நமக்கு இன்று மீண்டும் ஒரு விருந்து, மிஸ். லீய்ஸ்பெத் பங்கஜ பென்னிங்க் சென்ற பதிவில் ஞானக் குழந்தைக்கு கிடைத்த குடை மற்றும் பல்லக்கை மிக அழகாக நமக்கு விளக்கினார். இன்று முழு விருந்து. ஒரு ஆலயத்தை எப்படி நாம் இனி பார்க்கவேண்டும் என்று நமக்கு கட்டறுக் கொடுக்கிறார்.
ஒவ்வொரு கோவிலும் பல்வேறு தலவரலாறு கொண்டது போன்றே, ஒவ்வொரு தெய்வ வடிவமும், சிற்பமும் பல்வேறு கதைகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு மூர்த்தமும் ஏதேனும் ஒரு புராணத்தை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் அந்த சிற்பம் வடிக்கப்பட்ட காலகட்டத்தின் வரலாற்றையும் விளக்கக்கூடியது. ஒரு புராணம் அல்லது தொன்மத்தை அந்த சிற்பியின் காலகட்டத்தில் எவ்வாறு சொல்லப்பட்டது என்பதற்கு சான்றாக உள்ளது. சாஸ்திரத்தில் உள்ள கொள்கையின் அடிப்படையிலேயே தெய்வீக வடிவங்கள் அமைக்கப்படுகின்றன என்றபோதும், அதற்கு உயிர்கொடுப்பது சிற்பியின் இயற்கையான அறிவாற்றலும், கற்பனைத் திறம் மற்றும் அவர் கண்ட மேற்கோள்களும் ஆகும். சிற்பியின் திறமையான ஆற்றலின்றி இத்தகு தொன்மங்கள் உயிர் பெறுவது கடினம்.
இந்த இடுகையில் கோவிலின் அமைப்புடன் இயைந்த மூர்த்திகளைப் பற்றி காண்போம். ஒவ்வொரு மூர்த்தத்தின் கதையையும் தனித்தனியே கூறுவதன் மூலம் அவற்றின் முக்கியத்துவத்தை அறிய முடியும் என்பதால் அவற்றை அவ்வாறே கூற விரும்புகிறேன்.
முதன்முறையாக ஒரு கோவிலுக்குள் செல்வதே ஒரு உன்னதமான அனுபவம். ஒவ்வொரு கோவிலுக்கும் அதற்கென்று ஒரு அதிர்வு உண்டு. அதனுள் பல பொக்கிஷங்ளும் உண்டு. பற்பல கோவில்கள் பிரபலமானவை, எனவே அவற்றின் புகைப்படங்களும் பல்வேறு புத்தகங்களும் எளிதில் கிடைக்கும். அவ்வாறு பிரபலமான கோவில்களில் நாம் நுழையும்போது ஏற்கனவே நமக்குள் எதிர்பார்ப்புகள் நிறைந்திருக்கும். இருப்பினும் நமது உண்மையான அனுபவமோ வித்தியாசமாகவும் எதிர்பாராததாகவுமே இருக்கும். ஆனால், நாம் அறியாத கோவிலுக்குள் நுழைவதோ உண்மையிலேயே மிகச் சிறந்த அனுபவமாகும். பல அற்புதங்கள் புதைந்துள்ள ஒரு பொக்கிஷ நிலவறைக்குள் புகும் அனுபவத்தை ஏற்படுத்தும்.
திருவட்டதுறை சிவன் கோவிலுக்குள் செல்வதும் அத்தகைய ஒரு அற்புத அனுபவமாகும். நாங்கள் அக்கோவிலின் முதன் கோபுர வாயிலில் இருந்து வெளிப்பிரகாரத்தை அடைந்தோம். எங்களுக்கு இடதுபுறத்தில் அம்பிகை சன்னதிக்குச் செல்லும் முற்றத்தின் வாயில் இருந்தது. எங்களுக்கு வலதுபுறத்தில் அம்பிகை சன்னதிக்கான கொடிமரமும் நந்தியும் இருந்தன. அதைத் தாண்டி சிவாலயத்திற்கான கொடிமரமும் நந்தியும் இருந்தன. மார்கழி மாத வெயிலில் குளுகுளுவென்றிருந்தது. இரண்டாம் கோபுர வாயிலைத் தாண்டி நாங்கள் சென்றதும் எங்களுக்கு எதிரில் தெரிந்தது ஒரு மண்டபத்தின் சுவர்கள் தாம்.

பிரதட்சிணம் செய்யும் விதமாக நாங்கள் இடப்புறமாக திரும்பி சுற்றி வரத் துவங்கினோம்.
அந்த மண்டபம் மிகவும் அழகாகவும் தொன்மையாகவும் இருந்தது. அதன் தூண்கள் பிற்கால சோழர் காலத்தியதாகவோ அல்லது முற்கால நாயக்கர் காலத்தியதாகவோ இருக்கக்கூடும், அநேகமாக 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த மண்டபத்தின் வாயில் தெற்குப்புறமாக இருந்தது. இது ஒரு முகமண்டபத்துடன் இணைந்திருந்தது. அந்த முகமண்டபமோ இன்னும் தொன்மையானதாக இருக்கக் கூடும். அதன் வாயிலும் தெற்குப்புறத்தில் இருந்தது. ஒரு சிறிய வழியும் தெரிந்தது. இந்த வழியை சுற்றி வந்த பிறகே விஸ்தாரமான முற்றமும் இறைவனின் ஆலயமும் தெரிந்தன.

ஆலயத்தைக் கண்ட உடனேயே அது முற்கால சோழர் கால கோவில் என்று அறிந்துகொண்டோம். சுவற்றில் உள்ள மாடங்களில் கல்லினால் ஆன தெய்வ மூர்த்தங்கள் காணப்பபட்டன. என்னை மேலே செல்ல விடாமல் எதிரில் இருந்த மிக அழகிய பிட்சாடனர் திருஉருவம் ஈர்த்தது. நான் இதுவரை கண்டதிலேயே மிக அழகான பிட்சாடனர் சிற்பம்.

ஆளுயர அளவில், பளபளக்கும் கருநிறத்தில், ஒயிலான நடையுடனும், இதழ்களில் ஒரு மர்ம புன்னகையுடனும் அற்புத படைப்பு. தாருவனத்தில் சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் குறிப்பது பிட்சாடனர் திருவுருவம்.
இக்கதையை விளக்கும் மற்றுமொரு அழகிய ஓவியம் சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரி ஆலயத்தில் உள்ளது.
தனது மேல் இடக்கரத்தில் சூலம் ஏந்தி, அதனை தனது தோள்களில் சாய்த்துக் கொண்டு நிற்கிறார். சூலத்திலிருந்து ஒரு மயிலிறகு கற்றை அழகுற தொங்குகிறது. இடதுகரத்தில் ஒரு மண்டை ஓடு பிட்சை பாத்திரமாக உள்ளது. கீழ் வலதுகரம் தன்னை பின்பற்றி வரும் மானை நோக்கி உள்ளது. இந்த ஓவியத்தில் காணும்போது, மானுக்கு உணவளிக்க சிறிது புல் கையில் வைத்திருப்பது தெரிகிறது. அவருக்கு இடதுபுறத்தில் ஒரு குறுமனிதன் மிகப் பெரிய பாத்திரத்தைத் தூக்கிப் பிடித்துள்ளார். திருவட்டதுறையிலோ அருகிலே ஒரு ரிஷி பத்தினி காணப்படுகிறார்.

தாருவனத்தில் ரிஷிகளை எதிர்கொண்ட பின் சிவபெருமான் தனது ஆனந்த நடனத்தை நிகழ்த்துகிறார். எட்டு திசைகளும் அதிர, திருமுடியில் உள்ள கங்கை பயத்தால் நடுநடுங்க, சிவபெருமான் ஆட, உமையம்மையும் கூட ஆடத்துவங்குகிறார். பிட்சாடனருக்கு அடுத்துள்ள மாடத்தில் சிவகாமசுந்தரியுடன் ஆனந்த நடனம் புரியும் ஆனந்த தாண்டவ மூர்த்திக் காணப்படுகிறார். இந்த நடராஜரும் மிக அற்புதமானது.

அற்புத வேலைப்பாட்டிற்காக மட்டுமன்றி, நடராஜர் சிற்பத்தின் வரலாற்றிலும் முக்கிய இடம் வசிப்பதாலும், இதேப் போன்று வேறெங்கும் காணப்படாதது மிக ஆச்சரியமான விஷயமாகும்.
நடராஜருக்கும் பிட்சாடனருக்கும் இடையிலே சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆக, பிட்சாடனர், விநாயகர், நடராஜர் என மூன்று மூர்த்திகள் தெற்குமுக அர்த்தமண்டபத்தின் சுவற்றில் காணப்படுகிறார்கள்.

பிரதட்சிணமாக பிரகாரத்தை வலம் வரும்போது அடுத்து நாம் காண்பது சிவபெருமானின் தட்சிணாமூர்த்தி திருவுருவம்.

இந்த சிற்பமும் அற்புத வேலைப்பாட்டுடனும் அழகுடனும் விளங்குகிறது. நான்கு முனிவர்கள் சுற்றியிருக்க சின்முத்திரையுடன் அருள்புரியும் இவர்தான் பரமகுரு. கர்ப்பகிரஹத்தின் தெற்கு சுவற்றிலுள்ள மாடமே தட்சிணாமூர்த்தியின் இருப்பிடமாகும்.
அடுத்து மேற்கு சுவற்றிலுள்ள மாடத்தில் லிங்கோத்பவரைக் காண்கிறோம். லிங்கோத்பவர் பற்றிய கதை திருவண்ணாமலையில் நடந்ததாகக் கருதப்படுகிறது. மேற்கு மாடத்தில் உள்ள லிங்கோத்பவரை சிறிய வடிவத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் வணங்குகின்றனர்.

லிங்கோத்பவ வடிவம் எப்போதுமே மேற்கில் உள்ள மாடத்தில் இருப்பதாக தொன்றுதொட்டு எண்ணி வருகிறோம். இருப்பினும் எப்போதுமே இது வழக்கில் இருந்திருக்கிறதா? சற்றே மேல்நோக்கி விமானத்தைக் காண்போம். அங்கே இரண்டாம் தளத்திலும் சிகரத்திலும் விஷ்ணுவே மேற்கு திசையில் குடியிருக்கிறார்.

இரண்டாம் தளத்தில் ஆதிசேஷன் மீது ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மஹாவிஷ்ணு காட்சியளிக்கிறார். சிகரத்திலும் விஷ்ணு தனது இரு மனைவியருடன் அமர்ந்திருக்கிறார். இருப்பினும் அவரது ஆசனம் காணப்படவில்லை. இதைக் காணும்போது நமக்குள் கேள்வி எழுகிறது. இந்த மாற்றம் ஏன், எப்போது ஏற்பட்டது? இன்று பல கோவில்களில் மேற்குமாடத்தில் நாம் விஷ்ணு மூர்த்தி இருப்பதைக் காண்கிறோம். ஆனால் கோவில் விமானத்திலோ இதே இடத்திலேயே விஷ்ணு குடியிருப்பது, ஆதிகாலத்திலிருந்து இது விஷ்ணு மூர்த்தியின் இடமாக இருந்திருக்கும் எனத் தெரிகிறது. இதற்கு சான்று கும்பகோணத்திலுள்ள நாகேஸ்வர கோவில். மேற்கு சுவற்றின் மாடத்தில் அர்த்தநாரீசுவரர் இருந்தாலும், விமானத்தின் இரண்டாம் தளத்திலும், சிகரத்திலும் விஷ்ணுவே குடியிருக்கிறார்.

பிரகாரத்தின் வடக்குப்பகுதியில் வலம்வரவும், அங்கே வடக்கு மாடத்தில் நான்முகனாகிய பிரம்மா தனது தொன்றுதொட்ட இடத்திலே காட்சியளிக்கிறார்.

அர்த்தமண்டபத்தின் வடக்குபுற சுவற்றிலும் மூன்று மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். சிவபெருமானின் இரு வடிவங்கள், கங்காதரர் மற்றும் அர்த்தநாரீசுவரர் இருவரும் துர்க்கையின் மேற்கு மற்றும் கிழக்கு திசையில் உள்ளனர். துர்க்கை நடுவில் உள்ள மாடத்தில் வீற்றிருக்கிறாள். அனைத்து மூர்த்திகளுமே மிகவும் அழகுற வடிக்கப்பட்டு அவற்றின் கதையை ஆன்மிக நோக்குடனும் அழகுடனும் விளக்குகிறது.
ஆதிகால சோழர் கோவில்களில் அர்த்தமண்டபத்திலும் விமானத்திலும் உள்ள மாடங்கள் 3-1-1-1-3 என்ற விதமான கட்டமைப்பு ஒரு பொதுவான அம்சம். இருப்பினும் இக்கோவிலில் மேலும் ஒரு கூடுதலான மாடம் முகமண்டத்தின் வடக்கு முக சுவற்றில் இருப்பது மிக அபூர்வமான ஒன்று.

பத்தாவது மாடத்தில் காலபைரவர் காட்சியளிக்கிறார். இரு பஞ்சரங்களின் இடையிலே ஓர் தனி மாடத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

அநேகமான ஆதிகால சோழர் கோவில்களில் விமானத்தின் சுவர்களில் ஒற்றை மாடம் இருப்பது வழக்கம். தெற்கு சுவற்றில் தக்ஷிணாமூர்த்தியும், விஷ்ணு (முற்காலம் முதலே), அர்த்தநாரீசுவரர் (சிறிது காலத்திற்கு பின், மேலும் சில காலமே வழக்கில் இருந்தது) அல்லது லிங்கோத்பவர் (பிற்காலத்தில் வழக்கில் இருந்து இன்று வரை தொடர்கிறது). பிரம்மா எப்பொழுதும் வடக்கு சுவற்றிலேயே காணப்படுகிறார். சில சமயங்களில் பிற மூர்த்திகளும் வடக்கு சுவற்றில் காணப்படுவது உண்டு, உதாரணத்திற்கு காமரசவல்லியிலும், கும்பகோணத்திலுள்ள நாகேஸ்வரர் கோவிலிலும் இவ்வாறு உள்ளது.
அர்த்தமண்டபத்தின் சுவற்றில் மூன்று மாடங்கள் இருப்பது ஒன்றும் புதிதன்று. இருப்பினும் இந்தக் கோவிலில் ஆறு மாடங்களில் நான்கு மாடங்கள் முறையான மாடங்கள் அன்று. இவை ஒழுங்கான மாடத்தின் கட்டமைப்பாக இன்றி, கோவிலின் சுவற்றில் வெட்டப்பட்டு உள்ளன. மகரத்தோரணம் கொண்ட உத்திரக்கல்லும், மேலுள்ள வரிகளின் தொடர்பின்மையும் இதனை பறைசாற்றும்.
அர்த்தமண்டபத்தின் சுவற்றில் நடுநாயகமாக விளங்கும் விநாயகரும் துர்க்கையுமே உண்மையான மாடங்களாக விளங்கியிருக்கின்றன என எடுத்துக் காட்டுகிறது. இது கூறும் கதையென்ன? ஒருவேளை சிற்ப கட்டுமானர், கட்டுமானம் துவங்கியபின் இடையிலே பல்வேறு மூர்த்திகளையும் சேர்க்க எண்ணியிருப்பாரோ? அல்லது ஒருவேளை கட்டுவித்தவர் விருப்பமோ? ஆதிகால சோழர் கோவில்களில் இது எந்த நிலைமாறுபடு காலத்தைக் குறிக்கிறது? மற்ற நான்கு மூர்த்திகளை விட விநாயகர் மற்றும் துர்க்கையின் மூர்த்திகள் வேறுவிதமாய் இருப்பதை அறியலாம். அதிலும் குறிப்பாக துர்க்கை அநேகமாக உருண்டையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மஹிஷாசுரனின் தலைமீது வீற்றிருக்கும் அன்னை சற்றே குறுகிய மற்றும் உயரமான வேலைப்பாட்டுடன், சற்றே அதிக உயரமாகவும் குறுகலாகவும் உள்ள மாடத்தில் மிக அருமையாக பொருந்தியுள்ளது.
ஆனால் சுவற்றில் வெட்டப்பட்டுள்ள மற்ற மாடங்களோ ஆழமின்றியும், அகலமாகவும், உயரமாகவும் உள்ளன. அவை வரிகளின் மேலேயே உள்ளன. ஆனால் ஒழுங்கான மாடங்களோ பொதுவாக சோழர் கால கோவில்களில் காணப்படுவது போன்றே வரிகளின் ஊடே செல்கின்றன. ஒருவேளை இந்த மாடங்கள் பிற்காலத்தில் வெட்டப்பட்டனவாக இருக்கக் கூடுமோ என்ற ஐயம் எழுகிறது. வேறொரு கோவிலில் இருந்த வந்த மூர்த்திகளுக்கு அடைக்கலம் வழங்க செய்யப்பட்டதாகவும் இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. இவைகளின் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்து கொள்வதன் மூலம் நாம் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இயலும். பின்பு வரும் மற்றுமொரு இடுகையில் இந்த மூர்த்திகளை மேலும் ஆராய்ந்து பார்த்து இந்தக் கேள்விகளுக்கு விடை காண முயற்சிப்போம்.
(தமிழாக்க உதவி – தோழி திருமதி பர்வதவர்த்தினி முரளிகிருஷ்ணா அவர்கள் )