யார் சிறந்த ஓவியன்

“அலைகளையும்,கொழுந்து விட்டெரியும் அழலையும்,காற்றின் போக்கில் விண்ணில் தவழ்ந்து செல்லும் வெண்முகிலின் கூட்டத்தையும் தூரிகையால் ஓவியமாக வடிக்க வல்லவனே மிகச் சிறந்த ஓவியன்.”

விஷ்ணு தர்மோத்தர புராணம், Ch 43 V 28

நான் இதனை முதல் முறையாக திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை அரசு ஓவியக் கல்லூரி ஆசிரியர் , அவர்களின் உரையில் ( அதற்கு அழைப்பு விடுத்த திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி ) கேட்டேன். உரையின் தொடக்கத்திலேயே மேல்கண்ட அந்த அற்புத வாக்கியத்தைச் சொல்லி எங்கள் ஆர்வத்தைத் தூண்டினார் சிவராமகிருஷ்ணன்.

”ஓர் ஓவியனின் பார்வையில் சிற்பம்” என்பதே உரையின் தலைப்பு – பல அற்புதமான சிற்ப வடிவங்களில் பொதிந்து கிடக்கும் கலை நுட்பங்களை அவர் எங்களுக்கு விளக்கினார். எனினும் என்னை மிகவும் கவர்ந்தது முடிவில் அவர் விளக்க எடுத்துக்கொண்ட ‘அஜந்தாவின் அழியா ஓவியங்கள்’ தலைப்பு (சிவகாமியின் சபதம் – ஆயனச் சிற்பியின் தாக்கம்தான்!!)

நண்பர்கள் பலரும் அஜந்தா சென்று அங்குள்ள அழியா ஓவியங்களைப் பார்த்துவிட்டுப் புளகாங்கிதம் அடைவதைக் கண்டதுண்டு. எனினும் அவர்கள் அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு அப்படிப் பரவசப் படுகிறார்களா என்று ஒரு கேள்வி மனத்தில் இருந்தது. இங்கேதான் நுண்கலை வல்லுனர்களின் உதவி நம்மைப் போன்ற சாமானியர்களுக்குத் தேவை (இந்தப் பதிவை இட அனுமதி அளித்த திரு. சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கு மற்றுமொரு முறை நன்றி – இப்பதிவில் உள்ள நல்ல அம்சங்கள் எல்லாம் அவருடையவை; பிழைகள் ஏதேனும் இருந்தால் அவை எனது மட்டுமே )

இப்படித்தான் பொதுவாக அஜந்தா செல்லும் அனைவரும் அங்கிருக்கும் ஓவியங்களைப் பார்க்கின்றனர். சிதைந்து போனாலும் அதில் எஞ்சி இருக்கும் கலையை நாம் உன்னித்துப் பார்த்தால் மேலும் மேலும் ரசிக்கலாம். படத்தின் வலப்புறம் பாருங்கள்.

இது அஜந்தாவின் பதினேழாம் குடைவரையில் இருக்கும் சுவர் ஓவியம். வானுலக தேவதை புத்தரை வழிபட பூலோகம் இறங்கி வரும் காட்சி இது –

அருகில் சென்று ஓவியத்தின் அழகை ரசிப்போம்.

பேரழகுதான் – பொறுங்கள், அதற்குள் ’பேஷ் பேஷ்’ எல்லாம் வேண்டாம். இந்த ஓவியத்தின் நுட்பங்களை முதலில் பார்ப்போம்.

அதற்கும் முன்னர், நண்பர் ஓவியர் திரு பிரசாத் அவர்களை கட கடவென்று இந்த ஓவியத்தின் நகல் ஒன்றை வரைந்து தரச் சொன்னேன். இதோ அது –

ஒவ்வொன்றாக இந்த ஓவியத்தின் உன்னதங்களைப் பார்ப்போம்.

முதலில் – விஷ்ணு தர்மோத்தரத்தின் சித்ர ஸூத்ரம் பகுதியில் இடம்பெற்ற இன்னும் ஒரு வாக்கியத்தைப் பார்ர்ப்போம் ( விஷ்ணு தர்மோத்தரம், *அபிலாஷ்தார்த்த சிந்தாமணி,* சிவதத்வ ரத்நாகரம், சில்ப ரத்நம், நாரத சில்பம், ஸரஸ்வதி சில்பம், ப்ரஜாபதி சில்பம் முதலியவை சித்திரங்கள் பற்றித் தெரிவிக்கும் நூல்களில் குறிப்பிடத் தக்கவையாகும். இந்நூல்கள் ஓவியத்தின் தன்மை, வகைகள், செயல்முறை, வண்ணங்கள், துணைக் கருவிகள், மூலப் பொருட்கள், நற்பண்புகள், குறைகள், நடைமுறை, திறனாய்வு மரபுகள் பற்றிக் கூறுகின்றன. விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள ’சித்ர ஸூத்ரம்’ என்று அழைக்கப்படும் பகுதியே பண்டைய ஓவியக் கலை நுட்பம் பற்றித் தெரிவிக்கும் தலைசிறந்த பகுதியாகும். )

// ரேகாம் ப்ரசம்ஸந்தி ஆசார்யா:, வர்ணாத்யாம் இதரே ஜநா://

என்றால் ” வல்லுனர்கள் ஓர் ஓவியத்தைக் கோடுகளை கொண்டே மதிப்பிடுவர்”

நாம் எல்லோருமே ஒருமுறையாவது வர்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்ட முயற்சி செய்திருப்போம் ( சிறு வயதிலாவது !!). சிலர் முறையாகப் பயின்றும் இருப்பார். அப்படி நாம் தீட்டும்போது வர்ணத்தில் தோய்த்த தூரிகையை அப்படியே கையை எடுக்காமல் ஒரே மூச்சில் கோடுகளை வரைவது எவ்வளவு சிரமம் என்று அறிவோம். ஆனால் அதுதான் கைதேர்ந்த ஓவியனின் திறமை. இப்போது இந்த அஜந்தா ஓவியத்தின் கண்களையும் புருவத்தையும் பாருங்கள் – ஒரே இழுப்பில் வரையப்பட்ட அழகு – ஒரே இழுப்பு தான் – புருவம் வந்து விட்டது; அடுத்த இழுப்பு கண்களில் தோற்றம்.

அவை வெறும் நேர் கோடுகளும் அல்ல; அந்த வளைவுகளுக்குள் ஒரு நயம் உள்ளது. அந்தச் சிறு நெளிவில் கடைக்கண்ணின் தோற்றத்தின் உயிர்ப்பு மிக்க வெளிப்பாடு. அப்பப்பா ! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்னொரு வாக்கியம் –

// அபி லகு லிகிதேயம் த்ருச்யதே பூர்ணமூர்த்தி: //

அப்படியென்றால் “முழு உருவத்தையும் வெகு சில கோடுகளைக் கொண்டு உணர்த்த வேண்டும் “

சரி, சம கால ஓவிய முறைகள் அஜந்தாவில் உள்ளனவா? பொதுவாக முப்பரிமாண உருவங்களை இரண்டு பரிமாணத்தில் காட்டுவதே ஓவியம். ஆனால் பார்ப்போருக்கு அது முப்பரிமாணத்தை உணர்த்த வேண்டும்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஓவியத்தில் உள்ள இரு காதணிகளையும் பாருங்கள்.

இடப்புறக் காதணி – வெறும் இரு நேர் கோடுகள் மட்டுமே கொண்டு தீட்டப்பட்டுள்ளது. அடியில் சற்றே வளைந்த கோடு. ஆனால் இதை வலது தோட்டுடன் ஒப்பிட்டுக் காணும் பொது. இது வட்டமான காதணி தான். எனினும் அங்கேயும் அது வட்டமாக இல்லை – Oval shapeல் இருந்தாலும் அந்த வடிவமைப்பு நமக்கு இரு காதணிகளின் வட்டமான தோற்றத்தை இடைவெளியுடன் முப்பரிமாணத்தில் உணர்த்தும் வகையில் உள்ளது – நமது பார்வையுடன் விளையாடுவதே இதன் நோக்கம்.

முதன்முதலில் சொன்ன வாக்கியத்தில் வற்புறுத்தப்படும் அசைவு -இதுவும் ஓர் ஓவிய முறை – பொருட்களின் அசைவை உயிரோட்டத்துடன் சித்திரிப்பதே ஓவியத்துக்கான இலக்கணம்.

இந்த ஓவியத்தில் உள்ள நிகழ்வு – இறங்கும் தேவதை திடீரென நின்று அருகில் இருப்பவரைப் பார்க்கிறாள். அவள் முகம் சற்றே இடது புறம் திரும்ப ஆரம்பிக்கிறது – கண்கள் இவற்றை முந்திக் கொண்டு விட்டன – கடைசியில் அவள் அணிந்திருக்கும் அணிகலன்கள் – திடீரென நின்று பாருங்கள் – அந்த திடீர் அசைவுக்கு ஈடு கொடுக்க அவை குலுங்கும் வண்ணம் வடித்த ஓவியனின் திறன்…

இது போல இன்னும் பல திறமைகளை இங்கு வெளிக்காட்டுகிறான் ஓவியன். அண்மையில் இருக்கும் பொருட்களைப் பெரிதாகவும் , தொலைவில் இருக்கும் பொருட்களைச் சிறியதாகவும் பார்க்கும் நமது மூளையை – இரு பரிமாணத்தில் இருக்கும் ஓவியத்தை முப்பரிமாணம் என்று நினைக்க வைக்க – அவன் அதை ஓவிய முறையில் கையாளும் உத்தி : கழுத்தில் உள்ள ஹாரத்தின் மணிகளைப் பாருங்கள் – நடுவில் உள்ள மணிகளைப் பெரிதாகவும், தோள்களின் மேல் செல்லும் பொது அவையே சிறிதாகவும் தெரியும்படி தீட்டி – நம்மை மயக்குகிறான் ஓவியன்.

இவனன்றோ சிறந்த ஓவியன் !


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

திருகழுகுன்றம் அல்லது திருக்கழுக்குன்றம், சென்னைவாசிகளுக்கு சுவையான பழைய நினைவுகளை கண்டிப்பாக தரும். ஏனெனில் பள்ளிச் சுற்றுலா என்றாலே அங்குதான் கூட்டிச் செல்வார்கள். அவர்களை சொல்லிக் குற்றம் இல்லை – அந்த நாளில் கையில் இருந்தது மல்லை , மாதவரம் பால் பண்ணை, வேடந்தாங்கல் , கிண்டி பூங்கா. எல்லாம் ஒரே நாளில் சென்று வந்துவிடலாம் , கட்டணம் இல்லை, வார நாட்களில் ஈ காக்கா வராது -பிள்ளைகள் கூட்டத்தில் தொலைந்து போகாது.. கொஞ்சம் பெரிய வகுப்பு என்றால் செஞ்சிக் கோட்டை -எனினும் திருகழுகுன்றம் தனி இடம் பெறும், காரணம், சில வருடங்கள் வரை இங்கே வந்து காலை உணவு அருந்திவிட்டு சென்ற கழுகுகள் !! பக்ஷி தீர்த்தம் .

ஓட்டை பள்ளிப் பேருந்தில் காய்கறி கூடை போல அனைவரையும் அடைத்து, தலத்தில் இறக்கி விடுவார்கள். நல்ல பையன் என்றால் நண்பனுடன் கை கோர்த்து செல்லலாம். சேஷ்டை செய்பவன் என்றால் ஒரு பெண்ணோடு ( அப்போது அது ஒரு பெரும் தண்டனை ) – ஆனால் பாதகர்கள் – எப்படி தான் விவரம் தெரியும் முன்னரே இதை மாத்தி, தனி தனியாய் அமர்திவிட்டர்கள். சரி, அதை விடுவோம் – ஜோடி மாடுகளை போல படிகளை சிரித்துக்கொண்டே ஏறுவோம். அப்போது படிகள் இத்தனை செங்குத்தாக இருந்தாக நினைவில்லை – எல்லாம் சிறிது செழிப்பு / பருமன் செய்யும் வேலையோ??

இதனாலோ என்னவோ , பள்ளி முடிந்தவுடன் எவருமே அந்தப்பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை. மூவர் – அப்பர், சம்பந்தர் , சுந்தரர் பாடிய தலம் . மல்லையில் இருந்து பதினான்கு கிலோமீட்டர் தான். ஆனால் யாரும் போவதில்லை. கழுகுகள் வருகை வேறு நின்று விட்டது ( விமோசனம் பெற்று விட்டனர் போல – இன்னும் ஒரு யுகம் ஆகும் மீண்டும் அவை வர !)

இதனால் அர்விந்த், வா அங்கே போகலாம், என்றதும் சட்டென பணிகளை முடித்துக்கொண்டு காரை திருவான்மியூர் கோயில் குளத்தருகே நிறுத்துவிட்டு விட்டு அவருடன் கிழக்கு கடற் கரை சாலையில் விரைந்தோம். இரண்டு இடங்களில் வழி கேட்டோம் – அப்புறம் மலை கண்ணில் பட்டு தானே வழி காட்டியது.

எங்கள் அதிஷ்டமோ துரதிஷ்டமோ , வழக்கம் போல, தளத்தை பற்றி சரியாக படித்துவிட்டு செல்லவில்லை. பலரை போல் வந்த பல்லவ குடவரை கோயிலை ( ஒருகல் மண்டபம் ) தேடாமல், நேரே மலை மீது உள்ள ஆலயத்திற்கு விரைந்தோம். இந்த மலை மேல் என்பது ஒரு முக்கியமான வாக்கியம். மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனை அடுத்த பதிவில் குடைவரையை பற்றி பேசும்போது மீண்டும் பார்ப்போம்.

திரு K. R. ஸ்ரீனிவாசன் அவர்களது பல்லவ குடைவரைகள் இந்த பதிவை எழுத மிகவும் உதவியது. ( சென்று வந்த பின்னர் படித்தேன் !! பின் புத்தி )

விடா முயற்சி – சரி சரி விட்டு விட்டு ( பத்து படிக்கு ஒருமுறை மூச்சு வாங்கி ) மேலே ஏறி பார்த்தல் – இந்தனை சிறிய கோயில். அதுவும் கட்டுமான கோயில் – சிற்பங்களும் அவ்வளவு இல்லை. ஏதோ விசேஷம் வேறு – ஒரு சின்ன கிராமமே மூலவர் முன்னர் இருந்தது. அஷ்டகோணமாக வளைந்து – வேதகிரீஸ்வரரை தரிசித்துவிட்டு வெளியே பிரகாரம் வந்தோம் , அங்கே ஒரு புதையல் … சுவர்களில் நடுவில் துவாரம். அதனுள் பல்லவ புடைப்பு சிற்பம். சோமஸ்கந்தர்

பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி – மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.

உடனே படம் எடுத்து விட்டு – உமை வடிவம் எப்படி செதுக்கப்பட்டுள்ளது என்று எட்டி பார்த்தோம். ராஜசிம்ஹ்ன் பாணியிலா , அல்லது அவனுக்கு முன்னர் உள்ள பாணியிலா ?

அப்போது , தமிழ் நாட்டு வரலாற்றில் அழியா இடம் பிடிக்க வேண்டும் என , தமிழக கோயில்களை காக்க வந்த காவலன் என்று தானே பட்டம் சூடிக்கொண்டு திரியும் மடையன் ஒருவன் வந்தான். எங்களை தமிழ் கலாசாரம் தெரியாத மூடர்கள் என்று வேசி படங்கள் எடுக்கும் முட்டாள்கள் என்று கூட்டத்தை கூட்டினான். வேறு வேலையே இல்லாமால் திரியும் கூட்டம், எங்கே வம்பு என்று அலையும் கூட்டம், உடனே சபை கூடியது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் – நாங்கள் விஷயம் தெரிந்தவர்கள், மூலவரை படம் எடுக்க மாட்டோம், இவை வழிபாட்டில் இருக்கும் சிற்பங்கள் அல்ல. கலை வளர்க்கவே எங்கள் முயற்சி என்று முறையிட்டோம். எனினும் அந்த மூடன், அவனுடன் கூடிய பஞ்சாயத்து – செவிடர்கள் கூட்டமாக மாறியது. புகை படம் எடுக்க கட்டண சீட்டு பெற்றுள்ளோம், படம் எடுக்காதே என்று அறிவிப்பு பலகை எங்கும் இல்லை என்று வாதாடினோம். இடையில் சென்று அடுத்து இருந்த ரிஷப வாஹனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிவனை படம் பிடித்தேன். பல்லவ சிற்பம் – அபாரம்.

கூட்டம் களை கட்டியது. ஆங்காங்கே சரித்திர காவலர்கள் அவதாரம் எடுத்தாற்போல கூச்சல் போட்டனர். மிகவும் வருத்ததுடன் எஞ்சி இருந்த ஒரு சிற்பத்தை படம் எடுக்காமல் திரும்பினோம்.
( நண்பர்கள் உதவியுடன் விரைவில் அந்த படத்தை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது )

நல்ல காலம். சோமஸ்கந்தர் படம் அருமையாக வந்துள்ளது.

உள்ளே இரு புறம் பிரம்மா , மற்றும் விஷ்ணு

சிவன் மற்றும் உமை. உமை அமர்ந்திருக்கும் பாணி – நீங்களே முடிவு செய்யுங்கள்.

குழந்தை குமரன் – தனது கிரீடத்துடன்.

கண்டிப்பாக ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் தான். இந்த சிற்பத்தில் ஒரு தனித்தன்மை – சிம்ஹாசனம் அடியில் பாருங்கள். மற்ற ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்களில் வருவது போல பன்னீர் சொம்பு போல இல்லாமல் இங்கே ஒரு வாய் அகல பாத்திரம் போல உள்ளது.

ஆலயம் பற்றி மேலும் விவரம். மூவர் பாடல்கள்.

http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_103.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru06_092.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_081.htm

அவர்கள் பாடியது மேலே உள்ள ஆலயமா – கிழே உள்ள குடவறையா. அவர்கள் காலம் மகேந்திர பல்லவரின் காலம் என்றாலும் அவர்கள் அவனது குடைவரைகள் பற்றி ஒரு பாடல் கூட பாடவில்லை. மேலும் அப்பர் பாடலில்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

என்று பாடுகிறார். அதனால் மேலே உள்ள ஆலயத்தையே அவர் பாடினார் என்று நாம் அறியலாம். அப்போது லாஜிக் கொஞ்சம் இடிக்கிறதே. மகேந்திரர் காலத்து மூவர் பாடிய கோயிலில் அவனுக்கு மூன்று தலைமுறைக்கு அடுத்து வந்த ராஜசிம்ஹ்ன் பாணியில் சிற்பங்களோ என்ற கேள்வி எழுகிறது ? இப்படி இருக்குமோ – அப்போது அது ஒரு செங்கல் / சுதை கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக இருந்திருக்கலாம், பின்னர் ராஜசிம்ஹ்ன் காலத்திலோ பின்னரோ மூன்று பெரும் பாறைகளை நிறுத்தி இப்போது உள்ள கோயிலின் கருவறை நிறுவப் பட்டிருக்கலாம் – இதுவே அதனுள் இருக்கும் பிற்காலத்து சோமாஸ்கந்தர் வடிவத்தின் விளக்கம் என்றும் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகிறார்

அடுத்து வரும் பதிவுகளில் குடவரை கோயிலையும் அதில் உள்ளே கல்வெட்டை கொண்டு இதே கருத்தை எப்படி ஊர்ஜிதம் செய்வது என்பதையும் விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்

அகத்தியர் குழுவில் திரு ஜெயபாரதி ஐயா அவர்களின் பதிவு ஒன்றே இந்த பதிவின் கரு. அவரது விளக்கத்தை படித்துவிட்டு பலரும் குழம்பும் இந்த சிற்பத்தை பற்றி தெரிந்துக்கொண்டோம். இந்த சிற்பம் திருவிளையாடல் புராணத்தில் வரும் பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம் என்பதை அறிந்தோம். இந்த சிற்பத்தை பல இடங்களில் வராஹி என்று தவறாக அடையாளம் காண்கிறார்கள். அதனால் மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் செல்லும்போது இந்த சிற்பங்களைத் தேடிச் சென்றோம். எனினும் அங்கு செல்லும் முன்னரே தற்செயலாக தில்லையில் புடைப்புச் சிற்பத்தில் இதைக் கண்டு மகிழ்ந்தோம்.

சிற்பத்தில் இடது புறத்தில் ( பார்க்கும்போது உங்கள் வலது புறம் ) – கை கூப்பி நிற்கும் பன்றி முகம் கொண்டு அடியவர்கள் மனதில் கொள்ளுங்கள். பிறகு ஏன் என்று புரியும்.

சரி, முதலில் கதை

இறைவன் அலகிலா விளையாட்டுடையன் என்று சொல்வர். அவனைப் பொறுத்தமட்டில் உயர்ந்த தேவராயினும், மானிட ஜன்மமும் ஆயினும் சரி, இழிந்த பன்றியாயினும் அனைவரும் சமமே.. அறுபத்து நான்கு திருவிளையாடல் புராணங்களில், பசியால் வாடிய பன்றிக்குக் குட்டிகளுக்கு முலை ஈந்து பால் கொடுத்த பேரருளை மாணிக்கவாசகர் முதற்கொண்டு அருளாளர்கள் வியந்து பாடுவர். திருவிளையாடல் புராணப் பாடல்களின் படி இந்தக் கதை எளிதாகச் சொல்லப்படுகிறது. சுகலன் எனும் வேளான் மதுரைக்கு அருகே இருக்கும் ஆதிமணிமாடமூதூர் எனும் ஊரிலே தன் கற்புடை மனைவியுடன் இறையன்போடு வாழ்ந்தாலும் அவர்களுக்குப் பிறந்த பன்னிரு புதல்வர்கள் தாய் தந்தையருக்கு நேர்மாறாக இருந்தனர். வேண்டாத செயல்களை பெற்றோர் வெறுக்கும் வண்ணம் செய்துகொண்டும் அவப்பெயர் பெற்றும் வளர்ந்தனர். அடிக்கடி கானகம் செல்வதும் வேடர்களோடு கண்டபடி வேட்டையாடியும் பொழுதைப் போக்கினர். அப்படிப்பட்ட சமயத்தில் காட்டில் ஒரு புதர் அருகே ஒரு முனிவர் தவம் செய்யும்போது, அவரைக் கேலி செய்து, கல்லால் அடித்தும், வேடர்களின் அம்பெய்தியும் துன்புறுத்தியதால், முனிவர் அந்த பன்னிருவரரயும் சபித்தார். நீங்கள் செய்யவேண்டிய உழவுத் தொழிலை விடுத்து வேடர்களின் அடாவடித் தொழிலில் கலந்து எம்மைத் துன்புறுத்தியதால் பன்றிகளாகப் பிறந்து குட்டிகளாய் இருக்கும்போதே தாய் தந்தையரை இழந்து அவதிப்படுவதாக சாபம் இட்டார். பிறகுதான் இவர்களுக்கு தாங்கள் செய்த பாவங்கள் உறைக்க, கண்ணீர் வடிய மன்னிப்பும் சாப விமோசனமும் கேட்க, கருணை வடிவமான அந்த முனிவர், உங்களுக்கு சாபவிமோசனம் ஈசனாலேயே அருளப்படும் என்று அன்போடு சொன்னார். சாபம் பெற்றவர்கள் அனைவரும் பன்றிக்கு மகவாகப் பிறக்கையில் காட்டில் வேட்டையாட வந்த பாண்டிய மன்னனால் பன்றிகள் அழிக்கப்பட, இந்த பன்றிக்குட்டிகள் ஏதும் ஆறியாமல் முலைப்பாலுக்காக ஏங்கித் தவிக்கும்போது, அகில உலகத்தையும் தாய் போல நேசிக்கும் ஈசன், தோன்றி முலைப்பலைக் கொடுத்து, அந்தப் பன்றிக்குட்டிகளுக்கும் முக்தி அருளினார் என்பதுதான் கதையின் சாரமாகும்.

திருவிளையாடல் புராணப்பாடல்

இருளைக் கந்தரத்தில் வைத்தோன் தன் இடத்து என்றும் அன்பின்
தெருளைத்தந்து அவட்கு மாறாத் தெரிவையை இசையால் வெல்ல
அருளைத் தந்து அளித்த வண்ணம் அறைந்தனம் தாயாய்ப் பன்றிக்
குருளைக்கு முலை தந்து ஆவி கொடுத்தவாறு

திருவாசகம் (போற்றித் திருவகவல்):

தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக் கருளினை போற்றி
(ஏனக்குருளை – பன்றிக்குட்டிகள்)

கதை தெரிந்த தைரியத்தில் சிற்பம் உள்ள தூணை தேடி அலைந்தோம். மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் இந்த தூண் உண்டு என்று தெரிந்து தேடினோம். உள்ளே இல்லை. ( சென்ற மடலில் படித்த சம்பவங்களுக்கு பிறகு நடந்தவை இவை ) அப்போது ஒருவர் புது மண்டபத்தில் சென்று பாருங்கள், அங்கே இருந்தால் இருக்கும் என்றார். எனினும் அங்கே இப்போது ( இரவு எட்டு மணி ) கடைகள் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும். ஒன்றுமே தெரியாது என்றும் எச்சரித்தார். காலையில் கடைகள் திறப்பதற்கு முன்னால் வந்து விடுங்கள் – அப்போது காவலர் அனுமதித்தால் படம் நன்றாகவே எடுக்கலாம் என்றும் கூறினார். எனினும் ஆர்வம் தாங்காமல் உடனே சென்றோம்.

மிகவும் கடினம்தான். எங்கும் கடைகள் – கதவுகள். ஒன்றுமே தெரியவில்லை. ஒரு ஷாப்பிங் மால் போல இருந்தது சிற்ப வேலைப்பாடு மிக்க அந்த மண்டபம். எனினும் முடிவாக நாங்கள் நுழைந்த பக்கத்திற்கு நேர் எதிரே ஒருவழியாக தூணைக் கண்டுபிடித்து விட்டோம். அருகில் இருந்த கடைக் காரரை கொஞ்சம் தள்ளி இருக்க சொல்லிவிட்டு படங்களை எடுத்தோம். ( அடுத்த நாளும் விடியற் காலையில் திரும்பி தூணில் அடி பாகத்தில் இருத்த சிற்பங்களையும் படம் எடுத்தோம் )

இது சிவனா வராஹியா

கண்டிப்பாக சிவன் தான். வலது கரத்தில் மழு உள்ளது. இடது கரம் உடைந்துபோய் விட்டது.

தூணின் அடியில் உள்ள சிற்பங்கள் கதையை சொல்கின்றன . தாய் பன்றியை வேட்டை ஆடும் பாண்டிய மன்னன்.

பன்றிக் குட்டிகள் பாலுக்காக ஏங்கி நிற்கும் பாணி அருமை

ஈசனை வணங்கி நிற்கும் சாப விமோசனம் பெரும் முன்னர் பன்றிகள் ( நாற்காலிகள் அடுக்கி இருந்ததால் படம் சரியாக எடுக்க முடியவில்லை )

மதுரையில் கண்டதன் அடிப்படையில் நம்பிக்கையுடன் திருப்பரங்குன்றம் சென்றோம். அங்கே வாயிலிலேயே இருந்தது தூண் சிற்பம். அதே பாணி ( சரி, ஒரு வித்தியாசம் இருக்கும்) ஆனால் அடியில் வராஹி என்று பெயர் இட்டு உடல் முழுவதும் மஞ்சள் பூசி இருந்தது.

இன்னொரு படம், அப்படியே மதுரையில் பார்த்த சிற்பம் போல

இங்கும் பாலுக்கு ஏங்கும் பன்றிக் குட்டிகள்.

சிவன் தானே – ஆயுதங்கள். இங்கே மானும் இருக்கே.

ஒரு வித்தியாசம் என்று சொன்னேன் அல்லவா. இதோ. இங்கே பாண்டிய மன்னன் வேட்டையாடிய தாய் பன்றி இறந்து விழுவது செதுக்கப்ட்டுள்ளது .

அதே படத்தின் அடியில், பார்தீர்களா, அதே அணிவகுப்பு.

அதே படத்தின் அடியில், பாத்தீர்களா, அதே அணிவகுப்பு.

இதே தூண் சிற்பத்தின் துணை சிற்பம் இன்னும் ஒரு அற்புத திருவிளையாடல் புராணத்தை விளக்கியது. அதை அடுத்து பார்ப்போம்.

இதன் ஆதாரம் இப்படி இருக்க, ஈசனின் இந்த திருவிளையாடலை சரியாக பெயர் போடாத அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்..


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே

இந்த டிசம்பர் மாதம் நாங்கள் பல அற்புத இடங்களுக்கு பயணம் செய்தோம் – பல புதிய தகவல்களை தெரிந்துக் கொண்டோம். அதைவிட மேலாக கற்றது கைமண் அளவு என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்துக்கொண்டோம். நல்லவை நிறைய இருக்க ஒரு நெருடலும் கண்களில் பட்டது. அதனால் அதை பற்றி எழுதுகிறேன்.

இதை ஒரு சிறு பிழை என்று பார்க்கலாம். எனினும் அது இருக்கும் இடம் சிறப்பான இடமாக இருப்பதால் அதை ஒரு நெருடல் எனவும் பெரும் தவறு என்றும் என் கண்ணில் படுகிறது. திருவிளையாடல் புராணத்தில் வருமே, தமிழுக்குச் சங்கம் அமைத்து, ஈசனையே நக்கீரர் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டு, பிறகு ஈசனால் மன்னிக்கப்பெற்ற இடமான பொற்றாமரை குளம் அருகேதான். பல்லாயிரக்கணக்கான தினமும் வந்து செல்லும் இடம். அவர்கள் கண்களில் அருங்காட்சியகம் என்று ஒன்றை அமைத்து அதில் இந்த தவறை தினமும் காட்டும் அவலம்.

முதலில், நாங்கள் மதுரைக்கு வரும் போதே மதியம் ஆகிவிட்டது ( நான், நண்பர் அர்விந்த் , என் அருமை மனைவி பிரியா, ஆசை மகன் பிரித்வி ) – அவசர அவசரமாக கோயில் திறக்கும் போதே சென்று படம் எடுக்க துவங்கினோம். அருமையான கோபுரங்களில் மதி மயங்கி நின்றோம். உதவியர் (கைட்) ஒருவர் வந்து உள்ளே சுற்றிக்காட்டுகிறேன் என்றார். எங்களுக்கு சிற்பங்களை தான் பார்க்க வேண்டும், அங்கே கொண்டு செல்லுங்கள் என்று தொடர்ந்தோம். மூன்று மணிநேரம் பறந்ததே தெரியவில்லை. அடுத்த நாள் காலை மீண்டும் வந்து விட்டு விட்ட கோபுரங்களை படம் எடுக்கலாம் என்று கிளம்பும் தருவாயில் – முது வலி, கை வலி இவைகளை தொந்தரவு கொடுத்தும்…அத்தனை படங்களையும் எடுத்துவிட்டோம். ( அதுவும் கூட கூட்ட நெரிசலில் – எப்படி தான் இவர்கள் சரியாக நாம் படம் எடுக்கும் தருவாயில் குபீர் என்று முன்னால் வந்து குதிப்பார்களோ.. தெரியாது)

ஏழு மணி அளவில், மூட்டை கட்ட துவங்கினோம் ( இட்லி கடை கூப்பிட்டது) – அப்போது தூண் சிற்பங்களை பார்க்கவில்லையே என்றேன். உதவியர் – சார், அது ஒண்ணும் பெருசா இல்லை. விடுங்கள் என்றார். ஆனால் மண்டபத்தின் வெளியில் கட்டண சீட்டு கூடம், வெளியில் காவலர் ஒருவர் கண்டு மனம் உள்ளே செல் என்றது. தூண் சிற்பங்கள் பரவாயில்லை நன்றாகவே இருந்தன. ஆனால், மண்டபத்தின் ஒரு கோடியில், ஒளிவிளக்கு போடாமல் இருட்டாக சற்று தூசியாக இருந்த பகுதிகளில், சிறு சிறு மேடைகள், அவற்றிற்கு மேலே புகை படிந்த கண்ணாடி கூடுகள் இருந்தன. சென்று பார்த்தால் அதிர்ச்சி. ஐம்பதுக்கும் மேலான வெண்கல சிலைகளின் பவனி. அப்போது காவலர் வந்து இன்னும் இருபது நிமிடத்தில் மூடப் போகிறேன் என்றார்.

விலை மதிப்பில்லாத சிலைகள், இப்படி சரியான விளக்கு கூட இல்லாமல் – கண்ணாடி உள்ளே வெளியே தூசு. சரியான படங்களே எடுக்க முடியவில்லை.

எனினும் முதல் அணிவகுப்பிலேயே அந்த சொதப்பல்.

நீங்களே பாருங்கள்.

முதல் படிமம் ந்ருத்தன சம்பந்தன் என்று அடையாளம் கொண்டதை கூர்ந்து பாருங்கள். ( # 70 – Nruthana Sambandan)

சம்பந்தர் சிலையின் தனித்தன்மை , மற்றும் அதை கண்ணனின் சிலைகளுடன் எவ்வாறு பிரித்து பார்ப்பது என்ற முந்தைய பதிவை படித்திருப்பீர்கள்.

சற்று அருகில் சென்று பார்ப்போம்.

தெளிவாக ஸ்ரீவத்சம் தெரிகிறது. எனினும் இதை சம்பந்தன் என்று பட்டியல் இட்டுள்ளனர். அதுவும் சங்கம் வளர்த்து தமிழ் போற்றிய மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில்.. கடைசியில் தருமி போல கூவவேண்டும் போல இருந்தது.. சொக்கா..

ஆலயம் செல்லும் பலருக்கும், அங்கே இருக்கும் உதவியருக்குமே இந்த பொக்கிஷங்கள் இருக்கும் அருங்காட்சியகம், அதுவும் பொற்றாமரைக் குளம் அருகேயே இருப்பது தெரியவில்லை. வாசிக்கும் எவரேனும் ஆலய அதிகாரிகளிடம் சென்று இந்த தவறை சரி செய்ய உதவி செய்யுங்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

இன்னும் ஆயிரம் ஆண்டு காண எழுகிறது – உதவிய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி

வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். மூன்று வார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இடைவெளியில் பல அற்புத இடங்கள் சென்றோம், பல பிரமிக்க வைக்கும் படங்களை எடுத்தோம், நண்பர்கள் , ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் பலரை சந்தித்தோம்.

இந்த பதிவை துவங்கும் போதே இதை நடக்க செய்த வள்ளல்கள் அனைவரையும் வணங்கி துவங்குகிறோம். .

நீங்கள் இந்த பழைய பதிவை பார்த்திருப்பீர்கள், இல்லையெனில் ஒரு முறை பார்த்துவிட்டு தொடருங்கள். 2008 வருடம் ஜூன் மாதம் ஆலயச் சீரமைப்புக்கான இந்த சவாலை ‘ரீச்’ அமைப்பு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.

ஆயிரம் ஆண்டு தவம்
அரக்க பறக்க எங்கள் பயணத்தில் முதல் இடமாக வேலை எவ்வாறு வந்துள்ளது என்று பள்ளி தேர்வு எழுதிய மாணவர்கள் போல ஆர்வத்துடன் – கொஞ்சம் பயத்துடன் ( ஏனெனில் பல இடங்களில் – இதை பற்றி கொஞ்சம் கூட சிற்ப அறிவோ, அதைத் தெரிந்து கொள்ளும் ஆற்றலோ இல்லாத ஞானசூனியங்கள் ஆலயச் சீரமைப்பு என்ற பெயரில் சுவரில் டைல்ஸ் ஒட்டி, சிற்பங்களுக்கு நீல வண்ணம் அப்பி ஏற்கனவே இருந்த அழகைச் சிதைக்கும் நவீன ‘மாலிக்காபூர்கள்’ செய்யும் அட்டகாசங்களை பார்த்து கலங்கி ) – இதை எப்படி சரியாகச் செய்ய வேண்டும், அதுவும் தனியார் – சாமானியர்கள் பங்கேற்று இந்த தொழிலில் தேர்ச்சி பெற்ற பெரியவர்கள் வழி நடத்த – ஒரு எடுத்துக்காட்டாக இது அமைய வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

நீங்களே பார்த்துவிட்டு எங்கள் பணியை மதிப்பீடு செய்யுங்கள்.

59045881

இன்னும் வருகிறது.

58845860

சுதை சிற்பங்கள் பாரம்பரிய முறையில் செப்பனிடப்பட்டுளன.

58875864

வேலைப்பாடு மிகுந்த விமானம் என்பதால் நமக்கு விருந்து.

58905867

உபயோகம் செய்யும் வண்ணங்கள் ( தஞ்சை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற புராதன முறையை தொடர்ந்துள்ளன ) கண்ணுக்கு குளிர்ச்சியாய்

58935869

பூத ரேகை

58965872

புராதன பாணி துளியும் மாறாமல்

58755899

எப்படியாவது செய்யவேண்டும் என்றில்லாமல் ‘இப்படி தான் செய்ய வேண்டும்’ என்று செய்துள்ள குழுவுக்கு பாராட்டுக்கள்.

59025878

நெஞ்சைக் கொள்ளை கொண்டது கைலாசநாதர் ஆலயம். நல்ல சகுனம், மேகம் கருத்தது, புறப்படும் வேலைவரை தூறல் போடாமல், வாகனத்தில் ஏறிய பிறகே பிளந்தது வானம். இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் காண தன் எழிலை மீண்டும் திரும்பப் பெற்ற விமானம் ஜொலித்தது. ஆஹா!!


இந்த பதிவு இத்துடன் முடியவில்லை. இன்னும் இங்கே சீரமைப்பு பணிகளின் பொது கிடைத்த அற்புத சிற்பங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இந்த முயற்சி உங்களை இது போல இன்னும் பல முயற்சிகளுக்கு உதவ தூண்டும், அழிவின் விளிம்பில் இருக்கும் இது போன்ற கலை செல்வங்கள், நமது புராதன குல தனங்களை மீட்டுத்தரும் முயற்சியில் ரீச்சுக்கு இது ஒரு துவக்க கொடு – பயணம் தொடரும். நீங்களும் சேர்த்து வழிநடந்தால் வேகம் கூடும்.

( இந்த பதிவு மற்றும் மூன்று வார கால பயணத்தில் நான் எடுத்த படங்கள் அனைத்தும் எனது நண்பர் திரு தினேஷ் சுந்தரேசன் அவர்களின் அதி நவீன கேமரா கொண்டு எடுத்தவை . மிகவும் நல்ல உள்ளம் படைத்தவர், கேட்டவுடன் கேமரா மட்டும் தர மாட்டேன், அதனுடன் சேர்த்து அணைத்துவித உதவிக் கருவிகளையும் எடுத்து சென்றால் தான் தருவேன் என்று கூறி என்னை அசத்திய பெரிய மனம் படைத்தவர். டிசம்பர் 23rd அன்று மாலை ஒரு சாலை விபத்தில் எங்களை விட்டு பிரிந்த அவருக்கு இந்த பதிவின் மூலம் அஞ்சலி செலுத்துகிறேன்)


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment