இன்று மீண்டும் தஞ்சை பெரிய கோவில் சிற்பம் – நன்றிகள் திரு சதீஷ் ( படங்களுக்கு ), திரு திவாகர் ( அருமையான தமிழில் வள்ளியின் கதையை எழுதி கொடுத்ததற்கு )
முருகன் கோயில் – தஞ்சை பெரிய கோவில் வளாகம் – மயில் மீது முருகன் , அவனை சுற்றி வள்ளி திருமணம் கதை விளக்கும் சிற்பங்கள் .



தொண்டைவள நாட்டிலே உள்ள வள்ளிமலை போலவே அங்கு வாழும் வேடர்களும் அவர்கள் தலைவனுமான நம்பியும் தங்கள் தருமத்திற்கு ஏற்ப சிறந்து விளங்கினர். ஆனாலும் அந்த நம்பிக்கும் ஒரு குறையுண்டு. குழந்தை இல்லையே என்ற ஒரு குறைதான். அதுவும் பெண் குழந்தை என்றால் நம்பிக்கு மிக மிக விருப்பம்.
சித்தர்கள் வாழும் அந்த அழகான வள்ளிமலையின் ஒரு ஓரத்திலே சிவமுனி எனும் தவயோகி தன் தவத்தில் ஈடுபட்டிருந்தார். அந்தத் தவக் கோலத்தில் இருக்கும் சிவமுனிக்கும் ஒரு சோதனை ஒரு அழகிய புள்ளிமான் வடிவில் வந்தது. தன் தவம் முடிந்து குடிலில் இருந்து வெளி வரும் வேளையில் அந்தப் புள்ளி மான் துள்ளலாக அவர் முன் ஓடிவந்தது. புள்ளிமானின் ஒய்யார அழகு ஒருகணம் அந்த தவமுனிவரை மயக்கியதன் காரணம், அவர் தவவலிமையால் புனிதமான பலிதமாகி, அந்தப் பெண்மான் கருவுற்றது.
அந்தப் புள்ளிமான ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்து, அங்கிருக்கும் வேடர்களின் வள்ளிக் கிழங்குக் குழியில் விட்டு விட்டு ஓடிவிட்டது. ஆதரவற்ற அந்த ஒளி வீசும் அழகான பெண் குழந்தையை தெய்வம் தந்த குழந்தையாக வேடர்களின் தலைவன் பாவித்து, வள்ளி என்றே பெயரிட்டு வளர்த்துவந்தான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செல்லமாக வளர்க்கப்பட்டாலும் அந்த அழகு வள்ளி தங்கள் வேட்டுவக் கடவுளான வேலவனையே மனம் முழுவது வரித்து, அந்த ஆறுமுகத்தான் கந்தனுக்காகவே தான் பிறப்பிக்கப்பட்டதாகவே அவனையே நினைத்து வாழ்ந்து வந்தாள்.
கன்னிப் பருவத்துப் பெண்களை சோளக் கொல்லைக் காவலுக்கு வைப்பது வேடர்களின் வழக்கம். சோளப்பயிர்கள் மேலோட்டமாக வளர்ந்து சோளம் (தினைப் பருப்பு) அதிகம் வளரும் பருவத்தில், அந்தத் தினைப் பயிர்களின் மத்தியில் ஒரு பரண் அமைத்து அந்தப் பரண் மேலிருந்து குருவிகள், கிளிகள் வாராமல் இருக்க பருவப் பெண் வள்ளி காவல் காத்திருக்கும் ஒரு சுப வேளையில் வள்ளியின் மனதில் என்றும் கோயில் கொண்டுள்ள கந்தன் தன் மலைக் கோயிலை விடுத்து அவள் மனக்கோயிலின் நாயகனாய் வர எண்ணம் கொண்டான்.
சிற்பத்தை பாருங்கள் – பரண் மீது வள்ளி , கையில் உண்டிகோல். அருகில் என்ன மரம் ?



அகிலத்தையும் ஆளும் ஆண்டவனான கந்தனுக்கு, ஏனோ தன் காதலியிடம் கூட சற்று விளையாடிப் பார்க்கலாமே என்ற எண்ணம் வந்தது போலும். அவள் மனத்துள் உருவான கடவுளாய் உருவம் பெறாமல் சாதாரண வேட்டுவ இளைஞனாய் அவளை சீண்டிப் பார்த்தான். (காதலியை சீண்டாமல் காதல் என்ன வேண்டிக்கிடக்கு?)
அவள் யாரோ.. என்ன பேராம்.. அவள் தந்தை யாராம்.. கல்யாணத்திற்குப் பெண் கேட்டால் அவளைத் தனக்குத் தர சம்மதிப்பாரோ.. என்றெல்லாம் அந்தச் சின்னப் பெண்னிடம் பெரிய கேள்விகளைக் கேட்டான். அந்த அழகு பதுமை பேசாமல் தலை குனிந்துகொண்டாள். தூரத்தே சத்தம் கேட்க, ‘வீட்டுப் பெரியவர்கள் அதுவும் வேடவர்கள் வந்தால் அவனை கொன்று விடுவார்கள்’ என்று எச்சரித்து துரத்தியும் விட்டாள். துரத்தப்பட்டவன் ஓடி ஒளிந்தவன் போல பாவனை செய்து அங்கேயே வேங்கை மரமாகி மாறி நின்று கொண்டான். சிற்பி செதுக்கிய மரத்தின் அர்த்தம் புரிந்ததா ? வேடவர்கள் கூட்ட்மாக வந்தனர். தேவைப்பட்ட தினைப் பண்டங்களை வள்ளிக்குக் கொடுத்தனர். சென்றுவிட்டனர்.
மறுபடியும் வேடனாய் உருமாறி வள்ளியிடம் காதல் மொழி பேசினான். வள்ளி கோபமாய் பார்த்தாள். ‘இது முறையா’ என்று கேள்வி கேட்டாள். போய்விடு என்று மன்றாடினாள். என் மனதில் இன்னொருவன் வந்து குடி புகுந்து தொல்லை செய்வது போதாது என்று நீயும் ஏன் தொல்லை செய்கிறாய்.. இது நியாயமா.. என்று கெஞ்சினாள். அப்படியானால் உன் மனத்தை வரித்தவன் பெயர் சொல்லு என்று வேடன் கேட்டான். வெட்கப்பட்டாள் அந்தப் பேதை.
மறுபடியும் சப்தம். மறுபடியும் துரத்தினாள் அவனை. இந்தச் சமயத்தில் ஓடி ஒளிந்தவன் மரமாக மாறாமல் வயதான சிவத் தொண்டர் போல உருக் கொண்டவன் தைரி்யமாக இப்போது வள்ளி முன்பும் அவள் கூட்டத்தார் முன்பும் வெளிப்பட்டான். தாத்தா சிற்பத்தில் பார்த்தீரா ? வயதான சிவத்தொண்டரைப் பார்த்ததும் வள்ளியும் அவள் தந்தையும், கிழவருக்கு வேண்டிய தினைப் பண்டங்களைப் படைத்து, அவர் காலில் விழுந்து வணங்கினர். அந்தக் கள்ளக் கிழவரும் ஆர அமர உண்டு விட்டு, தாராளமாக ஆசிகளையும் வழங்கினார். சந்தோஷமாக அவள் தந்தையும் மற்றவர்களும் அங்கிருந்து விலக, தனித்துவிடப்பட்ட வள்ளியிடம் வேண்டுமென்றே காதல் வார்த்தைகளை கிழவர் அள்ளிவீச, அந்தச் சின்னப் பெண் ‘சீச்சீ’ என்று விலகினாள். அப்போது ஒரு யானை அந்த சோளக் கொல்லையில் ஒடிவரக்கண்ட வள்ளி பயத்துடன் அந்த சிவனடியாரைக் கட்டிக் கொண்டு அந்த யானையை விரட்டுமாறு வேண்ட, சிற்பத்தை பாருங்கள் – என்ன அருமை – எம் சி ஆர் போல பயந்து நடுங்கும் வள்ளியை அனைத்து பிடித்திருக்கும் கள்ள தாத்தா

அந்த கிழவனாரான கந்தன் தன் அண்ணன் விநாயகனை மனதுள் வேண்ட, அந்த வெற்றி விநாயகனே அந்த யானையாக வந்தவன், சுயரூபம் எடுத்து அண்ணனாக மாறி அவர்களை வாழ்த்தினான். கிழவனாக வந்த கந்தனும் அவள் மனக்கோயில் நாயகனாய் மாறினான்.
சிற்பத்தில் பாருங்கள் – கொஞ்சம் கொஞ்சமாக தாத்தா குமாரனாக மாறும் காட்சி




ஆறு முகமும் ஈராறு கைகளும் கொண்டு மயில் மேல் அமர்ந்து குமரனாய் தரிசனம் தந்தான்.

அழகு வள்ளிக் குறத்தி தன் மணாளனே இத்தனை நாடகம் ஆடி கள்ளத்தனம் செய்தவன் என்று அறிந்து உள்ளம் பூரித்தாள். தன் மன நாயகனோடு ஒன்று சேர்ந்தாள்