ஐயப்பன் சீசன். கூட்டம் களை கட்டியது. நோ என்ட்ரி.. புதிர்களை தாண்டி மலைகோட்டை அடைவதற்குள் சூரியன் தனது அரைநாள் வேலையை முடித்து விட்டு மேலே நகர்ந்துக்கொண்டிருந்தான். முதல் படியிலேயே சண்டை – தேவஸ்தான அதிகாரியுடன் – கேமரா டிக்கெட் வாங்கியே ஆகவேண்டும் என்று அவர் ஒரே பிடியாய் நிற்க, நாங்கள் ஆசி குடைவரைகளை பார்க்க மட்டும் தான் போகிறோம் – அதற்க்கு சீட்டு தேவை இல்லை என்று வாதாடி தோற்றோம் ( எந்த ஆசி தளத்திற்குள் சென்று படம் எடுக்க கட்டணம் தர தேவை இல்லை. முக்காலி கொண்டு எடுக்க வேண்டும் என்றால் தான் பிரச்சினை ). வேண்டா வெறுப்பாக கட்டணத்தைக் கட்டி சீட்டை பெற்றுக்கொண்டு முதல் தளத்தை கடந்து இடது புறம் திரும்பினோம். உடனே அருகில் இருந்த உங்கள் நண்பன் – அவர்தான் நம்ப ஆட்டோ காரர் – ஒரு விதமாக பார்த்தார். அந்தப் பக்கம் உட்டு அடிக்க வந்தோம் என்று முதலில் நினைத்தாரோ என்னமோ. பின்னர், இது தப்பான வழி. அப்படி போ என்றார். சுற்றி பார்த்தோம் – அறிவு ஜீவிகள் – பேர் பலகையில் முழு பக்கம் வரைந்து வைத்துள்ளனர். அதுவும் பல்லவர் குடைவரை செல்லும் வழி என்று ( பெரும்பாலான அறிஞர்கள் இந்தக் குடைவரை பாண்டியர் குடைவரை என்று கருதுகின்றனர் ). எனினும் அவர் விட வில்லை. எங்கே சார் போகணும் என்றார். குடைவரைக்கு என்று சொன்னோம். ”ஏன் சார், வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை. மேலே போங்க!” என்றார்.
அதை பார்க்கத்தான் வந்தோம் என்றவுடன்,எதோ புழு பூச்சியை சாப்பிட்டது போல ஒரு எக்ஸ்பிரஷன் காட்டி மீண்டும் பீடியை ஊத ஆரம்பித்தார். ஒரு நூறு அடி நடந்ததும் எங்களுக்கே ஒரு கலக்கம். இது சரியான வழியா என்று. நல்ல வேளை, வீடுகளின் நடுவில் ஒரு சின்ன குறுக்கு பாதை மலையை நோக்கி சென்றதை கண்டு அதனுள் விரைந்தோம். பத்து அடி சென்றவுடன்….எதிரே பிரம்மாண்டம்.
அப்படியே பெரிய மலையின் அடியில் எப்படித்தான் இடம் பார்த்து இப்படி குடைந்தார்களோ. பாறையும் அதன் அடியி உள்ள குடைவரையும் கண்ணைப் பறித்தன. அங்கே அலை மோதிய கூட்டம், ஆனால் இங்கே ஈ காக்கா இல்லை. சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தனர் ( சிற்பத்தின் கால்கள் தான் ஸ்டம்ப்_. ஆசி நபர்கள் இருவர் இருந்தனர்
மலையை ஆழமாக்க குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை. வெளித் தூண்களே எப்படி உள்பக்கமாக இருக்கின்றன பாருங்கள்.
தூணைப் பார்த்தவுடனேயே சந்தேகங்கள் – இது பல்லவ தூண் மாதிரி இல்லையே. அருகே ஆசி பலகை – இது மாமல்லர் காலம் என்று அடித்துச் சொன்னது 640 to 670 AD.
நீள்சதுர வடிவில் இருக்கும் குடைவரையின் இரு பக்கங்களில் இரு அர்த்த மண்டபங்கள் வெட்டப்பட்டுள்ளன. உள்ளே கர்ப்பக்கிருஹம் – ஒன்று சிவனுக்கு,மற்றொன்று பெருமாளுக்கு. இரண்டு கருவறைகளுக்கும் கருவறை காவலர்கள், மற்றும் அர்த்த மண்டபத்துக்கும் இரு வாயிற் காவலர்கள் – என்று மொத்தம் எட்டு வாயிற் காப்போன் சிலைகள் உள்ளன !! ( ஒவ்வொன்றாக அடுத்த பதிவில் பார்ப்போம்)
பின் சுவரில் சிற்பி தனது முழு திறனையும் காட்டி – விநாயகர் ( மாமல்லர் காலத்தில் விநாயகர் சிற்பமா?) , நான்முகன், முருகன், சூரியன் மற்றும் துர்க்கை சிற்பங்கள் உள்ளன.
ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் அவற்றை பார்ப்போம். ஆசி ஓவியர் சிற்பங்களை வரைந்துக்கொண்டிருந்தார். ( கரும்பு கடிக்க கூலி வேணுமா – நமக்கு )
ஏனோ அந்த ஆட்டோ காரர் சொன்ன “ஏன் சார், அங்கே வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை ” என்ற வார்த்தைகள் இப்போதும் வலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அறியாமை தமிழகத்தில் இப்படியும் இருக்கலாகுமோ…