குகன் படலம் – தோலுடை நிமிர் கோலின் துழவிட

இந்த பதிவு சரியாக உருவாக ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டது. முதல் முதலில் சென்னையில் டிசம்பர் மாதத்தில் திரு சிவராமகிருஷ்ணன் அவர்களின் நிகழ்ச்சியில் இந்த புடைப்புச் சிற்பத்தை பார்த்தேன். குடந்தை நாகேஸ்வரன் கோயில் சிற்பம். அருமையாக விளக்கினார். பின்னர் மார்ச் மாதம் நானும் அரவிந்தும் படம் பிடிக்க குடந்தை சென்றபோது பலத்த மழை. எனினும் சிற்பத்துக்கு் தன்னை பற்றி கண்டிப்பாக பதிவு வர வேண்டும் எனும் ஆசை போலும். ஒரே மாதத்தில் ( சென்ற மாதம் ) முதலில் இரண்டு நண்பர்களிடம் இருந்து – திரு K.S. சங்கரநாராயணன் அவர்கள் மற்றும் திரு ஹரி கிருஷ்ணன் அவர்களிடம் இருந்தும் இதே சிற்பம் கிடைத்தது. பிறகு நண்பர் அர்விந்த் மற்றும் அசோக் இதற்கென்றே குடந்தை சென்று படம் எடுத்து தந்தனர். இவற்றை கொண்டு நாம் ஒரு மேலே செல்வோம்.

முன்னரே, புள்ளமங்கையில் இந்த சிற்பத்தை பார்த்தோம். எனினும் பாதி தான் எஞ்சி உள்ளது – சிமெண்ட் கொண்டு ஒரு சுவர் கட்டி சிதைத்து விட்டனர். ( தகவலுக்கு நன்றி சதீஷ் மற்றும் அர்விந்த்)

அருகில் சென்று சிற்பத்தை பார்க்கும் முன், முதலில் ராமாயண கதையை ஒருமுறைக்கு இரு முறை – வால்மீகி மற்றும் கம்பனின் வர்ணனைகளை பார்த்து விடுவோம். சிறு படலம் என்றாலும் மிக அழகிய தருணம். முதலில் குகன் என்றவுடனே நம் கண்ணில் வருவது எளிமையான படகோட்டி உருவம் தான். அவன் சாதாரண படகோட்டியா . மேலே படியுங்கள். வால்மீகி ராமாயணத்தில்

http://www.valmikiramayan.net/ayodhya/sarga52/ayodhya_52_frame.htm

sa tu raamasya vachanam nishamya pratigR^ihya cha |
sthapatistuurNamaahuya sachivaanidamabraviit || 2-52-5

ராமன் படகு கொண்டு வா என்றதும், குகன் தனது மந்திரிகளை கூப்பிட்டு இவ்வாறு கூறினான்


asya vaahanasamyuktaam karNagraahavatiim shubhaam |
suprataaraam dR^iDhaam tiirkhe shiigram naavamupaahara || 2-52-6

ஒரு அழகிய படகு, நல்லக் கட்டுமானத்துடன் விரைந்து செல்லும் படகு, நல்ல படகோட்டியுடன், இந்த கரைக்கு கொண்டுவாருங்கள் , இந்த நாயகனை அந்தப் பக்கம் எடுத்துச் செல்ல வேண்டும்

tam nishamya samaadesham guhaamaatyagaNo mahaan |
upohya ruchiraam naavam guhaaya pratyavedayat || 2-52-7

குகனின் கட்டளையைக் கேட்டவுடன், அவனது முதல் மந்திரி ஒரு அருமையான படகை கரைக்கு கொண்டு வந்தான்

tataH tam samanuj~naaya guham ikSvaaku nandanaH |
jagaama tuurNam avyagraH sabhaaryaH saha lakSmaNaH || 2-52-73

இவ்வாறு குகனுக்கு நல்ல அறிவுரை கூறிவிட்டு, அவனிடம் பிரியா விடை பெற்று, ராமன் தனது மனைவியுடனும், தம்பியுடனும் புறப்பட்டார்.

anuj~naaya sumantram ca sabalam caiva tam guham |
aasthaaya naavam raamaH tu codayaam aasa naavikaan || 2-52-80

குகனுக்கும் சுமந்திரனுக்கும் விடை கொடுத்துவிட்டு, ராமன் படகில் அமர்ந்து , படகோட்டியை புறப்படுமாறு உத்தரவிட்டான்

வால்மீகியில் அப்படி இருக்க, நாம் கம்பனின் வரிகளை பார்ப்போம்.

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/ramayanam/gugappadalam.html

குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்

‘விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். 34

பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும்,
சேலுடை நெடு நல் நீர் சிந்தினர், விளையாட;
தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா!

இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்

குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்

‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்;

இப்போது நாம் இரு படைப்புகளிலும் உள்ள வித்தியாசத்தை பார்க்கிறோம். கம்பனின் வர்ணனையில் குகன் ராமனோடு கங்கையை கடக்கிறான். பின்னரே ராமன் அவன் அன்பை கண்டு தன் தம்பியாக ஏற்கிறான்.

இரு வரிகளை நாம் மீண்டும் படிக்க வேண்டும் : தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா!

நிமிர் கோலின். அடுத்து நண்டு போல படகு சென்றது என்கிறார். அப்போது நண்டு என்பதை போல, பல பேர் துடுப்பு போடுவது போல காட்சி தெரிகிறது. இதை நமது சிற்பி , காட்சிக்கு மிகவும் தேவையானவை மற்றும் வைத்துக் கொண்டான் போல. எப்படி ? அப்போது நிமிர் கோலின் உதவி கொண்டு படகில் இருப்பது குகன்.

முழு பலத்தையும் கொண்டு ஊன்று கோலை பின்னால் தள்ளி, படகினை முன்னால் நகர்த்தும் காட்சி – இன்றைக்கும் இந்த பாணி இருப்பது அருமை.

அடுத்து படகில் இருக்கும் மற்றவர் – ராமர், சீதை, லக்ஷ்மணன்
( புள்ளமங்கையில் சிமெண்ட் போட்டு இளவலை மறைத்து விட்டனர் )

இரு சிற்பங்களில் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது. குகன், ராமர் திரும்பி நிற்பது மட்டும் அல்ல. படகை செலுத்துபவன் தவிர மற்றவர் நின்ற கோலத்தில் முழு அளவை பாருங்கள்.

புள்ளமங்கையில் – படகு மேல் சரியாக நிற்பது போல உள்ளது.


ஆனால் நாகேஸ்வரன் கோயில் சிற்பத்தில் நீளம் அடி படுகிறது.


எது சரியான காட்சி அமைப்பு. படகு நீரில் செல்லும்போது, சற்று உள்ளே ஆழ்ந்து அமுங்கி செல்லும் அல்லவா. இந்த படத்தில் ( பழைய படம் ) அந்தமான் தீவில் ஒரு மீன்பிடி படகு

இதில் படகின் நடுவில் இருப்பவர் உயரம், எப்படி படகின் உள் வாங்குதல் தெரிகின்றது, படகை செலுத்துபவன் எப்படி விளிம்பின் மீது ஏறி நிற்கின்றான் என்பதை பாருங்கள்.

இன்னொரு முக்கியமான குறிப்பு என்ன கிடைக்கிறது என்றால், இது பத்தாம் நூற்றாண்டு சிற்பம் என்பதால் இந்தச் சிற்பம் கூட ஒருவகையில் கம்பனின் காலத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கு உதவமுடியும் என்பதே…


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கம்பனுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ராமாயணம்

கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு முன்னரே தமிழகத்தில் ராமாயணம் பரவலாக இருந்ததா ? கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். வால்மீகியின் ராமாயணம் கண்டிப்பாக இருக்கும், ஆனால் தமிழில் முழுவதும் இருந்திருக்குமோ? அப்படி இருந்தால் அதற்கு சிற்பத்தில் வர்ணனை உண்டோ ? இந்தக் கேள்விகளை தான் நாம் இந்த பதிவில் அலசப் போகிறோம்.

கவிச்சக்ரவர்தியின் காலத்தை பற்றி மொழி ஆர்வலர்களும், சரித்திரி ஆர்வலர்களும் பல காலமாக விவாதித்து வருகின்றனர். கம்பர், இந்தப் புனிதப் பணியை பாரம்பரியத்துக்கு எதிராக, தனது வரிகளில் எந்த ஒரு அரசனை பற்றியும் பாடாமல், தனது நண்பர் புரவலர் சடையப்ப வள்ளலை மட்டும் ஆயிரம் செய்யுளுக்கு ஒருமுறை பாடியது இன்னொரு காரணம். இவற்றைக் கொண்டு அவரது காலத்தை நிர்ணயம் செய்வது கடினமாகி விட்டது. தற்போது அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சாட்சியம் எதுவும் இல்லாமல் விரிந்து கிடக்கிறது. பொதுவாக பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்ற கருதப்படுகிறது.

கம்பரின் ராமாவதாரம், வால்மீகி்யின் வடமொழி காவியத்தின் கருவை கொண்டாலும், அவர் அதனை அதன் மொழி பெயர்ப்பாக அதை இயற்ற வில்லை. தனது தமிழ் புலமையை முழுவதுமாக பயன் படுத்தி, காவியத்தின் பல்வேறு இடங்களில் சிறு மாற்றங்களை செய்து, அப்போதைய காலத்திற்கு ஏற்ப நயத்தை மாற்றி அவர் தனது படைப்பை தனி தமிழ்க் காவியமாகவே மாற்றி விட்டார். ஆனால் நாம் இன்று பார்க்கும் அப்படிப் பட்ட ஒரு மாற்றம் அவருடையதா , அல்லது வாட்டர வழக்காக வந்த ஒன்றை அவர் மேலும் அழகு பட பாடினாரா ?

இதனை பற்றி நண்பர்களுடன் பலமுறை விவாதித்ததுண்டு – . நன்றி திரு திவாகர், திரு ஹரி்கி்ரிஷ்ணன், ஷங்கர் ( பொன்னியின் செல்வன் குழுமம் ), திரு அண்ணா கண்ணன் மற்றும் கீதா அம்மா – பல்வேறு விதங்களில் இந்த பதிவுக்கு உதவியதற்கு. நன்றி திரு அர்விந்த் ( படங்கள். )

இந்த சிற்பம், புள்ளமங்கை பிரம்ம புரீ்ஸ்வரர் ஆலயத்தில் இருப்பது, இதன் கட்டுமான முறையை கொண்டும், அதில் இருக்கும் முதலாம் பாரந்தக சோழரின் கல்வெட்டுகளை கொண்டும் இதன் காலம் 907 to 953 CE என்று நிர்ணயிக்கப் படுகிறது .

சிற்பத்தை அருகில் சென்று பார்ப்பதற்கு முன்னர், இரு காவியங்களில் இந்த நிகழ்வை கையாண்ட முறையை படிப்போம். அஹல்யையின் சாபமும் சாப-விமோ்சனும்

அஹல்யை -விக்கி

அஹல்யை பிரம்மனால் உலகிலேயே மிகவும் அழகு பொருந்திய மங்கையாக படைக்கப்பட்டாள். அப்போதே அவள் மீது இந்திரனுக்கு ஒரு கண். எனினும் கௌதம முனிவரை அஹல்யையை மணந்ததால். மாற்றான் மனைவி என்றாலும் இந்திரனின் சபலம் குறையவில்லை. அவளை அடைய திட்டம் தீட்டி , கௌதம முனிவரை போலவே தன்னை உருமாற்றி அவளிடம் சென்றான். வந்திருப்பவன் தன மணாளன் அல்ல என்று தெரிந்தும் அஹல்யை தனது அழகின் மீது இருந்த ஆனவத்தாலோ , தேவர்களின் அரசனே வந்திருக்கிறான் என்பதாலோ தவறு செய்கிறாள்…

சரி, இதனை வால்மீகி எவ்வாறு கூறுகிறார் என்பதை பார்ப்போம்.

tathaa shaptvaa ca vai shakram bhaaryaam api ca shaptavaan |
iha varSa sahasraaNi bahuuni nivaSisyasi || 1-48-29
vaayu bhakSaa niraahaaraa tapyantii bhasma shaayinii |
adR^ishyaa sarva bhuutaanaam aashrame asmin vaSisyasi ||

இப்படி பட்ட தவறை செய்ததனால் நீ ஆயிரம் ஆண்டுகள் உண்ண உணவின்றி, காற்றை மட்டுமே சுவாசித்துக்கொண்டு, யாராலும் பார்க்க முடியா வண்ணம், இந்த ஆசிரமத்தை சுற்றியே காற்றில் கரைந்து புழுதி போல இருப்பாயாக !!

yadaa tu etat vanam ghoram raamo dasharatha aatmajaH |
aagamiSyati durdharSaH tadaa puutaa bhaviSyas

தசரதனின் புதல்வனான ராமன், இந்த வனத்திற்குவரும்போது, உனது பாவம் போய் சாப விமோசனமும் பெறுவாயாக


tasya aatithyena dur.hvR^itte lobha moha vivarjitaa |
mat sakaashe mudaa yuktaa svam vapuH dhaarayiSyasi

ராமனை போற்றி வழி படும்போது உனது பாவம், பித்து, பேராசை அனைத்தும் விலகி, உனது சுய உருவை நீ மீண்டும் பெற்று, என்னுடன் வந்து மீண்டும் மகிழ்ச்சியான வாழ்கையை பெறுவாய், என்று சபித்தார் கௌதம முனிவர். .

இதில் நாம் கவனிக்க வேண்டியது எங்குமே கல்லாய் கிடவது என்று அவர் கூறவில்லை.

இப்போது கம்பர் இதை கையாண்ட முறையாய் பார்ப்போம்.

பரிபாடல்


‘எல்லை இல் நாணம் எய்தி.
யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
புரந்தரன் போய பின்றை.
மெல்லியலாளை நோக்கி.
‘’விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி’’ என்றான்;
கருங்கல் ஆய். மருங்கு வீழ்வாள்

தன் உடம்பு முழுவதும் சாபத்தால் கெட்டு விட்டதனால், இந்திரன் அளவில்லாத,நாணத்தை அடைந்து, தனது நிலையைப் பார்த்தவர்கள். கேட்டவர்கள், எல்லோர்க்கும்,
பரிகாசச் சிரிப்பு வந்தெய்தும்படி, தனக்கு நேர்ந்த பழியோடும் வானுலகத்திற்குச் சென்ற பின்பு, அம் முனிவன் தன் மனைவியைப் பார்த்து, விலைமகள் ( வேசியைப்) போன்ற நீயும் கல் வடிவம் போல ஆகுக என்று சபித்தான்.


‘’பிழைத்தது பொறுத்தல் என்றும்
பெரியவர் கடனே; அன்பால்.
அழல் தருங் கடவுள் அன்னாய்!
முடிவு இதற்கு அருளுக!’’ என்ன.
‘’தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ. இந்தக்
கல் உருத் தவிர்தி’’ என்றான்.

அவ்வாறு விழுகின்ற அகலிகை அம் முனிவனை நோக்கி, தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்தும், புன் சிரிப்பிலிருந்தும் நெருப்பைச் சிதறறும் கடவுள் அன்னாய், உருத்திர மூர்த்தியை ஒத்த முனிவனே! சிறியோர் செய்த பிழையைப் பொறுப்பது, எக்காலத்தும் பெரியோர்களின் கடமையே ஆகும் என்று கூறுவர். இச் சாபத்திற்கு ஒரு முடிவை அருள்வீராக என்று வேண்டி நிற்க, அதற்கு
இரங்கிய அம் முனிவன், ஒலிக்கும் குளிர்ந்த பூமாலையை அணிந்த தசரதராமன் என்பான் திருவடித் தூள் உன்மேல் படியும் போது, இந்தக் கருங்கல் வடிவம் நீங்குவாய்
என்று (சாபம் நீங்கும் வழியும்) அருளினான்.

இந்த இடத்தில தான் நாம் இரு காவியங்களில் உள்ள வேற்றுமையை ஆராய வேண்டும். வால்மீகி அஹல்யை காற்றோடு கலந்து எவராலும் அவள் அழகை பார்த்து ரசிக்க முடியா வண்ணம் , அவளது அழகின் மேல் அவளுக்கு இருந்த ஆணவத்தை இழக்குமாறு காட்சியை எடுத்துச் செல்கிறார். . கம்பனோ உணர்ச்சிவசப்பட்டு தவறிட்ட அஹல்யையை கல்லாக மாற்றி, உணர்ச்சியற்ற நிலையில் வாடும் வண்ணம் சபிக்கப்பட்டதாக காட்சியை அமைக்கிறார்.

இது கம்பனின் கற்பனையா? இல்லை இந்த வழக்கு தமிழ் மண்ணில் அவருக்கு முன்னரே இருந்ததா? ( நன்றி திரு ஹரிக்கிர்ஷ்ணன் அவர்களது பதிவு )

சங்கம் பாடலில் அஹல்யை

பரிபாடல் காலம்

சங்க காலத்து நூலானா பரிபாடலில் வரும் வரிகளில் அஹல்யையின் சாபம் இடம் பெறுகிறது.

பரிபாடல் 19 , முருகனை பற்றி வரும் பாடல்.அதில் ஒரு பகுதி

இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது. என்று உரை செய்வோரும்:
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்
சோபன நிலையது–துணி பரங்குன்றத்து
மாஅல் முருகன் மாட மருங்கு.

(Lines 50-57)

பக்தர்கள் ஓவியக் காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, ஒருவர் ரதி மன்மதனின் ஓவியத்தை பார்த்த பின், இன்னொரு ஓவியத்தில் – இந்த பூனை இந்திரன் (இந்திரன் பூசை) , இவள் அஹல்யை (இவள் அகலிகை), சினத்தில் சென்ற கௌதமன் (இவன் சென்ற கவுதமன்) , கல்லை மாறிய அஹல்யை (சினன்உறக் கல்லுரு ஒன்றியபடி இது‘) என்று பரங்குன்றம் செல்லும் யாத்ரிகள் பேசுவது போல வருகிறது பாடல்.

7029

இப்போது நாம், மீண்டும் சிற்பத்திற்கு வருவோம். சிறு சிற்பம் தான். புள்ளமங்கை, எனினும் அதில் நாம் மூன்று நபர்களை தெளிவாக பார்க்க முடிகிறது. லக்ஷ்மணன் , ராமன் , மற்றும் அஹல்யை.

7023
7019
7032

இப்போது பதிவின் முக்கியமான தருணம். ராமனின் காலை பாருங்கள். அப்படியே கம்பனின் அற்புத வரிகளை படியுங்கள்.எத்தனை வண்ணங்கள்.. வண்ணங்களா.. இல்லை கம்பனின் எண்ண ஜாலங்களா..

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

இதை மேலும் விவரிக்க எனக்கு தேர்ச்சி இல்லை – தேவையும் இல்லை. ராமன் கால் பட்டு உயிர்ப்பிக்கும் அஹல்யையை சிற்பத்தில் பாருங்கள்.

7035

புள்ளமங்கை விமான சிற்பம் கண்டிப்பாக 953 CE க்கு முன்னர் செதுக்கப்பட்டது. நிச்சயமாக அது அஹல்யை கல்லாய் மாறுவதும், ராமனின் கால் ( அல்லது கால் தூசி) – சிற்பத்தில் குதிக்கால் ஊன்றி பாதம் கல்லின் மேல் படும்படி வடித்துள்ள திறமையை பாருங்கள் , அப்படி கால் பட்டு சாப விமோசனம் பெரும் அஹல்யை இரு கை கூப்பி பக்தி பரவசத்துடன் தன எழில் உருவம் பெற்று , ராமனை வணங்கும் வண்ணம் வடித்ததும் அருமை.
அது சரி கம்பன் சொல்லும் கால் வண்ணத்தை பார்த்துவிட்டோம் – அது என்ன கை வண்ணம். அதற்கும் சிற்பம் உண்டோ. விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்

புள்ளமங்கையின் ஈர்ப்பு நம்மை அவ்வளவு சுலபத்தில் அங்கிருந்து வெளிவர விடை தர மறுக்கிறது. அதனால் இன்று மீண்டும் அங்கிருந்து ஒரு சிற்ப விருந்து. நன்றி திரு அர்விந்த் அவர்களே. இந்த பதிவின் மூலம் வாசகர்களுக்கு இன்னும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அடுத்த முறை இத்தளங்களுக்கு செல்லும் பொது அங்கு நான் சென்றேன் என்பதற்கு அத்தாட்சியாக சிற்பங்களின் முன்னர் நின்று படம் எடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு சில நிமிடங்கள் எங்களுடன் உங்கள் படங்களை பகிரும் நோக்கத்தோடு, சிற்பங்களின் கலைத் திறனை வெளிக் கொணரும் பாணியில் படங்களை எடுத்து உதவுங்கள். இப்போது முன் போல படம் எடுக்க பணம் விரயம் செய்யவேண்டிய அவசியம் இல்லை, மின்னணு புகைப்படக் கருவி வந்துவிட்டதே.படச் சுருள் தேவை இல்லை – மற்றும் எடுத்ததை அப்போதே பார்த்து பகிரலாம். இவ்வாறு படம் எடுக்க சில நொடிகள், நடுக்கம் இல்லாத கை, அருகில் இருக்கும் சாமானிய பொருள்கள் மற்றும் நல்ல உள்ளம் மட்டுமே.

திரு அர்விந்த் அவர்கள் எப்படி படம் எடுத்துள்ளார் பாருங்கள்.

இல்லை, இது அலை பேசி / கை பேசிக்கான விளம்பரம் இல்லை. எதற்காக இந்த படம் என்பது இந்த அற்புத சிற்பத்தின் பதிவின் முடிவில் விளங்கும்.

அர்தனாரி – உமை ஒரு பாகன், அம்மையும் அப்பனும் ஒன்றாய் காட்சி அளிக்கும் திருவுருவம். பெண்கள் ஆண்களுக்கு சரி சமானம் என்றும், ஆணின் சரி பாதி என்றும் உலகுக்கு உணர்த்தும் உன்னத கோலம். இந்த வடிவத்தை கல்லில் அற்புதமாக செதுக்கி உள்ளான் சிற்பி.

உமையொருபாகன் தேவார வரிகளில் பல முறை வந்தாலும், அவனது எழில் மிகு தோற்றத்துடன் நந்தி இணைந்து விடை வாகனாக குறிப்பிடும் பாடல் இதோ

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=20850&padhi=085&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும்.

இந்த சிற்பத்தின் அழகு அதை வடித்த சிற்பியின் கலை திறனைப் போற்றுகிறது. ஒரு புறம் ஆணின் வீரியம், அதனுடன் பெண்மையின் நளினத்தை இணைக்க வேண்டும், வெளி வரும் சிற்பம் இரு பாதிகளை ஒட்டியது போல இல்லாமல், பார்ப்பதற்கு ஒரு சிற்பம் போல இருக்க வேண்டும்

சிற்பத்தின் இரு பாதிகளையும் தனித்தனியாக பார்ப்போம். ஆண் பெண் என பார்த்தவுடனேயே நமக்கு உணர்த்தும் வகையில் நேர்த்தியாக செதுக்கிய அழகு அருமை

ஆண் பெண் என்ற இரு அம்சங்களையும் அவன் படித்து இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை உரிய வகையில் மிகைப் படுத்தி கல்லில் வடித்தான் என்பதை, அந்த இடையை பார்த்தாலே தெரிகிறது.

ஆண் என்பதனால் பறந்து விரிந்த தோள்கள், அதே உமைக்கோ கொடியென வளைந்து தவழும் வண்ணம் வடித்துள்ளான்.

அவன் கல்லில் இட்ட கோடுகளை சற்று மிகை படுத்தி நாம் ரசிக்க காட்டியுள்ளேன்.

அடுத்து ஈசன் கம்பிரமாய் நிற்கும் பாணி, அந்த பக்கம் உமையோ நளினமே உருவான தோற்றம். நந்தி பின்னால் – அதையும் மிக நேர்த்தியாக ( கழுத்தில் தொங்கும் சதை / தோல் ) வடித்துள்ளான் சிற்பி

அதனுடன் நமது பதிவு முடியவில்லை. அலை பேசி வரவேண்டுமே, இதோ..

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு சிற்ப விருந்து

நண்பர்களே, இன்றைக்கு நமக்கு ஒரு சிற்ப விருந்து. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்த இரு நண்பர்கள் – இல்லை இல்லை அவர்களை அங்கு சென்று படம் எடுத்து வாருங்கள் என்று தூண்டி இப்போது அதன் பலனை உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். புள்ளமங்கை ஒரு கலைப் புதையல். ஆனால் புதையல் என்றாலே புதையுண்டு பல காலம் நினைவில் இருந்து விலகி பின்னர் கண்டுபிடிக்கப்படுவது போல, இன்னும் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷம் புள்ளமங்கை. அதன் அருமைகளை இந்த தொடரின் மூலம் வெளியிடுகிறோம்.

பொதுவாக இடுகைகளில் படங்களை தொலைவில் இருந்து இட்டு மெதுவாக அருகில் செல்வோம். ஆனால் இந்த பதிவுக்கு அதை சற்றி தலைகீழாக மாற்றி, முதலிலேயே அருகில் செல்வோம். படித்து முடித்தவுடன் ஏன் என்று உங்களுக்கு புரியும்.

இன்று நாம் பார்கவிருப்பது நான்கு சிற்பங்கள். கந்தன் பிறப்பை கல்லில் காட்சியை வடிக்கும் சிற்பங்கள், மற்றும் சில யாளிகள்.

எனக்கு பிடித்தமான யாளிகளுடன் துவங்குகிறேன்.

அற்புத வடிவங்கள், இவ்வளவு திறமை கொண்டு இவற்றை வடித்தான் சிற்பி என்றால், இவை வெறும் அலங்கார மதிப்புக்காகவா என்ற ஐயம் வருகிறது?

இன்னொரு யாளி ( கொம்புடன் இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் வ்யாலா என்கிறார்கள் )


என்னடா, முருகனின் பிறப்பு என்று சொல்லி மீண்டும் யாளிகளை வலம் வருகிறானே என்று எண்ண வேண்டாம். போகப் போக உங்களுக்கே புரியும் . சரி இதோ சிற்பங்கள்.


முதல் வடிவம். உமையும் ஈசனும் ஆடும் அற்புத நடனத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கும் காமன் மற்றும் ரதி. இருவர் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம். ஆடல் வல்லானின் ஆட்டத்தின் ஆண்மை கலந்த தோரணை, உமையின் வடிவத்தில் பெண்ணிற்கே உரிய நளினம்.

அடுத்த வடிவம், உமையை தன்பால் ஈர்க்கும் ஈசன்.

வெட்கப்படும் பாவையாய் உமை, கடைக்கண் பார்வையால் தலைவனை பார்க்கும் வண்ணம் – ஆஹா, ஈசன் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்.

அடுத்து, இன்னும் நெருங்கி விட்டனர். தனது ஆசைக்குரிய பார்வதியை அன்புடன் சிவன் அணைக்கும் காட்சி.

இந்த சிற்பம் வடித்த சிற்பிக்கு உள்ள அறிவுக்கூர்மையை பாருங்கள். முதல் பார்வையில் ஈசனுக்கு இரண்டு வலது கரங்கள் இருப்பது போல வடித்தாலும் – ஒரு கை பின்னால் அமர்ந்திருக்கும் நந்தியின் மேல் , இன்னொரு கரம் உமையை அன்புடன் அணைப்பது போல இருந்தாலும், சிற்பத்தை இன்னும் ஒரு முறை பாருங்கள்.

கல்லில் ஈசனின் கை உயிர் பெற்று, நகர்ந்து உமையைப் பற்றுவது போல காட்டவே சிற்பி அப்படி வடித்தான் போல !!

அது சரி, அந்த முதல் ஸ்பரிசத்திற்கு உமையின் பதில். அப்பப்பா, நாணம் என்றால் இது தானோ !!!

அதனுடன் நிறுத்தவில்லை சிற்பி, நந்தியை கொஞ்சம் பாருங்கள்.

மேலே இருபுறமும் கணங்கள், கிழே பணிப்பெண் என்று பின்னுகிறான் சிற்பி.

நான்காவது சிற்பம். முருகன் பிறப்பு.

புரியவில்லையா. ஈசனின் மடியில் ஒரு குழந்தை, அப்பாவை செல்லமாக கை நீட்டி ஆசையாய் கன்னத்தை தொடுகிறது. கார்த்திகை பெண்கள் ஆறு, ஐவர் கையில் மற்ற ஐந்து குழந்தைகள்.

சிற்பங்கள் மற்றும் படங்கள் தரம் குறித்து சிலர் அதற்குள் கூறும் மறுமொழிகள் கேட்கிறது ( நல்லவை கெட்டவை இரண்டும் !!)

ஒரு நிமிடம் பொறுங்கள். காரணத்தை படங்கள் மூலமே சொல்கிறேன்.

இன்னும் முடியவில்லை

இன்னும் தொலைவில் இருந்து, இப்போது புரிகிறதா ? இந்த சிறிய சிற்ப புதையல்களை நாம் முதல் பார்வையில் விட்டு விடக் கூடும்.

நான் ” சிறு ” என்று பதிவில் சொன்னேனா ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

யார் படைப்பாளி , யார் படைப்பு

இன்றைக்கு நாம் மீண்டும் புள்ளமங்கை பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் செல்கிறோம். சிற்ப புதையல்கள் நிறைந்த ஆலயம், ஒவ்வொரு முக்கிலும் சிற்பம். எங்கும் சிற்பம், எதிலும் சிற்பம். சுற்றி சுற்றி நம்மை திணற வைக்கும் கலை பெட்டகம் . அவற்றில் ஒரு அற்புத சிற்பக் கொத்தை நாம் இன்று சதீஷின் உதவியுடன் பார்க்கிறோம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் போது – யார் படைப்பாளி யார் படைப்பு. புரியவில்லையா . மேலும் படியுங்கள்.

லிங்கோத்பாவர் சிற்பம். சைவ ஆலயங்களில் ஆகமங்களில் முக்கிய இடம் பெற்று விமானத்தின் பின்னால் இடம் பிடித்த சிற்பம்.

அதற்கு முன்னர், யாரையும் புண்படுத்த இந்த பதிவை இடவில்லை, சிற்பத்தை சிற்பமாக பார்ப்பதே எங்கள் நோக்கம். அதற்கு எவ்வளவு தூரம் கதை வேண்டுமோ அதை மட்டுமே இங்கு இடுகிறோம்

இந்த சிற்பக் கொத்தில் பார்க்க நிறைய உள்ளது

அவற்றை முறையே பிரித்து ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

முதலில் லிங்கோத்பாவர்

ஒருநாள் நான்முகனுக்கும் ( அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் ) திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவ்வாறு அவர்கள் வாதமிட, அங்கே தீ பிழம்பாகிய ஜோதி வடிவம் ஒன்று எழுந்தது. அதன் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று ஒரு அசரீரி வானத்தில் கூறியது. பிரம்மா அதன் முடியைக் காண அன்னமாகி மேலே பறந்து சென்றார் . திருமாலும் வராக(பன்றி) வடிவில் பூமிக்குள் சென்று அடியை தேடினார். மிகவும் முயன்றும் பல காலம் கழிந்தும் இருவருக்கும் எந்த பலனும் கிட்டவில்லை . பறந்து சென்ற பிரம்மா வழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ உச்சியிலிருந்து தான் புறப்பட்டு பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறியது. உடனே போட்டியில் ஜெயிக்க குறுக்கு வழி வகுத்த பிரம்மா தாழம்பூவைத் தன் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலம் முயன்றும் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார்.

அப்போது அதில் இருந்து வெளி வந்தார் சிவன், தங்கள் அகந்தையால் எதிரில் இருப்பது ஈசன் என்றும், அவன் ஆதி அந்தன் என்பதையும் உணராதது பிழை என்று ஒப்புக்கொண்டனர். எனினும் பொய் சொன்ன பிரம்மாவின் தலையை கொய்தான் ஈசன். மேலும் அவருக்கு இனி தனி வழிபாடு இல்லை என்றும், தாழம் பூ இனி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பூவல்ல என்றும் கூறினார். அவ்விருவர் அகந்தையையும் போக்கி சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

இரண்டாம் திருமுறை – பாடல் எண் – 9

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=2&Song_idField=2025009&padhi=025

மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே.

திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

சரி, இப்போது சிற்பம்.

மேலே பறக்கும் பிரம்மா , கிழே பூமியை குடையும் வராஹம். நடுவில் சிவன் ( மிகவும் சிதைந்த நிலையில்) பிளந்துக்கொண்டு வெளி வருகிறார்.

இந்த சிற்பத்தின் இரு புறமும் பிரம்மன் மற்றும் திருமாலின் அற்புத சிற்ப வடிவங்கள்

கதையில் சற்று தாழ்ந்தாலும், பிரம்மனின் முகத் தோற்றம் அப்பப்பா அபாரம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் பொது – யார் படைப்பாளி யார் படைப்பு. தலைப்பு புரிந்ததா .

பொறுங்கள், இது ஒன்றும் நாடகம் அல்ல, தலைப்பு வந்தவுடன் முடிய, இன்னும் உள்ளது.

மிக அரிய சிறிய சிற்பங்கள்.

நாம் முன்னரே கங்கை கொண்ட சோழபுரத்தில் சண்டேச அநுகிரஹ முர்த்தி வடிவம் பார்த்தோம். இப்போது அதன் எறும்பு அளவு சிற்பம். ஈசன் அன்புடன் சண்டேசரின் தலையில் பூ சுற்றும் காட்சி.


அடுத்து, ஆதி சேஷனின் மடியில் துயிலும் திருமால், தேவி மற்றும் ஒருவர்.

அடுத்து, சிவன் பார்வதி – பார்ப்பதற்கு கங்காதரா வடிவம் போல உள்ளது
அடுத்து மூன்று பேர், யார் இவர்கள்.

அடுத்து மிக அற்புத மகா சதாசிவ வடிவம் ( இல்லை பிரம்மனா)

முடிவில் ( இல்லை இன்னும் யாளி வரிசை உள்ளது – அடுத்த பதிவில் பார்ப்போம் ) –

ஆஹா , அம்மை அப்பன் , கீழே ஒரு பூத கணம், எப்படி தான் உயிரோட்டத்துடன் வடித்தார்களோ, அம்மை அப்பன் அமர்ந்திருக்கும் ( ஒரு காலை மடித்து ) தோரணை அபாரம். இந்த சிற்பங்களை இன்னும் போற்ற முடிவில் சதீஷ் டச்

அருகில் இன்னொரு சிற்பம் – அதன் அளவை குறிக்க கார் சாவி …

படங்கள்: திரு சதீஷ், மற்றும் வரலாறு.காம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

புல்லரிக்கும் புள்ளமங்கை அர்த்தநாரீஸ்வர கோலம் – திரு சதிஷ் அருண்

இன்றைக்கு நமது குழுவில் ஒரு புதிய நபர் வருகை / சேர்கை – ஒரு கலை ஆர்வலர் – இன்று தன் ரசனையை நம்முடன் முதன்முறையாக பகிர்கிறார். திரு சதிஷ் குமார் அருணாசலம் அவர்கள், தற்போது அமெரிக்காவில் கணிபொறி நிபுணராக பணிபுரயும் இவர் தான் புள்ளமங்கை சென்ற அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். இனி திரு சதீஷ் அவர்கள்

இதுவரை விஜய் அவர்களின் படைப்புகளை படித்தவர்களுக்கு, புள்ளமங்கை கோயில் நன்கு பரிச்சயமாகி இருக்கும். புள்ளமங்கை ஒரு கலைப்பெட்டகம். 1000 ஆண்டுகளுக்கு முன் சிற்பிகள் உளியை கொண்டு செதுக்கிய அற்புத ஓவியங்கள். நம் கை விரல்களை அகட்டினால், கட்டை விரல் நுனியிலிருந்து சுண்டு விரல் நுனி வரை உள்ள அளவில் பல அற்புத சிற்பங்களை தன்னகத்தே கொண்டுள்ள புள்ளமங்கை கோயில் பார்க்கப் பார்க்க திகட்டாதது.

புள்ளமங்கையை நினைவுக்கு கொண்டுவர – கீழே உள்ளவரை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.

இங்குள்ள கை அளவு சிற்பங்கள் சிறப்பு மிக்கவை என்றாலும், இந்த தரவில் விமானத்தின் மீதுள்ள ஒரு அழகோவியத்தைப் பார்ப்போம்.

தாயே மூகாம்பிகே என்ற படத்தில் இளையராஜா அவர்கள் பாடிய ஜனனி ஜனனி பாடல், எனக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அதில் வரும் வரிகள் –

“சதுர்வேதங்களும், பஞ்ச பூதங்களும், ஷண்மார்க்கங்களும், சப்த தீர்த்தங்களும், கொண்ட நாயகனின், குளிர் தேகத்திலே, நின்ற நாயகியே, இட பாகத்திலே.”

திருஞானசம்பந்தர், திருச்சிராப்பள்ளியில் அருளிய பதிகத்தில்,

“நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே” (தேவரம் 1.98.1)

(நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும். – நன்றி – www.thevaaram.org)

என்றும்,

அப்பர், திருகோடிகாவில் ஈசனை,

“பூணர வாரத் தானே புலியுரி யரையி னானே
காணில்வெண் கோவ ணம்முங் கையிலோர் கபால மேந்தி
ஊணுமோர் பிச்சை யானே யுமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே” (4.51.5)

(கோடிகா உடைய தலைவன், வளைந்த பாம்பை மாலையாகப் பூண்டு புலித்தோலை இடையில் உடுத்து வெண்கோவணம் தரித்து, கையில் மண்டையோட்டை ஏந்தி, தாருகாவனத்துப் பெண்களைத் திருத்த உணவு கேட்டு பிச்சாண்டியாய் – பிச்சாண்டிவந்தவனை பார்வதிபாகனாய் குறுகிய வெள்ளிய பிறையைச் சூடியவனாய் உள்ளான். நன்றி – www.thevaaram.org )

என்றும் பாடுகிறார்கள். இப்படி பலரும் பாடிய ஈசனின், ஒரு அழகிய கோலத்தைத்தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறோம்.

என்ன கோலம் என்று ஊகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆம், அர்த்தநாரீஸ்வரன் என்றும், அம்மையப்பன் என்றும், உமை ஒரு பாகன் என்றும், பல பெயர்களில் அழைக்கப்படும் கோலம்தான் அது.

ஒரு பாதி ஆண், மறு பாதி பெண் என்று தன் உடம்பில் சரி பாதியை உமைக்கு கொடுத்த ஈசனின் கோலம்தான் உமை ஒரு பாகன். இதன் புராணத்தை அறிய, இந்த சுட்டியை பாருங்கள்

இப்பொழுது, சிற்பத்தைப் பார்ப்போம்.


இடது பக்கம் பார்த்தால், பெண்மையின் மிளிர்வு.

வலது புறம் பார்தால், ஆண்மையின் கம்பீரம். ஒரே முகத்தில், இப்படி பெண்மையையும், ஆண்மையையும் ஒரு சேர கொணர்ந்த அந்த சிற்பியை என்னவென்று பாராட்டுவது?

டாக்டர் கலைக்கோவன் அவர்கள், ‘சோழ சிற்பிகள், உடல் கூறுகளை
(anatomy) நன்கு அறிந்தவர்கள்’ என கூறக்கேட்டிருக்கிறேன். இந்த சிற்பமும் அதற்கு சான்று.

அம்மையின் சிற்றிடையும், ஒய்யாரமாய் நிற்கும் பாங்கும், அப்பனின் திண்தோள்களும், கம்பீரமாய் ரிஷபத்தில் மீது சாய்ந்திருக்கும் கோலமும் ஒருங்கே நம் கண் முன் கொண்டு வந்த சிற்பி மறைந்த பின்னும், அவன் விட்டு சென்ற கலைப்பொக்கிஷம் இன்றும் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

இந்த கலைப்பெட்டகத்தை வரலாறு (www.varalaaru.com) குழுமத்துடன் பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. விமானத்தின் மீது ஏறி அர்த்தநாரீஸ்வரனை பார்க்க, அங்கு இருந்த ஒரு கோயில் பெரியவர் ஏணி தந்து உதவினார். அவரே, நாங்கள் சிற்பங்களை ஆவலாய் பார்ப்ப்தை கவனித்துவிட்டு, விமானத்தின் மீதுள்ள சிற்பத்தை பார்க்க ஏணி கொண்டு வந்து கொடுத்தார். இருட்டும் வரை பார்த்து மகிழ்ந்துவிட்டு, இரயிலுக்கு நேரமாகிவிட்டதால் புறப்படும் பொழுது, அவருக்கு மனமார நன்றி கூறிவிட்டு அவரிடம் அவர் பெயரைக் கேட்டோம். அவர் பெயர் ஏற்படுத்திய புல்லரிப்பு, இரவு இரயில் புறப்பட்ட பின்பும் குறைய வில்லை. ஏனெனில் அவ்ர் தன் பெயர் ‘அம்மையப்பன்’ என்று கூறினார்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

குட்டி செய்யும் லூட்டி – புள்ளமங்கை புலி தொப்பை

நாம் இதற்க்கு முன்னர் இரு இடங்களில் நம் நண்பர் புலி தொப்பையை சந்தித்தோம். மல்லை மற்றும் ஸ்ரீநிவாசநல்லூர் சிற்பங்களில் நம்மை மகிழ்வித்த இவர் இன்று புள்ளமங்கை பிரம்மபுரீர்ஸ்வரர் கோயிலில் தன் கூட்டாளிகளுடன் நம்மை அசர வைக்கிறார்.

சரி, உங்கள் கவனிப்பு திறனை சோதிக்கலாம். இந்த படத்தில் நம் நண்பரை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்

முடியவில்லையா ? சரி இந்த படத்தில் முயற்சி செய்யுங்கள்

என்ன ! இன்னும் முடியலையா ? இப்போது

சரி விடுங்க – இப்போ பாருங்க நம் குட்டி செய்யும் லூட்டி – அதுவும் என்ன அருமையான புலி தொப்பை – இருந்தும் சற்று சோகமாகவே உள்ளார் நம் நண்பர்

இந்த காலத்தில் கட்டும் கோயில்களிலும் வெளி சுவரில் பூத கணங்களை வைகிறார்கள் – ஆனால் அவை அனைத்தும் ஒரே முக பாவத்துடன், பெரும்பாலும் வருவோரை முறைத்து கொண்டு இருக்கும். சோழர் கால பூத கணங்களை கொஞ்சம் பாருங்கள் – ஒவ்வொன்றின் உடல் அமைப்பு என்னமோ குள்ளனாக ( அதில் கூட சிற்பியின் திறமையை பாருங்கள் – கை , கால் என குள்ளர்களையும் தத்ரூபமாக செதுக்கி உள்ளான் ) இருந்தாலும் , அவற்றின் முக பாவம் – அவை நிற்கும் அலட்சிய தோரணை, உண்மையிலேயே நம்மை நக்கல் அடிப்பது போல உள்ளது.

ஒன்று பாருங்கள் – நம் புலி தொப்பை அனைவருக்கும் இல்லை – அது ஒரு பூத கணத்தின் அமைப்பு – அவர் பெயர் என்ன – ஆராய வேண்டும். அடுத்து முறை நீங்கள் புராதன இடங்களுக்கு செல்லும் பொது இது போல புலி தொப்பை சிற்பங்கள் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். அதே போல மற்ற பூத கணம் சிற்பங்களையும் பார்த்து மகிழுங்கள்.

படங்களுக்கு உதவி – காத்தி மற்றும் வரலாறு . காம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தந்தையை கண்டு பயப்படும் முருகன் -புள்ளமங்கை

இன்று ஒரு அற்புத சிற்பம். (நன்றி சந்திரா) புள்ளமங்கை கோவில் சிற்பம். (பெரிய அளவில் இந்த சிற்பம் பல இடங்களில் உள்ளது – தஞ்சை அருங்காட்சியகத்தில் ஒரு மிக முக்கியமான சிற்பம் – அதனைப் பின்னர் பார்ப்போம்). பழைய பதிவை நண்பர் சதீஷ் அவர்களின் படங்களை கொண்டு மீண்டும் இடுகிறேன்.

இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க அதன் அளவை முதலில் பார்க்க வேண்டும் , அது எங்கே உள்ளது என்பதும் மனதில் கொள்ள வேண்டும்.

முதலில் சற்று தொலைவில் இருந்து .


கணினி கொண்டு கொஞ்சம் வெளிச்சம் போடுவோம். இப்போது தெரிகிறாதா?

சரி, இப்போது கதை , நான் சொல்வதை விட அருமையான தேவாரப் பாடல் குறிப்பு தருகிறேன்.

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.10.8

ஒளிறூபுலி அதள்ஆடையன் உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.

ஒளி செய்யும் புலித் தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

கஜமுகாசுரன் – அசுரன். மக்களுக்கு தீங்கு செய்தான். ஈசன் அவனை வைத்தான்.
எவ்வாறு – சிற்பத்தை பாருங்கள்.

சூலம் கொண்டு குத்தி, அவன் தலையை காலின் அடியில் இட்டு , அதன் மேல் ஆடி, அவன் தோலை உரித்து – அப்பப்பா – பயங்கரம். சிற்பி எவ்வாறு இதை செதுக்கி உள்ளான் பாருங்கள் – உடலை வளைத்து ஆடும் ஈசன், யானையின் தலை ( சூலத்தின் அடியில் ), யானையின் தோலை விரித்துப் பிடித்து ,

அப்போது அந்த குள்ள பூதகணம் – ஏளனம் செய்கிறது விழுந்த அசுரனை பார்த்து . மேலே இன்னொரு பூத கணம் இந்தா காட்சியை அப்பப்பா என்கிறது.

இந்த கடும் சண்டையை பார்க்க மனம் இல்லாமல் திரும்பும் உமை – அவள் மடியில் குழந்தை முருகன் – மிரண்டு அடுத்து இருக்கும் தோழியிடம் தாவும் பாவம் – அருமை.


– இது மிகவும் சிறிய சிற்பம் என்றேன்…ஆனால் அது போதுமே எங்கள் சிற்பிக்கு – அதில் ஒரு கதை சொல்லி அதில் அனைத்து முக பாவங்களை கொண்டு வந்துள்ளான். யானை உரி போர்த்திய முர்த்தி. சரி, சிறியது என்றால் எவ்வளவு சிறியது?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment