அங்கே இருப்பது தான் வேதாளம் !

” கண்டிப்பாக தொட்டகட்டவள்ளி சென்று பாருங்கள் ” என்று பலமுறை நண்பர் திருமதி லக்ஷ்மி சரத் அவர்கள் கூறினார்கள். கர்நாடகத்தில் இருக்கும் பல சுற்றுலா மற்றும் பாரம்பரிய விஷயங்களில் வல்லுனரான அவரது துணையுடன் தான் ஹோய்சாளர்கள் படைப்புக்களை சென்று ஜூன் மாதம் பார்க்க பட்டியல் தயார் செய்தேன்.

“ஹசனில் தங்குங்கள். அங்கிருந்து பேலூர் செல்லும் வழியில் சுமார் 20 kms பயணித்த பின்னர் ஹோய்சால வில்லேஜ் ரிசோர்ட் தாண்டியவுடனே இடது புறம் தொடகடவள்ளி என்ற பெயர்ப் பலகை இருக்கும். அங்கே திரும்புங்கள் என்றார்.”

பெயரே சற்று வித்தியாசமாக இருந்தது. சிறு பலகை தான், ஆனால் சிரமம் இல்லாமல் அடையாளம் கண்டுகொண்டோம். ஒரு சிறு கிராம பாதை வழி இன்னும் ஒரு 3 கிலோமீட்டர் பயணம். வழியில் நம்மை ஆச்சரியத்துடன் பார்த்த கிராமவாசிகள், ஆனால் அங்கும் அழகிய சீருடை உடுத்தி பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை கண்டு எமக்கு மகிழ்ச்சி.

கண்ணில் பட்ட வரைக்கும் நல்ல இயற்கை காட்சிகளே தெரிந்தன. இந்த தொடகடவள்ளி இன்னும் வரவில்லையே. அதோ அங்கே ஒரு அழகிய குளம், அதன் கரையில் என்னமோ தெரிகிறதே.

இலக்கை நோக்கி மீண்டும் பயணம் செய்தோம். பாதை ஒரு சிறு கிராமத்தினுள் சென்று முடிந்தது. பின்னர் மண் பாதை தான். முடிவில் சிறு கிராமத்து வீடுகளுக்கு நடுவே 898 ஆண்டுகள் நிற்கும் ஆலயம். அதை பற்றி மேலும் படிக்க பழைய நூல் ஒன்று கிடைத்தது

Mysore Archeological Series –
ARCHITECTURE AND SCULPTURE IN MYSORE No. III

THE LAKSHMIDEVI TEMPLE AT DODDAGADDAVALLI
BY
PRAKTANA-VIMARSA-VICHAKSHANA, RAO BAHADUR

P. NARASIMHACHAR, M.A., M.B.A.S.
Honorary Correspondent of the Government of India, Archaeological Department,

Printed under the authority of the Government of his Highness, the Maharaja of Mysore, in 1919.

அங்கே இருந்த ஒரு வாலிபன் எங்களை உள்ளே கூட்டிச் சென்று தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கினான்.

அதற்கு முன்பு இக்கோவிலை பற்றிய சிறிய அறிமுகம். அந்த புத்தகத்திலிருந்து சில வார்த்தைகள்:

“தொட்டகட்டவள்ளியில் உள்ள லக்ஷ்மி தேவி கோவில் ஹோய்சாளர்களின் அழகிய சிற்ப வேலைப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது நான்கு அறைகள் கொண்டது. இந்த வகையான ஹோய்சாளர் கட்டுமானம் மாநிலத்திலேயே இது ஒன்று மட்டுமே போலும். கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டின் மூலம், கி.பி. 1113ஆம் ஆண்டில் ஹோய்சாள அரசர் விஷ்ணுவின் ஆட்சியின்போது இருந்த பெரும் வணிகராகிய குள்ளஹண ரஹுதாவும் அவரது மனைவி சஹாஜதேவியும் அபிநவ கொல்லாபுரா எனும் கிராமத்தை தோற்றுவித்து தாயார் மகாலக்ஷ்மிக்கு அங்கே ஒரு கோவில் எடுப்பித்ததாகவும் அறிகிறோம். பேலூரில் மன்னர் விஷ்ணுவால் கி.பி. 1117-இல் கட்டப்பட்ட கேசவ கோவிலுக்கு நான்கு ஆண்டுகள் முன்பே இது கட்டப்பட்டதால், ஹோய்சாளர்களின் கட்டுமானங்களிலேயே இது ஆரம்ப காலங்களில் கட்டப்பட்டதாகும்.”

இத்தனை சரித்திர பின்புலம் இருந்தும், இதென்ன நமது பதிவின் தலைப்பு? சற்றே பயமுறுத்துவதாக உள்ளதே!! அங்கே இருப்பது தான் வேதாளம், நாங்கள் கோவிலுக்குள் நுழைகையில் சூரியன் நன்றாக தன் வேலையை செய்ய துவங்கிய நேரம். இருப்பினும் உள்ளேயோ கும்மிருட்டு. நான் என் வலப்புறம் திரும்பி சிறிது பின்னோக்கி சென்று கோவிலின் முகப்பினை தூரத்தில் நின்று கவனித்தேன். காளியின் சந்நிதி

அந்த இளைஞன் பல விவரங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தான். இருப்பினும் என் மனம் ஒரே விஷயத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது – வேதாளம். இந்த கோவில் மிகத் தனித்துவம் பெற்றது. ஏனெனில், காளியின் சந்நிதி விஷ்ணுவின் சந்நிதிக்கு எதிரேயும் மற்ற இரண்டில் ஒன்றில் பூதநாதனாக சிவபெருமானும் அவருக்கு எதிரில் லக்ஷ்மியின் சந்நிதியும் உள்ளன.

காளியை அமைதிப்படுத்த விஷ்ணுவும் சிவனை அமைதிப்படுத்த லக்ஷ்மியும் எதிரிலே இருப்பதாக அந்த இளைஞன் கூறினான். ஒரு வேளை இவ்வாறும் இருக்கலாம்; காளியும் சிவனும் அருகருகேயும் விஷ்ணுவும் லக்ஷ்மியும் தம்பதி சமேதராக காட்சி அளிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் விஷ்ணுவின் சந்நிதியில் கேசவனின் அழகிய வடிவம் இருந்ததாகவும் அதனை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் அந்த இளைஞன் விவரித்தான்.

நிழற்படம் எடுக்க அனுமதி உண்டா என்று அவனிடம் நாங்கள் கேட்க, தடை ஏதும் இல்லை என்று அவன் கூறவும் நாங்கள் படம் எடுக்க துவங்கினோம். முதலில் காளி. ஆனால் நன்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததால், சரிவர காண முடியவில்லை.

ஆனால் அந்த புத்தகமோ மிகவும் உக்ரமான வடிவமாக காளியின் உருவத்தைச் சித்தரிக்கிறது.

காளி கோரமான் உருவத்துடனும் எட்டு கரங்களுடனும், ௩ அடி உயரம் கொண்டு, அரக்கனின் மீது அமர்ந்து, வலக் கரங்களில் சூலம், வாள், அம்பு மற்றும் கோடாரியும், இடக் கரங்களில் உடுக்கை, பாசக்கயிறு, வில் மற்றும் கபாலம் ஏந்தி இருக்கிறாள்.

படம் எடுக்கையிலே விழுந்த ஒளியால் இருள்சூழ்ந்த இடங்கள் தெளிவாக தெரிய, நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். சிறு வயதில் கூறப்பட்ட பயங்கர கதைகள் எங்கள் முன்பு எழுந்து ஆடத் துவங்கின.

9360
9363

அங்கே இருபுறமும் ௬ அடி உயரத்தில் ௨ வேதாளங்கள் முன்புறமாக சற்றே வளைந்து, கண்கள் விரிய திறந்து, நாவு வெளிப்புறம் தொங்க எங்களை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தன.

நாங்கள் எங்கள் சுயநினைவடைந்து பார்த்தபோது ஒரு வேதாளத்தின் அருகே ஒரு பெரிய பட்டாக்கத்தி, இதை வைத்தே சமீபத்தில் யாருடைய தலையையோ வெட்டி அந்த வேதாளங்கள் தங்கள் பசியை ஆற்றியிருந்தன போலும். மற்ற வேதாளத்தின் அருகில் மேலும் ௪ குட்டி பூதங்களும் துணைக்கு இருந்தன.

இது போதாதென்று, அந்தக் கோவிலின் ஜன்னல்களிலும் வெட்டப்பட்ட தலைகளும், பிரேதங்களும், மற்றொரு வரிசை பூதங்களும் இருந்தன. அவற்றில் இரு ஓரங்களிலும் இருப்பவை புல்லாங்குழல் வாசித்து கொண்டிருந்தன.

வேதாளங்கள் என்பவை வாழ்க்கைக்கும் மரணத்தின் பின் உள்ள நிலைக்கும் இடையே கிடந்து அவதியுறும் பாவப்பட்ட ஆத்மாக்கள் என்றே நினைத்திருந்தேன். மேலும் மரங்களில் தலைகீழாக தொங்கிக்கொண்டு போவோர் வருவோரை பிடித்துக்கொள்ளும் என்றே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், ஒரு கோவிலுக்குள்ளே இவ்வாறு வேதாளங்கள் இருக்கும் என்று நினைத்ததே இல்லை. ஆனால் இறைவனே அழிக்கும் சம்ஹார மூர்த்தியாய் விளங்கி, சுடுக்காட்டில் வீற்றிருந்து, பொடி சாம்பலை பூசிக்கொண்டு காளியை மனைவியாக கொண்டு வாழும் போது வேதாளங்கள் அங்கிருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை அல்லவா??

அடுத்து வரும் பதிவுகளில் மேலும் வளம் வருவோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

அழகுக்கு அழகு சேர்க்கும் – சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம் -பேலூர் யானை – திரு பிரசாத் அவர்களது ஓவியம்

இன்று நமது நண்பர் பிரசாத் மீண்டும் ஒரு அற்புத ஓவியத்தை தந்துள்ளார் . பேலூர் யானை , அதன் அருமையான சிற்பத்தை அப்படியே ஒரு புகை படத்தை வைத்துக்க் கொண்டு மட்டும் ஓவியத்தை தீட்டி இருக்கும் திறமை அபாரம் – பிரசாத் ( அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார் ). அவரது மற்ற படைப்புகளை பார்க்க இங்கே சொடுக்கவும்.

பிரசாதின் ஓவியங்கள்

அருமையான ஓவியம் – அவர் பார்த்து வரைந்த புகைப்படத்தையும் பாருங்கள். அருமை
27422745

இன்னொரு புகைப்படம் இந்த இடுகையின் காரணம். எனக்கு பத்திரிகைகளில் சிறு வயதில் பிடித்து ஆறு வித்தியாசங்கள் ( அதை மட்டுமே வாசிக்க தெரியும் அப்போது / இப்போது !!)

இந்த சிற்பத்தை பார்த்தவுடன் பிரசாத் தீட்டி உள்ள ஓவியமும் இதுவும் ஒரே சிற்பங்களா என்ற ஐயம் வந்தது. பிறகு அவர் தனது படத்தை அனுப்பி வைத்தார். ஐயம் தீர்ந்தது.

சரி நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து சொல்லுங்கள் – இரண்டும் ஒரே சிற்பமா ? இல்லையேல் ஆறு வித்யாசங்கள் உள்ளனவா ?

274227452739

அருமையான யானை சிற்பம், சிற்பி உங்கள் படைப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் பிரசாத். தொடருங்கள் உங்கள் அருமையான பணியை.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கயல் விழி, இங்கே கயலுக்கு விழி

மச்ச அவதாரம் திருமாலின் முதல் அவதாரம். மச்சம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப்பொருள் தரும். படைக்கும் பிரம்மன் தனது ஒரு நாள் காலக் கணக்கு( 4320 million years) முடிந்தவுடன் ,தான் படைத்த அனைத்தையும் விட்டு விட்டு உறங்குவார். அப்போது அவர் படைத்த அனைத்தும் அழியும் – வேதங்கள் தவிர. அவை பிரம்மனின் உடலினுள் வசிக்கும். பின் அடுத்த நாள் அனைத்தையும் திரும்பப் படைக்க துவங்குவார் பிரம்மன். அவ்வாறு ஒரு முறை பிரம்மன் தூங்கும்முன் கொட்டாவி விடும்போது் வேதங்கள் வெளியேறி விட்டன. அப்போது அவ்வழி சென்ற அசுரன் ஹயக்ரிவன் – அவற்றை களவாடிவிட்டான். இதை கண்டுகொண்ட விஷ்ணு அசுரனிடமிருந்து அவற்றை மீட்க எடுத்த அவதாரம் இது.

மனு என்ற அரசன் ஒரு சிறு குளத்தில் பூசை செய்யும் போது ஒரு சிறு மீனாக அவன் கையினுள் வந்து அபயம் கேட்டார். அவனும் அன்புடன் எடுத்து தனது கமண்டலத்தில் உள்ள நீரில் அந்த மீனை இட்டான். சிறு நேரம் கழித்து மீன் மள மள என்று வளர்ந்து கமண்டலத்தை விட பெரிதாக ஆவதைக் கண்டு பயந்து, அதை எடுத்து ஒரு ஆற்றில் விட்டான் மனு. அங்கும் அது வளர, பின் கடல் – அதன் பின் மகா சமுத்திரம் என்று படிப் படியே எடுத்து சென்றான். கடைசியில் வந்தது யார் என்று புரிந்து வணங்கினான். மச்ச வடிவத்தில் இருந்த திருமாலும், அவனுக்கு ஆசி புரிந்தார் – ஒரு வாரத்தில் புவி அழிந்து பிரளயம் வர இருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க ஒரு பெரிய கப்பலை கட்டி – அதில் உயர்ந்த உயிர் இனங்களை உடன் எடுத்து காத்திருக்குமாறு கூறியது மீன்.

ஒரு வாரத்திற்குள் மனுவும் அவ்வாறே செய்ய, அதற்குள் பெருமாள் ஹயக்ரிவ அசுரனை சமுத்திரத்தின் அடியில் கண்டு பிடித்து, முட்டி அழித்து ,வேதங்களை மீண்டும் பிரம்மனிடம் ஒப்படைத்தார். பிறகு கூறியவாறே பிரளயம் வர, வாசுகி என்ற பெரிய பாம்பை கயிறாக கொண்டு, தனது நெற்றியில் வளர்ந்த பெரிய கொம்பில் கட்டி, பிரளயத்தில் இருந்து அந்த மரக்கலத்தை காப்பாற்றி – மீண்டும் புவியில் உயிரினங்கள் வாழ வழிவகை செய்தார்.

இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவரூபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகக் கொண்டவராகவும் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது – பொதுவாக நாம் இந்த அவதாரத்தை குறிக்கும் சிற்பங்கள் இவ்வாறே மேல் பாகம் மனித உடலுடன் கீழ் பாகம் மீனின் உருவுடனும் (மீன் பாடி***) காண்கிறோம். ( இதோ ஸ்ரீரங்கம் கோவில் தூணில் )

ஆனால் இங்கே (ஹோய்சாலர் (போசளர்) காலம் பேலூர் ஹலேபிட் ஹோய்சாலேஷ்வர கோயில் சிற்பம் ) அழகிய மீனின் தலையும் மனித உடலுடன் சிலை உள்ளது – கயல் விழி என்று கேள்விபட்டுள்ளோம் – அது விழியே கயல் போல இருக்கும் என்ற கற்பனை – இங்கே கயலுக்கு விழி….

திரு சந்திரா அவர்கள் மற்றும் நண்பர்கள் இந்த சிற்பத்தை வராகம் என்று கருத, இதோ அங்கே இருக்கும் வராக அவதார சிற்பங்களையும் இணைக்கிறேன்.

( ***மீன் பாடி என்பது சென்னையில் அனைவருக்கும் தெரிந்த வாகனம் – மரீனா கடற்கரை சாலையில் சாலையை விட ஒரு ஜாண் மேலே பறக்கும் விமானம் அது – ஓட்டுனர் உரிமம் தேவை இல்லை, வண்டிக்கு எந்த வித எண்ணும் தேவை இல்லை )


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment