செப்புத்திருமேனியின் ஆபரணங்கள்

தங்கத்தின் விலை மளமளவென்று ஏறுவதை கண்டு பதட்டப்படாமல் எப்படி இருக்க முடியும். அப்படி என்னதான் இந்த மஞ்சள் உலோகத்தின் மீது நம்மவர்களுக்கு ஒரு பித்தோ ! போதா குறைக்கு பெண்களுக்கு போட்டி இட்டு இன்று ஆண்களும் கழுத்திலும் கையிலும் – குறிப்பாக நமது சினிமாவில் வரும் வில்லன்கள் — அப்பப்பா அவற்றை கொண்டு கணத்தில் தண்ணீர் இறைக்கலாம் – அப்படி தாம்பு கயிறு போல தடி தடி செயின்கள் – அது என்ன செயின்? அந்நாள்களில் இவற்றின் பெயர்கள் என்ன ?

கண்டிகை , சாரப்பள்ளி , சாவடி , புலிப்பல் தாலி , தோள்மாலை , வாகு மாலை , தோள்வளை , கடக வளை இப்படி அடிக்கிக் கொண்டே போகிறது திரு கணபதி ஸ்தபதி அவர்களின் நூல் குறிப்பு. இவை பார்பதற்கு எப்படி இருக்கும் என்று ஆசையாக உள்ளதா? இதோ நண்பர் ஷாஸ்வத் உதவியுடன் இந்த அற்புத அர்தாரி வடிவத்தின் அணிகலன்களின் பவனியை ரசிப்போம்.

முதலில் என்ன என்ன இருக்கிறது என்று பார்ப்போம். .

இவ்வளவும் இந்த செப்புச் சிலையிலா இருக்கிறது என்று மலைக்க வேண்டாம். இதோ பாருங்கள்.

கண்டிகை – சிறிய மாலை போல கழுத்துக்கு மிக அருகில் உள்ளது. பெரிய பென்டன்ட் எல்லாம் கிடையாது – நடுவில் ஒரு பெரிய மணி , அதனை ஒட்டி சிறு மணிகள்.

அடுத்து சாரப்பள்ளி, பெரிதாக மேல் பக்கம் முத்துக்களை கொண்டும், அடியில் இலை வடிவ அலங்காரம் கொண்டது.

புலிப்பல் தாலி – புலியின் பல்லை ஒரு சிறு கோடியில் கட்டி இருப்பது தெரிகிறதா? இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்த அணிகலனை ஆண் பெண் இருவருமே அணியலாம் என்று இருந்தாலும், இந்த அர்த்தநாரி வடிவத்தில் பாதி புலிப்பல் தாலியும் – சிவன் பாகத்தில் , அம்மையின் பாகத்தில் சாவடி போலும் காட்டி உள்ளனர். சாவடி என்னும் அணிகலன் கண்டிகையை விட சற்று பெரிதாகவும் நாடு நடுவில் பூவைத்தது போன்ற வேலைப்பாடும் கொண்டது.

இவற்றை தவிர தோள்மீது முன்பக்கம் தொங்கும் விதம் ஒரு அணிகலன் உள்ளது. இது தான் வாகுமாலை. அதை ஒட்டி தோள்பட்டைகளின் மீது படரும் வண்ணம் இருக்கும் அணிகலன் தோள்மாலை.

அழகிய பூணுல், அதன் நடுவில் பிரம்மமுடிச்சும் உள்ளது.

இன்னும் கையிலும் இடுப்பிலும் உள்ள அணிகலன்களையும் பாருங்கள்.

மேல் கைகளில் தோள்வளை ( கேய்யுரம் !) அதன் அடியில் கடக வளை உள்ளது.

இடுப்பின் அழகிய வளைவுகளை எடுத்துக்கட்டும் வண்ணம் உதர பந்தம் உள்ளது.

பல்லவர் காலத்தில் புரிநூல் மூன்றாக பிரியும். சிறிய உர்ஸ் சூத்ரம், நடுவில் யக்நோபவீதம் ( இரண்டுமே இந்த சோழர் திருமேனியில் உள்ளன ) மற்றும் ஸ்தான சூத்ரம் – இங்கே காணப் படவில்லை.

இன்னும் எளிதாக புரிய இந்த அறிய கொங்கு பெருமாள் திருமேனியை பாருங்கள்.,

என்ன சொல்றீங்க…இந்த டிசைன்ல அம்மணிக்கு ரெண்டு செஞ்சி போடலாமா?

கிளிகளின் ஏமாற்று வித்தை – திருக்குறுங்குடி

கோயில் தூண்களிலும், வாயில் கோபுரத்திலும் சிற்பங்களை செதுக்கும் பொது சிற்பிகளுக்கு ஒரு அதீத நகைச்சுவை உணர்வு வந்துவிடும் போல. ஆலயம் உட்புறத்தில் செதுக்கும்போது சில பல கோட்பாடுகளுக்குள் அடங்கி விட்ட அவர்களது கற்பனைத் திறன் வெளியில் வந்தவுடன் சிறகு முளைத்து சுதந்திரமாக பறக்கும் போது அவர்களது கலையின் வெளிப்பாடு வித்தியாசமாக இருக்கிறது. இப்படி ஒரு சிற்பக் கோர்வையை நாங்கள் திருக்குறுங்குடி ஆலயத்தின் கோபுரத்தில் பார்த்தோம்.

நேரடியாக சிற்பத்துக்கு போவதற்கு முன்னர் சமீப காலமாக, ’ஒன்றுபட்டால் உண்டு வாழு’ என்று நாம் சிறுவயதில் எருமை கூட்டம், அல்லது வயதான அப்பா சிறு குச்சிகளை ஒரு கட்டாக கட்டி மகன்களை உடைக்கச் சொல்லும் கதைகளில் கேட்ட கருவை கொண்டு அமைக்கப்பட்ட இந்த ஓவியம் பலரும் பார்த்து இருப்பீர்கள்.

சரி சிற்பம் பார்க்க செல்வோம். இவை முதல் தளத்தில் இருப்பதாலும், ஆலய கோபுரத்தின் யானை நுழையும் அளவு வாயிலை மனதில் கொண்டும், இவை இருக்கும் இடம் – பொதுவாக பலரும் பார்க்க முடியாத இடம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும்.

முதல் இரு சிற்ப்பங்கள் – இளம் பெண்கள் அந்த நாட்களில் கிளிகளை செல்ல பிராணியாக வைத்துக்கொள்வது வழக்கம் போல உள்ளது.

இப்படி ஒவ்வொரு பெண்ணும் ஒரு கிளியை கேட்டால் கிளிக்கு எங்கே போவது ?

காட்டுக்கு சென்று வேட்டையாடி தானே பிடிக்க வேண்டும் ! இது மூன்று வேடர்கள் கிளிகளை வேட்டையாடும் சிற்பம். சிற்பி ஒவ்வோருவர் கையிலும் வெவ்வேறு ஆயுதங்களை கொடுத்து இருப்பதை பாருங்கள். முதலில் இருப்பவன் கையில் உண்டிகோல் உள்ளது, ஒருவன் கையில் வில் – நடுவில் இருப்பவன் ஒரு கோலிகுண்டை லாவகமாக அடிக்கும் பாணி மிக அருமை. !!

இப்படி வித விதமான ஆயுதங்கள் கொண்டு தங்களை வேட்டையாடும் வேடர்களிடத்தில் இருந்த தப்பிக்க கிளிகள் என்ன செய்கின்றன ?

என்ன ஒரு ஏமாற்று வித்தை ? யானையை போலவும் குதிரையை போலவும் அவை மாறுவது போல கற்பனை செய்து செதுக்கிய கலைஞனின் கைத்திறன் அபாரம் !


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment