கல்லிலே கலைவண்ணத்தோடு நாம் மேற்கொண்ட ஒரு சிறப்பான நீண்ட நெடிய உற்சாகக் கலைப் பயணத்தில் இது ஒரு முக்கிய தருணம். இந்த சிறப்பான புனிதப்பணியில் என்னோடு பங்கு கொண்டு பயணித்து வரும் நண்பர்களுக்கும் இது இனிய தருணம். ஆம்! இது 250 ஆவது பதிவு. இந்தப் பதிவின் போது ஒரு முக்கியமான உத்தமரைப் பற்றியும் அவர் எங்கள் பதிவுகளுக்கு எத்தனை அரிய சந்தர்ப்பங்களை தன் தேவாரம் தளம் மூலமாக செய்து கொடுத்திருந்தார் என்பதையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவர்தான் தமிழ்ப் பேரறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். தமிழின் இனிய தேவகானமான தேவாரத்தையும் திருவாசகத்தையும் பெரிய புராணத்தையும் உலகின் பல பாஷைகளில் எடுத்துச் செல்லும் மகான். அத்தகைய மாமனிதரை இந்த 250 ஆவது சிறப்புப் பதிவான விஷாபஹரணர் (விடமுண்ட கண்டன்) சிற்பத்துக்காக ஒரு முன்னுரை எழுதச் சொல்லிக் கேட்டபோது அந்த சிவபக்தர் உடனடியாக ஒப்புக் கொண்டு அனுப்பிவைத்தார். இதோ அவர் கையால் ஒரு சிறிய முன்னுரை.
”ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி” என்றார் அபிராமிப் பட்டர் (அபிராமி அந்தாதி பாட்டு 7).
மத்து (சுழலும்போது) இரு பக்கமும் மாறி மாறிச் சுழலும். இந்தப் பக்கம் போகுதே எனக் கருதுமுன்பே மற்றப் பக்கம் திரும்பும்.
உயிர் அத்தகைய சுழற்சிக்கு ஆளானது. திரோதான சக்தி ஒருபுறம் ஈர்க்கும், சிவனின் திருவடிகளை அடைய உதவும்.
அந்தச் சக்தியின் ஈர்ப்பில் ஆட்பட்ட நிலை தொடராது.
மாயை மறுபக்கம் ஈர்க்கும், ஆணவம் சார்ந்த நிலை வரும்.
ஐயையோ தவறினோமே என வருந்தி அந்த ஈர்ப்பிலிருந்து விடுபட்டுத் திரோதான சக்தியின் ஈர்ப்பில் உயிர் ஈடுபடும்.
நல்வினை ஒருபுறம், தீவினை மறுபுறம். மாறி மாறி வரும் ஈர்ப்புகள், இடையில் தவிக்கும் தத்தளிக்கும் உயிர்.
”அமுதம் தரும் பாற் கடல். மத்தாக மேரு மலை. நாணாக வாசுகி பாம்பு. ஒரு பக்கம் அசுரர். மறுபக்கம் தேவர். பாற்கடலைக் கடைகின்றனர்.
ஆலகால விடம் திரள்கிறது. அமுதம் திரளவேண்டிய இடத்தில் விடம். அந்த விடம் அனைவரையும், அனைத்தையும் அழிக்கும் விடம்.
சிவன் விடத்தை அள்ளுகிறார்.
நீடும் இருவினைகள் நேராக நேராதல் கூடும் இறை சத்தி கொளல் (திருவருட்பயன் 51) என்றார் உமாபதிசிவம்.
நல்வினை ஒருபுறம், தீவினை மறுபுறம்.
அருளின் ஈர்ப்பு ஒருபுறம், ஆணவத்தின் ஈர்ப்பு மறுபுறம்.
”எல்லாப் பிறப்பும் பிறந்தேன், பிறந்து பிறந்து இளைத்தேன், உன் பொன்னடிகள் கண்டேன், வீடுபேறு அடைந்தேன்,(மாணிக்கவாசகர்)
விடமுண்ட கண்டன் திருவடிகளை அடைதல், உயிரின் ஏக்கம். அறுக்க முடியாப் பாசத்தை அறுத்து, வினை நீக்கி விரும்பி வீடருள்வான் சிவன்.
தேவாரத்தில்தால் இறைஞானிகள் எத்தனை இடங்களில் விடமுண்டகண்டனை சிறப்பித்துள்ளார்கள்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்
இவ்வாறாகப் பன்னிரு திருமுறைகள் முழுவதும் சிவனின் கண்டத்தில் விடமுள்ள பாங்கான உயிரது இருவினை ஈர்ப்பு நிலையைச் சுட்டி நிற்கின்றன.
முழுமையை நோக்கிய உயிரின் நெடும் பயணம். இடைவிடா முயற்சி. உயிரின் தன்மையே அஃதாம். அந்தக் கூர்மை முயற்சி வழுக்கும் கம்பம் போல. சாண் ஏற முழம் சறுக்கும். தீவினைகளைத் தனதாக்குபவன் சிவன், உயிரின் கூர்மை முயற்சிக்குக் கை கொடுப்பவன் சிவன். விடா முயற்சிக்குரிய நம்பிக்கையின் ஊற்றுக்கண், விடமுண்ட கண்டன் அவன்.
இறைவன் இந்த உயிரினம் என்றும் நிலைக்கச் செய்ய தன்னையே கூட தியாகம் செய்ய முன்வந்த அற்புத நிகழ்ச்சிதான் விடமுண்டகண்டன் நிகழ்ச்சி. நினைத்துப்பாருங்கள்.. அன்று சிவன் மட்டும் விடத்தை உண்டிராவிட்டால் ஏது இங்கே உலகம்.. ஏது மக்கள்.. ஏது உயிரினம்.. கிடைத்தற்கரிய அமுதத்துக்காக ஏற்கனவே கிடைத்திருந்த உயிரினங்களை பலி கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் அனைவரையும் அனைத்தையும் காத்தவன் அன்றோ..
ஆஹா.. அப்படிப்பட்ட விடமுண்டகண்டனின் சிற்பம் ஒன்று இந்த சிறப்புப் பதிவில் பார்ப்போமே. பல்லவர்கள் போய் சோழர்கள் தமிழகத்தை தங்கள் கீழ் கொண்டு வரும் 9ஆம் நூற்றாண்டு சிற்பம். மிகவும் அரிய பொக்கிஷம் இது. பொக்கிஷம் என்று சொல்லிவிட்டதால் அது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது என்று சொல்லவும் வேண்டுமோ.
மீண்டும் ஒரு முறை காட்சியை மனதில் கொண்டு மேலே செல்வோம். சிவன் விடத்தை அள்ளுகிறார். அவர் மனதில் என்ன எண்ணங்கள் உதித்திருக்கும் , அவை அவரது திருமுகத்தில் எப்படி பிரதிபலிக்கும்.
நாம் முன்னர் பார்த்த சோமஸ்கந்தர் பல்லவ வடிவம் இந்த சிலையை விட பழமை என்று ஏன் கருதப்படுகிறது என்றும் பார்ப்போம்.
ஈசனின் மனதில் உள்ள ஆழ்ந்த சிந்தனையை எப்படி தான் முகத்தில் கொண்டு வந்தானோ அந்த கலைஞன்.
பொதுவாக ஆனந்தக் கூத்தனின் புன்முறவல் இங்கே இல்லை. அண்டத்தை காக்க தான் செய்ய வேண்டிய அடுத்த காரியத்தை எண்ணி ஒரு நிமிடம் …நெற்றிக் கண்ணோடு அந்த முகத்தில் இருக்கும் பாவம்.
இந்த சிலையில் ஜடாமகுடம் சற்றே உயர்ந்து காணப்படுவது இதன் காலத்துக்கு ஒரு அறிகுறி. அதில் கொன்றைப் பூ மற்றும் பிறைச் சந்திரன் அருமை. இங்கு மகுடத்தில் ஒரு புதிய அணிகலன் காணப்படுகிறது. பல முனைகளை கொண்ட சூலம் போன்ற ஒரு அணிகலன் நாம் முதன் முறையாக இந்த சிலையில் பார்க்கிறோம்.
உடல் அமைப்பு அருமையிலும் அருமை. அந்த இடை கொள்ளை அழகு. மார்பின் மேலே யக்நோபவீதத்தின் (புரிநூல்) முடிச்சு மிகவும் அழகாக உள்ளது. அதுவும் மூன்று இழைகளாக பிரிந்து ஒன்று வலது கையின் மேலே செல்கிறது. இந்த பாணி பல்லவர் காலத்து சிலைகளிலும் சிற்பங்களிலும் வெகுவாக நாம் பார்க்கலாம். பட்டையாக வேப்லைபாடுகள் கொண்ட உதரபந்தம் உள்ளது.
இரண்டு கரங்களை ஒரு பக்கத்தில் காட்ட முயற்சிக்கிறான் சிற்பி, அதனால் கைகளின் மேல் பகுதி சற்றே தடிமனாக உள்ளது. இதை கொண்டு இது ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் வடிக்கப்பட்டதென்று கருதலாம.
ஆனால் கை முட்டிக்கு கீழே அபாரம். ஆபரணங்கள் மகுடத்தில் உள்ள புதிய வடிவத்தை ஒத்து உள்ளன. இதனை ஒத்து பார்க்கும் பொது நடேசர் சிலையின் மிக குறைவான அணிகலன்களை கொண்டு அதன் காலம் இந்த சிலையை விட முன்னதாக நிர்ணயிக்கப்படுவதை நாம் உணரலாம்.
மேல் கைகள் ஒரு பக்கம் மழு , மறு பக்கம் மான். இங்கே நாம் பார்க்கவேண்டியது மழு எப்படி கையினுள் உள்ளங்கையில் படும்படி இருக்கிறது. நாம் முன்னர் பார்த்த வடிவங்களில் இரு விரல்களில் அது இருக்கும்.
மான் குட்டி மிக சுட்டி. ஆஹா என்ன அழகாக தந்து முன்னங்கால்களை மடக்கி – ஒரு வேளை ’வேண்டாம் செய்யாதீர்கள்’ என்றோ அல்லது ’ஆஹா தம்மைப் போன்ற உயிரினங்களையும் வாழவைக்க நீங்கள் செய்யப் போகும் மகத்தான காரியம்’ என்று போற்றி வணங்குகிறதா ?
உடலில் தோலுக்குள் இருக்கும் எலும்பு, அதன் மேலே படியும் சதை, அதை சுற்றி இருக்கும் துணி என்று அனைத்தையும் ஆய்ந்து தன் திறமையை வெளிப்படுத்துகிறான் சிற்பி. அந்த வலது காலை பாருங்கள்.
இடுப்பில் ஆடை உக்ரமுக பதக்கதில் இருந்து வெளி வருவது போல வடிவம் உள்ளது. உத்சவ மூர்த்தி என்பதால் பவனி வருவதற்கு எதுவாக கைப்பிடிகள் , நல்ல தடிமனான பீடம் எல்லாம் உள்ளன.
தோள்களின் மேல் தவழும் அவரது கூந்தலில் ஒரு மலர் – ஆஹா என்ன அழகு.
பின்புறம் சென்று பார்க்கும் பொது தான் அந்த சிகை அலங்காரத்தின் முழு அழகு தெரிகிறது.
மிக அழகான சிரஸ் சக்கரம், முன்னர் பார்த்த வடிவங்களை விட இந்த வடிவம் புதியது என்பதற்கு இன்னும் ஒரு காரணம். சிரஸ் சக்கரத்தில் இருந்து விரியும் கூந்தல், அதில் ஒன்று எப்படி அந்த கழுத்து மாலையின் பின்னல் தொங்கும் பட்டையின் மேலே தவழ்கிறது பாருங்கள்.
அப்படியே வளைந்து தோள்களின் மேல் படரும் கூந்தல் எழில் சொக்க வைக்கிறது.
கீழ் இரண்டு கைகள் தான் நமக்கு மிகவும் முக்கியம்.
இடது கையில் ஒரு பெரிய நாகம், படம் எடுத்து மகேசனை நோக்கும் வண்ணம். ஒரு வேளை வலது கையில் இருக்கும் விடத்தின் தன்மையை விளக்க சேர்க்கப்பட்டதோ.
வலது கையில் ஆலகால விடம்
அனைத்தையும் சேர்ந்து பார்க்கும்போது தான் சிற்பத்தின் உள்ளுணர்வு நமக்கு புரிகிறது.
ஈசன் தயார். அடுத்து என்ன நடந்தது? அடுத்த பதிவில் பார்ப்போம்.
இதோ ஈசன் தயார். அடுத்து என்ன நடந்தது? அடுத்த பதிவில் பார்ப்போம்.
மீண்டும் ஒரு முறை திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி கூறி, அவருக்கும் அவரதுமகத்தான பணியில்துணை நிற்கும் அனைவருக்கும் உங்களால் முடிந்த உதவியை தவறாமல் செய்யுங்கள் என்று கூறி, 250 பதிவுகளை பொறுமையாக படித்து பின்னூட்டம் அளித்து எங்களை வழி நடத்தும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.