இந்தத் தலைப்பு பலருக்கும் ஆச்சரியத்தைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் சிவப்புரத்தின் பிரசித்தி பெற்ற தலைப்பு சிவப்புரம் நடராஜர் – ஒரு வேளை தலைப்பைத் தவறாக இட்டிருக்கிறேனோ என்று தோன்றக்கூடும். இல்லை, இன்று நீங்கள் காணப்போவது அதேக் கோவிலின் மற்ற வெண்கலச்சிலைகள் பற்றிய கதை – யாருக்கும் சொல்லப்படாதக் கதை. தொன்மையான பொருட்களைத் திருப்பித் தருவது பற்றிய முக்கியத் தீர்ப்பின் இருண்ட பக்கங்கள் அவை.
புகழ் வாய்ந்த சிவப்புரம் நடராஜர் வழக்கைப் பற்றி கூகிள் மூலம் சுலபமாக அறியலாம். அதன் சாராம்சம் இதோ:

1951: சிவப்புரம் கோவிலின் புனரமைப்புப் பணிகளின்போது நடராஜருடன் கூட மேலும் 5 வெண்கலச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்திய டிரெஷர் ட்ரோவ் ஆக்டின்படி (Indian Treasure Trove Act) அவை அக்கோவிலுக்குத் திருப்பியளிக்கப்பட்டன. (அதன் உரிமை மாநில அரசிடம்)
“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”
தஞ்சாவூரின் மாவட்ட ஆட்சியாளர் அந்த ஆறு சிலைகளையும் சிவப்புரம் ஸ்ரீ சிவகுருநாதசுவாமி கோவிலில் ஒப்படைத்தார் (G.O. Ms. No. 2987/Revenue Department dated 29-10-1953)”
1954-56: அந்தச் சிலைகளை சீர் செய்ய அவை உள்ளூர் ஸ்தபதியிடம் அளிக்கப்பட்டன. அங்கேபோலிகள் உருவாக்கப்பட்டு, கண்டெடுக்கப்பட்ட தொன்மையான சிலைகள் திருடப்பட்டன.
கோவிலின் தர்மகர்த்தாக்கள் அந்தச் சிலைகளைப் பழுது பார்க்க விரும்பி அந்தப் பணியை கும்பகோணத்தைச் சேர்ந்த ராமசாமி ஸ்தபதியிடம் 1954 ஜூன் மாதத்தில் ஒப்புவித்தனர். 1956ஆம் ஆண்டு குத்தாலத்தைச் சேர்ந்த திலகர் மற்றும் அவனது சகோதரன் தாஸ் இருவரும் தொன்மை வாய்ந்த நடராஜர் மற்றும் 5 சிலைகளையும் தங்கள் வசம் தந்துவிடும்படியும் அவற்றிற்குப் பதிலாக போலியான சிலைகளை செய்துவிடும்படியும் தூண்டினர். திலகர் அந்த உண்மையான நடராஜர் சிலையை தாஸின் ஏற்பாட்டின்படி பம்பாயைச் சேர்ந்த லான்ஸ் டேன் எனும் கலைப்பொருள் சேகரிப்பானிடம் அளித்தான். அவர் அச்சிலையை 10 ஆண்டுகள் தன்னிடம் வைத்திருந்தார்.
1963: ஒரு முக்கிய குறிப்பு மற்றும் நிகழ்ச்சி – அதைப் பற்றி பிறகு காண்போம்.
1965: பிரிட்டிஷ் மியூசியத்தைச் சேர்ந்த டாக்டர் டோக்லாஸ் பாரட் கோவிலுக்கு வருகைத் தருகிறார். அந்தச் சிலைப் போலியானது என்று குற்றஞ்சாட்டி தனது புத்தகத்திலும் பதிவு செய்கிறார். மேலும் அசலான சிலை பம்பாயைச் சேர்ந்த வணிகரிடம் இருந்ததையும் வெளிப்படுத்துகிறார்.
பிரிட்டிஷ் மியூசியத்தைச் சேர்ந்த டாக்டர் டோக்லாஸ் பாரட் தனது தென்னிந்திய வெண்கலச் சிலைகள் எனும் புத்தகத்தில் சிவப்புரத்திலுள்ள நடராஜர் சிலை போலியானது என்றும் அசல் சிலை ஒரு தனியார் கலைப்பொருள் சேகரிப்பானிடம் உள்ளது என்றும் கூறுகிறார். Tr.P.R. ஸ்ரீனிவாசன் (மியூசியத்தின் மேற்பார்வையாளர்) உடனே மியூசியத்தின் இயக்குநருக்கும் தமிழக அரசிற்கும் எச்சரிக்கை செய்தார். இதன்பேரில் நடந்த விசாரணையின் விளைவாக நாச்சியார் கோவிலில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
P.S.Cr.No.109/69 U/S 406 IPC. குற்றப் புலனாய்வுத் துறை தனது புலனாய்வை மேற்கொண்டது.
1967: நடராஜர் சிலை போமன் பெஹ்ரம் எனும் பம்பாயைச் சேர்ந்த கலைப்பொருள் சேகரிப்பாளரின் வசம் வந்தது. அவர் அதனை நியூயார்க்கைச் சேர்ந்த கலைப்பொருள் வணிகர் பென் ஹெல்லருக்கு விற்றார்.
லான்ஸ் டேன் 10 ஆண்டுகள் சிலையைத் தன்னிடம் வைத்திருந்து பின் பம்பாயைச் சேர்ந்தபோமன் பெஹ்ரமிற்கு விற்றார். அவர் அதனை மெனு நரங்கிடம் விற்றார். பிறகு 1969இல் நியூயார்க்கைச் சேர்ந்த பென் ஹெல்லர் 6 லட்சம் ரூபாய் கொடுத்து அதனை வாங்கி நார்டன் சைமன் ஃபவுண்டேஷனுக்கு 9 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்றார்.
1973: பென் ஹெல்லர் அந்தச் சிலையை நார்டன் சைமன் ஃபவுண்டேஷனுக்கு 9 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்றார்.
1973: நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (MET) எனும் கலைப்பொருள் அருங்காட்சியகம், நார்டன் சைமன் ஃபவுண்டேஷனுடைய இந்தியக் கலைப் பொருட்களைக் கொண்டு ஒரு கண்காட்சி நடத்தத் திட்டமிட்டது. அதையொட்டிய விளம்பரத்தின் மூலமாக இந்திய அரசு அச்சிலை அமெரிக்காவில் இருப்பது குறித்து அறிந்து கொண்டது. கடத்தப்பட்ட தொன்பொருளை இந்திய அரசு முதன்முறையாகக் கண்டுபிடித்தது. உடனே அந்த மியூசியத்திற்கு இந்திய அரசு ஆட்சேபம்தெரிவித்து ஒரு கடிதம் எழுதியது. மேலும், அமெரிக்காவின் மாநிலத்துறையின் உதவியுடன் அந்தக் கண்காட்சியைத் தடை செய்தது.
1973: மேலும் சீர் செய்ய நடராஜர் சிலை பிரிட்டிஷ் மியூசியத்திற்கு அனுப்பப்பட்டது.
1973: இந்திய அரசு அச்சிலையை திருப்பிக் கொடுக்கக் கோரி லாஸ் ஏஞ்சல்சிலும் (நார்டன் சைமன் ஃபவுண்டேஷனின் இருப்பிடம்) நியூயார்க்கிலும் (பென் ஹெல்லரின் இருப்பிடம்) வழக்குப் பதிவு செய்தது. மேலும் இந்திய அரசு இங்கிலாந்து அரசிற்கு அரசியல் நெருக்கடி தரவும், அச்சிலையை ஸ்காட்லேண்டு யார்டு தன் வசம் கொணர்ந்தது. நார்டன் சைமன் ஃபவுண்டேஷன் இந்தியாவிற்கு நடராஜர் சிலையின் மீது எந்த உரிமையும் இல்லையெனக் கூறிஅதனைத் திருப்பித் தர மறுத்தது.
1975: நீதிமன்றத்தின் வெளியே ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு ஏதுவாக ஒரு வருடகாலத்திற்கு இந்தியா தானாகவே இந்த வழக்கினை நிறுத்தி வைத்தது.
1976: நார்டன் சைமன் ஃபவுண்டேஷனும் இந்திய அரசாங்கமும் நீதிமன்றத்திற்கு வெளியே மத்யஸ்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு தீர்மானத்திற்கு வந்தன.
இந்தியாவில் வெளியான செய்திகள் இங்கே தடிமனான எழுத்துகளில் உள்ளன:
லான்ஸ் டேன், திலகர், தாஸ், ராமசாமி ஸ்தபதி ஆகியோரை ஒரு பிரத்யேகக் குழு கைது செய்தது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் அப்பொழுதைய DIG திரு. Tr.S. கிருஷ்ணராஜ் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்று சிலை கடத்தலுக்கான ஆதாரங்களை சேகரித்தார். ஸ்காட்லாண்டு யார்டு நடராஜர் சிலையை நார்டன் சைமன்ஃபவுண்டேஷன் லண்டனில் உள்ள திருமதி. ஆனா ப்லெளடனுக்கு பழுது பார்க்க அனுப்பியதை அறிந்து அதனைக் கைப்பற்றியது.
இந்திய அரசாங்கம் நடராஜர் சிலையைத் திரும்பப் பெற நார்டன் சைமன் ஃபவுண்டேஷனுக்கு எதிராக இங்கிலாந்து, நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் வழக்குப் பதிவு செய்தது. சென்னையைச் சேர்ந்த திரு. KK ராஜசேகரன் நாயர் IPS, IGP (Crime), சிலையைத் திரும்பப் பெற வெளியுறவு அமைச்சகத்திடம் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசிற்கு கடிதம் எழுதினார். புது தில்லியில் உள்ள இந்தியத் தொல்பொருள் ஆய்வகத்தின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் MS நாகராஜ ராவ் வாஷிங்கடனில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்து அச்சிலையைப் பெற்றுக்கொண்டார். தற்போது அந்த நடராஜர் சிலை சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலின் பாதுகாப்பான பெட்டகத்தில் உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டோர் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டனையளிக்கப்பட்டது.
மற்ற சிலைகளைப் பற்றி தகவல் ஏதும் இல்லை.
இங்கு தான் சுவாரசியமான விஷயமே உள்ளது. மற்ற 5 வெண்கலச் சிலைகள் என்னவாயின?
“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”
மேலே குறிப்பிட்டுள்ள 1963ஆம் ஆண்டு நினைவிலுள்ளதா? இந்த வருடத்தில்தான் திரு. PR ஸ்ரீநிவாசன் அவர்கள் தனது “தென்னிந்திய வெண்கலச் சிலைகள்” எனும் மிகச் சிறந்த புத்தகத்தை வெளியிட்டார். (Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994)

அதிர்ஷ்டவசமாக அவர் நடராஜர் சிலையை மட்டுமில்லாமல் சோமாஸ்கந்தர் சிலையையும் புகைப்படம் எடுத்திருந்தார். மேலும் அந்தச் சிலைகள் சிவப்புரம் கோவிலில் வழிபடப்படுபவை என்று இடத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதோ இங்குள்ள படத்தைப் பாருங்கள். நார்டன் சைமன் மியூசியத்தின் ஒரு காட்சிப்பொருள் – இது 20 டிசம்பர் 2008 தேதியிட்ட flickr படமாகும்.

இக்கலைப் படைப்பின் பிறப்பிடத்தை கீழுள்ள தகடு அறிவிப்பது மிக சுவாரசியமானது.

ஒரு சாதாரண மனிதனுக்குக்கூட இந்த ஒப்பீடு எளிதில் விளங்கும்.
மேலும் சற்று கூகிளாரின் உதவியைப் பெற்றோமானால் அதே அருங்காட்சியகத்தில் 1972 மற்றும் 1973 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட கலைப்பொருட்கள் எவையெவை என்பது நம் கவனத்தை ஈர்க்கக்கூடியவை.
அதே சோமாஸ்கந்தர் ஆனால் பெயர் பலகை இல்லை.

மேலும் சில திருமேனிகள் அங்கே உள்ளன



“1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.”
இந்த வழக்கைப் பற்றியத் தகவல்கள் மாநிலத்தின் வலைத்தளத்தில் இவ்வாறு முடிகிறது – “குற்றஞ்சாட்டப்பட்டோர் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டனையளிக்கப்பட்டது. மற்ற சிலைகளைப் பற்றி தகவல் ஏதும் இல்லை.”
நீதிமன்றத்தின் வெளியே ஏற்கப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் என்ன? அதிலும் இவ்வாறு கூறிய ஒருவருடன்:
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் நடராஜர் சிலை குறித்து சைமன் கூறியதாவது: “ஆமாம்! அது கடத்தப்பட்டதுதான். கடந்த 2 ஆண்டுகளில் ஆசிய கலைப்பொருட்களைப் பெற 15 முதல் 16 மில்லியன் டாலர் வரை செலவழித்திருக்கிறேன். அவற்றில் அநேகப் பொருட்கள் கடத்தப்பட்டவையே.”
தனது துணையையும், மகனையும், பக்தனையும் தனியே விட்டுச் சென்றாரோ நடராஜர்!!!
வாசகர்களின் கவன ஈர்ப்புக்கு கீழ்க்கண்டதைக் கொண்டு வருகிறோம். பொதுவாகவே இந்த தொல்சிற்பங்கள், அதை வாங்கி ஏலம் போடும் உலகளாவிய நிறுவனங்கள், அவைகளை பொருட்காட்சியாக்கும் மியூசியங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் எச்சரிக்கையாகக் கையாளவேண்டும். தவறான போக்கு எனத் தெரியும்போது இவர்கள் மீது நாம் எளிதாக குற்றம் சாட்டிவிடலாம். அதேசமயத்தில் இந்த விஷயத்தில் உள்ள உணர்ச்சிமயமான விஷயங்களைக் கூட கவனிக்கவேண்டும். ஆகையினால் இந்தப் பதிவு மிகக் கவனமாகக் கவனிக்கப்படவேண்டும். இங்கு நாம் யாரையும் குற்றம் குறை சொல்ல வரவில்லை. அது நம் நோக்கமும் அல்ல. அதே சமயத்தில் உண்மை என்பது எங்கு மறைத்துவைக்கப்பட்டாலும் அது தெரியப்படும்போது, அதனை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். மேலே சொன்னபடி இந்த சிற்பங்கள் மிகத் தொன்மையானவைதான். மிகுந்த செல்வச் சிறப்பு பெற்றது கூட. அதே சமயத்தில் தெய்வத்தின் மறு உருவாகப் பார்க்கப்பட்டு வணங்கப்பட்டது கூட என்பதையும் நினைவில் நிறுத்திப் பார்க்கவேண்டும். தற்சமயம் நூற்றுக்கணக்கில் இந்த தொல் சிற்பங்கள் நமது ஊரிலேயே மியூசியத்து கோடவுனில் கிடத்தப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அவைகளை உரிய இடத்தில் ஒப்படைத்தால் அவைகளின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படலாம் என்ற அச்சம் இருக்கிறது என்பது உண்மையும் கூட. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட சிறந்த நிபுணர் குழு ஒன்று அமைத்து இதற்கு சரியான தீர்வு காண்பதே வழியாகும் என்பதே எம் கூற்று.
Ref:
https://plone.unige.ch/art-adr/cases-affaires/nataraja-idol-2013-india-and-norton-simon-foundation-1/case-note-2013-nataraja-idol-2013-india-and-norton-simon-foundation/view
http://www.forbes.com/2004/05/25/cx_0525conn.html|Forbes
http://www.tneow.gov.in/IDOL/judgement.html