மாட்டுப் பொங்கலன்று நம் கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு. மாடுகளுக்கும் மனிதருக்கும் போட்டிக் களத்தில் நடக்கும் பலப்பரீட்சை. எனினும் கடந்த சில வருடங்களாக இதற்கு பல்வேறு காரணங்களால் பல தடைகள் வந்துள்ளன. எனினும் புதிய விதி முறைகளுடன் தற்போது இந்த பாரம்பரிய போட்டி செவ்வனே நடந்து வருகிறது

( நன்றி – விக்கி )
இன்று நாம் காணப் போவதும் எருது தழுவும் – ஜல்லிக்கட்டு சிற்பம் தான். அதுவும் பசுக்களை பராமரிக்கும் கோபாலனே காளையை தன்வசப்படுத்தும் ஒரு சிறிய, ஆனால், அற்புதமான சிற்பம். மீண்டும் திருமால்புரம் ஆலயத்தில் தான்.


முதலில் கதையைக் கேட்போம், பிறகு அருகில் சென்று சிற்பத்தைப் பார்ப்போம்.
அவனது மாயா லீலைகளில் இரு இடங்களில் காளையை பற்றிய குறிப்புகள் வருகின்றன.
ஒன்று அரிஷ்டன் என்ற அசுரனின் வதம்.
போஜ மன்னனான கம்சனின் பணியாள் அரிஷ்டன். கொடுமையான அரக்கன் ஆவான். ஒரு சமயம் அவனைக் காளை மாட்டு உருவம் தாங்கிக் கண்ணனைக் கொல்லவேண்டிக் கம்சன் அனுப்பி வைத்தான். கூரிய கொம்புகள், மிகப் பெரிய உருவம் கொண்ட காளை மாட்டின் உருவம் எடுத்துக்கொண்டு கோகுலத்துப் பசுக்கள் மத்தியில் ஹூங்காரம் செய்து கொண்டு அரிஷ்டன் புகுந்தான்.
அனைத்து கோபர்களும் தைரியம் இழந்து அந்தக் காளை மாட்டின் உருவத்தையும், அதன் பலத்தையும் கொம்புகளால் தரையைக் குத்திக் கொண்டு சீறுவதையும் கண்டு பயந்து ஓட, அரிஷ்டன் பசுக்களை ஓட ஓட விரட்டினான். கொம்புகளைத் தாழ்த்திக்கொண்டு சற்றும் பயமின்றி கண்ணனை நோக்கிப் பாய்ந்தான். வேகமாய்ப் பாய்ந்த அரிஷ்டனை இரு கொம்புகளையும் தாவிப் பிடித்துத் தடுத்தான் கண்ணன். பின்னர் அரிஷ்டனைக் காலால் எட்டி உதைக்க பதினெட்டு அடி தூரத்தில் காளை போய் விழுந்தது. பின்னர் கண்ணன் அந்தக் காளையைத் தன் தலைக்கு மேல் சுற்றித் தூர எறிந்து கொன்றான்
மற்றொன்று, பிருந்தாவனத்தில் ஹஸ்தின் என்ற ஒரு காளை இருந்து வந்தது. அது அங்கிருந்த காளைகளுக்கெல்லாம் அரசன் போல் விளங்கியது. நன்கு தீட்டி விடப்பட்ட கூரான கொம்புகளுடனும், முறுக்கிய வாலுடனும், திடமான உடலுடனும், பளபளவென்ற மேனியுடனும் காட்சி அளித்தது. முரட்டுக் காளையென்று பெயர் பெற்ற அக்காளையின் அருகில் யாரும் நெருங்கவே பயம் கொள்வர். ஓரிடத்தில் நில்லாமல், தான் கட்டப்பட்டிருக்கும் மரத்தைச் சுற்றி கால்களை பூமியில் கிளறிக் கொண்டே இருக்கும். யாரேனும் தன்னை நெருங்கினாலே, அவர்களை தனது எதிரி போல் கருதி, தனது கூரிய கொம்புகளால் முட்டுவதற்கு ஆயத்தமாகிவிடும்.
இத்தகைய முரட்டுக் காளையை அடக்குவது பற்றி கண்ணன், பலராமன் மற்றும் அவர்களின் நண்பர்களிடையே விவாதம் நடைபெற்றது. இறுதியில் கண்ணன், தானே அந்தக் காளையை அடக்குவதாக பந்தயம் ஏற்றுக் கொண்டார். முதலில் விளையாட்டாக பேச்சு துவங்கிய போதும், இறுதியில் பலராமனும் மற்றும் நண்பர்களும் இது ஆபத்தானது என்றும், இந்தப் பந்தயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாமென்றும் தடுத்துக் கூறினார்கள். இருப்பினும் கண்ணன் தான் நிச்சயமாக அந்தக் காளையை அடக்கி அதன் மீது சவாரி செய்யப் போவதாக கூறி அதற்கான ஒரு நாளையும் நிச்சயித்தான்.
முதலில் கண்ணன், பருத்திக்கொட்டை வைக்கப்பட்டிருந்த கூடையை அதனருகில் வைத்தான். பிறகு தன் புல்லாங்குழலை எடுத்து இனிய கீதம் இசைத்தான். கண்ணன் கீதம் இசைக்கையில் பறவைகளும், கறவைகளும் கூட மனம் லயித்துக் கேட்பதை பெரியாழ்வார் தனது பாசுரத்தில் மிக அருமையாகக் கூறுகிறார்.
சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச்
செய்யவாய் கொப்பளிப்பக் கோவிந்தன் குழல் கொடூதினபோது
பறவையின் கணங்கள் வந்து கிடந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாவே.”
(பெரியாழ்வார் திருமொழி – ஆறாம் திருமொழி – பாடல் 8. )
தனது சிறிய கைவிரல்களால் புல்லாங்குழலின் துளைகளை மூடியும் திறந்தும் தடவிக் கொண்டு, செந்தாமரை போன்ற கண்கள் மேல் நோக்கி வக்ரமாகவும், சிவந்த வாயைக் குவித்துக் கொண்டு ஊதுகிறபோது வாயினுள் உள்ள வாயுவின் பூரிப்பாலே வாய் குமிழ்க்கவும், புருவங்கள் மேற்கிளர்ந்து வளையவும் கோவிந்தன் குழல் ஊத, அக்குழலோசையை கேட்ட பறவையினங்கள், தாமிருக்கும் கூடுகளை விட்டு ஓடி வந்து, கண்ணனருகில் வந்து, காட்டில் வெட்டி வீழ்ந்த மரங்களைப் போல் ஆடாது அசையாது மெய் மறந்து கிடக்க, பசுக்களோ மெய் மறந்து கால்களைப் பரப்பிக் கொண்டும், தலையை தொங்கவிட்டுக் கொண்டும், காதுகளையும் அசைக்காது நின்றன.
இவ்வாறு புல்லாங்குழல் இசைக்கவும் மெல்ல மெல்ல ஹஸ்தின் மனம் அமைதி பெற்றது. இனிய குழலோசையைக் கேட்டுக் கொண்டே ஆனந்தமாக கூடையில் இருந்த உணவை சுவைக்கத் துவங்கியது. காளையின் மகிழ்வை கடைக்கண்ணால் கண்ட கண்ணன், மெல்ல அதனருகில் சென்று அதைத் தட்டிக் கொடுத்து, உடலை நீவி உற்சாகப்படுத்தினான். புல்லாங்குழலை இசைத்துக் கொண்டே, ஹஸ்தின் உணவு உண்டு முடித்ததைக் கண்டான். மெல்ல அதனை நீர் அருந்த ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றான். இனிய இசையைக் கேட்டுக் கொண்டே காளையும் ஆற்றங்கரைக்குச் சென்று நீர் அருந்தியது. அதன் வயிறும் மனமும் நிறைந்து மகிழ்ச்சியுடன் இருந்தது. இதையே தக்க சமயமாகக் கொண்டு கீதத்தை இசைத்துக் கொண்டே கண்ணன், சட்டென்று அதன் முதுகில் ஏறினான். மெல்ல மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டே, “என் நண்பா, ஹஸ்தின், நாம் காட்டுக்குப் போகலாமா? எங்கே ஓடு பார்க்கலாம்” என்று கனிவுடன் கூறினான். உணவும் நீரும் அருந்தி, இனிய கீதத்தின் இசையில் மனம் நெகிழ்ந்திருந்த ஹஸ்தின், கண்ணன் கூறியது புரிந்ததுபோல் காட்டை நோக்கி வேகமாக செல்லத் துவங்கியது.
இப்போது இந்த சிற்பத்தைப் பாருங்கள். காளையை தன் வசப்படுத்தி, அதன் மீது சவாரி செய்யும் கோபாலனை பாருங்கள்.
அடக்குவது போலவே உள்ளது .
கண்ணனின் லீலைகள் கேட்க கேட்க பரவசம். அவற்றை இவ்வாறு சிற்பத்தில் காண்பதோ, அவன் லீலைகளை நேரில் காண்பதற்கு இணையான பரவசம் அல்லவா?
நன்றி : வர்தினி மற்றும் கீதா அம்மா
http://sivamgss.blogspot.com/2009/06/blog-post.html
http://sivamgss.blogspot.com/2009/06/blog-post_10.html