மகேசன் என்றும் பதினாறு என்று அவனை வரமளித்து காத்திட்டார், ஆனால் காமரசவல்லியில் உள்ள இந்த அற்புத கோயில் ?

“ஏதாவது செய்யணும் விஜய் !” நான்கு மாதங்களுக்கு முன்னர் அர்விந்த் மற்றும் சங்கருடன் நடந்த தொலைபேசி உரையாடல் இன்னும் காதில் ஒலிக்கின்றது.

காமரசவல்லி ஆலயத்தின் நிலையை கண்டு மனம் உடைந்த அவரது குரல் தான் அது. நண்பர்கள் ஸ்ரீராம் மற்றும் சாஸ்வத் காமரசவல்லி செல்கிறோம் என்றதும் உடனே அங்கு இருக்கும் நிலையை விளக்கும் ஒரு பதிவு நீங்களே எழுதிக் கொடுங்கள் என்று சொன்னேன். ’என்றும் பதினாறு’ என்று வரம் அளித்து காத்த கதை சொல்லும் சிற்பம் இருக்கும் ஆலயத்தின் அவல நிலையை தரும் இதோ அந்த பதிவு.

நாம் முன்னரே பலமுறை பார்த்த கதை. மரண பயம் அனைவருக்கும் வரும் பயம். அதை வென்று அழியாப் புகழ் பெற்ற பாலகனின் கதை தான் இன்று நாம் பார்ப்பது. மிருகண்டு முனிவரும் அவரது மனைவி மருத்வதியும் மகப்பேறு ஒன்றும் இல்லாமல் துயரத்தில் இருந்தனர். முடிவில் அவர்கள் வணங்கும் சிவனாரிடமிருந்து துயர் துடைக்கும் வரம் கிடைக்கிறது. ஆனால் அதில் ஒரு முடிச்சு – அனைவரும் புகழும் புத்திக் கூர்மை உடைய ஆனால் சிறு வயதிலேயே அவர்களைப் பிரிந்து மடியும் மகன் வேண்டுமா அல்லது பல வருடங்கள் அவர்களுடனே இருக்கும் முட்டாள் மகன் வேண்டுமா? என்பதுதான் அந்த முடிச்சு.

’குறைவாக இருந்தாலும் அறிவும் பக்தியும் நிறைந்துள்ள புத்திசாலி மகனே வேண்டும்’ என்று இருவரும் கேட்க அப்படியே பிறக்கிறான் மார்க்கண்டேயன். அனைவரும் வியக்கும் வண்ணம் சிவ பக்தனாக விளங்குகிறான். ஆனால் அந்த பாலகனின் பதினாறு அகவை முடிந்த நிலையில் தவணை முடிந்த வாகனத்தை பறிக்கும் சர்வ வல்லமை படைத்த கடனாளி வங்கி காவலன் போல வருகிறான் காலன். பயம் கொண்டு சிவலிங்கத்தை கட்டிக்கொண்டு நிற்கும் சிறுவனைக் கண்டு தனது பாசக் கயிற்றை வீசுகிறான் எமன். அப்போது தன்னிடத்தில் சரணடைந்த பக்தனின் குரல் கேட்டு சீறி எழும் மகேசன் காலனை உதைத்துத் தள்ளிவிட்டு, தன் பக்தனான மார்க்கண்டேயன் என்றும் பதினாறாக இருக்க வரம் அளித்து விடுகிறார்.

இந்தக் காட்சியைத்தான் சிற்பி காமரசவல்லி சிற்பத்தில் எடுத்துக்கொள்கிறான். கொள்ளிடத்தின் வடக்கே , நெடுஞ்சாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ளது இந்த ஆலயம். அதன் வடக்கு பக்கம் உள்ள சுவரில் காணும் காட்சி.

பிள்ளையார் சிற்பத்தின் அடியில் காணும் சிறு சிற்பம் தெரிகிறதா. ?

இதோ அந்த காட்சி.

கையளவு கல்லில் கதை சொல்லும் கலை. லிங்கத்தை கட்டி அணைத்து இருக்கும் மார்க்கண்டேயன். பின்னால் திரும்பி தன்னை நெருங்கும் ஆபத்தை கண்டு அஞ்சி நடுங்கும் வண்ணம்…அவனை அடுத்து எமன். ஐயனின் காலில் புத்தி படும் வண்ணம் இருந்தாலும், எட்டி தன் இரையை பிடிக்க முயலும் எமன். அவன் மீது ஆக்ரோஷமாக ஆடும் மகேசன் – காலசம்ஹார வடிவத்தில் – நான்கு கைகள், ஒரு பக்கம் அனல் பறக்கும் கோபம் அதே உருவத்தில் பக்தனை ஆட்கொள்ளும் கருணை உருவம். அனைத்து காட்சிகளின் உணர்வையும் அப்படியே படம் பிடித்துக் கட்டும் அற்புதச் சிற்பம்.

இதே வடிவம் பல இடங்களில் இருந்தாலும் இந்த அளவிற்கு சிறிய சிற்பத்தில் இத்தனை உணர்வுகளை கொண்டு வருவது மிக மிகக் கடினம். உதாரணத்திற்கு தஞ்சை பெரிய கோயிலில் உள்ளே இதே வடிவத்தை ஒப்பிட்டு பார்ப்போம். என் பார்வையில் பிரம்மாண்ட அளவில் உள்ள இந்த சிற்பத்தை விட காமரசவல்லி சிற்பத்தில் உணர்ச்சிகளின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதே போல இரு மார்க்கண்டேய வடிவங்கள்.

ஒரு இடத்தில மண்டியிட்டு நிற்கும் வண்ணம் இருந்தாலும், பெரிய கோயில் இந்த கதையில் உள்ள மூன்று பேரையும் பிரித்து தனித் தனியே காட்டுகிறது

மிகச் சிறிய சிற்பம் என்பதால் முகபாவங்களில் காட்ட முடியாத உணர்ச்சிகளை உடல் தோற்றங்களின் சிறு நெளிவுகளில் காட்டி நமது மனதை கொள்ளை கொள்கிறான் காமரசவல்லி சிற்பி.

இப்படி ஆலயத்தில் எங்கும் நுண்ணிய சிற்ப்பங்கள் – குறைந்தது இருபத்து ஐந்து இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். இங்கும் அங்கும் இரைந்து கிடக்கும் உடைந்த தூண்கள் மனதை நெருடுகின்றன. புனரமைப்பு என்னும் பெயரில் விமானத்தில் வேலை துவங்கி நடுவிலேயே கைவிடப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளை பார்க்கும் முன்னர் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.


ஏதாவது செய்ய வேண்டுமே விஜய் !!!!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கலை என்றால் என்ன?

இன்று நமக்கு ஒரு புது முயற்சி. இதுவரையிலும் ஓராண்டிற்கும் மேலாக பாரம்பரிய சிற்பங்கள், சிற்பங்களை ஒட்டிய ஓவியங்களை பார்த்து வந்த நாம் ( இனியும் அவற்றை காண்போம்) , ஆனால் இன்றைய தினம், இன்னும் ஒரு புதிய பரிமாணத்தினுள் கால் பதிக்கின்றோம். எந்த கலை வடிவமும் வாழ / வளர , ஒரு குறுகிய சட்ட முறைக்குள் அடங்கிக் கிடக்க கூடாது. அது பல தரப்பட்ட கருத்துகளை உள்வாங்கி மாற வேண்டும். அதற்க்கு முன்னர் கலை என்றால் என்ன?

கலைகளில் நாம் இதுவரை சிற்பம், சிலை, ஓவியம், சுதை , கல், உலோகம், கற்கோவில், கட்டுமான கோயில், குடவரைக் கோயில் , புடைப்பு சிற்பம் என்று பலவற்றை பார்த்தோம். அவை அனைத்தையும் ஒருங்கிணைப்பது என்ன – அதன் தாக்கம். நானூறு, ஐந்நூறு ஏன் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும், இந்த அற்புத படைப்புகள் காண்போரை மகிழ்விக்கின்றன?. இதன் ரகசியம் என்ன?. ஆண், பெண், பெரியவர், சிறுவர் , உள்நாட்டவர், வெளிநாட்டவர் என்று ஆயிரத்தி மூன்னூறு ஆண்டுகள் ஆயினும் இந்த சிற்பங்கள், இன்னமும் நம்மை மயக்குவதன் சூட்சமம் என்ன?, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து, நமது பண்பாட்டிற்கு அன்னியமான மண்ணில் இருந்து வரும் நபர், நமது புராணக் கதைகள் அறியாதவர், அன்னியன் என்றாலும் அவனையும் தன பால் வசியம் செய்ய வைக்கும் இந்த கலையின் ஆகர்ஷண அல்லது அமானுஷ்ய சக்தி என்ன?. மனிதன் அவன் மனத்தினுள் எங்கோ தூங்கிக்கிடக்கும் உள்ளுணர்வை தட்டி எழுப்பும் இந்த கலையை என்ன சொல்லி வர்ணிப்பது?
ஒருவேளை இப்படி வர்ணிக்கலாமோ.. கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தன மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, தான் தன மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்க செய்யும் மார்க்கம்- அது தான் கலை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறன், உறங்கிக்கொண்டு! அன்றாட வாழ்வில் சிக்கி பூட்டிக்கிடக்கும் இந்த உணர்வு , சுதந்திரத்திற்கு என்றும் எப்போதும் ஏங்கிக் கொண்டே தவிக்கிறது.

கலைஞர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பயிற்சி மற்றும் கிடைத்த சந்தர்ப்பங்களை உபயோகித்து, பூட்டை உடைத்து தங்கள் எண்ணங்களை பறக்க விடுகின்றனர். அப்படிக் கிடைத்த சுதந்திரத்தில் சிறகடித்து பறந்து, தான் இதுவரை கண்ட மனக்காட்சிகள், மற்றும் புறக்காட்சிகள் அதனோடு ஒட்டிய உணர்வுகளை அனைத்தையும் வெளிக்கொணர்வதே கலை.

நமது மனம் ஒரு புதிர், அது நாம் புறக்கண்களால் காணும் அனைத்தையும் படம் பிடித்து தன்னுள் அடக்கி வைத்துக்கொள்ளும். பிறகு, அதில் உணர்வுகளோடு பிணையும் காட்சிகளை இன்னும் நன்றாக பதியச் செய்யும். ( சற்று கண்ணை மூடி, ஏதாவது ஒரு காட்சியை நினைவுப் படுத்தி பாருங்கள் – முதலில் நினைவிற்கு வரும் காட்சி அதனுடன் ஒட்டிய மிக அழுத்தமான உணர்வுடன் பிணைந்ததாகவே இருக்கும் ). கலைஞன் இந்த மனக்கண்ணால் காணும் காட்சியை வெளிப்படுத்தும் திறனே – கலை. இது கலைஞனுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று இல்லை, கலைஞனின் படைப்பை பார்க்கும் பொது , அதனுள் ஈர்க்கப்படும் ரசிகனும் கலந்துகொள்கிறான். படைப்பில் இருக்கும் ஏக்கம், இன்பம், துன்பம், சுகம் அனைத்தையும் தாயின் தொப்புள்கொடி ஏற்படுத்துவது போல ஒரு தொடர்பு – வெட்டுப்பட்ட பின்னரும் தொடரும் அந்த உணர்வு, கலைஞனின் உணர்வை நாம் நம் மனதில் உணர வைக்கும் திறனே கலை. இதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை. கலை என்று இணையத்தில் தேடினால் ஆயிரம் பெயர்கள் வரும். சில அர்த்தங்கள் உங்களை ஈர்க்கலாம். ….

ஆனால் இந்த சுதந்திரமே கலைக்கு மகுடம். ஜாதி, மத, மற்றும் எல்லா பேதங்களையும் தாண்டி கலையை கலையாய் ரசிக்கும் உணர்ச்சி. அதுவே கலை. அதனால் கலை என்பது இது தான் என்று ஒரு வட்டம் போட்டு அதனுள் எல்லா வகைகளையும் அடக்கி விட முடியாது. பரிமாண வளர்ச்சியில் புது புது சிந்தனைகள் வருவது போல கலையும் மாறிக்கொண்டே இருக்கும்.

சரி.. இப்போது நாம் நம் படைப்புக்கு வருவ்வொம். எவ்வளவு பிரமாதமாக இருந்தாலும் ஒரே அறுசுவை உணவை எத்தனை நாள் தான் உண்ணுவது. இன்று நமக்கு அது போல ஒரு புதுவிதமான கலை விருந்து. திரு ஜீவா அவர்கள் அறிமுகம் , திரு பாலா அவர்களுது அறிமுகம் – ஓவியர் சாளுக்யன் அவர்களுது ஓவியம்.

தஞ்சை பெரிய கோயிலில் மிகவும் சிதைந்த சுதை சிற்பம். வர்ணங்கள் எல்லாம் விழுந்த வண்ணம் இருக்கும் இந்த சிற்பம் அவரது கண்ணை கவர்ந்துள்ளது. காலசம்ஹார மூர்த்தி சிலை – ஈசன் தன் பக்தனான மார்கண்டேயனை காக்க எமனை எட்டி உதைக்கும் சிற்பம். இந்த கதை நாம் இதே கோயிலில் வேறு சோழர் கால புடைப்பு சிற்பத்தை பார்த்த போதே பார்த்தோம். எனவே நேராக சிற்பத்திற்கு செல்வோம்.

கலை காலத்தை வென்றது என்பதை குறிக்க, சாளுக்யன் எடுத்துள்ள கரு – ஈசன் தன்னிடம் சரண் அடையும் மார்க்கண்டேயனுக்காக ` நீ என்றும் பதினாறு என்று வரம் அளித்து ( இன்று எத்தனை பேர் இந்த வரம் பெற முயற்சி செய்வரோ ) , இறையிடத்தில் முழுவதுமாக சரணாகதி அடையும் சிற்பத்தை, அவர் எடுத்துக் கொண்ட வெளிப்பாட்டு முறையும் வினோதம் -கரி கொண்டு தீட்டிய ஓவியம். மனிதன் வாழ்கையின் சுழற்சியை கண்டு சிரிக்கும் வண்ணம், நாம் அனைவரும் முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவது போலவும் ஒரு தேற்றம்…. அதுவும் ஈசனது தானே என்று உணர்த்தும் வண்ணம் அமைந்த ஒப்பற்ற ஓவியம்..

மனித வாழ்கை நிலை அற்றது, ஆனால் அவனால் படைக்கப்பட்ட, அவன் வெளிக் கொணர்ந்த கலை அழிவற்றது.

சாளுக்யன் அவர்களுது மற்ற படைப்புகளை காண.

http://www.chalukyan.com/


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான், சாம்பசிவ பக்தன் என்றால் தொடமாட்டான்

இன்று மீண்டும் திரு சதீஷ் அவர்களின் உதவியால், தஞ்சை பெரிய கோவிலிலுள்ள, எனக்கு மிகவும் பிடித்த சிற்பத்தின் அற்புத புகைப்படம் கிடைத்துள்ளது.

காரணம்? சிறு வயதில் என்னை உறங்க வைக்க என் தந்தையார் எனக்கு இந்த கதையை பாட்டாக படிப்பார். இன்றும் நினைவில் உள்ளது. என் மகனும் இந்த பாட்டைகேட்டால் தூங்கிவிடுவான்

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான்
சாம்ப சிவா பக்தன் என்றால் தொடமாட்டான்
சிவ சிவ சிவ என்ற நாமம் சொல்லடா
மானுடனே உனக்கிதில் பாரம் என்னடா

மார்க்கண்டேயனின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ம்ருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி பிள்ளைப் பேறு வேண்டி கடுந்தவம் புரிந்தனர். தவத்தின் பயனாக அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ,” அறிவிலர்களாய் நூறு பிள்ளைகள், இல்லையேல் அறிவு ஜீவியாய் பதினாறே ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன், இதில் ஒன்றை தேர்ந்து எடு்ப்பீர்களாக,” என்றார். எதிர்பார்த்தபடியே அறிவில் சிறந்த பிள்ளையை அவர்கள் வேண்ட அவ்வாறே ஒரு மகனை அவர்கள் பெறுகின்றனர். மார்கண்டேயன் என்று பெயர் சூட்டி, அன்பும், அறமும் திகழ வளர்கிறது குழந்தை.

பாலகன் பதினாறு வயதை நெருங்க நெருங்க, பெற்ற மனங்கள் பதறுகின்றன. பெற்றோரின் கவலை முகங்கள் கண்டு துளைத்துத் துளைத்துச் சிறுவன் வினவ,அவர்களும் தங்கள் தவப்பயனாக அவன் பிறந்தாலும், அதிலுள்ள நிபந்தனையான 16 வயதில் மரணமெனும் செய்தியையும் கூறி அழுகின்றனர். காலனின் ஈசனே தனக்கு நித்திய பூஜா மூர்த்தியாய் இருக்கையில், மரணம் தன்னை நெருங்காது எனும் தீர்க்க முடிவோடு, மார்க்கண்டேயன் தினந்தோறும் சிவ லிங்க பூஜையில் ஈடுபடுகிறான். அவ்வாறே, குறிப்பிட்ட நாள் வருகையில், எமன் தனது பாசக் கயிற்றை வீச தக்க தருணத்தை எதிர் நோகியுள்ளான்.

மார்க்கண்டேயனோ, எமனுக்கு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்தவாறு உயிர் பிச்சைக்கான பூசையிலுள்ளான்! காலம், காலன் இரண்டும் நிற்காதல்லவா? பொறுமை இழந்த எமன் தன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயனை நோக்கி வீசுகையில், சிவலிங்கத்திலும் சேர்ந்தே விழுகிறது. தன் பக்தன் தன்னை ஆலிங்கனம் செய்து பூசை செய்வதைக் கூட மதியாமல், தன் பணியை செய்த (!) எமனின் செயலால் கோபம் கொண்ட சிவன், லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, காலால் காலனை எட்டி உதைக்கிறார். ஆனால், காலன் தனது பணியைச் செய்வதையே சிவனாரே தடுத்த மாதிரி ஆகிவிடுமல்லவா? எனவே, மார்க்கண்டேயனின் ஆயுள் ‘என்றும் பதினாறு’ என்ற அரிய வரம் தந்து அருள்கிறார்.

இதுவே கதை – இப்போது சிற்பம். மூன்று காட்சிகள் – மேல் இருந்து கீழ்.
முதல் காட்சி:

காலன் மார்கண்டேயனை துரத்தி வர, அவன் சிவ லிங்கத்தை கட்டிக்கொண்டு இருப்பது போல அற்புதமான சிற்பம்.

அடுத்து, ஈசன் காலனை உதைத்து கீழே விழும் எமன். ( ஒரு வருடம் முன்னர் நண்பர் ஸ்ரீவத்சன் எடுத்த படத்தையும், இப்போது சதீஷ் எடுத்த படத்துடன் ஒப்பிட்டிப் பாருங்கள் – ஈசன் கையில் இருக்கும் சூலம் – இப்போது முழுவதுமாக சிதைந்து விட்டது !!!)

கடைசி காட்சி – சாகா வரம் பெற்ற மார்கண்டேயன் தன் இரு கை கூப்பி ஈசனை வணங்குகிறான்

இதோ அப்பர் இந்த கதையை அற்புதமாக பாடியிருக்கும் தேவாரம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4107&padhi=113+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு, வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி, மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment