மீண்டும் ஒரு பயனுள்ள டிசம்பர் இந்திய பயணம். நண்பர்கள் பலரின் உதவியுடன் இன்னும் பல பதிவுகள் இட மூலங்கள் கிடைத்தன. வழக்கம் போல சில கசப்பான காட்சிகள். எனினும் இதுவரை இல்லா வண்ணம் ஒரு திடுக்கிடும் காட்சி. பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தூண்கள் படும் அவமானம். முன்னர் ஒரு பதிவில் ஹனுமான் முதலை வயிற்றில் இருந்து வரும் சிற்பம் பற்றி எழுதினேன்.
Hanuman escapes from a crocodile -perur
அப்போதே அந்த பழைய புகைப்படத்தில் உள்ள தூண் இருக்கும் இடம் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. இம்முறை சென்று பார்த்தபோது புரிந்தது. அதில் இருப்பது இப்போது சிதைந்த நிலையில் ஆலயத்தினுள் இருக்கும் சிறு நந்தவனத்தில் இருந்த தூண்.
உடையாத தூண் ஆலய கோபுரம் அருகில் உள்ள கடையின் கதவில் மறைந்து உள்ளது.
இந்தப் படங்கள் சென்ற டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை ( 2009) . அப்போது அந்த சிறு நந்தவனத்தில் இன்னும் பல சிதைந்த தூண்கள் இருந்தன.
இம்முறை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்றதும் ( சற்று பயத்தோடுதான் ) அங்கே சென்றோம். அங்கே இருக்கும் தூண்களை பார்க்காமல் திரும்ப முடியுமா ?
வாகனத்தை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள சிற்பக் கூடத்தில் உள்ள சிற்பிகளுக்கு வணக்கம் சொல்லி விட்டு திரும்பியது தான் தெரியும் – எதிரில் அப்படி ஒரு கோரக் காட்சி
குப்பையும் சாக்கடையும் நிரம்பி வழிய வெளியே எறியப்பட்டுள தூண்கள். அருகில் சென்று பார்த்தேன் – பயத்துடன் தேடினேன். கண்கள் பார்ப்பதை மனது ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றது – அதே ஹனுமான் தூண்.
தங்க நகையும் வைர ஆபரணங்களுமே பொக்கிஷம் என்று இருக்கும் இந்நாளில், அவற்றையே பாதுகாக்க முடியாமல் இருக்கும் நிர்வாகம், இந்த சொற்ப கல்லில் என்ன இருக்கிறது என்று குப்பையில் எரிந்து விட்டது போலும். சோகம் பொல்லாதது.. யாரிடம் போய் முறையிடுவது..