நான் திரு பிரதீப் சக்ரவர்த்தி அவர்களை நேரில் பார்த்தது இல்லை (இதுவரை). சென்ற மே மாதம் முக நூல் அறிமுகம் கிடைத்தது. முதல் உரையாடல் முடிந்தவுடனே புரிந்தது. இவர் சாதாரண நபர் இல்லை என்று. கூகிளார் உதவியுடன் அவர் நாளேடுகளுக்கு எழுதிய பதிவுகள் கிடைத்தன. இப்படி ஒரு விவேகமும் தீர்க்க சிந்தனையும் அத்துடன் நல்ல ஆராய்ச்சி செய்து மக்களுக்கு சென்றடையும் எளிய முறையில் எடுத்துச் செல்லும் நோக்கம் உடைய இவர், எழுத்து வடிவில் மட்டும் அல்லாமல், வெற்றிகரமாக சென்னையில் ஒரே வருடத்தில் முப்பது ஆலய நடை (டெம்பிள் வாக் ) நடத்தினார் என்பதையும் படித்தேன். சமீபத்தில் அவர் ஆற்றிய சில உரைகளின் படமும் இணையத்தில் கிடைத்தது. அப்போது தான் புரிந்தது நவீன ஆடைகளுக்குள் பழைய காலத்து கதாகாலக்ஷேபம் செய்யும் வித்தகர்கள் போன்று ஹாஸ்யம் கலந்து மக்களை தன வசம் இழுத்து நல்ல கருத்துக்களை அவர்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்லும் வசீகரம் கொண்ட ஒரு வித்துவான் இருக்கிறார் என்று.
இப்படி இருக்கையில், அவர் விரைவில் இரு நூல்களை வெளியிடுகிறார் என்றதும் மகிழ்ந்தேன். தஞ்சை பற்றிய ஒரு நூல் ” Thanjavur – A Cultural History” மற்றும் ” தமிழகக் கோயில் வாகனங்கள் “. முதல் நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. இரண்டாவது நூல் சமீபத்தில் சன்மார் நிறுவன பதிப்பகமான கலம்க்ரியா அவர்கள் உதவியுடன் வெளிவந்துள்ளது.
வாகனம் என்றவுடன் நினைவுகள் சலசலவென பின்னோக்கி ஓடின. ஏன் முதல் மிதிவண்டி – பி எஸ் ஏ நிறுவனம் எஸ் எல் ஆர்!, கொஞ்சம் போன பின்னர் அட்லாஸ் நிறுவன எம் டி பி! அப்பாவின் லாம்பி ஸ்கூட்டர், பல ஆண்டுகள் கழிந்த பின்னர் பஜாஜ் சேடக்! அப்போது சாலைகளில் நான்கு பேர் ஒரே சேடக் மேல் பயணம் செய்யும் பொது அருகில் செல்லும் அம்பாசடர் அல்லது ஃபியட் கார்கள் (பெங்களூர் ஆசாமிகள் மட்டும் அந்த பிரீமியர் பத்மினியை விட மாட்டார்கள்!!). நடுவில் ஸ்டாண்டர்ட் 20000, மின்மினி போல வந்து மறைந்தது. பிறகு மாருதி 800 களின் ஆதிக்கம் என்று, நமக்கோ அந்நாட்களில் அர்னால்டு படம் பார்த்துவிட்டு ஹர்லி டேவிட்சன் மோகம், ராயல் என்பீல்ட் புல்லட் என்று ஏழைக்கு ஏற்ற எள்ளுண்டை!! ஒரு சிறு வரலாறு. எனினும் நாம் இன்று இன்னும் பின்னோக்கிச் செல்கிறோம், கால் நடை, மற்றும் கால்நடை வாகனங்களே இருந்த காலம். அந்தப் பாரம்பரியத்தை இன்றும் போராடி காத்து நிற்கும் கோயில் வாகனங்கள்.
ஆம் போராட்டம் தான். வருடத்தில் ஒரு நாளோ இரண்டு நாட்களோ வெளியில் வரும் இவை, அதுவும் தமிழ் நாட்டில் தினசரி பூஜை நடத்தவே திண்டாடும் நிலையில் உள்ள கோயில்களில் விழா எடுக்க எங்கே முடிகிறது, அப்படியும் விழா நடந்த பின்னர், பூட்டிய இருட்டு அறைகளுக்குள் வசிக்கும் இவற்றை பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. ஆலயத்தை சுற்றி வரும்போது கண்ணில் பட்டால் பார்ப்பது கூட இல்லை. இந்த நிலை அங்கு தூண்களில் உள்ள அருமையான சிற்பங்கள், விமான/கோபுர சுதை வேலைப்பாடுகள் என்று பல கலை பொக்கிஷங்களின் இன்றைய அவல நிலை தான். அப்படி இருக்கும் இவற்றில் வாகனங்களைப் பற்றி எழுத எண்ணிய பிரதீப் அவர்களுக்கு முதலில் ஒரு பாராட்டு.
நூல் முகம் பார்த்தவுடனே நெஞ்சம் கொள்ளை போனது. அருமையான கோட்டோவியம். முகப்படம் மட்டும் அல்ல, ஒவ்வொரு வாகனத்தையும் அருமையாக வரைந்துள்ளார் திரு V. விஜயகுமார் அவர்கள். மென்மேலும் இப்படி பல ஓவியங்களைப் படைத்து அமரர் சில்பி மற்றும் ஓவியர் பத்மவாசன் போன்று வரவேண்டும் என்று வாழ்த்துக்கள். மேலும் இந்த முழு நூலையும் இரு மொழிகளில் படைத்திருப்பது வரவேற்கத்தக்கது. முதல் பார்வையிலேயே இந்த நூல் ஆர்வலர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆசிரியரின் முன்னுரை படிக்கும் போது ஆரம்பமே வித்தியாசமாக இருந்தது. இப்படி எதற்காக ஒரு முன்னுரை ஆரம்பம் என்று தோன்றியது? தனது நிலையை தைரியமாகவும் தெளிவாகவும் விளக்க ஆசிரியரின் இந்த வெளிப்படையான எழுத்துக்கள் நமது சமயத்தில் இன்றும் இருக்கும் பிரிவுகள் பற்றி நினைவூட்டின. தொடர்ந்து படிக்கையில் அவர் நூல் அறிமுகத்தில் சுட்டிக்காட்டும் ஒரு கல்வெட்டுக் குறிப்பு நூலின் தன்மையையும் ஆசிரியரின் நோக்கங்களையும் அருமையாக எடுத்துக்காட்டியது.
நூலின் பொருளடக்கம் இதோ. பல அறிய வாகனங்களைத் தேடி பிடித்து விவரித்துள்ளார் பிரதீப்.
நமக்கென்று நூலில் இருந்து ஒரு சிறப்பு பார்வை – அதிகார நந்தி.
எனக்கு மிகவும் பிடித்த வாகனம் கைலாச வாகனம், அடியில் சிக்கி இருக்கும் இராவணன் , தனது ஒரு தலையை கொய்து தன கையையே தண்டாக கொடுத்து நரம்புகளை மீட்டும் காட்சி அருமை.
அடுத்து ஆடு வாகனம், ஆமாம் சரியாகத் தான் படிக்கிறீர்கள். பிரதீப் எந்த அளவிற்கு இந்த நூலிற்காக உழைத்துள்ளார் என்பது இந்த வாகனத்திற்கு அவர் கொடுக்கும் இலக்கிய சான்றுகள் மூலம் தெரிகிறது.
எல்லா வாகனங்களும் பிராணிகள், பறவைகள் , தேவர்கள் என்பது இல்லை. சில மரங்களும் வாகனங்களாக உள்ளன. நமது முன்னோர் இயற்கையை எப்படி கொண்டாடி வழிபட்டனர் என்பதன் குறிப்புகளே இவை. (நாம் இந்தப் பாடத்தை என்று தான் கற்போமோ!)
நமது மதம் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதில் வரும் புராணக் கதைகள், அத்துடன் வரும் முரண்பாடுகள், எல்லாம் அழகு தான். ஒரு புலி வாகனத்தை பற்றிய சிறு குறிப்பில் கூட வாதம் ஏற்படலாம் என்பதும் அழகு தான்.
நூல் ஆசிரியர், ஓவியர், மற்றும் இதை உருவாக்கி வெளி கொண்டுவந்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நூலை படிக்கும் போதே, முன்னிரவு நேரத்தில் ஜன நெரிசல் நிறைந்த வீதியில், தாரை தப்பட்டை ஓசையுடன், ஆடி ஆடி பவனி வரும் கம்பீர வாகனத்தின் மேல் அமர்ந்து வரும் சுவாமி தரிசனம் மட்டும் அல்லாமல், ஒளியுடன் மண்ணெண்ணெய் உமிழும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் வாசமும் வருகிறது.
பின் குறிப்பு: தற்போது நூல் முதல் பிரதிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. விரைவில் அடுத்த பிரதி வெளிவரும் !