சிற்பக்கலை – ஒரு சிறந்த சரித்திர புதின ஆசிரியரின் பார்வையில்

எனது வழிகாட்டியாக விளங்கியவர்கள் பலர் – அவர்களுள் மிகவும் முக்கியமானவர் திரு திவாகர் – அவர் வம்சதாரா, திருமலை திருடன் , விசித்ர சித்தன் என்று மூன்று அழகிய சரித்திர புதினங்களின் வெற்றி ஆசிரியர்.Vamsadhara.blogspot.com
183818361840
என்னை தினம்தோறும் ஊக்குவிக்கும் ஒரு நல்ல மனிதர். அவருடைய பார்வையில் சிற்பம் …..

விஜய் அவர்களின் இந்த வலைப் பகுதி சிற்ப வரலாற்றின் அழிந்து போன அந்த காலகட்டத்தை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஒரு கல்லையும் சிற்றுளியையும் மட்டுமே வைத்துக் கொண்டு எத்தனை வகை சிற்பங்கள் வடித்துள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அந்தக் கலைஞர்கள் மீதும், அவர்கள் கொண்ட அந்தக் கலைக்காதல் மீதும் ஆச்சரியம் நமக்கு உண்டாவது இயற்கைதான்.

தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கற்சிலைக் கலை 15 ஆம் நூற்றாண்டு வரை செழித்து எத்தனையோ ஆயிரக்கணக்கான வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. ‘உளியின் இனிய ஓசை’ ஊரெங்கும் கேட்டுக் கொண்டே இருந்திருக்கவேண்டும். இப்போதும் இந்தக் கலை நசியவில்லை என்பது ஆங்காங்கே கட்டப்பட்டுவரும் புதிய கோயில்கோபுரங்களில் தெரிகின்றது என்றாலும் தற்சமயத்து சிலைகளுக்கும் ஐந்நூறு வருடங்களுக்கு முன்வரை செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கும் ஒரு முக்கிய வேற்றுமை உண்டு. புராணக் கதைகளில் வரும் நீதிக்கதைகளை முன்வைத்து அந்தக் கதைக்கேற்றவாறு சிற்பங்கள் வடிப்பார்கள். ஒரு நல்ல கதையை வைத்து தற்காலங்களில் எடுக்கப்படும் திரைப்படம் போல அந்தச் சிற்பங்கள் உடனடியாக நம் மனதில் பதிந்துவிடும். இந்த சிற்பங்கள் நல்ல வகைக் கல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செதுக்கப்படுவதால் காலாகாலத்திற்கும் நிலைத்து நின்றது.. நிற்கிறது.. இன்னமும் கூட (மனிதன் தலையிட்டு பாழ்படுத்தாமல் இருந்தால்) நிற்கும். ஆனால் தற்போது செதுக்கப்பட்டு வரும் சிற்பங்கள் ஒரு தனிப்பட்ட வகையிலேயே செதுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமெரிக்க நாட்டு அட்லாண்டா வில் புதிதாகக் கட்டப்பட்ட சுவாமிநாராயண் கோயில் தூண் ஒன்றின் சிற்பம் பார்வைக்கு வந்தது. மிக மிக அழகாக இருக்கிறது. ஆனால் உயிரோட்டம்?… இந்த உயிரோட்டம் அந்தக் காலத்துச் சிற்பங்களில், அந்தச் சிற்பம் சொன்ன கதைகளில் இருந்ததே..
1842
அந்தக் காலத்து சிற்பிகள் ஒரு கைவேலைக்காரர் மட்டும் அல்ல. நம் பழைமையான கலாசாரத்தையும், பண்பாட்டையும் நன்கு புரிந்துகொண்ட சான்றோர்கள் என்றே சொல்லவேண்டும். தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள். புராணங்கள், பாகவதம், இராமாயணம் மற்றும் மகாபாரதம் நூல்களில் நல்ல பரிச்சயம் இருந்திருக்கிறது. இந்த நூல்களின் மீது மிக நுண்ணியமான தெளிவு பெற்றிருந்தார்கள் இந்தச் சிற்பிகள். ‘கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’ என்ற சொல்லுக்கேற்ப இந்த சிற்ப சாத்திரத்தை அறிஞர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு கற்றார்களோ என்ற அளவில் ஏராளமான சிற்பச் செல்வங்களை எதிர்காலத் தலைமுறையினர்க்காக அள்ளித் தந்தனர்.

இப்படிப்பட்ட அருமையான சிற்பச் செல்வங்களை தன் வசம் கொண்ட இந்த அழகான வலைப் பூவில் விஜய் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக ஒரு புராணக் கதையை நான் எழுத விஜய் சேகரித்த சிற்பங்களோடு… .

பிட்சாண்டவன்.
18311823
சிவம் என்றால் அன்பு, சிவம் என்றால் பழைமை, செம்பொருள் என்று எத்தனையோ பொருள்களை அகராதியில் காணலாம். சிவம் என்றால் இயற்கை கூட.. பூவுலகையே வெள்ளக்காடாக்கி அழிப்பது போல சீறிப் பாய்ந்த கங்கையை தன் விரிசடையில் தாங்கி அவளை மெல்லிய நீரோடையாக தவழவிட்டு இந்த உலகைக் காத்தவன் ஆயிற்றே.. இந்தப் பூமியை விட சற்றே சிறிய கிரகமான சந்திரனுக்கும் தன் தலையில் இடம் அளித்தவனுக்கு இந்த மான், மழு, பாம்பு, கையில் நெருப்பு, புலித்தோல் என்று எல்லாமே இயற்கை சம்பந்தப்பட்டவைகளை அணிகலன்களாகக் கொண்டவன், ஏன் அரக்கனான முயலகனையும் பாதத்துக்கடியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்?.. ஒருவேளை அரக்ககுணம் கூட இயற்கையோ என்று எண்ணவும் தோன்றுகிறதல்லவா.. கங்கையும் நிலவும் அவன் செஞ்சடையில் குடிகொண்ட கதை அறிவோம்.. ஏனைய இயற்கை அணிகலன்கள் எப்படி அவனிடத்தே சேர்ந்தன?..

பொதுவாக புராணக்கதைகள் என்றாலே சற்று பயம்தான்.. பயத்துக்குக் காரணம் ஏராளமான கற்பனைக் கதைகள் கண்டபடி மலிந்திருக்கும். பல கதைகள் இப்படித்தான் என்றாலும் சில கதைகள் நம்முடைய சிந்தனைக்கு மருந்தாகவும் விருந்தாகவும் அதே சமயம் நம் முன்னோர்கள் காலம் எப்படிபட்டதாக இருந்தது என்பதையும் நமக்கு விளங்கவைக்கும். அதுவும் இக் கதைகளைப் பற்றி சமயக் குரவர் நால்வர் தம் தேவாரம் – திருவாசகம் மூலம் பாடி இருந்தால் கேட்கவே வேண்டாம். அந்தப் புனிதமான தெய்வப் பெரியவர்கள் வாக்கு சத்திய வாக்காயிற்றே. இப்படித்தான் தாருகாவன முனிவர்களின் கர்வ பங்க கதையும். இவர்களால்தானே சிவனுக்கு இத்தனை இயற்கை அணிகலன்கள் கிடைத்தன!..
181618201833
நம் பாரதம் புராதனச் செல்வத்தில் சிறப்பு வாய்ந்தது. சனாதன தர்மம் என்ற பொதுப்பெயர் கொண்டு ஆதிகாலம் தொட்டு சமய வேற்றுமையில்லாமல் தர்மம் என்ற பொது விதியின் கீழ் நம் மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர்கள் முனிவர் பெருமக்கள். கானகங்களில் வாழ்ந்து தங்கள் வாழ்க்கை முறையை மிக எளிமையாக்கிக் கொண்டு அதே சமயம் கானகத்துக்கு வெளியே நாகரீகமாகவும், தர்மமுறை சிதறாமலும் உலகம் உய்ய பெரு வழிவகைகளை மனித குலத்துக்கு அள்ளித் தந்தவர்கள் அந்த முனிவர்கள். நம் முன்னோர்கள் என்றால் இவர்கள்தான். வேத நெறி வாழ்க்கையும் ஆண்டவன் மீது பக்தியும் இவர்கள் மூலம்தான் நாம் கற்றுக் கொண்டோம். சுயநலமற்ற அவர்கள் எளிமையும் ஆண்டவன் மீது கொண்ட தூய பக்தியும் ஆண்டவனையே எப்போதும் அவர்கள் அருகிலேயே இருக்கவைத்தது.

பொதுவாகவே முனிவர்களைப் பற்றி நாம் பெருமையாக சொல்லிக்கொண்டே போகலாம்தான். ஆனால் எங்கும் எதிலும் சில நெருடல்கள் உண்டுதானே.. தாருகாவனத்து முனிவர்களின் நெருடல் கூட இந்த வகைதான்.

தாருகாவனத்து முனிவர்கள் ஏனைய முனிவர்களை விட சற்று வேறுவிதமாக சிந்தித்தார்களோ என்னவோ.. எதையும் எப்போதும் அள்ளிக் கொடுக்க வேதமும் ஆகம முறைகளும் ஏராளமாக இருக்க, அதற்குத் தகுந்தாற்போல கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர தேவர்களும் காத்திருந்து இவர்கள் வேண்டியதை யாக குண்டத்திலிருந்தே வரவழைத்துத் தர, இனிமேல் அங்கு ஆண்டவனுக்கு என்ன வேலை என நினைத்தார்களோ என்னவோ.. சிவனும் கேசவனும் தெய்வ ஆராதனைக்கு உரியவர்களா.. அவர்களால் தமக்கு உதவாத பட்சத்தில் அவர்கள் கூட மனித ஆன்மாக்களில் ஒன்றுதான்.. இவர்களை நாளும் நினைப்பதால் அப்படி என்ன பெரிய பலன் கிடைக்கப் போகிறது.. என்ன பெரிய பக்தி வேண்டிக்கிடக்கிறது இவர்களிடத்தில்..

(இப்படிப்பட்ட ஒரு கருத்தினை மீமாம்சை என்று சொல்வார்கள். வேதம் போதித்த மந்திரங்களும், அதற்கான பலன்களும் இருக்கையில் கடவுள் என்று ஒருவன் தேவை இல்லை என்று சொல்கிறது மீமாம்சை நூல். மீமாம்சை என்பது வேதத்தின் கர்ம காண்டத்தை ஆய்வு செய்து சைமினி எனும் முனிவர் முதன் முதலில் நூலாக எழுதினார். இந்தக் கருத்தின்படி செல்லுமாறு தன் சீடர்களைப் பழக்கினார். சரபமுனிவர் இந்த மீமாம்சை நூலுக்கு உரை விளக்கம் செய்தார். பின்னர் மேலும் அதில் சிற்சில மாறுதல்கள் பாட்டாச்சாரியர் மற்றும் பிராபகர முனிவர்களால் அந்த மீமாம்சையில் செய்யப்பட்டது. எது எப்படியிருந்தாலும் கடவுள் என்ற ஒருவனின் தேவை கிடையாது என்பதில் மட்டும் முடிவாக இருந்தனர்.)

ஆண்கள் தவறு செய்தால் பெண் அதைத் தடுத்து அந்தத் தவறில் இருந்து திருத்த வேண்டும் என்பது கூட தர்மத்தின் வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் தாருகாவனத்து முனிபத்தினிகள் தங்கள் கணவன்மார் கருத்தை ஆதரித்தார்கள்., அவர்களுக்கு தங்கள் முனிவர்களின் ஆற்றல், அந்த ஆற்றல் மூலம் கிடைத்த பலன்கள் அதுவும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் சுகம் கிடைக்கும் வழிவகைகள் அனைத்தும் பிடித்துப் போய்விட்டன.

கற்பில் சிறந்தவர்கள் தாங்கள்தான்.. அந்தக் கற்பின் பலனாகவே தங்கள் கணவர்களுக்கு அத்தனை ஞானங்களும் கிடைக்கின்றன என்ற சிந்தனை அவர்கள் மனதில் வேகமாகப் பதிந்தது. அந்த கற்புக்கு கணவர்களான முனிவர்களே பயப்படும்போது, அந்த சிவனும் கேசவனும், அப்படி என யாராவது இருந்தால் கூட, பயப்படத்தான் வேண்டும்.. இந்த ஒரு நினைப்பு அவர்கள் கர்வத்தை மேலும் அதிகம் ஆக்கியது.

இறைவன் இந்தத் தாருகாவனத்து முனிவர்களுக்கும் முனி பத்தினிகளுக்கும் பாடம் புகட்ட முடிவு செய்தான். சிவன் அழகான ஆண் உருவெடுத்து, உடையில்லாமல், கையில் ஓடேந்தி ‘பிச்சை போடு பெண்ணே’ என்று அந்த முனிபத்தினிகளிடம் கேட்டுக் கொண்டே ‘பிட்சாண்டவனாய்’ அந்த வனத்தே நடை போட்டுச் செல்ல, சொக்கத் தங்கமாக மின்னிய அவன் உடல் வனப்பிலும், இளமையின் அழகிலும் மயங்கிய அந்த பத்தினிப்பெண்கள், தாங்கள் கற்புடைய பெண்டிர் என்ற நினைப்பையே இழந்து அவன் பின்னேயே சென்றார்கள்.
18281825
அதே போல மயக்கும் மோகினி உருவம் கொண்ட விஷ்ணு ஒய்யாரமாக முனிவர்கள் முன்னே வந்து அன்ன நடை போட்டு அசைந்தாடி செல்ல, அந்த அழகு மோகினியின் பின்னேயே முனிவர் கூட்டமும் தங்கள் மனங்களை சிதறவிட்டுக் கொண்டே சென்றது.. இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்தபோது உண்மை வெட்டவெளிச்சமாகியது. முனிபத்தினிகள் உண்மை நிலையறிந்து வெட்கத்தால் தலை குனிய ஆண்மக்களான முனிவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தில் ஆத்திரம்தான் வந்தது. உடனே ஒரு யக்ஞம் ஆரம்பித்து எரியும் தீயிலிருந்து கொடும் புலியை வரவழைத்து சிவன் மீது ஏவினர் (இந்த வேள்விக்குப் பெயர் அவிசார வேள்வி என்று சொல்வார்கள் – இது மிக மிகக் கொடிய முறையான வேள்வி, இதையே ராமாயண போரின்போது தன் கடைசிப் பிரயத்தனமாக இந்திரசித்து செய்யமுயன்ற போது, இந்த யாகத்தை எப்படியும் அழித்தே தீரவேண்டுமென்றும் இல்லையேல் அகில உலகத்துக்கும் ஆபத்து என்று எல்லாம் அறிந்த வீடணன் வேண்ட, அந்த யாகத்தையே அம்பு கொண்டு இராமன் அழித்தான் – யுத்தகாண்டம்)

இப்படிப்பட்ட கொடிய அவிசார யாகத்தீயிலிருந்து வெளிப்பட்டு முதலில் வந்த புலியைக் கொன்று அதன் தோலை இறைவன் தன் பொன்னார் மேனிக்கு ஆடையாகப் போட்டுக் கொண்டான். முனிவர்கள் விஷக்கொம்பு கொண்ட மானையும் கூரான மழுவையும் வேள்வித்தீயிலிருந்து அனுப்பினார்கள். அவைகளை அவன் அநாயாசமாகப் பிடித்து தன் கையில் வைத்துக் கொண்டான். விஷப்பாம்புகளை ஏவினர்.. உடல் முழுதும் சுற்றிக் கொண்டு நாகாபரணன் ஆனான். எதையும் செய்யத் தயங்காத முனிவர்கள், ஆத்திரத்தில் தாம் என்ன செய்கிறோம் என்பதையே உணராத முனிவர்கள், தாங்கள் செய்த வேள்வித்தீயையே அவன் மீது ஏவினர். அதையும் அவன் திருவோட்டில் பிடித்துக் கொண்டான். முனிவர்கள் கதறினர். காலில் விழுந்தனர்.

இந்த மான், மழு, தீயேந்தியதைப் பற்றி தேவாரத்திலும் சரி, திருவாசகத்திலும் சரி, நிறைய இடங்களில் சின்னச் சின்ன வரிகளாக வரும். ஒரு சில வரிகளை மட்டும் எடுத்துக் காட்டுகளாக:

‘மானை இடத்ததோர் கையன்’ (அப்பர் தேவாரம்); ‘பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கசைத்து’ (சுந்தரர் தேவாரம்) தம்பிரான் ஆவானும் தழல் ஏந்தும் கையானும்’,; மழுவாள்வலனொன்றேந்தி (திருஞானசம்பந்தர்) முன்னோன் காண்க, முழுதோன் காண்க, கானப்புலியுரி அரையோன் காண்க (மாணிக்கவாசகர்).

முனிவர்கள் இந்த மானிடம் தழைக்க வந்த மகாத்மாக்கள் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட முனிவர்களே தவறு செய்கிறபோது இறைவன் அவர்களைத் தண்டிக்காமல் பாடம் மட்டுமே புகட்டுகிறான். இந்தக் கருணை முனிவர்களுக்காகவோ அவர்களின் ஆற்றலுக்காகவோ அல்ல. மனிதர்களுக்காகவே, அவர்களின் முன்னோர்களான முனிவர்களின் மீது அவன் கருணை கொண்டு திருத்துகிறான் என்று கொள்ளவேண்டும். பக்தி அதுவும் இறைவன் மீது உள்ள பக்திதான் ஆதாரமானது. கதிரவனின் ஒளி போல, தீயின் சுடர் போல, மலரின் மணம் போல. பக்தியைப் பற்றி சொல்வார்கள். ஒளியில்லாமல் கதிரவன் தேவைப்படமாட்டான். சுடரும் சூடும் இல்லாவிட்டால் தீயேது? மணமில்லாத மலர் யாருக்கும் பயன் தராது. பக்திதான் அனைத்துக்கும் ஆதாரம். அந்த பக்தி கொண்டு பிட்சாண்டவரைப் பாருங்கள்.. அவன் மகத்துவம் தெரியும்.

திவாகர்
Vamsadhara.blogspot.com!

திருக்குறுங்குடி – ஒரு முதல் பார்வை , திரு கண்ணன்

பல காலம் என் தாயகத்தில் வெட்டியாக கழித்த பின்னர், என் தாய்மொழின் அருமையை அறியாமல் இருந்த பொது ( கலை தாகம் அப்போதும் கொஞ்சம் இருந்தது ), திரு திவாகர் அவர்கள் என்னை மின்தமிழ் என்னும் ஒரு அரிய குழுமத்திற்கு அழைத்தார். அங்கே நான் என் தாய் மொழியை மீண்டும் கற்றேன், சிறுக சிறுக நடை பயிலும் குழந்தை போல முதலில் ஒரு சில வரிகள் மட்டும் சிற்பங்களை விளக்க இட்டு, பலரின் ஊக்குவிப்பால் பின்னர் சிற்பம், பக்தி இலக்கியம் என்று பலவிதமான துறைகளின் ஒற்றுமையை பற்றி எழுதினேன். அப்போது திரு கண்ணன் அவர்களை சந்தித்தேன், தமிழ் இணைய தளங்களில் மிகவும் பிரபலமானவர், எனினும் நான் எழுதும் சிறிய மடல்களை ரசித்தார், திருத்தினார், பல அரிய பாடல்களை தந்து உதவினார். நண்பர் அசோக் அவர்கள் திருக்குறுங்குடி சிற்பங்களின் படங்களை எனக்கு அனுப்பியவுடன், இந்த அருமையான சிற்பங்களை பற்றி எழுத திரு கண்ணன் அவர்களே சரி என பட்டது. கேட்டவுடன் ஒரே நாளில் இந்த அருமையான மடலை தந்தார் திரு கண்ணன்.

கல்லிலே சிலையை எல்லோரும் காண்கிறோம். ஆயினும் அதைக் கல்லிலே “கலை” என்று சிலராலேயே சொல்ல முடிகிறது. கலை என்பது மனோபாவம். ஒரு பட்டுப்பூச்சி மலரின் மீது நின்றது. அதைப்படமெடுத்தேன். அதன் அழகைக் கண்டவுடன் கவிதையாக ஒரு தலைப்புத் தோன்றியது, “பட்டாம்பூச்சி,பூவின் ஹைக்கூ” என்று. அதை வெறும் புகைப்படம் என்றும் சொல்லலாம், அல்லது அதன் அழகைக் கண்டு அது “கவிதை” என்றும் சொல்லலாம். எனவே கல்லிலே கலை வண்ணம் என்று காண்பது ஒரு மனோபாவம். கவிதா மனோபாவம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் புண்ணியவான்கள். இப்பதிவு காண்போர் புண்ணியவான்கள். இன்னொரு காரணத்திற்காகவும்!.

உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை
வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்,
குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,
உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே?

என்று பேசுகிறது திருவாய்மொழி! இங்கும் மனோநிலை பற்றிய பேச்சுத்தான். உலகில் தற்பெருமை பேசாதோர் உண்டோ? சிலர் அடக்கம் காரணமாக அதிகம் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளாதிருந்தாலும் “தான்” உளன் எனும் அகந்தை என்றும் உண்டு. இறைவன் மனிதனைக் கேட்டானாம், “பிள்ளாய்! நீ என்னைச் சேர்ந்தவன்!” என்று. அதற்கு மனிதன் சொன்னானாம் “யார் சொன்னது? நான் “என்னைச்” சேர்ந்தவன்” என்று. அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த இழுபறி. நாம் நம்மைச் சேர்ந்தோரா? இல்லை பரம்பொருளைச் சேர்ந்தோரா? கோடானகோடி ஜென்மங்களின் நினைவாக நம்மை ஒரு “ஆளாக” கருதிவருகிறோம். அப்படியொன்று இல்லவே இல்லை என்கிறார் நம்மாழ்வார். இருப்பதெல்லாம் அவனே! என்கிறார்.
உண்மை என்பதும், மெய்ம்மை என்பதும் வேறெங்கும் இல்லை, “திருக்குறுங்குடியில்” குடிகொண்டு இருக்கிறது என்கிறார். அந்த மெய்மையைக் காணவாவது நாம் திருக்குறுங்குடி செல்ல வேண்டாமா?

நாரணனின் அவதாரங்கள் பத்து என்பது பிரபலம். ஆனால் உண்மையில் அவை எண்ணற்றவை. இருப்பினும், ஆழ்வார்களின் மனத்தைக்கவர்ந்த அவதாரங்கள் என்று சில உள. அதில் வாமனனாய், குறளுருவாய் வந்து பின் திருவிக்கிரமனாகி ஏழுலகும் அளந்த கதை திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது!

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா
 மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
 அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில்
 வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று
 மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே

166016571666
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த “திருநெடுந்தாண்டகம்” எனும் கிரந்தத்தில் மூவுலகும் கடந்து, அதற்கு அப்பாலும் நிற்கும் முதல்வா! என்று நாரணனைப் போற்றுகின்றார். கஜேந்திர மோட்சத்தில் யானை “ஆதிமூலமே” என்று கூவுகிறது. கடவுள் வருவதற்கு முன் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், கிங்கரர்களும், மும்மூர்த்திகளும் வந்து விடுகின்றனர். ஏன்?
எல்லோருக்கும் தான் ஆதிமுதல் அல்ல என்பது தெரியும். எனவே, யார் அந்த “ஆதிமூலம்”? முதல் வித்து? என்று அறிய ஆவல். அப்போது தோன்றுகிறான் எம்பெருமான் கருட வாகனனாக! தனது வில்லும், வாளும், தண்டும், சக்கரமும், சங்கும் தரிக்க! இதை நம்மாழ்வாரும் கண்டு ரசிக்கிறார். இந்த அழகை சிற்பியும் கண்டு ஆனந்திக்க மிக, மிக அழகான சிலைகளை வடித்துத்
தந்துவிடுகிறான். இச்சிலைகளைக் காணும்போது கஜேந்திரனின் மனோநிலை நமக்கு வரவேண்டும். பணிவுடன் வணங்கும் பக்குவம் வரவேண்டும். தான் எனும் ஆணவம் நிற்கும் போது இரணியனுக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் நிகழும். அப்படிப்பட்ட மானிடரை சிறு கவிதை கொண்டு கூட பாட மாட்டேன் என்று கோபமுடன் சொல்கிறார் நம்மாழ்வார்.

நின்றிடும் திசைக்கும் நையுமென்று
 அன்னைய ரும்முனிதிர்,
குன்ற மாடத் திருக்குறுங்குடி
 நம்பியை நான்கண்டபின்,
வென்றி வில்லும் தண்டும்
 வாளும் சக்கரமும்சங்கமும்,
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா
 நெஞ்சுள்ளும் நீங்காவே

அந்த ஆதீமூலத்தைக் கண்ணாறக்கண்டபின் அது நம் நெஞ்சை விட்டுக்கூட நீங்குமோ? நீங்கக்கூடாது என்பதில் நம் சிற்பியும் கவனமாக இருக்கிறார். தெய்வீக அழகை தெய்வீக சிற்பமாக வடித்துவிட்டால்? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாயினும் கண்டு, ரசித்து, உள்ளத்தில் கொள்ள முடியுமே!

திருக்குறுங்குடி நம்பி திருவிக்கிரமன் மட்டுமா? அப்பாலுக்கு அப்பாலாய் உள்ள பரமூர்த்தி மட்டுமா? நம்மைப் போன்ற ஏழை எளியோருக்கு அது எட்டுமா? எட்டும் என்கிறான் சிற்பி. அந்த பரவாசுதேவனே பூவுலகில் கண்ணனாய்
1647165116691672
வந்துள்ளான். வெண்ணெய் திருடும் குள்ளனாய், கோபாலனாய், நவநீத சோரனாக!!

உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
 உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
 கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்
 சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
 ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே

இக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஆனந்தக் கூத்தாடுகிறார் பெரியாழ்வார். இதைக் கண்டவர் மகிழ்கின்றனர். கற்றவர் இதன் தத்துவம் அறிந்து தெளிவுறுகின்றனர். அத்தெய்வம் திருகுறுங்குடியாய் நிற்பதாகச் சொல்கிறது பெரியாழ்வார் திருமொழி.

165416751663
அப்படியெனில்? இங்கு நீங்கள் காண்பது சிற்பமல்ல. தெய்வம். கண்ணுறும் இக்காட்சியே தெய்வ தரிசனம்! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? தெய்வ தரிசனம் இவ்வளவு எளிதா? எளிதுதான். விண்ணிருந்து மண்ணிற்கு வரும் நீர்மையே அதற்கு அத்தாட்சி. அவன் இப்படிச் சிலையாய் நிற்பதும் ஓர் அத்தாட்சி! வாழ்க.

கடல் கடந்தும் தன் ஈர்ப்பை செலுத்தும் கலை – நாரத்த மலை

கடல் கடந்தும் தன் ஈர்ப்பை செலுத்தும் கலை – நாரத்த மலை

என்னை பற்றி படிக்கையில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் அதனை இன்றும் தினமும் அலசும் எங்கள் யாஹூ குழுமம் பற்றி பார்த்தீர்கள் ( www,ponniyinselvan.in). அந்த குழுமத்தில் எனக்கு கிடைத்த அரிய நட்பு – தமிழ்சரித்திர புதினத்தில் எழும் விவாதங்களில் திடீரென காதேரின் ப்ரோபெக் ( Ms. Katherine Brobeck) என்று ஒரு மடலை இட்ட பெண்மணி யார் என்று தனி மடல் எழுதினேன் – அசந்து போனேன்.

அமெரிக்க பெண்மணியான இவர் பல்லவர், சோழர் , சாளுக்யர் என்று பல அறிய இடங்களை இருபது வருடங்களுக்கும் மேலாக இந்தியாவிருக்கு வருடா வருடம் பயணித்து, நம் கலையை ரசிக்கிறார் என்று அறிந்தேன்.இந்த துறையில் அவர் அறிந்துள்ள விசயங்களை கண்டு வியந்தேன் ! தமிழ் கலையின் மேல் அப்படி ஒரு அலாதி பிரியம் அவருக்கு – தன்னை சிவ தாசி என்று புனை பெயர் சூட்டும் அளவிற்கு சென்றுவிட்டது அவரது பற்று.

அவரை இங்கே ஒரு மடல் எழுத அழைத்தேன் – அவரும் இசைந்து சரித்திர புகழ் பெற்ற நாரத்த மலை – அவர்களது சொந்த பயணத்தின் இடுகை. ( அவருக்கு தமிழ் தெரியாது – அதனால் அவரது ஆங்கில இடுகையை நான் மொழி பெயர்கிறேன் )

J.C.Harle’s “Art & Architecture of the Indian Subcontinent”, புத்தகம் படித்தவுடனே அங்கே செல்லவேண்டும் என்று எனக்கு ஆவல் வந்தது – நாரத்த மலை. புராண கதைகளில் அனுமன் சஞ்சீவனி மலையை இலங்கைக்கு தூக்கி செல்லும் பொது ஒரு பகுதி இங்கே விழுந்ததாகவும் அதனால் இங்கே மூலிகை செடிகள் அதிகம் என்று வழங்கி வருகிறது.

1995 அங்கே முதல் முறை சென்றேன். திருச்சியிலிருந்து ஒரு வண்டி பிடித்து புதுக்கோட்டைக்கு விரைந்தோம், கோயிலை தேடி கண்டுபிடிக்க வேண்டுமே. பெரிய மலையை கண்டு திகைத்தோம், அதற்க்கு அடியில் அழகிய குளம், கோயில் கண்ணுக்கு தென்படவில்லை. தேடி சென்ற பொது அந்த பக்கம் நீரின் மறுபக்கத்தில் ஒரு அய்யனார் கோவில் கண்டோம்.
1583
திடீரென, மரங்களின் நடுவில் இருந்து அற்புதமாக தோன்றியது – விஜயால சோழீஸ்வரம். அருமையான விமானம். தொலைவில் இருந்து பார்கையில் கோயிலின் வடிவமைப்பு உள்ளத்தை கொள்ளை கொண்டது.
1586
முத்தரையர் காலத்தில் ( சோழர்களின் ஆட்சியில் குறிநில மன்னர்கள் ) கட்டப்பட்ட கோயில் (866 CE ) – சிற்பிகள் கட்டுமானம் , சிற்பம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர் என்று நன்கு விளக்கும் இடம் இது. கோபுர சிற்பங்கள் சற்று சிதைந்து இருந்தாலும் எனக்கு தமிழ் கோயில்களில் மிகவும் பிடித்த கோவில் இது.
1588
இங்கே இருக்கும் த்வார பாலகர்கள் மிகவும் அருமை. எங்கும் வரிசை வரிசையாய் யாழி – விளையாடும் யானை மற்றும் யாழிகள் – ஒன்று மனித முகம் கொண்ட யாழி. அங்கும் இங்கும் சிதைந்த சிற்பங்கள் எங்கும் இருந்தன
1591

1609
கோவில் பின்னால் இரண்டு குகைகள் – ஒன்று சேமிப்பு குகையாக உபயோகம் செய்துவருகின்றனர் – மற்றொன்று சமணர் குகை – முதலில் சமணர் குகை, அதன் பின்னர் அதில் அழகிய விஷ்ணு வடிவங்கள் – வரிசையாக எனினும் ஒன்றுக்கொன்று சற்றே மாறுபட்டு இருந்தன. அற்புதமான சிற்பங்கள்.
15961612
கோயிலை சுற்றி ரம்மியமான இயற்கை அழகு, ரசித்தேன். சற்று நேரம் என்னை மறந்தேன்.
15981600
கிழே இறங்கும் பொது இன்னொரு அய்யனார் கோவில் எங்கும் குதிரை உருவங்கள் கண்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்தேன்.
1603
காதி ப்ரோபெக்

மல்லை கடற்கரை கோயில் – ஒரு முதற் பார்வை

Flickr.com நண்பர்கள் திரு பிரபாகரன் ( ஆதி ஆர்ட்ஸ் என்ற பெயரில் அவரது அற்புத புகை படங்கள் ) மற்றும் ரவேஜஸ் என்ற பெயரில் திரு சந்திர சூடன் கோபாலகிருஷ்ணன், நான் உங்கள் அருமையான படங்களை இந்த தளத்தில் இடலாமா என்று கேட்டவுடன், மிகவும் பெருந்தன்மையுடன் – தாராளமாக இடுங்கள் என்று கூறி ஊக்குவித்தனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
1570
மல்லை கடற் கரை கோவில் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே – எனினும் அங்கு இருப்பது மூன்று கோவில்கள் என்று பலருக்கு தெரியாது. சென்னை வாசிகள் அனைவருக்கும் தெரிந்த காட்சி – தொலைவில் இருந்தே இந்த உன்னத கலை கோவிலின் சிகரங்கள் நம்மை ஈர்க்கும். ஆயிரம் ஆண்டுகள் காற்று, மழை, கடலின் சீற்றம் அனைத்தையும் வென்று பல்லவர் கலை போற்றும் ஒரு அற்புத சின்னம். பொதுவாக எந்த ஓவியம், கட்டடம் போன்ற படைப்புகள் / காட்சிகளில் இருபுறமும் ஒரு சமநிலை வேண்டும் என்று வல்லுனர்கள் கற்றுக்கொடுப்பார்கள் – எனினும் இங்கே ஒரு கோபுரம் குட்டையாகவும் மற்றொன்று நெட்டையாகவும் இருந்தும், நம் கண்ணில் அதை அழகாக தெரிய வைத்த சிற்ப திறன் அற்புதம் .
15671576
அது என்ன மூன்று ஆலயங்கள் ? முதலில் இருந்த பெருமாள் சிலையை ஒட்டி இரு சிவன் கோவில்கள் பல்லவ காலத்தில் உரு பெற்றன – ராஜ சிம்ஹ பல்லவன், ஒரு அபூர்வமான அரசன் ( அவன் நிறுவிய சாளுவன்குப்பம் புலி குகை நாம் முன்பே பார்த்தோம் – அங்கு இருக்கும் பாயும் சிங்க தூண்களுடன் கடற்கரை கோவில் சிற்பங்களை ஒப்பிடுங்கள் – அவனது மற்றொரு படைப்பான காஞ்சி கைலாசநாதர் கோவில் சிங்கங்கள் ஒரு பார்வையிலேயே அத்யந்தகாமன் என்ற அவன் முத்திரையை பதிக்கும் – வரும் மடல்களில் இவற்றை காண்போம் )
1574

ஒரு புறம் இருப்பது (நாலு அடுக்கு கோபுரம் ) க்ஷத்ரிய சிம்மேஷ்வரா ஆலயம் – மறு புறம் இருப்பது ( மூன்று அடுக்கு) ராஜசிம்மேஷ்வர ஆலயம்.

இவ்விரு சிவ ஆலயங்களின் நடுவில் பெருமாள் – சோழர் கால கல்வெட்டுகளில் பள்ளி கண்டருலிய தேவர் என்று வழங்கியது.

திருமங்கையாழ்வார் மல்லைக்கு வந்து தலசயன பெருமாளைத் தரிசித்துப் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார்

“புலன்கொள் நிதிக்குவை யொடு
புழைக்கை மா களிற்றினமும்
நலங்கொள் நவமணிக் குவையும்
சுமந்தெங்கும் நான் றொசிந்து

கலங்கள் இயங்கும் மல்லைக்
கடல் மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தா ரவரை
வலங்கொள் என் மட நெஞ்சே!”

15721579

இங்கே வரும் தல சயனம் – இதை வரும் மடல்களில் பார்போம்.

இதோ தஞ்சை பெரிய கோவில் – முதற் பாகம்

அஜந்தா மற்றும் எல்லோரா முதற் பார்வை பார்த்தோம் – அப்போது தஞ்சை பெரிய கோவிலுக்கும் அதே போல ஒரு முதற் பார்வை இட வேண்டும் என்று நண்பர் பலரும்
கேட்டுக்கொண்டதின் பெயரில் இதோ தஞ்சை பெரிய கோவில் – இதற்கு முன்னரே ஒரு சிறு சிற்பம் வெளி வந்து விட்டது எனினும் இது இந்த தொடரின் முதற் பாகம்

சோழ பேரரசன் முதலாம் ராஜ ராஜன், ஒரு அற்புத மனிதன். அருள்மொழி என்ற இயற் பெயர் கொண்ட இவன், பட்டத்து இளவரசனான தனது அண்ணன் ஆதித்ய கரிகாலன் படுகொலையுற்ற பின் (969 AD) , தனது சிற்றப்பன் அரியணை மீது ஆசை கொண்டதனால் அவனுக்கே விட்டுக்கொடுத்து ( 985 AD) பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து பிறகு அரியணை ஏறி சோழ சாம்ராஞ்சியத்தை அதன் உச்சிக்கு இட்டு சென்று அதற்கு முடிசூடுவதுபோல ஒரு கோவிலை பிரமாண்டமாக கட்டி அதற்க்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூடினான்.

இதை திருவாலங்காடு தகடுகள் மூலம் நாம் அறியலாம் …. திரு கே ஏ நீலகண்டசாஸ்திரி சோழர்கள் புத்தகத்தில் … பக்கம் (pages 212 -213)

Verse 69 of the plates

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால்
ஆதித்தன் மறைந்தான், கலியின் வல்லமையால் ஏற்பட்ட
காரிருளைப் போக்க , அருண்மொழி வர்மன் அரசனாகுமாறு
அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் ஷத்ரிய தருமத்தை
நன்கு அறிந்த அருண்மொழி அரச பதவியை மனதார விரும்பவில்லை
என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரசப் பதவியை
விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீரு மட்டும்
அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரச பதவியை
மறுத்துவிட்டான் …..

என்று தெரிவிக்கின்றன

மேலும் verse 70 of the plates

அருண்மொழியின் உடலில் உள்ள சில அடையாளங்களை பார்த்தபோது,
மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூவுலகுக்கு
வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை
ஆளும் பொறுப்பை தானே மேற்கொண்டான்.

( அமரர் கல்கி இதனை எடுத்து அதில் தனது அமர காவியமான பொன்னியின் செல்வனை நமக்கு படைத்தார் )

இன்னொரு தகடு – ஈசலம் – திரு நாகசுவாமி அவர்களின் தளத்தில் மேலும் படியுங்கள்

http://tamilartsacademy.com/articles/article29.xml

அருள்மொழி – நீண்ட அழகிய கரங்களை உடையவன், உள்ளங்கையில் சங்கு சக்கர ரேகை கொண்டவன் – கங்கா , வங்கா , கலிங்கம் , மகதா , மாலவா , சிங்கள , ஆந்திர , ரட்ட (ராஷ்ட்ரகூட அல்லது மஹாராஷ்ட்ரா ) ஓட்ட (ஒரிசா ), கதஹா , கேரள , குத மற்றும் பாண்டிய …தேசங்களை வென்று – அதனால் குவிந்த செல்வதை கொண்டு தஞ்சை நகரியில் பெரும் கற்றளி அத்யுத்தமம் என்ற ராஜராஜேஸ்வரம் கோவிலை நிறுவினான்.
1324
தஞ்சை நுழையும் போதே விண்ணை தொடும் விமானம் கண்ணில் படும் ( கர்ப்பக்கிருகம் மேல் இருப்பது விமானம் – வெளி வாயில் கோபுரம் – பொதுவாக கோபுரம் விமானத்தை விட உயரம் இருக்கும் – எனினும் இங்கும் ராஜ ராஜனின் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரதிலும் விமானம் பெரியது – ஏன் ?)….சரி சற்று அருகில் செல்வோம் – அடுத்த மடலில்

மல்லை தவம் ..முதல் பார்வை

எங்களை பற்றி என்ற மடலில் நாங்கள் இட்ட படத்தை பற்றி விமர்சனங்கள் பல வந்துள்ளன…இங்கே இதை விட சிற்ப கலையை போற்றும் படம் இட்டு இருக்கலாம் என்று, எனினும் அந்த படம் இட்டதின் நோக்கம் அறிய பொக்கிஷங்களை அவற்றின் மதிப்பை அறியாமல் உள்ளோம் என்பதை உணர்த்தவே.

பின்னால் இருக்கும் மல்லை தவம் ….சரி அதற்கு ஈடு கட்ட ஒரு முழு தொடரையும் அற்பனிக்கிறோம்

இதோ மல்லை தவம் – ஒரு முதல் பார்வை.

பல்லவ சிற்பிகளின் சிந்தனை சிறகடித்து பறக்க, அவர்கள் கண்ட இந்த மலை அவர்களின் கைவண்ணத்தின் கீழ், நூறு அடி நீளம் நாற்பது அடி உயரமும் உள்ள கற்பாறை கலை பாறையாக மாறி , தமிழக சிற்பக்கலையின் விஸ்வரூபமாக உருபெற்று அதன் மனிமகுடாமாக திகழ்வதை பாருங்கள். இதை போல, இந்த அளவில், அதுவரை எவரும் சிந்தித்ததில்லை, அதன் பின்னரும் எத்தநித்ததில்லை. ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் கழிந்தும் நம்மை அசரவைக்கும் படைப்பு

முனிவரின் சாபத்தினால் சாம்பலான தனது முன்னோர்கள் உயிர் பிக்க கடுந்தவம் புரிந்து, விண்ணகர கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகிரதனின் உன்னத முயற்சி. இதை சித்தரிக்க இயற்கையாகவே பிளந்த பாறையை தேர்தெடுத்த சிற்பி, அதில் விண்ணவர், நாகர், பூலோகவாசிகள் , மிருகங்கள் என்று ஒரு உலகத்தையே செதுக்கி (அனைத்தையும் விளக்க இதை ஒரு தொடராக இட வேண்டும் ) …அதில் பல புதிர்களை வைத்து …முதல் புதிர் அர்ஜுனன் ஈசனின் பசுபத அஸ்திரத்தை தவம் செய்து பெரும் காட்சியை பிணைத்து ( இதை விளக்க அடுத்து வரும் சோதனை தவம் மடல் படியுங்கள் ) அதில் பூனை, எலி , யானை, வேடன் , சிவா பூதகனத்தின் வயிற்றில் புலி முகம் என்று பல சுவாரசியமான சிற்பங்களையும் உலவ விட்ட கற்பனை அருமை.

முதல் காணல் என்பதால் – நிறைய விளக்கம் இல்லை – நீங்கள் பார்க்கும் பிளவு முன்காலங்களில் மழை பெய்யும் பொது அருவி போல மழை நீர் கங்கை இறங்கும் கோலத்தை நடித்து காட்டும் வண்ணம் செதுக்க பட்டுள்ளது. கங்கையின் வலது புறம் ஒரு காடு .. இடது புறம் விண்ணவர்கள் இந்த அறிய காட்சியை காண விரைகின்றனர். வரம் அளிக்கும் ஈசனின் அதிகார தோரணை, மற்றும் வரம் பெறுபவரின் கடுந்தவத்தினால் எலும்பும் தோலுமாய் காட்சி ( அணு ஆயுதம் பெற தவம் …இப்போது இந்தியாவின் நிலை ??)

தொடரும்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment