காமுகனின் முரட்டு இழுப்பும் , மனம்கொண்டவனின் அன்பு அணைப்பும் !

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியை ஒட்டிய கதை ஒன்றை எடுத்து இன்றைய சிறப்புப் பதிவாக இடலாம் என்று – மல்லைக்கு மீண்டும் செல்கிறோம். வராஹ அவதாரம். பெருமாள் பூமாதேவியை பாதாள உலகுக்கு கடத்திச் சென்ற ஹிரண்யாக்ஷனை வதம் செய்து மீட்டு வரும் காட்சி. நாம் முன்னரே பார்த்த ஒன்று தான். ஏன் மீண்டும் ?

இந்த காட்சியை வடித்த சிற்பி, அதில் கடினமான கருங்கல்லில், அதுவும் ஒரு குடைவரைக் கோயிலின் சுவரில் இப்படி ஒரு காட்சியை, அதுவும் அதில் இடம் பெரும் நாயகன் நாயகி – அவர்களின் பாவங்கள் , உணர்ச்சிகளை , கற்பனை ரசத்துடன் செதுக்கி உள்ளான். இதை முழுவதுமாக ரசிக்க சமீபத்தில் இணையத்தில் கிடைத்த ஒரு பளிங்கு சிற்பம் கொண்டு இந்த பதிவை அமைக்கிறேன். ( இந்தப் பிறவியில் நேரில் இந்த பொக்கிஷங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைய உள்ளது. எனினும் நான் இன்னும் ரோமாபுரி சென்றதில்லை. படங்கள் அனநிதும் இணையத்தில் தேடி எடுத்தவை. முடிவில் சுட்டிகளை தந்துள்ளேன்) –

கருங்கல்லில் செதுக்குவதை விட பளிங்கு கல்லில் செதுக்குவது சுலபம் தான். ஆனால் தனது இருபத்தி மூன்றாம் வயதில் இந்த படைப்பை தந்த திரு பெர்னினி அவர்களுக்கு தலை வணங்க வேண்டும். அப்படியே ஓரத்தில் ஒரு ஆசை – நமது பல்லவ சிற்பி மட்டும் பளிங்கில் செதுக்கி இருந்தால் ?

இன்று நாம் பார்க்கும் சிற்பம் “தி ரேப் ஆப் ப்ரோசெர்பின “. ரேப் என்பது கடத்தல் என்று படிக்கவும்.

சுவாரசியமான கதை கரு. ப்ளூடோ ப்ரோசெர்பினாவை கடத்திச் செல்லும் காட்சி. ப்ளூடோ பாதாள உலகுக்கு அதிபதி. அதன் வாசலை காக்கும் கொடிய மூன்று தலை நாய் – செரீப்ரஸ்

கதை இது தான். ப்ளூடோ காதல் வசப்பட வேண்டும் என்று எண்ணிய வீனஸ், தன மகன் அமோர் (அல்லது
குபிட் ) ஐ அங்கு அனுப்புகிறார். அவன் விடும் அம்பு ப்ளூடோவை தாக்குகிறது. அந்த சமயம் , ச்சிலி நகரில் தன தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் ப்ரோசெர்பினாவை , அருகில் இருக்கும் எட்னா எரிமலையில் ( வெடித்து) இருந்து வெளி வரும் ப்ளூடோ கடத்திச் செல்கிறார்.

மகளை காணவில்லை என்று அம்மா செரெஸ் ( பயிர்களின் கடவுள்) மனம் வருந்தி மகள் கிடைக்கும் வரை பயிர்களை விளைய விடாமல் செய்கிறாள். பூமி வரண்டு பாலைவனம் ஆகத்தொடங்கியது.

கவலை கொண்ட கடவுள் தலைவர் ஜுபி்டர், ப்ளூட்டோவை அதட்டி ப்ரோசெர்பினாவை விடுவிக்க கட்டளையிட்டார். ஆனால் அதற்குள் அங்கே இருந்த ஆறு பழங்களை தின்றதானால் ப்ரோசெர்பின ஆண்டுக்கு ஆறு மாதம் உலகிலும், ஆறுமாதம் ப்ளூடோவுடன் இருக்க வேண்டும் என்று ஆயிற்று !)

கதை நமது கதை போலவே வருகிறதே. பல்லவ சிற்பி, அந்த ஹிரண்யாக்ஷன் பூமாதேவியை கடத்திச் செல்லும் காட்சியை கல்லில் வடித்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்ப்போம்.

அந்தக் கற்பனையை மனதில் கொண்டு, பெர்னினி சிற்பம் கண்ணில் பார்ப்போம் . ப்ளூடோ பக்கம் இருந்து. ஒரு வலிமையான ஆணின் தாக்கம்.

ப்ரோசெர்பின பக்கம், வளைவுகள் நிறைந்த ஒரு பெண்ணின் போராட்டம்.

அப்படியே பல்லவ சிற்பத்தை பார்ப்போம். கம்பீரமாக தந்து தொடையில் அமர்த்தி அழகு பார்க்கும் பெருமாளின் வராஹ உருவம், மேன்மையும் மென்மையும் ஒருங்கே கொண்ட பூமாதேவி.

தன்னைக் கடத்தும் கொடியவனின் பிடியில் இருந்து விலக போராடும் அவலப் பெண்.

இங்கோ, தன்னை காப்பாற்றிய வீரனின் எதிரில் தேவி.

பெர்னினி, என்ன திறமை, பளிங்கு என்றாலும் கல் தானே. அதில் எப்படி தான் இப்படி செதுக்க முடிந்ததோ. மந்திரம் போட்டு குருதியும் சதையுமாக இருந்த இருவரை இப்படி கல்லாக மாற்றிவிட்டனோ. ப்ளூடோ கை ஒன்று அவள் மீது படும்போது, ஒரு அசுரத் தன்மை தெரிகிறது.

அவனை வெறுத்து தள்ளும் அவள் கை, அவன் முகத்தில் படும்போது

மல்லையில் ?? ஆஹா , பட்டும் படாமலும் ஒரு ஸ்பரிசம். வலது கை அன்பு ததும்பும் அணைப்பு, இடது கை தனது பொறுப்பான வேலையை ( அவளை காப்பாற்றுவது ) உணர்த்தும் வண்ணம் வலிமையான பிடி.

மங்கையின் முகத்தில் தான் என்ன ஒரு சோகம், வெறுப்பு. கண்ணீர். அந்த திறந்த வாய் அலறும் சத்தம் கேட்கிறதே. ஓடிப்போய் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சி எழுகிறது

தேவியின் முகத்திலோ வெட்கம் , வலது கை அவர் மேல் பட்டும் படாமலும் அணைக்கும் அவரது நெஞ்சை சற்றே தொட்டுப் பார்க்க செல்கிறது, முகம் வெட்கி தலை சாய்கிறது, அதை இடது கை மறைக்க செல்கிறது.

ஆயிரம் ஆண்டுகள் சென்று விட்டன – இரண்டு மகா சிற்பிகளுக்கு இடையில், ஆனால் கலை வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒருவர் பெயர் உலக பிரசித்தம், மற்றொருவர் தனது பெயரை விட்டுச் செல்லவே இல்லை.

முடிவாக மீண்டும் ஒரு முறை இவற்றை பார்த்துக்கொண்டே – விடைபெறுகிறேன்.

படங்கள்:

மாமல்லபுரம் – அசோக் மற்றும் ஸ்ரீராம் ,
மற்றவை இணையத்தில்

Bernini's "Rape of Proserpine"
http://www.students.sbc.edu/vermilya08/Bernini/Pluto%20and%20Proserpina.htm
http://www.youtube.com/watch?v=nXR2YZxgDV4&feature=player_embedded#!
http://en.wikipedia.org/wiki/The_Rape_of_Proserpina

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *