நாயன்மார்களின் சரித்திரத்தைச் சித்தரிக்கும் பல தாராசுர சிற்பங்களை ஏற்கனவே நாம் ரசித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு சிற்பத்தை மிகவும் விரிவான விவரங்களுடன் இன்று காண்போம். மேலோட்டமாக பார்த்தால் இந்தக் கதை ஏதோ குரூர தோற்றமுடையதாகத் தெரியும், ஆனால் சற்றே கவனமாக அதன் பின்னனியைப் படித்தோமானால் தெளிவாகும். இதனை முழுமையாக புரிந்து கொள்ள எதிர்மறையான விளைவுகளைக் கொண்ட இரு வேறுபட்ட சம்பவங்களை காண்போம்.
முதல் சம்பவத்துடன் துவங்குவோம். முதலில் சிற்பம்
இதில் ஆடம்பரமான கிரீடம் அணிந்த அரசன் போன்ற ஒருவர், ஒரு பெண்ணின் முழங்கையோடு அவள் கையை வெட்ட முற்படுவதுபோல் கத்தியை உயர்த்தி பிடித்துள்ளார். குரூரமாகத் தோன்றும் இந்தக் காட்சியில், ஆணின் முகத்தில் புன்னகை தெரிகிறது, பெண்ணின் மூக்கோ சிதிலமடைந்துள்ளது. இதற்கு பின்னனி ஏதும் உள்ளதா? வாருங்கள் பார்ப்போம்.
ஆம், இந்தக் கதை கழற்சிங்க நாயானாருடையதுதான்: பல்லவ வம்சத்தைச் சேர்ந்த இந்த நாயனார் மிகவும் சிவ பக்தியுடையவர். ஒருமுறை இவர் சிவாலயங்களை தரிசிக்க யாத்திரை சென்ற பொழுது திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கு இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது, வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு வந்தார் அவரது மனைவியும் அரசியுமான சங்கா (இவர் ராஷ்டிரகூட மன்னர் அமோக வர்ஷ நிருபதுங்கனின் மகள், சைன மதத்தில் பற்றுடையவர்கள் – ஆதாரம் பல்லவ வரலாறு). அவ்வாறு வலம்வரும் சமயம் பிரகாரத்தின் மூலையில் ஒரு மலர் விழுந்து கிடந்ததைப் பார்த்த இவர், அதனுடைய நறுமணத்தால் ஈர்க்கப் பட்டு அதனை எடுத்து முகர்ந்தார்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
கோயிலை வலங்கொண்டு அங்கண்
குலவிய பெருமை யெல்லாம்
சாயல்மா மயிலே போல்வாள்
தனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமம்
தொடுக்குமண் டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு
விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.
பொழிப்புரை :
சாயலால் மயிலைப் போன்ற அத்தேவியார் கோயிலை வலமாக வந்து, அங்குள்ள வளங்களை எல்லாம் தனித் தனியே பார்த்து மகிழ்ந்தவள், தூய மென்மையான பள்ளித் தாமம் தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்தில் புதிய பூ ஒன்று விழுந்து கிடப் பதைக் கண்டு எடுத்து மோந்தாள்.
இதனைக் கண்ட செருத்துணை என்னும் தீவிர சிவபக்தர், ஆஹா இறைவனுக்காக படைக்கப் படவிருந்த மலரின் புனிதத்தை அதை முகர்ந்து கெடுத்துவிட்டாரே என்று கோபப்பட்டு அரசியின் மூக்கை துண்டித்துவிட்டார். (இந்த சம்பவத்தால் இவரும் நாயன்மார் வரிசையில் சேர்ந்துவிட்டார், இவரது சரித்திரத்தை காட்டும் சிற்பத்தை தனியானதொரு பதிவில் பார்க்கலாம்).
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
புதுமலர் மோந்த போதில்
செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற் றத்துள்
எடுத்துமோந் தனளாம் என்று
கதுமென ஓடிச் சென்று
கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருவொப் பாள்தன்
மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.
பொழிப்புரை :
புதிய மலரை மோந்த போதில், செருத்துணையார் என்னும் தூய தொண்டனார், இம் மலரை மலர் மண்டபத் திருமுற்றத் தில் எடுத்து மோந்தனள் என்று எண்ணித், துணிந்து, தேன் பொருந் திய தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற அவள் மூக்கைப் பிடித்து அரிந்தார்.
காயப்பட்ட அரசியின் ஓலத்தைக் கேட்ட கழற்சிங்கர் ஓடோடி வந்தார், அரசியின் நிலையைப் பார்த்து “இதனை யார் செய்தது” என்று கர்ஜித்தார். உடனே செருத்துணை முன்வந்து, தானே இந்த பங்கத்தை செய்தவர் எனச் சொல்லி மன்னிப்பு கோரினார். மன்னரோ அவரைத் தண்டிக்காமல் ஒருபடி மேல் சென்று, கை தானே முதலில் மலரை எடுத்தது அதனால் கை தான் முதலில் தவறு செய்தது என்று கூறி தன் வாளை எடுத்து அரசியின் கையை வெட்டி விட்டார்.
அரசி மன்னருக்கு மிகவும் பிடித்தமானவள், மிகவும் அழகானவள், அதிகாரமுடையவள் இருந்தும் மன்னருக்கு இறைவன் மீதான பக்திதான் பெரிதாக இருந்தது.
இந்த சிவலீலையை கண்ணுற்ற வானவர்கள் இவர்களின் பக்தியை மெச்சி மலர்மாரி தூவினர்.
இதோ இந்த சம்பவத்தை குறிப்பிடும் பெரிய புராணப் பாடல்;
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
கட்டிய வுடைவாள் தன்னை
உருவிஅக் கமழ்வா சப்பூத்
தொட்டு முன்னெடுத்த கையாம்
முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல்
பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை
வளையொடுந் துணித்தா ரன்றே.
பொழிப்புரை :
தம் இடையில் கட்டியிருந்த உடைவாளை உருவி, அம் மணம் கமழும் மலரைத் தொட்டு, முன்பு எடுத்த கைதான் முதலில் துண்டிக்கத் தகுவது என்று கூறி, தம் அரசுரிமைப் பட்டம் பூண்டு, தம் அன்பையும் பூண்டு விளங்கும் பெருந்தேவியான மணம் கமழும் கூந்தலையுடைய அவளது கையை, அணிந்த வளையலுடன் அப் போதே துண்டித்தார்.
இப்பொழுது மேற்குறிப்பிட்ட சம்பவத்தை ஆண்டாள் சரித்திரத்தோடு ஒப்பிட்டு பார்ப்போம்.
( செட்டிபுணியம் தேவ நாராயண பெருமாள் கோயில் – படம் நன்றி அசோக் )
ஆண்டாள் கண்ணனையே காதலனாக வரித்தாள். அந்தக் கண்ணனே மணாளனாகவும் வேண்டும் என்று விரதமிருந்தவள்.
பாவை விரதம் முதல் மன்மதனுக்கு வேண்டி நோன்பு இருப்பது வரை பல நோன்புகள் நோர்த்தவள். எல்லாமே கண்ணனின் கரம் பற்றவேண்டித்தான். இவள் விரதம் முடிப்பதற்கு எல்லாத் தேவதைகளையும் கூவி அழைத்தவள். (மன்மதனின் தம்பி முதற்கொண்டு வருணதேவன் சுமந்து செல்லும் மழைமேகங்கள் வரை அனைவருமே ஆண்டாளுக்குக் காதல் தூதுதான்.)
கண்ணனே தன் கணவன் என்பதை கனவிலும் நனவிலும் நன்குணர்ந்தவளாகையால், கண்ணனுக்கு செய்யப்படும் கைங்கரியங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். அதில் ஒன்றுதான் கண்ணனுக்கு பூமாலை சரிபார்த்துச் சார்த்துதல்.
தந்தையாரான விஷ்ணுசித்தனார் (பெரியாழ்வார்) நாளும் தோட்டத்தில் தானே கொய்த மலர்களைக் கோர்த்து பரந்தாமனுக்காக சார்த்துவதற்காக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த மலர் மாலையைக் கூட ஆண்டாள் விடவில்லை. முதலில் தனக்கு சார்த்திக் கொள்வாள். கண்ணாடி பார்ப்பாள். ‘அழகோ அழகு.. கொள்ளை அழகு.. கண்ணனுக்கு சார்த்தவேண்டிய மாலைதான் இது’ என்று ஒப்புதல் (தனக்குத் தானே) கொடுத்துக் கொள்வாள்’. அடுத்தநாள் அதிகாலை அந்த மாலை கண்ணனின் தோள் மீது ஒய்யாரமாக அலங்கரிக்கப்படும்போதெல்லாம் அவள் உள்ளம் மகிழ்ச்சியில் பூரிக்கும்.
ஆனால் ஒருமுறை இந்தச் செயலை பெரியாழ்வார் கண்டுவிட்டார். ‘ஆகா.. மாதவனின் மலர் மாலை மானிடர் கழுத்தில் முதலில் போடப்பட்டு அதன் பின்னரே அவனுக்கு சார்த்தப்படுகிறதா.. இந்தக் குற்றத்தைத் தன் பெண்ணே செய்து விட்டாளே’ என்ற பெருங்குறையில் தவித்துவிடுகிறார்.
இரவில் கண்ணன் அவர் கனவில் வருகிறான் ‘கலங்கவேண்டாம்.. உங்கள் கோதை தான் சூடி எனக்குச் சூடும் மாலைதான் என் விருப்பம்’ என்று சொல்லித் தேற்றுகிறான். பெரியாழ்வாருக்கு ஆண்டாளின் தெய்வீகம் புரிகிறது.
அன்னவயற்புதுவையாண்டாளர ங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல் பதியம்- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்- நாடி நீ
வேங்கடவற்கென்னவிதியென்ற விம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.
‘சூடிக் கொடுத்த சுடர்கொடியாளே’ என்று தன் மகளை கண்ணில் ஆனந்தநீர் மல்க அணைத்துக் கொள்கிறார்.
இறைவனுக்காண மலரை முகர்ந்த ஒருத்தருக்கு தண்டனையும், இறைவனுக்காண மாலையை தான் சூடிப் பார்த்து தந்த ஆண்டாளை வழிபடுவதற்குமான காரணம் இப்பொழுது புரிகிறதல்லவா. அரசி சங்கா மலரை முகர்ந்து பார்த்தது அதனுடய நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு, தன் மகிழ்ச்சிக்காக முகர்ந்தாள், தண்டனையை அனுபவித்தாள். ஆனால் ஆண்டாளோ இறைவனுக்கு மாலை சரியாக இருக்குமோ, அவன் மகிழ்ச்சியடைவானோ என்ற நோக்கில் மாலையை சூடித் தந்தாள், அதனால் வழிபாட்டுக்குரியவளானாள்.