ஏழாம் நூற்றாண்டில் வீரம் மிக்க ஒரு நாய் !

செம்மொழி, பழந்தமிழ் என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது ஓலைச்சுவடி மற்றும் கோயில் கல்வெட்டுகளே. இவற்றுடன் இன்னும் ஒரு முக்கியமானது ஒன்று உள்ளது. அவை தான் நடுகல் / வீரக்கல். அரவான் படம் வெளிவந்த பிறகு இவை பற்றிய செய்திகள் மேலும் தெரிந்துக்கொள்ள ஆர்வம் பலருக்கு வநதுள்ளது. நடுகல் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் இந்திய முழுவதும் கிடைக்கின்றன, இவை தன உயிரை ஊருக்காக விட்ட மாவீரனை வழிபடும் வண்ணம் அமைக்கப்பட்டன. அந்த ஊரின் கால்நடைகளை திருடர்களிடம் இருந்து காப்பது, புலி சிறுத்தை போன்ற காட்டு மிருகங்களிடத்தில் இருந்து காப்பது, ஊரை திருடர்கள் மற்றும் பகைவர்களிடத்தில் இருந்து காக்கும் பொது உயிர் துறந்தவனின் நினைவுச் சின்னங்களே இவை.

இப்படி இருக்க புகழ் பெற்ற வல்லுநர் திரு திரு மைகேல் லாக்வூட் அவர்களது பல்லவர் குறித்த ஆராய்ச்சி புத்தகத்தில் ஒரு குறிப்பை தேடும்போது அவரது குறிப்பில் ஒரு வினோத நடுகல் கண்ணில் பட்டது – செங்கம் நடுகற்கள் No 13 .

இந்த நடுகல்லில் உள்ள சிற்பத்தில் ஒரு வீரன் ஒரு கையில் வில் , மற்றும் குத்து வாள் கொண்டு நிற்பதும் அவனுக்கு பின்னால் ஒரு நாய் அமர்ந்திருப்பதையும் நாம் காணலாம்.

அதற்கு மேலே ஏழாம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது

மேல் பாகத்தில் ஒன்பது வரிகளும் அந்த வீரனை பற்றி பேசுகிறது.

நன்றி : ஆசி மற்றும் திரு மைகேல் லாக்வூட்

1. ​கேவி​சைய
2. மயிந்திர-பருமற்கு
3. முப்பத்து நான்காவது வாண​கோ
4. அ​ரைசரு மருமக்கள்​ பொற்​றொக்​கை-
5. ஆர் இளமகன் கருந்​தேவக்கத்தி தன்-
6. ​னெரு​மைப்-
7. புறத்​தே வா-
8. டி பட்டா-
9. ன் கல்

அதாவது : பாணர் தலைவனின் மருமக்கள் பொற்​றொக்​கை ஆர் இளமகன் ஆர்கருந்​தேவக்கத்தி யின் வீர மரணத்தின் குறிப்பு இது.

அடுத்து பக்கவாட்டில் இருக்கும் கல்வெட்டு இன்னும் சுவாரசியசம். உயிர் துறந்த வீரனுடன் நிறுத்தவில்லை அவர்கள், இன்னொரு வீரனையும் குறிப்பிடுகிறார்கள்.

10. ​[கோவிவ-] [read: ​​கொறிவ- ML]
11. ன்​னென்னு
12. ந்-நாய் இ-
13. ரு கள்ள-
14. ​னைக் கடித்-
15. துக் காத்திரு-
16. ந்தவாறு

கொறிவன் என்ற நாய் இரண்டு திருடர்களை கடித்து காத்திருந்ததாம்!!

படங்களுக்கு நன்றி : http://tamilnation.co/heritage/dolmens.htm
and http://www.tnarch.gov.in/epi/ins11.htm


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ரிஷபாந்திகா , வீணாதாரா, அர்தனாரி சிவன் – திரு லாக்வூட் அவர்களது பல்லவ கலை நூலில் இருந்து

நமது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு இந்த தளத்தில் திரு கிஃப்ட் சிரோமனி அவர்களது
தாக்கம் பற்றி தெரிந்திருக்கும்

பல்லவ துவாரபாலகர்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது?

அந்த பதிவில் நான் இவ்வாறு எழுதி இருந்தேன்

” நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

எனது பாக்கியம் சென்ற மாதம் சென்னை சென்றபோது அவரது மனைவியார் திருமதி ராணி சிரோமனி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது கணவரின் நெருங்கிய நண்பரான திரு மைக்கல் லாக்வூட் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவரும் மிகுந்த ஆர்வத்துடன் துவங்கினார் ” எனக்கு மாமல்லபுரத்தின் ஜாலங்களை அறிமுகப் படுத்தியவர் திரு கிஃப்ட் சிரோமனி ” என்று..

அவர் தனது ஆராய்ச்சிக் குறிப்புகள், நூல்கள் அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள அனுமதி தந்துள்ளார். இதற்காக நாம் திரு லாக்வூட் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம். இதோ அவர் தன இளமை பருவத்தில் வல்லம் குடைவரை அருகில். 1969 ஆம் ஆண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் (அப்போது அவருக்கு வயது முப்பத்தி ஆறு ) – நான் இன்னும் பிறக்க கூட இல்லை !

அவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள படியுங்கள்

Dr. Lockwood

அறிமுகம் கிடைத்தவுடன் மிகுந்த ஆர்வத்துடன் பல பல்லவர் சம்மந்தமுள்ள பதிவுகளை அவருக்கு அனுப்பினேன். அவரும் பொறுமையாக படித்து தன் கருத்துகளைத் தந்தார். அப்படி ஒரு பதிவில் நாங்கள் சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி என்ற தொடருக்காக திருக்கழுக்குன்றம் சென்றபோது அங்குள்ள ஒரு சிற்பம் பற்றி எடுத்துரைத்தார்.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

பல காலம் முன்னர் நடந்த விவாதம் பற்றி தெரியாமல், வெளிச்சுற்றில் இருக்கும் இந்த சிற்பத்தை ரிஷபவாஹன சிவன் என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். இதனை பற்றி விளக்கம் தரும் வகையில் தனது பல்லவ கலை என்னும் நூலில் உள்ள குறிப்புகளை திரு லாக் வூட் எனக்கு அனுப்பி வைத்தார். கருவறையின் உள்ள சுவற்றிலும் இதே சிற்பம் இருப்பதாகவும், வெளியில் இருப்பதை விட இன்னும் நல்ல நிலைமையில் இருப்பதால் நன்றாக ஆராய முடியும் என்றும் கூறினார்

அவரது குறிப்பைப் படிக்குபோது மல்லை கடற்கரை கோயிலில் உள்ள ஒரு சிறு ஆலயத்தில் உள்ளே இருக்கும் சிற்பமும் இதே வடிவம் என்ற அவரது கருத்து தெளிவானது.

நண்பர் அசோக் அவர்களது படங்கள் கொண்டு நாம் இன்னும் நன்றாகப் பார்க்க முடிகிறது

இதைப் பார்த்தவுடன் இது சிவன், வெறும் ரிஷப வாஹன சிவன் மட்டும் இல்லை வீணாதாரா என்று சொன்னால் – அப்படியே ஒப்புக்கொண்டு இருப்பேன். ஆனால் திரு லாக்வூட் அவர்கள் இது ஒரு அர்த்தநாரி வடிவம் என்று கூறுகிறார். பல்லவ அரசன் ராஜசிம்ஹ பல்லவன் தனக்கென்று ஒரு சில சிறப்பு சிற்பங்களை வைத்துள்ளான். அவற்றை நாம் மல்லை ஓலக்கனேஸ்வர கோயில், கடற்கரை கோயில் மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் என்று எங்கோ ஓரிடத்தில் திரும்ப திரும்ப பார்க்க இயலும்.

ஓலக்கனேஸ்வர ஆலயத்தில் இந்த சிற்பம் இல்லை. கடற்கரைக் கோயிலுக்கு செல்லும் முன்னர் கஞ்சி கைலாயநாதர் கோயில் சென்று தேடுவோம். அங்கே ஒரு வீணாதாரா சிற்பமும் ஒரு வீணாதாரா அர்த்தனாரி வடிவங்களும் உள்ளன.

படங்களுக்கு நன்றி திரு சௌராப் மற்றும் கிருஷ்ணமுர்த்தி மாமா

நாம் முன்னரே அர்த்தனாரி வடிவத்தை பற்றிய பதிவில் எப்படி இரு பாகங்களும் வேறு படுகின்றன என்று பார்தோம்.

சிற்பிக்கு “விடை”யே விடை

இப்போது கைலாயநாதர் சிற்ப்பத்தை அருகில் சென்று பார்ப்போம்.

அர்த்தனாரி என்று தெளிவாகிய பின்னர் வீணையை பார்ப்போம்.

சுமார் எட்டாம் நூற்றாண்டில் வீணை எப்படி இருந்தது என்று நாம் அறியமுடிகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று மேலே இருக்கும் பாகம் குடம் போல இல்லாமல் , திருப்பி பொருத்தப்பட்ட குவளை போல உள்ளது. இதனை மார்புடன் அணைத்து வாத்தியத்தை வாசிக்கும் பொது கலைஞன் இசையுடன் எப்படி இணைத்து வாசித்து இருப்பான் என்று யூகிக்க முடிகிறது. இந்த விதமான வாத்தியம் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். புதுகோட்டை பைரவர் ( நன்றி காத்தி ), பாதாமி அர்த்தனாரி ( நன்றி பிகாசா ) , நேபாளத்து சரஸ்வதி ( நன்றி காலதர்ஷன )

தற்போதைய வீணை இப்படி இருக்கிறது. மேலே இருக்கும் குடம் போன்ற பகுதிக்கு சரோக்கை என்று பெயர், ஆனால் அதற்க்கு இப்போது வேலை உண்டா என்று தெரிய வில்லை.

ஆனால் அந்நாளைய வீணையை போல இந்த திருப்பி பொருத்தப்பட்ட குவளை போன்ற வீணைகள் இன்றும் இருக்கின்றனவா ? அதை மீட்டும் பொது இசையுடன் கலக்கும் உணர்ச்சிகள் …

சரி, மீண்டும் நமது சிற்ப புதிருக்கு வருவோம். இந்த சிற்பம் ஒரு வீணாதாரா அர்த்தனாரி ரிஷபவாகன சிவன் என்று சொல்கிறார் திரு லாக்வூட். அதற்கு சான்றாக இந்த இரு படங்களையும் தருகிறார்.

படம் A கைலாயநாதர் ஆலயத்தின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது. பார்ப்பதற்கு மல்லை மற்றும் திருக்கழுக்குன்றம் சிற்பம் போலவே உள்ளது.

படம் B வீணாதாரா அர்ததனாரி ஆனால் இங்கு ரிஷப வாஹனம் இல்லை அதற்கு பதில் அரியணையில் அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. இந்த சிற்பம் நான்கு புறமும் சிற்பம் கொண்ட பாறையின் ஒரு பக்கத்தில் உள்ளது. இந்த சிற்பம் மல்லை கடற்கரை கோயிலின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது.

மேலும் அவர் கூறுகையில் முன்னர் பார்த்த கைலாயநாதர் வீணாதாரா அர்த்தனாரி வடிவமும் அரியணை மீது அமர்ந்த வண்ணம் உள்ளது. இது மேற்கு புறம் வெளிச்சுவரில் உள்ளது

முடிவாக இந்த புதிரின் விடை மூன்று இடங்களில் உள்ளது. ஒன்று திருக்கழுகுன்றம் கருவறை சிற்பம் – கைத்தேர்ந்த ஓவியர் யாரையாவது வைத்து நேரில் பார்த்து வரையவைத்துப் பார்க்கலாம். மற்ற இரண்டு சிற்பங்களும் தற்போது எங்கே உள்ளன.. தேடிப்பார்க்க வேண்டும்.. படங்கள் எடுத்த ஆண்டு 1969.

பல்லவ கலைகள் நூல் 1997 ஆம் ஆண்டு மறுபதிவின் பொது திரு லாக்வூட் எழுதிய குறிப்பு

இரு சிற்பங்களும் தற்போது தொல்லியல் துறை மல்லை அருங்காட்சியகத்தில் உள்ளன !!

தற்போது இந்த இரு சிற்பங்களும் எங்கு உள்ளன என்று ஆர்வலர் தேடி படம் பிடித்து தர வேண்டுகிறோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment