கள் தெரியும். கட்டு மஸ்தான உருவமாக அல்லாமல சிவன் ஒரு சாதாரண இளைஞன் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அக்னி லிங்கத்தைப் பிளந்து காட்சியளிப்பது போல் அல்லாமல், தனியாக ஒரு சாய்ந்த சதுரவடிவத்திற்குள்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரிசூலம், பிறைச் சந்திரன், பக்கவாட்டில் உள்ள பிரம்மாவையும், விஷ்ணுவையும் போல் நீண்ட மேல் பாகத்து உடல், வட்ட வடிவ முகம், தடித்த மூக்கு, அலங்காரத் தோரணங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

என்ன அழகு! அது சரி இந்தச் சிற்பம் அந்த ஆலயத்தில் எங்குள்ளது என்று சொல்லுங்கள் பார்ப்போம்!

திருமயம் சத்யகிரி சிவ குகையிலிருந்து…

ஏறக்குறைய முன் கண்ட சிற்பத்தின் காலக்கட்டமே இதுவும், ஆனால் இதனை வடிவமைத்தவர் பல்லவர்கள் என்றும், பாண்டியர்கள் என்றும், முத்தரையர்கள் என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

அற்புதமான சிற்பம். அக்னி பிழம்புகள் தூணின் பக்கவாட்டில் இருந்து கிளம்பி, இயற்கையாய் மேல் நோக்கி வளர்வதைப் போல் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகள் மட்டும் கொண்டு சாம பங்கத்தில் நிற்கும் சிவன், இடக்கையை இடுப்பின் மீது வைத்து கதி ஹஸ்த முத்திரையையும், வலது கையில் வரத ஹஸ்த முத்திரையையும் காட்டி வரமளிக்கும் தோற்றத்தில் உள்ளார். நீள்வட்டத்தில் சிவபெருமானை அழாய் வெளிப்படுத்துகிறது அந்தத் தூண்.

தூணின் தடிமனை பயன்படுத்தி, வலது கையை மடித்து வைத்து அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறான் சிற்பி. தடித்த நாசிகளும், உதடுகளும், அழகிய வதனமும் அமைதியைக் காட்டுகிறது. சில்பசாஸ்திரங்கள் சொல்வதைப் போல், முகத்தின் உயரத்திற்கும் மேல் வளர்ந்த சடாமுடியின் கட்டமைப்பு சிறப்பு. ஆபரண அணிகலன்கள் குறைவு, அதே சமயம் தொப்புளுக்கு மேலே உள்ள் மிகவும் தடித்த உதர பந்தனம் குறிப்பிடத்தக்கது. அழகாய் வடிக்கப்பட்ட கீழாடையிலும் கற்கள் பதிக்கப்பட்ட அல்லது சிங்க முத்திரை இடுப்புக் கச்சையும் காணப்படாதது குறிப்பிடத்தக்கது.

வலது கையின் மேல் ஒற்றை நூலாலான மிகவும் தடித்த யக்னோபவிதம், சுவாரசியம் கூட்டுகிறது. பல்லவருக்கு உரித்தான வடிவமைப்பு அல்லவா! இயற்கையான ஒரு சாதுவைப் போன்றதொரு உருவமைப்பு, கட்டுமஸ்தாக இல்லைதான் ஆனாலும் வலிமையான் தோள்கள். குறைந்த ஆபரணங்களும், இந்த வடிவமைப்பும் சிற்ப சாஸ்திர நூல்களின் குறிப்புகள் படி ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக காட்டுகிறது. அங்கே கிடைக்கும் சிதைந்த கிரந்த கல்வெட்டுகளும் உறுதிப் படுத்தும் ஆனாலும் ப்ரம்மனையும், விஷ்ணுவையும் ஏன் அன்னமாகவும், பன்றியாகவும் கூட அந்த சிற்பி இங்கு காட்டவில்லை?!

சோழம் மீண்டும் துளிர்த்ததும், ஆலயங்கள் கட்டுவது மிகுந்தது. அதனால் சிற்பிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அந்தக் கலையை வளர்த்தனர். ஆகவே, இனிவரும் உருவங்களைப் படித்தல் சற்று கடினமான வேலைதான். பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த புஞ்சை நல்துணை ஈஸ்வரம் மற்றும் புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் சிற்பங்களைக் காண்போம்.

புள்ளமங்கை – முதலாம் பராந்தகச் சோழன் ( 907 – 955 CE)

சிவனின் முகம் சிதைந்துள்ளது. மாபெரும் லிங்கோத்பவர், விஸ்ணுவும், ப்ரம்மாவும் இரண்டு பக்கமும். இதைத் தவிர வேறு சிற்பங்கள் இங்கு தனித்துவம் பெறவில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் வளர்ச்சி, தேவைக்கு அதிமானவை நீக்கப்பட்டு லிங்கோத்பவர் மட்டும் தனித்துவம் பெறுகிறார். அதோடு ப்ரம்மா மேலே பறந்து செல்வது போலும், விஸ்ணு பூமியை வராகமாகி துளைத்துச் செல்வது போன்ற காட்சி தத்ரூபம். இந்தத் தூண் மொத்தமும் இன்னும் சிற்பத்தால் ஆக்கிரமிக்கப்படவில்லை, தூணில் இருந்து அக்னி வெளிப்படுவது போன்ற காட்சிதான் இன்னமும் தெரிகிறது.


சிவனைத் தவிர மற்ற இரு உருவங்களிம் அளவில் சிறியதாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய ஆனால் தெளிவான முத்திரைகளாக மானும், மழுவும் கொண்ட கைகள் தூணிற்குள்ளே மற்றும் இடையளவு யக்னோபவிதம் கொண்ட மெலிதான ஒல்லி உருவம், அழகிய நீள்வட்ட முகம். பல்லவர் கால நேர்கோட்டிலிருந்து சற்றே வளைந்த வடிவத்திற்குள் இருந்து கால்கள் தெரியும் அளவிற்கு வடிக்கப் பட்ட உருவம். என்ன கலையின் வளர்ச்சி தெரிகிறதா?

புஞ்சை – 955 CE

கல்வெட்டுகளில் புஞ்சைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் ஆதித்தர் காலத்தைக் ( 965-969 CE) குறித்தாலும் சிற்பங்களின் வடிவமைப்பு முதலாம் பராந்தகர் காலத்தையே காட்டுகிறது.

ஆஹா! லிங்கோத்பவருக்கென்றே சிறந்த தோரணம், லிங்கத்திற்கு தொப்பி போன்ற உருவமைப்பு மலர் வளையத்துடன், அன்னமாக ப்ரம்மனும், வராகமாக விஸ்ணுவும் கொள்ளையழகு. இங்கு தனியாக சிற்பங்கள் ப்ரம்மனுக்கும், விஸ்ணுவுக்கும் இங்கு இல்லை. மற்றும், அக்னி சுவாலைகள் தூணின் பக்கவாட்டிலிருந்தே இன்னமும் கிளம்புகின்றன.

பல்லவர் காலம், பல்லவர் காலத்திற்கும் சோழர்களுக்கும் இடைப்பட்ட மற்றும் முந்திய சோழர் காலம், இந்த காலகட்டத்தில் லிங்கோத்பவரின் கலை வளர்ச்சி இரண்டு நூற்றாண்டுகளில் அபரிமிதம்! நன்கு தெளிவான, வலிமையான மார்பு, வட்ட வடிவ முகம், சிம்ம முகம் பதாகை, லிங்கத்தின் திறப்பு குறிப்பிடத்தக்கவை.

தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் – ஸ்ரீ ராஜ ராஜ சோழர் ( 985 -1014 CE)

மற்றுமொரு நூற்றாண்டில் ஏராளமான மாற்றங்கள், முழுமையான லிங்கம், அளவில் மிகவும் குறைந்த ப்ரம்மாவும், விஸ்ணுவும், துல்லியமான முக வடிவமைப்பு, நன்கு விரிந்த மார்புகள், மெலிந்த இடை, அக்னி தூண் முதலியன குறிப்பிடத்தக்கவை.

திருபுவனம் – மூன்றாம் குலோத்துங்க சோழன்( 1178 -1218CE)

மேலும் ஒரு நூற்றாண்டு, சிற்பக்கலை அதன் சிகரத்தில்! விதிகள் வளர்ந்து, தன்னிஷ்டம் போல் வடிக்கும் அலங்காரங்கள் குறைக்கப்பட்டு, முழு லிங்கமும் சிவ பெருமானால் ஆக்கிரமிக்கப் பட்டு, அளவில் குறைந்த, மேலே பார்த்ததை விட சற்று பெரியதான ப்ரம்மாவும், விஸ்ணுவும் கொண்டு, சிவனைச் சுற்றிய நீள்வட்ட வெளிப்பாடு துல்லியமாக விதிகளுக்குட்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடைசி சோழ மன்னன் குலோத்துங்கன் காலச் சிற்பம்.

படங்கள்: நண்பர்கள் அசோக், சௌரப், அர்விந்த், சதீஷ் , சாஸ்வத் மற்றும் ஸ்ரீராம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே … கல் வட்டம்

மனிதக் கலாசாரத்தின் பிறப்பிடம், வானத்தில் காற்றில் பறக்கும் ஒரு பட்டம் போல – பலர் இந்த பட்டதை பிடிக்க பெரும் முயற்சி செய்கின்றனர்.

சரியான ஆதாரங்கள் இல்லாதபோது, தாங்கள் எழுதியதற்கு துணையாக, தாம் சொல்லியவற்றை சரியென அவற்றை எடுத்து நிறுத்த, கடல் கொண்டமை , எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தங்கள் துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர். ஒரு சமூகத்தின் முகவரி கூட இல்லாமல் செய்யும் இயற்கை கூற்றுகள் எப்படியோ அவனது நினைவுகளை மட்டும் விட்டு விடுகின்றன. எது நிஜம் என்பதை மனிதனின் தொழில் நுட்ப வளர்ச்சிகள் – தெளிவாக கால அட்டவணை நிர்ணயம் செய்யும் யுத்திகள், ஆழ் கடலில் சென்று ஆய்வு செய்யும் இயந்திரங்கள், அரசாங்க உதவி – போன்றவை வெளி கொணரும். அப்படி ஏதாவது எனது இன்றைய பதிவை தவறு என்று காட்டினால் நானும் மகிழ்ச்சி அடைவேன்.

இது ஒரு வியாதி. தங்களது காலாச்சாரமே மிகவும் தொன்மையானது என்பதை ஒரு வெறித்தனமாக கூறுவது. அதற்காக இவர்கள் எதையும் செய்வார்கள். இது ஒரு நாட்டிருக்கோ , சமூகத்துக்கோ அல்ல – பொதுவாக பாரெங்கும் இது பரவி உள்ளது. தாங்கள் தான் மூத்தவர், மற்றவர் அனைவரும் தங்களுக்கு கீழ் நிலை என்று காட்டுவதில் இவர்களுக்கு ஒரு போதை. எனினும் சில பல சமயங்களில் உண்மை நம் கண் முன்னே இருக்கும்போது, நாம் அதை ஏற்கும் மனப்பக்குவம் கொள்ள வேண்டும். அப்படி பட்ட பதிவு தான் இது.

இப்படி அனைத்திற்கும் சாட்சியங்கள் தேடுவதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அதையும் சொல்ல வேண்டியது தான். இன்றைக்கு நமக்கு இருக்கும் அறிவுத் திறன், தொழில் நுட்பம் – இவையால் விளக்க முடியாத சில புதிர்களும் உண்டு. அப்படி ஒரு புதிரே நாம் இன்று பார்க்கும் கல் வட்டங்கள்.

கல் வட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், மலையடிப்பட்டி நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தோம். அப்போது, ஒரு பெயர் பலகை. மிகவும் பழக்கமான வண்ணம் – பலகை. பலகை மிகவும் சிதைந்து இருந்தாலும் பலமுறை பார்த்த ஒன்று என்பதால் உடனே வாகனதை நிறுத்தினோம்.

ஆம், தொல்லியல் துறை அறிவிப்பு / எச்சரிக்கை பலகை. ஆனால் அருகில், கோயிலோ , இடிபாடுகளோ எதுவும் கண்ணுக்கு தென்படவில்லையே என்று சற்று குழம்பி நிற்கும் பொது.

அதோ பின்னால் இருக்கிறதே, ஒரு அழகிய கல் வட்டம். சுமார் 1000 இருந்து 300 BCE ஆண்டு என்று சரித்திர கூறுகள் காலம் கணிக்கும், இவை நமது முன்னோர் இறந்தவரின் ஈம பொருள்களை தாழிகளில் புதைத்து , அதனை சுற்றி அடையாளமாக இந்த கற்களை வைத்தனர் எனக் கூறப்படுகிறது.

இதில் என்ன அதிசயம் என்றால், இந்த வகை கற்கள் அருகாமையில் எங்கும் இல்லை. இந்த வட்டங்கள் இருக்கும் இடத்தை விட்டு பத்து அல்லது இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்து வரப்பட்டவை. ஏதோ ஒரு மூதாதையர் வழிபாடு முறையை ஒட்டி உள்ளது.

இந்த அழகு – அந்த வட்டம் இன்றும் நம் முன்னே இருப்பது தான்.

அதை ரசிக்கும் அதே தருணத்தில், ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், இவை வெறும் கற்கள் தான். எந்த பெரிய வேலை பாடும் அவற்றில் இல்லை. உள்ளே கிடைத்த தாழிகளில் பொருட்கள் இருந்தன – உண்மை தான். ஓட்டில் சில எழுத்துக்கள் இருந்தன என்று இன்று கூட நாளேட்டில் செய்தி வந்தது , எனினும்…..

மீண்டும், நான் முதலில் சொன்னததப் போல, கண்டிப்பாக தென்னகத்தில் இரு முறையாவது பெரிய கடல் கொண்ட சரித்திரம் உள்ளது. பெரும் பகுதி அழிந்து, அதனால் முதல் இரு சங்கங்களும் களைந்து, பாண்டிய மன்னன் மதுரையை இன்றைய தென்னிந்திய நிலப் பரப்பின் நடுவில் நிறுவினான் என்றும் வழக்கில் உள்ளது. அப்படி இருப்பினும், எஞ்சி இருப்போர் திரும்பவும் இப்படி கற்கால / உலோக கால மனிதனை போல பின் தள்ளப்படுவரோ? இது ஒரு இடம் என்று அல்ல, தமிழகம் முழுவதும் இது போல உள்ளன. தொல்லியல் துறை சுட்டியில் சென்று பாருங்கள் !!!

ASI – Megalithic

இந்த புதிர் இன்னும் பெரியது. இது போன்ற கல் வட்டங்கள் உலகத்தில் பல இடங்களில் உள்ளன !! கூகுளாரைக் கேட்டு பாருங்கள்.

எனினும், நான் சொல்ல வந்தது என்ன வென்றால் ( சில நண்பர்கள் இதனை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை ) எனினும் நமது முன்னோர்கள் இந்த கற்களை புதுக்கோட்டையில் உருட்டி வட்டமிடும்போது எகிப்து பிரமிடுகள் புவியில் ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகள் நின்றுவிட்டன.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment