நேரம் போனது தெரியவே இல்லை. உடன் வந்திருந்த அப்பா அம்மா மற்றும் அண்ணன் காட்டிய சைகைகளும் மனதில் ஏறவில்லை. அப்படி ஒரு மயக்கம் – காஞ்சி கைலாயநாதர் கோயிலில் அப்படியே லயித்து விட்டேன். மதியம் ஆகிவிட்டது – அப்போது திடீரென கைபேசி அலறியது.
“விஜய், காஞ்சியில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் திருமால்புரம் ரயில் நிலையம் அருகில் இருக்கிறேன். சீக்கிரம் வாரும் ” என்றார் நண்பர் திரு சங்கரநாராயணன். அங்கே ஒரு முற்கால சோழர் கோயிலை தேடி செல்வதாக முந்தைய நாள் திட்டம் போட்டிருந்தோம். சங்கரை பார்த்துவிட்டு அவர் பின்னால் தொடர்ந்த சில வினாடிகளில் போகும் பாதையில் பாதை மட்டும் இல்லை, அப்படி ஒன்று இருந்ததற்கான தடயம் கூட இல்லை என்று புரிந்தது. பெற்றோரையும் , அண்ணனையும் வண்டியுடன் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டு சங்கருடன் அவரது வாகனத்தில் பயணம் தொடர்ந்தது. அப்போது எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் சென்ற எனக்கு பல அதிர்ச்சிகள். திருமால்புரம் இன்ப அதிர்ச்சி ( அதை அடுத்த பதிவில் பார்ப்போம்). ஆனால் அன்று மாலை நாங்கள் கண்ட காட்சி…
சரி, அப்படி எங்கே போனோம், எதை பார்த்தோம்.வரலாற்றில் பல முக்கிய போர்களை பார்த்த மண் – அது சரி, புள்ளலூர் என்றவுடன் பானிபட் போல நமக்கு சட்டென்று சரித்திர பாடம் நினைவுக்கு வருவது கடினம், எனினும் கல்கியின் சிவகாமியின் சபதம் படித்தவர்களுக்கு ? உடனே சிவகாமியும், குண்டோதரனும், புலிகேசியும் , கண்ணபிரானும், ஆயன சிற்பியும் நினைவுக்கு வருவார்கள்.
சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/புள்ளலூர்ச் சண்டை
அதற்குப் பின்னரும் திப்புவின் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து அவனது மகத்தான வெற்றிகளில் ஒன்றாக இந்த போர் கருதப்படுகிறது. அதை பற்றி திரு முத்தையா அவர்களின் ஆங்கிலப் பதிவு
சரி, இடம் தெரிந்துவிட்டது,. அங்கே ..
எனது படம் சுய விளம்பரத்துக்காக இல்லை, காரணமாகத்தான் உள்ளது. நான் எங்கே நிற்கிறேன். அடுத்த சில படங்களை பார்த்தல் உங்களுக்கே புரியும்
இன்னும் சற்று தொலைவில் சென்று பார்ப்போம்.
புள்ளலூர் அருகே சோழர் காலத்து கோயிலை தேடிச் சென்ற எங்களுக்கு, சங்கரின் பார்வையில் தொலைவில் , மரக்கிளைகளுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் இந்த விமானம் தென்பட்டது. அங்கே ஊர்க்காரரை கேட்டதற்கு, அதுவா – அது எங்க ” மொட்டை கோபுரம் ” என்றார்
அருகில் சென்றவுடன் தன அதன் முழு பிரம்மாண்டம் விஷவரூபம் எடுத்தது.
விமானத்தின் அடியில் இருந்து பல செங்கல்கள் உருவப் பட்டாலும் ..
முதிர்ந்த போர் வீரரை போல, வீரத்தழும்புகள் பல உடலில் ஏந்தி இருந்தாலும், தலை சற்றும் சாயாமல் நேசி நிமிர்த்தி விண்ணோக்கி சென்ற விமானத்தின் கம்பீரம் மனதை கொள்ளையிட்டது . ஆறு தளங்கள் உடைய அற்புத செங்கல் விமானம்
விமானத்தின் மேல் தளங்களில் சில சுதை சிற்ப்பங்கள் தெரிந்தன. பல்லவர் காலத்து கட்டுமானம் போல உள்ளது.
தன்னைச் சுற்றி சிதைவுகள், குப்பை, முள்செடி , ஆயிரம் ஆண்டுகள் புறக்ணிக்கபட்டதன் விளைவினால் மேலே பல மரக்கிளைகள், எனினும் அதன் அகத்தின் அழகு குன்றவில்லை. இன்றைய அறிவியல் வளர்ச்சி, நவீன கருவிகள், புதிய கட்டுமான பொருட்களின் கண்டுப்பிடிப்பு என்று அவ்வளவும் இருந்தும் – இந்த தனி விமானம் தனது பெருமையை நமக்கு உணர்த்தியது. ஒரு சோகம் கலந்த பெருமிதம், விமானத்தின் உள்ளே சென்றவுடன் ஒரு தெளிவு…
நம் முன்னோர்களின் அறிவு முதிர்ச்சி மற்றும் அறிவியல் தேர்ச்சி கண்முன்னே கண்டதும் ஒரு பெருமிதம் – விமானத்தின் உட்புறம் சென்று மேலே பார்த்தவுடன் ஒரு மெய் சிலிர்ப்பு. அப்படி ஒரு அற்புதம், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும், கேட்பாரற்று குப்பையில் கிடந்தாலும், தங்கள் பணியை இன்றும் செவ்வனே செய்து, தாங்கள் காப்பாற்றிய மூலவர் சிலை இல்லை என்றாலும் எங்கும் எதிலும் கலந்திருக்கும் அந்த தெய்வீக உணர்ச்சியை உனர்த்தும் இந்த கற்களின் பணியை கண்டு கண்கள் கலங்கின. ஒரு இணையற்ற
கலை பாரம்பரியத்தை ஈர்ந்த மண்ணில் நானும் பிறந்துள்ளேன் என்ற பெருமிதம். இவை நமது குலதனங்கள் , போற்றி கொண்டாடப்பட வேண்டிய இவை இப்படி இருப்பதை கண்டு மனம் வெந்தது. ஆர்வலர்கள் சிலர் கூடினால் எதுவும் முடியும். இன்பத்திலும் துன்பம்!!!